உள்ளடக்கத்துக்குச் செல்

திரைக்கவி திலகம் அ. மருதகாசி பாடல்கள்/அனுபவம்

விக்கிமூலம் இலிருந்து

அனுபவம்


சென்னையில் அருணா பிலிம்ஸ் "ராஜாம்பாள்" படம் முடிந்ததும், "குமாஸ்தா" என்ற படம் ஆரம்பித்தார்கள். தெலுங்கு மொழிக்கு ஆச்சார்யா ஆத்ரேயாவும், தமிழுக்கு நானும் பாடல் இயற்றினோம். -


இசையமைப்பாளர் C. N. பாண்டுரங்கன் அவர்கள். ஆத்ரேயா தெலுங்கில் "மன அதக்குல இந்தே பிரதுக்குல பொந்தே ஆசலு பேக்கலமேடே" என்று பாடல் எழுதினார். அதற்கு நமது மனக் கோட்டைகள் எல்லாம் சீட்டுக் கட்டுகளால் கட்டப்பட்ட வீடு என்று அர்த்தமாம். நான் உடனே அதே பாடலின் மெட்டுக்கு, தமிழில் "நம் ஜீவியக் கூடு, களி மண் ஓடு! ஆசையோ மணல் வீடு" என்று பல்லவி எழுதினேன். ஆத்ரேயா உட்பட அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கும் போதே, அதன் எதிரொலியாக, இன்னும் சொல்லப் போனால், தாங்கமுடியாத பேரிடியாக ஒரு தகவல் கிடைத்தது. அதுதான் என்னை நிலைகுலைய வைத்த எனது அடுத்த தம்பி கோவிந்தசாமி என்பவரின் மரணச் செய்தி. எழுதிய எழுத்துக்கள் என் வாழ்க்கையிலேயே நிஜங்கள் ஆகிவிட்டன. அதுவும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே.


அதன் பிறகு, மாதுரி தேவி அவர்கள் தனது சொந்தப் படமான "ரோகிணி"க்குப் பாடல் எழுத என்னையும், இசை அமைக்க G.ராமனாத அய்யர் அவர்களையும் ஒப்பந்தம் செய்தார்கள். அவர்கள் அடிக்கடி சில பெங்காலி

கிராமபோன் ரிக்கார்டுகளைப் போட்டுக் காட்டி, மெட்டுகளுக்குப் பாடல் எழுதி ரிகார்டு செய்யுங்கள், என்று G. R. அவர்களிடம் சொல்ல, அவர் எந்தக் காரணத்திற்காக, சேலத்திற்கு (மாடர்ன் தியேட்டர்ஸ்) வர மாட்டேன் என்று சொன்னாரோ, அதே காரணம் இங்கும் தொடர்ந்ததும், G.R. மாதுரி தேவி அவர்களிடம், “இதற்கு நான் தேவையில்லை; வேறு யாரையாவது வைத்துக் கொள்ளுங்கள்” என்று சுமுகமான முறையில் சொல்லிவிட்டு அப்பொழுது H. M. V. யில் இருந்த, எனது அன்பிற்குரிய K. V. மகாதேவன் அவர்களை, இசை அமைப்பாளராகப் போடும்படி சொல்லிவிட்டு, விலகிக் கொண்டார். பல படங்களில் நாங்கள் ஒன்று சேர்ந்து வேலை செய்யும் சந்தர்ப்பத்தையும், ஒரே குடும்பம் போல் எங்கள் இரண்டு குடும்பங்களும் செயல்படும் நிலைமையையும் இறைவன் உண்டாக்கினார் என நினைக்கிறேன்.

மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து பிரிந்தவரும் என்னுடைய வளர்ச்சிக்காகப் பெரும் பாடுபட்டவருமான அண்ணன் M. A. வேணு அவர்கள், தனது சொந்தப் படங்களுக்கு என்னையும், ஷெரீஃப் அண்ணன் அவர்களையும் பாடல்கள் எழுத வைத்து, ஊக்குவித்ததை நான் என்றென்றும் மறக்க முடியாது.

இப்படி இருக்கும் போது பாகவதருடைய "புது வாழ்வு" படத்திற்கு ஒரு நகைச்சுவைப் பாடல் எழுதுவதற்கு கலைவாணருடைய ஒப்புதல் வாங்க என்னையும், திரு G. ராமனாதன் அவர்களையும் N.S.K. வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். N.S.K. யிடம் பாடல் ஆசிரியர் என்ற முறையில் எனக்கு அன்றுதான் அறிமுகம்.

ஆனால் N.S.K. அவர்கள் அவருக்கே உரிய பாணியில் என்னிடம் “எனக்கு இதுவரை உடுமலையார், கே. பி. காமாட்சி இருவரைத் தவிர, ஒரே ஒரு பாடல் ஆசிரியரான சந்தான கிருஷ்ண நாயுடு மட்டும்தான் எழுதினார். “நீங்கள் எழுதித் தரும் பாடல் எனக்குப் பிடிக்கவில்லையென்றால் நான் மறுபடியும் உடுமலையாரைக் கூப்பிடு என்று சொல்வேன். நீங்கள் மனம் ஒடிந்து விடுவீர்கள். நன்றாய் இருந்தால் பாராட்டுவேன். சம்மதம் என்றால் எழுதுங்கள்” என்றார்.

நான் அதைச் சவாலாக எடுத்துக் கொண்டேன். “பாடலுக்குரிய காட்சி அமைப்பைச் சொல்லுங்கள்” என்றேன். அதற்கு அவர், “ஒரு குருவிக்காரனும், குருவிக்காரியும் பகல் முழுவதும் தனித் தனியாக வியாபாரத்திற்குச் சென்று விட்டு வருகிறார்கள். அவன் அவள் மீது சந்தேகப்பட்டு ஏதேதோ கேட்கிறான். அவள் அதற்குச் சரியான பதில் சொல்லிக் கொண்டு வருகிறாள். முடிவில் உண்மையைச் சொல்லுகிறாள், வழியில் ஒரு காலிப்பயல் வம்பு செய்ததாக. அதைக் கேட்டு, குருவிக்காரன் கோபத்துடன் அவளையும் அழைத்துக் கொண்டு, அந்தக் காலிப்பயலைச் சந்தித்து, புத்தி புகட்ட போவதாகச் சொல்கிறான். இதுதான் காட்சி அமைப்பு” என்றார், பாடல் தன்னுடைய பாணியில் இருக்க வேண்டும் என்று சொன்னார். நான் “இது மிகவும் எளிதாயிற்றே. குற்றாலக் குறவஞ்சியில் வரும் சிங்கன் சிங்கிதானே”, என்றவுடன் N.S.K. என்னிடம் “தங்களுக்கு இலக்கியப் பயிற்சி உண்டா?” எனக் கேட்டார். எனக்கு இலக்கியப் பயிற்சி அளித்த பாபநாசம் ராஜகோபாலய்யர் அவர்கள், என்னுடைய மானசீக குரு உடுமலையார் அவர்கள், என்னுடைய வழிகாட்டிகள் காழி அருணாசலக் கவிராயர் (ராம நாடகம் எழுதியவர்) "நந்தனார்" சரிதம் எழுதிய கோபால கிருஷ்ண பாரதியார், சைவ சமய சமரச கீர்த்தனைகள் தந்த ஜட்ஜ் வேதநாயகம் பிள்ளை, பாபநாசம் சிவன், நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் எனச் சொல்லி, அவரிடம் சில பாடல்களையும் பாடிக் காட்டினேன். என்னை உடனே N.S.K. அணைத்துக் கொண்டு, உடுமலை இருந்த இதயத்தில் உங்களுக்கு பாதியைக் கொடுத்து விட்டேன். "நீங்கள் நன்றாக வளர்வீர்கள்" என்று ஆசீர்வதித்தார். நான் மறுநாளே பாடலை இயற்றி, அவருடைய வீட்டிற்கு எடுத்துச் சென்றேன். பாடிக் காட்டச் சொன்னார். பாடினேன். பரவசப்பட்டார். அந்தப் பாடல்தான் "சீனத்து ரவிக்கை மேலே" எனத் தொடங்கும் பாடல். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையால் பாகவதர் படம் வெளி வர மிகவும் தாமதம் ஆயிற்று. அண்ணன் N.S.K. அவர்கள் அந்தப் பாடலைப் பாடவில்லை. அது "முல்லைவனம்" என்ற படத்தில் உபயோகப் படுத்தப்பட்டது. அவருக்கு நான் எழுதிய அடுத்த பாடல் "ராஜா ராணி" என்ற படத்தில் வந்த "சிரிப்பு" என்று தொடங்கும் பாடல். அதை அவர் எழுதச் சொன்னது உடுமலையாரிடம். ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும், பாடல் சரியாக அமையாததால், இருவரும் சேர்ந்தே ஆள் அனுப்பி, என்னைக் கூப்பிட்டு, "சிரிப்பு! அதன் சிறப்பைச் சீர் தூக்கிப் பார்ப்பது நம் பொறுப்பு" என்ற பல்லவியைக் கொடுத்து, பாடலை முடித்துத் தரச் சொன்னார்சள். நான் மறுநாளே அந்தப் பாடலை முடித்துக் கொடுத்தேன். அதில் கடைசி வரியை "இது சங்கீதச் சிரிப்பு" என முடித்திருந்தேன். அந்தச் சங்கீதச் சிரிப்புக்கு, ஆவர்த்தனக் கணக்கும் போட்டு இரண்டு ஆவர்த்தனம், ஒரு ஆவர்த்தனம் எனக் குறைத்துக் கொண்டு வந்து அவர் முடித்ததை நினைத்து, இன்றும் சிரிக்காதவர்களே இருக்க முடியாது.

ஆனால் அந்தச் சிரிப்பு என்னைப் பொறுத்தவரை அழ வைத்துச் சென்று விட்டது. கலைவாணர் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும், எனக்கும் எனது மனைவிக்கும் தீபாவளிக்கு, பட்டுவேட்டி, பட்டுச் சேலை அனுப்பி வைத்ததை நினைத்து, நினைத்து நெஞ்சம் நெகிழ்கிறது. அந்த கலைவாணருக்கு ஈடு அவரேதான்.

நான் ஆரம்பக் காலத்தில், புரசவாக்கத்தில் கந்தப்ப ஆச்சாரித் தெருவில் 17-ம் நம்பர் வீட்டில் தங்கியிருந்தேன். பக்கத்து அறையில் அறிஞர் அண்ணா அவர்களின் நெருங்கிய நண்பர் "தையற்கலை சுந்தரம்" என்பவர் தங்கி இருந்தார்.

அண்ணா அவர்கள் எப்போது ஓய்வு கிடைத்தாலும் புரசவாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வீட்டிற்கு வருவார்கள். படம் பார்க்க திரு. சுந்தரம், பேராசிரியர், அண்ணா மூவரும் சேர்ந்தே செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள் "உமா" தியேட்டரில் "கனவு" என்னும் படத்தைப் பார்த்து இருக்கிறார்கள். பாடல்கள் முழுவதும் நான் எழுதியவை. இசை அமைப்பு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் என்று எல்லோரும் அழைக்கக் கூடிய மலையாள தட்சிணாமூர்த்தி அய்யர் அவர்கள். அதில் வரும் ஒரு பாடலில்,

"திருநாடு தன்னில் திருவோடு ஏந்தி
தெருவோடு போகும் நிலைமாறிடாது
சீமான்கள் உள்ளம் மாறாதபோது"

என்ற வரிகள் அண்ணாவை மிகவும் கவர்ந்துள்ளன. படம் பார்த்து வந்தவுடன், சுந்தரம் அவர்கள் மூலம், அண்ணா என்னை அழைத்துப் பாராட்டிய விதத்தை நினைத்து, இன்றும் நான் மகிழ்கிறேன். அது மட்டுமல்ல, என்னுடைய கிராமியப் பாடல்களில் அவர் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதற்கு S.S.R. "தங்கரத்தினம்" படத்தில் வரும், "இன்னொருவர் தயவெதற்கு, இந்நாட்டில் வாழ்வதற்கு? இல்லையென்ற குறையும் இங்கே, இனிமேலும் ஏன் நமக்கு?" என்ற பாடல் உதாரணம். மேற்கண்ட இரண்டு வரிகளை வைத்துக் கொண்டு, "திராவிடநாடு" பத்திரிகையில் சுமார் 5 பக்கங்கள் அண்ணா எழுதிய கட்டுரையை, அவர் எனக்குக் கொடுத்த நற்சான்றிதழாக நினைக்கிறேன்.

1956-ம் ஆண்டு A. P. N, அவர்களுடைய லட்சுமி பிக்சர்ஸில் "மக்களைப் பெற்ற மகராசி" என்பது முதல் படம். அதில் பல ஊர்களின் பெயரை வைத்து ஒரு பாடல். எழுதச் சொன்னார்கள். வெறும் ஊர்ப் பெயர் வந்தால் போதாது, கதை 'விவசாயி'யைப் பற்றியது. அதனால், அந்தத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுத வேண்டும் என்று எழுதிய பாட்டுத்தான் "மணப்பாறை மாடுகட்டி" என்று தொடங்கும் பாடல். அதே சமயத்தில், திரு. A K வேலன் அவர்களின் வெற்றிப் படமான "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற படத்திற்கு "நினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு" என்ற பல்லவியை எழுதிக் கொண்டிருக்கும்போது, நண்பர் வயலின் மகாதேவன் M.M. புரொடக்‌ஷன் என்ற கம்பெனி ஆரம்பிக்க வேண்டிய பங்குதாரர், பத்திரங்களுடன் வந்து கையெழுத்துப் போடுமாறு கேட்டார். முதலில் மறுத்தேன். பிறகு A.P.Nன் வற்புறுத்தலால் ஒப்புக் கொண்டேன்.

பல காரணங்களால், படம் வெளியிட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், நானும் இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனும் அந்த "அல்லி பெற்ற பிள்ளை" என்னும் படத்தினால் அடைந்த தொல்லைக்கு அளவேயில்லை. இடையில், எத்தனையோ சம்பவங்கள். அன்றைய மக்கள் திலகம், புரட்சி நடிகர், இன்றைய முதல்வர் திரு. M. G. R. அவர்களுக்காக, என்னை அழைத்து, தேவர் அண்ணன் அவர்களால் எழுதி வாங்கப்பட்ட, புரட்சிகரமான கருத்துள்ள, முதல் பாடல் "மனுஷனை மனுஷன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே" என்பதாகும்.

இடையில் மூன்று நான்கு ஆண்டுகள் நான், சேலத்திற்குப் போகவில்லை. அய்யா உடுமலையார் அவர்களை "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" படத்திற்குப் பாடல் எழுதச் செய்ய, உயர்திரு. பாலு முதலியார் அவர்களும், சுலைமான் அவர்களும் வந்திருந்தார்கள். அப்பொழுது அய்யா அவர்கள். "நேஷனல் பிக்சர்ஸ்" ரத்தக் கண்ணீர் படத்திற்கு இந்தி ரிக்கார்டு டியூனுக்குப் பாட்டு எழுத, என்னைத் துணை புரிய அழைத்திருந்தார். அய்யா, அவர்களுடன்

என்னைப் பார்த்த பாலு முதலியார் அவர்கள், "ஏனப்பா! நீ கூப்பிட்டால் கூட, சேலம் வருவதில்லை?" எனக் கேட்டார். நான் "நேரம் போதவில்லை. அதனால் வரவில்லை" எனச் சொல்லி விட்டேன். உண்மையான காரணம் வேறு. T.R.சுந்தரம் அவர்கள் இல்லாத சமயத்தில், என்னிடம் பண விஷயத்தில் சொன்னபடி நடக்கவில்லை என்பதுதான் காரணம்.

அவர்கள், அய்யா அவர்களை, "அலிபாபா" படத்திற்குப் பாட்டு எழுத 25 ஆயிரம் ரூபாய் என முடிவு செய்து விட்டு, "அய்யா! நீங்கள் எழுதி, டியூன் போட வேண்டிய பாடல்கள் இரண்டு அல்லது மூன்றுதான் இருக்கும். மீதமுள்ள பாடல், இந்தி அலிபாபாவில் உள்ள டியூனுக்கே எழுத வேண்டும்" என்று சொன்னதும், அய்யா என்னிடம், "நீ சேலம் வருகிறாயா?" எனக் கேட்டார்கள். அதன் காரணத்தை யூகித்துக் கொண்ட சுலைமான் அவர்கள் மாலை திரும்பி வருவதாகச் சொல்லி விட்டு T.R.S.க்கு டிரங்கால் செய்து, "அய்யாவை நீங்கள் கேட்டபடி ஏற்பாடு செய்து விட்டோம். ஆனால் ரிக்கார்டு டியூனுக்குப் பாட்டு எழுதுவது என்றால், மருதகாசியும் என்னுடன் வருவார் என்று சொல்லி இருக்கிறார்" எனக் கூற, அதற்கு T.R.S.அவர்கள் சுலைமான் அவர்களிடம், "நான் பலமுறை கேட்டும், மருதகாசி வர மறுத்து விட்டதாகச் சொன்னாயே? இப்பொழுது மட்டும் எப்படி வருகிறார்? அவர் மிகவும் மரியாதையுள்ளவர். இதற்கிடையில் ஏதோ காரணம் இருக்கிறது. அதனால் அருணா பிலிம்ஸ் கிருஷ்ணசாமியைப் பார்த்து, மருதகாசியை மாலை ஆறு மணிக்கு மேல் டிரங்கால் செய்து, நான் பேசச் சொன்னதாகச் சொல்" எனக் கூறி விட்டார். திரு. சுலைமான் அவர்கள், அதை அருணா பிலிம்ஸ்க்கு ஃபோன் செய்து சொன்னார்.

நான் டிரங்கால் செய்து, T.R.S. அவர்களிடம் பேசினேன். "காலையில் கவிராயரை அழைத்துக் கொண்டு வர முடியுமா?" என T R.S. கேட்டார்.

நானும் அய்யாவை அழைத்துக் கொண்டு சென்றேன். அங்கு பாடல்களைக் கேட்டோம். 8 பாடல்கள் இந்தி மெட்டுகள். இரண்டு பாடல்கள்தான் டியூன் செய்ய வேண்டியவை.

அய்யா அவர்கள், "இந்த மெட்டுகளுக்குப் பாடல் எழுதுவது எனக்கு ஆகாத வேலை. அதை இவர்தான் செய்ய வேண்டும். எழுதி, டியூன் போடும் பாடல்கள் மட்டும் நான் எழுதுகிறேன்" எனச் சொல்லி விட்டார். T.R.S. அவர்கள் சந்தோஷப்பட்டு, என்னையே பாடல் முழுவதும் எழுத வைத்தார். அய்யாவிடம் ஒரே ஒரு பாடல் மட்டும் எழுதி வாங்கிக் கொண்டு, மூவாயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்கள் ஆனால் அந்தப் பாடல், படத்தில் இடம் பெறவில்லை.

பிறகு தொடர்ச்சியாக, வண்ணக்கிளி, எங்கள் குலதேவி, கைதி கண்ணாயிரம், ஆகிய பல படங்களுக்குப் படம் முழுவதற்கும் நானே பாடல்கள் எழுதினேன். அதில் "வண்ணகிளி" படத்திற்குத்தான், சேலத்தில் மியூசிக் டைரக்டராக K. V. மகாதேவன் நியமிக்கப்பட்டார்.

சூழ்நிலையால், எங்கள் யூனிட் உடைந்து போனது. எனக்கும் 'LOW PRESSURE' ஏற்பட்டு, நான் ஊருக்குத் திரும்பிச் செல்ல நேர்ந்தது. ஊருக்குப் போகும் போது, கடைசியாக நான் இயற்றிய பாடல் "ஆனாக்க அந்தமடம்! ஆகாட்டி சந்தமடம்! அதுவும்கூட இல்லாட்டி ப்ளாட்பாரம் சொந்த இடம்" என்று "ஆயிரம் ரூபாய்" படத்தில் வரும் பாடல்தான். நான் பணம் கூட வாங்கிக் கொள்ளாமல் ஊருக்குச் சென்று விட்டேன்.

யாரை நான் நல்ல நண்பர்கள் என நினைத்தேனோ, அவர்களுடைய பொறாமையால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். இரண்டரை ஆண்டுகள், நான் ஊரிலேயே இருந்து விட்டேன். 1967ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுற்று, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்கும் நிலை வந்த பொழுது

திரு M.G.R. அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல் எல்லோரும் அறிந்ததே. அவர் எடுத்தது மறுபிறவி. தேவர் பிலிம்ஸ் சின்னப்பா அண்ணன் அவர்கள், எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் "மக்கள் திலகம் M.G.R.க்கு மறுபிறவி. நீங்களும் இரண்டரை ஆண்டுகள் இல்லாமல் போய்விட்டீர்கள். ஆகையால், உங்களுக்கும் மறுபிறவியாக இருக்கட்டும். படத்தின் டைட்டிலும் 'மறுபிறவி'தான். ஆகையால், உங்களை உடனே புறப்பட்டு வருமாறு M.G.R.ம் சொன்னார்" என்று எழுதினார். உடனே புறப்பட்டு, சென்னை வந்து சேர்ந்தேன் அந்தப் படம், ஒரு பாடலுடன் நிறுத்தப் பட்டுவிட்டது. பிறகு "தேர்திருவிழா" விவசாயி முதலிய பல படங்களுக்குப் பாடல் எழுதினேன்.

துணைவன் என்ற படத்திற்கு எழுதிய மருதமலையானே என்று தொடங்கும் பாடல் எனக்கு, தமிழக அரசு பரிசைப் பெற்றுத் தந்தது.

அந்தச் சமயத்தில், "நினைத்ததை முடிப்பவன்" படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் மக்கள் திலகம் M.G.R. அவர்கள், இரு வேடம் ஏற்றிருந்தார்கள். அதில் இரண்டு பாடல்கள் எடுத்தும், அவருக்கு முழுத்திருப்தி ஏற்படாததால், என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்கள். அதில் ஏற்கனவே கண்ணதாசன் எழுதியிருந்த, "நான் பொறந்த சீமையிலே நாலு கோடிப் பேருங்க. நாலு கோடிப் பேர்களிலே நானும் ஒரு ஆளுங்க" என்ற பாட்டு, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. "இந்தப் பாடல் நன்றாக இருக்கிறது" என்று சொன்னேன். ஆனால் M.G.R. அவர்கள், "பாட்டு நன்றாகத்தான் இருக்கிறது. எனக்கே உரிய தனித்தன்மை அதில் இல்லையே" என்றார். "எப்படி?" என்று கேட்டேன். "ஆயிரத்தில் ஒருவன் என்பதற்கும், நாலு கோடிப் பேர்களிலே நானும் ஒரு ஆளுங்க என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா" என்று M.G.R. கேட்டார். பத்து நிமிடங்கள், நான் அசந்து உட்கார்ந்து விட்டேன். இவர் பழைய

M.G.R. அல்ல, ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்து கொண்டே இருக்கும் மாமனிதர் என்ற எண்ணமும், அதுவரையில் அவரிடம் நான் வைத்து இருந்த நம்பிக்கையின் உயர்வும், என் மனதில் வளர்ந்து கொண்டே போயிற்று.

பிறகு, அதே சூழ்நிலைக்கு ட்யூன் போட்டு, நான் எழுதிய பாடல்தான் "கண்ணை நம்பாதே!" என்று ஆரம்பிக்கும் பாடல். இந்தப் பாடல் M.G.R. அவர்களுக்குப் பரிபூரண திருப்தியளித்தது. மறுநாள் ரிக்கார்டிங்கிற்கு வந்திருந்தார். பாடல் ஒலிப்பதிவு ஆவதற்கு 5 நிமிடங்களுக்கு முன், என்னைத் தனியே அழைத்துச் சென்றார். "கடைசிச் சரணத்தை மறுபடியும் பாடிக் காட்டுங்கள்" என்றார். பாடினேன். "பொன் பொருளைக் கண்டவுடன், வந்தவழி மறந்து விட்டுத் தன் வழியே போகிறவர் போகட்டுமே" என்ற வரியில், "தன் வழி நல்ல வழியாக, வந்த வழியை விடச் சிறந்த வழியாக இருந்தால், தன் வழியே செல்வதில் என்ன தவறு?" எனக் கேட்டார். எனக்கு இரண்டாவது அதிர்ச்சி. இவர் ஒவ்வொரு நிமிடமும் N.S.K. போல, சிந்தித்துக் கொண்டே இருப்பவர் என்ற எண்ணம் மலை போல் வளர்ந்து விட்டது. பிறகுதான் "வந்த வழி மறந்து விட்டுக் கண்மூடிப் போகிறவர் போகட்டுமே" என்று மாற்றினேன். இப்படி இவருடன் எத்தனையோ அனுபவங்கள்.

பிறகு தசாவதாரத்திற்குப் பாடல் இயற்ற மல்லியம் சென்றிருந்த அய்யா உடுமலையார் அவர்கள், K.S.கோபாலகிருஷ்ணனிடம் சொல்லி, அந்தப் பொறுப்பை என்னிடம் முழுக்க முழுக்கக் கொடுத்த நல்ல எண்ணத்தையும், நான் எப்படி அவருடைய பாராட்டுதலுக்கு ஆளானேன் என்பதையும் எழுதுவது என்றால், அதற்கே எனக்கு ஒரு அவதாரம் தேவை. விரிவஞ்சி சுருக்கிக் கொள்கிறேன்.

இப்படியாக எத்தனையோ அனுபவங்கள். திரையுலகின் வளர்ச்சியிலும் தொடர்ச்சியிலும் என்னுடைய பங்கிற்குச் சான்றானவை. ஆல் தழைத்துக் கொண்டேயிருக்கிறது.

சருகுகள் உதிர உதிர, துளிர்கள் பசுமையைக் கொழித்துக் கொண்டே வளர்கின்றன. திரைத் தொழில் வளர வளம் பெற வாழ்த்துகிறேன்.

இந்த நூலை வெளியிட என்னைத் தூண்டிவிட்ட கவிஞர் வைரமுத்து அவர்களுக்கும், பாராட்டு வழங்கிய அண்ணன் M.A.வேணு, ஏ.கே.வேலன், குருவிக்கரம்பை சண்முகம், கவிஞர் வாலி, கவிஞர் பொன்னடியான் அவர்களுக்கும், நல்ல விதமாக இந்தப் பதிப்பு வெளிவர உதவிய அச்சக நிர்வாகி ரெங்கநாதன் அவர்களுக்கும், எனது பணிவையும் நன்றி கலந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். எனது வளர்ச்சிக்குக் காரணமான தமிழக ரசிகப் பெருமக்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்.

அன்பன்

அ. மருதகாசி