உள்ளடக்கத்துக்குச் செல்

திரைக்கவி திலகம் அ. மருதகாசி பாடல்கள்/அறிமுகம்

விக்கிமூலம் இலிருந்து

அறிமுகம்

திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடக் கரையோரம் மேலக்குடிக்காடு என்னும் ஒரு சிற்றூரில் 13-2-1920-ல் பிறந்தான் ஒரு பாடலாசிரியன்.

தந்தை கிராம அதிகாரி அய்யம் பெருமாள் உடையார். தாயார் மிளகாயி அம்மாள். பரம்பரை விவசாயிகள்.

பள்ளிப் படிப்பு நான்காம் வகுப்பு வரை உள்ளூரில். பிறகு குடந்தை பாணுதுரை உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை. கேள்வி ஞானத்தால் ஒரளவு நன்றாகப் பாடக் கூடியவன். மொழி மீதும் நாடகக் கலை மீதும் பெரும் பற்றுக் கொண்டவன். ஒரு சில நாடகங்களில் நடிப்பதுண்டு. அவனுக்கு அந்த தாகத்தை அதிகமாக்கியவர், லிட்டில் ஃபிளவர் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர், காலஞ் சென்ற பாபநாசம் சிவன் அவர்களின் மூத்த சகோதரர் திரு. ராஜகோபாலய்யர் அவர்கள். ஒய்வு நேரங்களிலெல்லாம், அவனுக்கு இலக்கண இலக்கியங்களில் ஒரளவு தேர்ச்சியுறக் கற்றுத் தந்தார்.

1938-முதல் 1940 மார்ச் முடிய குடந்தை அரசினர் கல்லூரியில் "இண்ட்டர் மீடியட்" படித்தான் படித்த இரண்டு ஆண்டுகளிலும், கல்லூரியில் நாடகங்கள் தயார் செய்து நடத்தினான். அந்தக் காலத்தில் அங்கு B. A. படித்தவர்தான், நாடகங்களில் பெண் வேடங்களில் மிக அழகாக நடித்துக் காட்டிய, பிரபல எழுத்தாளரான தி. ஜானகிராமன். அவனது தமிழ் ஆர்வத்தை அதிகம் வளர்த்து விட்டவர் திரு. கோ. முத்துப்பிள்ளை அவர்கள், இன்று தமிழக அரசின் தமிழ் ஆய்வுத்துறையில் பணியாற்றி வருபவர்.

கல்லூரிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க நேர்ந்தது. காரணம் சுமார் 35 ஏக்கர் நிலம் உள்ள விவசாயக் குடும்

பத்தை கவனிக்க வேண்டிய நிலை. குடந்தையில் இருந்த காலத்தில் பல நாடக நடிகர்களுடனும், நாடகக் குழுக்களுடனும் நெருங்கிப் பழகியவன். அவன் இசைக்காக எழுதிய முதற்பாடலே, அன்றும் இன்றும் அவன் "சங்கீத தேவதை"யாக ஆராதனை செய்து வரும் திருமதி. M. S. சுப்புலட்சுமி அவர்கள், கிராமபோன் ரெக்கார்டில் பாடியுள்ள "குக சரவணபவ சிவபாலா" என்ற மெட்டில் எழுதிய "கலைமகள் உறைந்திடும் கலாசாலை" என்று தொடங்கும் பாடலாகும்.

ஊரில் விவசாய வேலையோடு கிராம அதிகாரி வேலையையும் பார்த்து வந்தான். அந்த நேரத்தில், அவனுக்கு முன்பே பரிச்சயமாயிருந்த K. N. ரத்தினம் அவர்களின், தேவி நாடக சபைக்குப் பாட்டு எழுதித் தர நண்பர் ஸ்ரீராமுலு நாயுடு என்பவரின் மூலம் அழைப்பு வந்தது. அவர்கள் அப்பொழுது முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்களின் நாடகமான "மந்திரி குமாரி" நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதில், கலைஞர் அவர்களின் எழுத்துக்கள் இன்னும் எத்தனை நூற்றாண்டானாலும், நிலைத்திருக்கக் கூடியவை. அங்கு அரங்கேற்றிய புலவர் A. K. வேலன் எழுதிய "சூறாவளி" என்ற நாடகத்திற்குத்தான் முதல் முதல் பாடல் எழுதினான். அங்குதான் கா. மு. ஷெரீப் அவர்களின் நட்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து "ஒரே முத்தம்" "பராசக்தி" போன்ற நாடகங்களுக்குப் பாடல் எழுதி விட்டு, நடிகனாகவும் மாறி, கம்பெனியுடன் செல்ல வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

காரைக்குடி முகாமில், அரு. ராமனாதன் எழுதிய "வானவில்" என்ற நாடகத்திற்கு, திருச்சி லோகநாதன் அவர்கள் கொடுத்த மெட்டுகளுக்குப் பாடல் எழுதினான். கா. மு. ஷெரீப் அவர்கள் "பெண்" என்ற நாடகத்திற்குப் பாடல் எழுதினார்.

கம்பெனி தஞ்சையில், அடுத்து முகாமிட்டது. அப்பொழுது, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து



அவனுக்கும், கா. மு. ஷெரீஃப் அவர்களுக்கும் "திரு, லோகநாதன் அவர்கள் பாடிய உங்கள் பாடல்களைக் கேட்டோம். திருப்தியாக இருந்தது உடன்வந்து சேரவும்" என்று தந்தியும், லெட்டரும் வந்தது. அவனும், கா. மு. ஷெரீப் அவர்களும் அங்கு சென்றார்கள். அப்பொழுது அண்ணன் M. A. வேணு அவர்கள் அங்கு தயாரிப்பு நிர்வாகி, இசையமைப்பாளர். அத்துறையில் மாபெரும் மேதையான அண்ணன் G. ராமனாதய்யர் அவர்கள் அவர்களை, அவன் மெட்டுக்குப் பாட்டெழுதி, திருப்தியடையச் செய்தான். T. R. மகாலிங்கம். அஞ்சலிதேவி நடித்த "மாயாவதி" என்ற படத்தில் உள்ள "பெண் எனும் மாயப்பேயாம்" என்ற பாடலுடன் அவனுடைய திரையுலகப் பணி ஆரம்பமாயிற்று. ஒரே கம்பெனியில் இருந்து வந்திருந்ததால், வேற்றுமையில்லாமல் ஒவ்வொரு பாடலும் கா. மு. ஷெரீஃப், மருதகாசி என்ற தலைப்பிலேயே வெளிவந்தது.


"மந்திரி குமாரி" கதையை மாடர்ன் தியேட்டர்ஸார் வாங்கிப் படமாக்க வகை செய்தான். M. A. வேணு அவர்களின் அரவணைப்பால் அவனது கலைப்பணி நன்கு வளர்ந்தது "பொன்முடி" படத்தைப் பார்த்த "பாகவதர்" அவர்களால் G. ராமனாதய்யர் மூலம் சென்னைக்கு அழைக்கப்பட்டான், அங்கு அவனது நண்பரான ஒளிப்பதிவாளர் திரு. R. M. கிருஷ்ணசாமி அவர்கள், தனது நண்பர்களான V.C. சுப்பராமன், ராதாகிருஷ்ணன் அவர்கள் கூட்டுறவுடன் ஞானமணி அவர்களின் இசையமைப்பில் "ராஜாம்பாள்" என்ற படத்திற்குப் பாடல் எழுத அழைத்தார்.


அன்று முதல் அவன் கலைப்பணி தொடர்ந்தது. மெட்டுக்கேற்பப் பாடல்கள் எழுதும் அவனது திறமை பல தயாரிப்பாளர்களையும் இசையமைப்பாளர்களையும் அவனை அழைக்கச் செய்தது. அனைத்துச் சந்தர்ப்பங்களும் அவனைத் தேடி வந்தனவே தவிர, அவன் சந்தர்ப்பங்களைத் தேடவில்லை. அந்தப் பாடலாசிரியன் தான் மருதகாசி. இனி அவனது அனுபவம் பேசுகிறது.