உள்ளடக்கத்துக்குச் செல்

திரைக்கவி திலகம் அ. மருதகாசி பாடல்கள்/காதல்

விக்கிமூலம் இலிருந்து

காதல்

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் வெண் புறாவே
மாயமெல்லாம் நானறிவேனே!
வா......வா......ஒடி வா......
(வசந்தமுல்லை)

இசையினில் மயங்கியே
இன்புறும் அன்பேவா!
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே!
(வசந்தமுல்லை)

சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி
விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே!
மந்திரக் கண்ணாலே, தந்திர வலை வீசும்
சுந்தர வடிவே உன் துணை காணவா!

இந்திர வில் நீயே!
சந்திர ஒளி நீயே!
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே!
(வசந்த முல்லை)

சாரங்கதரா-1958


இசை : G. ராமநாதன்
பாடியவர்: T. M. சௌந்தரராஜன்

பெண்: முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே!

ஆண்: வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே!
அல்லி விழி தாவக் கண்டேன் என்மேலே!

பெண்: வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே!
கண்ணெதிரில் காணுகிறேன் ப்ரேமையினாலே!

ஆண்: மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப்போலே
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே!

பெண்: விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே!
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே!

ஆண்: சிந்தை நிலைமாறியதாலே எந்தன் முன்னாலே!
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே!

உத்தமபுத்திரன்-1958


இசை G. ராமநாதன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் P. சுசிலா

ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே-குற்றால
அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே!  (ஆயிரம்)

தென்றல் இசை பாடிவரும் தேனருவி ஆடிவரும்
அன்றலர்ந்த செண்பகப்பூ வண்ணக்கிளியே!-எங்கும்
ஆனந்தக் காட்சி தரும் வண்ணக்கிளியே!  (ஆயிரம்)

எங்கும் பனி தூங்கும் மலை வண்ணக்கிளியே! நெஞ்சில்
இன்ப நிலை தந்திடுதே வண்ணக்கிளியே!
பொங்கி வரும் ஐந்தருவி வண்ணக்கிளியே! இங்கே
சங்கத்தமிழ் முழங்கிடுதே வண்ணக்கிளியே!  (ஆயிரம்)

மந்தி யெல்லாம் மாங்கனியைப் பந்தாடி பல்லிளிக்கும்
சந்திரன் போல் சூரியனும் வண்ணக்கிளியே-குளிர்ச்சி
தந்திடுவான் இங்கு என்றும் வண்ணக்கிளியே  (ஆயிரம்)

பாவை விளக்கு-1960


இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: C. S. ஜெயராமன்

வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்!
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்! (வண்ண}

வெண்ணிலவின் அழகை யெல்லாம்அவள் முகத்தில் கண்டேன்!
வேல்விழி வீச்சின் மின்னலினால் திசைமாறி நின்றேன்! (வண்ண)

அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்!
ஆடற்கலை இலக்கணத்தை அறியவரும் மயிலும்!
இன்னிசையைப் பாடம் கேட்க எண்ணி வரும் குயிலும்!
இயற்கை யெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலும்! (வண்ண)

கன்னல் மொழி பேசும் அந்தக் கன்னியரின் திலகம்
கமலம்! என் கமலம்! செங்கமலம்! (வண்ண)

பாவை விளக்கு-1960


இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: C. S. ஜெயராமன்



ஆண் : காவியமா?
நெஞ்சின் ஓவியமா?
அதன் ஜீவிதமா!
தெய்வீகக் காதல் சின்னமா?

பெண் : காவியமா?
நெஞ்சின் ஓவியமா?
அதன் ஜீவிதமா?
தெய்வீகக் காதல் சின்னமா?

ஆண் : காவியமா?
நெஞ்சின் ஓவியமா?
அதன் ஜீவிதமா?
தெய்வீகக் காதல் சின்னமா?

பெண் : மொகலாய சாம்ராஜ்ய தீபமே! சிரித்த
முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே!

ஆண் : மும்தாஜே முத்தே என் பேகமே! பேசும்
முழுமதியே என் இதயகீதமே!

பெண் : என்றும் இன்பமே! பொங்கும் வண்ணமே!
என்னை சொந்தம் கொண்ட தெய்வமே!

ஆண் : அன்பின் அமுதமே! அழகின் சிகரமே!
ஆசை வடிவமே! அழகின் அதிசயமே! (காவியமா)

பெண்: எந்நாளும் அழியாத நிலையிலே-காதல்
ஒன்றே தான் வாழும் இந்த உலகிலே!

ஆண் : கண்முன்னே தோன்றும் அந்தக் கனவிலே! உள்ளம்
கலந்திடுதே ஆனந்த உணர்விலே!

பெண்: கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்!
இனிமை தருவதுண்மைக் காதலே!

ஆண் : காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்!

பாவை விளக்கு-1960


இசை : K. V. மகாதேவன் -
பாடியவர்கள்: C. S. ஜெயராமன் P. சுசிலா





ஆண் : வாராய் நீ வாராய்!
போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய்!

பெண் : ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே!

ஆண் : இதனிலும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில்
கலந்துயர் விண்ணினைக் காண்பாய்! அங்கே வாராய்!

பெண் : அமைதி நிலவுதே! சாந்தம் தவழுதே!
அழிவில்லா மோன நிலை சூழுதே!

ஆண் : முடிவில்லா மோன நிலையை நீ!-மலை
முடியில் காணலாம் வாராய்!

பெண் : ஈடிலா அழகை சிகரமீதிலே
கண்டு இன்பமே கொள்வோம்!

ஆண் : இன்பமும் அடைந்தே இகம் மறந்தே
வேறுலகம் காணுவாய் அங்கே!
வாராய்! நீ வாராய்!
புலியெனைத் தொடர்ந்தே புதுமான் நீயேவாராய்!

மந்திரி குமாரி-1950


இசை : G. ராமநாதன்
பாடியவர்கள்: திருச்சி லோகநாதன் & ஜிக்கி



பெண் : உலவும் தென்றல் காற்றினிலே
ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே!

ஆண் : அலைகள் வந்து மோதியே
ஆடி உந்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே!

பெண் : உயர்ந்த மலையும் உமது அன்பின்
உயர்வைக் காட்டுதே!

ஆண் : இதயம் அந்த மலைக்கு ஏது?
அன்பைக் காட்டவே!

பெண் : தெளிந்த நீரைப் போன்ற தூய
காதல் கொண்டோம் நாம்!

ஆண் : களங்கம் அதிலும் காணுவாய்
கவனம் வைத்தே பார்!

பெண் : குதர்க்கம் பேசி என்னை மயக்க
எங்கு கற்றீரோ?

ஆண் : உனது கடைக்கண் பார்வை காட்டும்
பாடம் தன்னிலே?

இருவரும் : உலக வாழ்க்கை ஆற்றினிலே
காதலெனும் தோணிதனில்
ஊர்ந்து செல்லுவோம்!

மந்திரி குமாரி-1950


இசை G. ராமநாதன்
பாடியவர்கள்: திருச்சி லோகநாதன் & ஜிக்கி



ஆண் : கண்வழி புகுந்து கருத்தினில் கலந்து
மின்னொளியே ஏன் மௌனம்?
வேறெதிலே உந்தன் கவனம்?

பெண் : இன்மொழி பேசி ஏய்த்திட எண்ணும்
இதய மில்லாதார் கவனம்!
இழந்ததனால் இந்த மௌனம்!

ஆண் : வண்ணச் சிலையே! வளர்பிறையே!
வந்த தறியேன் மனக் குறையேன்?

பெண் : எண்ணம் வேம்பு! மொழி கரும்பு!
எனைப் பிரிந்த உம் மனம் இரும்பு!

ஆண் : கண்ணே போதும் சொல்லம்பு!
உனைக் கணமும் பிரியேன் எனை நம்பு!

பெண் : உண்மையில் என் மேல் உமக்கன்பு!
உண்டென்றால் இல்லை இனி வம்பு!

ஆண் : கண்ணில் தவழுதே குறும்பு!
கனி மொழியே நீ எனை விரும்பு!

இருவரும் : கண்வழி புகுந்து கருத்தினில் கலந்து
கனிவுறும் காதல் ஜோதி!
காண் போமே பாதி பாதி!

தூக்கு தூக்கி-1954


இசை : G. ராமநாதன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன், M. S. ராஜேஸ்வரி


பெண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை!
என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை!  (வண்டி)

ஆண் : சொந்தம் கொண்டாடவென்று அன்பு கொண்டு
ஷோக்கு மாப்பிள்ளை வாராறே இன்று!
ஷோக்கு மாப்பிள்ளை வாராறே இன்று!

பெண் வந்தாலும் பலனில்லையே-அன்பைத்
தந்தாலும் அதை வாங்க ஆள் இல்லையே!  (வண்டி)

பெண்: நிலவைக்கண்டு மலரும் அல்லி
விளக்கைக் கண்டு மலருமா?
உலகம் கொண்டாடும் சூரியன் வந்தாலும்
உண்மை இன்பம் கொண்டாடுமா?

ஆண் : விளங்கும்படி சொல்லம்மா
வெண்ணிலவும் யாரம்மா?
வேலைக்காரன் எனக்கு அது புரியுமா? என்
வேலையை நான் பார்க்க வேணும் தெரியுமா? - சும்மா
விளையாட வேணாம் அதைக் கொடம்மா! கொடம்மா!

பெண்: வண்டி உருண்டோட அச்சாணி தேவை!
என்றும் அது போல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை!



ஆண் : வம்பு ஏனம்மா? வாங்க! அதை தாங்க! வந்த
வழிபார்த்து நேராகப் போங்க! நீங்க
வழி பார்த்து நேராகப் போங்க!

பெண் : வழிபார்த்து நான் போகவே-எந்தன்
மனம் நாடும் நிலவாகி வழிகாட்டுங்க!

ஆண் : ஆ... ... ...

பெண் : ஊம்... ... ...

ஆண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை!

பெண்: என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை!

ஆண் : ஊம்!

இருவர்: வண்டி உருண்டோட அச்சாணி தேவை!
என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை!

வண்ணக்கிளி-1959


இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் & P. சுசிலா


அலிபாபா : மாசிலா உண்மைக் காதலே?
மாறுமோ செல்வம் வந்த போதிலே!

மார்ஜியானா : பேசும் வார்த்தை உண்மை தானா?
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா?

அலிபாபா : கண்ணிலே மின்னும் காதலே!
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே?
நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே!

மார்ஜியானா : நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே?
                                            (பேசும்)

அலிபாபா : உனது ரூபமே உள்ளந் தன்னில் வாழுதே!

மார்ஜியானா : இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே!

இருவரும் : அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்!
இங்கு நாம் இன்பவாழ்வின் எல்லை காணுவோம்!
                                                (மாசிலா)

அலிபாபாவும் 40 திருடர்களும்-1955


இசை : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்கள்: A. M. ராஜா P. பானுமதி



பெண் : தொடாதே!
மாமா! மாமா! மாமா!

ஆண் : ஏம்மா! ஏம்மா! ஏம்மா!

பெண் : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா
வட்டமிட்டு சுத்திச் சுத்தி
கிட்ட கிட்ட ஓடிவந்து தொடலாமா?-தாலி
கட்டும் முன்னே கையும் மேலே படலாமா?
{-மாமா)

ஆண் : வெட்டும் விழிப் பார்வையினால்
ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஓடலாமா?-கையைத்
தொட்டுப் பேச மட்டும் தடை போடலாமா?
(-ஏம்மா)

பெண் : ஊரறிய நாடறியப் பந்தலிலே!-நமக்கு
உற்றவங்க மத்தவங்க மத்தியிலே!
ஒண்ணாகி உறவுமுறை கொண்டாடும் முன்னாலே
ஒருவர் கையை மற்றாெருவர் பிடிக்கலாமா?-இதை
உணராம ஆம்பளைங்க துடிக்கலாமா?

ஆண் : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே!-துாண்டி
போடுகிற உங்களது கண்ணாலே!
ஜாடை காட்டி ஆசை மூட்டி
சல்லாபப் பாட்டுப் பாடி



நீங்க மட்டும் எங்க நெஞ்சைத் தாக்கலாமா? - உள்ள
நிலை தெரிஞ்சும் இந்தக் கேள்வி கேட்கலாமா?

பெண் : கன்னிப் பெண்ணைப் பார்த்தவுடன் காதலிச்சு - அவளைக்
கைவிட்டு ஒன்பது மேல் ஆசை வச்சு
வண்டாக மாறுகின்ற மனமுள்ள ஆம்பளைங்க
கொண்டாட்டம் போடுவதைப் பார்த்ததில்லையா? -பெண்கள்
திண்டாடும் கதைகளையே கேட்டதில்லையா?

ஆண் : ஒண்ணெ விட்டு ஒண்ணெத் தேடி ஒடுறவன்!
ஊரை ஏச்சு வேஷமெல்லாம் போடுறவன்!
உள்ள இந்த உலகத்தையே
உற்றுப் பார்த்தா நீங்க இப்போ
சொல்லுவது எல்லாமே உண்மைதான்!-கொஞ்சம்
தூரநின்னு பழகுவதும் நன்மைதான்! நன்மைதான்!
ஆமா! ஆமா! ஆமா!

பெண் : கட்டுப்பாட்டை மீறாமெ
சட்ட திட்டம் மாறாமெ
காத்திருக்க வேணும் கொஞ்சகாலம் வரை!
கல்யாணம் ஆகிவிட்டால் ஏது தடை?

குமுதம்-1961


இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள் : T. M. சௌந்தரராஜன் & ஜமுனராணி


ஆண் : கொடுத்துப் பார்! பார்! பார்! உண்மை அன்பை!
நினைத்துப் பார்! பார்! அதன் தெம்பை!
உயர்வு தாழ் வெனும் பேதத்தைப் போக்கும்!
இருவர் வாழ்வினில் இன்பத்தைச் சேர்க்கும்!
(கொடு)

ஆண் : கண்ணுக்குள் மின்னல் வெட்டைக் காட்டுகின்ற :::::::::::::::::::::::::::::::::::::::::::கண்ணம்மா!
கன்னத்தில் ஆப்பிள் வந்து காய்த்திருப்பதென்னம்மா!
உண்பதற் காகுமா? என் பசி தீருமா?
உள்ளதைக் கேட்டாலே என் மீது கோபமா?
(கொடு}

பெண் : கற்பனை உங்களுக்கே சொந்த மென்ற எண்ணமா?
சர்க்கரை பாகு உங்கள் நாவில் வந்த தென்னம்மா
பிறவியில் வந்ததா? பெண் அன்பு தந்ததா?
இரவெல்லாம் உறவாடும் கனவாலே சேர்ந்ததா?
(கொடு)

ஆண் : ஆட்டத்தில் தோகையோடு போட்டி போடும் முல்லையே!
ஓட்டத்தில் என்னை நீயும் வெல்வதற்கு இல்லையே!



தோற்றத்தில் முல்லை நான்! ஓட்டத்தில் புள்ளி மான்!
போட்டியும் போட்டாலே தவறாமல் வெல்லுவேன்
(கொடு)

பெண் : உன்னாலே எந்தன் உள்ளம் ஊஞ்சல் ஆடுதே
பின்னாலே சுத்திச் சுத்தித் தாளமெல்லாம் போடுதே
காலத்தின் கோலமா? காதலின் ஜாலமா?
காணாத புது வாழ்வு கண் இன்று காணுதே!
(கொடு)

விடிவெள்ளி-1960


இசை : A. M. ராஜா
பாடியவர்கள்: ராஜா & ஜிக்கி




ஆண் : தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா?-காதல்
கண்கள் உறங்கிடுமா?

பெண் : ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடிக் கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா?-காதல்
கண்கள் உறங்கிடுமா?

ஆண் : நீலஇரவிலே தோன்றும் நிலவைப் போலவே
வாலைக் குமரியே நீயும் வந்தபோதிலே!

பெண் : நேசமாகப் பேசிடாமல் பாசம் வளருமா?
ஆசை தீரக் கொஞ்சிடாமல் இன்பம் மலருமா?
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா?-காதல்
கண்கள் உறங்கிடுமா?

ஆண் : இதய வானிலே இன்பக் கனவு கோடியே
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே!

பெண்: வானம்பாடி ஜோடி கானம் பாடமயங்குமா?
வாசப் பூவும் தேனும் போல வாழத்




இருவரும்: அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உ றங்கிடுமா?-காதல்
கண்கள் உறங்கிடுமா?

பெற்ற மகனை விற்ற அன்னை-1958


இசை: மெல்லிசை மன்னர்கள்
எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்கள் : A.M. ராஜா & P. சுசீலா


ஆண் : ஆடாத மனமும் உண்டோ? நடை
அலங்காரமும் அழகு சிங்காரமும்-கண்டு  (ஆடாத)

பெண் : நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்-வீர
நடைபோடும் திருமேனி தரும் போதையில் (ஆடாத)

ஆண் : வாடாத மலர் போலும் விழிப்பார்வையில்-கை
வளை ஓசை தரும் இன்ப இசைக் கார்வையில்

பெண் : ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்-தனி
இடம் கொண்ட உமைக் கண்டு இப்பூமியில் (ஆடாத)

ஆண் : இதழ் கொஞ்சும் கனிஅமுதை மிஞ்சும்
குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே!

பெண் : பசுந்தங்கம் உனது எழில் அங்கம்
அதன் அசைவில் பொங்கும் நயம் காணவே! (ஆடாத)

ஆண் : முல்லைப் பூவில் ஆடும் சிறுவண்டாகவே!

பெண் : முகில் முன்னே ஆடும் வண்ண மயில் போலவே

ஆண் : அன்பை நாடி உந்தன் அருகில் வந்து நின்றே

பெண் : இன்ப மெனும் பொருளை இங்கு கண்டே

ஆண் : தன்னை மறந்து

பெண் : உள்ளம் கனிந்து

இருவரும் : இந்நாள் ஒரு பொன்னாள் எனும் மொழியுடன்
(ஆடாத)




பெண் : தேனாறு பாய்ந்தோடும் கலைச் செல்வமே-தரும்

இருவரும் : திகட்டாத ஆனந்த நிலை பொங்குமே!

பெண் : தேனாறு பாய்ந்தோடும் கலைச் செல்வமே-தரும்

இருவரும் : திகட்டாத ஆனந்த நிலை பொங்குமே!

மன்னாதி மன்னன்-1960


இசை எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & M. L. வசந்தகுமாரி


பெண் : என்னை விட்டு ஓடிப்போக முடியுமா?
இனி முடியுமா?-நாம்
இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா? தெரியுமா?
கண்ணுக்குள்ளே புகுந்து
கதைகள் சொன்ன பின்னே!
எண்ணத்திலே நிறைந்து! அதில்
இடம் பிடித்த பின்னே!
எந்தன் அன்னை தந்தை
சம்மதித்த பின்னே!
அன்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே!
ஓ ... ஓ ... ஓ ... ஓ ...

ஆண் : உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா?
இனி முடியுமா?-என்
உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா? தெரியுமா?
அன்னம் போல நடை நடந்து வந்து என்
அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
கன்னம் சிவக்க நீயிருக்க மஞ்சள் கயிறு எடுத்துனது
கழுத்தில் முடிக்கும் இன்பநாள் தெரியும் போது
ஆ... ஆ... ஆ... ஆ...

பெண் : மலர் மாலை சூட்டி
பலபேரும் வாழ்த்த
வளையாடும் என் கையின் விரலில்
கணையாழி பூட்டி
புதுப்பாதை காட்டி
உறவாடும் திருநாளின் இரவில் (என்னை)

ஆண் : இளந்தென்றல் காற்றும்
வளர் காதல் பாட்டும்
விளையாடும் அழகான அறையில்
சுவையூறும் பாலும்
கனிச்சாறும் கொண்டு
தனியே நீ வருகின்ற நிலையில்

ஆண்: ஆ...ஆ... ஆ...

பெண்: ஓ...ஓ....ஓ...

குமுதம்-1960



இசை: K. V. மகாதேவன்

பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன் & P. சுசிலா

ஆண்
சொட்டு சொட்டுன்னு
சொட்டுது பாரு இங்கே!
பெண்
கொட்டு கொட்டுன்னு
கொட்டுது பாரு அங்கே!
ஆண்
கஷ்டப்படும் ஏழை சிந்தும்
நெத்தி வேர்வை போல - அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும்
கண்ணீர்த் துளியைப் போலே (சொட்டு)
பெண்
முட்டாப் பயலே மூளையிருக்கா
என்று ஏழைமேலே
துட்டுப் படைச்ச சீமான் அள்ளிக்
கொட்டுற வார்த்தை போலே - மழை (சொட்டு)
ஆண்
முழுக்க முழுக்க நனைஞ்ச பின்னே
முக்காடு எதுக்கு? - உன்
முக்காட்டை நீக்கு! தலை ஈரத்தைப் போக்கு!
பெண்
இருக்க இடங்கொடுத்தா என்னையே நீ தாக்குறே!
குறுக்கு மூலை பாயுறே! கோணப் புத்தியெக் காட்டுறே!
ஆண்
பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும்
இரும்பைப் போலவே!-முகம்
சிவக்குதே இப்போ- அது சிரிப்பதும் எப்போ?
பெண்
குளிச்சு முழுகிவிட்டுக் குளிர்ச்சியாக ஓடிவா!
செவந்து போன முகத்திலே சிரிப்பை நீயும் காணலாம்!

ஆடவந்ததெய்வம்-1960

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. R. மகாலிங்கம் & P. சுசிலா
கோடி கோடி இன்பம் தரவே!
தேடி வந்த செல்வம்!
கொஞ்சும் சதங்கை கலீர் கலீரென
ஆட வந்த தெய்வம்!


பாடும் பாட்டின் பாவம் தன்னை
பார்வை சொல்லிடவே!
ஆடும் ஆட்டம் காணும் நெஞ்சம்
அசைந்தே துள்ளிடவே!
முழு நிலவென அழகு மலரென
முகங் காட்டியே பருவமங்கை உருவாய் (கோடி)


வாடும் பயிரை வாழச் செய்ய
மேகம் வந்தது போல்
வாச மலரும் அன்பினாலே
தேனைத் தந்தது போல்
கனிமொழியுடன், கருணை விழியுடன்
களிப்பூட்டவே கலைஞானவடிவாய் (கோடி}

ஆடவந்த தெய்வம்-1960

இசை : K. V. மகாதேவன்
பாடியவர் : T. R. மகாலிங்கம்
பச்சைக்கிளி பாடுது! பக்கம் வந்தே ஆடுது!
இங்கே பாரு!
உன் துன்பம் பறந்தோடுது- (பச்சை)
கள்ளம் அறியாதது! ரொம்ப சாது!
வேறெங்கும் ஓடாது!
உன் சொல்லைத் தள்ளாது- (பச்சை)
உன்னைக் காணா விட்டால் உயிர் வாடும்!
கண்டால் இன்பம் கூடும்!
சந்தோஷங் கொண்டாடும்! (பச்சை)
காதல் கதை சொல்லவோ மனம் கூசும்!
கண்ணால் அதைப் பேசும்!
அன்பால் வலைவீசும்- (பச்சை)

அமரதீபம்-1956

இசை : சலபதிராவ்
பாடியவர்: ஜிக்கி
சித்தாடை கட்டிக் கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பூ சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்!
அத்தானைப் பார்த்து-அசந்து
போயி நின்னாளாம்! (சித்தாடை)


முத்தாத அரும்பெடுத்து
முழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்!
எத்தாகப் பேசி
இளமனசைத் தொட்டானாம்! (முத்தாத)


குண்டூசி போல ரெண்டு
கண்ணும் உள்ளவளாம்-முகம்
கோணாமல் ஆசை அன்பா
பேசும் நல்லவளாம்!
அந்தக் கண்டாங்கி சேலைக்காரி கை காரியாம்!
அந்தக் கள்ளி அத்தானைக் கல்யாணம்
பண்ணிக் கொண்டாளாம்! (சித்தாடை)


அஞ்சாத சிங்கம் போல
வீரம் உள்ளவனாம்!-யானை
வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம்! 
அந்த முண்டாசுக்காரன் கொஞ்சம்
முன் கோபியாம்!
ஆனாலும் பெண்ணென்றால் அவன்
அஞ்சிக் கெஞ்சி நிற்பானாம்! (முத்தாத)


முன்னூறு நாளை மட்டும் எண்ணிக் கொள்ளுங்க!
அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க!
அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க!
அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகுங்க
அதைக் கண்டு சந்தோஷம் கொண்டாடிப்
பாடப் போறாங்க! (சித்தாடை)

வண்ணக்கிளி-1959

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா & ஜமுனா ராணி குழுவினர்.
பெண் : படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா!
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா!
ஆண் : பார்வை சொல்லும் பாடம் கண்டு விழிக்கிறேனம்மா!
படிப்ப தெங்கே புதிய பாடம் வாத்தியாரம்மா?
(படிக்க)
பெண் : கிட்டே சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு-நாம்
எட்டிச்சென்றால் சுடும் நெருப்பு என்ன நெருப்பு?
ஆண் : ஒட்டும் இரு உள்ளந் தன்னில் பற்றிக்கொண்டது-அந்த
புத்தம்புது நெருப்பைத் தானே காதலென்பது! கவிஞர் சொன்னது!
(படிக்க)
பெண் : தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்த உலகமே
செங்கதிரோனைச் சுற்றும் சேதி பழைய பாடமே!
ஆண் : என்னை மட்டும் சுற்றிக் கொண்டு இந்த உலகமே-இன்று
உன்னைச் சுற்றிக்கேட்கும் பாடம் புதிய பாடமே-புதிய பாடமே!
(படிக்க)
ஆண் : படிக்கவேண்டும் புதிய பாடம் வாத்தியாரம்மா!
பெண் : பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா!
இரு: ஹா... ஹா... ஹா... இம்... ம்... ம்...

தாயில்லாப் பிள்ளை-1961

இசை : к v. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா
ஆண் : மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது!
பெண் : நெஞ்சைத் தொட்டுத் தொட்டு ஆசைகளை
புட்டு புட்டுச் சொல்லுது!
ஆண் : என்னம்மா பண்ணுது உள்ளதைச் சொல்லு?
பெண் : என்னமோ பண்ணுது என்னத்தைச் சொல்ல...
(மழை)
பெண் : கட்டுக் குலையாத-அரும்பைத்
தொட்டு விளையாட-நெருங்கி
ஒட்டி உறவாட வந்தது காத்து!
ஆண் : மொட்டுச் சிரிப்பாட-இதழில்
பட்டு விரிப்பாட-அழகைக்
கொட்டி மகிழ்ந்தாடி குலுங்குது பூத்து!
பெண் : பூவாகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியாச்சு!
ஆண் : அந்தக் கனியும் இப்போ கைக்கு வந்தாச்சு!
(மழை)
பெண் : வெத்தலை பாக்கு வச்சு-விருந்தை
வீட்டிலே கூட்டி வச்சு-தாலி
கட்டி என் கைபுடிச்சு கலந்திட வேண்டும்!


ஆண் : குத்து விளக்கு வச்சு-குலுங்கும்
மெத்தையில் பூவிரிச்சு-இனிக்கும்
வித்தையெல்லாம் படிச்சு சுகம் பெற வேண்டும்.


பெண் : காலாட மேலாடக் கையாட முகம் சிவக்கும்!


ஆண் : என் கைகளில் உன் பூவுடல் மிதக்கும்.
(மழை)


தேர்த் திருவிழா-1968

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா
ஆண் : சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு-சின்னச்
சிட்டு! உன் பார்வை மின் வெட்டு!
பெண் : சிங்காரக் கைகளில் என்னைக் கட்டு! நெஞ்சைத்
தொட்டு! உன் அன்பை நீ கொட்டு! (சித்)


ஆண் : இது காதல் நாடக மேடை!
பெண் : விழி காட்டுது ஆயிரம் ஜாடை!
ஆண் : இங்கு ஆடலுண்டு!
பெண் : இன்பப் பாடலுண்டு
ஆண் : சின்ன ஊடலுண்டு!
பெண் : பின்னர் கூடலுண்டு! (சித்)


ஆண் : மது உண்டால் போதையைக் கொடுக்கும்!
பெண் : அந்த மயக்கம் காதலில் கிடைக்கும்!
ஆண் : தன்னைத் தான் மறக்கும்!
பெண் : அது போர் தொடுக்கும்!
ஆண் : இன்ப நோய் கொடுக்கும்!
பெண் : பின்பு ஒய்வெடுக்கும்!
ஆண் : இங்கு தரவா நானொரு பரிசு?
பெண் : அதைப் பெறவே தூண்டுது மனசு! :ஆண் : ஒண்ணு நான்கொடுத்தால் என்ன நீ கொடுப்பாய்?
பெண் : உண்ணத் தேன் கொடுப்பேன் என்னை நான் கொடுப்பேன்!
(சித்)


தேர்த் திருவிழா-1968

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா
ஆண் : தேவியின் திருமுகம்
தரிசனம் தந்தது!
பெண் : தேவனின் அறிமுகம்
உறவினைத் தந்தது!
ஆண் : பூவுடல் நடுங்குது குளிரில்-நான்
போர்வையாக லாமா?
பெண் : தேவை ஏற்படும் நாளில்!-அந்த
சேவை செய்யலாம்!
ஆண் : மனமோ கனி!
குணமோ தனி!
பெண் : மனமும் குணமும்!-கோபம்
வந்தால் மாறுமே!
ஆண் : நோ! நோ! நோ!


ஆண் :காற்றினில் ஆடிடும் கொடிபோல்!-என்
கையில் ஆட நீ வா!
பெண் : கையினில் ஆடணும் என்றால்!-ஒன்றை
கழுத்தில் போடணும்!
ஆண் : அதை நான் தரும்!
திரு நாள் வரும்!
பெண் : வரட்டும் அந்த நாள்!-வந்தால்
தருவேன் என்னை நான்!
ஆண் : எஸ்! எஸ்! எஸ்!


வெள்ளிக் கிழமை விரதம்-1974

இசை : சங்கர், கணேஷ்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா
ஆண் : பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு!-கண்
பார்வை போடுதே சுருக்கு!
பெண் : பாதையிலே பல வளைவிருக்கு!-உங்க
பார்வையிலே நம்ம உயிரிருக்கு!
ஆண் : நானிருக்கும் போது பயமெதற்கு?- என்
நாட்டமெல்லாம் உன் மேலிருக்கு!
பெண் : ஆனைக்கும் உண்டு அடிசறுக்கு!-இதை
அறிந்தும் ஏனோ வீண்கிறுக்கு!


பெண் : நெஞ்சினிலே புது நினைவிருக்கு !-அதில்
நேசத்தினால் வரும் மணமிருக்கு!
ஆண் : நிம்மதியாய் நாமும் இருப்பதற்கு!-நல்ல
நேரமும் இடமும் கிடைத்திருக்கு!
பெண். எங்கும் இன்பம் நிறைந்திருக்கு!-அதில்
இருமனம் ஒன்றாய்க் கலந்திருக்கு!


படிக்காத மேதை-1960

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: A.L. ராகவன் & ஜமுனாராணி
ஆண் : அன்பே அமுதே! அருங்கனியே!
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே!
எண்ணமெல்லாம் நிறைந்தே நீயே!
இன்பமும் தந்தாயே! கொஞ்சும் கிளியே!
கன்னல்மொழிபேசி கண்ணால் வலைவீசி!
கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராசி!


பெண் : என்ன தவம் செய்தேன் கண்ணா!
உன்னுடன் உறவாட ஆசை மன்னா!


ஆண் : இருவரும் ஒன்றானோம்!
மதுவுண்ணும் வண்டானோம்!


பெண் : சுவாமி!


ஆண் : கண்ணே!


பெண் : இதுவே பேரின்பம்!


உத்தமபுத்திரன்-1958

இசை : G. ராமநாதன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P.சுசிலா
மியாவ்! மியாவ்!
மியாவ்! மியாவ்! பூனைக்குட்டி!
வீட்டைச் சுத்தும் பூனைக்குட்டி!
அத்தான் மனசு வெல்லக்கட்டி-அவர்
அழகு எப்படி சொல்லுகுட்டி!
அங்கமெல்லாம் பளபளக்கும்
தங்க நிறம் என்பது போல் -
அவரின் திருவுருவம் தகதகன்னு ஜொலிக்குமா?
அந்தமுள்ள சந்திரனை
உவமை சொல்வது போல்-யாரும்
ஆசை கொள்ளும் வண்ணம் மலர்முகமும் இருக்குமா?
(மியாவ்)


செங்கரும்பாய் இனித்து!-அவர்
சொல்லும் என்னை மயக்கிடுதே!
சிரிப்பும் அதைப் போல எனை
மயங்கச் செய்யுமா?
பொங்கி எழும் ஆவலினால்
மங்கை நான் கேட்கிறதை
புரிந்துகொண்டு பதில் எனக்கு சொல்ல உனக்குத் தெரியுமா?

குமுதம்-1961

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
ஆண் : ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை!
பெண் : ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை!
ஆண் : வண்ணம் பல மின்னும்-அதில்
பிள்ளை போலவே !
பெண் : எண்ணிப் பார்க்க ரெண்டு போதும்
நம்மைப் போலவே!
ஆண் : மனக் கண்கள் அந்தக் கனவே காணுதே!
பெண் : நாம் காணும் இன்பம் நிலையாய்த் தோணுதே!
ஆண் : எண்ணும் எண்ணம் யாவும் என்றும்
உன்னைப் பற்றியே!
பெண் : அது இன்பம் இன்பம் என்று ஆடும்
உன்னைச் சுற்றியே!
ஆண் : அதன் சின்னம் தோன்றி உருவம் காட்டுதே
பெண் : அது உன்னைப் போல சிரிப்பை மூட்டுதே!

வெள்ளிக்கிழமை விரதம்-1974

இசை : சங்கர், கணேஷ்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா
என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்!
ஏதும் தோன்றாமல் தடுமாறுகின்றேன்!
காணாத நிலையே கண்டதனாலே
கங்கு கரையின்றிப் பொங்கு கடல் போலே ஆனேனே!
இது கனவோ? அன்றி நனவோ?
என தன்பே! நீ சொல்லாயோ?  (என்)


இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே
இணையே இல்லாத இல்வாழ்விலே
தேவைதனை உணர்ந்தே
சேவை செய்து மகிழ்வேன்
சிறந்த இன்பம் காணுவேன்!


உறவாடும் காதல் சுகம் வரும் போது
உனை மறந்தாலே அதிசயம் ஏது? கிடையாது!
இது கனவோ அன்றி நனவோ?
எனதன்பே ! நீ சொல்லாயோ?

தங்கப் பதுமை-1958

இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்: P. சுசிலா
பெண் : நேரம் வந்தாச்சு!-நல்ல
யோகம் வந்தாச்சு!
கூறைப் பட்டு எனக்காக
ட்ரியோ! ட்ரியோ! ட்ரியோ! ட்ரியோ!
இந்தக் குமரிப் பொண்ணு உனக்காக!
ட்ரியோ! ட்ரியோ ட்ரியோ! ட்ரியோ!
பக்கத்திலே வந்து நில்லுங்க மச்சான்!
பட்டு வேட்டி இதைக் கட்டுங்க மச்சான்!
அக்கம் பக்கம் இங்கே யாருமே இல்லே!
வெட்கப் படவும் தேவையே இல்லே!


ஆண் : நேரம் வந்தாச்சு!-நல்ல
யோகம் வந்தாச்சு!
நீ பொறந்தே எனக்காக!
ட்ரியோ! ட்ரியோ! ட்ரியோ! ட்ரியோ!
நான் பொறந்தேன் உனக்காக!
ட்ரியோ! ட்ரியோ! ட்ரியோ! ட்ரியோ!
சிட்டுக் குருவியே கிட்ட வாடி-உன்னைத்
தொட்டுத் தொட்டு மனம் விட்டுச் சிரிப்பேன்!
பட்டாம் பூச்சி போலே வட்டமிட்டே-உன்னை
விட்டுப் பிரியாமெ ஒட்டியிருப்பேன்!
பெண் : வச்ச பயிரு வளர்ந்தாச்சு!
வளர்ந்த பயிரு கதிராச்சு!
அதன் பலனை நாமடைந்து
ஆனந்தமா வாழ்ந்திடணும்!
எல்லா சுகத்தையும் அள்ளணும் மச்சான்!
இதுக்கு மேலென்ன சொல்லணும் மச்சான்!
நல்ல நாளாப் பாத்து வீட்டுக்கு வந்து
பாக்கு வெத்தலை மாத்துங்க மச்சான்!


ஆண்  : வயலுக்கு ஒரு வரப்பாவேன்!
வாழ்க்கைக்கு நான் துணையாவேன்!
கால நேரம் பாத்துக்கிட்டுக்
கல்யாணத்தை வச்சுக்குவோம்!
மருத மலை முருகனுக்கு
மாவிளக்கு போட்டிடுவோம்!
வேலவனை நாம் துதிப்போம்
வேண்டியதை அவன் கொடுப்பான்!

தாய்மீது சத்தியம்-1978

இசை : சங்கர், கணேஷ்
பாடியவர்கள் : T. M. சௌந்தரராஜன் & P. சுசீலா
பெண் : காவேரிதான் சிங்காரி!
சிங்காரிதான் காவேரி!
கண்ணால் கண்டவ சிங்காரி!
கலந்து கொண்டவ காவேரி!
காதல்வெள்ளம் பெருக்கெடுத்து கரை மீறி-மனக்
காட்டினிலே பாய்ந்ததனால் வெளியேறி-உங்க
பக்கத்திலே வந்திருக்கும் வம்புக்காரி!
ஆண் : ஆஹா! சிங்காரிதான் காவேரி!
காவேரிதான் சிங்காரி!
கண்ணால் கண்டவ சிங்காரி!
கலந்து கொண்டவ காவேரி!
தங்கம் போல மனமுடைய பணக்காரி! நல்ல
தான தர்ம சிந்தனையுள்ள உபகாரி!
தந்திரத்திலே சிறந்த குள்ளநரி! என்னை
மந்திரத்தால் மயக்கிய கைகாரி!
பெண் : குணத்துக்கு அடிமை! பணத்துக்கு எதிரி!
கொஞ்சிப் பாடிவரும் காவேரி!
ஆண் : குறும்புக்காரியே! உனது கரும்புப் பார்வைதான்
என்றும் என் வாழ்விலே எனக்கதிகாரி!
பெண் : இனிக்கும் பேச்சிலே மனசும் மயங்கியே
ஏங்கி வாடுபவள் சிங்காரி!
ஆண் : ஏக்கம் தீரவே ஏய்த்து ஆளையே
இழுத்து வந்தவதான் காவேரி!
பெண் : அந்தக் காவேரிதான்!
ஆண் : இல்லை சிங்காரிதான்!
பெண் : ஊஹூம் காவேரிதான்!
ஆண் : ஊஹூம் சிங்காரிதான்!


வாழவைத்த தெய்வம்-1959

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள் : T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா
ஆண் : மூங்கில் மரக் காட்டினிலே கேட்கு மொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால் உண்டாகும் சங்கீதம்
பெண் : மூங்கில் மரக் காட்டினிலே கேட்கு மொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால் உண்டாகும் சங்கீதம்
(மூங்கில்)


ஆண் : நாதம் இல்லை யென்றால் கீதம் கிடையாது
பெண் : ராகம் இல்லை யென்றால் தாளம் கிடையாது!
ஆண் : காதல் இல்லை யென்றால் உலகம் கிடையாது
பெண் : கண்கள் இல்லை யென்றால் காட்சியும் கிடையாது!
(மூங்கில்)


ஆண் : கண்கள் இருந்தென்ன? காட்சியும் இருந்தென்ன?
கொஞ்சும் மொழியில்லை! குறிப்பும் தெரியவில்லை!
பெண் : பிஞ்சும் காயாகும்! காயும் கனியாகும்!
கனியில் சுவையிருக்கும்! காலம் வந்தால் பலன் கொடுக்கும்
(மூங்கில்)



ஆண்: காலம் வருவ தென்று? காயும் கனிவ தென்று?
கண்கள் மலர்வ தென்று?இன்பம் வளர்வ தென்று?

பெண்: ஆக்கப் பொறுத்த மனம் ஆறப் பொறுக்கலையா!
பார்க்கும் பார்வையிலே நோக்கம் புரியலையா?
                                                
(மூங்கில்)


அழகு நிலா-1962



இசை : K. V. மகாதேவன்

பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன் & P. சுசிலா



பொங்கும் அழகு பூத்துக் குலுங்கும்
தங்கத் தாமரையே!
அன்பு வெள்ளம் அள்ளி வழங்கும்
இன்பக் காவிரியே! - (பொ)


இன்று நேற்று வந்த உறவா
இங்கு நம் உறவே!
இதயத்தோடு இதயமாகக்
கலந்த பெண் உருவே!


சங்கத் தமிழ்க் கன்னியாக
அன்று நீ பிறந்தாய்!
கம்பனாகத் தோன்றி யுன்னைக்
கலந்து நான் மகிழ்ந்தேன்!


இந்த உலகம் உள்ள வரையில்
சொந்தம் மாறாது!
எது வந்தாலும் எந்த நாளும்
பிரிவும் நேராது!

தங்கம் மனசு தங்கம்-1959

இசை : கே. வி. மகாதேவன்
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
ஆண் : சீருலாவும் இன்ப நாதம்
ஜீவ சங்கீதம்!
பெண் : செவி நாடும் தேன் சுவை யன்றோ
திருவே உமது கானம்  (சீரு)


ஆண் : ஆவியே இயல் இசை போலே நாமே
அன்பினால் கலந்தே மகிழ்வோம்.
பெண்: ஏழை எனது தாழ்வை அகற்றி
வாழ்வு தந்தீர் எல்லாம் என் பாக்கியம்  (சீரு)


பெண்: நாதத்தால் மனம் வசமாகும் போது
பேதம் பாராது!
ஆண் : காதலலைகள் மோதும் மனதில்
தாழ்வு உயர் வேது?
பெண் : ஆசை மொழியே பேசி எனையே
ஆளும் அரசே எல்லாம் என் பாக்கியம்!
ஆண் } சீருலாவும் இன்ப நாதம் ஜீவ சங்கீதம்!
பெண்} ஹம்மிங்

வடிவுக்கு வளைகாப்பு-1962

இசை : K. V மகாதேவன்
பாடியவர்கள் : T. M. சௌந்தரராஜன் & P சுசிலா
உன் முகம் தான் என் முகத்தைக் காட்டும் கண்ணாடி - இதை
உணர்ந்து நீயும் சிரிக்க வேணும் எனக்கு முன்னாடி!


நீ எண்ணுவதை உன் கண்ணிரண்டும்
சொல்லாமல் சொல்லுதே-அதை
எண்ணி எண்ணி இங்கு என் மனமும்
துள்ளாமல் துள்ளுதே!
என்னை எங்கோ அழைத்துச் செல்லுதே
(உன் முகம்)


உள்ளத்தினால் இங்கு ஒன்று பட்டால்
உருவாகும் நன்மையே-ஒரு
கள்ளமில்லா இன்பம் தேடிவரும்
எந்நாளும் நம்மையே!
அன்பு ஒன்றே உலகில் உண்மையே
(உன் முகம்)

பெண் மனம்-1963

இசை: வேதா
ஆண் : சிரிக்கத் தெரிந்தால் போதும்-துயர்
நெருங்காது நம்மை ஒரு போதும்!  (சிரி)
பெண் : சிரிக்கத் தெரிந்தால் போதும்-துயர்
நெருங்காது நம்மை ஒரு போதும்!  (சிரி)
ஆண் : வனத்துக்கு அழகு
பெண் : பசுமை
ஆண் : வார்த்தைக்கு அழகு
பெண் : இனிமை
ஆண் : குளத்துக்கு அழகு
பெண் : தாமரை-நம்முகத்துக்கு அழகு புன்னகை(சிரி)
ஆண் : இரவும் பகலும் உண்டு-வாழ்வில்
இளமையும் முதுமையும் உண்டு!
பெண் : உறவும் பகையும் உண்டு-எனும்
உண்மையை நெஞ்சில் கொண்டு  (சிரி)
பெண் : உறவை வளர்ப்பது.
ஆண் : அன்பு
பெண் : மன நிறைவைத் தருவது
ஆண் : பண்பு
பெண் : பொறுமையை அளிப்பது
ஆண் : சிரிப்பு-இதைப் புரிந்தவர் அடைவது களிப்பு (சிரி)
பெண் : மனிதன் மாறுவதில்லை-அவன்
மாறிடில் மனிதனே இல்லை!
ஆண் : வந்திடும் அவனால் தொல்லை-நீ
சிந்தித்துப் பார் என் சொல்லை(சிரி)


மாடப்புறா-1962

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா
பெண் : கம கம வென நறுமலர் மணம் வீசுதே!
ஆண் : நம் திருமண முதல் இரவென அது பேசுதே!  (கம)
பெண் : ஜிலு ஜிலுவெனத் தென்றல் உடலைத் தழுவுதே!
ஆண் : தன் நிலை மறந்து மனமும் எங்கோ நழுவுதே!
பெண் : கலை மதியும் வானுடன் விளையாடுதே!
ஆண் : என் கண்ணும் கருத்தும் உன் அழகில் ஆடுதே!
பெண் : குறு குறு வென இரு விழி என்னைப் பார்க்குதே!
ஆண் : அது கொஞ்சிப் பேசி மகிழ்ந்திடவே அழைக்குதே!
பெண் : இதய நாடி பட பட வெனத் துடிக்குதே!
ஆண் : ஒரு இனமறியா புது உணர்வு பிறக்குதே!
பெண் : உள்ளக் கருத்தை உமது முகம் காட்டுதே!
ஆண் : உன் சொல்லும் செயலும் நெஞ்சில் இன்பமூட்டுதே! (கம)


சமய சஞ்சீவி.-1957

இசை : G. ராமநாதன்
முத்த : பிள்ளைக் கனி அமுது ஒண்ணு
பிறந்திட வேணும்!-அதை
அள்ளிக் கையால் அணைத்து இன்பம்
அடைந்திட வேணும்!


முருகன் : செல்லக் கிளி மழலை மொழி
சிந்திட வேணும்!-நாம்
செவியாற அதைக் கேட்டு
மகிழ்ந்திட வேணும்!


முத்த : கள்ள மில்லா அன்பை
கன்னித் தமிழ் பண்பை
முருகன் : கலந்துணவாய் நாமதற்கு
ஊட்டிட வேணும்!


இருவரும் : பிள்ளைக் கனி அமுது ஒண்ணு
பிறந்திட வேணும்!-அதை
அள்ளிக்கையால் அணைத்து
இன்பம் அடைந்திட வேணும்!


முருகன் : தெள்ளு தமிழ்க்கலைகளிலே
தேர்ந்திட வேணும்!-பொது
சேவையிலே முன்னணியில்
திகழ்ந்திட வேணும்!
முத்த : உள்ளம் ஒன்று கூடும்
உறவின் பலன் நாடும்
நம் கனவும் நனவாகி
நலம் தர வேணும்!


இருவரும் : பிள்ளைக் கனி அமுது ஒண்ணு
பிறந்திட வேணும்! அதை
அள்ளிக் கையால் அணைத்து
இன்பம் அடைந்திட வேணும்!


பிள்ளைக்கனியமுது-1958

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா
பெண் : ஓடுகிற தண்ணியிலே ஒறச்சு விட்டேன் சந்தனத்தை
சேந்துதோ?... சேரலையோ?... செவத்த மச்சான் நெத்தியிலே...!


ஆண் : சந்தனப் பொட்டு வச்சு
சொந்த மச்சான் வந்திருக்கேன்!
சந்தோஷமாக நீயும் வந்து சேரு இக்கரைக்கு!


பெண் : இக் கரையில் நானிருக்க
அக் கரையில் நீ யிருக்க
இருவரையும் பிரிக்க இடையில் இந்த ஆறிருக்கு!


ஆண் : ஆறாலும் நம்மைப் பிரிக்க
ஆகு மோடி மத்தியிலே!
ஆசையுள்ள பெண் மயிலே
பாரு வாறேன் பக்கத்திலே!


பெண் : பக்கத்திலே வந்தவுடன்
பாச முள்ள எம் மனசு
சொக்காமல் சொக்கிடுது சுத்திச் சுத்தி ஆடிடுது!
பக்குவமா நேரம் பார்த்துப்
பாட்டுப் பாட வந்த மச்சான்!-என் சொந்த மச்சான்
வெக்கமா இருக்குதுங்க
விலகிக் கொஞ்சம் போங்க மச்சான்!
ஆண் : வெக்கத்தையும் மூட்டை கட்டி
கக்கத்திலே வச்சுக் கிட்டு
வில்லாக வளைஞ்சு ஆடு
டப்பாத் தாளம் போட்டுக்கிட்டு
வில்லாக வளைஞ்சு ஆடு
டப்பாத் தாளம் போட்டுகிட்டு

பிள்ளைக்கனியமுது-1958

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா
ஆண் : யாருக்கு யார் சொந்தமென்பது-என்னை
நேருக்கு நேர் கேட்டால் நானென்ன சொல்வது?
வாரி முடித்த குழல் எனக்கே தான் சொந்த மென்று
வானத்துக் கார் முகிலும் சொல்லுதே?
மலர்ந்து விளங்கும் முகம் எங்களின் இனமென்று
வண்ண மலரெல்லாமே துள்ளுதே-இதில்
(யாருக்கு)


பெண் : வண்ண மலர் என்றும் வண்டுக்குத் தான் சொந்தம்!
வழங்கிடும் மதுவாலே இரண்டுக்கும் ஆனந்தம்!
ஆண் : தந்தப்பல் எழில் கண்டு, தன் இனந்தான் என்று
பொங்கும் வெண்முத்து பண்பாடுதே!
குங்கும இதழ் கண்டு கோவைக் கனி எல்லாம்
தங்களின் இனமென்று ஆடுதே-இதில்
(யாருக்கு)


பெண் : கொத்தும் கிளிக்கே தான் கோவைக்கனி சொந்தம்!
குறிப்பாக உணர்த்தலாம் வேறென்ன சொல்வது?
(யாருக்கு)

சபாஷ் மாப்பிள்ளை-1961

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P சுசிலா
வஸந்தன் : வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ?
மீனா : அன்புக் கணவனின் முன்னாலே மனைவி
அழகாகச் சிந்தும் புன் சிரிப்பு!
வஸந் : நெஞ்சம் ஒன்றாகி எந்நாளும் இன்பம் பெறவே
சொந்தம் கொண்டாடச் செய்யும் புதுப்பூ என்ன பூ?
மீனா : உண்டான ஆசை தன்னைச் சொல்லாமல் சொல்லி
உள்ளம் ரெண்டைச் சேர்க்கும் நாலு கண்ணின் சந்திப்பு!
(வண்டு)


வஸந் : உள்ளம் ஒன்றான பின்னாலே உருவெடுத்து
தொல்லை தந்தாலும் இன்பம் தரும் பூ என்ன பூ?
மீனா : எல்லோரும் இணையேதும் இல்லாத செல்வம்
என்றே சொல்லும் பிள்ளைச் செல்வம் செய்யும் குறும்பு
(வண்டு)


எங்கள் குலதேவி-1959

இசை : K. V. மகாதேவன்
ஆண் : காயிலே இனிப்பதென்ன?
கனியானால் கசப்பதென்ன?
வாயாடி வம்பு பேசும் மானே!
பதில் சொல்லு!


பெண் : காலத்தின் கோலத்தினால்
கட்டழகு குலைவதினால்
எட்டிக் கனியாக ஆண்கள்
எண்ணும் பெண்ணினந்தான்!


ஆண் : நீலமாய்த் தெரிவதென்ன?
நீர் வீழ்ச்சி யாவ தென்ன?
நிமிர்ந்தே என்னைப் பார்த்து
நேரான பதில் சொல்லு!


பெண் : நெஞ்சிலே அனுதினமும்
கொஞ்சும் இன்ப துன்ப மெனும்
நிலையைக் காட்டுகின்ற
பெண்களின் கண்கள்தான்!


ஆண் : பிரிந்தால் கனலாகி
நெருங்கி நின்றால் பனியாகி
கருத்தில் விளையாடக்
காணும் பொருளென்ன?
பெண் : இரண்டு இதயங்களை
இவ்வுலகில் ஒன்றாக்கி
என்றும் அழியாமல்
வாழும் உண்மைக் காதல் தான்!


இருவரும்: தெய்வீகக் காதலினால்
சேர்ந்து விட்டோம் ஆனதினால்
சிங்கார கானம் பாடி
வாழ்வோம் நாம் இனிமேல்!

மனமுள்ள மறுதாரம்-1958'

இசை : K. V. மகாதேவன்
ஆண் : பார்த்தாலும் பார்த்தேன்-நான்
உன்னைப் போல பார்க்கலே!
கேட்டாலும் கேட்டேன்!-உன்
பேச்சைப் போல கேக்கலே!


பெண் : பார்த்தாலும் பார்த்தேன்-நான்
ஒன்னைப் போல பாக்கலே!
கேட்டாலும் கேட்டேன்-ஒன்
பேச்சைப் போலே கேக்கலே!


ஆண் : பூத்திருக்கும் மலர் முகமோ
பொன்னைப் போல மின்னுது-உன்
போக்கை மட்டும் பார்க்கையிலே
எதையெதையோ எண்ணுது!


பெண் : படபடத்து வெடவெடத்து
சடசடத்துப் போவுது!
பக்கத்திலே நீயிருந்தா
இன்னான்னமோ ஆவுது!


ஆண் : காணுகின்ற பொருளில் எல்லாம்
உன்னுருவம் தெரியுது!
காதலென்றால் என்னவென்று
எனக்கு இன்று புரியுது!
பெண்: ஏதோ ஒண்ணு என்னையும் உன்னையும்
இப்படிப் புடிச்சு ஆட்டுது!
இருந்த இருப்பெ நடந்த நடப்பெ
மறக்க வச்சு வாட்டுது!


ஆயிரம் ரூபாய்-1964

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா
ராதை : சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா?
நெஞ்சில் இன்பம் வளருமா-எந்நாளுமே (சந்)


சந் : சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே
சந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா?
ராதை: என்னை இவ்விதம் வதைப்பதும் நியாயமா?
ஏழை என் மீது இன்னும் சந்தேகமா?
சந் : உன் மனக் கண்களை மூடிய மேகமே
தன்னால் விலகிப் போனதா என் தங்கமே! (சந்)


ராதை: சந்திரன் ஒளியை உண்டு வாழும்
சாதகப் பறவை ஆனேனே-நானே!
சந் : அன்பெனும் சிறகை விரித்தே பறந்து
ஆனந்த உலகைக் காண்போம் நாமே!
ராதை: இன்பம் உண்டு என்றுமினி துன்பமேயில்லை!
சந் : இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை!


இருவரும்: சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா?
நெஞ்சில் இன்பம் வளருமா-எந்நாளுமே (சந்)

குல மகள் ராதை-1963

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன், P. சுசிலா
ஆண் : செந்தமிழ் நாட்டுச் சோலையிலே-சிந்து
பாடித்திரியும் பூங்குயிலே!
தென்றலடிக்குது என்னை மயக்குது!
தேன் மொழியே இந்த வேளையிலே!
பெண் : சிந்தை கவர்ந்த ஆணழகா!
உம்மால் எனது வாழ்விலே
சொந்தம் மிகுந்தது! காதலில் புது
சுகமும் என் மனம் காணுது!  (தென்ற)


ஆண் : அன்பில் விளைந்த அமுதே-என்
ஆசைக் கனவும் நீயே!
இன்ப நிலவே! உனது கண்கள்
இனிய கதைகள் சொல்லுதே! (தென்ற)


பெண் : உம்மை யன்றி இங்கு இன்பமில்லை!
உற்ற துணை வேறு யாரு மில்லை!
என்னுயிரே! தமிழ்க்காவியமே!
என்றும் ஒன்றாகவே-வாழ்ந்திடுவோம்! (தென்ற)


ஆண் : இன்ப துன்பம் எதிலும்-சம
பங்கு அடைந்தே நாமே
இல்லறம் ஏற்று பேதமில்லா
எண்ணங் கொண்டு வாழலாம்: (தென்ற)
இருவரும் : அதை எண்ணி யெண்ணி-இந்த
ஏழையின் மனம்
இன்பக் கனவு காணுதே!
தென்றலடிக்குது! என்னை மயக்குது !
தேனமுதே இந்த வேளையிலே!

சுகம் எங்கே?-1954

இசை : எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்கள்: K. R. ராமசாமி & ஜிக்கி
கவிதா : பார்க்கப் பார்க்க மயக்குதடி
பார்வையாலே அழைக்குதடி!
வார்த்தை ஏதும் இல்லாமலே! சொல்லாமலே!
கோரஸ் : வார்த்தை ஏதும் இல்லாமலே! சொல்லாமலே!
(பார்க்க)
கவிதா : பாத்தி கட்டித் தோட்டக்காரன்
பரிவுடனே வளர்த்த கொடி!
லீலா : பொங்கும் இளம் பருவத்தினால்
பூத்து நின்று குலுங்குதடி!
கோரஸ் : புதுப்புது கனவுகள் காணுதடி!
காணுதடி காணுதடி!
கவிதா : ஆதவனைக் கண்டு
ஆசை மிகக் கொண்டு
தாமரைப் பெண் இதழ் விரியும்!
கோரஸ் : முகம் மலரும்
லீலா : காதலனைக் கண்டு
நீயது போல் நின்று
கண்ணாலே பேசும் ஒரு
கோரஸ் : நாளும் வரும்!
கவிதா : வருவ தெல்லாம் வரட்டும்!
தருவ தெல்லாம் தரட்டும்!
லீலா : வாழ்க்கை மட்டும் நம்கையில் இல்லையடி!- அது
மனிதருக்கே புலப்படாத எல்லையடி!
(பார்க்க)


கவிதா-1962

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: ஜமுனாராணி & குழுவினர்
ஆண் : சும்மா சும்மா சிரிச்சுக்கிட்டு
சொகுசு நடை போட்டுக் கிட்டு
துள்ளித் துள்ளி ஆடிவரும்! உன்னைக் கண்டா
சுத்திச் சுத்திப் பார்க்காத கண்ணும் உண்டா?


பெண் : கும்மாளம் போட்டுக்கிட்டு
குதிரை வண்டி ஒட்டிக்கிட்டு
தெம்மாங்கு பாடி வரும் உன்னைக் கண்டா
திரும்பிப் பார்க்காத கண்ணும் உண்டா?
(சும்மா)


ஆண் : மஞ்சள் பூசிக் குளிச்ச முகம் மினுமினுக்க
மயக்க மூட்டும் பார்வையிலே நிலவெரிக்க
மரிக் கொழுந்து கொண்டையிலே கமகமக்க!
குறும்புப் பேச்சைக் கேட்பவங்க கிறுகிறுக்க!
(சும்மா)


பெண் : சிலுக்குச்சட்டை காத்துப்பட்டு சிலுசிலுக்க-தங்கச்
சிலையைப் போல தேகக்கட்டு பளபளக்க
தெருவழியே வண்டிச் சத்தம் கடகடக்க-கையில்
சின்னஞ் சிறு சாட்டை வாரு துடிதுடிக்க!
(சும்மா)
ஆண் : புருவமெனும் வில்வளைச்சு
பருவமெனும் அம்பெவச்சு
புள்ளி மான் போல் குதிச்சு
வெள்ளி மீனைக் கண்ணில் வச்சு
(சும்மா)


பெண் : வருபவங்க எல்லோருக்கும்
அருமையான வழியைக் காட்டி
புதுமையான பாதையிலே
போவதற்கு ஆசைமூட்டி
(சும்மா)


ஆண் : ஒ! துள்ளித் துள்ளி ஆடிவரும் உன்னைக் கண்டா
சுத்திச் சுத்திப் பாக்காத கண்ணும் உண்டா!

அல்லி பெற்ற பிள்ளை-1959

இசை: K. V. மகாதேவன்
பாடியவர்கள் : T.M. சௌந்தரராஜன் & P. சுசீலா
ஆண் : மல்லிகை முல்லை நறுமலரும்
மயங்கித் தவிக்கும் எனதுயிரும்
அள்ளிச் செறுகிக் கூந்தலிலே
அழகாய் முடித்த பெண் மயிலே!
துள்ளி யோடும் காவிரி நீ!-உனைச்
சொந்தம் கொள்ளும் அலைகடல் நான்!


பெண் : கள்ளம் இல்லா மனத்தாலே
கவிதை பாடும் திறத்தாலே
உள்ளம் உருகச் செய்தவரே!
உணர்வில் ஒன்றிக் கலந்தவரே!


ஆண் : துள்ளி யோடும் காவிரி நீ!
சொந்தம் கொள்ளும் அலைகடல் நான்!


ஆண் : செந்தமிழ் நாட்டின் சீருயர
வந்திடும் காவிரி நதி போலே
அந்தகன் எனது வாழ்வுயர
அன்பின் வெள்ளம் தந்தவளே!


பெண் : சிந்தனைக் கதவும் திறந்திடவே
செய்திடும் அறிவுச் சுடர் போலே
மங்கை எனது மதி மயக்கம்
மாறிடும் விந்தை புரிந்தவரே!


ஆண் : துள்ளி யோடும் காவிரி நீ!
பெண் : சொந்தம் கொள்ளும் அலைகடல் நீ!
ஆண் : மங்கிய நீல இரவினிலே
மலர்ந்தே ஒளி தரும் முழு நிலவே!
பெண் : வான நிலவும் ஒளி பெறவே
தானம் அளிக்கும் செங்கதிரே!!
ஆண் : துள்ளி யோடும் காவிரியே!
பெண் : சொந்தம் கொள்ளும் அலைகடலே!

பிறந்த நாள்-1962

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன் & P. சுசீலா
கனகா : கண்களால் காதல் காவியம்-செய்து
காட்டிடும் உயிர் ஓவியம்-தங்கள்
அன்பெனும் சாம்ராஜ்ஜியம்-சொந்த
மானதே எந்தன் பாக்கியம்!


சாரங் : கண்களால் காதல் காவியம்-செய்து
காட்டிடும் உயிர் ஓவியம்-உந்தன்
அன்பெனும் சாம்ராஜ்ஜியம்-சொந்த
மானதே எந்தன் பாக்கியம்!


கனகா : தங்களால் இந்த இன்பமே-என்றும்
சாஸ்வத மாகிட வேண்டுமே!


சாரங் : தங்கமே அதில் ஐயமேன்? இன்ப
சாகரம் மென்மேலும் பொங்குமே!


கனகா : திங்களைக் கண்ட அல்லி போல்-திரு
வாய் மொழியால் உள்ளம் மலருதே!


சாரங் : செந்தமிழ் கலைச் செல்வியே-மனம்
தேனுண்ணும் வண்டாய் மகிழுதே!  (கண்களால்)


கனகா : மண்ணிலே உள்ள யாவுமே-எழில்
மன்னவர் உம்மைப் போல் காணுதே
சாரங் : எண்ணமே ஒன்று ஆனதால்-இணை
இல்லாத ஆனந்தம் தோணுதே!


கனகா : இன்பமோ அன்றி துன்பமோ-எது
நேரினும் நாம் பங்கு கொள்ளுவோம்!


சாரங் : அன்றில் போல் பிரியாமலே-நாம்
இன்று போலென்றுமே வாழுவோம்!
(கண்களால்)


சாரங்கதரா-1958

இசை : G. ராமநாதன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா
அற்புதக் காட்சி யொன்று கண்டேன்!
ஆனந்த லாகிரி கொண்டேன்-சகியே
(அற்புதக் காட்சி)


சிற்பிகள் செய்யாத சிலை யொன்று கண்டேன்!
சிங்கார வாய் திறந்து பேசவுங் கண்டேன்!
கற்பனைக் கவிஞரின் காவியத் தலைவன்-என்
கண்முன்னே உயிரோடு வரவுங் கண்டேன் சகியே
(அற்புதக் காட்சி)


முத்துக்கள் கோர்த்தது போல் மோகனப் பல்வரிசை!
முடி மன்னர் யாவரும் வணங்கிடும் கைவரிசை!
சித்திரம் போல் மனதில் பதிவாகும் குரலோசை!
தித்திக்கும் நினைத்தாலே திருமாறன் அவராசை!
(அற்புதக் காட்சி)


சாரங்கதரா-1958

இசை : G. ராமநாதன்
பாடியவர் : P. பானுமதி
ஆல மரத்துக்கிளி!
ஆளைப்பார்த்துப் பேசும் கிளி!
வால வயசுக் கிளி!-மனம்
வெளுத்த பச்சக்கிளி!-மனம்
வெளுத்த பச்சக்கிளி!


முத்து முத்தா பனித்துளியாம்!
முகம் பார்க்கும் கண்ணாடியாம்!
கொத்துக் கொத்தாப் பழக்குலையாம்!
குமரிப் பெண்ணின் முன்னாடியாம்!


புள்ளையில் உசந்த புள்ளே!
பூமியிலே என்ன புள்ளே?-அது
வள்ளலாட்டம் உள்ளதெல்லாம்
வாரி வழங்கும் தென்னம் புள்ளே!


வாழையடி வாழையாக வாழணுமிண்னு
வாழ்த்துறதுலே இருக்கு தத்துவம் ஒண்ணு!
தாய்மையின் தியாகச் சின்னம் தானேயிண்ணு-குலை
தள்ளி வாழை ஒண்ணு சொல்லுது நின்னு! 
நீர் இருந்தா ஏர் இருக்கும்!
ஏர் இருந்தா ஊர் இருக்கும்!
ஊர் இருந்தா உலகத்திலே எல்லாம் இருக்கும்!
உண்மையோடு நன்மை எல்லாம் நல்லா செழிக்கும்!

பாலாபிஷேகம்-1977


இசை : சங்கர், கணேஷ்
பாடியவர் : P. சுசிலா
ஆண் : சங்கம் முழங்கி வரும்
சிங்காரத் தமிழ்க் கலையே!
இன்பம் உருவாகப்
பொங்கும் அன்பின் அலையே!


பெண் : சிந்தும் இசையமுதம்
தென் பொதிகைத் தென்றலோ?
செங்கரும்போ? கனிரசமோ?
தேன் குயிலின் கொஞ்சலோ?


ஆண் : கண்ணே சகுந்தலையே! கண்கவரும் ஓவியமே!
கணமும் உனை மறவேன்! என் காதல் காவியமே!


பெண்; மன்னவரே! ஏழைக்கு வாழ்வளித்த தெய்வமே!
என்னுயிரே! இன்று முதல் உமக்கேநான் சொந்தமே!


ஆண் : பெண்ணே மும்தாஜே! பேரழகின் பிம்பமே!
பேசும் பிறை நிலவே! என் வாழ்வின் இன்பமே!


பெண் : என் மனதில் கொஞ்சிடும் இனிப்பான எண்ணமே!
எந்நாளும் அழியாது நம் காதல் சின்னமே!

ஆடவந்த தெய்வம்-1960

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. R. மகாலிங்கம் & P. சுசீலா
அருவிக் கரை ஓரத்திலே அமைதி கொஞ்சும் நேரத்திலே
பருவக் காற்று வீசுது! பல கதைகள் பேசுது!(அருவி)


உருவமில்லா ஒருவன் உலகில் ஒண்ணைப் படைச்சானாம்!
அந்த ஒண்ணுக்குள்ளே பலபொருளை உணரவச்சானாம்!
கண்ணுக்குள்ளே துள்ளும் மீனைக் காண வச்சானாம்
கன்னத்திலே ரோஜாப்பூவை மின்ன வச்சானாம்(அருவி)


அன்னத்தையும் நடையிலே அமரவச்சானாம்-காற்றில்
ஆடுகின்ற பூங்கொடி போல் இடை யமைச்சானாம்!
வண்ண நிலா தன்னைப் போல முகம் அசைச்சானாம்!
வானவில்லைப் புருவமாக மாற்றி வச்சானாம்(அருவி)


கோவைக் கனி தன்னை உதட்டில் குவிய விட்டானாம்-இன்பம்
கொஞ்சும் கிளி மொழியை நாவில் உலவ விட்டானாம்!
மேகத்தையும் கூந்தலாக மேய விட்டானாம்-அந்த
தேகத்துக்குப் பெண் என்னும் பெயரை இட்டானாம்!(அருவி)


அழகுநிலா-1962

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா

கெஜல்

உறவும் உண்டு! பிரிவும் உண்டு உலகிலே!
வரவும் உண்டு! செலவும் உண்டு வாழ்விலே!

பாட்டு

நீயும் நானும் இங்கு வாழும் வாழ்க்கையொரு
கூட்டல் கணக்குத்தான்?-எப்போதும்
கூட்டல் கணக்குத்தான்?
கழித்தல் என்பதே இனி அதில் இல்லை!
பெருக்கல் என்பதுதான் அதன் எல்லை!
இருக்கும் வரையிலும் இருவர் வாழ்விலும்
கூட்டல் கணக்குத்தான்!-எப்போதும்
கூட்டல் கணக்குத்தான்!

கெஜல்

நெஞ்சம் நினைப்பதற்கே! இளமை ரசிப்பதற்கே!
கனிகள் சுவைப்பதற்கே! கைகள் கொடுப்பதற்கே!

பாட்டு

துள்ளித் துள்ளியிங்கு துடிக்குது மனசு!
கிள்ளிக் கிள்ளி நெஞ்சைக் கிளறுது வயசு!
அள்ளி அள்ளி நான் தருவேன் பரிசு!
கூட்டல் கணக்குத் தான்-எப்போதும்
கூட்டல் கணக்குத்தான்!(நீயும்)


தாய் மீது சத்தியம்-1978

இசை : சங்கர், கணேஷ்
பாடியவர்: P. சுசிலா
தேன்கூடு! நல்ல தேன்கூடு!
திருமகள் வாழ்ந்திடும் என்வீடு!


காணும்போது இனிக்கும்!-மதுரைக்
கதம்பம் போல மணக்கும்!
கண்ணைக் கவ்வி இழுக்கும்!-தன்னை
உண்ணச் சொல்லி அழைக்கும்!(தேன்)


வாடும் மனதை மூடும் கவலை
மதுவில் கரைந்தே பறந்தோட
வாழ்வில் நிம்மதி தேடும் செல்வச்
சீமான் மயங்கி உறவாட!(தேன்)


கலையால் வீசும் வலையால்-காதல்
விலையே பேசும் கிளி நான்!
கலையா போதை நிலையால் ஆளைக்
கவரும் காந்தச் சிலைதான்!


போனது எல்லாம் போகட்டும்!-மனம்
புதுப்புது கனவுகள் காணட்டும்!
ஆனது எல்லாம் ஆகட்டும்!
அதில் அதிசயக் காட்சிகள் தோணட்டும்!

ஆட்டுக்கார அலமேலு-1976

இசை : சங்கர், கணேஷ் -
பாடியவர்: P. சுசிலா
சிரிச்சாப் போதும் சின்னஞ்சிறு பொண்ணு!
திண்டாடச் செய்திடும் மை பூசுங் கண்ணு!


செந்தாழைமேனி சிங்கார மூட்டும்!
மண்மீது மாயா ஜாலங்கள் காட்டும்!
கண்டோரை எல்லாம் கொண்டாடச் செய்யும்!
கண்பார்வை அமுதெனும் தேன்மாரி பெய்யும்!


கல்லான நெஞ்சை சொல்லாமல் தாக்கும்!
கொல்லாமல் கொல்லும் காயம் உண்டாக்கும்!
வல்லாண்மைக் காரர் செல்வாக்கைப் போக்கும்!
மன்னாதி மன்னரை மண் பொம்மையாக்கும்!


ஆடாமல் ஆடும்! பாடாமல் பாடும்!
அழகின் முன்னாலே அறிவே தள்ளாடும்!
கூடாத செல்வம் எல்லாமே கூடும்!
குறையுள்ள போதிலும் பின்னாலே ஒடும்!

பாக்தாத் திருடன்-1960

இசை : கோவிந்தராஜலு நாயுடு
பாடியவர்: P. சுசிலா
பெண்: பொங்கிவரும் காவிரியே எங்களது தாயே!
கங்கையினும் மேலான கன்னித்தெய்வம் நீயே!
ஆண் : மங்கையரின் முகத்தழகு மஞ்சள் பூச்சினாலே!
மாநிலத்தின் அழகுனது வண்டல் பாய்ச்சலாலே!
பெண்: அங்கமெல்லாம் அலைபுரள அசைந்து வரும் பாவை !
செங்கரும்பு பயிர்வளரச் செய்வதும் உன்சேவை!
ஆண் : மாலையிட்ட மங்கையர்கள் தாலி பெருக்கிப் படைப்பார்!
மணவாளன் கைபிடித்து சிரித்தபடி நடப்பார்!
பெண்: வாளையைப்போல் காளையர்கள் தாவித் தாவிக் குதிப்பார்!
மனங் கவரும் கன்னியர்மேல் நீரை வாரி இறைப்பார்!
பெண்: மலை முடியில் பிறந்ததனால் மலைமகளும் நீயே!
அலைகடலில் கலந்ததனால் அலைமகளும் நீயே!
ஆண் : சலசலக்கும் ஒசையிலே ஏழுசுரம் தந்தாயே!
பெண்: தமிழ் முழக்கம் செய்வதனால் கலைமகளும் நீயே!

பொன்னித்திருநாள்-1960

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா
வெற்றி கொள்ளும் வாளேந்தி சுற்றும் வீரர் இருகையைப்
பற்றிக் கொண்டேன் என் கையிலே-இனி
வேறென்ன தேவை வாழ்விலே!-இந்த
ஜெகமே என்கையிலே!


தாவென்று கேட்குமுன் "இந்தா" வென்றே அள்ளி
ஒய்வின்றி தரும் "கை" என் கையிலே!-இனி
சீருண்டு பேருண்டு வாழ்விலே!-இந்த
ஜெகமே என் கையிலே!


கனவாகவே துன்பக் கதையாகவே-சென்ற
காலத்தின் நினைவும் எனக்கில்லையே!- என்
கண்முன்னே நான் காணும் வாழ்விலே!-இந்த
ஜெகமே என் கையிலே!


எந்நாளும் என்னைக் கண்போலவே காக்கும்
பண்பாளர் துணையும் உண்டானதே!-இனி
தன்மானப் பெருவீரர் அன்பிலே-இந்த
ஜெகமே என் கையிலே!

பாக்தாத் திருடன்-1960'

இசை : கோவிந்தராஜலு நாயுடு
பாடியவர் : P. சுசிலா
ஆண் : ஊருக்கும் தெரியாது!
யாருக்கும் புரியாது!
உன்னை எண்ணிக் கனவு கண்டு
உள்ளம் ஏங்குவது!
பெண் : ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது!
உன்னை எண்ணிக் கனவு கண்டு
உள்ளம் ஏங்குவது!-ஊருக்கும்
ஆண் : உன்னுடனே நானிருக்கும்
என்னுடனே நீ யிருக்கும்
பெண் : உண்மையை உலகம் அறியாது!
உனையன்றி வாழ்க்கையுமேது? -ஊருக்கும்
பெண் : காண்பதெல்லாம் உன் உருவம்!
கேட்ப தெல்லாம் உனது குரல்!
ஆண் : கண்களை உறக்கம் தழுவாது!
அன்புள்ளம் தவித்திடும் போது!
இருவரும் : ஊருக்கும் தெரியாது!
யாருக்கும் புரியாது!

மாடப்புறா- 1962

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா
பெண்: கண்ணாலே நான் கண்ட கணமே!-உயிர்க்
காதல் கொண்ட தென் மனமே! இது
முன்னாளில் உண்டான உறவோ-இதன்
முடிவும் எங்கோ? எதுவோ?
ஆண் : எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து
என்னோடு வாவென்று சொல்லுதே!-இது
முன்னாளில் உண்டான உறவோ?-இதன்
முடிவும் எங்கோ எதுவோ?
பெண்: யாரென்று கேட்காததேனோ?
யாரானால் என்னென்றுதானோ?
நேராக நின்று யாரென்று கேட்டால்
கூரான வேல் பாயும் என்றோ?
ஆண் : யாரான போதென்ன கண்ணே!
நானுண்ணும் ஆனந்தத் தேனே!
நீ வேறு அல்ல! நான் வேறு அல்ல!
வேறென்ன நானின்னும் சொல்ல!-இனி
எந்நாளும் நீ இங்கு எனக்கே!
பெண் : என் இதயமெல்லாம் உமக்கே!

பார்த்திபன் கனவு-1960

இசை : வேதா
பாடியவர்கள் : T. M. சௌந்தரராஜன் & சுசிலா
வீசிய புய லென்னும் விதி வலியால் துவண்டு விட்ட
வாச மலர்க் கொடிக்கு வாழ்வு தர ஒடி வந்தாய்!
ஆசை யென்ற கை கொடுத்தாய்! பாசமென்ற பந்தல் போட
யோசனையும் செய்வது ஏன்? உணர்ந்து பாராய் மனமே?

(பல்லவி)

அசைந்து குலுங்கும் சதங்கை ஒலியும்
ஆயிரம் கதைகள் சொல்லிடுமே!
அழகும் இளமையும் காண்பவர் இதயம்
அலைகடல் போலே துள்ளிடுமே!  (அசைந்து)

(சரணம்)

வசந்த முல்லைத் தேனெடுத்து
வண்ணச் சந்தனப் பொடி சேர்த்து
கலந்தே செய்த சிலை வடிவம்-என
கருதிடச் செய்யும் பெண்ணுருவம்!(அசைந்து)
கண்ணில் மின்னல் விளையாட!
கையில் வளையல் இசை பாட!
அன்னம் போல நடை போடும்-ஒரு
கன்னிப் பெண்ணின் கால்களிலே(அசைந்து)

எல்லாம் உனக்காக-1961

இசை : K. V. மகாதேவன்
பாடியவர் : P. சுசிலா
தேன் சுவை மேவும் செந்தமிழ் கீதம்
பொழிவதும் குரலாலே!
சிந்தையைக் கிளறும் மதுரச நாதம்
எழுவதும் விரலாலே!(தேன்)
வேய்ங்குழலோசை போலே காதிலே
வித விதமாகிய நாத வெள்ளமே
பாய்ந்திடும் போதில் நெஞ்சிலின்பமே
உறவாடுமே! சுகம் கூடுமே!
உல்லாசம் தன்னாலே உண்டாகுமே!(தேன்)
கான சஞ்சாரம் காதல் சீர் தரும்!
ஆனந்த தீரம்! அமுத சாகரம்!
மானில உயிர்கள் மயக்கமே பெறும்!
மலர் போலவே மணம் வீசும்
மங்காத சிங்கார சங்கீதமே!(தேன்)

டாக்டர் சாவித்திரி-1955

இசை : K.V. மகாதேவன்
பாடியவர் : P. சுசிலா
எத்தனை எத்தனை இன்பமடா!-இவை
எல்லாம் உனக்கே சொந்தமடா!(எத்தனை)
மரம் படைத்தான்! ஒரு கொடி படைத்தான்! -அந்த
மரத்தைத் தழுவி அதைப் படர வைத்தான்! படர வைத்தான்!
மலர் படைத்தான்! நறு மணங் கொடுத்தான்-அதில்
வடியும் தேனையும் உனக்களித்தான்!(எத்தனை)
உன்னைப் படைத்தான்! ஒரு பெண்ணைப் படைத்தான்!-காதல்
உறவு கொள்ளவும் வழிவகுத்தான்! வழிவகுத்தான்!
பொன்னைப் படைத்தான்! பல பொருள் படைத்தான்-இந்த
பூமியில் சொர்க்கம் காண வைத்தான்!(எத்தனை)
கண் கொடுத்தான் நீ காண்பதற்கு! பல
காட்சி தந்தான் கண்டு களிப்பதற்கு! களிப்பதற்கு!
மனங் கொடுத்தான் உன்னை நினைப்பதற்கு-நல்ல
மதி கொடுத்தான் எண்ணிப் பார்ப்பதற்கு(எத்தனை)

யாருக்குச் சொந்தம்-1963

இசை : K. V. மகாதேவன்
பாடியவர் : T. M. சௌந்தரராஜன்
ஆடும் மயிலே அழகு நிலாவே
வாடா மலரே வருக!
பாடும் குயிலே செந்தமிழ் பேசும்
பைங்கிளியே நீ வருக!(ஆடும்)
மாங்கனிபோலே பளப்பளப்பாக
மின்னும் உந்தன் கன்னம்-அதில்
வண்டுகள் போலே தாவிடும் எங்கள்
மன்னரின் இரு கண்ணும்!
மதுரசம் பருகிட அவர் மனம் எண்ணும்!
இருவரும் உலகில் இணைவது திண்ணம்!
மாதவி நீதானே! கோவலன் அவர்தானே! (ஆடும்)
பஞ்சணை மீது கொஞ்சிக் குலாவி
பாலும் பழமும் தருவார்-இவர்
பாவை உந்தன் கோவை இதழில்
பரிசாய் முத்தம் பெறுவார்
பரவச வெறியில் தனை மறந்தாடும்
உறவினில் புதுமுறை கவிதை பாடும்
ஊர்வசி நீதானே ! இந்திரன் அவர்தானே! (ஆடும்)

மன்னாதி மன்னன்-1960

இசை : M. S. விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள் : ஜமுனாராணி & குழுவினர்
கள்ள மலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே!
சொல்லுமின்றி மொழியுமின்றி மௌனமாகப் படித்தாள்!
உள்ளமதைக் குருவுக்கவள் காணிக்கையாய்க் கொடுத்தாள்!
துள்ளியெழும் ஆசையால் தூக்கமின்றித் தவித்தாள்!
கொள்ளையிட்ட கள்வனுக்கு மாலை போடத்துடித்தாள்!
(கள்ள)
அன்புக் கைகள் அணைப்பிலே ஆசை தீரும் பொன்னாள்!
இன்ப மென்னும் உலகினிலே இணைந்து வாழும் நன்னாள்!
என்று வரும் என்று வரும் கனவு காணும் அந்நாள்!
என்று எண்ணி ஏங்குகிறாள் அன்னநடைப் பெண்ணாள்!
(கள்ள)

குலமகள் ராதை-1963

இசை : K. V. மகாதேவன்
பாடியவர் : P. சுசிலா
உன்னைக் காண ஏங்கும்!-அன்பே
என் நெஞ்சும் கண்ணும் என்று தூங்கும்?
ஒளி மின்னல் மாறி இளங்கன்னியாகி
எனைக் கொள்ளை கொண்ட அன்பே!
எண்ணப் பொய்கையில் அன்னம் போலவே
இன்பமாக நீந்தி-புது
அன்புப் பார்வை ஏந்தி!-ஆனந்தம்
தந்த சூர்ய காந்தி!-சுவை
கன்னல் கொஞ்சிடும் உன்சொல்லைக் கேட்டுநான்
காண்பதென்று சாந்தி!
சிந்துபாடியே வந்து என்னையே
சொந்தமாக்கிக் கொண்டாய்!-உன்
சொந்தமாக்கிக் கொண்டாய்!-மெய்க்காதல்
பந்தத்தாலே வென்றாய்-நம்
சொந்த பந்தத்தை சிந்தியாமலே
இன்று எங்கு சென்றாய்?

மணிமேகலை-1959

இசை : G. ராமநாதன்
பாடியவர் : T. M. சௌந்தரராஜன்
வசந்தா : மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய்விடு!
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய்விடு!
மீனா : மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய்விடு!
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய்விடு!
வசந்தா : விதைப்ப தெல்லாம் முளைப்பதில்லை மண்ணின் மீதிலே!
முளைப்ப தெல்லாம் விளைவதில்லை இந்த உலகிலே!
மீனா : மலர்வ தெல்லாம் மணப்பதில்லை பூமி தன்னிலே!
வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை பலரின் வாழ்விலே!
ஒரு நிலாதான் உலவ முடியும் நீலவானிலே
உணர்ந்த பின்னால் கலங்கலாமோ உள்ளம் வீணிலே!
வசந்தா : உருகி உருகிக் கரைவதாலே பலனுமில்லையே!
ஓடிப்போன காலம் மீண்டும் வருவதில்லையே!
இருவரும் : மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய்விடு!
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய்விடு!


மாடப் புறா-1962


இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள் : P. சுசிலா & ஜமுனாராணி
பட்டுச் சிறகடித்தே-பறக்கும்
சிட்டுக் குருவிகளா!--சிறைப்
பட்டுத் தவித்துருகும் பாவை என்
பரிதாபம் காணீர்களா?
தட்டிப் பறித்து வந்தே!-என்னை
சஞ்சலக் கூட்டுக்குள்ளே!-ஒரு
துஷ்டன் அடைத்துவிட்டான்!-பெரும்
துன்பத்தில் ஆழ்த்தி விட்டான்!- இதை
விட்டுப் பறப்பதற்கோ-எனக்கு
இறகுகள் ஏதுமில்லை!-என்னைத்
தொட்டுக் கலந்தவர்க்கே- இதைப்போய்ச்
சொல்லிட மாட்டீர்களா?
முத்துமுத்தாய்க் கண்ணீர்த்-துளியை
முகத்தினில் சோரவிட்டே-இங்கு
எத்தனை நாள் இன்னும்-நான்
இவ்விதம் வாடுவதோ?-மனம்
பித்துப் பிடிக்கும் முன்னே-இந்த
பேதை படுந்துயரை-என்
அத்தானிடத்தில் சொல்லி-அழைத்தே
வந்திட மாட்டீர்களா?

பொன்னித்திருநாள்-1960

இசை : K. V. மகாதேவன்
பாடியவர் : P. சுசிலா
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே-உன்னை
நீங்கிடாத துன்பம் பெருகுதே!
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே-வாழ்க்கை
உடைந்து போன சிலையானதே!
நான் அடைந்த செல்வம் கொள்ளை போனதே!
அமைதி யின்றியே அலைய நேர்ந்ததே!(நினை)
எங்கிருந்து நீவாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
இந்த நிலை என்று மாறுமோ?-உனைக்காணும்
இன்ப நாளுமே வந்து சேருமோ?(நினை)

சதாரம்-1956


இசை : G. ராமநாதன்
பாடியவர் : T. M. சௌந்தரராஜன்
பெண் : வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே!
ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே!
ஆண் : காதலே கனவு என்னும்
கவிதை தன்னை வாழ்நாளில்!
ஓர் முறை பாடியே
உறங்கிடுவேன் உன்மடியில்!
ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே!
பெண் : எந்தனுயிர்க் காதலரை
இறுதியிலே கண்ணாலே
கண்டு நான் விடை பெறவே
காத்திருப்பாய் ஒரு கணமே!
ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே?

மல்லிகா-1957

இசை : T. R. பாப்பா
பாடியவர் : A. M. ராஜா 8 P. சுசீலா
பெண் : பனியிருக்கும்! குளிரெடுக்கும்!
பால் நிலவின் நிழலிருக்கும் இரவினிலே!
ஆண் : இதழ் வெளுக்கும்! விழி சிவக்கும்!
இருவரது முகம் வியர்க்கும் உறவினிலே!
பெண் : மனதினிலே ஆசைக் கனல் எரியும்!
மலரணையில் கருங்குழலும் விரியும்!
ஆண் : இனிய காதல் தேன் மழையைச் சொரியும்!
இரண்டு நெஞ்சும் இணைந்து இன்பப்போர் புரியும்!
பெண் : கைகலந்து மெய்யணைந்து
கட்டித் தழுவிக் கொஞ்சும்!
ஆண் : கட்டில் மெள்ள மெள்ள வென்று
காதில் சொல்லிக் கெஞ்சும்!
பெண் : இருவர் என்னும் இடமும் அங்கே மறையும்!
ஆண் : ஒருவர் என்னும் நிழல் படத்தை வரையும்!
பெண் : இரவு செல்லும்!
ஆண் : பகல் நெருங்கும்!
இருவரும்: இதயம் இன்பக் கனவு காணும் உடல் உறங்கும்


தாயின் மேல் ஆணை-1966


இசை : லிங்கப்பா
பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் & P. சுசிலா
எந்நாளும் வாழ்விலே! கண்ணான காதலே!
என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
(எந்)
கண்ணாலே காணுகின்ற காட்சி எங்கும் நீ நிறைந்தாய்!
எண்ணாத இன்பமூட்டும் அன்பு என்னும் தேன் பொழிந்தாய்!
உன்னாலே எந்தன் உள்ளம் துள்ளித் துள்ளி ஆடுதே!
எனை மீறி நிலைமாறி சல்லாப கானம் பாடுதே!
(எந்)
உன்முன்னே ஜாதி பேத வாதமெல்லாம் சாய்வதில்லை!
ஊரெல்லாம் ஒய்ந்த போதும் நீ உறங்கி ஒய்வதில்லை!
மண்மீது நீ இல்லாது வாழும் ஜீவன் இல்லையே!
மலர் மேலே மணம் போலே உலாவும் இன்ப ஜோதியே!
(எந்)

விடிவெள்ளி-1960

இசை : A. M. ராஜா.
பெண் : தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும்
ஒரு திருமண மேடை!
கை தட்டத் தட்டத் துடிக்கும்
இதன் கருவிழி ஜாடை!
ஆண் : பொன் கொட்டிக் கொட்டி அளக்கும்
பூப்பட்டுப் பட்டு மணக்கும்!
பெண் : செந்தமிழ் நாட்டுச் சிலையாட்டம் தித்திக்கும்!
ஆண் : சிட்டே சிட்டே வா வா!
ஜில்லென்று கிட்டே நீவா!
நகையும் சுவையும் பசியும் உணவும் நாமாகலாம்!
பெண் : சிரிப்பூட்டும் ராஜா!
தேனூறும் இந்த ரோஜா!
கிடைக்காது! நினைக்காதே
ரொம்ப லேசா!
ஆண் : சின்னச் சின்ன பாப்பா!
சிங்காரக் கண்ணு பாப்பா!
சிலையே மலையே உன் மேலாசை
கொண்டால் தப்பா?
பெண்: தமிழ் நாட்டுப் பாப்பா!
தன்மானம் உள்ள பாப்பா!
தவறான ஆசைக்குப் போடும் தாப்பா!
ஆண் : ஏய்! என்னப்பா இது!

கெட்டிக்காரன்-1971


இசை : சங்கர், கணேஷ்
பாடியவர்கள் : T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா

கண்ணாளன் வருவார்! கண்முன்னே நான் காண்பேன்!
ஆஹாஹா காதல் மொழி பேசி மகிழ்வேனே!

ஒஹோஹ்ஹோ ஒஹோஹ்ஹோ
என் ராஜா என் ராஜா
வருவாரே! வருவாரே
ஒஹோஹ்ஹோ ஒஹோஹ்ஹோ
ராஜன் வருவாரே ராஜன் வருவாரே
பேசிமகிழ்வேனே! பேசிமகிழ்வேனே!

என் காதல் நாதன் இன்பதேவன் வாழ்வின் ஜீவன்
என்னைத் தேடி விரைவினிலே ஜெயத்துடனே என் ராஜா வருவாரே!

என் ராஜா என் ராஜா
வருவாரே! வருவாரே
ராஜன் வருவாரே! ராஜன் வருவாரே
பேசிமகிழ்வேனே! பேசிமகிழ்வேனே!

கலந்து உறவாடும்! கண்களும் கண்களும்
கன்னமும் கன்னமும் கலந்து உறவாடும்
கணமும் இணை பிரியாமல் கனியும் சுவையும் போல் கலந்தே

மனம் மகிழ்ந்தே வாழ்வோமே!
வாழ்வோமே!
வாழ்வோமே!

சர்வாதிகாரி-1951

இசை : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர் : ஜிக்கி
ஆண் : பார்த்தேன் பார்க்காத அழகே!
கேட்டேன் கேட்காத இசையே!
பெண் : பார்க்கும் அழகென்ன அழகோ?
கேட்கும் இசையென்ன இசையோ?
ஆண் : நான் பாட நீயாட சபை யேறலாம்!
ரதியாக மதனாக உறவாடலாம்!
பெண் : உறவாடும் எண்ணம் மனம் கொள்ளலாம்!
உனைத்தேடி வரும்போது அதைச் சொல்லலாம்!
ஆண் : நதியோடு நதி சேரும் கடலாகலாம்!
புதுப்பாதைதனில் சேர்ந்து நடைபோடலாம்!
பெண் : என்பாதை வேறு உன்பாதை வேறு!
இருவேறு நேர்க்கோடு இணையாதது!

கெட்டிக்காரன்-1971


இசை : சங்கர், கணேஷ்
பாடியவர்கள் : T. M. சௌந்தரராஜன், P. சுசிலா
தாவி வரும் காவிரியின் சோலையோரம்!
பூவிரிய வண்டுபாடும் காலை நேரம்!
ஆவலுடன் பறவையினம் ஆரவாரம்-செய்து
காவினிலே இரை தேட வெளி யேறும்!
நாவினிக்க உண்பதற்குக் காய்கனிகள்!
நஞ்சைகளில் தங்கநிற நெல்மணிகள்!
மேவி நிற்கும் காட்சியின்பம் காணும் விழிகள்!
வேறெதையும் விரும்புமோ இந்த உலகில்?
வான்மழையின் வளம் தோன்றும் வயல்களிலே!-கலை
வாணர்களின் திறம் தோன்றும் கோயில்களிலே!
மாறாத குளுமை தோன்றும் தென்றல்தனிலே! என்
மாதரசி மேனி தோன்றும் மாந்தளிரிலே!

பெரியகோயில்-1958


இசை: K.V. மகாதேவன்
பெண் : வான் மழையின்றி வாடிடும் பயிர்போல்
நானுன்னைப் பிரிந்தே வாடுகின்றேன்!
சூழ் நிலையாலே கூண்டினில் வாழும்
பைங்கிளி போலிங்கு வாழுகிறேன்!
வெளியில் விடாமல் வீட்டினுள் வைத்தே
கெடுமதியால் எனைப் பூட்டினரே... .... ...
வளர் காதல் ஜோதி உனையின்றி பாரில்
ஒளியுமே ஏதென் வாழ்விலே?
ஆண் : காதல்மொழி பாவாய்! கனவோ நம் வாழ்வு-ஓ!
கணமும் இனி உயிர் நான் தரியேன்
நாதம் இல்லாத யாழ் போலும் ஆனேன்
நானே உன் பிரிவால் வாடியே!
பெண் : எந்நாளினி ஒன்றாகி இணையாய்
முன்போலவே நாம் சேர்ந்திடுவோமோ? என் அமுதே!
ஆண் : எந்நாளினி ஒன்றாகி இணையாய்
முன் போலவே நாம் சேர்ந்திடுவோமோ! என் அமுதே!
பெண் : வானிலே தோன்றும் ஆதவன் போலே
காதலரே! உம்மைக் காண்பதென்றோ?

பொன் முடி-1949

இசை : G. ராமநாதன்
பாடியவர்கள் : G. ராமநாதன், T. V. ரெத்தினம்