உள்ளடக்கத்துக்குச் செல்

திரைக்கவி திலகம் அ. மருதகாசி பாடல்கள்/தாலாட்டு

விக்கிமூலம் இலிருந்து

தாலாட்டு

       நீல வண்ணக் கண்ணா வாடா!
       நீ ஒரு முத்தம் தாடா!
       நிலையான இன்பம் தந்து
       விளையாடும் செல்வா வாடா!

       பிள்ளையில்லாக் கலியும் தீர
       வள்ளல் உந்தன் வடிவில் வந்தான்!
       எல்லையில்லாக் கருணை தன்னை
       என்ன வென்று சொல் வேனப்பா?

       வானம்பாடி கானம் கேட்டு
       வசந்த காலத் தென்றல் காற்றில்
       தேன் மலர்கள் சிரிக்கும் காட்சி
       செல்வன் துயில் நீங்கும் மாட்சி!

       தங்க நிறம் உந்தன் அங்கம்
       அன்பு முகம் சந்திர பிம்பம்!
       கண்ணால் உன்னைக் கண்டால் போதும்!
       கவலை யெல்லாம் பறந்தே போகும்.

       சின்னஞ்சிறு திலகம் வைத்து
       சிங்காரமாய் புருவம் தீட்டி
       பொன்னாலான நகையும் பூட்ட
       கண்ணா கொஞ்சம் கருணை காட்டு!

       நடுங்கச் செய்யும் வாடைக் காற்றே!
       நியாயமல்ல உந்தன் செய்கை
       தடை செய்வேன் தாளைப் போட்டு
       முடிந்தால் உன் திறமை காட்டு!

       விண்ணில் நான் இருக்கும் போது!
       மண்ணில் ஒரு சந்திரன் ஏது?
       அம்மா என்ன புதுமை என்றே
       கேட்கும் அந்த மதியைப் பாரு!

       இன்ப வாழ்வின் பிம்பம் நீயே!
       இணையில்லா செல்வம் நீயே!
       பொங்கும் அன்பின் ஜோதி நீயே!
       புகழ் மேவி வாழ்வாய் நீயே!
       புகழ் மேவி வாழ்வாய் நீயே!
       புகழ் மேவி வாழ்வாய் நீயே!


மங்கையர் திலகம்-1955



இசை  : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர் : பாலசரஸ்வதி

சின்ன பாப்பா! எங்க செல்லப்பாப்பா!
சொன்ன பேச்சைக் கேட்டாத்தான் நல்ல பாப்பா!
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரணுமா?
சிலுக்கு சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா?
கண்ணா மூச்சிஆட்டம் உனக்குச் சொல்லித் தரணுமா?
-அப்போ
கல கலண்ணு சிரிச்சுக்கிட்டு என்னெப்பாரம்மா!
(சின்ன)

கோபம் தீர்ந்து அப்பா உன்னைக் கூப்பிடுவாரு!-நீ
கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாத்தான் சாப்பிடுவாரு!
கோழி மிதிச்சுக் குஞ்சு முடம் ஆகிவிடாது!-உனக்குக்
கொய்யாப்பழம் பறிச்சுத்தரேன் அழுகை கூடாது.
(சின்ன)

வண்ணக்கிளி-1959


இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசீலா

குழந்தையும் தெய்வமும்
கொண்டாடும் இடத்திலே!

ஐக்கியமாகி விடும் இது உண்மை ஜெகத்திலே

மழைபோல் கருணையுள்ள மனமிருந்தாலே
வாரி அரவணைக்கும் குணமிருந்தாலே
மாற்றாந்தாய் என்பதையே மறந்திடும் பிள்ளை
மலர்முகம் காட்டிவந்து அமர்ந்திடும் மடியிலே!
(குழந்)

பெற்றால்தான் பிள்ளையென்பதில்லையே! அதற்கு
சுற்றமென்றும் சொந்தமென்றும் இல்லையே!
வற்றாத அன்பு என்னும் அமுதையே!-யார்
வழங்கினலும் மயங்கும் தெய்வம் குழந்தையே!
(குழந்)

வண்ணக்கிளி-1959


இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா


பெண் : முத்துப்போலே மஞ்சள் கொத்துப் போலே
முழுநிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
கஷ்டம் தீர்ந்தது உன்னாலே கவலை ஒய்ந்தது
கண்மணியுன் தந்தை வாழ்வில் இன்பம் சேர்ந்தது

ஆண்: தொட்டதெல்லாம் துலங்கிடும் வேளை வந்தது
உனைப் பெற்ற அன்னை பெருமை கொள்ளும்
நிலையைத் தந்தது-(முத்து)

பெண்: கட்டித் தங்கமே என்னாசைக் கனவு யாவுமே

ஆண்:கனிந்து பிள்ளை உருவமாக வந்த செல்வமே

பெண் : கண்ணைக் காக்கும் இமையைப் போல்-உன்னை
வாழ்விலே
இருவரும்: கால மெல்லாம் காத்திருந்து மகிழுவோமடா!
(முத்து)

சபாஷ் மாப்பிளே-1961


இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா

சின்ன அரும்பு மலரும்-அது
சிரிப்பைச் சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும்-நான்
களிக்கும் நாள் வரும்
(சின்ன)
மண்ணில் உலவும் நிலவே-என்
வயிற்றில் உதித்த கனியே
வாழ்வு உன்னால் செழித்தே-மனம்
மகிழும் நாள் வரும்-நான்
மகிழும் நாள் வரும்
(சின்ன)
உனது மாமன் வருவார்
அணைத்து இன்பம் பெறுவார்
உரிமை எல்லாம் தருவார்-அந்த
அரிய நாள் வரும்-சுகம்
பெருகும் நாள் வரும்
(சின்ன)
ஏழை கண்ட தனமே-மனம்
இளகச் செய்யும் அழகே
வாழைக் குருத்துப் போலவே-நீ
வளரும் நாள் வரும்-குலம்
தழைக்கும் நாள் வரும்
(சின்ன)



நீ எங்கு இருந்த போதும்-என்
இதயம் உன்னை வாழ்த்தும்-தாய்
அன்பு உன்னைக் காக்கும்-நீ
அழுவ தேனடா-உறங்கி
அமைதி காணடா.
(சின்ன)


பங்காளிகள்-1961


இசை : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்: P. சுசிலா

நீ சிரிச்சா நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே!
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே!
(நீ சிரி)

தேன் மணக்கும் வாயிதழோ சிவப்பு மத்தாப்பூ
சின்னஞ்சிறு கண்மலரோ நீல மத்தாப்பூ
மேனியிலே தெரியுதம்மா தங்கத்தின் ஜொலிப்பு-அதைக்
காணும் போது மனசுக்குள்ளே எத்தனை களிப்பு
(நீ சிரி)

எட்டி எட்டி வட்ட நிலா உன்னைப் பாக்குது-உன்
எச்சில் பட்ட சோத்தை அது தனக்குக் கேக்குது!
சட்டமாகச் சீக்கிரம் நீ சாப்பிடு அம்மா-அந்தச்
சந்திரனை விளையாடக் கூப்பிடு அம்மா
(நீ சிரி)

பாவை விளக்கு-1960


இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: சூலமங்கலம் ராஜலட்சுமி


முத்தே! பவளமே! முக்கனியே! சர்க்கரையே!
கொத்து மருக்கொழுந்தே! கோமளமே கண்வளராய்!

ஆளப்பிறந்த என் கண்மணியே!-எந்தன்
ஆசையைக் கேளடா விண்மணியே!
நாளொரு மேனியும் நீ வளர்ந்தே!-கலை
ஞானத்தில் தேர்ந்திட வேண்டுமடா!
சீலம் மிகுந்தே எந்நாளும்! மக்கள்
சிந்தையில் நிலைபெற வேண்டுமடா!

ஏழையென் வீட்டுக்கு வந்தவனே!-இணை
இல்லாத ஆனந்தம் தந்தவனே!
வாழைக்குருத்தென நீ வளர்ந்தே-ஒரு
வல்லவனாகிட வேண்டுமடா!
வாழப் பிறந்த கண்மணியே! சொல்லும்
வார்த்தையைக் கேளடா பொன்மணியே!

பிள்ளைக் கலிதீர்த்த தெள்ளமுதே! உந்தன்
சொல்லே ஆணையாக வேண்டுமடா! எந்தன்
உள்ளங்குளிர இம்மண் மேலே-எல்லை
இல்லாப் புகழ் தேட வேண்டுமடா!


ஏழையாக என்றும் வாழ்ந்தாலும்!-ஒரு

கோழையாக மட்டும் வாழாதே!-உந்தன்

வாழ்வின் கடமை மறவாதே!-தன்

மானத்தைக் காக்கவும் தவறாதே!


உத்தம புத்திரன்-1958



இசை : ஜி. ராமநாதன்

பாடியவர்: P. சுசிலா

ஜீவகன்: அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்டவுடன் கவலை பறக்குது?

ரத்னா: பிறந்த போது விருந்து வைக்கும் பெருமையில்லாது-பல
பெண்கள் வந்து தொட்டிலாட்டும் சிறப்பு மில்லாது
அருமையுள்ள ஆசைத்தந்தை அருகில் இல்லாது
வறுமையிலும் சிறுமையிலும் வாட்டம் கொள்ளாது
--(அரும்பு)

ஜீவகன்: குரலைக் கேட்ட எனது காதில் தேனும் பாயுது
இருந்த இடத்தை மறந்து மனம் எங்கோ தாவுது-அது
பறந்து பறந்து புதிய புதிய கனவு காணுது- பிள்ளைப்
பாசத்தினால் என் இதயம் ஆடிப்பாடுது
--(அரும்பு)

ரத்னா: தரம்மிகுந்த வைரமுடி தரையில் கிடக்குது
உரிமையுள்ள நெஞ்சம் அதை உணர்ந்து துடிக்குது
--(அரும்பு)

ஜீவகன்: சிரிப்பது தான் உலகத்திலே கவலைக்கு மருந்து
திகட்டாத அமுதமாக இனித்திடும் விருந்து -
-(அரும்பு)

மருத நாட்டு வீரன்-1961


இசை  : S.V. வெங்கட்ராமன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன்,
P. சுசிலா

எஜமான் பெற்ற செல்வமே!-என்
சின்ன எஜமானே! பசும்
பொன்னே என் கண்ணே
அழாதே! அழாதே!

தங்கமே உனக்குத் தந்தையில்லை!
தொண்டன் எனக்குத் தலைவன் இல்லை!
அன்புள்ள அன்னைக்குத் தராதே தொல்லை!
அன்னமே நீ கேளென் சொல்லை!
அழாதே! அழாதே

தாய் சொல்லைத் தட்டாதே தம்பி!
தந்தை பேரெடுக்கணும் என் தங்கக் கம்பி!
தீயவரோடு நீ சேராதே நம்பி! ராஜா!
சேவை செய்வேன் என்னை மறவாதே தம்பி!
அழாதே! அழாதே!

அல்லி பெற்ற பிள்ளை-1959


இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: G. ராமநாத அய்யர்


செல்லக்கிளியே செந்தாமரையே கன்னையா!-பேசும்
தெய்வச் சிலையே ஜீவச்சுடரே சின்னையா!-ஓ
தேடக் கிடைக்காத பொன்னையா!-நீ
செல்வச் சிறப்போடு வாழய்யா!

முல்லைநகை வீசி முத்தான மொழி பேசி நீயே!
துள்ளிவரும் காட்சி தோன்றுதே என்கண்ணில் சேயே!

நீலவிழி கொஞ்சும் நிலவு முகம் காணும்போது
நெஞ்சில் உருவாகும் இன்பநிலைக்கு ஈடேது!
உனக்கு ஈடேது!

அன்புப் பயிராக இன்ப நதியாக வந்தாய்!
பொங்கும் வளம்யாவும் எங்கள் மனைதன்னில் தந்தாய்

எதுவேண்டுமாயினும் உன்பாட்டன் தருவார் !
இதழூறும் முத்தங்கள் பெறுவார்!-தந்தை
கதை சொல்லுவார்-அன்னை
தாலாட்டுவாள்!-எங்கள்
கண்போல உனை என்றும் காப்பாற்றுவோம்!

பொன் விளையும் பூமி-1959


இசை : ரெட்டி
பாடியவர்: P. சுசிலா குழுவினர்


எல்லோரும் உன்னை நல்லவன் என்றே
கொண்டாட வேண்டுமடா!
ஏழை வாழ்வில் உன்னாலே இன்பம்
உண்டாக வேண்டுமடா!

எனது கண்ணே உனது தாயின்
சொல்லை நீ கேளடா! -தாயின்
சொல்லை நீ கேளடா! (எல்லோரும்)

பாலகா அதிகாலையில் விழிக்கும்
பழக்கம் வேண்டுமடா-என்கண்ணே
பள்ளி சேர்ந்தே நீ செந்தமிழைப் படிக்க வேண்டுமடா!
படிக்க வேண்டுமடா!
சொல்லைக் கேளடா!-தாயின்
சொல்லைக் கேளடா! (எல்லோரும்)

தெய்வந்தன்னை மறவாமல் நீயும்
வாழ வேண்டுமடா!-என் கண்ணே
தீய சகவாசம் பொய், களவை
விலக்க வேண்டுமடா!
சொல்லை நீ கேளடா!-தாயின்
சொல்லை நீ கேளடா! (எல்லோரும்)

பாக்கியவதி-1957


இசை : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்: P. சுசிலா

சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா!
அன்ன நடை நடந்து அழகாய் ஆடிவரும் ரோஜா
(சின்ன)

கண்மணியே நீ வளர்ந்து படித்திட வேண்டும்
கல்வியிலே கலைமகளாய் விளங்கிட வேண்டும் -
செண்பகமே! பலரும் உனைப் புகழ்ந்திட வேண்டும்
செல்வத்திலே திருமகளாய்த் திகழ்ந்திட வேண்டும்
(சின்ன)

கன்னியராம் தாரகைகள் கூட்டத்திலே-நீ
வெண்ணிலவாய் கொலு விருக்கும் நாள்வர வேண்டும்.
கண் கவரும் கணவன் கிடைத்திட வேண்டும்-நான்
காணும் ஆசைக் கனவெல்லாம் பலித்திட வேண்டும்
(சின்ன)

அழகு நிலா-1962


இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. B. ஸ்ரீனிவாஸ்

தாயாக்கி வச்ச என் தங்கமே!
நீ போகுமிடம் செல்வம் பொங்குமே!-என்னை
(தாயாக்கி)

வாயும் வயிறுமாய் இருக்காமே!-ஒரு
மருத்துவச்சி வந்து பார்க்காமே!
மாவடுவை வாங்கிக் கடிக்காமே-என்னை
மற்றாெருத்தி தாங்கிப் பிடிக்காமே!-பெத்த
(தாயாக்கி)

நான் பூஜை புனஸ்காரம் பண்ணாமே
ஒரு புண்ணியச் செயலையும் செய்யாமே
பேசும் தெய்வம் ஒண்ணு வந்ததடி!-கூடப்
பிறக்காத தங்கையாய்ப் போற்றுதடி
(தாயாக்கி)

என் தெய்வத்தைத் தெய்வமாய்க் கொண்டவளே!
பெரும் செல்வத்தின் செல்வத்தைக் கண்டவளே!
கொய்யாத கனியாக இருந்தவளே!-என்
குழந்தைக்குக் குழந்தையாய் வந்தவளே!
(தாயாக்கி)

அழகுக்கு அழகூட்டும் பிள்ளை முகம்! உனக்கு
ஆண்டவன் வழங்கிய வெள்ளை மனம்!
அழகுமுகம் இது மாறிடலாம்! உன்
அன்பு மனம் மாறக் கூடாது!

ரௌடி ராக்கம்மா -1977


இசை : சங்கர் கணேஷ்
பாடியவர்: வாணி ஜெயராம்



பெண்: கண்ணுக்கு நீ யொரு கன்னிப் பொண்ணு!-என்
கருத்துக்கு நீ வெறும் பச்சை மண்ணு!
உண்ணடியோ சோறு உண்ணடியோ!-நீ
ஒட்டாரம் பண்ணுவ தென்னடியோ!

ஆண்: வண்ணச் சம்பா குத்தி சோறாக்கி
வாளைமீன் துண்டத்தைச் சாறாக்கி
வஞ்சம் அறியாத பெண் உனக்கு-நல்ல
வஞ்சர மீனும் பொரிச்சிருக்கு!

பெண்: உருவத்தில் நீ யொரு செங்கரும்பு!
உள்ளத்தில் சின்னஞ்சிறு அரும்பு!-நீ
ஓடியாடி பண்ணும் அக்குறும்பு-இந்த
உலகமறியா பிள்ளைக் குறும்பு!

ஆண்: இது பிஞ்சில் பழுக்கிற காலமடி!-பதி
னஞ்சில் இது என்ன கோலமடி!
நெஞ்சில் உன் எதிர்காலம் வந்து!-என்னை
சஞ்சலத்துக்கு ஆளாக்குதடி

உள்ளத்தில் குழந்தையடி -1978


இசை : சங்கர் கணேஷ்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் & வாணி ஜெயராம்

மோகனா: சங்கத் தமிழ் மொழி
கொஞ்சும் வர்ணக்கிளி
எங்கள் இரு விழி நீ!-கண்ணே
இன்பம் தரும் ஒளி நீ!...
எங்கள் இரு விழி நீ! ...

பெண்கள்: சங்கத் தமிழ் மொழி
கொஞ்சும் வர்ணக்கிளி
எங்கள் இரு விழி நீ!-கண்ணே
இன்பம் தரும் ஒளி நீ!...
எங்கள் இரு விழி நீ!...

மோகனா: தங்க நிற மலரே!-தொட்டிலில்
தவழும் சந்திரனே!
பிஞ்சுத் தளிர்க் கரத்தால்-ஜாடை
பேசிடும் சுந்தரனே!...
முத்தே! மரகதமே! திகட்டாத
முக்கனியின் சுவையே!...
புத்தமுதே! தேனே! எழுதா
சித்திரமே வாடா!...

பெண்கள்: சங்கத் தமிழ் மொழி

கொஞ்சும் வர்ணக்கிளி

எங்கள் இரு விழி நீ-கண்ணே

இன்பம் தரும் ஒளி நீ!...

எங்கள் இரு விழி நீ!...

பிள்ளைக் கனியமுது-1958


இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா

லதா: தந்தையாரோ தாயும் யாரோ?
நீயும் எந்த ஊரோ?
ஜாலக்காரா தூங்கடா!
ஆராரோ-நான் யாரோ-நீயாரோ! (தந்தை)

மணம் புரிந்து அரசும் வேம்பும்-நான்
வலம் வராத போதிலும்
மதலையாக வீடு தேடி
வந்ததென்ன விந்தையோ! (தந்தை)

மாலை சூடி லாலி பாடி
மனைவியாகக் கொள்ளும் முன்னே
ஏழு வயதுப் பிள்ளையாக
எனக்குத் தந்தார் உன்னை! (தந்தை)

வாலை சும்மா சுருட்டிக் கொண்டு
தூங்கடா நீ தூங்கு!
வம்பு செய்தால் உந்தன் கன்னம்
எந்தன் கையால் வீங்கும்! (தந்தை)

யார் பையன்-1975


இசை : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்; P. சுசிலா

வாடா மல்லிகையே! வாடா என் இன்பமே!
மாற்றுக் குறையாத தங்கமே!
வளரும் என் செல்வமே! (வாடா)

தங்கத் தொட்டில் போட்டு தாலாட்டியே!
மங்காத வைரநகை உனக்குப் பூட்டியே!
சிங்காரம் செய்யவே கொண்டேனே ஆசையே!
தேனே என் செல்வமே! கண்ணே! (வாடா)

நாடும் ஏடும் இங்கே உன் பேரையே!
நாள் தோறும் கொண்டாட மந்திரியாகியே!
வாழ்வதை நான் காண கொண்டேனே ஆசையே!
வளரும் என் செல்வமே! கண்ணே! (வாடா)

ஏழை எளியோர் வந்தால் வாரி வழங்கியே!
வாழைக் குருத்தாக வளர்ந்தே ஓங்கியே!
வாழ்வதை நான் காண கொண்டேனே ஆசையே
வளரும் என் செல்வமே! கண்ணே! (வாடா)

எங்கள் குலதேவி-1959
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா

பச்சைப் பசுங்கிளியே!-ஜொலிக்கும்
பவள வண்ணச் சிலையே!
பிச்சையாக எனக்கே-கிடைத்த
பேரின்பப் பொக்கிஷமே!-தாலேலோ
கண்ணே தாலேலோ!

உச்சி குளிருதடா! கண்மணி
உன் முகம் பார்க்கையிலே!-என்
லட்சியப் பெருங்கனவே-எனது
நேத்திரம் நீ தாண்டா! தாலேலோ
கண்ணே தாலேலோ!

பாசக் கொடியாலே-எனையே
பற்றி இழுத்தவனே!
ஆசை வெறியில்லையடா-எனது
ஆனந்தம் நீ தாண்டா!  (பச்சை}

தாலாட்டி சீராட்ட-உன்னைப் பெற்ற
தாயின்று இல்லையடா!
தங்கமே அந்தக் குறை-தீர்ப்பதே
இங்கு என் கடமையடா! தாலேலோ!
கண்ணே தாலேலோ!

அன்பின் உருவமடா-உன் அன்னை என்
அருமைப் பிறவியடா!
என்றோ மறைந்தாலும்-தெய்வம் போல்
இருந்தவள் காத்திடுவாள்! {பச்சை)

எங்கள் குலதேவி-1959


இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா

கோமள செழுந் தாமரை-எழில்
மேவிய குண சீலா
குலமே தான் விளங்க வந்த
அருந்தவ பாலா! (கோமள)

வளர் பிறையே வானமுதே
மாசிலாத பொன்னே!
மணமலரே தரையினிலே
தவழ விடோம் உன்னை!
வளநாடே உன் புகழைப்
பாடு மடா பின்னே!
வருங்கால மன்னவனே
வாழ்க எங்கள் கண்ணே! (கோமள)

கதிரவனே மாமன் உனைக்
காண ஓடி வருவார்!
கண் கவரும் கனக மணி
பொம்மைகளும் தருவார்!
மதிவாணா உன்னருமை
மாமி அலங்காரி
உனை வாரித் தழுவிடுவார்
உண்மை இன்பம் பெறுவாள்! (கோமள}

வளர் பிறையே வானமுதே
மாசிலாத பொன்னே!
மண மலரே வறுமையினால்
வதங்கிடும் என் கண்ணே!
தளராத என் இதயம்
தளர்ந்ததடா இன்று!
தனிமையிலே தவிக்குதடா
உங்கள் துன்பம் கண்டு!  (கோமள)

நல்லதங்காள்-1955


இசை : G. ராமநாதன்
பாடியவர்: ஜிக்கி

ஆசைக் கிளியே! அழகுச் சிலையே!
அமுத நிலையே! செல்வமே!
வாச மலரே! பேசும் பிறையே:
வாழ்வின் நிதியே தூங்கடா!

மாசிலா ஒளி வீசப் பிறந்த
வைர மணியே இன்பமே!
வசந்த காலத் தென்றலே-என்
வாழ்வின் நிதியே தூங்கடா!

குழலும் யாழும் இனிமை தருமோ
மழலை இன்பம் போலவே!
கோடி கோடி செல்வ மெல்லாம்
குழந்தைக் கீடு ஆகுமோ?
வாழ்வின் நிதியே தூங்கடா!

பாக்கியவதி-1957


இசை: S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்: P. சுசிலா