தில்லைப் பெருங்கோயில் வரலாறு/தில்லைச் சிற்றம்பலப் பெருங்கோயிலின்
கற்றகல்வியிலும் இனியவனும், கலைக்கெலாம் பொருளாகியவனும் ஆகிய கண்ணுதற்கடவுள் ஆடல்புரியும் தில்லைப்பெருங் கோயிலானது கட்டடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை ஆடற்கலை, இசைக்கலை முதலிய கலைகள் பலவற்றையும் வளர்த்த தனிச்சிறப்புடையதாகத் திகழ்கின்றது.
உள்ளத்திற்கு உவகையளிக்கும் கலைகளுள் ஆடற்கலையும் ஒன்று. இது இயல் இசை நாடகமெனும் முத்தமிழோடும் தொடர்புடையது. இக்கலையானது அகக்கூத்து, புறக்கூத்து பதினோர் ஆடல்கள் எனப் பல்வேறு பகுதிகளாக வளர்க்கப் பெற்றது. ஏதேனும் ஒருகதையினைத் தழுவி நடிக்கப் பெறும் கூத்தினை நாடகமென்றும், கதை தழுவாது பாட்டினது பொருளி னுக்கேற்பக் கைகாட்டி வல்லபஞ் செய்யும் சுவையும் மெய்ப் பாடும் பொருந்திய அவிநயக் கூத்தினை நாட்டியமெனவும் வழங்குதல் மரபு. நாட்டியமென்பது, ஆடல் பாடல் அழகு என்னும் மூவகை நலங்களையும் ஒருங்கே பெற்ற ஆடல்மகளிரால் தமது அகக்குறிப்பு உடம்பில் தோன்றும் மெய்ப்பாடுகளால் புறத்தே புலப்படும்படி சுவைபெற நடிக்கப்பெறுவது. இதன் இலக்கணத்தினை விரித்துரைப்பது நாட்டிய நூல். நாட்டியக் கலையானது எல்லாம் வல்ல கூத்தப்பெருமானது ஐந்தொழில் திருக்கூத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றி வளர்ந்ததாகும். இக்கலையானது ஓவியம், சிற்பம், காவியம், ஆகிய கலைகள் பலவற்றோடும் தொடர்புடையதாகும்.
தில்லைப்பெருங்கோயிலானது மேற்குறித்த கலைகள் எல்லாவற்றையும் வளர்க்கும் செழுங்கலை நியமமாகத் திகழ்கின்றது, கூத்தப்பெருமான் உயிர்களுக்கு இன் பந்தரும் உலகினைப்படைக்க வேண்டும் என்ற திருவுள்ளத்தோடு பேரின்பத் திருக்கூத்தினை ஆடத்தொடங்கினார். அவரது உடுக்கையிலிருந்தே ஒலிகள் உண்டாயின. அவ்வொலிகளே எழுத்துக்களுக் கெல்லாம் பிறப்பிடம். எனவே எழுத்துக்களை முதலாகக் கொண்டு இயங்கும் எல்லாமொழிகளும் அக்கூத்தப்பேருமானது உடுக்கை ஒலியினின்றும் தோன்றியனவேயாம், தில்லைச்சிற்றம்பலவர் எழுந்தருளியுள்ள இத்திருக்கோயிலில் எழுநிலைக்கோபுரங்கள் நான்கிலும் இறைவனது திருமேனித்தோற்றங்களையும் தேவர் முனிவர் முதலியோர் உருவங்களையும் எழில்பெற வடுத்துக்காட்டும் சிறபங்கள் பல இடம் பெற்றிருத்தல் காணலாம்.
தெய்வத்திறம் வாய்ந்த கூத்துக்களாக நம் தமிழகத்து நெடுங்காலமாகப் போற்றப்பெறும் சிறப்புடைய ஆடல்களில் பல இத்திருக்கோயிற் சிற்பங்களில் இடம் பெற்றுள்ளன. சிவபெருமான் ஆடிய நூற்றெட்டுக்கரணங்களும் அவைபற்றிய இலக்கணங்கூறும் நாட்டிய நூலின் சுலோகங்களும் மேலைக் கோபுர உள்வாயிலில் மகளிராடும் முறையில் விளக்கப் பெற்றுள்ளன. இவ்வாறே தெற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய கோபுரங்களிலும் இக்கரணங்களின் செயல் முறைகள் சிற்ப அமைப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை காணலாம். இறைவனுக்குரியனவாகச் சொல்லப்பட்ட இக்கரணங்கள், எழுநிலைக்கோபுரம் நான்கின்வாயில்களிலும் இருபுறமும் தோழியர் நிற்க நடுவே தலைமகள் ஒருத்தி ஆடும் முறையில் அமைக்கப்பெற்றிருத்தல் காணலாம். இங்கு நடுநின்றாடும் ஆடல் மகளின் வடிவம் எல்லாம்வல்ல இறைவியைக் குறித்ததெனக் கொள்வாருமுளர். இப்பெருங்கோயிலில் நிருத்த சபையிலும் சிவகாமியம்மை கோயிலின் உட்பிரகாரமாகிய திருமாளிகைப்பத்தியின் குறடுகளிலும், பாண்டிய நாயகம் கோயிலின் குறடுகளிலும் அமைந்துள்ள சிற்பங்கள் ஆடற்கலையின் பல்வேறு கரணங்களையும் புலப்படுத்துவனவாக அமைந்துள்ளன. சிவகாமியம்மை திருக்கோயிலில் ஆடற்கலைக்குரிய அங்கமாக அமைந்த பல்வேறு இசைக் கருவிகளின் அமைப்பும், அவற்றை இசைவாணர்கள் வாசிக்கும் முறையும் சிற்பங்களாக வடித்துக் காட்டப்பெற்றுள்ளன. தோற்கருவி துணைக்கருவி கஞ்சக்கருவி நரம்புக்கருவி எனப்படும் இசைக்கருவிகளின் உருவங்களில் இப்பொழுது வழக்கில் இல்லாதன சிலவும் இடம் பெற்றிருத்தல் காணலாம். 18-ஆம் நூற்றாண்டில் மகமதியர் முதலிய புறச்சமயப் படைவீரர்கள் காயிலைப் பாசறையாகக் கொண்டு தங்கினமையால். இக் சிற்பங்களிற் பல சிதைவுற்றன. வீணை, யாழ் முதலிய நரம்புக கருவிகள் விரலால் மீட்டி வாசித்தற்குரியன என்பதனைப் பலரும் அறிவர். சிவகாமியம்மை கோயிலிற் காணப்படும் நரம்புக் கருவி ஒன்று இக்காலத்தில் வழங்கும் மேலைநாட்டு இசைக் கருவியான பிடிலைப் போன்று, வில்லினால் வாசித்தற்குரிய கருவியாக அமைந்துள்ளமை காணலாம். இக்கருவியின் முழு அமைப்பினையும் நாம் காண முடியாதபடி கலகக்காரர்களால், இது சிதைவுற்றுக் காணப்படுகின்றது.
தில்லைக்கோயிலில் குதிரை பூட்டிய தேர்மண்டபமாக நிருத்த சபையும், யானையும் யாளியும் இழுக்கும் தேர் அமைப்பாகப் பாண்டிய நாயகம் திருக்கோயிலும் அமைந்துள்ளமை பழங்காலக் கட்டடக் கலையின் சிறப்பினை விளக்குவதாகும். இவ்விருமண்டபங்களில் உள்ள தூண்கள் யாவும், முழுவதும் தெய்வத் திருவுருவினைத் தன்னகத்தே கொண்ட சிறு சிறு தேர்களைப் பெற்றனவாக விளங்குதல் அக்காலச் சிற்பிகளின் நுண்ணிய வேலைப்பாட்டுத் திறமைக்கு, ஒர் எடுத்துக்காட்டாகும்.
தில்லைப் பெருங்கோயில், நெடுந்துாரத்திலேயே ஒளியுடன் திகழும் செம்பொன் மாளிகையாகிய பொன்னம் பலத்தினைத் தன்னகத்தே கொண்டு அழகிய சிற்பங்கள் பலவற்றையுடைய தாய் அமைந்திருந்தது என்பதனையும், அதன் நடுவே மாணிக்கக் கூத்தன ஆடல் புரிந்தருளும் தில்லைச் சிற்றம்பலமாகிய திருமன்றம் அழகிய சிறந்த ஒவியங்கள் பல எழுதப்பெற்றுக் கவினுறத்திகழ்ந்தது என்பதனையும் “சிற்பந்திகழ்தரு திண்மதிற்றில்லை” (திருக்கோவையார்.315) எனவும், “சேணிற்பொலி செம்பொன் மாளிகைத் தில்லைச் சிற்றம்பலத்து மாணிக்கக் கூத்தன்” (திருக்கோவையார் 23) எனவும், 'சிற்றம்பலத்து எழுதும் ஒவியங்கண்டன்ன ஒண்ணுதலாள்'(திருக்-384) எனவும் வரும் தொடர்களில் மணிவாசகப் பெருமான் குறித்துப் போற்றியுள்ளமை, அவர் காலத்திலேயே தில்லைச் சிற்றம்பலம் சிற்பம் ஒவியம் முதலிய கலைகளுக்கு நிலைக்களனாகத் திகழ்ந்த செய்தியைப் புலப்படுத்துவதாகும்.
தில்லைத் திருச்சிற்றம்பலத் திருக்கோயிலில் வழிபாட்டுக் காலங்களில் நாள்தோறும் குடமுழா முழக்கப்பெற்றது. இச்செய்தியினை, 'சிற்றம்பலத்து அடியேன் களிதரக் கார்மிடற்றோன் நடமாடக் கண்ணார் முழவம் துளிதரக் காரென ஆர்த்தன' (திருக்கோவையார் 324) எனவரும் திருக் கோவையார் தொடரால் அறியலாம். சிவபாத சேகரன் எனப் போற்றப்பெறும் இராஜராஜ சோழனால் திருமுறை கண்டு எடுக்கப்பட்டதும் மூவர் அருளிய இயலிசைத் தமிழாகிய இத் திருப்பதிகங்களுக்குத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் தோன்றிய அம்மையார் ஒருவரைக் கொண்டு பண்டுபோல் இசையமைத்தற்குரிய அருள் நிலையமாக அமைந்ததும் இத் தில்லைப் பெருங் கோயிலேயாகும்.
“நரம்புடை யாழ் ஒலி முழவின் காதவொலி வேதஒலி
அரம்பையர்தங் கீத ஒலி அறாத்தில்லை”
(பெரிய தடுத்தாட்-9)
எனச் சேக்கிழார் பெருமான் இயலிசை நாடகமெனும் முத்தமிழ் வளர்ச்சிக்கும் இத் தில்லைப்பெருங்கோயில் நிலைக்களமாய் அமைந்த திறத்தை விரித்துரைத்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கத்தகுவதாகும்.
சிவகாமியம்மை திருக்கோயிலில் முன் மண்டபக் கூரையில் வரையப் பெற்றுள்ள ஒவியங்கள் மிகவும் பழமை வாய்ந்தன. பாண்டிய நாயகம் திருக்கோயிலின் மேற்கூரையில் எழுதப் பெற்ற ஒவியங்களும் இத்திருக்கோயிலின் பிறவிடங்களில் அண்மையிலெழுதப் பெற்ற ஒவியங்களும் புதுமைப் பொலிவு பெற்றுத் திகழ்கின்றன. இத்திருக்கோயிலில் அமைந்த ஏழுநிலைக் கோபுரங்கள் நான்கும் இக்காலக் கட்டடப் பொறியாளர் பலரும் வியந்துபாராட்டும் முறையில் அமைந்துள்ளமை காணலாம்.
தில்லைப் பெருங் கோயில் எழுநிலைக்கோபுரங்கள் நான்கினுள்ளும் கிழக்குக் கோபுரம், தரைமட்டம் முதல் வியாளம் வரை 35 அடி உயரமும் 108 அடி நீளமும் 60 அடி அகலமும் உடைய கருங்கற்கட்டிடமும், அதற்குமேல் வியாளம் முதல் கலசம் வரை 15 அடி உயரம் உடைய எழுநிலை மாடங்களும் ஆக 152 உயர முடையது. அதன்மேல் 7 அடி 6 அங்குலம் உயரமுடைய 13 செப்புக்கலசங்கள் உள்ளன. இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனால் அமைக்கப்பெற்ற இக்கோபுரவாயிலின் வட புறத்து மாடத்திலே தெற்கு நோக்கிய நிலையில், இவனது உருவம் இடம் பெற்றுள்ளது. இக்கோபுரத்தை முந்நூறாண்டுகட்கு முன் பழுதுபார்த்துத் திருப்பணி செய்தவர் காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியாராவார்.
தெற்குக் கோபுரம் தரைமட்டம் முதல் விமானம் வரை 35 அடி உயரமும் 108 அடி நீளமும் 62 அடி அகலமும் உடைய கருங்கற்கட்டிடமும், அதன் மேல் விமானம் முதல் கலசம் வரை 110 அடி உயரமுள்ள எழுநிலை மாடப்பகுதியும் ஆக 142 அடி உயரமுடையது. மேலுள்ள 13 செப்புக் கலசங்களும் 8 அடி 3 அங்குலம் உயரமுடையன.
மேற்குக் கோபுரம் தரைமட்டம் முதல் விமானம் வரை 37 அடி உயரமும் 102 அடி நீளமும் 60 அடி அகலமும் உடைய கருங்கற் கட்டிடப் பகுதியும், அதன் மேல் விமானம் முதல் கலசம் வரை 115 அடி உயரமுடைய எழுநிலை மாடமும் ஆக 145 அடி உயரமுடையது. இதன் மேலுள்ள 13 செப்புக்கலசங்களும் 5 அடி 9 அங்குலம் உயரமுடையன. இக்கோபுரத்தை அமைத்தவன் சடையவர்மன் சுந்தரபாண்டியன். ஆதலால் இதுசுந்தர பாண்டியன் திருக்கோபுரம் எனக் கல்வெட்டுக்களிற் குறிக்கப் பெற்றுள்ளது. இக் கோபுர வாயிலின் தென்புறமாடத்திலே வடக்கு நோக்கி வழிபடும் நிலையில் இப்பாண்டியனது உருவம் இடம் பெற்றுள்ளமை காணலாம்.
வடக்குக் கோபுரம் தரை மட்டம் முதல் விமானம் வரை 40 அடி உயரமும் 108 அடி நீளமும் 70 அடி அகலமும் உடைய கருங்கற்கட்டிடப் பகுதியும் அதன் மேல் விமானம் முதல் கலசம் வரை 107 அடி உயரமுடைய எழுநிலைமாடப் பகுதியும் ஆக 147 அடி உயரமுடையது. அதன் மேல் 7 அடி 11 அங்குல உயரம் வாய்ந்த 13 செப்புக் கலசங்கள் உள்ளன.
மேற்குறித்த எழுநிலைக்கோபுரங்கள் நான்கின் வாயிற்படிகளின் நிலைகளைக்காண்போர் தமிழகக்கட்டிடக்கலைவல்லுநர் மேற்கொண்ட பொறியியல் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இத் தில்லைப் பெருங்கோயில் விளங்குவதனை நன்குணர்வர். இவ்வாறு தமிழகத்தின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, நாட்டியக் கலை, இசைக்கலை, ஓவியக்கலை முதலிய கலைகள் பலவற்றின் வளர்ச்சிக்கும் நிலைக்களமாக அமைந்த தில்லைப் பெருங்கோயிலின் கலைநயங்களைப் பேணிப்பாதுகாத்தல் தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் உரிய தலையாய கடமையாகும்.