தில்லைப் பெருங்கோயில் வரலாறு/தில்லையில் ஆடல்புரியும்
2. தில்லையில் ஆடல்புரியும் கூத்தப்பெருமான் திருவுருவம் இடம்பெயர்ந்து மீண்டு எழுந்தருளினமை.
தில்லைச் சிற்றம்பலத்தில் சிவகாமியம்மை காணத் திருநடம் புரிந்தருளும் கூத்தப்பெருமானது திருவுருவம் கி. பி. பதினேழாம் நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பினால் சிதம்பரத்தினின்றும் இடம்பெயர்ந்து செல்லவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. புறச்சமயத்தவரால் நடராசப்பெருமான் திருவுரு சிதைக்கப்பெற்றுவிடும் நிலையேற்படுமோ என அஞ்சிய தில்லைவாழந்தணர்கள், அம் மூர்த்தியை ஒரு பேழையில் வைத்து அயலவர் அறியாதவாறு சிதம்பரத்தினின்றும் எடுத்துச் சென்றனர். எதிர்ப்பட்ட சிற்றூரொன்றின் புறத்தே மக்கள் நடமாட்டமில்லாத புளியந் தோப்பினை நள்ளிரவில் அடைந்தனர். அத்தோப்பிலுள்ள பெரிய புளியமரம் ஒன்று பெரிய பொந்தினையுடையதாகத் தென்பட்டது. அப்பொந்தினுள்ளே நடராசமூர்த்தியை ஒருவரும் அறியாதபடி பாதுகாப்பாக வைத்து மூடிவிட்டுத் திரும்பினர். சிலநாள் கழித்து அப்புளியந் தோப்புக்குச் சொந்தக்காரராகிய வேளாளர் ஒருவர் தமக்குச் சொந்தமான புளியமரத்தின் பெரும்பொந்து அடைக்கப்பட்டிருத்தல் கண்டு அதனை வெட்டிப்பார்த்தார். அதன் கண் நடராசர் திருவுருவம் மறைத்து வைக்கப்பெற்றிருத்தலைக் கண்டார். அவ்வாறு மறைக்கப்பட்ட சூழ்நிலையை யுணர்ந்து ஒருவரும் அறியாதவாறு அப்பொந்தினை நன்றாக மூடிவிட்டார். அம்மரத்தில் தெய்வமிருத்தலைத் தாம் கனவுகண்டதாக ஊர் மக்களுக்குச் சொல்லி இம்மரத்திற்குப் பூசை செய்துவந்தார்.
புறச்சமயத்தார் படையெடுப்பினால் நேர்ந்த அச்ச நிலை நீங்கிய பின் தில்லைவாழந்தணர்கள் தாம் பொந்தில் புதைத்து வைத்த நடராசமூர்த்தியை எடுத்து வந்து மீண்டும் தில்லைப் பொன்னம்பவத்தில் வழிபாடு செய்ய எண்ணித் தாம் நடராச மூர்த்தியைப் பாதுகாப்பாக வைத்த சிற்றூரையடைந்தனர். ஆண்டுகள் பல சென்றமையாலும் நள்ளிரவில் வைத்தமையாலும் அம்மூர்த்தியைப் புதைத்து வைத்த இடம் இன்னதென அறிந்து கொள்ள இயலாமல் மனக்கலக்கமுடையவராய் நின்றனர். புளியந் தோப்பினருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த முதியவரொருவர் உச்சிவேளையில் தன்னுடனிருந்த சிறுவனை நோக்கி 'தம்பீ, அந்த அம்பலப்புளியிலே கொண்டு மாடுகளை விடு. நான் வந்து விடுவேன்' எனக் கூறினார். அதனைக் கேட்ட தில்லை வாழந்தணர்கள் அம்மரத்திற்கு 'அம்பலப்புளி' என்ற பெயர்வரக் காரணம் என்ன என வினவினர். எனக்குத் தெரியாது; எங்கள் எசமான் இம்மரத்திற்கு அடிக்கடி பூசை போடுவார்" என்றார் கிழவர். அதனைக் கேள்வியுற்ற அந்தணர்கள் மரத்துக்குச் சொந்தக்காரர் யார்? எனக் கேட்டுத் தெரிந்து அவரையடைந்து அதுபற்றிக் கேட்டனர். அவரும் தமக்குரிய புளியமரப் பொந்தில் நடராசப் பெருமானை மறைத்து வைக்கப் பெற்றிருத்தலை ஒருவரும் அறியாதபடி பாதுகாத்து வருவதனை எடுத்துரைத்தார். தில்லைவாழந்தணரும் அவரது இசைவுபெற்று நடராச மூர்த்தியைப் பொன்னம்பலத்தில் எழுந்தருளச் செய்து முன்போல் பூசனை செய்வாராயினர். நடராசர் மறைக்கப் பெற்றிருந்த அம்பலப்புளியைத் தன்னகத்தே கொண்டுள்ள சிற்றூர் அன்று முதல் புளியங்குடியென வழங்கப் பெற்றது. நடராசர் திருவுருவினைப் பாதுகாத்துவந்த சிவவேளாளர் குடும்பத்தார் புளியங்குடியார் என அழைக்கப் பெற்றனர். செவி வழியாக வழங்கப் பெற்றுவரும் இச்செய்தி,
"தெளிவந் தயன்மா லறியாத தில்லைப் பதியம் பலவாணர்
புளியம் பொந்தினிடம் வாழும் புதுமை காட்டிப் பொருள் காட்டி
எளிதிற் புளியங் குடியாரென் றிசைக்கும் பெருமை ஏருழவர்
வளருங் குடியிற் பொலிவாழ்வு வளஞ்சேர் சோழ மண்டலமே" (99)
எனச் சோழ மண்டலச் சதகச் செய்யுளில் இடம் பெற்றுள்ளமை காணலாம். இப்பாடலை யூன்றி நோக்குங்கால் நடராசர் திருவுருவம் மறைத்து வைக்கப்பெற்ற புளியங்குடி என்னும் ஊர் சோழ மண்டலத்தைச் சார்ந்த சிற்றூர் என்றே கருதவேண்டியுளது. மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் எழுதிய 'அம்பலப்புளி' என்னும் கட்டுரையில் இச் செய்தி வெளியிடப்பெற்றுள்ளது. (நினைவு மஞ்சரி - இரண்டாம் பாகம் - பக்கம் 1 - 10)
ஹைதர் அலி காலத்தில் தில்லைவாழந்தணர் மலைநாட்டிற்குச் சென்று அங்குள்ள சிற்றூரில் புளியமரப் பொந்தில் நடராசப் பெருமாளை வைத்து மூடிவிட்டார்கள். சில ஆண்டுகள் கழித்துச் சென்று பார்த்துத் தாம் வைத்த இடம் தெரியாது மயங்கிய, நிலையில் அங்கு உழுது கொண்டிருந்த உழவர்கள், 'காளையை அவிழ்த்து அம்பலப்புளியருகில் கொண்டு விடு' என்ற வார்த்தையைக் கேட்டு நடராசப்பெருமான் இருக்குமிடமறிந்து எடுத்து வந்தார்கள் என்ற செய்தி செவிவழியாக வழங்கி வருகிறது. (மகாவித்துவான். ச. தண்டபாணி தேசிகர் எழுதிய சிதம்பரம் என்ற நூல் - பக்கம் 125)
தில்லைவாழந்தணர் நடராசப் பெருமானைப் புளியமரப் பொந்திற் புதைத்து வைத்திருந்த புளியங்குடி என்ற ஊர் ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு அருகே 30 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள புளியங்குடி எனவும், அவ்வூருக்கு அருகேயுள்ள ராஜபாளையத்தில் 'அம்பலப் புளிப்பஜார்' என அவ்வூர்க் கடை வீதி வழங்கப் பெறுதல் இதனைப் புலப்படுத்தும் எனவும் கூறுவாரும் உளர்.
கூத்தப் பெருமான் தில்லையிலிருந்து இடம் பெயர்ந்து மீண்டும் தில்லைக்கு எழுந்தருளிய வரலாறு குறித்து அண்மையில் தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத்தார் வெளியிட்ட தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் 50 என்னும் நூலில் தெளிவான குறிப்புக்கள் கிடைத்துள்ளன. இந்நூலில் 45 முதல் 48 வரையுள்ள நான்கு செப்பேடுகளும் தில்லைக்குரிய செப்பேடுகளாகும். இவை திருவாரூர்த் தியாகராசர் கோயில் நிருவாக அலுவலகத்திலிருந்து கிடைத்தமையால் திருவாரூர்ச் செப்பேடுகள் என்ற பெயரில் 4, 5, 6, 7 எண் வரிசையில் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
இவை நான்கும் மராட்டிய மன்னர் சாம்போசி காலத்தில் அளிக்கப் பெற்றவை. இவற்றுள் முதல் மூன்று செப்பேடுகளிலும் முதற்பதியில் வடமொழியும், பிற்பகுதியில், தமிழ்ப்பாடலும் வரையப் பெற்றுள்ளன. 48 ஆம் எண்ணுள்ள செப்பேடு முழுவதும் வடமொழியில் வரையப் பெற்றதாகும்.
மேற்குறித்த செப்பேடுகளுள் 47-ஆம் செப்பேடு கி. பி 1684-இல் அளிக்கப் பெற்றதாகும். இதன் முதற்கண் உள்ள வடமொழிப் பகுதி தில்லைக் கூத்தப்பெருமானது திருவருட் பெருமையினைக் கூறி மராட்டிய மன்னனுடைய குலகுருவாகிய முத்தைய தீட்சிதரால் சிதம்பரம் நடராசர் கோயில் குட முழுக்குச் செய்யப்பெற்ற செய்தியினைக் கூறுகின்றது. சேர நாட்டைச் சேர்ந்த சிற்பி இச்செப்பேட்டை அளித்ததாக இதன் வடமொழிப் பகுதியிற் கூறப்பெற்றுள்ள குறிப்பு ஆழ்ந்து சிந்தித்தற்குரியதாகும். இதன் கண்
'இயல்வாம சகாத்தம் ஆயிரமோடறு நூற்றாறின்
இனிய ரத்தாட்சி வருடம்
இலகு கார்த்திகை மாதம் இருபத்திரண்டாந்
தேதி சுக்கிர வாரமும்
செயமான தசமியும் அத்தநட்சேத்திரமும்
திகழ் கும்ப லெக்கினமுமே
திருந்து பவ கரணமும் ஆயிஷ்யமான யோகமும்
தினமும் வந்தே சிறப்ப
உயர் ஆகமப் படியின் ஆனந்த நடராசர்
ஒளி பெற நிருத்த மிடவே
ஓங்கு சிற்சபை தனைச் செம்பினால் மேய்ந்திடும்
உண்மையை யுரைக்க வெளிதோ
வயலாரும் வரவிசூழ் புலிசையழகிய திருச்
சிற்றம்பலத் தவமுனி
வையகம் துதி செயக் கும்பஅபிஷேகமும்
மகிழுற முடித்த நாளே'
எனவரும் தமிழ்ப்பாடல் வரையப் பெற்றுள்ளது. சாலிவாகன சகம் 1606 ஆம் ஆண்டு (கி. பி. 1684) - இரத்தாட்சி வருடம் கார்த்திகை மாதம் இருபத்திரண்டாந்தேதி வெள்ளிக்கிழமை
' . தசமிதிதியும். அத்த நட்சத்திரமும் கும்பலக்கினமும் பெற்ற நல்லநாளில் தில்லையம்பலவாணர் திருநடம்பரியும் சிற்சபையினைச் செப்புத்தகடு வேய்ந்து தில்லையில் வாழும் அழகிய திருச்சிற்றம்பலத் தவமுனி என்பார் உலகம் போற்றக் குட நீராட்டு விழாவை நிகழ்த்தினார் என்ற செய்தியை மேற்குறித்த தமிழ்ப்பாடல் நன்கு விரித்துரைத்தல் காணலாம்.
"கேரள தேசத்தின் மலைகளுக்கருகில் உள்ளவரும் மரத்தின் நிழலில் இருப்பவரும், மக்களின் அரசரும், ஆள்பவரும், அருந்தும் தீருக்கு அருகில் உளளவரும், அம்பலத்திற்கு இலக்கணமாக விளங்குபவரும் ஆன சிவனுக்குக் கேரள தேசத்தைச் சேர்ந்த சிற்பி கொடுத்த செப்பேடு” என்ற செய்தி, இச்செப்பேட்டின் வடமொழிப்பகுதியிற் கூறப்பட்டுள்ளது. இதனைக் கூர்ந்து சிந்திக்குங்கால் தில்லைக் கூத்தப்பெருமான் கேரள நாட்டின் மலைகளுக்கருகில் மர நிழலில் ஒரு காலத்தில் மறைக்கப் பட்டிருந்த செய்தி நன்கு புலனாகும். அன்றியும் கி.பி 1684-இல் தில்லையில் வாழும் அழகிய திருச்சிற்றம்பல முனிவர் முயற்சியால் கி.பி. 1684-இல் நிகழ்த்த குடமுழுக்கு உயர் ஆகமப்படி நிகழ்த்தப் பெற்றது எனக் குறிப்பிடுதலால் அவர் காலத்துத் தில்லைப் பெருங்கோயிற்பூசை, மகுடாகமவிதிப்படி நடைபெற்றதென்பதும், "சிற்சபையினைச் செம்பினால் மேய்ந்திடும் உண்மையினை' என்றதனால் முன்னர்ச்சிற்சபைக்கு வேய்ப்பெற்றிருந்த பொன்னோடு பிறமதத்தவரால் கொள்ளை கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும் என்பதும் நன்கு விளங்கும்.
45 ஆம் எண்ணுள்ள செப்பேடு, ஸ்ரீமத் சர்வதாரியாண்டு மார்கழிமாதம் தன்னிடத்தை (சிதம்பரத்தை) விட்டு வெளியே சென்றவருக்குச் சாம்போசி என்னும் அரசனுடைய ஆணையால் கோபால தாதாசி என்பவரால் திருப்பணி செய்யப்பெற்று இரத்தாட்சி ஆண்டு கார்த்திகையில் ஆடவல்லான் மீண்டும் தன் அம்பலத்தை அணிசெய்தார். விபவ ஆண்டு தைமாதம் 27 ஆம் நாள் வியாழக்கிழமை பௌர்ணமியன்று கனகசபை முற்றலும் பொன்னால் வேயப்பெற்று இறைவனுக்குக் குடமுழுக்கு நடத்தப்பெற்ற செய்தியைக் கூறுகின்றது. இச்செப்பேட்டினிறுதியில், விடையில்வந்த செம்பொன் அம் பலத்தான் அந்த
வெள்ளியம் பலத்திலே விரும்பிச் சென்ற
நடையில் வந்த வருடமோ சர்வ தாரி
நாயபமார் கழியிருபத் தைந்து நாளாம்
கடையில்வந்த வருடங்கார்த் திகையீ ரேழு
கதிர்வாரம் திரும்பவந்து கலந்த நாளாம்
இடையில்வந்த வருடமெண்ணிப் பார்க்கில் முப்பத்
தேழுபத்து மாதநாள் இருப தாமே!
எனவரும் பாடல் அமைந்துள்ளது. சிதம்பரம் பொன்னம்பலத்து எழுந்தருளிய நடராசப்பெருமான் சர்வதாரி வருடம் மார்கழி 25 முதல் அட்சய வருடம் கார்த்திகை பதினான்கு வரை (கி.பி 24.12.1648 முதல் 14.11.1686 முடிய) 37 ஆண்டுகளும் 10 மாதங்களும் 20 நாட்களும் கூடிய காலப்பகுதியில் தில்லையில் இல்லாமல் பாண்டிய நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டாரெனவும், அங்குக் குடுமியான் மலையில் 40 மாதங்களும் பின்னர் மதுரையிலும் பாதுகாப்பாக வைக்கப்பெற்றிருந்து பின்னர் தில்லைக்கு எழுந்தருளினார் என்பதும் இப்பாடலால்
அறிகின்றோம். 46 ஆம் எண்ணுள்ள செப்பேட்டில் பின்வரையப் பெற்ற தமிழ்ப்பாடலில் இச்செய்தி இன்னும் விளக்கமாகக் கூறப்பெற்றுள்ளது. சகாப்தம் 1606 இரத்தாட்சி வருடம் கோபால பிருத்வி சுரபதியினுடைய வேண்டுகோளுக்கிணங்க சாம்போசி மன்னர் தில்லைக் கோயிலைப் புதுப்பித்து, சிற்சபைக்குப் பொன் வேய்ந்து செப்பேடு அளித்தார் என்று செய்தி வட மொழிப் பத்தியில் குறிக்கப்பெற்றுள்ளது.
மருவிய சகாத்தமா யிரமுமஐ நூறறெழுப
துக்குமேற் சருவதாரி
வருஷமார் கழிமாதம் ஆதித்த வாரமதில்
மன்னும் அம் பலவாணரை
அருமையொடு குடுமிமா மலையி னாற்பதுமாதம்
அப்புற மதுரை தனிலே
அடவுடன் எழுந்தருளி ஆகமுப்பதிமின்
னெட்டான அட்சய வருஷமும்
பரவுகார்த் திகை மாத தேதிபதி னாலுடன்
பருதிநாள் வளர்பக்கமும்
பகருத்தி ரட்டாதி திசமிக்கும் பத்தினிற்
பாருயிரே லாமுய்யவே
திருமருவு செம்பொன்மா மழைகளது பொழியவுந்
தில்லைமா னகர்வாழவுந்
தேவர்கள் துதிக்கவு மூருடைய முதலியார்
சிற்சபையுள் மேவினாரே.
சாம்போசி மன்னர் கி.பி. 1684-இல் தில்லைத் திருப்பணியைத் தொடங்கி 1685 இல் சிற்சபைக்குப் பொன் வேய்ந்தார் என்பதும், தில்லையில் சிற்சபையில் எழுந்தருளிய நடராசப் பெருமானுக்கு ஊருடைய முதலியார் என்ற பெயர் வழங்கியது என்பதும் இச்செப்பேட்டால் விளங்குகிறது. 48 ஆம் எண்ணுள்ள செப்பேடு 14.11.1686 இல் சாம்போசி மன்னரால் அளிக்கப் பெற்றதாகும். முழுவதும்வட மொழியிலெழுதப்பெற்ற இச்செப்பேட்டில் கி.பி. 1684-இலும், கி.பி. 1686-இலும் சிதம்பரத்தில் நிகழ்ந்த குடமுழுக்கு விழாக்கள் இரண்டும் குறிக்கபெற்றுள்ளன. இச்செப்பேடு கூத்தப் பெருமான் திருப்பணியை முன்னிருந்து நடத்தும் சிற்றம்பல முனிவரால் விமானக்கலசத்தில் அலங்கரிக்கப் பெற்றது என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது. 1684- இல் செம்பு வேயப் பெற்று, 1686-இல் மீண்டும் குடமுழுக்குச் செய்யப்பெற்றது என்பதும் தில்லைக் கோயிலில் நிகழ்ந்த இத்திருப் பணிகளை மேற்பார்வை செய்தவர் சிற்றம்பல முனிவராகிய துறவி என்பதும் இச் செய்பேட்டினால் இனிது விளங்கும். இக்கும்பாபிஷேகம் இரண்டிலும் சாம்போசியின் குலகுருவான முத்தைய தீட்சதர் என்பவர் முன்னிருந்து நடத்திவைத்தாரென்பது மேற்குறித்த செப்பேடுகளால் புலனாகின்றது.
1684-ஆம் ஆண்டிலும், 1686-ஆம் ஆண்டிலும் நடராசப் பெருமான் எழுந்தருளிய சிற்சபைக்குச் செம்பு வேய்ந்தும், பொன் வேய்ந்தும் இருமுறை கும்பாபிஷேகம் செய்த சாம்போசி என்னும் மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜியின் மூத்தமகனாவான். இவன் கொள்ளிடத்தின் வடகரையிலுள்ள பகுதியை (செஞ்சியிலிருந்து) ஆண்டவன். பறங்கிப்பேட்டையிலிருந்த இவருடைய அதிகாரியாகிய கோபால தாதாஜி பண்டிதர் என்பவர் தில்லைத் திருப்பணியைக் கண்காணித்தவராவார். இவ்வாறு தில்லைக்கூத்தப்பெருமான் சிதம்பரத்தினின்றும் இடம்பெயர்ந்தமைக்கு பீஜப்பூர் சுல்தானின் படையெடுப்பே காரணமாதல் வேண்டும்.
கி.பி. 1686-க்குப்பின் தில்லை நடராசப் பெருமான் சிதம்பரத்தினின்றும் வெளியே புறப்பட்டு 1696-இல் மீண்டும் சிதம்பரத்திற்கு வந்து சேர்ந்தார் என்ற செய்தி, ஆயிரக்கால் மண்டபக் கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ளது. இவ்விடப் பெயர்ச்சிக்கு அக்காலத்தில் ஔரங்கசீப்பின் படையெடுப்பு தெற்கு நோக்கி வந்ததே காரணம் எனத் தெரிகின்றது. தென்னாட்டில் வந்த இம் முகலாயப் படைகள் செஞ்சியில் 7 ஆண்டுகள் தங்கியிருந்தன. இவர்களால் ஏற்படும் அபாயத்தை எண்ணியே தில்லைக் கூத்தப்பெருமானைத் திருவாரூர்க்கு எடுத்துச்சென்றிருத்தல் வேண்டும். தில்லை நடராசப்பெருமான் சில ஆண்டுகள் திருவாரூர்க்கோயிலில் தங்கியிருந்தமைக்குரிய அடையாளங்கள் அக்கோயிலில் உள்ளன என்பர். தஞ்சையிலிருந்து ஆண்ட மராட்டிய மன்னர் சகசி என்பவர் திருவாரூர்த்தலத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவராதலின் தில்லைநடராசப் பெருமான் திருவுருவத்தை அவ்வூர்த் திருக்கோயிலில் வைத்துப் பாதுகாத்து வத்தார் எனக் கருத இடமுண்டு. தில்லைக் கூத்தப் பெருமானுடன் எடுத்துச் செல்லப்பெற்ற தில்லைச் செப்பேடுகள் நான்கும் திருவாரூரிலேயே சேமிக்கப் பெற்றிருந்தமையால் அவை திருவாரூர்ச் செப்பேடுகள் எனக் குறிக்கப்பெறுவனவாயின. தில்லை நடராசப் பெருமானை யாரும் அறியாதபடி மூடி மறைத்துத் திருவாரூர்க்கு எடுத்துச் சென்ற மரப்பெட்டி தில்லைப்பேரம்பலத்தில் இன்னும் வைக்கப்பெற்றுள்ளமை காணலாம்.