உள்ளடக்கத்துக்குச் செல்

தில்லைப் பெருங்கோயில் வரலாறு/தில்லையில் கூத்தப்பெருமானை

விக்கிமூலம் இலிருந்து





5. தில்லையில் கூத்தப்பெருமானை வழிபட்டுப் பேறுபெற்றோர்


எல்லாம் வல்ல சிவபெருமான் சிவகாமியம்மை கண்டுகளிக்க ஞானமயமான தில்லைப்பொன்னம்பலத்திலே அற்புதத்தனிக் கூத்தினை ஆடியருளும் செயல் உலகத்தோற்றம் தொடங்கியது முதலே நிகழந்துவரும் தொன்மை வாய்ந்ததாகும்.

முருகன்

சூரபதுமனால் துயருற்ற தேவர்களைச் சிறைநீக்கி உய்வித்தல் வேண்டிச் சிவபெருமான் பால் விடைபெற்றுத் தாரகனை வதைத்து, கேதாரம், காசி, திருப்பருப்பதம் முதலிய தலங்களை வணங்கி,தென்னாட்டிற்கு எழுந்தருளிய முருகப்பெருமான்,பதஞ்சலிக்கும் புலிமுனிக்கும் ஆடல்காட்டியருளிய தில்லை மூதூரைக் கண்டு அங்கு உலகபுருடனுக்கு இதயகமலமாகத்திகழும் அம் மன்றத்திலே இறைவன் ஆடும் அற்புதத் தனிக்கூத்தினை வணங்கிச் சென்றார் என்பது,

"விரகனல் வேள்வி தன்னில் வியன்றலை அரிந்து வீட்டிப்
பொருவரு தவத்தை யாற்றும் பதஞ்சலி புலிக்கால் அண்ணல்
இருவரும் உணர்வாற் காண எல்லையில் அருளா வீசன்
திருநட வியற்கை காட்டுந் தில்லைமூ தூரைக் கண்டான்”.

“தண்டளிர்ச் சோலைத் தில்லை தபனிய மன்றி லென்றுந்
தொண்டையங் கனிவாய் மாது தொழச் சுராட் புருடன் உள்ளத்
தண்டரு மதிக்க லாற்ற அற்புதத் தனிக்கூத் தாடல்
கண்டன்ன கசிவால் உள்ளங் களிப்புற வணங்கிப் போனாள்".

என வரும் கந்தபுராணச் செய்யுட்களால் புலனாம்.

அருச்சுனன்

வடநாட்டிலிருந்து தீர்த்தயாத்திரையாகப்புறப்பட்ட அருச்சுனன் தில்லைப் பெருங்கோயிலில் கூத்தப்பெருமானை வழிபட்டு மகிழ்ந்தாள் என்பது,

“இன்னம்பலபல யோனியில் எய்தா நெறி பெறவே
முன்னம்பலர் அடிதேடவும் முடிதேடவும் எட்டா
அன்னம் பல பயில்வார் புனல் அணிதில்லையுள் ஆடும்
பொன்னம்பல நாதன் கழல் பொற்போடு பணிந்தான்”

என வரும் வில்லிபுத்தூராழ்வார் பாடலால் இனிது விளங்கும்.

திருமூலநாயனார்

தில்லை மன்றுள் இறைவன் ஆட்டியருளும் இத்திருக்கூத்தினை மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர் ஆகியோருடன் கண்டு தொழுதவர் திருமுறை யாசிரியர்களுள் காலத்தால் முற்பட்ட வரும் சிறந்த சிவயோகியாருமாகிய திருமூல நாயனாராவர். இச்செய்தி,

"நந்தியருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர்
என்றிவ ரென்னோ டெண்மரு மாமே”
(திருமந்திரம்-67)

எனவும்,

“செப்புஞ் சிவாகமம் என்னும் அப்பேர் பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள் பெற்றுத்
தப்பிலா மன்றிற் றனிக்கூத்துக் கண்ட பின்
ஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே"
(திருமந்திரம்-74)

எனவும் வரும் திருமூலர் வாய்மொழியால் நன்கு விளங்கும். தில்லைப் பெருமான் வியாக்கிரபாத முனிவருடைய குழந்தை பாலில்லாது அழுதபோது பாற்கடலையே வருவித்துக் குழந்தையின் பசி தீர்த்தருளினார். இச்செய்தி, ‘பாலுக்குப்பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடலீந்தபிரான்' எனவரும் திருப்பல்லாண்டிற் குறிக்கப்பெற்றுள்ளது.

பொற்பதியாகிய தில்லை, உலகபுருடனின் நெஞ்சத்தாமரை யாகவும் இடைகலை பிங்கலை சுழுமுனை என்னும் மூன்று நாடிகளும் சந்திக்கும் இடமாகவும் இறைவனது அருட்கூத்து நிகழும் இடமாகவும் திகழ்வதனை,

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரும் இமவான் இலங்கைக் குறியுறும்
சாரும் திலைவனத் தண்மா மலயத்தூ
டேறும் சுழுனை இவைசிவ பூமியே’’ (2747)

என வரும் திருமந்திரம் இனிது புலப்படுத்துவதாகும்.

தில்லைப் பதியிலே நுண்ணிய ஞான வெளியாகிய திருச்சிற்றம்பலத்திலே இறைவன் நிகழ்த்தியருளும் அற்புதத் திருக் கூத்தினை நேரிற் கண்டு மகிழ்ந்தவர் திருமூலதேவர் என்பது,

 “நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்
பற்றுக்குப் பற்றாய்ப் பரம னிருந்திடம்
சிற்றம் பலமென்று தேர்ந்து கொண்டேனே” (2770)

எனவரும் திருமந்திரத்தாற் புலனாம். ‘நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி’ என்றது, ஆறாதாரங்களுள் ஆக்ஞை எனப்படும் இடத்தினை. உற்று உற்றுப் பார்த்தல் - ஐம்புல னடக்கி ஒருமைநிலையி லிருந்து கூர்ந்து தியானித்தல். அங்ஙணம் தியானிக்கும் நிலையில் நாதாந்தத்தின் அஞ்செழுத்தாகிய மந்திரவுருவில் ஒளிப்பிழம்பாய் ஆடல்புரியும் இறைவனது திருக்கூத்துப் புலனாகும் என்பார், ‘உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்’ என்றார். உயிர்கள் தமக்குப் பற்றுக்கோடாகக் கொண்டுள்ள எல்லாப் பொருள்கட்கும் பற்றுக்கோடாகத் திகழ்பவன் பரமன் ஒருவனே என்று அறிவுறுத்துவார் பற்றுக்குப்பற்றாய்ப் பரமன் இருந்திடம் என்றார். இறைவன் உயிர்களின் உள்ளமாகிய நெஞ்சக்கமலத்திலே நுண்ணிய பரவெளியாகிய ஞான ஆகாசமே இடமாக அருட் கூத்தியற்றுகின்றான் என்பதனைத் தில்லைச்சிற்றம்பலத் திருக்கூத்தினால் தெளிந்து கொண்டேன் என்பார், ‘பரமன் இருந்திடம் சிற்றம்பலமென் றுதேர்ந்து கொண்டேனே என்றார். 'நற்றவத்தோர் தாம் காண நாதாந்தத் தஞ்செழுத்தாய் உற்றுரு வாய் நின்றாடல்’ (39) எனவும், 'சிவாய நமவென்னும் திரு வெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்’ (31) எனவும் வரும் உண்மை விளக்கத் தொடர்கள் இங்கு ஒப்பு நோக்கி யுணரத்தக்கன.

சிதாகாசப்பெருவெளியில் ஆனந்தக் கூத்தராகிய அம்பல வாணர் அருட்சத்தியாகிய சிவகாமி யம்மையுடன் திருவைந் தெழுத்தாகிய மந்திரவுருவாய் நின்று ஆடல் புரியுந்திறத்தைப் புலப்படுத்துவது திருவம்பலச் சக்கரம் என்னும் யந்திரமாகும். தில்லை மன்றில் நிகழும் திருக்கூத்தினைக்கண்டு மகிழ்ந்த திரு மூலநாயனாரை கூத்தப்பெருமானது அருவத்திருமேனியாகிய இதனைத் திருமந்திரம் நாலாந்தந்திரம் திருவம்பலச் சக்கரம் என்ற தலைப்பில் விரித்துரைத்துப் போற்றியுள்ளார்.

நந்தியாகிய சிவபெருமான் திருவைந்தெழுத்தாகிய மந்திர வடிவில் எழுந்தருளியுள்ளான் என்பதனை,

'அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழுத் தாலே அமர்ந்த பஞ்சாக்கரம்
அஞ்செழுத் தாகிய அக்கர சக்கரம்
அஞ்செழுத் துள்ளே யமர்ந்திருந் தானே' (திருமந்திரம்-934)

எனவரும் பாடலிற்குறித்த திருமூலர், திருவைந்தெழுத்தே கூத்தப்பெருமான் திருமேனியாக விளங்குந்திறத்தினை

"ஆகின்ற பாதமும் அந்நாவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகரமாம்
ஆகின்ற சியிருதோள், வவ்வாய் கண்டபின்
ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே” (௸941)

எனவரும் திருமந்திரத்தில் விரித்துக் கூறியுள்ளார். “உயிர்களுக்கு ஆக்கமளிக்கும் திருவடியும் அந்த நகர எழுத்தாய் நிலைபெறும் உந்திச்சுழியாகிய வயிற்றிடத்தே மகர எழுத்துப் பொருந்தும். சிகர எழுத்து இருதோள்களாகவும் வகர எழுத்து வாயாகவும் கண்டபின் திருமுடிக்கண் விளங்குகின்றசுடர் யகரவெழுத்தின் வடிவினதாய்த்தோன்றும்" என்பது இத்திருமந்திரப்பாடலின் பொருளாகும். எல்லாமொழிக்கும் பொதுவாகிய திருவைந்தெழுத்தினைத் தமிழ் எழுத்துவடிவில் மேற்குறித்த வண்ணம் எழுதிப்பார்த்து நடராசப் பெருமானது திருமேனியைத் திருமூலர் முதலிய தமிழ்முனிவர்கள் சிந்தித்துப் போற்றியுள்ளார்கள் என்பது, இங்கு எடுத்துக்காட்டிய திருமந்திரப் பாடலாலும்,

"நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்ச்
சிவ்விரண்டு தோளதாய்ச் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் எழுந்து நின்ற நேர்மையிற்
செவ்வை யொத்து நின்றதே சிவாயமஞ் செழுத்துமே"

என வரும் சிவவாக்கியர் பாடலாலும்,

"ஆடும் படிகேள்நல் லம்பலத்தான் ஐயனே
நாடும் திருவடியி லேநகரம் -- கூடும்
மகரம் உதரம், வளர்தோள் சிகரம்
பகருமுகம் வா,முடியப் பார்" (உண்மை விளக்கம்-32)


"ஓங்கார மேநற் றிருவாசி யுற்றதனில்
நீங்கா எழுத்தே, நிறைசுடராம்--ஆங்காரம்
அற்றார் அறிவர் அணி அம்பலத்தான் ஆடலிது
பெற்றார் பிறப்பற்றார் பின்" (௸-34)

என வரும் உண்மை விளக்கச் செய்யுட்களாலும் நன்கு புலனாகும்.

தில்லையம்பலவாணர் நிகழ்த்திய திருக்கூத்தினை ஐந்தொழில் திருக்கூத்து எனவும் பஞ்சகிருத்திய பரமானந்த தாண்டவம் எனவும் கூறுவர் பெரியோர். ஐந்தொழில்களாவன படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன: அவற்றுள் படைத்தல் என்பது ஆணவ இருளில் அகப்பட்டு அறிவு இச்சை செயல்கள் என்னும் ஆற்றல் தளைப்பட்டுத் தனித்துக் கிடந்த ஆன்மாக்களுக்கு அவ்விருள் சிறிதேயகல, அவ்வுயிர்களின் அறிவு இச்சை செயல்கள் புலப்படுதல் வேண்டி இறைவன் தனது உடைமையாகவுள்ள மாயை என்னும் சடசத்தியிலிருந்து. உடல் கருவி உலகு, நுகர். பொருள்களைத் தோற்றுவித்து அவற்றை ஆன்மாக்களுடன் கூட்டுதல். காத்தல் என்பது உடம்போடு உலகில் வாழ்ந்து இருவினைகளைச் செய்யும் ஆன்மாக்கள் தாங்கள் செய்த இருவினைப் பயன்களாகிய இன்ப துன்பங்களைத் தாங்களே நுகரும் படிசெய்து அவற்றைப்பற்றியுள்ள பாசப் பிணிப்பினை அகற்றுதலாகும். அழித்தல் என்பது கன்மத்தினால் அலைப்புண்டுவருந்தும் ஆன்மாக்களை இளைப்பாற்றும் பொருட்டு, உலகினை ஒடுக்கிக் கொள்வதாகும். மறைத்தல் என்பது ஆன்மாக்கள் செய்த இருவினைப் பயன் அவ்வான் மாக்களே புசித்துக் கழிக்கும் படி மறைந்து நின்று தகர்த்துக் கன்மங்களைப் போக்கி ஆன்மாக்களைச் செம்பிற் களிம்பு போன்று அநாதியேபற்றியுள்ள ஆணவமலம் கழலும் பக்குவத்தினை யுண்டாக்குதல். அருளல் என்பது மலப்பிணிப் பினையறவேயகற்றி ஆன்மாக்கனைத்தன் திருவடியிலே கூட்டிக் கொள்ளுதலாகும். இங்குச் சொல்லப்பட்ட ஐந்தொழில்களும் ஒருங்கே நிகழும் வண்ணம் சிவபெருமான் திருவருட் கூத்து ஆடியருளுதலால் அத்திருக்கூத்து பஞ்சகிருத்திய பரமானந்தத் தாண்டவம் எனப்போற்றப்பெறுவதாயிற்று. தில்லையம்பலத்தில் நிகழும் இத்திருக் கூத்து மேற்கூறிய ஐந்து தொழில்களின் அமைப்புடையதாதலை


"அரன்துடி தோற்றம், அமைத்தல் திதியாம்,
அரன் அங்கிதன்னில் அறையில் சங்காரம்,
அரனுற்றனைப்பில் அணையுந் திரோதாயி,
அரனடி யென்றும் அனுக்கிரகந் தானே" (திருமந்-2799)

எனவரும் திருமந்திரத்தில் திருமூலர் இனிது விளக்கியுள்ளார்.

'கூத்தப்பெருமான் திருக்கரத்தில் உள்ள உடுக்கை படைப்புத் தொழிலைக் குறிக்கும். அஞ்சல் என்று அமைத்த வலக்கை காத்தற்றொழிலை யுணர்த்தும். இடக்கையில் ஏந்திய தீயின் அமைப்பு அழித்தற்றொழிலையுணர்த்தும். இடக்கையில் ஏந்திய தீயின் அமைப்பு அழித்தற் றொழிலைக் குறிக்கும். ஊன்றியவலத் திருவடியினால் முயலகனை மிதித்துள்ள நிலையில் மறைத்தற் றொழில் பொருந்தியுள்ளது. அம்முதல்வனது இடது பாதமாகிய தூக்கிய திருவடியானது எக்காலத்தும் மன்னுயிர்களுக்கு அருள் புரிதலைக்குறிப்பதாகும்" என்பது மேற்காட்டிய திருமந்திரத்தின் பொருளாகும். இத்திருமந்திரப் பொருளை விரித்துரைப்பது,



"தோற்றந் துடியதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம், ஊற்றமாய்
ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோதம், முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு” (உண்மை -35)

எனவரும் உண்மை விளக்க வெண்பாவாகும்.

மன்னுயிர்களின் சித்தத்தில் எழுந்தருளிய இறைவன் ஐம் பெரும் பூதங்கள், அவற்றிடமாகப் பொருள்களை அறியும் வாயிலாகிய ஐம்பொறிகள், அவற்றின் வழி நிகழும் புலனுணர்வுகள், வேதப் பொருளாய் விளங்கும் திருவைந்தெழுத்து, வேதத்தின் மிக்க சிவாகமங்கள், கலைகள் காலம் ஊழி கலை அண்டங்களின் இயக்கம் ஆகிய எல்லாவற்றிலும் வேறறக் கலந்து நின்று திருக்கூத்து நிகழ்த்தியருளும் திறத்தினை,



"பூதங்கள் ஐந்திற் பொறியிற் புலனைந்தில்
வேதங்கள் ஐந்தின் மிகும் ஆகமம்தன்னில்
ஒதும் கலை காலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள் ஐந்திற் புணர்ந்தாடும் சித்தனே" (2730)

எனவரும் திருமந்திரம் விரித்துரைக்கின்றது. புணர்தல் - வேறறக்கலத்தல்.



"பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்த விளங்கு தில்லை கண்டேனே"

(கண்ட பத்து -10)


எனவரும் திருவாசகம், மேற்குறித்த திருமந்திரத்தை அடி யொற்றியமைந்துள்ளமை காணலாம்.



அண்டங்கள் ஏழினுக் கப்புறத் தப்பால
உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேற்
கண்டங் கரியான் கருணை திருவுருக்
கொண்டங் குமை காணக் கூத்துகந் தானே” (2732)

எனவரும் திருமந்திரம் உமையம்மையார் காணத் திருவம்பலத்திலே இறைவன் ஆடியருளும் ஒருபெருந் திருக்கூத்தின் இயல்பினை விரித்துரைப்பதாகும். இத் திருமந்திரப் பொருளை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது.

“கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி"

(பெரிய - தில்லைவாழ்-2)

என வரும் சேக்கிழார் நாயனார் வாய் மொழியாகும்.

சிற்றம்பலம் எனத் தில்லையம்பலத்தைக் குறித்து வழங்கும் இச்செந்தமிழ்ச் சொல்லே சிதாகாசம் என்ற பொதுப்பொருளில் சிதம்பரம் என மருவி வழங்கப்பெறுவதாயிற்று!

“எங்கும் திருமேனி எங்குஞ் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
எங்குஞ் சிவமா யிருத்தலால் எங்கெங்கும்
தங்குஞ் சிவனருள் தன்விளை யாட்டதே”-(2722)

எனவரும் திருமந்திரப்பாடல் ஒன்றில் மட்டுமே சிதம்பரம் என்ற சொல் வழங்கப்பெற்றுள்ளது. பன்னிரு திருமுறைகளில் வேறு எங்கும் இப்பெயர் எடுத்தாளப் பெறவில்லை.

தாயின் முலைப்பாலை உணவாகக்கொண்டுவளரும் பசுங் குழந்தைகட்கு நோய்வந்தால் அந்நோயைத் தீர்க்கும் மருந்தினை அக்குழந்தையின் குடர் தாங்காதென்று கருதி அம் மருந்தினைத் தாயே உண்டு அதன் பயனை கைக்குழந்தைகள் பெற்று நலம்பெற உதவுதல் உலகியலிற் கண்டது. உலகமீன்ற பெருமாட்டியாகிய சிவகாமி யன்னையும் இறைவனது திருக்கூத்தினை மன்னுயிர்கள் நேரிற் காண வியலாதநிலையில் அவ்வுயிர்களின் பிறவிநோய் நீங்கப் பெருமான் செய்தருளும் திருக்கூத்தினை, தான் உடனிருந்து கண்டு அதன் பயனை மக்களுக்கு வழங்கியருள்கின்றார்.

இந்நுட்பம்,

“அருமான வாண்முகத்தாள் அமர்ந்து காண
அமரர்கணந் தொழுதேத்த ஆடு கின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானை"

எனவரும் திருநாவுக்கரசர் வாய்மொழியாலும், இத்தொடர்ப் பொருளை விரித்து விளக்கும் முறையில்,

"பாலுண்குழவி பசுங்குடர் பொறாதென
நோயுண் மருந்து தாயுண் டாங்கு
மன்னுயிர்த் தொகுதிக் கின்னருள் கிடைப்ப
வைய மீன்றளித்த தெய்வக் கற்பின்
அருள் சூற்கொண்ட வையரித் தடங்கண்
திருமாண் சாயல் திருந்திழை காணச்
சிற்சபை பொனியத் திருநடம் புரியும்
அற்புதக்கூத்த” (சிதம்பர மும்மணிக்கோவை-2)

என வரும் குமரகுருபரர் வாய்மொழியாலும் இனிது புலனாதல் காணலாம்.

திருஞான சம்பந்தர்

மூவர் அருளிய தேவாரத்திருப்பதிகங்களுள் தில்லைக்குரியனவாகத் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்கள் இரண்டும், திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள் எட்டும், சுந்தரர் திருப்பதிகம் ஒன்றும் ஆகப் பதினொரு திருப்பதிகங்கள் கிடைத்துள்ளன. தில்லைப்பதியை யடைந்த திருஞானசம்பந்தர். அண்ணலார் தமக்கு அளித்த ஞானமேயான அம்பலமும் தம் உள்ளத்தில்லா நிறைந்த ஞானத்தின்கண் நிகழும் ஆனந்தமாகிய ஒருபெருந் தனிக் கூத்தும் ஆகிய தமது அகக்காட்சியினைத் தில்லைச் சிற்றம்பலத்திலே - புறக்காட்சியாகவும் - கண்ணாரக்கண்டு கும்பிட்டார். “உணர்வின் நேர்பெற வருஞ் சிவபோகத்தினை உருவின்கண் அணையும் ஐம்பொறிகளவினும் - எளிவர அருளினை” என்று கூறித் தில்லையம்பலவாணரை வணங்கிக் ‘கற்றாங்கு எரியோம்பி’ என்னும் பதிகத்தைப் பாடித் தில்லை வாழ் அந்தணர்களைச் சிறப்பித்தருளினார். திருவேட்களத்தினைத் தங்குமிடமாகக் கொண்டு, காலந்தோறும் அம்பலவாணரை வழிபட்டு மகிழ்ந்தார். திருவேட்களத்திலிருந்து திருநீல கண்டப்பாணருடன் தில்லைப் பதியிற் புகுந்தபோது இறைவனுக்குத் தொண்டு புரியும் தில்லைவாழந்தணர் அனைவரும் சிவகண நாதர்களாகத் தோன்றக் கண்டு அக்காட்சியைத் திருநீலகண்டப் பாணர்க்கும் காட்டி, 'ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்' என்னும் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். அத்திருப்பதிகத்தில் "நீலத்தார் கரியமிடற்றினார் நல்ல நெற்றி மேலுற்ற கணினார் பற்று, சூலத்தார் - சுடலைப் பொடி நீறணிவார் சடையார், சீலத்தார். தொழுதேத்து, சிற்றம்பலம்" எனவரும் பாடலில் தில்லைவாழந்தணர் சிவகண நாதர் களாகத் தோன்றிய காட்சி குறிப்பிடப் பெற்றுள்ளமை காணலாம்.

திருநாவுக்கரசர்

ஊனாலும் உயிராலும் உள்ளபயன் பெற விழைந்த தேனாரும் மலர்ச் சோலைத் தில்லையினை அடைந்த திருநாவுக்கரசர், தில்லைச் சிற்றம்பலவர் திருமுன் அணைந்தபோது 'என்று வந்தாய்' என அன்புடன் வினவும் திருக்குறிப்புடன் கூத்தப் பெருமான் நாவுக்கரசர்க்குக் காட்சி கொடுத்தருளினார். இத் திருவருட் குறிப்பினைக் கருநட்ட கண்டனை' என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகத்தில்,

"ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லைக்
கன்றிய காலனைக் காலாற் கடித்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம்
'என்று வந்தாய்' எனும் எம்பெரு மான்றன் திருக்குறிப்பே"

எனவரும் திருவிருத்தத்திற் குறித்துள்ளமை காணலாம். தம்மை நோக்கி' என்று வந்தாய் என இறைவன் வினவிய வினாவுக்கு விடை கூறுவார் போல,

"பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ
எத்தினாற் பத்திசெய்கேன் என்னைநீ யிகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை யம்பலத் தாடுகின்ற
அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே"

எனவரும் திருநேரிசையினையும், 'அன்னம் பாலிக்கும்' என்னும் திருக்குறுந் தொகையினையும் பாடிப் போற்றினார். பின்பு திருவேட்களம் திருக்கழிப்பாலை முதலிய தலங்களை வணங்கிப் 'பனைக்கை மும்மத வேழ முரித்தவன்' என்னுந் திருக்குறுந் தொகையினைப் பாடித் தில்லையை யடைந்தார். 'அரியானை அந்தணர்தஞ் சிந்தையானை' என்னும் பெரிய திருத்தாண்டகம் பாடி அம்பலவரை வணங்கிச் 'செஞ்சடைக் கற்றை முற்றத் திள நிலா வெறிக்குஞ் சென்னி' என்னும் திருநேரிசையையும், 'பாளையுடைக் கமுகோங்கி' எனனும் திருவிருத்தத்தினையும் பாடிப் போற்றினார்.

"குனித்த புருவமுங் கொவ்வைச்
செவ்வாயிற் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும் பவளம்போல்
மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற்
பாதமுங் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
யிந்த மாநிலத்தே"

எனவும்

"வாய்த்தது நந்தமக் கீதோர்பிறவி மதித்திடுமின்"

எனவும் வரும் திருப்பாடல்களில் தில்லையைக்கண்டு வழிபடுதலே மக்கட்பிறப்பின் மேலான பயன் எனவும் இப்பயனைப் பெறுதற்குச் சாதனமாகிய இப்பிறப்பினை மதித்துப் போற்றுதல் வேண்டும் எனவும் அப்பரடிகள் அறிவுறுத்திய திறம் நினைந்து போற்றுதற்குரியதாகும். இறைவன் கோயில் கொண்டருளிய எல்லாத் தளங்களிலும் மிகவும் பெருமை வாய்ந்தது இத்தில்லைத் தலமே என்பதனைப் "பெருமை நன்றுடைய தில்லை" (4-57-4) எனவரும் தொடரில் நாவுக்கரசர் குறித்துள்ளமை அறியத் தகுவதாகும். சிவபெருமான் பல்வேறு தலங்களிற் கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பினும் அம் முதல்வனுடைய திருவருட்கலைகள் யாவும் ஒருங்கேபுக்கு ஒடுங்கி, நிற்கும் பொது நிலையம், இறைவன் அருட்கூத்தியற்றும் புலியூர்ச் சிற்றம்பலமே என்னும் உண்மையினை உணர்த்தும் முறையில் தாண்டகவேந்தர் அருளிய திருப்பதிகம் 'மங்குல் மதி தவழும்' எனத் தொடங்கும் புக்க திருத்தாண்டகமாகும்.

"காரார் கமழ்கொன்றைக் கண்ணி சூடிக்
கபாலங் கையேந்திக் கங்காளராய்
ஊராரிடுபிச்சை கொண்டு ழலும்
உத்தமராய் நின்ற ஒருவனார் தாம்
சீரார் கழல் வணங்கும் தேவதேவர்
திருவாரூர்த் திரு மூலட்டான மேயார்
போரார் விடையேறிப் பூதஞ்சூழப்
புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே" (6--2-5)

என வரும் புக்க திருத்தாண்டகப்பாடல், திருவாரூர் முதலிய திருத்தலங்கள் எல்லாவற்றிலும் கோயில் கொண்டெழுந்தருளிய இறைவன் தில்லைச் சிற்றம் பலத்திலே, புகுந்து நள்ளிரவில் நட்டம் பயின்றாடுத்திறத்தினைப் புலப்படுத்தல் காணலாம். இறைவனுடைய எல்லாக்கலைகளும் நள்ளிரவில் தில்லையம்பலத்தில் ஒடுங்க இறைவன் ஆடல்புரிந்தருளுதல் பற்றியே தில்லைப்பெருங்கோயிலில் அர்த்தயாம வழிபாடு மிகவும் சிறப்புடையதாகப் போற்றப் பெற்று வருகின்றது.

சுந்தரர்

நம்பியாரூரராகிய சுந்தரர், தில்லைப்பதியை யடைந்து இறைவனது திருக்கூத்தினைக் கண்டு வணங்கி மனிதப்பிறவியே அடியேற்கு வாலிதாம் இன்பத்தை வழங்கியது எனக் கண்களில் நீர் சொரியக் கசிந்து அறிவரும் பதிகமாகிய சொன்மாலையாற் பரவிப் போற்றினார். சுந்தரர் கொங்கு நாட்டிற் பாண்டிக் கொடுமுடி முதலிய தலங்களைப் பணிந்து காஞ்சியாற்றின் கரையிலுள்ள பேருர்த் திருக்கோயிலை யடைந்தபோது, பேருர்ப் பெருமான் தில்லை மன்றுள் நின்றாடுந் தமது திருக்கோலத்துடன் காட்சி கொடுத்தருளினார். அத்தெய்வக் காட்சியைக்கண்ட சுந்தரர், 'தில்லையம்பலவன் திருக்கூத்தினைக் கண்டு கும்பிடப் பெற்றால் இனிப் புறம்போய்ப் பெறுதற்கு, யாதுளது' என்று கூறிப் பேரூரினின்றும் புறப்பட்டுப் பல தலங்களையும் பாடிப்

பரவித் தில்லைப்பதியை யடைந்து கூத்தப்பெருமானை ஆர்வமுறக் கண்டு தொழுதார். 'நன்னெறியில் ஒழுகியவர்கள் வழுவி நரகினை யடைந்து துன்புறாதபடி தடுத்தாட் கொள்ள வல்ல இறைவனை நமக்கு உரிமையாகப் பெற்றோம்' எனத் தம் நெஞ்சத்திற்கு அறிவுறுத்தும் முறையில் "மடித்தாடும் அடிமைக்க ணன்றியே" என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். அப்பதிகத் திருக்கடைக் காப்பில் 'மீ கொங்கில் அணிகாஞ்சிவாய்ப் பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாமன்றே' எனத் தில்லையம்பலவன் கொங்கு நாட்டுப் பேரூரில் தமக்கு ஆடற்கோலம் காட்டியருளிய திறத்தைக் குறிப்பிட்டுள்ளமை காணலாம்.

பேரூர் இறைவன் தம்பொருட்டுத் தில்லைத்திருநடனத்தைக் காட்டியருளினமையால் அத்தலத்திறைவனைக் "குடகத் தி(ல்)லையம்பலவாணன்" (7-10-2) என நம்பியாரூரர் - குறித் துள்ளமையும் இங்கு நினைக்கத் தகுவதாகும். பேரூர் மேலைச் சிதம்பரம் எனவழங்குதற்கும் இந்நிகழ்ச்சியே காரணமாகும்.

'கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை' எனவும், செல்வர்வாழ்தில்லை, விழவாரணிதில்லை, சீலத்தார் தொழு தேத்து சிற்றம்பலம், தில்லைமாநகர்ச் சிற்றம்பலம், கற்றவர் தொழுதேத்து சிற்றம்பலம், தூய செம் பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலம், தேரினார் மறுகில் திருவாரணிதில்லை' எனவும் புலியூர்ச் சிற்றம்பலம் எனவும் தேவாரத் திருமுறைகளில் இத்தலம் போற்றப் பெற்றுள்ளது.

மணிவாசகர்

திருவாதவூர்மகிழ் செழுமறை முனிவராகிய மனிவாசகப் பெருமான், திருப்பெருந்துறையிற் குருவாய் வந்தருளிய இறைவன் 'நலமலி தில்லையுட் கோலமார் தரு பொதுவினில் வருக' எனப் பணித்த வண்ணம் தில்லைப்பதியை யடைந்து, கூத்தப் பெருமானை அழகிய மணி வார்த்தைகளால் பாடிப்பரவி புத்தரை வாதில் வென்று தவச்சாலையில் தங்கியிருந்தார். அப்போது. இறைவனே மறை முனிவராகி வந்து திருவாசகம் முழுதையும் எழுதிக் கொண்டதுடன் தில்லைச் சிற்றம்பலவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அகப்பொருட் கோவை யொன்று பாடித்தருக' எனக்கேட்டு அதனையும் எழுதிக் கொண்டு திருவாதவூரன் சொல்ல அழகிய திருச்சிற்றம்பலமுடையார் எழுதியது' எனத் தமது கைச்சாத்திட்டுத் தில்லையம்பலத்தில் வைத்து மறைத்தருளினார். அவ்வேட்டினைக் கண்டு வியப்புற்ற தில்லைவாழந்தணர்களும் அடியார்களும் திருவாதவூரடிகளையடைந்து அதற்குப் பொருள் விரித்தருளும்படி வேண்டினர். அடிகளார் அவர்களுடன் தில்லைப் பொன்னம்பலத்தையடைந்து 'திருவாசகத்துக்குப் பொருளாவார் தில்லை யம்பலவரே' எனச் சுட்டிக்காட்டி எல்லோரும் காணத் தில்லை யம்பலத்துட்புக்கு மறைந்தருளினார் என்பது வரலாறு. எனவே எட்டாந்திருமுறையாகிய திருவாசமும் கோவைத்திருவாசகமும் தில்லைச் சிற்றம்பலத்துடன் நெருங்கிய தொடர்புடைய பனுவல்கள் என்பது நன்கு பெறப்படும்.

திருவாசகம், சிவபுராணம் முதல் அச்சோப்பதிகம் ஈறாக ஐம்பத்தொரு பகுதிகளையுடையது. அவற்றுள் இருபத்து நான்கு பகுதிகள் தில்லையில் அருளிச் செய்யப்பெற்றன. திருச்சிற்றம்பலக் கோவை முழுவதும் தில்லைச் சிற்றம்பலவனைப் போற்றும் தோத்திரமாகவும், அகனைந்திணைப்பொருளை நாடகமாக விரித்துக்கூறும் அகப்பொருளிலக்கியமாகவும் அமைந்துள்ளது. முத்திநெறியாகிய பேரின்ப நிலையினையடைதற்குச் சாதனமாகிய பத்திநெறியின் இலக்கியமாகத் திகழ்வது திருவாசகம். உலகியல் வாழ்வுக்கு இன்றியமையாத ஒருவன் ஒருத்தியின் இன்ப அன்பினை வளர்க்கும் அகத்திணை யொழுகலாற்றை விரித்துக் கூறமுகமாகப் பத்தி நெறியின் பயனாகிய முத்தி நெறியின் வெற்றியினை உவமை வாயிலாக உய்த்துணர வைப்பது திருச்சிற்றம்பலக் கோவை.

தில்லைப் பொன்னம்பலத்திலே சிவபெருமான் தென் திசை நோக்கி ஆடல் பரிந்தருளும் திறத்தினைத்' தென்பாலுகந்தாடுந் தில்லைச் சிற்றம்பலவன்' எனவும், 'தென்மாத்திசை வசை தீர் தரத்தில்லைச் சிற்றம்பலத்துள் என்மாத் தலைக்கழல் வைத்தெரி யாடும் இறை' எனவும் வரும் தொடர்களாலும், பதஞ்சலி முனிவர் வேண்டு கோட்கிணங்கித் தில்லையில் இறைவன் ஆடல் காட்டியருளும் அற்புத நிகழ்ச்சியைப் 'பதஞ்சலிக்கருளிய பரம நாடக' எனவும், நாகந்தொழ எழில் அம்பலம் நண்ணி நடநவில் வோன்' எனவும் வரும் தொடர்களாலும் திருவாதவூரடிகள் போற்றியுள்ளார். தில்லையில் அந்தணர் மூலாயிரவர் குழுமிக் கூத்தப் பிரானை வழிபடும் முறைமையினையும், தம் காலத்தில் தில்லையம்பலத் திருமுற்றத்தே திருமால் அறிதுயிலமர்ந்த கோலத்தில் இடம் பெற்றிருந்த செய்தியினையும், திருக்கோவையில் அடிகள் குறித்துள்ளமை காணலாம்.

திருவிசைப்பா ஆசிரியர்கள்

திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர் பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள் திருவாலியமுதர், புருடோத்தமநம்பி, சேதிராயர் என்னும் ஒன்பதின்மரும் பாடிய திருவிசைப்பாப் பதிகங்கள் இருபத்தெட்டும் திருப்பல்லாண்டுப் பதிகம் ஒன்றும் ஆக இருபத்தொன்பது திருப்பதிகங்களின் தொகுதி ஒன்பதாந்திருமுறை யாகும். இவற்றுள் தில்லைச் சிற்றம்பலத்திற்கு மட்டும் பதினாறு பதிகங்கள் உள்ளன. அவற்றுள் சேந்தனார் பாடிய திருபல்லாண்டுத் திருப்பதிகம் 'மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள்' எனத் தில்லைமா நகரையும் அங்கு வந்து இறைவனை வழிபடும் சிவனடியார்களையும் வாழ்த்தித் தொடங்குகின்றது.

தில்லையில் தங்கி விறகு விற்பதனால் வரும் ஊதியத்தைக் கொண்டு நாள்தோறும் அடியார்களுக்கு உணவளிக்கும் கடமையை மேற்கொண்டு வாழ்ந்தவர் சேந்தனார் ஆவர். பலநாட்கள் தொடர்ந்து மழை பெய்தமையால் பசியால் வருத்தமுற்ற சேந்தனார், விறகு விற்றுக்கிடைத்த மாவைத்தம் மனைவிகையிற் கொடுத்து, களியாக்கச் செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். சில பெருமானே. 'முதுமைப்பருவமுடைய அடியாராகச் சேந்தனார் இல்லத்திற்கு எழுந்தருளி, அவர் அன்பினால் அளித்த களியமுதை உண்டு மகிழ்ந்து, அடுத்த வேளைக்கு வேண்டும் என்பாராய் எஞ்சியகளியையும் பழங்கந்தையில் முடிந்துகொண்டு பொன்னம்பலத்தை அடைந்தார். இஃது இவ்வாறாக தில்லையில் கூத்தப்பெருமானுக்குத் தான் நடத்தும் நாள் வழிபாட்டில் பெருமானது திருவடிச்சிலம்பொலி கேட்டு மகிழ்வதை நியதியாகக் கொண்ட சோழமன்னன், அன்றிரவு முழுதும் காத்திருந்தும் அவ்வொலியைக் கேட்கப் பெறாது வருந்தித் துயில்கொண்டான். நடராசப் பெருமான் மன்னனது கனவிலே தோன்றி, "வேந்தனே, கவலைப்படாதே இன்று நாம் சேந்தனளித்த களியமுதை உண்ணச் சென்றமையால், நீ நடத்தும் பூசைக்குவரத் தாழ்த்தோம்" என்று கூறி மறைந்தருளினார். விழிப்புற்று சோழ மன்னன் சேந்தனாரைக் காண விரும்பி விடியற்காலத்திலேயே தில்லைப்பெருமானை வணங்கச் சென்றான். பொன்னம்பலத்தில் களியமுது சிந்திக் கிடப்பதைக்கண்ட வேந்தன், தான் இரவிற் கண்ட கனவின் உண்மையைத், தில்லை வாழந்தணர் பலர்க்கும் தெரிவித்தான். அதனை யுணர்ந்த பலரும் சேந்தனாராகிய அவ்வடியவர்யார் என்பதனை அறிந்து கொள்ளப் பெரிதும் விரும்பினார்கள்.

மார்கழித்திருலாதிரைத் திருவிழா விழாவில், மழை பெய்தமையால் தில்லையில் திருத்தேர் சேற்றிலழுந்தி ஓடாது தடை பட்டு நின்றது. அப்பொழுது, "சேந்தனே, திருத்தேர் ஓடப் பல்லாண்டு பாடுக', என்றதொரு வானொலி யாவரும் கேட்கத் தோன்றியது. அங்கு, தேரிழுக்கும் அடியார் குழுவில் நின்ற சேந்தனார், “மன்னுகதில்லை வளர்கநம் பக்தர்கள்'எனத் தொடங்கும் திருப்பல்லாண்டுத் திருப்பதிகத்தைப் பாடினார். வடம் பிடிக்காமலே, தேர் திருவீதியில் ஓடி நிலைக்கு வந்து சேர்ந்தது. இவ் வற்புதத்தைக் கண்டார் அனைவரும் சேந்தனாரது பேரன்பின் திறத்தையும் அவர் பொருட்டுக் கூத்தப் பெருமான் நிகழ்த்திய அருட்செயலையும் எண்ணி யெண்ணி நெஞ்சம் நெக்குருகினர். பறையர் குலத்தவராகிய சேந்தனார்க்கு இறைவன் அருள் செய்த இந் நிகழ்ச்சியை,

"பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப் பொலிசெம்பொ னம்பலத்து
வேந்தன் றனக்கன்றி யாட்செய்வ தென்னே விரிதுணிமே
லாந்தண் பழைய அவிழையன் பாகிய பண்டைப் பறைச் -
சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர் தாகியதே"

என நம்பியாண்டார் நம்பிகளும்,


"அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை
அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க - அவிழ்ந்தசடை
வேந்தனார்க் கின்னமுத மாயிற்றே மெய்யன்பிற்
சேந்தனார் செய்த செயல்"

எனவரும் திருக்களிற்றுப் படியாரில் உய்யவந்ததேவ நாயனாரும் - முறையே பரவிப் போற்றியுள்ளார்கள்.


ஐயடிகள் காடவர் கோன் நாயனார்

பல்லவர் மரபிலே தோன்றித் தொண்டை நாட்டையாண்ட வேந்தர் பெருமான் காடவர் கோன் என்பார் அரச பதவியை மைந்தரிடம் ஒப்படைத்துத் துறவு பூண்டு தில்லைச் சிற்றம்பலம் முதலிய ஒவ்வொரு திருக்கோயிலையும் ஒவ்வொரு வெண்பாவினாற் பாடிப் போற்றினார். ஐயடிகள் காடவர் கோன் நாயனார் பாடிய க்ஷேத்திரத் திருவெண்பாவின் முதற்பாடல்,

"ஓடுகின்ற நீர்மை யொழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று-நாடுகின்ற .
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்"

என்பதாகும்.

சேரமான் பெருமாள்

நம்பியாரூரார்க்குத் தோழராய்க் களையாவுடலோடு கயிலை சென்ற சேரமான் பெருமாள் நாயனார், தில்லைத் திருக்கூத்தினைக் கண்டு மகிழ்ந்த நிலையிற் பாடிப் பரவிய செந்தமிழ்ப் பனுவல் பொன்வண்ணத் தந்தாதி என்பதாகும். பொன்னார் மேனியனாகிய இறைவனைக் கண்டு காதலித்த தலைவியொருத்தி அவனையடையப் பெறாமையால் வருந்தித் தன்னுடம்பிற் பொன் போலும் பசலை நிறம் பரவத் தானும் தன் தலைவனும் பொன் வண்ணமாகிய உருவொப்புமை பெற்று விளங்கும் தன்மையினைக் கூறுவதாக அமைந்தது. 

"பொன்வண்ணம் எவ்வண்ணம்
அவ்வண்ணம் மேனி பொந்திலங்கும்
மின் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக் குன்றந்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக்கண்ட
என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ண
மாகிய ஈசனுக்கே.”

எனவரும் இவ்வந்தாதியின் முதற்பாடலாகும். இத்திருவந்தாதியின் முதற்பாடல் பொன்வண்ணம் எனத் தொடங்கி நூறாவது செய்யுள் பொன்வண்ணமே என முடிந்து அந்தாதியாய் அமைதலின், இது பொன் வண்னத்தந்தாதி யென்னும் பெயருடையதாயிற்று.

நக்கீரதேவ நாயனார்

"கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு, அருளிய திருமுகத் தழகுறு சிறுநகை இறைவன்” எனவும், ஊன்புக்க வேற் காளியின் கோபந்தவிரத் தேன்புக்க தண்பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன் தான்புக்கு நட்டம்பயிலும் எனவும் வரும் திருவாசகத்தை அடியொற்றிய நிலையில் நக்கீர தேவ நாயனார்

"தாரகன் தன் மார்பிற் றனிச்சூலம் - வீரங்
கொடுத்தெரியு மாகாளி கோபந் தவிர
எடுத்த நடத்தியல்பு போற்றி"

எனப் போற்றித் திருக்கவி வெண்பாவில் இறைவனது திருநடனத்தைப் பரவிப் போற்றியுள்ளார்.

பரணதேவநாயனார்

"ஆங்குரைக்க லாம்பொன் மலர்ப்பாத மஃதன்றே
பாங்குரைக்க லாம்பொன் னணிதில்லை - யாங்குரைத்த
அம்பலத்தும் அண்டத்தும் அப்பாலு மாய்நின்ற
அம்பரத்தும் அண்டத்து மாம்" (சிவ -17)

எனவும்,

சிவபெருமான் திருவந்தாதியில் தில்லைப்பெருமானைப் போற்றியுள்ளார்.

“அடுத்தபொன் னம்பலமே சார்வும் அதனுள்
அடுத்த திருநட்ட மதுவே” (சிவ-26)

எனவும்,

"ஆர் துணையா ஆங்கிருப்ப தம்பலவர்" (சிவ--45)

எனவும் சிவபெருமான் திருவந்தாதியில் தில்லைப்பெருமானைப் போற்றியுள்ளார்.

திருவெண்காட்டடிகள்

சிவநெறிச் செல்வர்களால் எத்தகைய அடைமொழியுமின்றிக் கோயில் எனப் போற்றப்பெறும் சிறப்புடையது தில்லைச்சிற்றம்பலம். திருவெண்காட்டடிகள், வெண்பா, கலித்துறை விருத்தம், அகவல் என்னும் நால்வகைப் பாக்களும் ஒன்றன் பின் ஒன்றாக அந்தாதியாகத் தொடுத்து வர நால்வகை மணிகளால் தொடுக்கப்பட்ட மாலை போன்று பாடிய பனுவல் கோயில் நான்மணிமாலை என்பதாகும். பதினோராந் திருமுறையில் அமைந்த இதன் பாடல்கள் யாவும் தில்லைப் பெருமானைப் போற்றிப்பரவும் தோத்திரமாகவும் சைவ சித்தாந்த நுண் பொருள்களைத் தெள்ளிதின் விளக்கும் சாத்திர மாகவும் விளங்குகின்றன.

நம்பியாண்டார் நம்பிகள்

கோயிலாகிய தில்லைச் சிற்றம்பலத்திலே அருட்கூத்தியற்றும் அம்பலவாணரைப் பண்ணார்ந்த விருத்தமாகிய கட்டளைக் கலித்துறையால் நம்பியாண்டார் நம்பி பரவிப் போற்றிய செந்தமிழ்ப்பனுவல் கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்பதாகும். பண்ணோடியன்ற பாடல் என்ற பொருளுடையது 'பண்ணியல் விருத்தம்' என்றதொடர். லகரத்திற்கு ரகரம் போலியாய்ப் பண்ணியர் விருத்தம் என்றாயிற்று: இனி, 'கோயில் திருப்பண்ணியர்' என்ற தொடர்க்குத் 'தில்லைப் பெருங்கோயிலில் திருத்தகவினதாகிய அருட்கூத்தினை நிகழ்த்தி யருளுபவர்' எனப் பொருள் கொண்டு கூத்தப் பெருமானைப் பரவிய விருத்தம் எனப் பொருளுரைத்தற்கும் இடமுண்டு. திரு நாரையூரில் ஆதிசைவக் குடும்பத்தில் தோன்றிய பொல்லாப் பிள்ளையார் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் அபய குலசேகர சோழ மன்னன் வேண்டிய வண்ணம் தில்லையில் தேவாரத்திருமுறைகள் இருக்குமிடத்தைத் தெரிவித்து, திருமுறைகளை முன்போல வருத்தருளினார். திருத்தொண்டர் திருவந்தாதி பாடியதுடன் சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெற்ற அடியார் வரலாறுகளை வகுத்துரைக்கும் முறையில் திருக்கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தால் கூத்தப் பெருமானைப் பரவிப் போற்றினார் என்பது திருமுறை கண்ட வரலாறாகும்.

சேக்கிழார் நாயனார்

அருண்மொழித் தேவராகிய சேக்கிழார் பெருமான் அநபாய சோழன் விரும்பியவண்ணம் தில்லைப்பதியையடைந்து பொன்னம்பலவாணரை வழிபட்டு 'உலகெலாம்' என அம்பலவர் - அருளிய மெய்ம் மொழியை முதலாகக்கொண்டு,

உலகெலா முணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்'
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

என அம்பலவாணரை வாழ்த்தி வணங்கித் திருத்தொண்டர் புராணமாகிய வரலாற்றுக் காப்பியத்தினைத் தில்லைப்பதியில் தங்கிப்பாடி முடித்தருளினார். இவ்வரலாற்றை உமாபதிசிவம் தாம் இயற்றிய சேக்கிழார் நாயனார் புராணத்தில் விரித்துக் கூறியுள்ளமை இங்கு உணர்தற்குரியதாகும்.

‘பத்திச்சுவை நனி சொட்டச்சொட்டப் பாடிய கவிவல்லவராகிய சேக்கிழார் நாயனார் தில்லைவாழந்தணர் புராணத் தொடக்கத்தில்,

"ஆதியாய் நடுவுமாகி அளவிலா அளவுமாகிச்
சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப்
பேதியா ஏகமாகிப் பெண்ணுமாய் ஆணுமாகிப்
போதியா நிற்குந்தில்லைப் பொதுநடம் போற்றிபோற்றி"

எனத் தில்லைத் திருக்கூத்தினைப் பரவிப் போற்றுகின்றார். இத்திருப்பாடலும் இதனையடுத்துவரும் கற்பனை கடந்த. சோதி என்ற முதற்குறிப்புடைய திருப்பாடலும் எல்லாம் வல்ல இறைவனது உண்மையிலக்கணத்தினையும், அம்முதல்வன் மன்னுயிர்கள் உய்திபெறத் தில்லைத் திருவளர் திருச்சிற்றம்பலத்தில் நிகழ்த்தியருளும் அற்புதத்திருக்கூத்தின் நுட்பத்தினையும் நன்கு புலப்படுத்துவனவாகும்.

தில்லைநகர் சிறப்புடைத்தாகத் திருமுடிசூடிய இரண்டாங் குலோத்துங்க சோழமன்னன் காலத்தில் வாழ்ந்த அருண் மொழித் தேவர், தம்காலத்து மருதத்தண்பணையும் தாமரை மலர்ந்த ஓடையும் திருநந்தவனமும் சோலைகளும் மதிலும் புறத்தே சூழப்பெற்று, எழுநிலைக் கோபுரங்களையுடையதாய் அழகிய திருவீதியினைப் பெற்று விளங்கிய தில்லைமா நகரின் எழில் நிலத்தினைத் தடுத்தாட்கொண்ட புராணத்திலும் திருநாவுக்கரசு நாயனார் புராணத்திலும் திருஞானசம்பந்தர் புராணத்திலும் சொல்லோவியஞ்செய்து காட்டியுள்ளார். 'நம்பியாரூரர் வடதிசை வாயிலாகவும், திருநாவுக்கரசர் மேற்றிசைவாயிலாக வும், ஆளுடைய பிள்ளையார் தென் திசைவாயிலாகவும் தில்லைப்பதியையடைந்த வழியமைப்பினைச் சேக்கிழாரடிகள் தெளிவாகக் குறித்துள்ளமை காணலாம்.

உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனும் அளவில்லாத பேரொளியினனும் ஆகிய இறைவன் ஆடல்புரிந்தருளும் ஞான நிலையமாகிய திருவளர் திருச்சிற்றம்பலம், அருமறைகளின் முதலிலும் நடுவிலும் கடையிலும் அன்பர்கள் சிந்தையிலும் விரிந்து விளங்கும் திருவளரும் ஒளியினாற் சூழப் பெற்றுத் தூய செம்பொன்னினால் {திருவைந்தெழுத்து) எழுதிவேய்ந்த சிறப்பினை உடையதாகும். இந்நுட்பத்தினை,

"அருமறை முதலில் நடுவினிற் கடையில் -
அன்பர்தம் சிந்தையில் அலர்ந்த
திருவளர் ஒளிசூழ் திருச் சிற்றம்பலம்."

(பெரிய - தடுத்தாட் - 104)

என வரும் தொடரில் சேக்கிழார் நாயனார் புலப்படுத்திய திறம் நினைந்து போற்றுதற்குரியதாகும்.

சோழமன்னனுக்கு அமைச்சுரிமை பூண்ட சேக்கிழார், அம் மன்னனது வேண்டுகோட் கிணங்கித் தில்லைப்பதியையடைந்து கூத்தப்பெருமானை இறைஞ்சிப் போற்றி அப்பெருமான் 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுக்க அதனை முதலாகக் கொண்டு திருத்தொண்டர் புராணமாகிய பெருங்காப்பியத்தை இயற்றித் தில்லைக் கோயிலிலுள்ள ஆயிரக்கால் மண்டபத்திற் கூடியிருந்த புனிதர் பேரவையிலே அரங்கேற்றியருளினார். அவ்வரங்கேற்றத்தினைக் கண்டு மகிழ்ந்த அநபாய சோழன் சேக்கிழாரடிகட்குத் தொண்டர் சீர் பரவுவார் என்னுந் திருப் பெயர் சூட்டி இறைஞ்சிப் போற்றினான். தொண்டர் சீர்பரவுவாராகிய சேக்கிழார் பெருமான் தில்லை நகரிலேயே தங்கியிருந்து திருத்தொண்டத் தொகையடியார்களின் பெருமையினைச் சிந்தித்துப் போற்றித் தவநிலையில் அமர்ந்து அம்பலவாணரது தூக்கிய திருவடி நீழலையடைந்து இன்புற்றார்.

தில்லைவாழந்தணர்

திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெறும் திருக்கூட்டத்தார் ஒன்பதின்மருள் முதலிற்போற்றிய, கூட்டத்தவராகிய இவர்கள் மூவாயிரவர் என்னுந்தொகையினர். கூத்தப்பெருமானுக்கு உரிமைத்தொழில் பூண்டுவாழும் இவ்வந்தணர்கள் தில்லைத் திருக்கோயிலினுள்ளே இறைவன் பூசனைக்குரிய அகத் தொண்டுகளைச் செய்து வாழ்பவர்கள்; நான்கு வேதங்களையும் ஆறங்கங்களையும் உணர்ந்தவர்கள்; முத்தீ வளர்த்து வேள்வி செய்பவர்கள்; அறுதொழில் ஆட்சியினாலே வறுமையை நீக்கியவர்கள்; திருநீறு உருத்திராக்கம் பூண்டு சிற்றம்பல மேய செல்வன் கழலேத்தும் செல்வத்தையே உயர்ந்த செல்வமாகக் கொண்டவர்கள் தங்கள் வாழ்வாகவும் வைப்பாகவும் தில்லையிற் கூத்தப் பெருமானை வழிபட்டு உலகெலாம் புகழும் வண்ணம் மானமும் பொறையுந் தாங்கிமனையறம் புரிந்து வாழ்பவர்கள். எனச் சேக்கிழாரடிகள் இவ்வந்தணர்களது பெருமையினை விரித்துக் கூறியுள்ளார்.

வேத விதிப்படி வேள்விபுரியும் தில்லை மூவாயிரவராகிய இத்திருக்கூட்டத்தார் தில்லையிற் கூத்தப்பெருமானைக் கண நேரமும் பிரியாது போற்றிவழிபடும் இயல்பினர். படைத்தற் கடவுளாகிய பிரமன் அந்தர்வேதியென்னும் இடத்தில் தான் செய்யும் வேள்விக்கு உடனிருந்து உதவி புரியும்படி வியாக்கிரபாதமுனிவர் இசைவு பெற்றுத் தில்லை மூவாயிரவரை வற்புறுத்தி அழைத்துச் சென்றான். வேள்வி முடிந்தவுடன் இவ்வந்தணர்களையழைத்து வரும்படி இரணியவர்மனிடம் வியாக்கிரபாதர் கூற அவனும் அங்கே சென்று தில்லை மூவாயிரவரையும் தேர்களில் ஏற்றிக்கொண்டு தில்லையை அடைந்தான். தில்லைக்கு வந்த பின் எண்ணிப் பார்த்து மூவாயிரவருள் ஒருவரைக்காணாது திகைத்தனன். அப்பொழுது தில்லையம்பலப் பெருமான் தேவர் முனிவர் முதலிய யாவரும் கேட்ப 'தில்லை மூவாயிரவருக்கு யாமும் ஒப்பாவோம்' என அருளிச் செய்தான் எனவும் அவ்வருள் மொழிகளைக்கேட்டு அங்குள்ளாரனைவரும் அளவிலா மகிழ்ச்சியுற்றனர் எனவும் கோயிற்புராணம் கூறும். தில்லையம்பலவாணராகிய இறைவனோடு ஒத்து ஒன்றி வாழும் சிவயோகநிலை கைவரப் பெற்றவர் தில்லைவாழந்தணர் என்பது மேற்குறித்த புராணச் செய்தியால் இனிது புலனாதல் காணலாம்.

"செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்க ளானார்
மும்மையாயிர வர்தாங்கள் போற்றிட முதல்வனாரை
இம்மையே பெற்று வாழ்வார் இனிப்பெறும் பேறொன்றில்லார்
தம்மையே தமக்கொப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார்
"

{பெரிய-தில்லைவாழ்-8)

எனச் சேக்கிழார் நாயனாரும்

"முத்தீயாளர் நான்மறையர் மூவாயிரவர் நின்னோடு
ஒத்தே வாழுந்தன்மையாளர் ஓதிய நான்மறையைத்
தெத்தேயென்று வண்டுபாடுந் தென் தில்லையம்பலத்துள்
அத்தாவுன்றன் ஆடல் காண அணைவதும் என்றுகொலோ
"

{திருவிசைப்பா -23.3)

எனக் கண்டராதித்தரும் தில்லை மூவாயிரவராகிய இத்திருக் கூட்டத்தாரைப் பற்றிக் கூறிய வாய் மொழிகள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கனவாகும்.

திருநீலகண்டக் குயவனார்

தில்லையில் வேட்கோவர் குலத்திற் பிறந்த இவர், தில்லையம்பலவர் பால் அளவற்ற பேரன்புடையவர். பொய்கடிந்து அறத்தின் வாழும் இவர், வையமம் (பிழை. வையகம்) போற்றும் மனையறத்தினை மேற்கொண்டு சிவனடியார்களுக்குத் திருவோடு அளித்து வந்தார். இளைமீதுார (பிழை. இளைமைமீதூர) இன்பத்துறையில் எளியராகிய இவர் ஒரு பரத்தைபால் அணைந்து வந்தார். அப்பொழுது இவருடைய மனைவியார் ‘எம்மைத் தீண்டுவீராகில் திருநீலகண்டம்’ என இறைவனது திருநீலகண்டத்தின்மேல் ஆணையிட்டுக் கூறினார். அது கேட்ட திருநீலகண்டர் எம்மை என்றதனால் மற்றை மாதரார் தமையும் என்றன் மனத்தினும் தீண்டேன் என உறுதி கூறி அவ்வாணை மொழியினை வழுவாது பாதுகாத்து வாழ்ந்தார். திருநீலகண்டக்குயவரும் அவர் தம் மனைவியாரும் ஐம்புலன்களை வென்ற உளத்திட்பமுடையவர்களாய் மனையறம் ஓம்பி முதுமைப் பருவம் அடைந்தனர். அந்நிலையில் அவர்தம் நெஞ்சத்திட்பத்தினை உலகத்தார்க்கு உணர்த்த எண்ணிய சிவபெருமான் சிவயோகியாராக அவர்களது இல்லத்திற்கு வந்து ஓடொன்றினைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி திருநீலகண்டரிடம் கொடுத்துச் சென்றார். சென்றவர் அவ்வோட்டினை மறையும்படி செய்துவிட்டுச் சில நாள் கழித்துத் திருநீலகண்டரை அடைந்து தாம் கொடுத்த பிச்சைப் பாத்திரமாகிய ஓட்டினைத்தரும் படி வேண்டினார். திருநீலகண்டர் அவ்வோட்டினை வீடுமுழுதும் தேடிப்பார்த்தார். எங்கும் கிடைக்காத நிலையில் பெரிதும் வருத்தமுற்றார். வேறொரு புதுவோடு தருவதாகக் கூறினார். அதுகேட்ட சிவ யோகியார் அவ்வோடு காணவில்லையாயின் 'அதனையான் எடுத்திலேன்' என்று உன் பிள்ளையைக் கைப்பற்றிச் சத்தியம் செய்க என்றார். திருநீலகண்டர் தனக்கு மைந்தன் இல்லையெனக் கூறினார். மனைவி கையைப் பற்றிக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்’ என்றார் சிவயோகியார். 'எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவில்லை’ என்றார் திருநீல கண்டர். இவ்வழக்கு தில்லைவாழந்தணர் கூடியிருந்த சபைக்கு எடுத்துக் கூறப்பெற்றது. இவ்வழக்கினை விசாரித்த தில்லைவாழந்தணர்கள் திருநீலகண்டக் குயவரை நோக்கி, நீர் சிவ யோகியார் சொன்னபடி நும்மனைவியின் கையைப் பற்றிக் குளத்தில் மூழ்கி உறுதி கூறுதலே முறை எனத் தீர்ப்பளித்தனர். திருநீலகண்டரும் 'பொருந்திய வகையால் மூழ்கித் தருகின்றேன்' என்று சொல்லிச் சிவயோகியாருடன் தம் இல்லத்தை யடைந்து தம் மனைவியாரை அழைத்துக் கொண்டு தில்லைத் திருப்புலீச்சரத்தின் முன்னுள்ள குளத்தில் மூழ்குபவர் கோலொன்றினையெடுத்து ஒருமுனையைத் தாமும் மற்றொரு முனையை மனைவியாரும் பற்றிக்கொண்டு, தாம் இருவரும் கைப்பற்றி முழுகுதற்குத் தடையாயுள்ள தங்கள் சபதத்தைச் சிவயோகியார்க்கு எடுத்துரைத்து மூழ்கினார். முதுமைப் பருவத்தினராகிய அவ்விருவரும் குளத்தில் மூழ்கி எழும்போது இறைவனருளால் இளமை பெற்றுத் தோன்றினார்கள். அந்நிலையிற் சிவபெருமான் உமையம்மையாருடன் விடை மேல் தோன்றி அவ்விருவர்க்கும் அருள் புரிந்து மறைந்தருளினார். இவ்வாறு திருநீலகண்டக் குயவனாரும் அவர்மனைவியாரும் இளமை பெற்றுத் திகழச் செய்தமையால் திருப்புலிச்சரப் பெருமான் கோயில் இளமையாக்கினார் கோயில் எனப் பெயர் பெறுவதாயிற்று.

திருநாளைப்போவார் நாயனார்.

நந்தனார் என்னும் இயற்பெயருடைய இவர், மேற்காநாட்டு ஆதனூரில் தீண்டாதார் மரபில் தோன்றியவர்; சிவபெருமான் திருவடிக்கண் பதித்த நெஞ்சுடையவர். இறைவன் புகழ்த் திறங்களை இன்னிசையாற் பாடவல்லவர். இவர் திருப்புன்கூர் சென்று சிவலோகநாதரை நேரே வழிபடவிரும்பியபோது இறைவன் திருவருளால் கோயிற் சந்நிதியிலுள்ள நந்தி விலகியது. சிவலிங்கப் பெருமானை நேரேகண்டு குறிப்பிட்ட நந்தனார், அங்கு ஒரு திருக்குளத்தை வெட்டினார். தில்லைத் திருமன்றத்தில் இறைவன் ஆடியருளும் அற்புதத் திருக்கூத்தினை நேரிற்கண்டு மகிழ எண்ணினார் நந்தனார், அதற்குத் தாம் தீண்டாதார் மரபிற் பிறந்தமை தடையாதலை யெண்ணி நாளைப்போவேன் நாளைப்போவேன் என்று கூறிக்கொண்டிருந்தமையால் இவர் நாளைப்போவார் எனப்பெயர் பெற்றார். ஒருநாள் தில்லைச்சிற்றம்பலத்தைக் கண்டு இறைஞ்ச வேண்டும் என்ற எண்ணம் மீதூர்தலால் தம் ஊரைவிட்டுப் புறப்பட்டார். தில்லைப்பதியையடைந்து வலம்வந்த நந்தனார், தமது பிறப்பின் நிலையினை யெண்ணித் தில்லைக்கோயிலினுள்ளே நுழைதற்கு அஞ்சினார். இறைவன் திருவருளை எண்ணி ஏக்கத்துடன் புறத்தே துயில்கொண்டார். அவர்தம் ஏக்கத்தைப்போக்க எண்ணிய கூத்தப்பெருமான் அவரது கனவில் தோன்றி 'நீ எண்ணியவாறு இப்பிறவி போய் நீங்க வேள்வித்தீயில் மூழ்கி முப்புரி நூல் மார்பராகிய தில்லைவாழந் தணர்களுடன் என்னை அணைவாயாக’ என அருள்புரிந்து தில்லைவாழந்தணர் கனவிலும் தோன்றி வேள்வித்தீயமைக்கும்படி பணித்து மறைந்தருளினார். இப்பொழுது சிதம்பரத்தின் தென்திசையிலே ஓமக்குளம் என வழங்கும் இடத்தில் தில்லை வாழந்தணரும் வேள்வித்தீயமைத்தனர், நந்தனார் அதன்கண் மூழ்கிப் புண்ணிய முனிவராய்ச் சடை முடிதாங்கித் தோன்றினார். தில்லைவாழந்தணர்கள் மறை முனிவராகிய நந்தனாரை வணங்கி அவரைத் தில்லைச்சிற்றம்பலவர் திருமுன் அழைத்துச் சென்றனர். அந்நிலையில் நந்தனார் உலகுய்ய நடமாடும் எல்லையாகிய சிதாகாசப்பெருவெளியிற் கலந்து பேரின்பப் பெருவாழ்வு பெற்றார். அம்பலவர் திருவடியில் கலந்து மறைந்த நந்தனாரை யாவரும் கண்டிலர். தில்லை வாழந்தணர் அதிசயித்தனர். அந்தமிலா ஆனந்தப் பெருங்கூத்தர் தம்திருவடிகளைத் தொழுது இன்புற்றிருக்கும் வண்ணம் நந்தனார்க்குப் பேரருள் புரிந்தார்.

கூற்றுவநாயனார்

இவர் களந்தை (களப்பாள்) என்னும் ஊரிலே குறுநிலமன்னர் குடியிலே தோன்றியவர். பகைவர்களைப் போரில் வென்று சிவபெருமான் திருப்பெயராகிய திருவைந்தெழுத்தினை நாளும் ஓதிச் சிவனடியார்களைப் பணிந்து திருத்தொண்டு புரியும் கூற்றுவராகிய இவர், திருவருளாற்றலால் அரசர் பலரையும் வென்று வாகை சூடினார். முடிவேந்தர்க்குரிய முடியொன்றும் நீங்கலாக எல்லாச் செல்வங்களும் எய்தப் பெற்ற இவர். தில்லைவாழந்தணரை யடைந்து தமக்கு முடிசூட்டும்படி வேண்டினார். 'சோழ மன்னர்க்கன்றி நாங்கள் முடிசூட்ட மாட்டோம் எனக் கூறிய அந்தணர்கள், தங்களுள் ஒருகுடும்பத்தாரை முடியைக்காத்துக் கொள்ளும்படி இருக்கச்செய்து சேர நாட்டை - அடைந்தார்கள். அந்நிலையிற் கூற்றுவனார் தில்லையம்பலப் பெருமானை மனங்கொண்டு 'அடியேன் நின்திருவடிப் போதினை முடியாகப் பெற வேண்டும்' என்று பரவித்துயில் கொண்டார். அந்நிலையிற் கூத்தப்பெருமான் கூற்றுவனாரது கனவில் தோன்றித் தம்முடைய திருவடிகளை முடியாகச் சூட்டியருளினார். சிவனடிகளையே முடியாகச் சூடிய கூற்றுவ நாயனார் தனியாட்சிபுரிந்து உமையொருபாகர் திருவடியை அடைந்தார்.

கணம்புல்ல நாயனார்

இவர் வடவெள்ளாற்றுத் தென்கரையிலே யமைந்த இருக்குவேளுர் என்றவூரிற் பிறந்து அவ்வூர் மக்களுக்குத் தலைவராய் விளங்கியவர். பெருஞ்செல்வராகிய இவர், சிவபெருமான் திருக்கோயிலில் நாள்தோறும் திருவிளக்கு எரிக்கும் பணியினை ஆர்வமுடன் செய்து வந்தார். வறுமை யெய்திய நிலையில் தில்லையை யடைந்து கணம்புல் என்ற ஒருவகைப் புல்லை அரிந்து விற்று அதனாற் கிடைத்த பொருளைக் கொண்டு தில்லையில் திருப்புலீச்சரப் பெருமாள் கோயிலில் திருவிளக்கு எரித்து வந்தார். ஒருநாள் தாம் அரிந்து கொணர்ந்த கணம்புல் விலைக்கு விற்காத நிலையில் அந்தப் புல்லையே கொண்டு திருக்கோயிலின் விளக்காக எரித்தார். யாமம் வரையிலும் அப்புல் விளக்கெரிக்கப் போதாமையால் அதனுடன் தமது சடை முடியினையும் சேர்த்து எரித்தார். அப்பொழுது சிவபெருமான் தோன்றிப்பேரருள் புரிந்தருளக் கணம்புல்லர் சிவலோகத்தை அடைந்தார்.

கோச்செங்கட் சோழநாயனார்

சோழமன்னன் சுபதேவன் என்பான் தன் மனைவி கமலவதியுடன் தில்லையையடைந்து மகப்பேறு வேண்டித் தில்லைச் சிற்றம்பலவரை வழிபட்டு இருந்தான். அதன் பயனாகக் கமலவதி கருவுற்றாள். திருவானைக்காவில் வெண்ணாவலின் கீழ்எழுந்தருளிய சிவபெருமானுக்குப் பந்தரிழைத்து வழிபட்ட சிலந்தி கமலவதியின் கருப்பத்துள் மகவாய்ச் சார்ந்தது. கரு முதிர்ந்து மகப்பெறும் நிலையில் 'இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால் இக் குழந்தை மூன்றுலகமும் ஆளும்' எனச் சோதிடர் கூறினர். அதுகேட்ட கமலவதி 'என் காலைப் பிணித்துத் தலைகீழாக நிறுத்துங்கள்’ என்றாள். குறித்தபடி ஒரு நாழிகை கழித்துக் குழந்தை பிறந்தது. காலநீட்டிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. ஈன்ற தாய் அக்குழந்தையைக் கண்டு “என்கோச் செங்கண்ணானோ" என அருமை தோன்றப் பரிவுடன் கூறி உயிர் துறந்தாள். சுபதேவன் குழந்தையை வளர்த்து முடிசூட்டினான். கோச்செங்கட் சோழர் சிவபெருமானது திருவருளாலே தம் முன்னைப் பிறப்பின் உணர்வோடு திருவானைக்காவற் பெருமானுக்குப் பெருந்திருக் கோயிலமைத்து வழிபட்டார். சோழநாட்டின் அக நாடுகள் தோறும் சிவபெருமானுக்கு மாடக்கோயில் கட்டினார். இவர் சிவபிரானுக்குக் கட்டிய மாடக்கோயில்கள் எழுபது எனவும் இவரே திருமாலுக்குத் திருநறையூரில் மணிமாடம் என்ற திருக்கோயிலைக் கட்டினார் எனவும் திருமங்கையாழ்வார் கூறிப் பாராட்டியுள்ளார்.

கோச்செங்கட்சோழர் திருச்சிற்றம்பலப் பெருமானை வணங்கித் தில்லைவாழந் தணர்கட்குத் தங்கும் மனைகளைக் கட்டிக் கொடுத்தார். அரசியலாட்சியினை இனிது நிகழ்த்தி முடிவில் தில்லையம்பலப் பெருமான் திருவடியினையடைந்து' பேரின்ப முற்றார்.

முதல் வரகுணபாண்டியன்

‘கொற்றவர்கள் தொழுகழற்கால் கோவரகுண மகாராஜன்’ எனப் போற்றப்பெறும் முதல் வரகுண பாண்டியன், சோழ நாட்டையும் தொண்டை நாட்டையும் தன் ஆட்சிக்குட் படுத்திய பெருவேந்தனாவான். இவன் மாணிக்கவாசகர் காலத்தில் வாழ்ந்த பாண்டியன். இவ்வேந்தர் பெருமானை மானிக்கவாசகர் தாம்பாடிய திருச்சிற்றம்பலக் கோவையில் வரகுணனாம் தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் (திருக்கோவையார்-306) எனவும், 'சிற்றம்பலம் புகழும் மயலோங் கிருங்களி யானை வரகுணன' (திருக்கோவையார்-327) எனவும் வரும் தொடர்களில் தில்லையம்பலப் பெருமான் பால் இவன் கொண்டிருந்த பேரன்பினைப் பாராட்டிப் போற்றியுள்ளார். பெரிய அன்பின் வரகுண தேவராகிய இவ்வேந்தர் பெருமான் திருவிடை மருதூரில் தங்கிச் செய்த அன்பின் வழிப்பட்ட செயல்களைப் பட்டினத்தடிகள் தாம்பாடிய திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் எடுத்துரைத்துப் போற்றியுள்ளார். இவ்வேந்தர் பெருமான் திருநீற்றிற் கொண்ட பேரன்பின் திறத்தால் பகைவர் இவன்மேலெய்த அம்புகளெல்லாம் இவன் பாதங்களில் பணிந்து விழ, தில்லையம்பலப்பெருமான் திருவடிகளைத் தன் முடிக்கணிந்து போரில் வெற்றிபெற்றான். இதனை

“பொடியேர் தருமே னியனாகிப் பூசல் புகவடிக்கே
கடிசேர் கணைகுளிப் பக்கண்டு கோயிற் கருவியில்லா
அடியே படவமை யுங்கணை யென்ற வரகுணன்றன்
முடியே தருகழ லம்பத் தாடிதன் மொய் கழலே.”

எனவரும் கோயிற்றிருப்பண்ணிய்ர் விருத்தத்தில், நம்பியாண் டார் நம்பிகள் எடுத்துரைத்துப் போற்றியுள்ளார்.

திருவதிகை மனவாசகங்கடந்தார்.

இவர் மெய்கண்டதேவர் மாணாக்கருள் ஒருவர். தில்லைப் பெருமானை இடைவிடாது சிந்தித்து அம்முதல்வனது ஐந்தொழில் திருக்கூத்தின் இயல்பினைத்தம் ஆசிரியர் மெய்கண்ட தேவர்பாற் கேட்டுணர்ந்தவர். தாம் இயற்றிய உண்மை விளக்கம் என்னும் சைவ சித்தாந்த சாத்திரத்தில் எல்லாம் வல்ல தில்லை யம்பலவாணன் திருவைந் தெழுத்தாகிய மந்திரவுருவில் நின்று மன்னுயிர்கள் உய்தி பெறுதல் வேண்டி ஐந்தொழில் திருக்கூத்து இயற்றியருளும் திறத்தினை உண்மைவிளக்கம் 30 முதல் 38 வரையுள்ள செய்யுட்களில் விரிவாக விளக்கியுள்ளார். இறைவன் செய்யும் ஐந்தொழில்களில் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களும் உலகமாகிய அண்டத்தில் நிகழ்வன. மறைத்தல், அருளல் என்னும் இரண்டும் பிண்டத்தில் வாழும் உயிர்களின் இதயத்திலே நிகழ்வன, உடுக்கையேந்திய கையினாலே மாயையென்னும் பாசத்தை உதறித்தள்ளுதலும், தீயேந்தியகையினாலே வல்வினையைச் சுட்டெரித்தலும், ஊன்றிய திருவடியினலே ஆணவமலத்தின் வலிகெட அதனை அமுக்குதலும், தூக்கிய திருவடியினாலே அருளே தநுவாக ஆன்மாக்களை எடுத்து நிறுத்துதலும் அமைத்த திருக்கையினாலே ஆருயிர்களை ஆனந்த வெள்ளத்துள் அழுந்தித்திளைக்கச் செய்தலும் இறைவனது திருக்கூத்தின முறைமையாதலை,

"மாயை தனையுதறி, வல்வினையைச் சுட்டு, மலம்
சாய அமுக்கி, அருள் தான் எடுத்து-நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
தான் எந்தையார் பரதம் தான்" (உண்மைவிளக்கம் 36)

எனவரும் பாடலில் திருவதிகை மனவாசகங் கடந்தார் விளக்கி யுள்ளமை அறியத்தகுவதாகும். மோனம் என்னும் ஞானவரம்பில் நின்ற பெருமக்களின் மும்மலப்பிணிப்புக்களையும் அறவே நீக்கித் தான் என்னும் ஆன்மபோதம் அழிந்த இடத்திலேயுளதாகும் சிவானந்தத் தேனை முகந்து கொண்டு மன்னுயிர்கள் பருகி மகிழச் செய்தலே அருளே திருமேனியாகக் கொண்ட, தில்லையம்பலவாணர் நிகழ்த்தியருளும் ஆனந்தத்திருக்கூத்தின் பயனாகும் என்பதனை அறிவுறுத்துவது,

“மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்
தானந்த மானிடத்தே தங்கியிடும்-ஆனந்தம்
மொண்டருந்தி நின்றாடல் காணும் அருள் மூர்த்தியாக்
கொண்டதிரு வம்பலத்தான் கூத்து"

எனவரும் உண்மை விளக்க வெண்பாவாகும்.

தில்லை வாழந்தணர் மரபில் தோன்றிய சைவ சமய சந்தான குரவருள் மூன்றாமவராகிய மறைஞான சம்பந்தரால் ஆட் கொள்ளப்பெற்றவர் உமாபதி சிவாச்சாரியார் ஆவார். சந்தான குரவருள் நாலாமவராகப் போற்றப் பெறும் இவர், கோயிற் புராணம், திருமுறைகண்ட புராணம், சேக்கிழார் புராணம் முதலிய இலக்கியங்களையும், சிவப்பிரகாசம் முதல் சங்கற்ப நிராகரணம் ஈறாகவுள்ள - சித்தாந்த சாத்திரங்களெட்டையும் இயற்றியவர்: வடமொழியில் இவரியற்றிய பல நூல்களுள் பவுஷ்கர ஆகமத்திற்கு எழுதிய பேருரை இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். தில்லைக்குக் கிழக்கேயுள்ள கொற்றவன் குடியில் தங்கியிருந்து மாணவர் பலர்க்கும் தீக்கை செய்து சிவநெறியைப் பரப்பியவர்; தில்லை அம்பலவாணர் பெத்தான் சாம்பான் பொருட்டுப் பாடிக் கொடுத்த


“அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங்
குடியார்க் கெழுதியகைச் சீட்டு--படியின் மிசைப்
பெத்தான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கை செய்து
முத்தி கொடுக்க முறை"

எனவரும்

வெண்பாவினைப்பெற்று அவனுக்கு சாதிவேறு பாடறத் தீக்கை செய்து வீடுபேற்று நிலையை வழங்கியவர்; தில்லைத் திருவிழாவில் கொடியேறத் தடை யேற்பட்டபொழுது, கொடிக்கவி பாடி, கொடிதானே ஏறும்படி செய்து சித்தாந்தச் செந்நெறியைப் பரப்பியவர்.

அருணகிரி நாதர்: முருகப்பெருமானது திருவருளைப் பெற்ற அருணகிரிநாதர், தில்லை எழுநிலைக் கோபுரங்களிலும் தில்லை யம்பலத்தின்கண்ணும் எழுந்தருளிய முருகப்பெருமானைத் திருப்புகழ்ப் பனுவல்களாற்பாடிப் போற்றியுள்ளார்.

இரட்டைப்புலவர்கள்: இளஞ்சூரியர் முதுசூரியர் எனப்படும் இரட்டைப்புலவர்கள் தில்லைக்கலம்பகம் பாடிக் கூத்தப்பெருமானது திருவருளைப் பெற்றுள்ளார்கள்.

குருஞான சம்பந்தர்: தருமபுர ஆதீனத்தின் முதற் குரவராகிய குருஞான சம்பந்தர், தில்லையில் கூத்தப்பெருமானை வழிபட்டு ஆயிரக்கால் மண்டபத்தில் இரவில் நிட்டை கூடியிருந்த பொழுது, சிவகாமியம்மையார். வெள்ளிக்கிண்ணத்தில் பாயசத்தையும் பொற்கிண்ணத்தில் திருவமுதையும் பருகும் நீரையும் கொணர்ந்து, நள்ளிரவில் அவர்தம் பசியை நீக்கியருளினார். கூத்தப் பெருமான் அருள்பெற்ற குருஞானசம்பந்தர் சிவபோக சாரம் முதலிய எட்டு நூல்களை இயற்றியுள்ளார்.

கண்கட்டி மறைஞான சம்பந்தர்: சிதம்பரத்தில் குகைமடம் என்னும் ஒரு மடத்தை நிறுவி அம்மடத்திற்றங்கியிருந்து, சிவ தரு மோத்தரம், சைவசமய நெறி முதலிய பல நூல்களையியற்றிக் கூத்தப்பெருமான் திருவருளைப் பெற்றவர்.

புராணத் திருமலைநாதர்: தில்லையிற் பிறந்த இவர், தில்லை வாழந்தணர்கள் வேண்டுகோட்கிணங்கிச் சிதம்பரபுராணத்தை இயற்றியுள்ளார். மதுரைச் சொக்கநாதருலாவை இயற்றியவரும் இவரே. இவர், காலம் கி.பி. பதினாறாம் நூற்றாண்டு. இவருடையமைந்தர் பரஞ்சோதியார் சிதம்பரப்பாட்டியல் என்னும் இலக்கண நூலை இயற்றியுள்ளார்.

குமரகுருபரர்: பிறக்கும் பொழுது ஊமையாய்ப்பிறந்து முருகப் பெருமான் அருளால் ஊமை நீங்கிக் கந்தர்கலிவெண்பாப் பாடிப் போற்றினார். மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், புள்ளிருக்குவேளூர் முத்துக்குமாரசாமிப்பிள்ளைத் தமிழ் முதலிய செந்தமிழ்ப்பனுவல்களைப் பாடியவர். தருமையாதீனத்தின் நான்காவது பட்டத்தில் எழுந்தருளிய மாசிலாமணி ஞானசம்பந்தரையடைந்தபொழுது ‘ஐந்துபேரறிவுங் கண்களே கொள்ள' என வரும் பெரியபுராணப்பாடற்குப் பொருள் யாது' என அவர் வினவிய நிலையில், தமதுவாக்குத் தடைப்பட்டு அவரையே தம் ஞான குருவாகக்கொண்டு வழிபட்டுத் தமக்குத் துறவுநிலை அருளவேண்டும் என வேண்டிக்கொண்டார். தில்லையில் சிலநாள் தங்கிவருக என ஞான தேசிகர் பணித்த வண்ணம் சிதம்பரத்திற்கு வந்து கூத்தப் பெருமானையும் சிவகாமித்தாயையும் வணங்கி, சிதம்பரச்செய்யுட்கோவை, சிவகாமியம்மை இரட்டை மணிமாலை என்னும் இருபனுவல்களையும் பாடிப்போற்றியுள்ளார்.

வெள்ளியம்பல வாணர்: இவர் தருமையாதீனம் மாசிலாமணி ஞானசம்பந்தரிடம் ஞானோபதேசம் பெற்றவர்; தென்றமிழும் வடமொழியும் தேர்ந்துணர்ந்தவர்; மிருகேந்திரவாகம் மொழி பெயர்ப்பு, - முத்திநிச்சய பாடியம், ஞானாவரண விளக்கம், முதலிய நூல்களை இயற்றி, தில்லையிலே நெடுநாள் வாழ்ந்து கூத்தப்பெருமான் திருவடியை அடைந்தவர்; இவருடைய சமாதி சிதம்பரம் ஞானப்பிரகாசக்குளம் தென்மேற்குக்கரையில் அமைந்துள்ளது.

படிக்காசுத்தம்பிரான்: இவர் தருமபுரவாதீன அடியார்குழாத்துள் ஒருவர். ஒருநாள் தில்லையில் கூத்தப்பெருமான் முன்னிருந்த திரைச்சீலையில் தீப்பற்ற, ஞானத்தாலுணர்ந்து தம்கைகளைப் பிசைந்து அத்தீயை அவித்தார். நடராசப்பெருமான் தில்லை வாழந்தணர் கனவிலே தோன்றி, 'நமது திரைச்சீலையில் பற்றிய தீயைப்படிக்காசன் அவித்தான். அவனிடத்திற்சென்று கொடுக்க' என ஒரு திருநீற்றுப்பையைத் தந்தருளி மறைந்தார். விழித்தெழுந்த அந்தணர் இறையருளை வியந்து தருமபுரத்திற்குச் சென்று படிக்காசரிடம் அத்திருநீற்றுப் பையைச்சேர்ப்பித்தனர்.

சித்தர் சிவப்பிரகாசர்: குடந்தையிற் றோன்றிய இவர், திருவாவடுதுறை திருமடத்தின் தம்பிரானாக விளங்கினார். விஜய நகர மன்னரின் காரியத்தராகச் சிதம்பரத்திலிருந்த வைணவர் சிலரால் நடராசப் பெருமானது நாள் வழிபாடு தடைப்பட்டது. அதனையறிந்த இவர், குரு ஆணையின்படி வேலூரை அடைந்து இலிங்கமநாயக்கரைக் கண்டு தம் கருத்தை எடுத்துரைத்துத் தில்லையில் நடராசப் பெருமானுக்கு நாள் வழிபாடு தடையின்றி நிகழ ஏற்பாடு செய்தார்.

அகோர சிவாச்சாரியர்: ஆதிசைவராகிய இவர், தில்லையில் அனந்தீசுவரன் கோயில் சந்நிதியில் திருமடம் அமைத்துக் கொண்டு வாழ்ந்தவர். தில்லையில் கூத்தப் பெருமான் திருப்பணிகளைக் கண்காணித்து வந்த இவர், சைவசமய நெறிமுறைகளை வகுத்துரைக்கும். 'அகோர சிவாசாரியார் பத்ததி' என்னும் நூலை இயற்றியவர் ஆவார்.

கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவசித்தாந்த சமரச அநுபவ ஞானியாகிய தாயுமானப் பெருந்தகையார் தாம் பாடியருளிய பாடல்களில் ஆகாரபுவனம் - சிதம்பரரகசியம் என்ற பகுதியில் தில்லையம்பலவன் ஆடியருளும் நாதாந்தத் திருக்கூத்தின் மேன்மையையும் அக்கூத்து எச்சமயத்தார்க்கும் பொதுவாய் நிகழுந்திறத்தினையும் இனிது விளக்கியுள்ளார். இப்பாடற் பகுதியைக்கூர்ந்து நோக்குங்கால் தாயுமான அடிகளார் தில்லைப் பதியை யடைந்து கூத்தப் பெருமான் நிகழ்த்தியருளும் அற்புதத் திருக்கூத்தினை நேரிற் கண்டு மகிழ்ந்தவர் என்பது நன்குபுலனாகும்.

உலகெலாமாகி வேறாய் உடனுமாய் விளங்குகின்ற இறைவன் ஞான மயமான பெருவெளியிலே பேரொளிவடிவாய் எல்லார்க்கும் பொதுவாய் நடம் புரிந்தருள்கின்றான் என்னும் பேருண்மையினை அறிவுறுத்தும் நிலையில் அமைந்ததே தில்லைச்சிற்றம்பலமாகும். இங்கு இறைவன் சமயங்கடந்த தனிமுதற் பொருளாய் எவ்லாவுயிர்களும் உய்ய அருட்கூத்து இயற்றுகின்றான் என்பது சிவநெறிச் செல்வர்களது துணிபாகும். இவ்வுலகிற் பல்வேறு சமயங்களையும் கடைப்பிடித் தொழுகுகின்ற எல்லா மக்களும் தம்மிடையேயுள்ள சாதிசமய வேற்றுமைகளைக்களைந்து 'ஒன்றே குலனும் ஒருவனே தேவனும்' என்னும் ஒருமை நிலையில் நின்று இறைவனை வழிபட்டு உய்திபெறுதற்குரிய பொது மன்றாய் திகழ்வதே தில்லைப் பெருங்கோயிலாகும். இவ்வாறு எல்லாச் சமயங்களையும் தனக்கு அங்கமாகக் கொண்டு சமயங்கடந்த தனிமுதற் பொருளாகச் சிவ பெருமானை வழிபடும் சமயமே சைவசமயமாகும். சமயா தீதப் பழம் பொருளாகிய சிவபரம் பொருளை ஞானமயமாகிய மன்றில் ஆடல் புரிவோனாகக் கண்டுவழிபடும் தெய்வசபையே தில்லையிலுள்ள திருச்சிற்றம் பலமாகும். சைவசித்தாந்த சமயத்தின் சமரச நிலைக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது தில்லைப் பொது என்னும் இவ்வுண்மை யினை

"சைவசமயமே சமயம் சமயா தீதப் பழம் பொருளைக்
கைவந்திடவே மன்றுள் வெளிகாட்டும் இந்தக் கருத்தைவிட்டுப்
பொய் வந்துழலும் சமயநெறி புகுதவேண்டாம் முத்திதரும்
தெய்வசபையைக் காண்பதற்குச் சேர வாரும் செகத்தீரே"

(காடும் கரையும் - 2)

எனவும்,

“சன்மார்க்க ஞானமதின் பொருளும் வீறு
சமய சங்கேதப் பொருளும் தானொன்றாகப்
பன்மார்க்க நெறியினிலுங் கண்டதில்லை
பகர்வரிய தில்லைமன்றுட் பார்த்த போதங்
கென்மார்க்கம் இருக்குதெல்லாம் வெளியேயென்ன
எச்சமயத்தோர்களும் வந்திறைஞ்சாநிற்பர்
கன்மார்க்கநெஞ்சமுள எனக்குந்தானே
கண்டவுடன் ஆனந்தங் காண்டலாகும்"

(ஆகாரபுவனம் சிதம்பரரகசியம்-12)

எனவும் வரும் பாடல்களில் தாயுமான அடிகளார் அறிவுறுத்திய திறம் இங்கு நினைக்கத்தக்கதாகும்.

மாரிமுத்து புலவர்: தில்லையை அடுத்த தில்லைவிடங்கன் எனனும் ஊரில் வேளாளர் மரபில் தோன்றியவர்; முத்தமிழிலும் நிரம்பிய புலமை படைத்தவர்; தில்லைக் கூத்தப் பெருமான்பால் அளவிலாப்பேரன்பு உடையவர். தம்பிள்ளைகள் மூவரில் ஒருவருக்குச் சித்தப்பிரமை உண்டாகிய நிலையில், புலியூர் வெண்பா என்னும் பனுவலால் கூத்தப் பெருமானைப் போற்றி அந்நோயை நீக்கினார். சிதம்பரேசுவரர் விறலிவிடு தூது, புலியூர் நொண்டி நாடகம் என்பனவும் இவர் இயற்றியனவே.

முத்துத்தாண்டவர்: சீர்காழியில் இசை வேளாளர் மரபில் பிறந்த இவர், வயிற்றுவலியால் பெரிதும் வருத்தமுற்றார். சீர்காழித் திருக்கோயிலில் தோணியப்பரை வழிபட்டு இவர் அன்றிரவு அக்கோயிலிலேயே உண்ணாது, பசியால் வருந்தி உறங்கி விட்டார். அந்நிலையில் திருநிலை நாயகியாகிய அம்மையார் இவர் முன் தோன்றி. பாலடிசில் அளித்து உண்ணச்செய்தார். "நீ தில்லைப் பெருமானைத் தரிசித்து வணங்கிப் பாடுவாயாக. அதுவே உனது உடற்பிணியை நீக்கும் மருந்தாகும்". என அம்மையார் அறிவுறுத்தி மறைந்தருளினார். அம்மை அருளிய வண்ணம் தில்லைப் பதியை அடைந்து கூத்தப்பெருமான் திருமுன் நின்ற இவர் 'பூலோக கைலாசகிரி சிதம்பரம்' என ஆங்கெழுந்த சொற்றொடரினையே முதலாகக் கொண்டு இனிய கீர்த்தனைகளைப் பாடித் துதித்தார். கூத்தப் பெருமானருளால் பஞ்சாக்கரப்படிகளிலிருந்து ஐந்து பொற்காசுகளைப் பெற்றுப் பிணி நீங்கி மகிழ்ந்தார். ஒருமுறை தில்லைக்கு வந்த பொழுது இவரைப் பாம்பு தீண்டியது. 'அருமருந்து ஒரு தனி மருந்து அம்பலத்திற் கண்டேனே' என்னும் கீர்த்தனையைப் பாடி விடம் நீங்கப் பெற்றார். தில்லைப் பெருமான் மீது கீர்த்தனங்கள், பதங்கள் பலவும் பாடிய இவர், ஆவணிப் பூச நாளில் கூத்தப்பெருமான் திருமுன் நின்று 'மாணிக்கவாசகர் பேறு எனக்குத் தர வல்லாயோ' என்னும் இசைப் பாடலைப்பாடிப் பிறவா நெறியாகிய முத்தியின்பத்தைப் பெற்றார்.

ஞானப்பிரகாசர். யாழ்ப்பாணத்தில் பாண்டிமழவர் குலத்திற் பிறந்த இவர், வடமொழி, தென்மொழி நூல்களை நன்கு பயின்றவர். திருவண்ணாமலை ஆதீனத்தலைவரிடத்துத் துறவு பூண்டவர். சிவஞான சித்தியார்க்கு உரையெழுதியவர். இவர் சிதம்பரத்தில் தங்கியிருக்கும் பொழுது, இலங்கை அரசனொருவன் இவரிடம், பெரும் பொருளைத் தந்து செல்ல, சிதம்பரத்தில் ஞானப்பிரகாசம் என்ற குளத்தைத் தோண்டி அதனருகில் ஒரு மடத்தையும் கட்டியுள்ளார்.

கோபாலகிருஷ்ண பாரதியார். இவர் நாகப்பட்டினத்தையடுத்த நரிமணம் என்ற ஊரில் இராமசாமி பாரதி என்பாரின் புதல்வராய்த் தோன்றினார். மயிலாடுதுறை கோவிந்த சிவத்திடம் கல்விபயின்றார். தெய்வ இசைப்பாடலைப் பாடிய தியாகராச சுவாமிகளால் பாராட்டப்பெறும் இசைப்புலமை பெற்ற இவர் சிதம்பரத்திற்கு அடிக்கடி சென்று தில்லை நடராசப்பெருமானை இன்னிசைப் பாடல்களால் பரவிப் போற்றி வந்தார். திருநீல கண்டநாயனார், இயற்பகை நாயனார், திருநாளைப் போவார், ஆகிய திருத்தொண்டர்கனின் வரலாறுகளைக் கீர்த்தனைகளாக இயற்றியுள்ளார். இவர் இயற்றிய நந்தனார் சரித்திரக்கீர்த்தனை மிகவும் சுவைநலம் வாய்ந்ததாகும்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை. திருவாவடுதுறை ஆதீனத்து மகா வித்துவானாக விளங்கிய இவர், பல தல புராணங்களையும் பிரபந்தங்கள் பலவற்றையும் பாடிய பெறும் புலவர் ஆவார். பிள்ளையவர்கள் தில்லைப் பெருமானைப் போற்றும் முறையில் பாடிய பனுவல் திருத்தில்லை யமகவந்தாதியாகும்.

ஆறுமுகநாவலர். யாழ்ப்பாணத்தில் நல்லூரில், கார்காத்த வேளாளர் மரபிற்றோன்றித் தமிழ் வடமொழி ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சிபெற்ற இவர், இராமநாதபுரம் மன்னராலும் திருவாவடுதுறை, தருமபுரம் ஆகியசைவ ஆதீனத் தலைவர்களாலும் பாராட்டப் பெற்றவர். வாழ்வு முழுதும் பிரமச்சரிய ஒழுக்கத்தை மேற்கொண்ட நாவலரவர்கள், சிதம்பரத்திலே தங்கியிருந்து சைவப்பிரகாச வித்தியாசாலையையும், வித்தியாநுபான யந்திரசாலையையும் நிறுவிச் சைவமும் தமிழும் வளரப் பெரும்பணி புரிந்துள்ளார்; திருக்குறள், தொல்காப்பியம் முதலிய தமிழ்த்தொன்னூல்களையும், பெரிய புராணம், கந்தபுராணம் திருவிளையாடற் புராணம் முதலிய சைவ இலக்கிய நூல்களையும், நன்னூல், நிகண்டு முதலிய கருவி நூல்களையும் பிழையற்ற நிலையில் பதிப்பித்து வழங்கியவர் இலரே. தமிழ் மாணவர்களது கல்வி வளர்ச்சியின் பொருட்டு ஒன்று முதல் நான்கு வரையுள்ள பாலபாடங்களையும், சமய ஒழுக்கத்தின் பொருட்டுச் சைவ வினாவிடை முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். தமிழ் வளர்ச்சியின் பொருட்டு இவர்கள் நிறுவிய கல்வி நிலையம் சிதம்பரத்தின் மேலைவீதியில் இவர்தம் புகழுருவாகத்திகழ்கின்றது.

சிதம்பரம் இராமலிங்க வள்ளலார். தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள மருதூரில் கருணீகர் மரபில் இராமையா பிள்ளைக்கும் சின்னம்மைக்கும் புதல்வராகத்தோன்றிய இவர், முருகப்பெருமானையே குருவாகக் கொண்டு மெய்ந் நூல்கள் பலவற்றையும் ஓதாது உணர்ந்தவர்; தில்லைப்பெருமான்பால் அளவிலாப் பேரன்பு பூண்டு, சிதம்பரத்தில் தங்கி நடராசப் பெருமானை ' நாள் தோறும் வழிபட்டமையால் சிதம்பரம் இராமலிங்கம் என அழைக்கப்பெற்றார். சிதம்பரம் இராமலிங்கம் எனக் கையொப்பமிடுதலை வழக்கமாகக் கொண்டுள்ளதால் தில்லைப்பெருமான்பால் இவர் கொண்டிருந்த பேரார்வம் நன்குபுலனாகும். தில்லைத் திருக்கூத்துத் தரிசனமாகிய சோதி வழிபாட்டினைச் சாதி சமய வேறுபாடின்றி எல்லா மக்களும் கண்டு உய்தி பெறும் நிலையில் பார்வதிபுரம் என வழங்கும் வடலூரில் சத்திய ஞான சபையையும், சமரச சுத்த சன்மார்க்சு சங்கத்தையும் சத்திய தருமச் சாலையையும் நிறுவி ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் திருமூலர் நெறியை வளர்த்த பெருமை வடலூர் இராமலிங்க வள்ளலார்க்குரிய தனிச்சிறப்பாகும். 'கேழில் பரஞ் சோதி கேழில் பரங்கருணை' என மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவைத் தொடரை உளங் கொண்ட இராமலிங்கர், 'அருட்பெருஞ்சோதி தனிப் பெருங் கருணை, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி' என்னும் சமரச சுத்த சன்மார்க்க வழிபாட்டு மந்திரத்தை உருவாக்கியுள்ளமை தில்லைக்கூத்தப்பெருமானையே தம் வழிபடுகடவுளாகக் கொண்டுள்ளார் என்பதனை நன்கு புலப்படுத்தும்.

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்:

சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் திரு விராமேச்சுரத்தில் பிறந்து பாம்பன் என்னும் பதியில் பலநாள் வாழ்ந்தவர்; பிரப்பின் வலசை யென்னும் ஊரில் முப்பத்தைந்து நாள் சிவயோக நிட்டையிலிருந்து முருகனது திருவருட்காட்சியினைக் காணப் பெற்றவர்; திருவலங்கற்றிரட்டு, திருப்பாமுதலிய செய்யுள் நூல்களையும் சைவசமய சரபம், தகராலய ரகசியம் முதலிய தத்துவ நால்களையும் இயற்றிச் சைவமும் தமிழும் வளர்த்த செந்தமிழ்த் தவமுனிவர். தமிழ் வடமொழி என்னும் இருமொழிப் புலமையும் நிரம்பப்பெற்ற இவர் சிதம்பரத்தையடுத்த சிற்றூரில் தங்கியிருந்து கூத்தப்பெருமானை வழிபட்டுப் புறச்சமய இருள் நீக்கிச் சிவநெறிபரப்பிய அருளாளர் ஆவர். இவர் இயற்றிய தகராலயரகசியம் என்னும் நூல், சிற்பர வியோமமாகிய தில்லைச் சிற்றம்பலத்தினைக் குறித்தும் சிதாகாசப் பெருவெளியாகிய அதன்கண் ஆடல் புரிந்தருளும் முழுமுதற்கடவுளாகிய நடராசப் பெருமானைக் குறித்தும் வடமொழி வேத உபநிடதங்களிலும் செந்தமிழ்மாமறையாகிய திருமுறைகளிலும் கூறப்படும் தத்துவவுண்மைகளை எடுத்துக்காட்டி விளக்கும் சிறப்புடையதாகும்.