தும்பைப்பூ-நாவல்/அத்தியாயம் 6

விக்கிமூலம் இலிருந்து

6

“திலகம், திலகம்! எங்கே வீட்டில் யாரையும் காணோம்...?”


சதானந்தம் பிள்ளை தன் மனைவியைக் கூப்பிட்டுக் கொண்டே வந்தவர், சந்தடியே இல்லாதது கண்டு சுற்று முற்றும் பார்க்கலானார். அவருடைய கரங்கள் பழக்க விசேஷத்தால் தாமாகவே அவர் போட்டிருந்த மேல் உத்தரீயத்தை எடுத்து ‘ஸ்டாண்டில்’ மாட்டின.


இதற்குள் பின்கட்டிலிருந்த திலகவதி கணவனுடைய குரலை எப்படியோ கேட்டுவிட்டு, “மங்கை மங்கை! எங்கே இருக்கிறாய்? அத்தான் வந்திருக்கிறார் போலிருக்கிறது பார்!” என்று குரல் கொடுத்தாள்.


தன் மனைவி புறக்கடையிலிருந்து கொண்டே மங்கையர்க்கரசியை ஏவியதன் காரணத்தை உடனே புரிந்துகொண்ட சதானந்தம் பிள்ளை, “ஓ! கேஸூவல் லீவா?” என்று புன்சிரிப்புடன் தமக்குள் கூறிக்கொண்டார். அவர் சட்டையைக் கழற்றுகையில் மூக்குக் கண்ணாடி கழன்று தவறி விழப் பார்த்தது.


“ஆ!” என்று பதறியோடி வந்து மங்கையர்க்கரசி மூக்குக் கண்ணாடி தரையில் விழுந்து உடைந்து போகாதவாறு தடுக்க முயன்றாள். ஆனால் அதற்குள் சதானந்தம் பிள்ளை அதைப் பிடித்துக் கொண்டார்.


“நல்லகாலம், மங்கை! கொஞ்சம் ஏமாந்திருந்தால் நாற்பது ஐம்பது ரூபாய் பழுத்துப்போயிருக்கும்” என்று அவர் கண்ணாடியைச் சரியாக மூக்கின்மீது மாட்டிக் கொண்டே மங்கையர்க்கரசியைப் பார்த்துச் சொன்னார்.


அத்தான் தன்னை ஏறிட்டு நோக்கிப் பேசுவதைக் கண்டதும் அவள் நாணத்தால் தலை கவிழ்ந்தாள். ஆனால், அவள் வாய் மட்டும் ‘ஆமாம்’ என்றது.


அடுக்களையில் வேலை செய்து கொண்டிருந்த மங்கையர்க்கரசி, வெளியில் திடீரென உண்டான மிதியடியோசை கேட்டு அத்தான்தான் வருகிறார் என்று அறிந்து கொண்டாள்.


ஆனால், நாலு மணி கூட ஆகாதிருக்கையில் அவர் கோர்ட்டிலிருந்து வரமுடியாது என்று அவள் ஐயற்றான்.. அவள் இவ்விதம் எண்ணிக் கொண்டிருக்கையிலேயே, கால்கள் முன்புறத்தை நோக்கி விரைந்தன. திலகவதி, “அத்தான் வந்திருக்கிறார் போலிருக்கிறது, பார்!" என்று சொல்வதற்கு முன்பே அவள் கூடத்துக்கு வந்துவிட்டாள். ஆனாலும், அவர் முன் எப்படிப் போவது, என்ன கேட்பது, பேசுவது என்ற அச்சத்துடனும் நாணத்துடனும் அவள் கதவோரத்தில் வந்து மலைத்து நிற்கலானாள்.


மாலை மஞ்சள் வெய்யில் ஒளி பட்டுப் பளபளத்த சதானந்தம் பிள்ளையின் ரோல்டு கோல்டு பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி மங்கையர்க்கரசியின் கண்களைப் பறித்தது. சிறிது வயதானாலும், கட்டுத் தளராத அவருடைய தளதளத்த தேகமும் களை சொட்டும் முகமும், கம்பீரத் தோற்றமும் அவளுடைய இளம் உள்ளத்தை ஒருங்கே கவர்ந்தன.


அவள் ஊரிலிருந்து வந்து ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்டாலும், இதுவரை அவ்வளவு அணுக்கமாய் இருந்து அவரைப் பார்த்ததில்லை; பார்க்கச் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. அவள் ஊரிலிருந்து வந்து வண்டியை விட்டு இறங்கிய சமயத்தில் மேன்மாடியிலிருந்து தன்னை நோக்கிக் கொண்டிருந்த அவரைத் தற்செயலாகப் பார்த்தாளே! அது தான் ஒரளவு சரியாகப் பார்த்தது என்று சொல்லவேண்டும். அடுத்து அவள் திலகவதியால் நேருக்கு நேர் அறிமுகஞ் செய்து வைக்கப்படுகையில், கடைக் கணித்து அவருடைய பெருந்தன்மையான தோற்றத்தில் மனம் லயித்தாள். அதற்கு அப்புறம் அவள் ஒரே வீட்டிலிருந்து ஊடாடி அடிக்கடி சந்திக்க வேண்டிய சந்தர்ப்பமும் நெருங்கிப் பழகக் கூடிய வாய்ப்பும் ஏற்பட்டாலும்கூட, நாணமும் பயிர்ப்பும் மிகவுடைய அவள் அவரை ஏறிட்டுப் பார்க்கக் கூசியிருந்தாள்.


மறைவிலிருந்து-மற்றவர்கள் அவளைக் கவனிக்கக் கூடாத இடத்திலிருந்து-அவள் அவரை நோக்கி மகிழ்வாள். அது வெண்திரைக்குப் பின் தெரியும் உருவம்போல் தெளிவாகத் தெரியாமலிருந்தாலும், தூரத்திலிருந்தாயினும் அவரைக் காண்பதில் அவளுக்கு ஒரு தனி ஆனந்தம் உண்டாயிற்று. அவர் பேசும் பேச்சுக்களைச் செவி மடுத்துக் கேட்பதில் அவள் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்து வருவாள்.


இன்றுதான் மங்கையர்க்கரசிக்கு சதானந்தம் பிள்ளையை ஏகாந்தமாக, நேருக்கு நேர் பார்க்கவும், பேசவும், கூடிய சந்தர்ப்பம் வாய்த்தது. இந்த அருமையான வாய்ப்பு அவளுக்கு ஒரு பக்கம் களிப்பைத் தந்தாலும், மற்றொருபுறம் நாணத்தையும் அச்சத்தையும் அளித்தது. மூக்குக் கண்ணாடி விழப்போவதைக் கண்டதனால் ஏற்பட்ட பதற்றம் மறைவாக இருந்த அவளுடைய கூச்சத்தைப் போக்கடித்து விட்டு அவளை அத்தான் முன்னே வரச் செய்தது.


இப்போதுதான் மங்கை திலகவதி கொடுத்த குரலுக்கு, “இதோ போகிறேன், அக்கா! அத்தான்வந்திருக்கிறார்” என்று பதிலுக்குக் குரல் கொடுக்கலானாள். பின் அவள் சதானந்தம் பிள்ளையைப் பார்த்து, “அக்கா வீட்டு விலக்கமாயிருக்காங்க” என்று கூறியவள், “முதலில் காபி கொண்டு வரட்டுமா? அத்தான்! இல்லாவிட்டால், குளித்துவிட்டுப் பின்னால் பலகாரத்துடன் குடிக்கிறீர்களா?” என்று திடீரென நினைத்துக் கொண்டவளாய்க் கேட்டாள்.


சதானந்தம் பிள்ளை மங்கையர்க்கரசியின் தடுமாற்றத்தைக் கண்டு புன்னகை புரிந்தவாறு, “அதுதான் தெரிகிறதே பட்டத்தரசி அந்தப்புரத்திலிருந்து கொண்டு அதிகாரஞ் செய்யும்போதே! மூன்று நாளைக்கு இந்த முடிசூடா இளவரசியின் ஆட்சிக்கு அடங்கி நாங்கள் இருக்க வேண்டும். இல்லையா?” என்று தமாஷாகக் கேட்டவர் பின், “நான் முதலில் குளித்துவிட்டு வந்து அப்புறம் சிற்றுண்டியும் காபியும் அருந்துகிறேன்” என்று கூறினார்.


“அப்ப நான் போய் ஸ்நான அறையில் வெந்நீரைக் கொண்டு வைக்கிறேன், வாருங்கள்” என்று கூறிக்கொண்டே மங்கை உள்ளே போக முயன்றாள்.


அவளுடைய பயிர்ப்பையும் படபடப்பையும் கண்டு சதானந்தம் பிள்ளை தமக்குள் வியந்து பாராட்டிக்கொண்டே குளிக்கும் அறைக்குப் போனார். தாம் வருவதற்குள் எல்லாம் தயாராயிருப்பதைப் பார்த்து அவர் பிரமித்தார். அவர் குளித்துவிட்டு ஈர உடையை மாற்றுவதற்குள் வேறு ஆடைகள் வந்து காத்திருந்தன. வழக்கத்தைவிட இன்று சுறுசுறுப்பாகக் காரியங்க நடைபெறுவது அவருடைய கவனத்தைப் பெரிதும் கவர்ந்தன.


சதானந்தம் பிள்ளே உடைகளைத் தரித்துக்கொண்டு, கிராப்பைச் சிவிவிட்டுக்கொண்டு கூடத்துக்கு வந்தார்.

மங்கை சாப்பாட்டு மேஜைமீது இலையைப் போட்டுவிட்டுப் பலகாரத் தட்டுகளை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.


அத்தான் வந்து அமர்ந்ததும் மங்கை நாணிக்கோணியவாறு நடந்து வந்து பலகாரங்களை இலையில் பரிமாறலானாள். அவள் உடம்பு இன்னதென்று விவரிக்க முடியாத அச்சத்தால் காற்றில் அசையும் மாந்தளிர் போல் நடுங்கியது. தனியாயிருந்து அத்தானுக்குப் பணிவிடை செய்வது அவளுக்கு என்னவோ போலிருந்தது.


“கோகிலாவாவது, கணேசனாவது பள்ளிக்கூடத்திலிருந்து வரக்கூடாது? சோதனை போல வேலைக்காரி கூட அல்லவா இன்று வரவில்லை?” என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். கூட யாராயினும் இருந்தால் கூச்சமோ அச்சமோ இல்லாமல் அவருக்கு வேலை செய்யலாமே என்று அவள் அங்கலாய்த்தாள்.


மங்கையின் நிலையை, சதானந்தம் பிள்ளை சடுதியில் புரிந்து கொண்டார். ஆகவே, அவர் அவளுக்குத் தைரியம் உண்டாக்கும் நோக்கத்தோடு,“ மங்கை, இதென்ன கோதுமை அல்வாவா? கேசரியா?...” என்று கேட்டுக் கொண்டே ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டார்.


“உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? பார்த்தால் கோதுமை அல்வா கேசரி போலவா தென்படுகிறது? அக்கா செய்தால் எப்படி இருந்தாலும் நன்றாயிருக்கும்” என்று அவள் கேலியாகச் சொல்ல நினைத்தாள்; ஆனாலும் நாணங் காரணமாக, “கோதுமை அல்வாதான், அத்தான், ஏன் நன்றாயில்லையா?” என்று மெல்லக் கேட்டாள்.


“சே! நன்றாயில்லையா? ரொம்ப நன்றாயிருக்கிறதே! நீ செய்வதற்குக் கேட்க வேண்டுமா?” என்று அவளை உற்சாகப் படுத்தும் எண்ணத்துடன் அவர் சொன்னார்.


அவ்வார்த்தைகள் கூட மங்கைக்குப் பரிகாசமாகத்தான் பட்டது. ‘பெண்டாட்டி செய்ததென்றால் அவருக்கு நன்றாயிருந்திருக்கும்’ என்று கருதி அவள் மனம் குறைப்பட்டது.


அடுத்து சதானந்தம் பிள்ளை ஒமப்பொடியை உலுத்துத் தின்று கொண்டே, “எங்கே வேலைக்காரி வரவில்லையா, இன்னும்?” என்று சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே கேட்டார்.


“இல்லை; அத்தான். அவள் எங்கோ சொந்தக்காரர் வீட்டுக்குப் போக வேண்றுமென்று சொல்லிவிட்டுப் போனாள்.”


அவர் நேரில் பார்த்துக் கேட்டதற்குத் தலைகுனிந்து கொண்டே பதில் சொன்னாள். அவர் நோக்கும் போது இவள் தலை கவிழ்ந்து கொள்வதும், அவர் குனிந்து பலகாரம் சாப்பிடுகையில் இவள் அவரை ஆசையோடு பார்த்து மகிழ்வதும் ஒசையெழாதவாறு மெல்ல நகைப்பதுமாயிருந்தாள். நேரம் ஆக, ஆக, அவளைப் பற்றியிருந்த நாணமும் அச்சமும் மெல்ல மெல்ல அகன்று கொண்டு வந்தன.


சதானந்தம் பிள்ளை, “அப்படியானால், இன்று வீட்டு வேலைகளையெல்லாம் நீயாகவேயா செய்தாய்? ஐயோ” என்று அநுதாபத்துடன் மொழிந்தவர், “ஏன்? கோகிலாவைப் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி உனக்கு ஒத்தாசையாக வைத்துக் கொள்வதுதானே! மங்கை?” என்று சொன்னார்.


“படிக்கப் போகிற குழந்தையை நிறுத்துவதா? நன்றாயிருக்கிறது, அத்தான்! இது என்ன பிரமாத வேலை? இதைவிட எவ்வளவோ பெரிய வேலைகனையெல்லாம் கிராமங்களில் செய்வோமே! நீங்கள் பார்த்ததில்லையா? பட்டணத்தில்தான் எடுத்ததற்கெல்லாம் வேலைக்காரர்கள் அமர்த்தப் பட்டிருக்கிறார்கள்......” என்று மங்கை சமாதானம் சொன்னாள்.

சதானந்தம் பிள்ளை இது கேட்டுச் சிரித்தார். “அப்படியானால் பட்டணத்திலிருப்பவர்கள் சோம்பேறிகள் என்று சொல்லுகிறாய், இல்லையா? அது என்னவோ உண்மைதான். உன் அக்கா கூடப் பட்டணத்தில் வாழ்க்கைப்பட்டுச் சோம்பேறியாய் விட்டதாலும், உடலுழைப்பு இல்லாததாலும் தான் நோய் நொடிக்கு நிலைக்களமாய் விட்டாள். இல்லா விட்டால்...”


மங்கை குறுக்கிட்டுப் பேசத் தொடங்கி, “நீங்க ஒன்று, அத்தான். அக்கா சோம்பேறியாயிருந்தால் உங்கள் குடும்பம் இவ்வளவு உன்னத நிலைக்கு வந்திருக்க முடியுமா? உழைத்து உழைத்துத்தான் அக்கா உருக்குலைந்து போயிருக்கிறாள்.....”


“தங்கை அக்காவுக்குப் பரிந்து பேச வேண்டியதுதானே! தனக்கு வாரிசாகத்தான்...”


இவ்வார்த்தைகளால் மங்கையர்க்கரசி மீண்டும் நாணமுற்று அவ்விடத்தை விட்டு மெல்ல நழுவலானாள்.


இதைக் கண்ட சதானந்தம் பிள்ளை, “எங்கே மங்கை, போகிறாய்” என்று வினவினார்.


“இருங்கள் அத்தான், காபி கொண்டு வருகிறேன்” என்று கூறிக் கொண்டே போனாள் மங்கை.


தண்ணிர் டம்ளரைப் பார்த்துக் கொண்டே, “காபி கொண்டு வந்து வைத்திருக்கிறாய் என்றல்லவோ பார்த்தேன்” என்றார் சதானந்தம் பிள்ளை.


அவர் சொல்வி வாய் மூடுவதற்கு முன், மங்கை காபியைச் சூடாக்கிக் கொண்டு வந்து அவர்முன் வைத்தாள். “பலகாரம் சாப்பிடுவதற்குள் ஆறிப்போப் விடுமென்று முன்னேயே கொண்டு வரவில்லை” என்று அவள் அவர் கேட்டதற்கு இப்போது சமாதானஞ் சொன்னாள்.

மங்கையினுடைய ஒவ்வொரு சொல்லும் சதானந்தம் பிள்ளைக்குக் களிப்பை பூட்டியது. அவளுடைய சாதுரியத்தையும் சமயோசித புத்தியையும் அவர் வெகுவாக உணர்ந்து பாராட்டினார். அவள் வந்ததிலிருந்தே தம் குடும்ப நிலை சீர்பட்டு வருவதையும், எல்லா வகையிலும் அவள் தம் மனைவிக்கும் மக்களுக்கும் பேருதவியாயிருந்து வருவதையும் அவர் கண்டறிந்து வரலானார். தம் காரியங்களையும் அவள் எவ்வளவு கனிகரமாகச் செய்து வருகிறாள் என்பதையும் அவர் நன்கு அறிந்திருந்தார். இவ்வளவு நற்குணமும் குடும்பப் பாங்கும் உடைய பெண்ணுக்கு ஆண்டவன் நல்வாழ்வு அளிக்காமல் போய்விட்டானே என்று அவர் உள்ளம் எண்ணிப் பச்சாதாபப்பட்டது. முதன் முதலாகப் பார்க்கையிலேயே மங்கையின் வைதவ்ய கோலம் அவருடைய இரக்க நெஞ்சத்தை மிகவும் வருத்தியது.


இந்த அமங்கல கோலத்தை எப்படி மாற்றுவது என்று அவர் பலநாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தார். பொதுவாக நகர நாகரீகம் வெகுவாகப் புகாத கிராமங்களில் உள்ள பெண்கள் கொண்டுள்ள கொள்கைகளைப் போலவே, மங்கையும் சமுதாயக் கட்டுப்பாட்டுக்கும் சம்பிரதாயங்களுக்கும் மிகவும் கட்டுப்பட்டிருப்பது மட்டுமல்லாமல் அழுத்தமான நம்பிக்கையும் கொண்டிருப்பதை அவர் நன்கு அறிந்து வந்தார். ஆதலால், அவளே, அவள் போக்கிலிருந்து திருப்புவது அவ்வளவு சுலபமல்ல என்று அவர் உணர்ந்தார். ஆனால் தம் மனைவி சமயம் நேரும்போதெல்லாம் அவளுக்கு இதமாக விஷயங்களைக் கூறி உடை முதலிய விஷயங்களில் மாறுதலை ஏற்படுத்த முயன்று வருவது அவருக்கு ஒரளவு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளித்து வந்தது.


தம் மனைவியின் உபதேசம் ஏதாயினும் மாறுதலை உண்டு பண்ணியிருக்கிறதா என்று அறியும் எண்ணத்தோடு அவர் அவளை இச்சமயம் ஏற இறங்கப் பார்க்கலானார். முன் வெள்ளைச் சேலையை உடுத்தியிருந்த அவள் இப்போது பழுப்புப் புடவையைத் தரித்திருந்தாள். வேறு விசேஷ மாறுதல் எதையும் அவரால் கண்டு உணர முடியவில்லை.


ஆகவே அவர் காபியைக் குடித்துக் கொண்டே, “ஆமாம்; மங்கை! நீ ஏன் வாங்கி வந்திருக்கும் கொரனாட்டுச் சேலையை இன்னம் கட்டிக் கொள்ளாமலிருக்கிறாய்? அக்கா கொடுக்கவில்லையா? செயின் கூட...”


அவர் பேசி முடிக்கும் முன்னே மங்கை இடை மறித்து, “அக்கா கொடுத்தார்கள், அத்தான்! நான் தான் கட்டிக் கொள்ளவில்லை. எனக்கு எதற்கு அத்தான், பட்டுப் புடவை, தங்கச் செயின் எல்லாம்? நான் இப்படியே இருந்து காலத்தைக் கழித்துவிட்டுப் போகலாமென்று...”


சதானந்தம் பிள்ளை, “அசட்டுத்தனமாகப் பேசாதே, மங்கை! நீ என்ன தொண்டு கிழவியாய் விட்டாயோ? வீட்டில் ஒரு காலும் சுடுகாட்டில் ஒரு காலுமாயிருக்கும் கிழங்கள்கூட சிறுசுகள் மாதிரி சிங்காரித்துக் கொள்ள ஆசைப்படுகின்றன. இந்தக் காலத்திலே! நீ என்னடா என்றால்......”


“அத்தான், நான் உங்கள் சொல்லை எதிர்த்துப் பேசுவதாக எண்ணக் கூடாது. நான் ஏழ்மையிலேயே பிறந்தவள்; ஏழ்மையிலேயே வளர்ந்தவள்; இடை நடுவிலே எதற்கு இந்த ஆடம்பரமெல்லாம். ஏதோ நான் இருக்கிறபடி இருந்து விட்டுப் போகிறேன்...... ”


“உன்னைப் போலப் பைத்தியக்காரியை இந்த உலகத்தில் பார்க்க முடியாது. எல்லோரும் பிறக்கும் போதே பணத்தோடும் சொத்து சுதந்திரத்தோடும் பிறக்கவில்லை. செல்வம் செல்வாக்கோடு ஜனனமாகிறவர்கள் கூடப் பின்னால் ஏழைகளாகி ஏங்கித் தவிப்பதை நாம் பார்க்கிறோம். வீண் டாம்பீகமும் கர்வமும் கூடாதேயொழிய வாழ்க்கையில் வேண்டிய வசதி செளகரியங்களைச் செய்து கொள்வதில் தவறில்லை. ஆதலால் நீ...” என்று சொல்லிக் கொண்டே, கை கழுவ எழுத்தவர், அவள் கண் கலங்கி நிற்பதைக் கண்டு பதறிப்போய்விட்டார்.

"என்ன, மங்கை ! ஏன் அழுகிருய்? நான் உன் மனம் புண்பட ஏதாயினும் சொல்லி விட்டேனா? கூறத்தகாத வார்த்தைகளைக் கூறி விட்டேனா?......" என்று கேட்டுக் கொண்டே அவர் அவளை அணுகினார். அவர் கரங்கள் அவரை யறிலாமலே அவளை ஆதரவாகப் பற்றி இமைகளின் ஓரத்தில் வழிந்த வரும் கண்ணீரை அவர் போட்டிருந்த மேல் குட்டையால் துடைத்தன.

அவருடைய கர ஸ்பரிச சுகத்தில் ஈடுபட்டு மங்கை தன்னுணர்வின்றி இருந்தாள்.

"சித்தி, சித்தி! எங்கே இருக்கிறே?!" என்று கூவிக் கொண்டே இச்சமயம் கணேசன் புத்தகப்பையைக் கையில் பிடித்தவாறே அங்கு ஓடிவந்தான். அவர்கள் அப்போ திருந்த நிலை விவரமறியாத அச்சிறுவனையும் திகைத்து நிற்க வைத்தது. சில விநாடிகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற் போல் புத்தகக் கட்டுடன் வந்த கோகிலா கால் பின் வாங்கி நின்றாள்.

மங்கை விதிர் விதிர்த்துப் போய் வேகமாய் விலகினாள். அதைவிட சதானந்தம் பிள்ளை, வெட வெடப்புடன் தள்ளி நின்றார்.

"சித்தியின் கண்ணில் ஏதோ தூசி விழுந்து விட்டதாம்......" என்று அவர் நாக்குழறச் சமாதானங் கூற முயன்றார்.

கோகிவா தன்னை ஒரு விதமாகச் சமாளித்துக் கொண்டு புத்தகக் கட்டுகளைத் தம்பியிடம் கொடுத்து எடுத்துப் போய் வைக்கச் சொல்லிவிட்டு, "எங்கே சித்தி, கண்ணைக் காண்பி! நான் தூசியை ஊதுகிறேன்" என்று கூறி கொண்டே அருகே வந்தாள்.

அதற்குள் மங்கை தன் சேலை முந்தானையால் கண்ணைத் துடைப்பது போல் கசக்கிக் கொண்டு இருந்தாள்.

கோகிலா தன் தளிர்க் கரங்களால், கண்களை முந்தானையால் துடைத்துக் கொண்டிருந்த மங்கையர்க்கரசியின் கைகளை விலக்கிவிட்டு, அவள் முகத்தைத் தாழ்த்திப் பிடித்து செவ்விதழைக் குவித்து ஊதலானாள். அப்போதும் விதிர் விதிர்ப்பு அடங்காத மங்கையின் முகம் கோகிலாவின் இச் செயலைக் கண்டு நாணத்தால் குப்பெனச் சிவந்தது. அவளுடைய சங்கடமான நிலையைக் கண்டு சதானந்தம் பிள்ளை மெல்ல அவ்விடத்தை விட்டு அகன்றார். அவருக்கும் பட படப்பு நீங்கவில்லை. உணர்ச்சியின் உந்துதலால், மங்கையிடம் வரம்பு மீறி நடந்து கொண்டது தம் தகுதிக்கும் வயதுக்கும் சரியல்ல என்று அவர் உள்ளம் இடித்துக் கூறியது. தாம் ஒழுங்கு மீறியதால் தானே, தம் பிள்ளைகளைக் கண்டும் பலப்படவேண்டியதாயிற்று என்று அவர் கருதி மனம் நொந்தார். 'மங்கை பால் தம் மனம் சலனங் கொண்டது ஏன்?' என்று அவர் தம்மைத் தாமே கேட்டுக் கொண்டார். சந்தர்ப்ப உணர்ச்சியோ என்று அவர் எண்ணிப் பார்த்தார் சிறிது நேர சிந்தனை; 'இது சந்தர்ப்ப உணர்ச்சியல்ல; சில காலமாகவே, உள்ளத்தை உலுப்பிவரும் கிளர்ச்சிதான். மங்கை வந்த சில நாளிலிருந்தே நம் நெஞ்சம் அவள் பால் நெகிழ்ச்சியுற்று வருகிறது' என்ற உண்மையை அவருக்கு அறிவுறுத்தியது. "இதற்குக் காரணமென்ன?" என்று யோசித்தார். 'மங்கையின் இளமையா? அல்லது அழகா? இல்லை; மிக இளம் பருவத்திலேயே விதவையாய் விட்டாளே என்று அவள் மீது ஏற்பட்ட இரக்கமா? அதுவுமில்லா விட்டால், மைத்துனி முறைப் பெண் என்ற உறவா?' அச்சமயம் அவரால் எல்வித முடிவுக்கும் வர முடியவில்லை. எது காரணமாயிருந்தாலும், மங்கையிடம் ஒழுங்கு மீறி உரையாடுவதோ, உறவு கொண்டாடுவதோ நம் பெருந்தன்மைக்குச் சிறிதும் பொருத்தமல்ல. நாம் இதுவரை பிற பெண்களை ஏறிட்டும் பார்க்காது ஆண்மையைக் காத்து வந்தது போலவே இனியும் இருக்க வேண்டும்; தல்லொழுக்கத்தை நிலை நாட்ட வேண்டும்' என்று அவர் தமக்குள் உறுதி செய்து கொண்டார். நாம் பொது வாழ்வில் பல பெண்களுடன் பழகக் கூடிய சந்தர்ப்பம் நேர்ந்த காலத்தும் காங்கிரஸில் சுதந்திரப் போராட்டக் காலங்களில் தேச சேவகிகளுடன் சேர்ந்து சேவை புரிந்து வந்த காலத்தும் நெஞ்சத்தாலும் நெறிதவறி நடந்ததில்லை. உடன் பிறந்த சகோதரிகளைப் போலவே பாவித்து சகஜமாகப் பழகி வந்திருக்கிறோம் என்ற நன்னிலை தானே, தேசத் தலைவர்களும் பொது மக்களும் நம்மிடம் தனிமதிப்புக் காட்டுவதற்குக் காரணமாயிருந்தது? அத்தகைய நேர்மையும் நல்லொழுக்கமும் நெருங்கிய உறவுடைய மங்கை விஷயத்தில் நழுவிப் போக விடுவதா? அதுவும் நாற்பது வயதுக்கு மேல் நெகிழ்வது நல்லதா? என்று தம்மைத் தாமே கேட்டுக் கொண்டார். தம் மனதில் சபலம் தட்டுவதற்குக் காரணமாயிருக்கும் மங்கையைக் கூடுமான வரை பார்க்காமலிருக்க வேண்டும்; தனியாகச் சந்திக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படாதவாறு தவிர்க்கவேண்டும் என்று அவர் தீர்மானித்துக் கொண்டே தம் அறைக்குப் போய் சோபா வொன்றில் சாயந்தார்.

இங்கு மங்கையின் நிலையோ தரும சங்கடமாயிருந்தது. கோகிலா அவள் கண்களை அகல நீக்கி வாயினால் ஊதிவிட்டு, "இப்போ கண்ணை அறுக்கவில்லையே, சித்தி!" என்று கேட்டுக் கொண்டே, மீண்டும் திறந்து பார்த்தாள்.

மங்கை, "இல்லை" என்று சொல்வதற்குள் கோகிலா, "கண்ணில் ஒன்றுமில்லையே, சித்தி!" என்று கூறியவாறே கூர்த்து பார்த்தாள். இது மங்கையை மேலும் விதிர்ப்புற வைத்தது. "முந்தானையால் கசக்கியதால் தான் கண் சிவந்து போய்விட்டது" என்று அவள் கூறிய பிறகுதான் மங்கைக்கு மூச்சு வந்தது... "இரு சித்தி! கண்ணுக்கு ஒத்தடம் கொடுக்கிறேன்" என்று சொல்லி, கோகிலா தன் தாவணியின் முனனயப் பந்து போலாக்கி வாயில் வைத்து ஆவி பிடித்து மங்கையின் கண்களில் ஒத்தலானாள்.

இதற்குள், திகைவதி, "மங்கை, மங்கை! எங்கே ஒன்றுமே சந்தடி காணோம்" என்று குரல் கொடுத்தாள். இது மங்கையை ஒரு கலக்கு கலக்கியது. அவள் ஏதோ சொல்வதற்குள், "என்ன செய்து கொண்டிருக்கிறாய், மங்கை..." என்று திலகவதி மீண்டும் குரல் கொடுத்து, "ஆமாம், மங்கை வந்தது யார்? அத்தான்தானே! - காபி கொடுத்தாயா?... பசங்க..." எனச் சொல்லிக் கொண்டிருக்கையில், "காபியெல்லாம் கொடுத்தாச்சு, குழந்தைங்ககூட வந்தாச்சு, இதோ வந்து விட்டேன்" என்று படபடப்புடன் கூறியவாறு கோகிலாவின் பிடியிலிருந்து போக முயன்றாள்.

"அத்தானுக்குச் செய்கிற உபசாரத்தில் என்னை அடியோடு மறந்து விட்டாயே, மங்கை! ஒரு மிடறு காபி கொடுக்கக் கூடாதா, எனக்கு?..." திலகவதி தமாஷாகச் சொல்லியதுகூட மங்கைக்கு விபரீதமாகப்பட்டது.

அவள் பதறிப் போய், "இதோ கொண்டு வருகிறேன், அக்கா, காபி! உங்களுக்குத்தான்..." என்று பேச்னச அரைகுறையாக நிறுத்திக் கொண்டே அடுக்களை நோக்கி வேகமாகப் போகலானாள்.

மங்கையின் பதட்டத்தைப் பார்த்து, கோகிலா, சில விநாடிகள் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றாள்.

திலகவதியின் குரலைக் கேட்டதுமே, கணேசன் புத்தகங்களை ஒரு மூலையில் வீசியெறிந்துவிட்டு, "அம்மா பின்னாலே இருக்காங்களா?..." என்று கேட்டவாறே தாயை நோக்கியோடினான்.

"எங்கே போகிறாய், கணேசா! காபி குடித்து வீட்டுப் போ, இதோ அல்வா..." என்று கூப்பிட்ட மங்கை, அவன் ஒரே பாய்ச்சலில் பின்புறமாக ஓடுவதையும் பார்த்து, "கோகிலா, தம்பியைக் கூப்பிடு, நீயும் வந்து பலகாரம் சாப்பிடு..." என்று கூறியவாறு அவர்களுக்குப் பட்சணங்களை எடுத்து வைக்கலானாள்.

கோகிலா குழாயடியில் போய் முகம், கை கால்களைச் சுத்தஞ் செய்யலானாள்.

கணேசன் ஆர்வத்தோடு அம்மா மடிமீது விழுந்து தழுவிக் கொள்ளப் போனான். “அடே, அடே! தூரவே நில்லு, கிட்டவராதே!” என்று கைகளை நீட்டித் தடுக்க முயன்றவாறு கூச்சல் போட்டாள் திலகவதி.

“ஏன், அம்மா! நான் கிட்ட வந்து தொட்டா தீட்டா ஒட்டிக்கும்?...” என்று கேட்ட கணேசன், “நான் பள்ளிக் கூடத்திலே யாரையும் தொடலேம்மா! எந்தப் பசங்களோடும் விளையாடல்லே... அப்படியிருந்தா சட்டையைக் கழற்றிப் போட்டுக் குளிச்சிட்டு வந்திருப்பேனே...” என்றான்.

“அதுக்கில்லேடா, நீ என்னைத் தொட்டுக்கப்படாது!...”

“ஏம்மா பறைச்சியாயிட்டியா? தொடாதவளா ஆயிட்டி டியா?”

“ஆமாம்...”

“போம்மா, நீ நினைச்சா இப்படி வந்து உட்கார்ந்துக்கிறது? என்னைத் தொடாதே என்கிறது? எல்லாம் என்னை ஏமாத்தத்தான். எனக்குத் தெரியும். நீ பறைச்சியுமில்லே; பாப்பாத்தியுமில்லே...”

“துஷ்டத்தனம் பண்ணாதே!”

“அதெல்லாம் இல்லே; உன்னைத் தொடத்தான் போறேன். தீட்டு ஒட்டிக்குதா என்று பார்க்கிறேன்.”

“நான் சொன்னா கேட்கமாட்டே?”...

“ஊஉம், நீ எழுந்து வந்து கை நிறைய சாக்லேட் கொடுத்தாத்தான் விடுவேன்...”

“சித்தியைப் போய்க் கேளு, கொடுப்பாள்...”

“சித்தி கொடுக்கமாட்டா! அதைத் தின்னு; இதைத் தின்னுன்னு எதையெதையோ கொடுப்பாளேயொழிய சாக்கலேட் மாத்திரம் தரமாட்டா, கேட்டா, ‘அதை அடிக்கடி தின்னப்படாது. வயிற்றிலே பூச்சி பிடிக்கும்’ என்பாள்...பொல்லாதவள் அம்மா...”

“இரு; இரு. சித்தி வரட்டும்; சொல்கிறேன்...”

“சொல்லேன், பயமா?”...

“அப்படியானால் அவளைக் கூப்பிடட்டுமா? மங்கை!”...

அதேசமயம், தட்டில் பலகாரமும் டம்ளரில் காபியும் எடுத்துக்கொண்டு வந்த மங்கை. “இதோ வந்துவிட்டேன். அக்கா!...” என்று குரல் கொடுத்தவாறு அங்கு வந்து, “முன்னாலேயே கொண்டு வந்திருப்பேன்...” என்று சொல்லி வருகையில், “கூப்பிடாதே அம்மா, சித்தியை” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வந்துவிட்ட மங்கையைப் பார்த்துத் திகைத்து நின்றிருந்த கணேசன், இதுதான் சமயமென்று, “ஆமாம்மா, சித்தி கண்ணிலே ஏதோ துரசு விழுந்துட்டுதாம். அப்பா துடைத்துக் கொண்டிருந்தார்.....” என்று குறுக்கிட்டுக் கூறினான்.

“என்ன?” என்ற கேள்வி திலகவதியின் அடிவயிற்றிலிருந்து எழுந்தது. அந்தத் தொனியில் ஒலித்த ஆங்காரத்தையுணர்ந்து மங்கை விதிர்விதிர்த்து விட்டாள்.

‘இல்லேம்மா, சித்தி கண்ணிலே விழுந்த தூசை அக்கா தான் ஊதி எடுத்திச்சு...’ என்று கணேசன் சொன்னான்.

“ஓ! அப்படியா!” என்று கேட்டுச் சிறிது தணிந்த திலகவதி “ஏன் மங்கை! நெருப்புப் பொறி பட்டுட்டுதா, என்ன?” என்று வினவி, “பார்த்து வேலை செய்யக்கூடாது?” என்று கூறி முடித்தாள்.

மங்கை ஏதோ சொல்ல வாயெடுத்தாள். இதற்குள் திலகவதி, “சரி, சரி! தட்டையும் தம்ளரையும் வைத்துவிட்டு அங்கே போய்க் கவனி. கணேசா, கூடப்போ...” என்று கூறினாள்.

மங்கை மெளனமாகப் போனாலும் அவள் மனம் குழம்பிப் போயிருந்தது. பின்னால் தொங்கும் முந்தானையைப் பிடித்து விஷமம் செய்துகொண்டு வரும் கணேசனக்கூட அவள் கவனியாமல் போகலானாள்.

“என்ன சித்தி!ஒரு மாதிரியாயிருக்கிறே?...” என்று விசுவ நாதம் கேட்டுக் கொண்டே எதிரே வந்தான்.

இக்கேள்வி அவளைத் திடுக்கிட வைத்ததாயினும் அடுத்த கணம் தன்னைச் சுதாரித்துக்கொண்டு, “ஓ! நீயும் வந்து விட்டாயா? வாருங்கள், எல்லோரும் பலகாரம் சாப்பிடலாம்” என்று கூப்பிட்டுக் கொண்டு போனாள்.

“கடைசி பீரியட் டிரில் கிளாஸ். உடம்பு என்னவோ போலிருந்ததால் கேட்டுக்கொண்டு வந்துவிட்டேன், சித்தி...!” என்று வழக்கத்தைவிடச் சீக்கிரமாக வந்துவிட்டதற்கு சமாதானம் சொன்னான் விசுவநாதன்.

“உடம்புக்கென்ன, விசுவம்?” என்று பரிவோடு கேட்ட மங்கை அவன் கையைப் பிடித்துப் பார்த்தாள். நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். மார்பில் கை வைத்துக் கவனித்தாள்.

“சுரம் கிரம் ஒன்னுமில்லை, சித்தி! என்னவோ சோர்வாயிருந்தது! அதுதான்...”

“அப்படியானல், நீ காபி சாப்பிடாதே! ஹார்லிக்ஸ் கலக்கிக் கொடுக்கிறேன்”... என்று கூறிக்கொண்டே விரைந்து போனாள்.

“சித்தியண்டை ஒன்னும் சொல்லிடக்கூடாது. ஒரேயடியா பயந்து போயிடும்!...அம்மாவுக்கு இருக்கிற நெஞ்சுத் தைரியம் சித்திக்குக் கிடையாது...” என்று போகும் மங்கையையே கவனித்துக் கொண்டிருந்த கோகிலாவைப் பார்த்துச் சொன்னாள் விஸ்வநாதன்.

“சித்தி சொல்வதற்கு எதிரா ஒன்னும் சொல்லாதே அண்ணா! அவங்க என்ன கொடுக்கிறாங்களோ அதைத் தடை சொல்லாமல் வாங்கிச் சாப்பிட்டு விடணும். அப்போதான் அவங்க மனசு சாந்தப்படும்...” என்று கூறிய கோகிலா, “ஊம். கணேசா! இப்படி வா, சித்தி வருவதற்குள் நாம் உட்கார்ந்து பட்சணம் சாப்பிடணும். இல்லையானா... தெரியுமோ, இல்லையோ!”. என்றாள்.

கணேசன் மங்கை போன திசையைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்தான். விசுவநாதன் புன்னகை புரிந்தவாறே அமர்ந்தான். அவ்விருவர் முன்பும் பலகாரத் தட்டையும் தண்ணீர் டம்ளரையும் எடுத்துவைத்துவிட்டு, கோகிலாவும் உட்கார்ந்து பலகாரம் சாப்பிடலானாள்.

மங்கை, இதற்குள் ஹார்லிக்ஸ் டப்பியை எடுத்து ஒரு கிளாஸ் டம்ளரில் இரண்டு மூன்று கரண்டி போட்டுக் கலக்கிக் கொண்டே வந்து வைத்தாள்.

இச்சமயம், “கோகிலா, கோகிலா! சித்தியண்டை சொல்லி இரண்டு பேருக்குப் பலகாரமும் காபியும் வாங்கிக் கொண்டு வா” என்று சதானந்தம் பிள்ளை சாப்பாட்டு அறையின் வெளிப்பக்கம் நின்றுகொண்டே சொன்னார்.

குரல் கேட்டு நிமிர்ந்து எதிர்ப்பக்கம் பார்த்த மங்கையர்க்கரசி, அத்தானைக் கண்டதும் சடக்கெனத் தலையைக் குனிந்து கொண்டாள். அவருக்கும் மங்கையை பார்த்ததும் வெட்க முண்டாயிற்று.

“இதோ எடுத்துக்கொண்டு வருகிறேன். அத்தான்’ என்று மங்கை, கோகிலா சாப்பிடுவதை விட்டுவிட்டு எழுந்திருப்பதைக் கண்டு, நீ உட்கார்ந்து சாப்பிடு, கோகிலா! நான் எடுத்துக்கொண்டு போகிறேன்” என்று கையமர்த்தினாள்.

சதானந்தம் பிள்ளை முகத்தைத் திருப்பிக் கொண்டே, “அவசரமில்லை, கோகிலா சாப்பிட்டுவிட்டே கொண்டு வரலாம். தயாரிப்புக்காக முன்னே வந்து சொன்னேன்... பலகாரம் இருக்கிறதோ இல்லையோ...நாங்கள் பேசிக்
கொண்டிருக்கிறோம்” என்று கூறிவிட்டுப் போகலானார். மனதை ஒருவிதமாகத் திடப்படுத்திக்கொண்டிருக்கும் ‘சமயத்தில் சில நிமிடங்களில் மீண்டும் மங்கையைப் பார்க்கக் கூடிய நிலை ஏற்பட்டுவிட்டதே’ என்று உள்ளத் துள்ளலை உணர்ந்து அவர் எண்ணினார். மங்கையைப் பார்த்துமே தம் மனவுறுதியும் கம்பீரமும் அதிகாரத்தோரணையும் பறி போய் விடுகிறதே என்று கருதி அவர் கருத்து அழிந்தார்.

சதானந்தம்பிள்ளை போய் உட்கார்ந்து, வந்திருந்த வெளியூர் நண்பர்களுடன் பேசத்தொடங்கிய சில கணங்களுக்கெல்லாம் மங்கை சிற்றுண்டிகளைக் கொண்டு வந்தாள். அத்தான் சொன்னாரே என்று அவசர அவசரமாக எடுத்து வந்தவள். வந்திருப்பவர்கள் முற்றும் புதிதாய் இருப்பதை யறிந்து தயங்கி நின்றாள். வேற்றார் முன் எப்படிப்போவது என்று அவள் வெட்கப்பட்டாள். சில விநாடிகள் மனதுடன் போராடிக் கடைசியாக, “அத்தான், அத்தான்!” என மெல்லக் கூப்பிட்டாள்.

மிக மெல்லிய குரலில் கூப்பிட்டாலும் மங்கையின் இனிமையான குரல் சதானந்தம் பிள்ளையின் கவனத்தை எப்படியோ ஈர்த்து விட்டது. உடனே அவர் எழுந்து வந்து மங்கை வைத்திருப்பதை வாங்கினார். வாங்கிய பதட்டத்தில் அவர் கைவிரல்கள் மங்கையின் கரங்களில் பட்டுவிட்டன. இப்படித் தொட்டதால் ஏற்பட்ட இன்ப உணர்ச்சி சதானந்தம் பிள்ளையைத் தடுமாற வைத்தது. மங்கைக்கும் இது மீண்டும் கிளுகிளுப்பை யுண்டாக்கிவிட்டது. ஆனாலும் அவள் சமாளித்துக் கொண்டு உடனே உள்ளே போகலனாள்.

சதானந்தம் பிள்ளை தடுமாற்றத்துடனேயே பலகாரத் தட்டுகளே எடுத்துப்போய் நண்பர்கள் முன் வைத்துச் சாப்பிடுமாறு உபசரித்தார்.

“வரும்போதுதான், காபி சாப்பிட்டு விட்டு வந்தோம். உட்லண்ட்ஸில் தான் தங்கியிருக்கிறோம்” என்றார் நண்பர்களில் ஒருவர்.

“பரவாயில்லை, கொஞ்சம் சாப்பிடுங்கள்.”

உள் பக்கமே பார்வையை ஒட்டிக் கொண்டிருந்த மற்றொரு நண்பர், சதானந்தம் பிள்ளையை நோக்கி “குழந்தை உங்க மகளுங்களா?” என்று மெல்லக் கேட்டார்.

இக்கேள்வி மங்கையின் மையலில் மனதை லயிக்கவிட்டுக் கொண்டிருந்த சதானந்தம் பிள்ளைக்குச் சவுக்கடி கொடுப்பது போலிருந்தது. அவர் எதிரிலிருந்த நிலைக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டார். முன் பக்கத்தில் லேசாக வெளுத்துவரும் தலை மயிர் அவர் மங்கைக்குத் தந்தை நிலையில் இருக்கத் தக்கவர்தான் என்று சாட்சி சொல்லியது. இந்நினைவில் சில வினாடிகள் ஸ்தம்பித்துப் போயிருந்த பிள்ளையவர்கள் சுதாரித்துக் கொண்டு, “இல்லை, என் மைத்துனி” என்று கூறினார்.

இக் கேள்வியும் பதிலும் மங்கையின் செவிகளிலும் விழலாயின. இவை அவளை என்னென்னவோ எண்ணச் செய்தன. இந்நிலையில் மீண்டும் அங்குப் போக விரும்பாமல் கோகிலாவிடம் காபி கொடுத்தனுப்பினாள்.

“இவள்தான் என் பெண்; ஒரே பெண் தான்” என்று காபி கொண்டு வந்து கொடுத்த கோகிலாவைக் காட்டிக் கூறினார் சதானந்தம் பிள்ளை.