உள்ளடக்கத்துக்குச் செல்

தும்பைப்பூ-நாவல்/அத்தியாயம் 9

விக்கிமூலம் இலிருந்து

9

உதய ஞாயிற்றின் கதிரொளி ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்து வெளிச்சத்தை அதிகமாக்கிக் கொண்டிருந்தது. அவ்வளவு அதிகாலையில் எறும்புகள் மேல் நோக்கிச் சாரி சாரியாகச் சுவரின் மீது போய்க் கொண்டிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை முட்டைகளைத் தாங்கியிருந்தன. கீச், கீச்செனச் சப்தமிட்டவாறு சிட்டுக் குருவிகள் ஜோடி ஜோடியாகப் பறந்து வருவதும் போவதுமாயிருந்தன. அவை தங்கள் சிறு மூக்குகளால் வைக்கோலையும் தென்னங் கீற்று இலைகளையும் கொத்திக் கொண்டு வந்து முகட்டில் வைக்கலாயின.

சதானந்தம் பிள்ளை சோபாவில் சாய்ந்தவாறு அன்று காலை வந்த "ஹிந்து" பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தார். அவர் போட்டிருந்த மூக்குக்கண்ணாடியின் தங்க விளிம்பில் சூரிய கிரணம் பட்டுத் தகதகத்தது. ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த அவர் ஒரு பக்கத்தில் பி. ஏ. பி. எஸ் ஸி. ஆனாஸ்., பி. ஓ. எல்முதலிய பரீட்சைகளின் 'ரிஸல்ட்' வந்திருப்பதைக் கண்டு 'நெம்பர்களைக்' கவனிக்கலானார். பி. எஸ் ஸி, ஆனர்ஸ். 'ரிஸல்டை' ஊன்றிக் கவனித்து வந்த அவருடைய முகத்தில் ஏமாற்றம் தோன்றலாயிற்று. அவர் ஒரு முறைக்கு மூன்று முறை அந்த 'ரிசல்ட்' நெம்பர்களைத் திருப்பித் திருப்பிப் பார்க்கலானார், கடைசியாக அவர் உதட்டைப் பிதுக்கிவிட்டுத் தலை நிமிர்ந்து அறைக்கு வெளியே கண்ணை ஒட்டி, "சிவா! ஏ! சிவா!" என்று கூப்பிட்டார்.

"பெரியண்ணாவையா கூப்பிடனும், அப்பா?" என்று கேட்டுக் கொண்டே கோகிலா அங்கு வந்தாள்.

"ஆமாம், அம்மா! அவன் இல்லையா?" சதானந்தம் பிள்ளை கோகிலாவைக் கேட்டார்.

"இதோ கூட்டி வருகிறேன். அப்பா! அண்ணா இப்போது தான் குளித்து விட்டு அறைக்குள் போச்சு."

"மெல்ல வரட்டும். அவசர மொன்றுமில்லை" என்று அவர் மெதுவாகச் சொல்லிவிட்டுப் பத்திரிகையில் மீண்டும் கண்களைப் பதித்தார்.

கோகிலா உள்ளே போன சிறிது நேரத்துக்கெல்லாம், சிவகுமாரன் பிள்ளையவர்கஸ் இருக்குமிடம் வந்தான். தந்தையார் காலைப் பத்திரிகையைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதுமே அவன் மனம் குழம்பியது. அவனுடைய உடம்பில் பதற்றம் காணப்பட்டது. தான் வந்திருப்பதைத் தெரிவிக்கக் கூட அவன் அஞ்சி நின்றான்.

தலையங்கப் பகுதியுள்ள பக்கத்தைப் புரட்டிவிட்டு மறு பக்கத்தைப் பார்க்க முயன்ற சமயத்தில், சிவகுமாரன் வந்து நின்றிருப்பதைத் தற்செயலாகக் கண்டுவிட்ட பிள்ளையவர்கள், "ஆமாம்; சிவா, உன் பரீட்சை நெம்பர் என்ன ?......." என்று கேட்டார்.

இவ்வினா சிவகுமாரனைக் கிடுகிடுக்க வைத்தது. அவன் முகம் அச்சத்தால் கருத்தது. தந்தை கூப்பிடுகிறார் என்ற போதே பரீட்சை 'ரிசல்ட்' பற்றி விசாரிக்கத்தான் அழைக்கிறார் என ஊகித்து அதற்கு என்ன பதில் சொல்வது என்று நடுங்கிய சிவன் இப்போது இன்னும் அதிகமாக விதிர் விதிர்ப்புக் கொண்டான்.

"501" என்று வாய் குழறச் சொன்னான்.

பிள்ளையவர்கள், "501 ஆ?" என்று கேட்டவாறே பரீட்சை 'ரிஸல்ட்' பிரசுரிக்கப் பட்டிருந்த பக்கத்தைத் திருப்பிப் பார்த்து, "அந்த நெம்பர் இல்லை போலிருக்கிறதே! அப்போதிலிருந்து தேடித் தேடிப் பார்க்கிறேன். ஒரு வேளை என் கண்களுக்குத்தான் தெரியவில்லையோ? நீ பார் இருக்கிறதா என்று?" எனச் சொல்லித் தாம் வைத்திருந்த தினசரியை மகனிடம் நீட்டினார்.

சிவகுமாரன் நடுங்கிய கையால் அப்பத்திரிகையை வாங்கினான். ஆனாலும், அவன் அதைப் பார்க்கத் தயங்கினான். ஏனென்றால் அவன் ஏற்கனவே தன் பரீட்சை 'ரிஸல்டை'ப் பற்றிக் கேட்டுத் தெரிந்து வைத்திருந்தாள், ஆனால், அதை அவன் தந்தையிடம் எப்படிச் சொல்வது என அஞ்சியிருந் தான். இப்போதோ சொல்லியாக வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. இதனிடையே அவன் மனதில் ஒரு சபலம் உண்டாயிற்று, ஒரு வேளை சர்க்கார் கெஜட்டில் தன் பாட்சை நெம்பர் வந்திருந்தால், இப் பத்திரிகையிலும் வெளியாயிருக்குமல்லவா? என்று, "கடவுளே! நான் 'பாஸ்' செய்ததாக நெம்பர் வந்திருக்கக்கூடாதா? நான் விசாரித் தறிந்தது பொய்யாகி விடலாகாதா?" என்று அவன் மனம் பிரார்த்தித்தது. அந்தச் சஞ்சல நெஞ்சத்தோடு அவன் பத்திரிகையில் வெளியாகியுள்ள பரீட்சை நெம்பர்களை ஊடுருவிப் பார்க்கலானான். அவன் பாஸ் செய்திருந்தால் தானே அவனுடைய பரீட்சை நெம்பர் வந்திருக்கும்? பல முறை பார்த்தால் வராதது வந்து விடுமா, என்ன? ஆனாலும் அவன் பஞ்சத்தில் அடிபட்ட ஒருவன் படியால் அரிசியைப் பலதடவை அளந்து குறுணி பதக்காகாதா என்று பார்ப்பது போலே, பரீட்சை 'ரிஸல்ட்' அச்சாகியுள்ள பத்தியைத் துழாவித் துழாவிப் பார்த்தான்.

"என்னடா, சும்மா பார்க்கிறாய்? உன் நெம்பர் இல்லையில்லையா?"

சதானந்தம் பிள்ளை பொறுமையை இழந்து கேட்டார்.

சிவகுமாரன் "காணவில்லை" என்று மெல்லக் கூறினான்.

"காணாமல் எங்கேனும் ஓடிப்போய் விட்டதோ! காண வில்லையாம். இப்படிச் சொல்ல உனக்கு வெட்கமில்லை?"

சிவகுமாரன் தலைகுனிந்து கொண்டு மௌனமாயிருந்தான்.

"உன் நெம்பர் எப்படி வரும்? நீ பரீட்சையில் நன்றாக எழுதியிருந்தால்தானே!......"

சிவன் இப்போது மெல்ல நிமிர்ந்து, "எல்லாம் நன்றாகத் தான் எழுதியிருந்தேன், அப்பா !......" என மிக மெதுவாகச் சொன்னான்.

"நன்றாக எழுதியிருந்தால் ஏன் பாஸ் மார்க் கிடைத்திருக்காது?" என்று பிள்ளையவர்கள் ஆத்திரத்தோடு கேட்டார்.

"பிஸிக்ஸ் சப்ஜக்டில் கொஞ்சம் மார்க் குறைவாகிவிட்டது. அப்பா!......." என மீண்டும் தலையைக் கவிழ்த்துக் கொண்டே அவன் பதிலளித்தான்.

"அப்போ உனக்குப் பரீட்சை 'ரிஸல்ட்' முன்னமே தெரிந்துவிட்டது என்று சொல்லு. அப்படியானால் அதை ஏன் என்னிடம் சொல்லவில்லை?..."

"நீங்கள் கோபித்துக் கொள்வீர்கள் என்று......"

"இப்போ கோபித்துக் கொள்ள மாட்டேனா?....."

சிவகுவாரன் பேசாமலிருந்தான்.

"ஆமாம். பரீட்டை 'ரிஸல்ட்' எப்படித் தெரிந்தது. ஒவ்வொரு சப்ஜக்டிலும் மார்க் இவ்வளவு கிடைத்திருக்கிற தென்று இவ்வளவு விவரமாக யார் உனக்குச் சொன்னது?"

சிவகுமாரன், "என்னுடைய வகுப்பு மாணவன் நீலகண்டன் என்பவனுடைய தகப்பனார், சர்வகலாசாலை ரிஜிஸ்டிரார் காரியாலயத்தில் வேலையாயிருக்கிறார். அவர் மூலமாக........"

"ஊம்; அப்படியா?" என்று யோசனையோடு கேட்ட பிள்ளையவர்கள், "அவன்களை ஏண்டா விசாரித்தாய்? நம்மவர்கள் எதிலும் தலையெடுக்கக் கூடாது என்று கங்கணங் சுட்டிக்கொண்டு வேலை செய்பவர்களாயிற்றே! விரோதியிடம் போய் ஜாதகம் கேட்பது போல......அவன்களண்டை ... போய்......அவன்களே கூட 'மார்க்'கைச் சுழித்து விட்டிருப்பான்களே! 'எக்ஸாமினர்கள்' போட்டிருப்பதைக் கூட அடித்து ......" என்று பேசிக்கொண்டே போனார்.

சிவகுமாரன் சஞ்சலத்தோடு தந்தையின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"நீ சரியாகப் படித்திருந்தால், இப்படியெல்லாம் ஏண்டா கேட்டு அலையணும்?....." என்று ஆதங்கத்தோடு கேட்ட... சதானந்தம் பிள்ளை, "உனக்குப் படிப்பின் மீது எங்கே கவனம் இருக்கு? 'அங்கே கூட்டம்; இங்கே பந்தாட்டம்' என்றல்லவா திரிந்து கொண்டிருக்கிறாய்? ஊர் விவகாரத்தில் கவனம் போய் விட்டால் உருப்பட்டாற்போல் தான். படிக்கிற பிள்ளைக்கு அரசியல், அந்தக்கட்சி இந்தக்கட்சி என்ற வம்பு தும்பு எதுக்கடா? காலாகாலத்திலே காலேஜுக்குப் போனோமா, திருப்பி வந்தோமா? என்றில்லாமல் ..."

கணவனுடைய உரத்த குரலைக் கேட்டுவிட்டு அங்கு வந்த திலகவதி, "என்ன இது காலையிவே? இரைச்சல்! சிவன் என்ன செய்தான்?....." என்று வினவினாள்.

"அத்தான் இவ்வளவு சத்தம் போட்டு எப்போதும் பேசியதில்லையே. என்னமோ ஏதோ" என்று எண்ணிய வளாய், அடுக்களையில் வேலை செய்து கொண்டிருந்த மங்கையர்க்கரசி கையில் துடுப்புடன் அக்காவின் பின்னாலேயே அங்கு வந்து பக்கம் ஒதுங்கி நின்று ஒற்றுக் கேட்கலானாள்.

மனைவியைப் பார்த்ததும் பிள்ளையவர்களுக்கு ஆத்திரம் அதிகமாயிற்று. "என்ன செய்தான? உன்மகன் படித்துக் கிழித்து விட்டான், நீ பெற்ற பிள்ளையின் பவிஷு இதோ பத்திரிகையில் சிரிப்பாய்ச் சிரிக்கிறது.........."

திலகவதி விஷயத்தைப் புரிந்து கொள்வதற்கு முன் மங்கை தெரிந்து கொண்டாள்.

"அப்போ சிவாவின் நெம்பர் பேப்பரிலே வரவில்லையா? இவன் பெயிலாகி விட்டானா, என்ன?" எனத் திடுக்கிட்டவாறு கேட்டாள் திலகவதி.

"ஜோஸியன் எவனாயினும் போகிறானா? பார்! தக்ஷிணை வைத்துக் கேட்போம்.........." என்று பிள்ளையவர்கள் ஏளனத்துடன் சொன்னார்.

"என்ன சிவா? நீ பரீட்சையிலே ........" என்று திலகவதி மகனை நோக்கிக் கேட்டு நிறுத்தினாள்.

சிவகுமாரன் முகத்தைக் கீழே கவிழ்த்துக்கொண்டான்.

இதைக் கவனித்த மங்கை, ஐயோ! சிவன் எப்படிக் ரூன்றிப் போயிருக்கிரன்? இவன் பரீட்சைக்கு இராத்திரி யெல்லாம் கண்விழித்துப் படித்தானே! எப்படி பாஸாகாமல் போய்விட்டது?' என்று எண்ணி வருந்தினாள்.

இந்தச் சமயத்தில் வெளி வராந்தாவிவிருந்து, "அண்ணா இருக்காங்களா?" என்று யாரோ குரல் கொடுத்தார்கள்.

எதிர் அறையிலிருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த விசுவநாதன் யார் என்று வெளிவந்து பார்ப்பதற்குள், பிள்ளையவர்கள், யார் அது? என்று பதிலுக்குக் குரல் கொடுத்தார்.

"ஓ! இருக்கிறீர்களா? நான்தான் மாசிலாமணி" என்று சொல்லிக்கொண்டே, மாசிலாமணி முதலியார் உள்ளே வந்தார்.

அவர் குரலைக் கேட்டபோதே, திலகவதி அவ்விடத்தை விட்டு அகன்றாள், அதற்கு முன்பே - மங்கை சமையற் கட்டுக்குப் போய்விட்டாள். சிவகுமாரன் ஒதுங்கி நின்று அவருக்கு வழி விட்டான்.

மாசிலாமணி முதலியார் வரும்போதே இரத்தப் பசையற்ற தம் கண்களால் அவ்விடத்தை ஆராய்ந்து கொண்டு வந்தார்.

இவரைப் பார்த்தவுடன், பிள்ளையவர்கள் ஆசனத்தை விட்டு எழுந்தவாறு, "வாருங்கள் முதலியார்வாள், வாருங்கள்" என்று வரவேற்று உட்கார வைத்தார். பின் தாமும் தம் இருக்கையில் அமர்ந்து, "ஆமாம், இன்றென்ன புது வழக்கமாயிருக்கிறதே! நான் இருக்கிறேனா என்று குரல் கொடுத்துவிட்டு வருவது?......" என்று கேட்டார்.

மாசிலாமணி முதலியார், "ஹிஹி, ஒன்றுமில்லை. அண்ணா ! நான் வாயிற்படியில் காலை எடுத்து வைத்தபோது, நீங்கள் ஏதோ உரத்த குரலில் கோபமாகப் பேசுவது போல் கேட்டது. சந்தர்ப்பப் பேதமாயிருக்குமோ என்றுகூட எண்ணித் தயங்கினேன். அப்படியே திரும்பிப் போய்விட்டுப் பின்னர் வரலாம் என்றும்......." என்று இழுத்தார்.

"அட ஓ! இதுதானா விஷயம்?" என்று புன்சிரிப்போடு கூறிய பிள்ளையவர்கள், "நான் உரத்துப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு ரொம்ப பயந்து விட்டீர்களோ?" என்று கேட்டார்.

மாசிலாமணி, "இல்லையண்ணா, நீங்க எப்போதும் இப்படிச் சத்தம் போட்டுப் பேசுவதில்லை யல்லவா? அதனால் தான்......"

பிள்ளையவர்கள், "என்ன! அஹிம்சாவாதி வீட்டில்கூட இப்படி அட்டகாசமாயிருக்கிறதே என்று எண்ணினீர்களில்லையா ?..."

மாசிலாமணி, "அஹிம்சாவாதியும் மனிதன்தானே, அண்ணா! எவ்வளவு சாத்தமூர்த்தியாயிருந்தாலும், மனிதனுக்குக் கோபதாபங்கள் இல்லையென்றால் அவன் மனிதனாயிருக்க ஒடியாது. அப்பேர்ப்பட்ட தேவாதி தேவனுக்குக் கூட....."

மாசிலாமணி முதலியார் வந்தவுடனேயே, அந்தச் சந்தடி சாக்கில் மெல்ல அவ்விடத்தைவிட்டுப் போய்விமுயன்ற சிவகுமாரன் காவெழாது இதுவரை தவித்துக் கொண்டிருந்தான், அவன் இருவர்க்கிடையிலும் பேச்சு மும்முரமாய் வரும் இச்சமயத்தில் ஓசைபடாமல் செல்ல அடியெடுத்து வைத்தான்.

வந்ததிலிருந்து அசடு வழிய நின்று கொண்டிருக்கும் சிவகுமாரன் மீத கடைக்கண் வைத்திருந்த மாசிலாமணி முதலியார் தம் பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு, "என்ன சிவா, நான் வந்ததும் போகிறாய்?-ஆமாம்; உன் பரீட்சை 'ரிஸல்ட்' தெரிந்ததா? அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலா மென்றால் நீ..." என்று கேட்டுக் குறும்பு நகை புரிந்தார்.

இது கேட்டு, சிவகுமாரன் திடுக்கிட்டு நின்று விட்டான்.

சதானந்தம் பிள்ளை, "நீங்கள் வரும்போது நடந்து கொண்டிருந்த ரகளைக்கு இதுதான் காரணம், பையன் பரீட்சையில் கோட் அடித்து விட்டான்" என்று புன் முதுவலை வருவித்தவாறு சொன்னார்.

ஏற்கனவே, தாம் வரும்போது அரைகுறையாக விழுந்த வார்த்தைகளாலும் அங்கு நிலவியிருந்த சூழ் நிலையாலும் விஷயத்த ஒருவாறு ஊகித்திருந்தும் மாசிலாமணி முதலியார் ஒன்றும் தெரியாதவர்போல் பாசாங்கு செய்தவாறு, "என்ன! சிவனின் பரிட்சை ரிஸல்ட் என்ன ஆயிற்று என்கிறீர்கள்? பெயிலாகிவிட்டானென்ற சொல்கிறீர்கள்?" என்று வியப்புத் தோன்றக் கேட்டார்.

ஏற்கனவே அவமானத்தால் குன்றிப்போயிருந்த சிவகுமாரன், முதலியாருடைய கேள்விக்கு அப்பா என்ன விதமாகப் பதில் சொல்வாரோ என்ற அச்சத்தோடு குனிந்த தலையை நிமிராமலே கடைக்கண்ணால் நோக்கினான்.

தம்முடைய மகன் பரீட்சையில் பெயிலாகிவிட்டான் என்பதை, சதானந்தம்பிள்ளை தம் வாயாலேயே சொல்லச் சிறிது சங்கடப்பட்டார். ஆனாலும் கேட்டதற்குப் பதில் சொல்லியாக வேண்டிய நிலையில் இருந்ததை நினைத்து, "நிலைமையைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியவில்லையா? 'ரிஸல்ட்' என்னவிதமாய் இருந்திருக்கும் என்று. நீங்கள் வரும்போது நான் உரத்த குரலில் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தேன் என்றால், அது எதற்காக இருக்கும் என்று தெரிந்துகொள்ள உங்களுக்கு அதிக நேரம் ஆகுமா? இவனுடைய பரீட்சை ரிஸ்ல்ட் இன்று காலைப் பத்திரிகையில்தான் வெளியாகியிருக்கிறது...... " என்று ஒரு தினுசாக மறுமொழி கூறினார்.

மாசிலாமணி முதலியார் நரைத்த புருவங்கள் நெற்றியில் ஏற, அப்படியென்றால் சிவன் பாஸாகவில்லையா?” என்று வியப்போடு வினவி விட்டு, சிவகுமாரன் பக்கந் திரும்பி, "ஏன் சிவா! அப்பா சொல்வது உண்மையா? அல்லது விளையாட்டுக்கு...” என்று கேட்டு நிறுத்தினார்.

சிவகுமாரன் விவரிக்க வொண்ணாத வேதனையோடும், வெட்கத்தோடும் மேலும் தலையைக் குப்புறக் கவிழ்த்துக் கொண்டான்.

விடாக்கண்டரான முதலியார் வெந்த புண்ணில் வேலைச் செருகுவதுபோல் பேசினார். "என்னால் கொஞ்சமும் நம்பவே முடியவில்லையே! சிவன் பாஸ் ஆகவில்லையென்றால், வேறெந்தப் பையனுமே இப்பரீட்சையில் பாஸ் ஆகியிருக்க முடியாது...ஆமாம்..."

திலகவதியும் மங்கையர்க்கரசியும் உள்பக்கத்தில் இருந்தவாறே இவர்களுடைய உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்தச் சமயத்தில் 'இந்த மனுஷன் வந்து தொலைந்தானே! எக்கச்சக்கமாக ஏதாயினும் சொல்லி அத்தானுடைய கோபத்தை அதிகப்படுத்தி விடுவானோ என்னவோ!' என்று மங்கை அஞ்சலானாள்.

மங்கைக்கு மாசிலாமணி முதலியாரிடத்தில் நல்ல அபிப்பிராயங் கிடையாது. முதன்முதலாகப் பார்த்தபோதே அவளுக்கு அவரைப் பிடிக்கவில்லை. 'எங்கு என்ன இருக்கிறது? என்ன நடக்கிறது?’ என்று, அறிவதிலேயே ஆவல் கொண்டவராய் நாலாடக்கமும் பார்வையைச் சுழலவிட்டுப் பார்க்கும் கழுகுப் பார்வையும், எப்போது பார்த்தாலும் ஊர் அக்கப் போரையே அளந்து கொண்டிருக்கும் வம்புப் பேச்சும் அவளுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. பிறரைப்பற்றி எப்போதும் குறைகூறிக் கொண்டிருக்கும் இவர் அத்தானைப் பற்றியும், அவர் குடும்பத்தைப் பற்றியும் பிறரிடம் அக்கப் போர் அளக்காமலிருப்பார் என்பது என்ன நிச்சயம்? அத்தகைய மனிதரிடம் உத்தமரான அத்தான் எப்படி நட்பு வைத்துக் கொண்டிருக்கிறார் என்று அவள் அடிக்கடி எண்ணி வியப்பதுண்டு. ஆனால் அக்காளும் அவர்பால் மரியாதை காட்டி நடப்பதைப் பார்த்து, தான் அவசரப்பட்டு யாரிடமும் அவரைப்பற்றி அபிப்பிராயம் வெளியிடக் கூடாது என்று அடக்கிக் கொண்டாள். ஆனால் இச்சமயத்தில் அவளுடைய மன உணர்ச்சியை அடக்கிக் கொள்ள முடியவில்லை. 'கட்டையிலே போகிறவன். இச்சமயத்தில் வந்து தொலைந்தானே!' என்றுதான் தன் மனத்துக் குள்ளாகச் சபித்துக் கொண்டாள்.

'பரீட்சையில் தவறிவிட்ட அண்ணனுக்கு அப்பா என்ன விதமான தண்டனை கொடுப்பாரோ? வைவாரோ?' என்ற அச்சத்துடன் விசுவநாதன் தன் அறையிலிருந்து, இவ்விடத்தை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். சதானந்தம்பிள்ளே மாசிலாமணி முதலியாரை வியப்பாக நோக்கி, என்ன முதலியார்வாள், அப்படிச் சொல்லு கிறீர்கள்? சிவன் விஷயத்தில் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை எ ப் படி யு ண் டா யி ற் று? நீங்கள் என்ன கண்டீர்கள்?......” என்று கேட்டார்.

மாசிலாமணி முதலியார் பொக்கை விழுந்த வாயை அகலத் திறந்து கலகலவென நகைத்தவராய், "நான் எங்கு இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், அண்ணா எங்கெங்கு என்ன நடக்கிறது? யார் யார் என்ன செய்கிறார்கள்?’ என்று எனக்கு இருந்த இடத்திலிருந்தே எல்லாம் தெரியும்...... ' என்றார்.

சதானந்தம்பிள்ளை, "அதுதான் எனக்கு நன்றாகத் தெரியுமே! நீங்கள் நாரதர்போல் சர்வலோக சஞ்சாரி; சகலமும் அறிந்தவர் என்று..." தமாஷாகக் கூறிக் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்.

"ஆனால் அண்ணா! நாரத முனிக்குள்ளதாகச் சொல்லும் கலகஞ் செய்யும் குணம் மட்டும் எனக்குக் கிடையாது....”

"இருந்தால்தான் என்ன! நாரதர் கலகம் நன்மையிலே முடியும் என்று சொல்வார்களே? அதுபோல, நீங்கள் செய்கிற கலகமும்..."

"நன்மையாக முடியுமோ, தீமையாக முடியுமோ! குண்டுணித்தனம் செய்து ஒருவர் சிண்டை மற்றொருவருடன் முடி போடும் மோசமான குணம் எங்கள் வீட்டு வேலைக்காரிக் குக்கூட கிடையாது. அண்ணா! நீங்கள் நிச்சயமாக நம்புங்கள்......"

"நான் உங்களைப்பற்றி எப்போதேனும் எதற்காயினும் சந்தேகித்ததுண்டா? திடீரென உங்களுக்கு ஏன் இப்போது அந்த விசாரம் வந்தது!...”

சிவன் பேச்சிலிருந்து தொடங்கி இப்படி ஏதோ ஒரு தினுசாகப் பேச்சு வந்து முடிந்திருக்கிறது. அது போகட்டும். நாம் எதைப்பற்றி முதலில் பேச்சை ஆரம்பித்தோமோ அவ்விஷயத்துக்கு வருவோம்...”

சதானந்தம் பிள்ளை எதையோ நினைவு கூர முயல்பவர் போல, முகத்தில் சிந்தனை ரேகையைப் படர விட்டு,

எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம் ..!" என்று கேட்டார்.

"இதற்குள் மறந்து விட்டதா?" என்று வினவிய மாசிலாமணி முதலியார், பாவம்! உங்களுக்கு எத்தனையோ வேலைகள், கவலைக்கோ கணக்கில்லை. இந்நிலையில் எந்த விஷயந்தான் உங்களுக்கு எப்படி ஞாபகமிருக்கும்? இந்த நிமிஷத்தில் நினைத்தது அடுத்த கணத்தில்.." என்று அளந்து கொண்டே போனார்.

சரி. சரி; முதலியார்வாள்! நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்' என்று சகானந்தம் பிள்ளை இடை மறித்துக் கூறினார்.

மாசிலாமணி முதலியார், "சொல்லத்தானே போகிறேன்!" என்று கூறியவாறு மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மேல் உத்தரீயத்தின் முனையால் துடைத்துப் போட்டுக் கொண்டு, சிவன் வாசிக்கும் கல்லூரியில் நம்ம மைத்துனனின் பையனொருவனும் படிக்கிறான். சச்சிதானந்தம் என்பவனை உனக்குத் தெரியுமோ, சிவா...'

சிவகுமாரன் வாயைத் திறக்கவேயில்லை.

மாசிலாமணி சுதாரித்துக் கொண்டு, "உனக்கு எப்படித் தெரியும்? அவன் கீழ் வகுப்பு. ஆயிரம் பேருக்கு மேல் படிக்கும் கல்லூரியில் யாரை யார் தெரிந்து கொள்ள முடியும்? ஒரே வகுப்பில் படிப்பவர்களிலேயே எல்லோரையும் தெரிந்து கொள்ள முடியாதே! அப்படியிருக்க...... ’’ என்று இழுத்தார்.

சதானந்தம் பிள்ளைக்கு இவருடைய பேச்சின் போக்கு சிரிப்பை வருவித்தது. ஆனலும் அவர் அதை அடக்கிக் கொண்டார்.

மாசிலாமணி முதலியார் மீண்டும் ஆரம்பித்தார். ஆனால், அண்ணா! நம்ம சிவனே, அந்தக் காலேஜிலுள்ள எல்லோருக்குந் தெரிந்திருக்கிறது. அவனுடைய தீட்சணிய புத்தியையும் திறமையையும் புரொபஸர்களெல்லாம் கூடப் பாராட்டுகிறார்களாம்."

சதானந்தம் பிள்ளை புன்முறுவலோடு, ! என்ன முதலியார்வாள் கதை சொல்லுகிறீர்களா? அல்லது...."

மாசிலாமணி, "என்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? நான் சொல்வது உங்களுக்கு வேடிக்கையாகத்தான் இருக்கும். உங்கள் பிள்ளையைப்பற்றி சொல்கிறேனே இல்லையோ! எப்போதும் தங்கள் கையிலுள்ள சரக்கைப் பற்றி-அது விலை மதிப்பற்றதாக இருந்தாலும் சரியான மதிப்புத் தெரியாது. பிறருக்குத்தான் அதன் நன்மை நன்கு தெரியும். சிவனைப் பற்றி நீங்கள் என்னமோ எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையாகச் சொல்கிறேன். அவன் படிப்பிலே பிரகஸ்பதியையும் தோற்கடிக்கக் கூடியவன்; சாதுரியத்திலே சாணக்கியனையும் விஞ்சியவன். அவன் காலத்திலே உங்களைவிடப் பன்மடங்கு பிரசித்தியாக இருப்பான். எதிர்காலத்திலே ஜெயப்பிரகாஷ் நாராயணன், சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு முதலிய தலைவர் களைப் போல இணையற்று விளங்கி நம் நாட்டுக்குப் பேரும் புகழும் வாங்கித் தருவான்; தெரியுமா!......"

"போதும்; போதும். முதலியார்வாள்! போதும்" என்று குறுக்கிட்டார் சதானந்தம்.

மங்கை இப்போதுதான் மூச்சைச் சரியாக விடலானாள். திலகவதியும் கீழே உட்கார்ந்து விட்டாள்.

தந்தையின் கடுமொழியைவிட மாசிலாமணி முதலியாரின் புகழ்மொழி சிவகுமாரனை மிகவும் கதி கலக்கியது. இந்த மனிதன் எதற்காக இவ்வளவு பீடிகை போடுகிறானே என்று அவன் அஞ்சினான்; ஆதலால் மெல்ல அவ்விடத்தை விட்டு நழுவிப் போக முயன்றான்.

இதைக் கண்டுவிட்ட மாசிலாமணி, "சிவா! எங்கே போகிறாய்? இரு, அப்பா! உன்னிடம் சில வார்த்தை சொல்ல வேணும்” என்று கூறி அவனைத் தடுக்கலானார்.

சதானந்தம், "அவன் போகட்டும், முதலியார்வாள்! அப்புறம் பேசிக் கொள்ளலாம்......” என்று கூறி அவனைப்  போகச் செய்தார். அவனை எதிரில் வைத்துக் கொண்டே அவனைப் பற்றி வானளாவப் புகழ்கிறாரே! இங்கிதந் தெரியாத மனுஷன் என்று அவருக்கு வருத்தமுண்டாயிற்று. அவருடைய மனக் குறிப்பையறியாத மாசிலாமணி முதலியார், நான் கேள்விப்பட்ட வரை சிவன் தன் வகுப்பிலே எல்லாவற்றிலுமே முதன்மையாக விளங்கிக் கொண்டிருந்தாளும். அவன் விசேஷ பாடமாக எடுத்துக் கொண்டுள்ள பூத பெளதிக சாஸ்திரத்தில் மேதாவிலாசத்துடன் இருந்தான் என்று சொல்லுகிருர்கள். அப்படியிருக்க, அவன் பரீடசையில் பாஸாகவில்லையென்றால், அதில் ஏதோ சூது நடந்திருக்கிறது. கடைசியில் நான் கேள்விப்பட்டது சரியாகத்தான் போய் விட்டது..."

சதானந்தம் குறுக்கிட்டு, "இதில் என்ன முதலியார்வாள் சூது நடந்திருக்க முடியும்? நீங்கள் என்ன கேள்விப்பட்டீர்கள்?...... யார் என்ன சொன்னார்கள்?...... "

மாசிலாமணி, உங்களுக்கு உலகமே ஒன்றுந் தெரியாது. வெளுத்த தெல்லாம் பால் என்று எண்ணும் சுபாவமுள்ளவர்களுக்குச் சூதும் வாதும் எங்கே தெரியப்போகிறது? எல்லா ரையும் உங்களைப்போலவே பரப்பிரமம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்...நான் சொல்லுகிறேன். சிவனைப் பெயிலாக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு யாரோ சிலர் பரீ௸திகாரிகளைப் பார்த்து வேலை செய்திருக்கிறார்கள். உங்களுடைய அரசியல் விரோதிகள் மட்டுமல்ல; சிவனுடைய தீவிரப் போக்கு பிடிக்காத கல்லூரி நிர்வாகிகள் சிலர் கூட இவனைக் கவிழ்க்கும் சூழ்ச்சியில் கலந்து கொண்டிருக்க வேண்டும். இல்லாவிடில் எல்லாப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மார்க்கு வாங்கக்கூடிய மாணவனை நன்றாக விடையெழுதியுள்ள மாணவனைப் 'பெயி'லாக்க முடியுமா? நான் சொல்வது பொய்யென்றால், நீங்கள் அவன் எழுதியுள்ள விடைத்தாள்களை வாங்கிப் பாருங்கள்' என்று அழுத்தந்திருத்தமாகக் கூறினார்.  இது கேட்டு சதானந்தம் பிள்ளை பிரமை பிடித்தவர் போல் உட்கார்ந்து விட்டார். மாசிலாமணி முதலியார் சிவகுமாரனைப் பற்றி நல்ல விதமாக அபிப்பிராயஞ் சொல்லத் தொடங்கியதுமே, மகிழ்ச்சியும், திருப்தியும் கொண்டு அடுக்களை வேலையைக் கவனிக்கப் போய் விட்ட மங்கை இச்சமயம் திரும்பி வந்தாள். திலகவதி மிகக் கவனமாகக் கூடத்தில் அமர்ந்து பேசுபவர்களுடைய பேச்சைக் கேட்பதைக் கண்டதும் ஏதோ முக்கியமான பேச்சு என்று எண்ணி அவளும் ஒற்றுக் கேட்கலானாள்.

சதானந்தம், நான் யாருக்கும் ஒரு தீங்கும் செய்யவில்லையே! சிவன்தான் என்ன அப்படித் தீவிரவாதியாயிருக்கிறான்? எந்த விஷயத்தில் இருக்கிருன்? எனக்கு ஒன்றும் புரியவில்லை, முதலியார்வாள்!’ என்று வருத்தந் தொனிக்கக் கூறினார்.

மாசிலாமணி, நல்லவர்களுக்குத் தானே கெட்டது. செய்வது, இந்தக் காலத்துத் தருமமாயிருக்கிறது! பதவி வேட்டையாடுவதற்காகச் சந்தர்ப்பம் போல் வேஷம் போட்டுக் கூத்தாடும் சுயநலக் கூட்டத்தாரோடு சேர்ந்து நீங்கள் தாளம் போடவில்லையல்லவா! அது இன்று ஆட்சிப் பீடத்தில் இருப்பவர்களின் கண்களைக் கரிக்கிறது. அத்துடன் உங்கள் பிள்ளை கருப்பிலும், சிவப்பிலும் அதிகம் கவனம் செலுத்துகிறாளும், அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் செயலாளர்களில் ஒருவளாயிருக்கிறாளும்......'

"இருந்தால் என்ன? கல்லூரி மாணவனாயிருக்கும் அவன் மாணவர் சங்கத்தில்....."

"சேர்ந்து வேலை செய்யலாம், அண்ணா ஆனால் மேற்படி சம்மேளனம் இப்போது கம்யூனிஸ்டு கட்சியின் மனோபாவமுடையவர்களுடைய ஆதிக்கத்தில் இருக்கிறதாம். அதனால் தான், காங்கிரஸ் சார்புடைய மாணவர்களுக்கும் இதிலிருந்து பிரிந்து தனிச் சங்கம் ஏற்படுத்திக் கொண்டார்களாம். இவ் விஷயங்களெல்லாம் உங்களுக்குத் தெரியாதே!...”  இந்த இழவையெல்லாம் யார் கவனிக்கிறார்கள்......?”

"நம்ம சிவன் மேற்படி மாணவர் சம்மேளனத்தில் பொறுப்பேற்ற பின்னர், எல்லாக் கிளர்ச்சிகளிலும் முன்னணியில் இருக்கிறாளும். அவன் இவ்விதம் இருப்பது உங்களுக்கு உடன்பாடாய்த் தானிருக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். நீங்கள் ஸ்தாபனத்துக் குள்ளிருந்து கண்டிக்க முடியாதவற்றை, உங்கள் பிள்ளையைக் கொண்டு வெளியில் கண்டிக்கச் சொல்லுகிறீர்கள் என்பது ஆட்சியிலிருப்போரது அபிப்பிராயம்....."

"அட, மடப் பயல்களா? இவர்களுடைய தவறான போக்கைக் கண்டிப்பதற்கு என் தநயனையா ஏவவேண்டும்? எனக்குத் தைரியமில்லையா? இவர்கள் செய்யக் கூடிய தகாத செய்கைகளைக் கண்டிக்க வேண்டுமென்றால் நானே கண்டித்து விட்டுப் போகிறேன். என் பிள்ளையிடம் சொல்லிக் கண்டிக்க வேண்டிய அவசியம் என்ன? ஏன் காங்கிரஸ் சுதந்திரம் பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் பதவிப் போட்டிக்காக நடந்த தில்லுமல்லுகளையும், முறை தவறாண காரியங்களையும் நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலும் எத்தனையோ முறை கடுமையாகக் கண்டித்திருக்கிறேன். அப்படியிருக்க ...."


இதெல்லாம்தான் அவர்களுக்கு மனக் கடுப்பு. இவற்றைக் கருத்திற் கொண்டுதான் அவர்கள் உங்களைக் கண்டால் கடுவன் பூனை போல் இருந்து கொண்டு உங்கள்மீது பழி தீர்த்துக் கொள்ளச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்......'

"பேடிப்பயல்கள்.இவர்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொள்ளட்டும். இதற்கெல்லாம் பயந்து விட்டால், உலகில் மனிதன் வாழ முடியுமா?......”

மாசிலாமணி முதலியார் இரக்கமாகப் பேசத் தொடங்கினார்-குரங்கு கையில் பூமாலை அகப்பட்டமாதிரி அவர்கள் கரத்தில் அதிகாரம் அகப்பட்டு விழிக்கிறதே, அண்ணா! அவர்கள் என்ன செய்தால் யார் கேட்க முடியும்? தலைமை அரசாங்கத்துக்கு இங்குள்ள நிலைமை தெரிவதில்லை. தெரிந்தாலும், 'ஆளைப் பார், முகத்தைப் பார்' என்று தாட்சணியம் பார்க்கிறார்கள். நீங்களோ சட்ட சபையில் வகித்து வந்த அங்கத்தினர்பதவியையும் மற்றப் பதவிகளையும் உதறித் தள்ளிவிட்டீர்கள். உங்களுக்கு உத்தியோக தோரணையில் செல்வாக்கோ, அதிகாரமோஎதுவுமில்லை, இந்நிலையில்......"

"ஏன் தயங்குகிறீர்கள்? தாராளமாகச் சொல்லுங்கள், முதலியார்வாள்! என்னை அவர்கள் அப்படியே விழுங்கி விடுவார்கள் என்கிறீர்களா? பயந்து நான் மூர்ச்சை போட்டு விட மாட்டேன். வெளிப்படையாகச் சொல்லுங்கள்... "

மாசிலாமணி, கொஞ்ச காலத்துக்கு நீங்களும் உங்களுடைய அபிப்பிராயங்களை வெளிபடையாகச் சொல்லாமலிருங்களேன். நமது சிவன், விசுவம் ஆசியவர்களையும் எதிலும் கலந்து கொள்ளாமல் இருக்கச் சொல்வது நல்லது. கருணை சிறிதுமில்லாத கொடியவர்களின் ஆட்சி குமைகிற காலம் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது, அண்ணா ! அது வரை..."

சதானந்தம், "நீங்கள் இப்படிச் சொல்வதன் நோக்கம் என்ன? முதலியார்வாள்! நீங்கள் எதையோ மனதில் வைத்துக் கொண்டுதான் இவ்விதம் பேசுகிறீர்கள். இதன் பொருள்......."

"அயோக்கியர்களின் பொல்லாப்பு நமக்கு எதற்கு அண்ணா? உள்ளத்தை உள்ளபடி சொல்லும் இயற்கையுள்ள நீங்கள், ஊழலைக் காணச் சகியாது. களைந்தெறிய முயலும் நீங்கள், வெளியில் சுதந்திரமாக உலவி வரும்வரை தங்களுடைய , சுய நலக் காரியங்களை தாராளமாகச் சாதித்துக் கொள்ள முடியாதென்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால்..."

"அதனால், என்னை உள்ளே தள்ள ஏற்பாடு செய்து வருகிறார்கள் என்கிறீர்கள்; இல்லையா?"

"நான் மட்டும் சொல்லவில்லை. அவர்கள் அபிப்பிராயமும் அது தான் என்பதை அறிந்தே சொல்லுகிறேன்...எதற்கும் சிவனையும் விசுவத்தையும் கம்யூனிஸ்டுகளின் கூட்டங்களுக்கும் திராவிட கழகத்தினரின் கூட்டங்களுக்கும் போக வேண்டாமென்று சொல்லி வையுங்கள்."

"நான் எப்படிச் சொல்ல முடியும்? தந்தை என்பதற்காக அறிவு வந்த பிள்ளைகளின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது மரியாதையாகுமா? சொன்னால்தான் இந்தக் காலத்துப் பிள்ளைகள் கேட்பார்களா...?"

"சொல்லவேண்டியதைச் சொல்லத்தான் வேண்டும். கண்டிக்க வேண்டியதைக் கண்டிக்கத்தான் வேண்டும். இப்போது பரீட்சையில் தவறி விட்டதற்காக, சிவனை நீங்கள் கடிந்து கொள்ளவில்லையா!..."

சதானந்தம்பிள்ளை யோசனையில் ஆழ்ந்தார்.

மாசிலாமணி முதலியார், "அண்ணா, நான் ஏன் இவ்வளவு தூரம் வற்புறுத்துகிறேன் என்றால், போலீஸ் மந்திரி கோமதி நாதன் உங்கள மடக்குவதற்குமுன், சிவனை புரட்சிக் கொள்கையுள்ள கட்சியில் சேர்ந்திருப்பவன் என்று காரணம் சொல்லிக் கண்ணி வைத்துப் பிடித்து உள்ளே தள்ளச் சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறான்...முன்னமேயே ஒருமுறை அவனைக் காரணமாக வைத்து உங்கள் வீட்டைச் சோதனை போடத் திட்டம் போட்டான். ஆனால் முதல் அமைச்சர் அதற்கு இடந்தரவில்லை..."

இச்சமயம் 'ஆ!' எனப் பெரும் கூச்சல் உள்ளே இருந்து கேட்கவே, "என்ன இது? என்று கேட்டுக் கொண்டே சதானந்தம் பதறியெழுந்தார். இதற்குள், கோகிலா, அங்கு ஓடி வந்து, "அம்மா. மூர்ச்சை போட்டு விழுந்திட்டாங்க, அப்பா!" என்று பயத்தால் படபடக்கச் சொன்னாள்.

 சதானந்தத்தின் உடல் பதறியது. இரண்டு எட்டில் அவர் உள்பக்கம் தாவினார். மாசிலாமணி முதலியாரும் திகைப்புற்றவராய்ப் பின் தொடர்ந்தார்.

இவர்களுக்கு முன் சிவகுமாரனும் விசுவநாதனும் உள்ளே போயிருந்தனர், ஆனால் தாய் காக்கை வலிப்புப் போல் இழுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் திகைத்து நின்றுவிட்டனர். சதானந்தமும் செய்வதறியாமல் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.

திலகவதியைத் தூக்கி மடியில் தாங்கியவாறு ஆஸ்வாசப்படுத்திக் கொண்டிருந்த மங்கையர்க்கரசி அத்தானைப் பார்த்ததும் கதறிவிட்டாள்.

"என்ன? என்ன நேர்ந்தது? ஏன் அக்கா...?" சதானந்தம் வாய் குழறத் தட்டுத் தடுமாறிக் கேட்கலானார்.

மங்கை அக்காவை ஒருமுறை பார்த்துவிட்டு அத்தானை நோக்கி, "நீங்கள் சிவா விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தீர்களல்லவா? அரசாங்கம் என்னமோ உங்கள் மீதும் நடவடிக்கையெடுக்க முயன்று கொண்டிருப்பதாக அண்ணா சொன்னதைக் கேட்டதும் அக்கா பதறிப் போய்ச் சாய்ந்து விட்டார்கள்..." என்று விவரித்தாள்.

அப்போதுதான் தன் மனைவியின் முகத்தைக் குனிந்து கவனித்த சதானந்தம் அவள் முகம் கோணலாக இழுத்துக் கொண்டிருப்பதைக் கண்டதும், "அடடா! பகவாதமல்லவா திடீரெனத் தாக்கியிருப்பதாகத் தெரிகிறது?..." என்று அவர் வாய் விளம்பியது.

"எதிர்பாராத தொன்றைக் கேட்ட அதிர்ச்சியால் இப்படி ஏற்பட்டிருக்குமா?..." என்று யோசனையோடு மாசிலாமணி முதலியார் சொன்னார்.

சதானந்தம் சிவகுமாரன் பக்கந் திரும்பி, "சிவா! உடனே போய் நம்ம டாக்டரைக் கையோடு அழைத்து வா" என்று கட்டளையிட்டார்.

அவன் இரண்டு மூன்று அடி எடுத்து வைத்துக்கூட இருக்கமாட்டான். இதற்குள் அவர் விசுவநாதனை நோக்கி, "எதற்கும் நீ போனில் டாக்டரைக் கூப்பிட்டுத் தகவல் சொல்லி உடனே வரச் சொல்" என்று பதட்டந்தோன்றச் சொன்னார்.

விசுவநாதனும் ஒடினான்.

சதானந்தம் பிள்ளை கீழே குனிந்து மனைவியின் நாடியைத் தொட்டுப் பார்த்தவாறு, "கோகிலா! கொஞ்சம் குளிர்ந்த நீர் கொண்டு வா" என்று கூறினார்.

கோகிலா பின் பக்கம் போனாள்.