தென்னாட்டு காந்தி/மகாத்மா வாழ்த்துவார்!

விக்கிமூலம் இலிருந்து

◯ இந்தி சீனி பாய்! பாய்
◯ என்று சொல்லி,
◯ நம்மையும்
◯ சொல்ல வைத்தவன்
◯ சீனாக்காரன்.
◯ மண் ஆசை அவனுக்கு
◯ மரணவெறியை
◯ ஊட்டி விட்டிருக்க
◯ வேண்டும்.
◯ அவனுக்கு அண்ணன்
◯ பாகிஸ்தான் காரன்!
◯ பாரதம் பண்பிற்கு
◯ உறைவிடம் அல்லவா!
◯ கருத்து வேறுபாடுகளை
◯ ஒதுக்கி வைத்தார்கள்
◯ கட்சித் தலைவர்கள்.
◯ களம் புகுந்தார்கள்.
◯ நம் நாட்டுக்கு
◯ என்றுமே
◯ எழுச்சியூட்டும்,
◯ நமது
◯ அமரத் தலைவர்களின்
◯ அறவுரைகள்!


மகாத்மா வாழ்த்துவார்!

மகாத்மா வாழ்த்துவார்!

பாரதநாடே! உன்னுடைய பெண்மையின் இலட்சியம் சீதா தேவியும், சாவித்திரியும், தமயந்தியும் என்பதை மறவாதே! நீதொழும் தெய்வமாகிய உமாபதி யோகியரில் சிறந்த யோகி, தியாகியரில் சிறந்த சங்கரன் என்பதை மறவாதே. இந்தியனே ! உன் மனமும் பணமும் வாழ்வும் ஐம்புலன்களால் எய்தக்கூடிய இன்ட துன்பத்துக்காக ஏற்பட்டதல்ல: உன் ஒருவனுடைய சுய இன்பத்துக்காக ஏற்பட்டதல்ல என்பதை மறவாதே. அம்பிகையின் நைவேத்தியபீடத்தில் அவளுக்கு நிவேதனமாவதற்கே ஒவ்வோர் இந்தியனும் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை மறவாதே! ஜகன்மாதாவுடைய இயல்பின் பிம்பமே இந்தியாவின் சமூக அமைப்பு என்பதையும் மறவாதே, இழிந்தகுலத்தோடும், அறிவற்றவரும், வறியர்களும்: செருப்புத்தைப்போரும், தோட்டிகளும் உன்னுடன் இரத்த சம்பந்தம் உள்ள சோதரர் என்பதை நினைவு வைத்திரு!

இந்தியனே! நீ வீரனாவாய்; தீரனாவாய்; துணிவு பெறுவாய்; நீ ஓர் இந்தியன்; எல்லா இந்தியர்களும் என் உடன் பிறந்தான் , என்று பெருமையோடு, பறையறைவாய், அங்கவீனராயினும், அனாதையாயினும் எல்லோரும் உன் சோதரர் என்று கொள். அந்தணனாயினும் அரிஜனனாயினும் இந்தியர் யாவரும் என் சகோதரர்கள் என்று முழங்கு. எல்லா இந்தியனும் என் உடன் பிறந்தோர்; எல்லா இந்திய மக்களும் என் உயிர். இந்தியாவின் தேவ தேவிகளே நான் வழிபடும் தெய்வங்கள். இந்திய மக்கட்குலமே என் குழந்தைப் பருவத்தொட்டில். அதுவே என் வாலிபப் பருவத்தில் மணம் தந்த மலர் வனம்-அதுவே முதுமையில் நான், அடையப்போகும் காசியும் பரமபதமுமாகும்’ என்று உரக்கக் கோஷமிடு “பாரத மண்ணே எனக்கு விண்ணுலகு ; பாரதத்தின் சிறப்பே என் சிறப்பு” என்று முழங்கு!

“உலகின் தாயே! எனக்கு ஆண்மையினைத்தா. பராசக்தியே! என் பலவீனத்தை ஒழித்துச் சக்தி அருள்! என் இயலாமையைப் போக்கி என்னை ஆண்மகனுக்கு” என்று அல்லும் பகலும் பிரார்த்தனை புரிந்துவா!...”

மனிதனாகப் பிறந்து, மனிதருள் மாணிக்கமாக வாழ்ந்து, தெய்வமனிதனாகவும் அமரத்துவம் எய்திய சுவாமி விவேகானந்தரின் நூற்றுண்டு விழா வினை பாரதம் சிறப்பு மிளிரக் கொண்டாடியது.

சீனமிலேச்சன் அண்டிக் கெடுத்து விட்ட வஞ்சகப் பெருங்கதை ‘முடியவில்லை-தொடரும்’ என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், விழா நடத்துவது பொருந்தாது எனினும், சுவாமிகளின் விழா, முன் நடந்த பாரதி விழாவைப் போல சமயச்சிறப்புடையதாகும். அதாவது, சந்தர்ப்பங்கள் ஒன்று கூட்டிக் காட்டியுள்ள வீரமுழக்கத்தின் இருவேறு வகைப்பட்ட சிங்கநாதங்களின் சங்கு முழக்கங்களை நாம் கேட்டு, தெளிந்து, வீரம் ஊட்ட வல்ல ஒரு தத்துவமாக வழிவிட்டு, வழிபடச் செய்யவல்லது இவ்வீர விழா.

அயலவனின் சூதும் வாதும் நமக்கு வேதனை அளித்துவரும் கட்டத்தில் நாம் பல நாட்களாகவே இருந்து வருகிறோம்.

சண்டைத்தியின் முதற்பகுதி அணைந்தது. அல்லது, அணைக்கப்பட்டதாக, தீவைத்தவனே அறிவித்தான்.

தீயின் வெம்மையை நாம் பல்வகையிலும் உணர்ந்து விட்டோம். பல்வேறுவகைப்பட்ட சக்திகள் பூராவையும் நாம் ஒன்று திரட்டி, நமது நாட்டின் பொது எதிரியை விரட்டியடிக்க கங்கணம் பூண்டுவிட்டோம். நீதியும் நிதியும் நம் பக்கம் குவிந்து வருகின்றன!

இந்நிலையிலே, இந்திய-சீன எல்லைத் தகராற்றினே சமரசப்பண்பு மூலம் ‘ராசி’ பண்ணிவைக்க ‘கொழும்பு’ முன்வந்தது. இலங்கை, கானா, ஐ. அ. குடியரசு ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பும் நல்லெண்ணமும் முன் வந்தன. கொழும்பு மாநாட்டின் யோசனைகள் லோக்சபையில் விவாதிக்கப்பட்டு ஒரு முடிவு காணவேண்டும்.

“1962 செப்டம்பர் 8ம் தேதிக்கு முன் இருந்த நிலைகளுக்கே சீனப்படைகள் வாபஸாக வேண்டும் என்ற இந்தியாவின் பிரதானமான கோரிக்கையைத் திருப்தி செய்வதாகவே உள்ளன!” என்று நம் பிரதமர் நேருஜி அறிவித்தார்.

ஈனப்புத்தி படைத்த சீனர்களின் பாரம்பரியப் படுமோசப் புத்தியை இந்தியா இனியும் அனுமதிக்காது என்பது உறுதி!

சுவாமிகள் அன்று சொன்னார்:

“இந்தியாவை இனியாரும் அடக்கமுடியாது. இனியும் அது தூங்கப்போவதில்லை. அந்நிய சக்திகள் எவையும் அதனைப் பின்னுக்கு இழுக்கமுடியாது. காலம் கடந்த இந்தியா இப்பொழுது எழுந்து நிற்கத் தொடங்கி விட்டது!”

ஆம்; இந்தியா எழுந்து நிற்கத் தொடங்கி ஆண்டுகள் பல ஆகிவிட்டனவே!

நீதி கடந்து, நிர்ணயிக்கப்பட்ட எல்லை கடந்து வந்த சீனனை இந்தியா விரட்டித் துரத்தியடித்ததே தக்க சான்றல்லவா?

சுவாமிகள் எதிர்பார்த்த இந்தியாவின் புத்துயிர் வாழ்வு மலர்ச்சி எய்தத் தொடங்கி விட்டது.

இந்தியன் ஒவ்வொருவனும் தன் ஆற்றலை, கடமையை நாட்டுப்பற்றை உணரத் தலைப்பட்டு விட்டான்.

இதுவே இந்தியாவின் மகத்தான வெற்றியன்றோ !....

குடியரசு நாளின் மகத்துவம் இவ்வாண்டு கூடுதலான குதுகலத்துடன் கொடிக்கட்டிப் பறந்தது. ‘புவிக்குளே முதன்மையுற்ற’ அண்ணல் காந்தியடிகளின் அமர நினைவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலிகள் நமக்கு வீரசக்திகளே அருளும் என்பது உறுதி!...