தென்னைமரத் தீவினிலே/ஆகாசக் கடையா அதிசயக் கடையா

விக்கிமூலம் இலிருந்து

ஆகாசக் கடையா அதிசயக் கடையா!

அருணகிரி மற்றும் குழந்தைகள் காரில் கொழும்புவை சுற்றிப் பார்க்க சென்று கொண்டிருந்தனர்.

கொழும்பு நகரிலுள்ள கடை வீதிகளின் சில பகுதிகள் "பிரின்ஸ் வீதி" ஆகியவை லண்டன் மாநகரத்து அழகிய வீதிகளை நினைவூட்டும் வண்ணமிருந்தன. இவை அழகாகவும் பல மாடிக் கட்டிடங்கள் நிறைந்தனவாகவும் இருந்தன.

இலங்கையின் பழம்பெருமைகளை உணர்த்தும் கொழும்பு நகர மியூசியம் சிறப்பாக இருந்தது

"இதுதான் கண்டி மன்னர்களின் தங்க சிம்மாசனம், இவைகள் கண்டி மன்னர் அணிந்திருந்த உடைகள்; இவை வரலாற்றுச் சிறப்பு மிக்க பழங்காலத்து சிலைகள்" என்று கனகசபை குழந்தைகளுக்கு கூறினார்.

அடுத்து அவர் அனைவரையும் உயிர்க்காட்சி சாலைக்கு அழைத்துச் சென்றார். அது அன்றாட பொழுது போக்கு இடங்களில் ஒன்றாகவும் இருந்தது. இதற்கான நுழைவுக் கட்டணத்தைச் செலுத்தி விட்டு எல்லோருக்குமாக டிக்கட் வாங்கி வந்தார் கனகசபை.

“வெளி நாட்டு பயணிக்களுக்காக மட்டுமின்றி, உள்நாட்டு பயணிகளுக்காகவும்; உள்ளூர் மக்களுக்காகவும் உயிர்க் காட்சி சாலைகளில் மிருகங்களை நன்கு பழக்கி வைத்து அன்றாடம் சர்க்கஸ் காட்சி போல் வியக்கத்தக்க பல நிகழ்ச்சிகளைக் காட்டி வருகிறார்கள்,” என்றார் கனகசபை.

நன்கு பழக்கப்பட்ட யானை ஒன்று, மனிதனை அலக்காக மேலே தூக்கி எறிந்து விட்டு மனிதன் கீழே விழும் போது தாங்கிப் பிடித்தது. பின்னர் அவனை மிதிப்பது போலவும், அவனது தலை முழுவதையும் விழுங்கி கழுத்தைக் கடிப்பது போலவும் பாவனை செய்தபோது ராதா பயந்து நடுங்கி கத்தியே விட்டாள்.

பின்னர் அந்த மனிதனை யானை எவ்வித ஆபத்துமின்றி கீழே இறக்கி அவனை தூக்கி தன் முதுகின் மீது வைத்துக் கொண்டு கூட்டத்தினரை பார்த்து வட்டமாக ஊர்வலம் வந்தது, இத்தனை அமர்க்களத்துக்கும் அந்த மனிதன் சிரித்துக் கொண்டே இருந்தான்!

“இப்படிப் பழக்கப்பட்ட யானைகளை வைத்துக் கொண்டுதான் காடுகளில யானைகளை பிடிக்கிறார்கள்,” என்றார் கனகசபை

இவர்கள் செல்லும் காரை கடந்து அடிக்கடி மாடி பஸ்கள் பல ஓடிக் கொண்டிருந்தன, அவற்றின் வயிற்றிலும், முகத்திலும், ‘சிலோன் டிரான்ஸ்போர்ட்’ என்று எழுதி இருப்பதை பாபு படித்தான்

கொழும்பு நகரிலுள்ள கடைகள் பொதுத் துறை ஸ்தாபனங்கள், அரசு அலுவலகங்கள். இவற்றிலுள்ள பெயர் பலகைகளிலெல்லாம் ‘சிங்களம், தமிழ், ஆங்கிலம்’ ஆகிய மூன்று மொழிகளிலும் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. இதைப் பற்றி காந்திமதி கேட்ட போது, “தமிழ் மொழி இடம் பெறாத இடமே இல்லை என்று சொல்லலாம். மைல் கற்கள் சாலையிலுள்ள கை காட்டி பலகைகள் அனைத்திலும் இம்மொழித் திட்டம் பயன்படுகிறது” என்று விளக்கினார் கனகசபை

கொழும்பு கடை வீதியிலுள்ள ஆகாசக் கடையை அடையும் போது இரவு மணி ஏழடித்தது.

பார்க்கும் போதே அந்த ஆகாசக் கடை அனைவருடைய கருத்தையும் கவர்ந்தது இந்தக் கடையின் மேல் தளத்திற்கு, கனகசபை அனைவரையும் லிப்டில் அழைத்துக் கொண்டு சென்றார்; அங்கு காண்டீன் மற்றும் பற்பல வணிக நிறுவனங்களும் இருந்தன. பொது மக்கள் ஏராளம் பேர் வந்து சாமான்கள் வாங்கிச் சென்றனர்.

காண்டினைப் பார்த்ததும், “பசிக்கிறதே அத்தை,” என்றாள் தங்கமணி, காந்திமதி சிரித்த படி அனைவரையும் காண்டீனுக்கு அழைத்துச் சென்றாள்,

“இங்குள்ள பொருள்களின் விலை மற்ற இடத்தை விட அதிகமாய் இருந்தாலும், பொருள் தரமாய் இருக்கும்,” என்றார் கனகசபை.

எல்லோரும் அவரவர்களுக்குப் பிடித்தமான அயிட்டங்களை பெயர்ப் பலகையைப் பார்த்து ஆர்டர் செய்தனர்,

பில்லைக் கொடுத்துவிட்டு காண்டீனை விட்டு எல்லோரையும் கனகசபை, ஆகாசக் கடையின் மேல்தளத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கிருந்து பார்த்தபோது கொழும்பு நகர் முழுவதும் தெரிந்தது. அந்த இரவு வேளையில் அந்நகரின் தோற்றம்; வண்ண வண்ண விளக்குகளால் வைரப் பொட்டு வைத்து கோலம் போட்டது போல் அழகுடன் ஜொலித்தது, கீழே இறங்கியவர்கள், வரிசையாக இருந்து ஒவ்வொரு கடைகளிலும் ஏறி இறங்கினார்கள். வரும்போது ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வொரு பெட்டிகள் இருந்தன,

வெளியில் காரை எடுத்துக் கொண்டு போன பரமகுரு அப்போது தான் வீட்டினுள் தார். ராதாவும், தங்கமணியும், தாங்கள் வாங்கிக் கொண்டு வந்த சாமான்களையெல்லாம், ஹால் முழுதும் பரப்பியபடி, வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

“கடைத்தெருவை ஒரு அலசு அலசி விட்டீர்கள் போலிருக்கிறதே” என்று வேடிக்கையாகக் கேட்ட பரமகுருவிடம் தங்கமணி, “அப்பா, அப்பா, நம்ம வீட்டுக்கு புதிதா ஒரு விருந்தாளிப் பையன் வந்திருக்கான். பேரு அருணகிரி, ரொம்ப நல்லவன் அப்பா; அழகா இருக்கான். டிரஸ் பண்ணிக் கொண்டிருக்கான், உனக்கு அவனைத் தெரியுமா அப்பா” என்று படபடவென்று பேசினாள்.

“அது...சரி... எங்கே உன்னுடைய அழகான அந்த அழகுப் பையன்?” என்று பரமகுரு பதிலுக்குக் கேட்கவே, மாடியிலிருந்து இறங்கி வந்த அருணகிரியைச் சுட்டிக் காட்டி, “அதோ” என்று பாபு காட்டினான். பரமகுரு கடகடவென்று சிரித்தார்.

“டிரஸ் பிரமாத செலக்ஷன். நீ பார்த்து வாங்கினியா அருணாகிரி” என்று அவனை அணைத்த படி அன்போடு கேட்டார் பரமகுரு.

“இல்லை மாமா நான் வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் கேளாமல், தங்கமணிதான் என்னைப் பிடிவாதமாகக் கடைக்கு அழைத்துக் போய், ஒன்றுக்கு இரண்டாக இதெல்லாம் வாங்கிக் கொடுத்தா. இதையெல்லாம் வீட்டுக்குக் கொண்டு போனா-அம்மா திட்டுவாள்; எனக்கு என்னோடு பழைய டிரஸ்ஸையே தரச் சொல்லுங்க மாமா” என்றான்.

உடனே பரமகுரு செல்லமாக அவன் முதுகை தட்டிக் கொடுத்து, “அம்மா, ஒன்றும் சொல்ல மாட்டாள்; நான் பார்த்துக்கொள்கிறேன். மாமா வாங்கித் தந்தார்னு சொல்லு. உங்க அம்மாவுக்கு இந்த அண்ணன் என்றால் உயிர்,” என்று ஆறுதலாகப் பேசி உள்ளே அழைத்துச் சென்றார்.

பரமகுரு தான் வாங்கி வந்த விமான டிக்கெட்டை மாமாவிடம் கொடுத்து விட்டு; “சரியாக பத்தே முக்கால் மணிக்கு உங்களுக்கு ஃப்ளைட்” என்றார்,

“அதற்கென்ன, இன்னும் ஏகப்பட்ட நேரம் இருக்கே! சாப்பிட்டு விட்டு; ஒரு குட்டித் தேக்கம் கூடப் போடலாம்” என்றார் பொன்னம்பலம் சிரித்துக் கொண்டே.

மையற்காரர் எல்லோரைவும் சாப்பிட அழைத்தார், டைனிங் ஹாலுக்குள் நுழைந்ததும் அழகான மேஜை மீதுஎல்லோருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டிருந்தது. குழந்தைகள் எல்லோரும் ஒரு வரிசையாக பெரியவர்கள் எதிரில் தங்கள் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டனர்.

அவர்கள் சாப்பிடச் சாப்பிட கேட்காமலே சமையற்காரர் ஒவ்வொன்றாய், புதிது புதிதாய் எதையாவது போட்டுக் கொண்டே இருந்தார். அருணகிரிக்கு அங்கு நடப்பது எல்லாமே அதிசயமாக இருந்தது.

“இவர்கள் எல்லோரும், தினமும் இப்படித்தான் சாப்பிடுவார்களா; அல்லது, ஒரு புது விருந்தாளி வந்திருப்பதற்காக, விசேஷ சமையலா?” என்று அவன் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. ‘அதைப் பற்றிச் சாவகாசமாக தங்கமணி தனியாக இருக்கும் போது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று தன் ஆர்வத்தை உள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டான்.

பொன்னம்பலம் அடிக்கடி அருனாகிரியின் பக்கம் திரும்பி “அருணகிரி; சங்கோசப்படாமல் வேண்டியதையெல்லாம் கேட்டு வாங்கிச் சாப்பிடு; இதுவும் உன் வீடு தான்;” என்று உபசரித்தார். அதே சமயம் சமையற்காரரைப் பார்த்து, “பிள்ளை கூச்சப்படுவான்; அவனை நன்றாகப் பார்தது பரிமாறுங்கள்” என்று ஒரு உத்திரவு போலக் கூறினார்.

அவர்களை எல்லாம் பொறுப்போடு வெளியே அழைத்துப் போய்க் கூட்டி வந்த கனகசபையுடன் அவர்கள் வாங்கின சாமான்களையெல்லாம் குறித்துக் கொண்டு மீதி பணத்தை அணருகிரி கணக்கு பார்த்து தன்னிடம் ஒப்புவித்ததையும்; அதை நீயே வைத்துக்கொள் என்றதற்கு, “அது சரியான பழக்கம் அல்ல” என்கிற பெரிய வார்த்தை கூறி கணக்குப்படி பணத்தை திருப்பிக்கொடுத்து விட்டதையும் பொன்னம்பலம் மனம் திறந்து அருணகிரியை எல்லாரிடமும் பாராட்டினார்.

இரவு சாப்பாடு முடிந்ததும் எல்லோரும் படுக்கச் சென்றார்கள் பாபு, ராதா, தங்கமணி, அருணகிரி எல்லாரும் நீண்ட நேரம் ஊர் சுற்றிப் பார்த்ததைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சிறிது நேரத்தில் தூங்கி விட்டார்கள்.

மறுநாள் காலை ஆறு மணிக்கே அவர்கள் எல்லோரும் இலங்கையை சுற்றிப்பார்க்க உல்லாசப் பயணம் கிளம்பப் போகின்றனர். அதற்கு, வழியில் உண்பதற்குத் தேவையான பலவித சித்ரான்ன உணவுவகைகள், வறுவல்கள், மற்றும் தின்பண்டங்கள் தயாரிப்பதில் சமையல்காரர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். லட்சுமி அம்மாள் அதை மேற்பார்வை இட்டுக்கொண்டிருந்தாள்.

முன்ஹாலில் பொன்னம்பலம், பரமகுருவுடன் பேசிககொண்டே சிங்கப்பூர் பயணமாவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். கல்யாணி தன் கணவருக்கு வேண்டிய துணிமணிகளை அவரது பயனப் பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

போர்டிகோ வாசலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு புறப்படத் தயாராக காரை நிறுத்திக் கொண்டு டிரைவர் காத்து நின்றான். உள்ளே சமையற்கட்டுவரை சென்று மேற்பார்வை பார்த்துவிட்டு சரியாக பத்தேகால் மணிக்கு பொன்னம்பலம் புறப்படத் தயாரானார் பூஜை அறையிலிருந்த சுவாமி படங்களை எல்லாம் வணங்கி திருநீறு இட்டுக் கொண்டு, லட்சுமி அம்மாளிடமும், மனைவியிடமும் விடைபெற்றுக் கொண்டு பொன்னம்பலம் காரில் ஏறிக்கொண்டார். பரமகுருவும் மாமாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்.

கார் விமானநிலையத்தை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. போகிற வழியில், "ஏஜண்ட் கூறிய அறுபது லட்சம் ரூபாய்க்கும் டிராவலர்ஸ் செக் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறேன். அவள் கையில் மொத்தமாக பணத்தை கொடுத்து விட்டால் பேரம் முடிந்துவிடும்.” என்று. பரமகுருவிடம் மகிழ்ச்சியோடு கூறினார்.

உடனே பரமகுரு, "எல்லாம் முருகன் அருளால் நல்லபடியாகவே முடியும். அப்படியே பெரியம்மா ஞானாம்பாளையும்சென்று பார்த்துவிட்டு வாருங்கள். உடம்பு ரொம்ப சரியில்லை என்று போன மாதம் எனக்கு எழுதியிருந்தாள்," என்றார் பரமகுரு. பொன்னம்பலமும், "அப்படியே செய்கிறேன்!” என்றார்.