உள்ளடக்கத்துக்குச் செல்

தென்னைமரத் தீவினிலே/உரிமைக் குரல்

விக்கிமூலம் இலிருந்து

6
உரிமைக் குரல்

னைவி வள்ளியையும், மகன் அருணகிரியையும் கொழும்பிற்கு அனுப்பிவிட்டு கனகவிஜயன், கயிற்றுக் கட்டிலில் பிரமை பிடித்தவன் போல் உட்கார்ந்திருந்தான்.

வேறு யார் வருவதாய் இருந்தாலும் விஜயன் மனைவியை அனுப்பியிருக்க மாட்டான். பரமகுருவின் மீதும், லட்சுமி அம்மாள் மீதும் வள்ளியம்மை மிகுந்த அன்பு வைத்திருந்தாள்.

பரமகுருவின் கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்பே, வள்ளியம்மையை அழைத்துக் கொண்டு கண்டிப்பாக வந்துவிடவேண்டும என்று எழுதி விஜயன் பெயருக்கு ஆயிரம் ரூபாய் பணமும், அனுப்பி இருந்தாள் லட்சுமி அம்மாள்.

வள்ளியம்மைக்குக் கூட அண்ணன் கல்யாணத்திற்கு போக வேண்டுமென்று ஆசைதான். ஆனால் விஜயன் தான், “எனக்கு முக்கியமான வேலை இகுக்கிறது. நீ வேண்டுமானால் போய் விட்டு வா, என்று மனைவியிடம் கூறுவிட்டான். அதன் பிறகு கணவனை விட்டுத் தான் மட்டும் போக வள்ளி விரும்பவில்லை.

எனவே, “எனக்கு உடம்பு சரியில்லை மன்னித்துக் கொள்ளுங்கள்,” என்று கடிதம் எழுதிவிட்டு பணத்தையும் திருப்பி அனுப்பி விட்டாள்

அதன் பிறகு பரமகுரு இலங்கை வந்துபோகும் போதெல்லாம் வள்ளியம்மையையும், கனக விஜயனையும் பார்த்துப் பேசி குசலம் விசாரிக்காமல் செல்லமாட்டார்.

இத்தனை வருஷங்களுக்குப் பிறகு பரமகுரு தன் குடும்பத்துடன், முதல் முதலாக இலங்கை வரும்போது அவர்களை வரவேற்க வள்ளியம்மை பெரிதும் ஆசைப்பட்டாள். அதே எண்ணத்தில்தான் விஜயனும் இருந்தான்.

ஆனால் கடைசி நேரத்தில் எல்லாமே மாறி விட்டது. அன்று நடக்கவிருக்கும் மலையகப் பொதுக் கூட்டத்தில் கனக விஜயன் பேசினால் தான் எடுபடும். விஜயனது பேச்சைக் கேட்க அங்குள்ள மக்கள் ஆவலாக இருப்பதாக கட்சிக்குத் தகவல் போகவுமே காரியதரிசி விஜயனை அங்கு போகும்படி பணித்து விட்டார்.

செய்வதொன்றும் புரியாமல் குழம்பிக் கொண்டிருந்த விஜயனுக்கு வள்ளிதான் ஆறுதல் சொன்னாள். நீங்கள் போய் உங்கள் காரியத்தைக் கவனியுங்கள். நானும் அருணகிரியும் போய் அண்ணனைப் பார்த்துப் பேசிவிட்டு உடனே திரும்பி வந்து விடுகிறோம். யாருமே போகாம இருந்தா நல்லா இருக்காது,” என்றாள்.

விஜயனுக்கும் அதுவே சரியாகப்பட்டது. இப்படி சம்மதப்பட்டு மகனையும், மனைவியையும் அனுப்பிய பிறகு, ஏனோ அன்று அவன் மனம் குழப்பமாகவே இருந்தது.

“விஜய் அண்ணே!”

வாசலில் யாரோ கூப்பிடுகிற குரல் கேட்டு விஜயன் எழுந்து சென்றான். வெளியே குமரேசன் கூட்டத்திற்குப் போகிற தயார் நிலையில் நின்று கொண்டிருந்தான்.

“என்ன அண்ணே! மணி ஐந்தாகப் போகிறது. இன்னும் நீங்கள் மீட்டிங்குக்கு ரெடியாகாமே இருக்கீங்க? அவ்வளவு தூரம் போய்ச் சேர வேண்டாம்? புறப்படுங்க போகலாம்; உங்க கூடத்தான் பாலஸ் கபேல டிபன் சாப்பிடப் போறதா வீட்டிலே சொல்லிட்டு காப்பித் தண்ணி கூட குடிக்காமல் புறப்பட்டு வந்து விட்டேன்!”

“சரி உள்ளே போகலாம்!”

விஜயன் உள்ளே சென்று அவசரமாக தன்னுடைய குளியலை முடித்துக் கொண்டு சலவை செய்த வேஷ்டி சட்டைகளை அணிந்து கொண்டான். புறப்படும்போது மீண்டும் வள்ளியின் ஞாபகம் வந்தது திரும்ப வீட்டினுள் சென்று முருகன் படத்திற்கு எதிரில் இருந்த திருநீற்றை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டான்.

வழக்கமாக விஜயன் இம்மாதிரி மீட்டிங்கிற்கு செல்லும்போது வள்ளியம்மை, விஜயன் நெற்றியில் திருநீறு இட்டு அனுப்புவது வழக்கம்.

இன்று அவள் இல்லை! அவள் கையால் திருநீறு இட்டுக் கொள்ளாமல் செல்லுகிற அன்றைய அனுபவம் அவனுக்குப் புதிது. இந்த ஒருநாள் புதிய அனுபவமே அவனுக்கு வேதனையாக இருந்தது.

அவர்களுடைய அத்தனை காலக் குடும்ப வாழ்க்கையில் ஒருநாள் கூட வள்ளியம்மையை விட்டுப் பிரிந்து இருந்ததில்லை. கூட்டம் கட்சி வேலை என்று பல நாட்கள் அவன் தன் வீட்டிற்கே வராமல் கூட இருந்ததுண்டு. ஆனால் வள்ளியம்மை வீட்டில் இருக்கிறாள் என்கிற தெம்பு அவனுக்கு இருக்கும்.

அவனுடைய கூட்டத்திற்கு வந்தவர்கள் பலர் தன்பேச்சை, அவளிடம் புகழ்ந்து கூறியதையெல்லாம் கேட்டு ஆனந்தப்பட்டு விஜயனிடம் கூறி பூரித்துப் போவாள்.

விஜயன், தான் பேசிய எத்தனையோ பெரிய கூட்டங்களுக்கு அருணகிரியையும், தன்னுடன் அழைத்துச் சென்று முன் வரிசையில் அமர வைத்திருக்கிறான் உள்ளூரிலேயே நடக்கும் கூட்ட மென்றால், வள்ளியம்மையே, அருணகிரியையும் அழைத்துக் கொண்டு பெண்கள் வரிசையில் வந்து உட்கார்ந்து கேட்டாள். வீட்டிற்கு வந்ததும், கூட்டத்தில் தன்னை பலரும் புகழ்ந்ததைக் கூறி திருஷ்டி கழிப்பாள் இன்று அவர்கள் இருவரும் இல்லை.

விஜயன் வீட்டைப் பூட்டி திறவு கோலை பக்கத்து வீட்டு மாரியம்மாளிடம் கொண்டுபோய் கொடுத்தான்.

திட்டப்படியே குமரேசனும், விஜயனும் பாலஸ் கபேயில் காபி, பலகாரங்கள் சாப்பிட்டு விட்டு பஸ்சை பிடித்து மீட்டிங் நடக்கிற இடத்திற்கு வேகமாகப் போனார்கள்.

குறித்த சமயத்தில் விஜயன் அங்கு வந்து சேர்ந்தான் அவனுடைய வருகையை அறிந்ததும் கூட்டத்தில் சலசலப்பு மூண்டது. சக தொண்டர்கள் அவனுக்கு வணக்கம் கூறி மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

கனக விஜயன் ஈழத் தமிழ் இயக்கத்தில் முக்கிய தொண்டன் என்பதோடு, சிறந்த பேச்சாளனாகவும் இருந்ததால் அவனுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவனது ஆவேசமான பேச்சுக்களையும், அனல் பறக்கும் உரைகளையும் கேட்க சுற்று வட்டாரங்களிலிருந்தெல்லாம் மக்கள் வந்து கூடுவார்கள்.

விஜயன் வந்து விட்டதை அறிந்ததும், மக்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு கூடியிருந்த மைதானத்தின் மத்தியில் போட்டிருந்த மேடையின் மேல் நின்று கொண்டு விஜயன் தனது உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தான். மகுடியில் மயங்கிய பாம்புகளைப் போல் மக்கள் அவன் பேச்சை மெய்மறந்து கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.