தென்னைமரத் தீவினிலே/இலங்கைச் சுற்றுலா
இலங்கைச் சுற்றுலா
அன்று அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் பொன்னம்பலத்தின் ‘நைட்டிங் கேல்’ பங்களா விழித்துக் கொண்டு விட்டது. வெளி எங்கும் இருள் சூழ்ந்திருக்க, அந்த பங்களாவில் மட்டும் அறைக்கு அறை விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் பம்பரமாக சுழன்று தங்கள் காரியங்களில் மும்முரமாயிருந்தனர்.
காந்திமதி, தானும் குளித்துவிட்டு குழந்தைகளையும் குளிப்பாட்டி டிரஸ் செய்து விட்டாள். பாபு, ராதா, தங்கமணியும் தாயார் உதவியோடு செய்து கொண்ட அத்தனை காரியங்களையும் அருணகிரி தானே முடித்துக் கொண்டு தங்கமணி முன்தினம் வாங்கிக் கொடுத்த உடையை அணிந்து கொண்டான்.
சமையல் அறையில் விதம் விதமான சித்ரான்னங்களையும், வறுவல்களையும், சுவீட் வகைகளையும் செய்து வரிசையாக பாத்திரங்களில் அடுக்கி வைத்தனர்.
வாசலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. தயார் நிலையில் ஒரு வேனும், பெரிய காரும் நின் றன. இரு டிரைவர்களும் குறியிட்டுக் கொண்டு பளிச்சென்று ‘யூனிபார்ம்’மில் காட்சியளித்தனர்.
கைடு கனகசபை வீட்டிலேயே குளியல் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வந்து விட்டார். பஸ் ஸ்டாண்டில் ஐம்பத்தைந்து சதத்திற்கு வாங்கி வந்த ‘ஈழகேசரி’ நாளிதழை வராண்டாவில் உட்காந்தபடி புறட்டிக் கொண்டிருந்தார்.
மிஸஸ். பொன்னம்பலம் நேரத்தை அனுசரிப் பதில் கண்டிப்பானவர். சரியாக ஆறு மணிக்கு எல்லாரும் கிளம்பிவிட வேண்டுமென்பது எஜமானியம்மாவின் ஏற்பாடு. எனவே அதை உணர்ந்து வேலைக்காரர்கள் ஒவ்வொரு வரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.
சமையற் கூடத்தில் செய்து வைத்திருந்த உணவு வகைகள், குடி தண்ணீர் ஜாடிகள், உட்காருவதற்கான விரிப்புகள் எல்லாவற்றையும் ஒரு தனி காரில் ஏற்றினர். அவர்களோடு கூட உதவிக்குச் செல்ல வேண்டிய சிங்காரமும் தன்னை ரெடி செய்து கொண்டார்.
கல்யாணி அனைவரையும் அழைத்துக் கொண்டு வாசலுக்கு வந்தபோது மணி ஆறு. எல்லோரும் பளிச்சென்று ஆடைகள் அணிந்து அழகாக காட்சியளித்தனர், சாப்பிடுவதற்கான பாத்திரங்களையெல்லாம் காரில் ஏற்றிவிட்டு ஒரு சமையல்காரரும் வேலையாளும் அதில் ஏறிக் கொண்டனர்.
மற்றவர்கள் எல்லாம் பெரிய வேனில் ஏறிக் கொண்டனர். டிரைவருக்குப் பக்கத்து சீட்டில் முன்தினம் போலவே கைடு கனகசபையும், பாபுவும் ஏறிக்கொண்டனர். பின்புறம் மற்றவர்கள் எல்லாம் அமர்ந்து கொண்டனர்.
டிரைவர் வேல்சாமியிடம் புறப்படும்போதே எந்த ஊர்கள் வழியாகச் செல்ல வேண்டும்; எந்த ஊர்களை பார்த்துக் கொண்டு போக வேண்டும். என்பதையெல்லாம் முன் கூட்டியே விளக்கி விட்டார் கனகசபை அதனால் வேல்சாமி வண்டியை அதன்படி ஓட்டிக் கொண்டிருந்தார்.
அவர்கள் புறப்படும்பொழுது கொழும்பு நகரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. தெருவெங்கும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தாலும், மனிதர்கள் நடமாட்டம் இல்லை.
கொழும்பு நகரத்தைக் கடந்து சுமார் பதினைந்து மைலில் உள்ள ‘கலனிய’ என்னும் ஊரில் அவர்கள் முதலில் இறங்கினார்கள்.
“தனது வாழ்நாளில் ஒருமுறை புத்தர் இங்கு. வருகை தந்ததாக மக்கள் கூறுகின்றனர். இங்கு ‘கலனிய-கங்கா’ என்னும் நதி ஓடுகிறது!” என்றார் கனகசபை.
“இலங்கையில் நீங்கள் எல்லா இடங்களிலும் புத்தர் ஆலயங்களைப் பார்க்கலாம். இருப்பினும் கலனியாவும், அனுராதபுரமும் தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்!” என்று கூறி அனைவரையும் ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றார். மூலவர் ஸ்தானத்திற்கு முன்னால் இருக்கும் புத்தர் இக்கோயிலில் படுத்திருக்கும் கோலத்தில் காட்சியளித்துக் கொண்டிருந்தார்.
“இதைப் பார்க்கும்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதரும், அனந்த பத்மனாப சுவாமியும் நினைவிற்கு வருகிறது.” என்று காந்திமதி லட்சுமி அம்மாளிடம் கூறினாள்.
அனைவரும் ஏறிக் கொண்டவுடன் கார் புறப்பட்டது. அப்போது கனகசபை கூறினார்:
“நாம் இந்த ஒருநாள் இலங்கைப் பயணத்தில் எல்லா ஊர்களிலும் இறங்கிச் சுற்றிப் பார்த்து விட முடியாது. எனினும், முக்கியமான இடங்களை நாம் அவசியம் பார்க்கப் போகிறோம். நாம் இறங்கிப் பார்க்காத வழியிலுள்ள ஊர்களைப் பற்றி நான் விளக்கி விடுகிறேன்,” என்றார்.
“அது போதும் கனகசபை. முக்கியமாக நான் கதிர்காம முருகனை தரிசனம் செய்ய வேண்டுமென்றுதான் புறப்பட்டு வந்திருக்கிறேன். இருந்தாலும், குழந்தைகளுக்காகத் தான் இப்போது சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்,” என்றாள் லட்சுமி அம்மாள்.
“இப்போது நாம் கதிர்காமத்திற்குத்தான் போய்க்கொண்டிருக்கிறோம். வழியில் காலி, களுத்துறை ஆகிய ஊர்களை நாம் கடந்து வந்து விட்டோம். காலியில் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. அதுதான் விசேஷம்,” என்றார் கனகசபை.
காடுகள் நிறைந்த வழிகளைக் கடந்து கதிர் காமம் வந்ததும், அனைவரும் இறங்கினார்கள்.
கோயிலில் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர்.
எடுத்து வந்திருந்த கூடையில் ரோஜா மாலை, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி, சூடம் எல்லாம் இருந்தன.
"கதிர்காம முருகன். திருச்செந்துார் முருகன் மாதிரி மிகவும் அழகாக இருப்பாரா பாட்டி?” என்று பாபு கேட்டான்.
"நீதான் பார்க்கப் போகிறாயே,” என்றாள் லட்சுமி அம்மாள் வேறு எதையும் விளக்காமல்.
கோயிலைச் சுற்றி அழகான மதில் சுவர் எழுப்பி இருந்தார்கள். நுழைவாயில் ஒரு கோட்டையின் முகப்புபோல் இருந்தது. பிரகாரத்தைச் சுற்றிக் கொண்டு சன்னதியை அடைந்த போது, அங்கு கண்ட காட்சி பாபுவிற்கு வியப்பை அளித்தது.
கோயிலில் இரு சன்னதிகள் இருந்தன. ஒன்று முருகன் சன்னதி; மற்றொன்று விநாயகர் சன்னதி. இரு சன்னதிகளிலும் கனமான இரண்டு திரைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. முருகன் சன்னதி, திரையில் முருகப்பெருமானின் படமும், விநாயகர் படமும் வரைந்திருந்தது.
பாபு, ராதா, தங்கமணி, அருணகிரி, காந்திமதி எல்லாரும் திரையை எப்போது விலக்குவார்கள் சுவாமியை எப்போது தரிசிக்கலாம் என்று ஆவலோடு காத்திருந்து கேட்டபோது, லட்சுமி அம்மாள் கூறினாள்:
"இங்கே திரையை விலக்க மாட்டார்கள். அர்ச்சனை, நைவேத்யம். தீபாராதனை எல்லாம் இந்த திரைக்கேதான். அர்ச்சகரைத் தவிர யாரும் திரைக்கு உட்பக்கம் செல்லக் கூடாது, அனுமதிக்க மாட்டார்கள்,” என்று கூறிக் கொண்டிருந்தபோது மணி ஓசை கேட்டது.
சில நிமிஷங்களில் உள்ளே இருந்து திரை ஓரமாக கோயில் அர்ச்சகர் வெளியே வந்தார். அவர் வாயில் வெள்ளத் துணி கட்டியிருந்தார். லட்சுமி அம்மாள் தன்னுடைய பூஜை சாமான்களை எதிரில் வைத்தாள். அதேபோல் பலபேர் பூஜைக்கு எல்லாம் வாங்கி வந்திருந்தனர்.
அர்ச்சகர் எல்லோரும் கொண்டு வந்திருந்த தேங்காய்களையும் திரைக்கு முன்னால் உடைத்து மலர் மாலைகளை திரைக்கு முன்னால் பரப்பி, திரையிலுள்ள முருகனுக்கும், விநாயகருக்கும் தீபாராதனை செய்தார்.
அர்ச்சகர் எல்லாருக்கும் விபூதி பிரசாதங்கள் வழங்கினார். லட்சுமி அம்மாள் திரையின் முன்னால் கண்களை மூடி மெய்மறந்து சிறிது நேரம் பிரார்த்தனை செய்தாள், பிறகு வெளியே வந்த தும் பாபு கேட்டான்: “ஏன் பாட்டி அந்த அர்ச்சகர் வாயில் வெள்ளைத் துணி கட்டியிருக்கிறார். இங்கு எல்லாமே அதிசயமாக இருக்கிறது. கடைசியில் உள்ளே இருக்கும் முருகனை காட்டவே இல்லையே” என்று குறைபட்டுக் கொண்டான்.
“திரைக்கு உள்ளே முருகன் சிலை வடிவில் இருக்கிறானா? அல்லது வேல் வடிவில் இருக்கிறானா? என்பது பற்றி யாருக்குமே தெரியாது. அதுதான் ரகசியம். உள்ளே இறைவன் அறுகோண வடிவில் இருப்பதாகவும், அங்குள்ள சுவாமி அருகில் போகும்போது பேசாமலும், உமிழ்நீர் வெளியே வராது இருக்கவுமே அப்படி அர்ச்சகர் வாயைக் கட்டிக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கேன்,” என்று கூறிய லட்சுமி அம்மாள். கனகசபையை பார்த்து, “நான் சொன்னது சரிதானா?” என்று கேட்டாள்.
“ரொம்ப சரி!” என்றவர், “இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் செல்லக்கதிர் காமம் உள்ளது, இங்குள்ள விநாயகர் ஆலயத்தில் சிங்களக மொழியில் அர்ச்சனை செய்கிறார்கள்,” என்று விளக்கினார்.
இங்கே மாணிக்க கங்கை என்னும் புண்ணிய நதி ஓடுகிறது. நீராடினால் விசேஷம், இங்கு ராமகிருஷ்ணா மடமும் இருக்கிறது. விவேகானந்தர் மேலை நாடுகளில் பயணத்தை முடித்துக்கொண்டு இங்கே வந்ததன் நினைவாக அமைக்கப்பட்ட ‘விவேகானந்த சபை’ இங்கு உள்ளது என்றார்.
கோயிலைக் கடந்து மரங்கள் அடர்ந்த விசாலமான புல் தரையில் நடந்து கொண்டிருந்தபோது ராதாவும், தங்கமணியும் “பசிக்கிறது பாட்டி” என்றனர்.
அந்த இடத்தின் அழகைப் பார்த்ததும், “சரி நிழலாய் இருக்கிறது, இங்கேயே உட்கார்ந்து எல்லாரும் சாப்பிடலாம்,” என்று கூறிய கல்யாணி, பணியாளிடம் சாப்பாடு கொண்டு வரச்சொன்னாள்.
எல்லாரும் வட்டமாக உட்கார்ந்து கொண்டனர். அவரவர்களுக்கு வேண்டியவற்றைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டு வயிறு நிறைந்ததும் புதுத்தெம்போடு புறப்பட்டனர்.
கார்வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. அப்போது கனகசபை, “நாம் இப்போது ‘யாலர்' காட்டை கடந்து திரிகோணமலைக்குச் சென்று கொண்டிருக்கிறோம்.
“யாலர் காட்டில் நிறைய வன விலங்குகள் இருக்கின்றன. புலிகளும், யானைகளும் கூட்டம் கூட்டமாக இருக்கின்றன. அழகிய மான்கள், மயில்கள் எல்லாம் இருக்கின்றன. இந்த காட்டிற்குள் செலவதானால், வன அதிகாரியிடம் உத்தரவு பெற்றுச் செல்ல வேண்டும், அவர் ஒரு வேட்டைக்காரரை உதவிக்கு அனுப்புவார். அல்லாமல் மனிதர்கள் தனியே போனால் உயிருக்கு ஆபத்து.” என்று கனகசபை விளக்கிக் கொண்டிருந்தபோதே “பாட்டி! நாம் இங்கே இறங்கி யானை, புலி, மான் மயில் எல்லாம் பார்த்துவிட்டுப் போகலாம் பாட்டி,” என்றான் பாபு.
உடனே காந்திமதி, “ஏண்டா பாபு, மானையும், மயிலையும் பார்க்கவா இலங்கைக்கு வந்திருக்கிறோம். சமயமிருந்தால் சரி, இன்னும் முக்கியமாய் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்துவிட்டு வீடு திரும்ப வேண்டாமா?” என்றாள்.
முன்னும் பின்னுமாய் போய்க் கொண்டிருந்த கார், திரிகோணமலைக்கு போகும் வழியில் நின்றது.
“நாம் இப்போது கன்யா என்கிற சிற்றுாரில் இறங்கப் போகிறோம்! அங்கிருந்து ஐந்து மைல் தொலைவில்தான் திரிகோண மலை இருக்கிறது. குழந்தைகளுக்கெல்லாம் நான் இப்போது ஒருகதை சொல்லப் போகிறேன்,” என்று ஆரம்பித்தார் கனகசபை.
‘கதை’ என்றதும் பாபு, ராதா, தங்கமணி மூவரும் “சொல்லுங்கள் மாமா” என்று கோரசாகக் கெஞ்சினார்கள். கனகசபை கூறப்போகும் கதையை கேட்க குழந்தைகளோடு பெரியவர்களும் தயாரானார்கள்.