தென்னைமரத் தீவினிலே/தாமரைக் குளத்தில் தங்கமணி
தாமரைக் குளத்தில் தங்கமணி
கதையை ஆரம்பித்தார் கனகசபை. ‘உங்களுக்கெல்லாம் ராவணனைத் தெரியும் என்று நினைக்கிறேன். அவன் இலங்கையை ஆண்ட அரசன் அவனுடைய தாயார் இறந்து விட்டாள். இறுதித் சடங்குகளை நடத்தும்போது, விடாமல் மழை பெய்து கொண்டிருந்தது. குளிர் நடுங்கிற்று எல்லாரும் குளிக்க வேண்டுமே! உடனே மகா விஷ்ணு வெந்நீர் ஊற்று ஒன்றை உருவாக்கி இறுதிச் சடங்கு நடத்த உதவினார்.
இவ்வாறு வந்தவைதான் ‘கன்யா ஊற்றுகள்’ என்று கூறப்படுகிறது. இந்த நீரூற்றைச் சுற்றி ஆறு கிணறுகள் உள்ளன. நடுமத்தியில் உள்ள நீரூற்றில் இப்போதும் கொதிக்கும் வெந்நீர் ஊறிக் கொண்டிருக்கிறது. அதில் தண்ணீர் கலக்காமல் அப்படியே குளிக்க முடியாது அவ்வளவு சூடாக இருக்கும்.” அனைவரும் அங்கிருந்த விநாயகரை வழிபட்டனர். கன்யா நீரூற்று அருகே விநாயகர் கோயிலும் இருந்தது.
“கன்யா ஊற்றுக்கு ஆறு மைல் தூரத்தில் திரிகோணமலையில் ‘ராவணன் வெட்டு’ என்கிற வெட்டுண்ட பாறை இருக்கிறது. ராவணன் தன் அன்னை இறந்தவுடன் கோபமும், துயரமும் கொண்டு வாளை எடுத்து வீசியதாகவும், அது இந்தப் பாறையின் மீது பட்டு பாறை இரண்டாகப் பிளந்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். “ராவணன் பாறையை சென்றுச் பார்க்க நமக்கு சமயம் இல்லையாதலால், நாம் இப்போது திரிகோண மலைக்குப் போகலாம்,” என்றார் கனகசபை.
“இந்த மலையின் தெற்கு, கிழக்கு, வடக்கு ஆகிய பாகங்கள் கடலால் சூழப்பட்டு மூன்று கோணமாக ஊர் அமைந்திருக்கிறது. ஒரு கோணத்தில் திருகோணேசுவரர் கோயில் கொண்டிருக்கிறார். தெய்வீகச் சிறப்பு வாய்ந்ததோடு இலங்கையின் கிழக்குப் பகுதியிலே இயங்கும் பெரும் துறைமுகமாகத் திரிகோணமலை திகழ்கிறது. இங்குள்ள கடற்கரை உலகில் உள்ள அழகிய கடற்கரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கொழும்பு நகரிலிருந்து 160 மைல் தொலைவில் நாம் இப்போது இருக்கிறோம். வாருங்கள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.” என்று கனகசபை அழைத்துச் சென்றார்.
அப்போது பாபு, “என்ன மாமா கோயிலுக்கு என்று கூறிவிட்டு பீரங்கிக்கோட்டைக்கு அழைத்து வந்து விட்டீர்களே?” என்று கேட்டான். அந்த இடம் அச்சமாகத்தான் இருந்தது.
நெடுஞ்சுவர்களுடன் கூடிய நீளக் கோட்டையும், கோட்டை வாயிலில் வரிசையாக பீரங்கிகளும் இருந்தன.
“இந்தக் கோட்டைக்குள் நுழைந்தால் கோயிலைக் காணலாம். புராதனப் பெருமை மிக்க திருகோணமலை திருகோணேசுவரர் ஆலயத்தை இடித்துவிட்டு போர்ச்சுக்கீசியர் தங்களுக்கென இக்கோட்டையைக் கட்டிக் கொண்டார்கள். அவர்களுடைய நினைவுச் சின்னமாக இக்கோட்டை இருந்தாலும், உள்ளே திருக்கோணேசுவரர் எல்லாருக்கும் அருள் பாலித்துக் கொண்டு தான் இருக்கிறார்,” என்று கூறி கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.
எல்லாரும் திருகோணேசுவரரை வணங்கி பிரார்த்தித்துக் கொண்டனர்.
“திருகோணமலை இலங்கை நாட்டின் சிறப்பான நகரம் என்பதோடு, தமிழர் அதிகம் வாழும் பகுதியாகவும் விளங்குகிறது,” என்றார் கனக சபை.
“அடுத்து நாம் காணப்போகும் இடம் நுவாரலியா. நுவாரலியா 7500 அடி உயரத்தில் உள்ள மலைப் பிரதேசம். தமிழகத்தில் ஊட்டி இருப்பதைப் போல் இலங்கையில் இந்த இடம் குளிர்பபிரதேசமாக விளங்குகிறது. ராமாயண காலத்தில் வரும் சீதா தேவிக்கு இங்கு கோயில் கட்டியுள்ளார்கள்.
“ராமாயண காலத்தில் இந்த நுவாரலியாவிற்கு ‘அசோகவனம்’ என்று பெயர். இங்குதான் சீதையை ராவணன் சிறை வைத்திருந்தான். சீதையைத் தேடி வந்த அனுமான், இலங்கைக்கு தீ வைத்ததாக வரலாறு கூறுகிறது. நுவாரலியாவில் பல மைல் பரப்பளவிற்கு இன்றும் அது கறுப்பாக இருக்கிறது. இதற்குக் காரணம் ஆஞ்சநேயர் வைத்த தீதான் என்று பலர் வழிவழியாகக் கூறுகிறார்கள்.
“இயற்கை அழகு கொஞ்சும் அந்த இடத்தை கோடை வாசஸ்தலமாக; அழகிய சாலைகள் அமைத்து உருவாக்கியவர்கள் ஆங்கிலேயர்கள் தான்.
“இங்கே தமிழர்கள் தங்கள் உடல் வருத்தம் பாராது, காலம், நேரம் இன்றிய தோட்டங்களில் வேலை செய்து வருகிறார்கள் தேயிலையும் பீன்ஸ் முட்டை கோஸ், கீரை, காய்கறிகளும் பயிராகின்றன.
பாக்கு ஏராளமாகப் பயிராக்கப்படுகிறது கொழும்புப் பாக்கு மிகவும் பிரசித்தம். இலங்கைக்கு அன்னியச் செலாவணியை ஈட்டித் தருவதில் தேயிலைப்போல, பாக்கிற்கும் முக்கிய பங்கு உண்டு.
காசி, ராமேஸ்வரம் என்று தமிழர்கள் இணைத்துக் கூறுவதேபோல, ‘கண்டி, கதிர்காமம்’ என்று இலங்கையர் கூறுவது வழககம். முருகன் பெருமையை விளக்குகிற்து கதிர்காமம்: புத்தர் சிறப்பை உணர்த்துகிறது கண்டி.
கண்டி நகரம் மலைகளுக்கிடையே கிண்ணம் போல் அமைந்திருக்கிறது. ஊருக்கு முன்னால் நான்கு மைல் சமவெளிப் பரப்பில், எண்ணிக்கையில்லா, வண்ண வண்ணப் பூக்களைக் கொண்டு, பொட்டானிக்கல் கார்டன் என்ற தோட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள் இங்குள்ள மிகச் சிறந்த பூங்காக்களில், கண்டியும் ஒன்று, என்று விளக்கிய கைடு கனகசபை, இதோ தெரிகிறதே இதுதான் புகழ் பெற்ற கண்டிபுத்தர் ஆலயம். ‘புத்தமாளிகை’ என்று இந்த ஆலயத்திற்குப் பெயர்.
புத்தர் பாதம்பட்டு ‘ஸ்ரீபாத’, என்று அழைக்கப்படும் இந்த இடம் புத்தர் வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது .
மறைந்த புத்தரின் உடல், ‘குசி’ என்னும் நகரில் எரிக்கப்பட்டு, அந்த அஸ்தி எட்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, எட்டு இடங்களில் புதைக் கப்பட்டு ஆங்காங்கே புத்தர் ஆலயங்கள் எழுப்பப்பட்டன.
இந்த எட்டு புனிதஸ்தலங்களையும், ‘சேதியங்கள்’ என்று அழைக்கின்றனர். புத்த துறவிகள் தங்கியுள்ள இடங்கள், ‘புத்த விஹார்’ என்று அழைக்கப்படுகின்றன. கிண்டியில் ‘தலதா’ மாளிகையில் புத்தரின் பல்லை தங்கத்தில் பதித்து வைத்திருக்கிறார்கள். கிண்டியிலுள்ள இந்தப் புனித மாளிகை இலங்கைக்கே பெருமையூட்டுவதாகும என்றார் கனகசபை.
அழகிய வேலைப்பாடு கொண்ட புத்தர் ஆலயத்தைச் சுற்றிப் பார்த்தபிறகு பரந்த புல்வெளியில் உட்கார்ந்து அனைவரும் உண்டனர்.
அடுத்து நாம் காண வேண்டிய இடம் அநுராதபுரம் என்னும் அழகிய நகரமாகும்.
“இலங்கைத் தீவிலேயே சிறப்பானதொரு இடம் பெற்றது; பாரதத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது: பெளத்தர்களின் தலைநகராக விளங்கும் சிறப்பைப் பெற்றுள்ளது இந்த அநுராதாபுரம்!” என்றார்.
கனகசபை குழந்தைகளைப் பார்த்து, “முதலில் போதி மரத்தையும், புத்தரையும் வழிபட்டு விட்டு வந்து விடலாம் என்று கூறி எல்லோரையும் போதி மரத்திற்கு அழைத்துச் சென்றார். இங்கு வருபவர்கள் முதலில் போதி மரத்தை தரிசிப்பது வழக்கம். நாமும் அப்படியே செய்யலாம்” என்றார் கனகசபை,
தங்கமணியும், ராதாவும் அழகிய படிக்கட்டுகளை உடைய புனித நீர்க்குளம் ஒன்றைக் கண்டனர். அதில் அழகான தாமரை பூத்திருந்தது.
இருவரும் அழகிய படிக்கட்டுகளில் இறங்கி குளத்தின் அழகையும், தாமரைப் பூவையும் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ராதா தன் கைக்கெட்டிய தாமரைப் பூ ஒன்றைப் பறித்து வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். தங்கமணியும் தனக்கு ஒரு பூ பறிக்கப் போன போது இடறி குளத்தில் விழுந்து விட்டாள். இதைக் கண்டு பயந்து போன ராதா படிக்கட்டுகளின் மேல் நின்று கொண்டு “அம்மா... அம்மா...” என்று பலமாக கத்தி அழுதாள்
ராதாவின் அழுகுரலைக் கேட்ட அருணகிரி நிமிஷ நேரத்திற்குள் அங்கு ஓடிச் சென்றான். ராதா அருணகிரியிடம். தங்கமணி குளத்தில் விழுந்து விட்டதைக கூறி படிக்கட்டிற்கு இழுத்துச் சென்றாள்.
வழுக்கி குளத்திற்குள் விழுந்து விட்ட தங்கமணி, தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாள் இதைக்கண்ட அருணகிரி உடனே குளத்தில் குதித்து தங்கமணியை மீட்டு படியேறி மேலே வந்தான்.
இதற்குள், குளக்கரையிலிருந்து கத்தின ராதாவின் கூக்குரலைக் கேட்டு, லட்சுமி அம்மாள். கல்யாணி, காந்திமதி, பாபு, கனகசபை எல்லாரும் பதறியபடி ஓடி வந்தார்கள்.
தங்கமணியை தோளில் சுமந்தபடி வெளியே வந்த அருணகிரி அவளை தரையில் படுக்க வைத்து இப்படியும் அப்படியும் புரட்டினான். இதற்குள், கனகசபை தங்கமணியின் முதுகில் தட்டி, சில முதல் உதவிகளை செய்ததில், தங்கமணி குடித்த தண்ணீர் வாய் வழியாக வெளியே வந்தது.
பயந்து பதறியபடி லட்சுமி அம்மாள் முருகன் விபூதி பிரசாதத்தை எடுத்து தங்கமணியின் நெற்றியில் பூசி, “முருகா குழந்தையைக் காப்பாற்று! நல்லபடியாக நாங்கள் ஊர் போய்ச் சேர நீதான் எங்களுக்குத் துணை” என்று கண்ணீருடன் பிரார்த்தனை செய்தாள்.
சிறிது நேரத்தில் தங்கமணி கண்விழித்து எல்லாரையும் பார்த்தாள்.
“நல்லவேளை எங்கள் வயிற்றில் பால் வார்த்தாய் தங்கமணி கண்ணு,” என்று கல்யாணி அழுதாள்.
“ஒன்றுமில்லை, கவலைப்பட வேண்டாம். குளத்தில் கொஞ்சம் ஆழம் அதிகம் இருப்பதால் ஒருவாய் தண்ணீர் குடித்து விட்டாள் நல்ல சமயத்தில் முருகன், அருணகிரி உருவில் வந்து காப்பாற்றி விட்டான். நாம் எல்லோரும் அருணகிரிக்கு தான் நன்றி சொல்லவேண்டும்” என்ற கனகசபையின் வாய் திரும்பத் திரும்ப, ‘முருகா’ என்று முணு முணுத்துக் கொண்டிருந்தது.
அனைவரும், “அருணகிரியால்தான் தங்க மணி இந்த கண்டத்திலிருந்து தப்பினாள்,” என்று அவனை புகழ்ந்து கொண்டிருந்தனர்.
ஈரமாகிவிட்ட அவளது சட்டையை கழற்றி விட்டு வேறு துணிகளை அணிவித்து, அருணகிரிக்கும் வேறு துணிகளைக் கொடுத்தாள் லட்சுமி அம்மாள். பிளாஸ்கிலிருநத பாலை மட்டும் தங்கமணிக்குக் கொடுத்துவிட்டு, காரில் படுக்க வைத்து தூங்க வைத்தாள் காந்திமதி.
எல்லோரும் உண்டுவிட்டு காரில் ஏறிக்கொண்டதும். கொழும்பை நோக்கி புறப்பட்டார்கள்.