தென்னைமரத் தீவினிலே/உலகம் தெரிந்தவன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
4
உலகம் தெரிந்தவன்

விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட கார், பெரிய பெரிய தெருக்களையும், அழகிய பல கடை வீதிகளையும் கடந்து வேகமாகச் சென்றுகொண்டிருந்தது.

அதே சமயத்தில், இவர்களோடு இருக்க வேண்டுமென்று தன் உள்ளத்தில் எழுந்த தவறான ஆசையினால்தான் தன் தாயை தனியே அனுப்பி விட்டதாக எண்ணி அருணகிரியின் மனம் மிகுந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தது.

இன்னும் எங்கோ தொலை தூரம் போவது போல் வேகமாக ஓடிக்கொண்டிருந்த கார், பட்டென்று வேகம் தனிந்து, ஒரு காம்பவுண்டிற்குள் நுழைந்து, போர்டிகோவின் முன் வந்து நின்றது.

முன்னதாக வந்து சேர்ந்துவிட்ட மாமாவின் கார் ஓரமாக நின்றுகொண்டிருந்தது.

காரிலிருந்து இறங்கிய எல்லோரையும் மாமாவும், மாமியும் வாசலில் நின்று வரவேற்றனர். பாபு ஒரு முறை அந்த அழகிய பங்களாவையும்; அதைச் சுற்றியுள்ள விசாலமான தோட்டத்தையும்; அதில் பூத்துக் குலுங்கும் மலர்களையும் ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

பின்னர் அருணகிரியோடு உள்ளே நுழைந்து பார்த்தபோது, பாபு பிரமித்து போய் விட்டான். அதை ஒரு வீடு, பங்களா என்று சொல்லி அழைப்பதை விட, ஒரு சிறிய அரண்மனை என்றே சொல்லலாம்.

தரையிலும் சுவற்றிலும் விலை உயர்ந்த சலவைக் கற்கள் பதித்துப் பார்க்கும் இடமெல்லாம் பளபளப்பாய் இருந்தன. திரும்புகிற இடத்தில் எல்லாம் ஆள் உயர நிலைக் கண்ணாடிகள் கண்ணில் படுவோரையெல்லாம் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. தரையில் விரிக்கப்பட்டிருந்த அழகிய கம்பளம், மெல்லிய பூவின் மீது நடப்பதுபோல் இருந்தது. பல விருந்தினர் அறைகள். ஒவ்வொன்றிலும் விதம்விதமான அலங்கார மின் விளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன.

இன்னும் எல்லா இடங்களையும் ஒரே மூச்சில் சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கையில், “பாபு-அருணகிரி,” என்கிற அன்பான குரலை கேட்டு திரும்பினர்.

“டிபன் சாப்பிட்ட பிறகு உங்களுக்கு வீடு முழுவதையும் சுற்றி காண்பிக்கிறேன். டிபன் சாப்பிடலாம் வாங்க, பாட்டி கூப்பிடறாங்க,” என்று பொன்னம்பலத்தின் எட்டு வயது பேத்தி தங்கமணி கூறினாள்.

அருணகிரிக்கு அவளுடைய அன்பான பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது.

பரமகுருவும், பொன்னம்பலமும் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்துகொண்டு மனம், திறந்து உரக்க பேசிக் கொண்டிருந்தனர்

“இத்தனை வருவும் கழித்து எல்லாரையும் கூட்டிக் கொண்டு வந்து ஒரு வாரத்திலேயே போகணும்னா எப்படிடா பரமு? கம்பெனி வேலை இருந்தா நீ புறப்படு. அம்மாவும் குழந்தைகளும் ஒரு மாசம் இங்கே இருந்துவிட்டு போகலாம்,” என்று ஒரு முடிவு எடுத்து விட்டார் போல் கூறினார் பொன்னம்பலம்.

“அதற்கில்லை மாமா! பாபுவிற்கும், ராதாவிற்கும் கால் பரீட்சை வருகிறது. இப்ப கூட யாரையும் கூட்டிக் கொண்டு வருகிறதா இல்லை. நான் மாத்திரம்தான் வருவதாக இருந்தேன். அம்மாதான் புறப்படுகிற சமயத்தில், “கதிர்காமம் வந்து, கதிர்காமனை தரிசனம் செய்ய வேண்டும்,” என்று கூறினாள். சரியென்று எல்லாருமாக கிளம்பினோம்.”

”சரி... சரி! உன் சவுகரியம் எதுவோ அது தான் முக்கியம். மகாநாடு என்றைக்கு?”

“நாளைக்கு!”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு பணியாள், தாழ்ந்த குரலில் பொன்னம்பலத்திடம் டிபன் தயாராய் இருப்பதாய் தெரிவித்தான் .

“வா, குரு சாப்பிடலாம்,” என்றவர், “ஆமாம் பாபு, ராதா, அருணகிரி எல்லாம் எங்கே?” என்று கேட்டுக் கொண்டே எழுந்தார்.

பரமகுருவும், மாமாவும் டைனிங் ஹாலை அடைந்தபோது, மற்றவர்கள் எல்லாருமே அங்கே இருந்தனர்.

“எங்களுக்காகவா காத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று பொதுவாகக் கேட்டுவிட்டு மாமா ஒரு ஆசனத்தில் அமர்ந்தார்.

சாப்பாட்டு அறையில் போடப்பட்டிருந்த மேஜை வழவழப்பாகவும், பளபளப்பாகவும் இருந்தது. எதிரே உட்கார்ந்து கொண்டிருக்கிறவர்களுடைய முகம் அதில் தெரிந்தது

பாபுவும் அருணகிரியும் சொற்ப நேரத்திற்குள் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிய மனமில்லாதவர்களைப் போல் சேர்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

சமையற்காரர்கள் இரண்டு மூன்று பேர் ஓடி ஓடி வந்து விதவிதமான பதார்த்தங்களையெல்லாம் அனைவருக்கும் பரிமாறினார்கள்.

‘என்னுடைய வாழ்நாளில் இத்தனை ருசியன இனிப்புப் பண்டங்களையெல்லாம் நான் சாப்பிட்டதே இல்லை,” என்று பாபுவிற்கு மட்டும் கேட்கும்படி மெல்ல அவன் காதருகே கூறினான் அருணகிரி

“ஊருக்கு வந்ததுமே பாபுவிற்கு நல்ல ஜோடி கிடைத்து விட்டது.” என்று கூறிய பொன்னம்பலம், அருணகிரியைப் பார்த்து, “ஏண்டா நீ பள்ளிக்கூடம் போறியா? எத்தனாவது படிக்கிறே?” என்று விசாரித்தார்.

“ஒன்பதாவது படிக்கிறேன்,” அருணகிரி தாழ்ந்த குரலில் பதில் கூறினான்.

“பரீட்சை முடிந்து லீவு விடும்போதெல்லாம் ஏதாவது கடை வேலைக்குப் போவேன் பள்ளிக்கூடம் திறந்ததும் வேலையை விட்டுவிடுவேன்.”

பரமகுருவும், காந்திமதியும், லட்சுமி அம்மாளும் அசந்து போனார்கள்! ஆனால், பொன்னம்பலம் அதைச் சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டு பேசினார்.

“எப்படியோ புத்தியாய் படிச்சு முன்னுக்கு வந்தா சரி. அல்லாமெ, அப்பனைப்போல நீயும் கட்சி, தேசம்னு அலைஞ்சு அம்மாவை பட்டினி போட்டுடாதே. உன் அம்மா, அப்பா எல்லாரும் சவுக்கியமா இருக்காங்க இல்லியா?” என்றார்.

“ஓ! விமான நிலையத்துக்கு நானும் அம்மாவும்தான் வந்திருந்தோம்,” என்றான் அருணகிரி.

அப்போது, “பாட்டி, தாத்தாவுக்கு டிரங்கால் வந்திருக்கு,” என்று தங்கமணி ஹாலிலிருந்து ரிசீவரை ஒரு கையால் பொத்திக் கொண்டு கத்தினாள்.

“தாத்தா இங்கே இல்லேம்மா, மாடியிலே இருக்காங்களா பாரு,” என்றாள் கல்யாணி.

இதற்குள் கீழே இறங்கி வந்து கொண்டிருந்த பொன்னம்பலம் பேத்தியிடமிருந்து ரிசீவரை வாங்கிக்கொண்டு, “ஹலோ...” என்று குரல் கொடுத்தார், அதற்குள் பரமகுருவும் அங்கே வந்து விட்டார்.

“எஸ்... ஸ்பீக்கிங். பொன்னம்பலம்தான் பேசறேன்; சொல்லுங்க.”

"ஆமாம். அந்த ‘பிசினஸ்’ முடிந்து விடும் போலிருக்கா சரி... சொல்லுங்க. என்ன? அறுபது லட்சத்துக்கு குறைக்க முடியாதாமா? சரி! முடிச்சுடுங்க. என்ன? நான் உடனே புறப்பட்டு வராட்டி கை மாறிடுமா? சரி! ராத்திரி ப்ளைட்டிலேயே புறப்பட்டு வர்றேன். வியாபாரத்தை விட்டுடாதீங்க தாங்க்யூ...”

பொன்னம்பலம் போனை வைத்துவிட்டு பரமகுருவைப் பார்த்தார்.

“மலேசியாவிலே ஒரு ரப்பர் தோட்டம், சீப்பா வந்திருக்கு என்று நம்ம ஏஜன்ட் சொன்னான். ஒரு மாசமா பேரம் பேசி, இன்னிக்குதான் பார்ட்டியை சரிக்கட்டி முடிச்சிருக்கான். நான் அவசியம் உடனே சிங்கப்பூர் போயாகனும் பரமு. நீங்க எல்லாம் வந்திருக்கிற இந்த சமயம் பார்த்து கூட இருக்க முடியாமல்...”

“அதைப்பற்றி என்ன மாமா? பிசினஸ்தான் முக்கியம். உடனே புறப்பட்டுப்போய் முதல்லே முடிங்க. விஷ்யூ பெஸ்ட் ஆப் லக்,” என்றார் பரமகுரு.

“ரொம்ப நன்றி பரமு. ஆனா இது, தவணையிலே வாங்கற பார்ட்டி இல்லே. இந்த ஒரு மாசமா இழுபறியிலே இருந்த பேரம் இப்பத்தான் படிஞ்சு வந்திருக்கிறது. நல்ல பிசினஸ். எங்கே கையை விட்டுப் போயிடுமோன்னு ரொம்ப கவலையா இருந்தேன். எல்லாம் நீ வந்த வேளை தான் கைகூடி வந்திருக்கு,” என்றார் மாமா.