தென்னைமரத் தீவினிலே/அம்மா டாட்டா!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
3
அம்மா டாட்டா!

ரோஜா இதழ்களால் நெய்த அழகிய விரிப்பு விரித்தது போல கொழும்பு விமான நிலையத்தின் வரவேற்பு அறை காட்சியளித்தது. தரையே தெரியாதபடி ரோஜா மலர்கள் பரப்பிக் கிடந்தன.

ஆண்கள் தங்கள் மாலைகளை பரமகுருவின் கழுத்திலும்; பெண்கள் தங்கள் மாலைகளை லட்சுமி அம்மாள், காந்திமதி இவர்கள் கழுத்திலும்; சிறுவர்கள் பாபு, ராதாவின் கழுத்திலும் போட்டுக் கட்டித் தழுவிக் கொண்டனர்.

பரமகுரு எல்லாருடனும் மாறி மாறிப் பேசிக் கொண்டிருந்தார். அழகான பாபுவையும், ராதாவையும் வந்திருந்தவர்கள் மாறி மாறி முத்தமிட்டனர்.

பரமகுரு தன் குடும்பத்துடன் மாமா பொன்னம்பலம் வீட்டில் தங்க ஏற்பாடாகி இருந்ததால், மற்ற உறவினர்கள் எல்லாம் விடை பெற்றுக் கொண்டு அவரவர் காரில் ஏறி புறப்பட்டனர்.

இந்த காட்சிகளை வள்ளியம்மையும், அருணகிரியும் எட்டி நின்று பார்த்துக் கொண்டே இருந்தனர்.

அவர்கள் சென்றதும், பரமகுரு தன் தாயாரோடு பேசிக் கொண்டு காரை நோக்கி நடத்தார். வழியில் பொன்னம்பலம் மாமாவும், பரமகுருவும், “நீங்கள் காருக்குப் போங்கள்; ஒரு நிமிஷத்தில் வருகிறேன்” என்று அவர்களிடம் கூறியபடி எங்கோ போனார்கள்.

இம்மாதிரியான ஒரு சந்தர்ப்பத்திற்காகவே அத்தனை நேரம் காத்திருந்த வள்ளியம்மை, அருணகிரியின் கரத்தைப் பற்றிக் கொண்டு வேக மாக நடந்து, லட்சுமி அம்மாள் அருகில் வந்து, “சின்னம்மா!” என்று மெல்ல கூப்பிட்டாள்.

சட்டென்று திரும்பிய லட்சுமி அம்மாள், தன் அருகில் நின்று கொண்டிருக்கும் வள்ளியம்மை யைப் பார்த்ததும், “வள்ளி...” என்று அன்போடு அழைத்தபடி அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.

ஏழ்மையின் மொத்த உருவமாக வள்ளியம்மை காட்சி அளித்தாள். அவளைப் பார்க்கப் பார்க்க லட்சுமி அம்மாளுக்கு இதயமே வெடித்து விடும் போலிருந்தது. மற்றவர்களோடு அத்தனை நேரம் மகிழ்ச்சியில் திளைத்திருந்த லட்சுமி அம்மாளின் விழிகளில் இப்போது கண்ணீர் துளிர்த்து நின்றது.

“விஜயன் வரலியா?” என்று வள்ளியிடம் லட்சுமி அம்மாள் கேட்டபோது அவள் குரல் தழுதழுத்தது

வள்ளியம்மை தலையசைத்தாள்.

‘பட்டும் நகையுமாய் எப்படிச் செல்வத்திலே மிதக்க வேண்டியவளிவள்; எப்படி உருக்குலைந்து விட்டாள்,’ என்று உள்ளத்தில் ஒருகணம் எண்ணிய போது லட்சுமி அம்மாளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. ஆயினும் அதை அடக்கிக் கொண்டு,

“இது உன் மகனா வள்ளி! பெரியவனாயிட்டான். என்ன பேரு வெச்சிருக்கே?” என்று கேட்டாள்.

“அருணகிரி!” அவனே தன் பெயரைச் சொன்னான்.

“படிக்கறியா?” லட்சுமி அவனது கன்னத்தைத் தன் விரல்களால் தடவியபடி கேட்டாள்.

“ஒன்பதாம் வகுப்பு!” என்றான்.

பாபுவும், ராதாவும் பாட்டியின் அருகில் நின்று அவனையே பார்த்தபடி அவர்களது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

“கெட்டிக்காரன்! அப்பாவையும் கூட்டிக் கொண்டு வரக் கூடாதா?”

“அப்பாவுக்கு இன்னிக்கு ஒரு மீட்டிங் இருக்கு?”

“ம்...! இன்னும் அப்படியேதான் இருக்கிறான்!” லட்சுமி மெல்ல மனதிற்குள் சொல்லிக் கொண்டபடி, "நல்ல வேளை உங்களையாவது பார்க்கக் கிடைத்ததே; இன்னும் கொஞ்ச நேரம் தாமதமாக வந்திருந்தால் நாங்க போயிருப்போம். உனக்கும் ஏமாற்றமா இருந்திருக்கும்,” என்ற லட்சுமி அம்மாள் வருத்தம் தோய்ந்த குரலில்;

“வள்ளி! நீ என் பேரனையும், பேத்தியையும் பார்த்ததில்லையே,” என்று கேட்டபடி பாபுவையும், ராதாவையும் அவளிடம் காட்டி, “அத்தைக்கு வணக்கம் சொல்லுங்கள்,” என்றாள்.

அப்போது அங்கு வந்த பரமகுரு, “தங்கச்சி, சவுக்கியமா? எப்ப வந்தே?” என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தார். உடனே பாபு தன் தந்தையின் கையைப் பிடித்து இழுத்து காதருகே, “அப்பா, அருணகிரியாவது நம்ம கூட வரட்டும்; கூப்பிடு அப்பா,” என்று கெஞ்சுவது போல் கேட்டான்.

பாபு அதை ஒரு ரகசியம் போல் கூறினாலும், அவன் பேசியது எல்லார் காதிலும் விழுந்தது.

உடனே பரமகுரு, “ஏன் வள்ளி! பாபு ஆசைப்படுகிறான். அவனோடு ஊரைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு அருணகிரியும் ஒரு வாரம் எங்களுடன் இருக்கட்டுமே,” என்று சம்மதம் கேட்டார்.

அருணகிரியும், ‘அம்மா என்ன பதில் சொல்லப் போகிறாளோ,’ என்று ஆவலோடு தன் தாயின் முகத்தைப் பார்த்தான். அந்தப் பார்வை அவளை நோக்கிக் கெஞ்சுவது போலிருந்தது.

பாவம் அருணகிரியும் இப்படி யார் கூட இருந்திருக்கிறான். அவனும் ஆசைப்படுகிறான் என்று ஒரு கணம் எண்ணிப் பார்த்தாள்.

வள்ளி மறுத்துப் பேசாமல் தலையசைத்தாள். பாபுக்கு ஒரே மகிழ்ச்சி. அருணகிரிக்கு தன் அம்மா இப்படி உடனே சம்மதித்தது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும இருந்தாலும்: அந்த மகிழ்ச்சி அவன் உள்ளத்தில் நிலைக்கவில்லை.

பாபுவோடு சேர்ந்திருப்பதில் உள்ள மகிழ்ச்சியை விட- தன் தாயைத் தனியே அனுப்புவது அவனுக்கு வருத்தமாய் இருந்தது.

அம்மா பஸ்ஸையோ வண்டியையோ பிடித்து ஊர் போய்ச் சேர்வதற்குள் இருட்டினாலும் இருட்டிவிடும். அப்பா மீட்டிங் முடிந்து வந்ததும், என்னை எங்கே என்று கேட்பார். இதற்காக அம்மாவை ஒருவேளை கோபித்தாலும் கோபிக்கலாம்-என்றெல்லாம் எண்ணிப் பார்த்தபோது அருணகிரிக்கு, “நான் வரவில்லை!” என்று சொல்லி விட்டு அம்மாவுடனேயே போய் விடலாம் என்றே ஒரு தடவை தோன்றியது

அதே சமயம்-

புதிதாக தன் நாட்டிற்கு வந்திருக்கும் பாபுவின் அன்பான அழைப்பைப் புறக்கணிக்கவும் மனம் வரவில்லை. எல்லோருடனும் காரில் அமர்ந்து கொண்டு; இப்படி அவன் இருவித எண்ணங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தபோது-

“அப்போ, நான் புறப்படுகிறேன் சின்னம்மா,” என்று விடைபெற்றுக் கொண்ட வள்ளியம்மை தன் மகனைப் பார்த்து, “நான் போயிட்டு வர்றேன் அருணகிரி; யாருக்கும் தொந்தரவு இல்லாம கவனமா நல்ல பிள்ளையாக நடந்து கொள். மாமாதான் உனக்கு எல்லாம்,” என்று மகனிடம் கூறி விட்டு எல்லாரிடமும் விடை பெற்றுக் கொண்டாள்.

பொன்னம்பலமாமாவின் இரு கார்களும் புறப்படத் தயாராய் இருந்தன.

ஒரு காரில் மாமாவும், லட்சுமி அம்மாளும் ஏறிக்கொண்டவுடன்; அது முன்னே புறப்பட்டுச் சென்றது. மற்றொன்றில் மாமியும், ராதாவும், பின் சீட்டில் இருந்தனர்; பாபுவும், அருணகிரியும் முன்புறம் டிரைவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்திருந்தனர்.

காரில் ஏறுமுன் பரமகுரு வள்ளியம்மையைப் பார்த்து, “வள்ளி! நீயும் காந்திமதி பக்கத்தில் ஏறிக்கொள். பஸ்சில்தானே போகிறாய்? ஸ்டாண்டில் இறக்கி விட்டு விடுகிறேன்,” என்று அழைத்தார்.

அதற்கு வள்ளியம்மை, “இல்லேண்ணா, இப்படி குறுக்கு வழியா நான் நடந்து போயிடுவேன்... நீங்க புறப்படுங்க,” என்று பிடிவாதமாக மறுத்து விட்டாள்.

அதற்கு மேலும் அவளை வற்புறுத்த முடியாமல், “இந்தா வள்ளி! இதை வைத்துக்கொள்,” என்று ஒரு பையை தனியாக அவளிடம் கொடுத்தார்.

அதில் நிறைய பலவிதமான பழங்களும் மத்தியில் ஒரு கட்டு நோட்டும் இருந்தன.

பையைப் பெற்றுக் கொண்ட வள்ளியம்மை, வழிச் செலவுக்கு என் கிட்டே பணம் இருக்கிறது அண்ணா,” என்று அந்த கத்தை நோட்டுகளை திருப்பிக் கொடுத்தாள்.

உடனே பரமகுரு, “வள்ளி! நீ இதை எடுத்துக் கொள்ளாவிட்டால், நான் உன் வீட்டிற்கு வரமாட்டேன்,” என்றார்.

“அவர் குணம் உங்களுக்குத் தெரியாதா அண்ணா?” என்று உருக்கமாகக் கூறினாள் வள்ளியம்மை.

“இதை நான் விஜயனிடம் கொடுக்கவா சொன்னேன் வள்ளி,” என்றார் பரமகுரு.

“அது தப்பு அண்ணா! எனக்கு அந்த மாதிரி நடந்து பழக்கம் இல்லே,” இதை கூறும்போது வள்ளியம்மையின் குரல் தழுதழுத்தது.

“ஒரு தப்பும் இல்லை; ஊரிலிருந்து நான் அனுப்புகிற பணத்தை ஒவ்வொரு தடவையும் விஜயன் திருப்பி அனுப்புகிறான். இதற்கு நான் அங்கு வந்து அவனோடு தனியாக சண்டை போடப்போகிறேன். இப்போது கூட, உனக்கும், விஜயனுக்கும், அருணகிரிக்கும் துணிமணிகள் வாங்கி வந்திருக்கிறேன். நானும் காந்திமதியும் வருகிறபோது கொண்டு வருவோம், இந்த விஜயன் வாங்காமல் என்ன செய்வான் பார்க்கலாம்.

“சரி! இதை வைத்துக் கொள் வள்ளி; மறுக்காதே. இது உன் அண்ணனின் ஆசை,” என்று பரமகுரு பிடிவாதமாகக் கூறியபோது, அதற்கு, மேலும் அவளால் அந்த இடத்திலிருந்து மறுத்துக் கொண்டிருக்கவில்லை.

“நான் வர்றேன் வள்ளி.” அவர் விழிகள் பனித்தன.

பரமகுரு காரில் ஏறி மனைவி அருகில் வந்து அமர்ந்தார்: அவர் மனம் ஏனோ தவித்தது.

முன்சீட்டில் அமர்ந்திருந்த அருணகிரி தன் தாய் கண்ணுக்கு மறைகிறவரை கையை ஆட்டி ‘டாடா’ கூறிக் கொண்டே இருந்தான். அவளும் புறப்பட்டுச் சென்ற கார் சிறு புள்ளியாகக் கண்ணுக்கு மறையும் வரை நின்ற இடத்திலிருந்து கையை அசைத்தபடி பார்த்துக் கொண்டே இருந்தாள்.

பாவம்! அவளது வாழ்வு அன்றோடு முடித்து விடும் என்று யாருக்கும் அப்போது தெரியாமல் போயிற்று.