தென்னைமரத் தீவினிலே/இருவேறு உலகம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
2
இருவேறு உலகம்

கொழும்பு விமான நிலையத்திற்கு வெளியே படகு போன்ற பல வெளிநாட்டுக்கார்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. தங்கள் குடும்பத்துடன் அந்தக் கார்களில் வந்திறங்கிய பரமகுருவின் உறவினர்கள், அவரை வரவேற்க விமானதள வரவேற்பறையில் காத்திருந்தனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் கொழும்பு நகரத்தின் பிரதான இடங்களில், பிரபலமான தொழில்கள் செய்து செல்வத்தைப் பெருக்கிக் கொண்டவர்கள்.

அவர்களது மனைவிகள் விலை உயர்ந்த பட்டுப் புடவைகள் அணிந்து கொண்டு பளிச் சென்று காட்சி அளித்தனர். அவர்களது கழுத்திலும், காதிலும், கைகளிலும் அணிந்திருந்த தங்க, வைர நகைகள் மாலை நேரத்து சூரியனின் பொற் கிரணங்களில் மின்னி ஜொலித்தன.

செல்வச் செழுப்பில் வளர்ந்திருந்த அவர்களின் குழந்தைகள் உல்லாசமாக அந்த ஹால் முழுதும் சுற்றிச் சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.

இந்தச் செல்வச் சூழல் நிறைந்த கூட்டத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒதுங்கினார் போல் வள்ளியம்மை தன் ஒரே மகனான அருணகிரியின் கையைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தாள். அருணகிரி ஒன்பதாவது வகுப்பு மாணவன். அவனும், அவன் தாயும், பரமகுருவைப் பார்க்கத்தான் வந்திருந்தார்கள்.

வள்ளியம்மை பரமகுருவின் ஒன்றுவிட்ட தங்கை. அவரது தாய் லட்சுமி அம்மாளின் மூத்த சகோதரி மகள். பரமகுருவும், அவர் தாயாரும் வள்ளியம்மையிடம் அளவற்ற அன்பு வைத்திருத்தனர். அவளைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் லட்சுமி அம்மாள் கண் கலங்குவாள்.

வள்ளியம்மை நன்கு படித்தவள். மிகவும் புத்திசாலியான பெண். செல்வம் கொழிக்கும் பரம்பரையில் பிறந்த அவளை, சீரும் சிறப்புமாய் திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருந்த வேளையில்—

வள்ளியம்மை தன்னுடன் படித்த ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த கனகவிஜயனை விரும்பி மணந்து கொண்டாள். இதற்காக வள்ளியம்மையின் தாய் அவளை வெறுத்து ஒதுக்கி விட்டாலும் லட்சுமி அம்மாளும், பரமகுருவும் அவளிடம் அன்போடு பழகினர்.

ஆயினும், உள்ளூரில் இருக்கும் பணக்கார உறவினர்கள் பலருக்கும், இதனால் வள்ளியின்மீது வருத்தமும், விஜயன்மீது கோபமுமே மேலோங்கி இருந்தது.

இப்போதுகூட,

பரமகுரு தன் குடும்பத்துடன் இலங்கை புறப்பட்டு வருகிற விபரத்தை வள்ளிக்கு எழுதியிருந்தார். கடிதத்தைப் படித்ததுமே கனகவிஜயன் வள்ளியம்மையிடம், “யார் நம்மிடம் எப்படி இருந்தாலும், உன் அண்ணன் பரமகுரு நல்லவர். என்னால் இன்று மாலை கொழும்புவர இயலாது. கூட்டம் இருக்கு. நீ அருணகிரியை அழைத்துக் கொண்டு விமான நிலையத்திற்குப் போ. அங்கேயே அவர்களைப் பார்த்துப் பேசிவிட்டு வந்து விடு, கூட யார் வீட்டுக்கும் போக வேண்டாம்” என்று தன் மனைவியிடம் சொல்லி அனுப்பியிருந்தான். அதன் பேரிலேயே அவளும், மற்றவர்கள் போல விமான நிலையத்திற்கு வந்திருக்கிறாள்.

மவுனமாக நின்று கொண்டிருக்கும் தன் தாயிடம் அருணகிரி, “அவர்கள் எல்லாம் யாரும்மா? எதுக்காக நம்மைப் பார்த்துப் பார்த்துப் பேசிக்கறாங்க.” என்று கேட்டான்.

“அவர்களெல்லாம் நம்ம உறவுக்காரங்கதான். நம்மைப் போலவே அவர்களும் உன் மாமாவை வரவேற்கத்தான் வந்திருக்காங்க,” என்று கூறிய வள்ளியம்மை அங்குள்ள ஒவ்வொருவரையும் அடையாளம் சொல்லி அவர்கள் எந்த வகையில் தங்களுக்கு உறவினர்கள் என்பதையும் அருணகிரிக்கு விளக்கினாள்.

உடனே அருணகிரி “அப்படீன்னா ஏன் அம்மா அவங்க நம்ம கூட பேசல்லே?” என்றான்.

“அவங்களுக்கெல்லாம் உன் அப்பாவைப் பிடிக்கலே; அது தான் காரணம்.” என்றாள் வள்ளியம்மை. இந்த வார்த்தைகளைக் கூறும் போது துக்கம் தொண்டையை அடைத்தது, கண்களில் நீர் முட்டச் செய்தது

வள்ளியம்மை மிகவும் தாழ்ந்த குரலில் தன் மகனைப் பார்த்தது, “இவர்களில் யாராவது, ஒரு காலத்தில் உன் அப்பாவை வெறுக்காமல் உதவி செய்திருந்தால், நம்முடைய வாழ்க்கையும் எவ்வளவோ உயர்ந்திருக்கும். ஆரம்பத்தில் உன் அப்பாவை ஏழை என்று பிடிக்கவில்லை.

என் அம்மாவே என்னை விட்டுக் கொடுத்து விட்ட பிறகு மற்றவர்களைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது?” என்றாள்.

பொங்கி வந்த துக்கத்தை அடக்க மாட்டாமல் வள்ளியம்மை தன் மகனையும் அழைத்துக் கொண்டு, மற்றவர்கள் கண்ணில் படாத இடத்தைத் தேடி அமர்ந்து கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

“அழாதே அம்மா!” என்று தன் தாயின் கண்ணீரை கைகளால் துடைத்த அருணகிரி, “நம்ம விமானம் எப்போ வரும் அம்மா?” என்று கேட்டான்.

“இன்னும் ஏழு நிமிஷத்தில்; நான்கு இருபத்தி ஐந்திற்கு வருமென்று விளக்கு போட்டிருக்கிறார்களே,” என்று வள்ளியம்மை ஒரு அறிவிப்பைச் சுட்டிக் காட்டினாள்.

அப்போது அவனுக்கு, தன் தந்தையின் நினைவு வந்தது அருணகிரி வீட்டு முற்றத்தில் ஒரு கயிற்றுக் கட்டில் போடப்பட்டிருக்கும் இரவு சாப்பாட்டிற்குப் பிறகு அருணகிரி அதில் தன் தந்தையோடு அமர்ந்திருப்பான், அப்போதெல்லாம் அவனது தந்தை அவனை அணைத்தபடி எதிர்கால ஈழத்தைப் பற்றிப் பேசுவார். இலங்கையின் தமிழரின் நிலை பற்றிப் பேசுவார் தன் தாயைப்பற்றிப் பேசுவார், சில சமயம் தன்னைத்தானே மிகவும் நொந்து கொண்டு, “அருணா உன் அம்மா பெரிய பணக்காரர் வீட்டிலே பிறந்ததவள்; என்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்டதினால்தான் இப்படி கஷ்டப்படுகிறாள்.

‘ஒருவன் நாட்டுக்காக உழைக்க முன் வந்து விட்டால், பின் தன் சொந்த சுக துக்கங்களைப் பார்க்க முடியாது, உனக்கும் உன் அம்மாவிற்கும். உணவிற்கும், உடைக்கும் தான். என்னால் சம்பாதிக்க முடிகிறது. மீதி நேரமெல்லாம் ஈழத் தமிழர் நிலை உயர உழைக்கிறேன். எனது இந்த லட்சியத்தை விட்டு விட்டு என்னால வாழ முடியாது. இலங்கையின் காட்டையும் மேட்டையும் திருத்தி செல்வம் கொழிக்கும் பூமியாக; தேயிலைக் காடாக மாற்றியது தமிழனின் பட்டுக்கரங்கள் தான் தமிழர்கள் இங்கு சிந்திய ரத்தமும், வியர்வையும், கண்ணீரும் வீண்போகக் கூடாது.” என்பார்.

அப்போது விமான நிலையத்திலிருந்து அறிவிப்பு ஒலிக்கவே கூர்ந்து கேட்டான் அருணகிரி.

“சென்னையிலிருந்து வந்து கொண்டிருக்கும் ‘ஏர்லங்கா’ விமானம் இன்னும் சில நொடிகளில் விமான நிலையத்தை வந்தடையும்!”