தென்னைமரத் தீவினிலே/உல்லாசப் பயணம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
தென்னைமரத்
தீவினிலே...

1
உல்லாசப் பயணம்

பாபுவுக்கும், ராதாவுக்கும் ஏகக் குஷி. இலங்கைக்கு தங்களையும் அழைத்துச்செல்ல தந்தை சம்மதித்ததே அந்த மகிழ்ச்சிக்குக் காரணம்.

பாபுவின் தந்தை பரமகுரு சென்னையில் ஒரு தொழிலதிபர். இலங்கையில் நடைபெறும சர்வதேச வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்ள கம்பெனி விஷயமாக அவர் மட்டுமே முதலில் செல்வதாக இருந்தது. ஜூலை மாத மத்தியில் பயண டிக்கெட் வாங்கும் நேரத்தில் பரமகுருவின் தாயார் லட்சுமி, தானும் இலங்கை வருவதாகக் கூறினாள்.

“குரு, நான் இறப்பதற்கு முன் இலங்கை கதிர்காம முருகனை ஒருமுறை தரிசனம் செய்துவிட வேண்டும்,” என்று ஓயாமல் கூறிக்கொண்டே இருந்தார் லட்சுமி.

ஆகவே இப்போது தாயாரின் உடல் நலம் சற்று தேறி இருக்கும்போது அவரது ஆசையை நிறைவேற்றி விடவேண்டும் என்று எண்ணிய பரமகுரு, “சரி அம்மா,” என்று சொல்லிவிட்டார்.

தன் தாயாரை அழைத்துச் செல்வதென்றால் அம்மாவுக்கு உதவியாக தன் மனைவியும் வர வேண்டும். எனவே, குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு, குடும்பத்தோடு போய் வரலாமே என எண்ணினார்.

இதைக் கேட்ட பாபுவும், ராதாவும் “தாங்க்யூ டாடி...” என்று மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்துக் கொண்டு உள்ளே ஓடினர்.

எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டு மறுநாள் வியாழக்கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படுகிற ‘ஏர்லங்கா’ விமானத்தில் குடும்பத்தோடு செல்வதற்கு பரமகுரு டிக்கெட் வாங்கிவிட்டார்.

பாபுவும், ராதாவும் பள்ளிக்கு ஒரு வாரம் லீவ் எழுதி அனுப்பிவிட்டனர். பயணம் நிச்சயமான உடனேயே பரமகுரு கொழும்பில் உள்ள தன் மாமா பொன்னம்பலம், சகோதரி வள்ளியம்மை, மற்றும் அங்குள்ள உறவினர்கள் எல்லாருக்கும் தாங்கள் குடும்பத்துடன் இலங்கை புறப்பட்டு வருகிற தேதியை குறுப்பிட்டு எழுதினார்.

நாளை இலங்கை புறப்பட வேண்டும். ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு தங்களுக்கு வேண்டிய வித விதமான அழகிய துணிமணிகளாகப் பார்த்து, தங்கள் பெட்டியில் நிரப்பிக் கொண்டிருந்தனர் பாபுவும், ராதாவும்.

அன்று வியாழக்கிழமை

விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே தமது காரில் பரமகுரு குடும்பத்துடன் மீனம்பாக்கம் விமான நிலையத்தை அடைந்துவிட்டார். அவரை வழியனுப்ப அவரது கம்பெனியின் உயர் அதிகாரிகள் வந்திருந்தனர்.

திருமணம் ஆன புதிதில், காந்திமதி கணவருடன் சேர்ந்து ஜப்பான், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கெல்லாம் உல்லாசப் பொழுது போக்காகப் போய் வந்திருக்கிறார். ஆனால் பாபுவுக்கும், ராதாவுக்கும் இதுதான் முதல் விமானப் பயணம்.

பஸ்; ரயில் டிக்கெட் போலல்லாமல், விமானப் பயண டிக்கெட்டே பெரிதாக பார்ப்பதற்கு அழகாக இருந்தது. காரிலிருந்து, டிரைவர் இறக்கி வைத்திருந்த அவர்களது சாமான்கள், பெட்டிகள் எல்லாம் ஒவ்வொன்றாக எடை போடப்பட்டு பரிசோதிக்கப்பட்டு, அதில் ஒரு லேபிள் தொங்கவிடப்பட்டது.

சாமான்களை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர்கள் எண்ணியதற்கு மாறாக அவைகள் ஒரு அலுவலரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டு உள்ளே எடுத்துச் செல்லப்பட்டன. பயணிகள் அனைவரும் இப்படித்தான் செய்தார்கள்.

அடுத்தபடியாக அவர்கள் வேறொரு அறையின் முன்பாக நகர்ந்து கொண்டிருந்த வரிசையில் சேர்ந்து கொண்டனர்,

விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள், பயணிகள் ஒவ்வொருவரையும் முழுமையாக சோதனையிட்டனர். பின்னர் அவர்கள் விமானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பாபு தன் தந்தையிடம், “நம்மையும் சோதனை செய்வார்களா?” என்று கேட்டான்.

“ஆமாம்,” என்று அவர் தலையசைத்தார்.

“ஏன்? எதற்காக இங்கு இப்படிச் செய்கிறார்கள்?” என்று மெல்ல தந்தையின் காதருகே கேட்டான்.

“விமான பயணிகள் விதிவிலக்கான பொருள்களையோ, சட்டவிரோதமான சாமான்களையோ உரிய முறையின்றி கொண்டு செல்கிறார்களா என்பதை பரிசோதிக்கிறார்கள்”, என்றார்.

“விதி விலக்கு; சட்ட விரோதமானது அப்படி என்றால் என்ன அப்பா?”

“சில குறிப்பிட்ட சாமான்களை, பயணிகள் சுங்க வரி செலுத்தாமல் கொண்டு செல்ல முடியாது, அதற்கு உரிய வரியைச் செலுத்தி எடுத்துச் செல்லலாம். அப்படியன்றி, தெரியாமலோ, முறையின்றியோ கொண்டு போனால் அதை சோதித்து, அதற்கு அபராத வரி விதித்து கட்டணம் வசூலிப்பார்கள். சில பொருட்களை எடுத்துச் செல்வது சட்ட விரோதமாகக் கருதப்படும். இப்படி இங்கு சோதனை செய்யும் உரிமை பெற்றவர்கள் இந்த சுங்க இலாக்கா அதிகாரிகள்,” என்று விளக்கினார் பரமகுரு.

“நாம் அப்படிப்பட்டவர்கள் இல்லையே!” பாபு லேசான கவலையோடு கேட்டான்.

“யார் எப்படிப்பட்டவர்கள் என்பதைப்பற்றி எல்லாம் அவர்களுக்கு அக்கறை இல்லை விமானத்திலுள்ள அத்தனை பயணிகளும் பத்திரமாக அவரவர்கள் குறிப்பிட்ட இடத்திற்குப் போய்ச் சேர வேண்டும். யாருக்கும், எவராலும், எந்தவித அபாயமும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை அல்லவா? அதற்காகவே ஒவ்வொரு பயணியின் உடமைகளும், உடலும், கவனமாய்ப் பரிசீலிக்கப்படுகின்றன” என்றார் பரமகுரு.

பின் எல்லாரும் விசாலமான அந்த விமானதளத்தில் இறங்கி நடந்தார்கள். அவர்களை  ஏற்றிச் செல்லவேண்டிய ‘ஏர்லங்கா’ விமானம் தயார் நிலையில் இருந்தது. அப்போது பாபு, கிளம்பிக் கொண்டிருந்த ஒரு விமானத்தையும்; ஆகாயத்திலிருந்து மெல்ல கீழே இறங்கித் தரையில் ஒரு சுற்றுச் சுற்றிவந்து தங்கள் எதிரில் வந்துநின்ற வேறு ஒரு விமானத்தையும் பார்த்தான்.

பாபு எல்லோருடனும் தங்கள் விமானத்தை நெருங்கியபோது, “இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் இலங்கை செல்லும் விமானம் புறப்படும்” என்கிற அறிவிப்பு ஒலித்தது.

சட்டென்று நினைத்துக் கொண்டவனைப் போல் பாபு, “நம்முடைய பெட்டிகள் எல்லாம் எங்கே அப்பா,” என்றான் பரபரப்புடன்.

பரமகுரு அமைதியாக பாபுவிடம், ‘ஏர்லங்கா’வின் வால் பகுதியைக் காட்டினார்.

விமானத்தை ஒட்டினாற்போல் நின்றுகொண்டிருந்த ஒரு டிரக்கிலிருந்து எல்லாருடைய பெட்டிகளும், சாமான்களும் ஒரு கன்வேயர் (மூட்டைகளை ஏற்றிச் செல்லும் இயந்திரம்!) மூலம் விமானத்திற்குள் நகர்ந்து கொண்டிருந்தது. அத்தனை சாமான்களையும் ஏற்றி முடிந்ததும் அந்த டிரக் நகர்ந்தது. உடனே அந்த வால்பகுதியும் மூடப்பட்டது.

இலங்கை செல்லும் பயணிகள் அனைவரும் விமானத்திற்குள் ஏறி தங்களுக்கென்று குறிப்பிட்டுள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டனர். பரமகுருவின் குடும்பத்திற்கு இடதுபக்கம் உள்ள வரிசையில் சேர்ந்தாற்போல் இடம் கொடுக்கப்பட்டிருந்தது.

பாபுவும், ராதாவும் ஜன்னல் அருகே அமர்ந்து கொண்டனர். சற்று நேரத்திற்கெல்லாம் விமானத்தின் முன்புறமுள்ள விசிறி பலத்த இரைச்சலுடன் சுழல ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து-

“வணக்கம் நண்பர்களே!”

விமானப் பணிப்பெண் அறிவித்துக் கொண்டிருந்தாள்-

“விமானம் இன்னும் சில வினாடிகளில் புறப்படும். பயணிகள் தங்கள் பாதுகாப்பு பெல்டை அணிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!”

பாபுவுக்கும், ராதாவுக்கும் பரமகுரு பெல்டை மாட்டிவிட்டார். அப்போது, மெல்ல அவ்விமானம் ஊர்ந்து, பின்னர் படுவேகமாக ரன்வேயில் ஓடி ஜம்மென்று முன் காலை உயர்த்தி நிற்கும் குதிரையைப் போல தரையிலிருந்து எழும்பி வானவெளியில் உல்லாசமாகப் பறக்கத் துவங்கியது.

பாபுவும், ராதாவும் கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தனர். சென்னை மாநகரத்து வானளாவிய கட்டிடங்கள் எல்லாம் சிறிய சிறிய சோப்புக் கட்டிகளை அடுக்கி வைத்தாற்போல் காட்சியளித்துக் கொண்டிருந்தன. நிமிஷ நேரத்திற்குள் இந்த காட்சி மறைந்தது.

இப்போது அந்த விமானம் பரந்த நீலக் கடலின் மேலே அழகிய ஒரு பறவையைப்போல பறந்து சென்றுகொண்டிருந்தது.