தேன்பாகு/கனவு பலித்தது
ஒவ்வொரு நேரமும் அந்தச் சிவாலயத்தில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காகக் குடம் குடமாகக் காவிரி நீரைக் கொண்டு வந்து கொட்டினாள், கனகவல்லி. ஒரு நாள் 'ஏன் அம்மா, இப்படித் தீர்த்தத்தை எடுத்து வந்து கொட்டுகிறாய், ஏதாவது பிரார்த்தனையா?' என்று கேட்டார் குருக்கள்.
"ஆமாம், பிரார்த்தனைதான்" என்றாள் கனகவல்லி.
"என்ன பிரார்த்தனை?" என்று கேட்டார் குருக்கள்.
"வாய்விட்டுச் சொல்வதற்கில்லை" என்று அவள் சொல்லவே, குருக்கள் மேலும் அவளைக் கேள்வி கேட்க வேண்டாம் என்று சும்மா இருந்து விட்டார்.
"என்னடி இது? ஒவ்வொரு நாளும் மணிக்கனக்காகத் தீர்த்தத்தைக் கொண்டுபோய்க் கோயிலுக்குக் கொடுக்கிறாயே! எதற்காக? உன் மனசிலே என்ன. இருக்கிறது?" என்று அவளுடைய அம்மாளே கேட்டாள்.
"அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன், இப்போது எனக்குப் பசிக்கிறது. சாதம் போடு" என்று சொல்லித் தாய் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் மழுப்பினாள்.
"யாராவது ராஜகுமாரன் வந்து உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளவேண்டும் என்ற ஆசையோ! பேசாமல் உன் மாமன் மகனைக் கட்டிக்கொண்டு சந்தோஷமாய் இரு" என்றாள் தாய். அவளுடைய அண்ணன் மகன் சுப்பனைத் தான் அவள் குறிப்பிட்டாள்.
"அந்தச் சுப்பனையா" என்று ஆத்திரத்துடன் கேட்டாள் கனகவல்லி.
"ஏன், அவனைவிட்டால் உனக்கு ஆகாயத்திலிருந்து மாப்பிள்ளை குதிக்கப் போகிறானோ?” என்றாள் தாய்.
கனகவல்லி பதில் பேசவில்லை. சாப்பிடப் போய்விட்டாள்.
'இந்தப்பெண் என்ன கனவு காண்கிறதோ, தெரியவில்லையே?’ என்று மனதுக்குள் முணு முணுத்துக் கொண்டாள் தாய்.
அந்த நாட்டு அரசனுடைய குமாரன் ஒரு நாள் அந்தக் கோவிலுக்கு வந்தான். கனகவல்லி குடம் குடமாகக் காவிரி நீர் எடுத்து வந்து கொட்டுவதைக் கவனித்தான்.
"ஏன் அம்மா, உனக்கு ஏதாவது பிரார்த்தனையா? ஒவ்வொரு நாளும் இப்படிச் செய்து வருகிறாயா?" என்று அவளைக் கேட்டான்.
"ஆமாம்” என்று சுருக்கமாகப் பதில் அளித்தாள் அவள்.
"உன் பிரார்த்தனை நிறைவேறட்டும்!" என்று வாழ்த்திவிட்டு அவன் போனான். அவனுக்குத் தெரியுமா, அவள் மனதில் என்ன இருக்கிறது என்பது?
அவன் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். பிறகு ஒரு பெருமூச்சு விட்டாள்.
அவளுடைய மாமன் மகன் சுப்பன் பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கமாட்டான். சப்பைத் காலும், கோணவாயும், ஒன்றரைக் கண்ணுமாக நிற்பான். அவனைப் பார்க்க அவளுக்கு அருவருப்
பாக இருந்தது. 'இவனையா கட்டிக் கொள்வது? கடவுளே!'என்று பெருமூச்செறிவாள்.
வேறு ஒரு நாள் அந்த ராஜகுமாரன் குதிரையின் மேல் ஏறிக்கொண்டு கோவிலுக்கு வந்தான். அங்கே இருந்த கனகவல்லியைப் பார்த்து மெல்லிய குரலில், "என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறாயா? " என்று கேட்டான்.
அவள் அசப்பில், "ஹூம்!" என்றாள், அவள் அதை நினைத்துச் சொல்லவில்லை. ஆனாலும் அவள் வாயிலிருந்து அப்படி வந்துவிட்டது.
"உன் அப்பாவிடம் பேசி உன்னை என் குதிரை மேல் ஏற்றி என் ஊருக்கு அழைத்துப் போவேன்.என் அப்பா,அம்மா உன்னைப் பார்க்க வேண்டாமா?"
இப்போது அவள் அவன் வார்த்தைகளை நன்றாகப் புரிந்துகொண்டு, "ஆகட்டும்" என்று சொன்னாள். ராஜகுமாரனுக்கு ஒரே சந்தோஷம்.
அவன் தான் சொன்னபடியே கனகவல்லியின் தாய் தங்தையரைப் பார்த்துத் தன் கருத்தைச் சொன்னான். தான் அரசகுமாரன் என் பதையும் தெரிவித்தான். .
"நாங்கள் ஏழைகள். ஓர் அரசகுமாரருக்குப் பெண்ணைக் கொடுக்கும் அந்தஸ்து எங்களுக்கு இல்லையே!" என்று அவர்கள் சொன்னார்கள்.
"அவள் அழகு ஒன்றே போதுமே! மற்றதெல்லாம் எதற்கு? சரி; நான் அடுத்த வாரம் வருகிறேன். இவளைத் தைரியமாக என்னோடு அனுப்புங்கள். என் தாய் தகப்பனாருக்கு இவளைக் காட்டி என் கருத்தைச் சொல்வேன். அவர்கள் என் விருப்பத்துக்கு மாறாக ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அடுத்த வாரம் இவளை அனுப்பத் தயாராக இருங்கள், உங்களுக்குச் சந்தேகமாக இருந்தால் இதோ என்னுடைய முத்திரை மோதிரம்.இதைத் தந்து விட்டுப் போகிறேன்” என்று சொல்லித் தன் கையிலிருந்த மோதிரத்தைக் கழற்றி அவர்களிடம் கொடுத்தான்.
அவர்கள் சிறிதே யோசித்தார்கள், பிறகு வலிய வரும் சீதேவியை உதைத்துத் தள்ளக் கூடாது. என்று அவனுக்குத் தம்முடைய சம்மதத்தைத் தெரிவித்தார்கள்.
அடுத்த வாரம் அரசகுமாரன் குதிரையின் மேல் வந்தான். அவன் வருவதை எதிர்பார்த்திருந்த கனகவல்லியின் தாய் தந்தையர் அவளை அவனுடன் அனுப்பினார்கள். அவன் அவளைத் தன் குதிரையின் மேல் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான்.
புறப்பட்ட அடுத்த கணத்தில், "ஓய், நில், நில்” என்ற சத்தம் கேட்டது. சப்பைக்கால் சுப்பன்தான் அப்படிக் கத்தினான். தனக்காக
இருந்த பெண்ணை அரசகுமாரன் தட்டிக் கொண்டு போகிறானே என்ற ஆத்திரம் அவனுக்கு. குதிரையைத் தொடர்ந்து ஓடினான். வழியில் ஒரு கல் தடுக்கி விழுந்து விட்டான். நெற்றியில் காயம்பட்டு இரத்தம் வழிந்தது.
குதிரையில் அப்போதுதான் சிறிது தூரம் போயிருந்த கனகவல்லி திரும்பிப் பார்த்தாள். சுப்பன் அடிபட்டு விழுந்திருப்பதைக் கண்டாள். உடனே, "கிறுத்துங்கள், குதிரையை நிறுத்துங்கள்்" என்று கத்தினாள். அரசகுமாரன் என்னவோ ஏதோ என்று பயந்து குதிரையை நிறுத்தினான்.
கனகலல்லி, "என் மாமன் மகன் அடிபட்டுக் கிடக்கிறான். இரத்தம் வழிகிறது, அவனை இந்த நிலையில் விட்டுவிட்டுப் போய் நாம் கல்யாணம் செய்துகொள்வதா? அவனை உடனே கவனிக்க வேண்டும்" என்று படபடப்பாகக் கூறினாள்.
"சரி உன் இஷ்டம் போல் செய், நான் அடுத்த வாரம் வருகிறேன்" என்று சொல்லி அவளை அவன் இறக்கிவிட்டுப் போய்விட்டான்.
கனகவல்லி சுப்பனை அணுகினாள். அவன் மயக்கம் போட்டு விழுந்து கிடந்தான். அவன் முகத்திலுள்ள இரத்தத்தைத் துடைத்து, முகத்தில் தண்ணிர் விட்டு அலம்பி, மெல்ல அவனை அழைத்துக் கொண்டு போனாள்.ஒர் ஆஸ்பத்திரி
யில் அவனைச் சேர்த்து, வேண்டிய பணிவிடைகளைச் செய்தாள். அவனுக்குச் சரியான நினை வில்லாமல் நனவும் கனவும் போன்ற ஒரு மயக்க நிலையில் இருந்தான்.
சில நாட்களில் அவனுக்கு மயக்கம் தெளிந்தது. கண்ணை விழித்துப் பார்த்தான். கனகவல்லி நின்றிருந்தாள். "கனகவல்லி! நீயா!" என்று ஆச்சரியத்தோடு கேட்டான்.
"ஆமாம். உங்களை இந்த நிலையில் விட்டு விட்டுப்போக என் மனசு வரவில்லை. இங்கே தங்கி விட்டேன்."
"அப்படியா? இந்த ஏழையின் மேல் உனக்கு அவ்வளவு கருணையா? அரசகுமாரனோடு போகாமல் எனக்காக நின்று விட்டாயா? நீ என் தாய்; என் தெய்வம்! உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று முட்டாள் தனமாக எண்ணினேனே! உன்னைத் தடுக்க வங்தேனே! அதற்கு ஆண்டவன் எனக்குத் தண்டனை அளித்து விட்டான்! சிறிதே ஆசு வாசப்படுத்திக் கொண்டான். பிறகு, "அது சரி அந்த ராஜகுமாரனை ஏன் விட்டுவிட்டாய்?அவன்; உன்னை ஆசையோடு அழைத்துக் கொண்டு போனானே;கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதா?" என்று கேட்டான். .
கனகவல்லி புன்முறுவல் பூத்தபடியே, "அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அவர் மறுபடியும்
வந்து என்னை அழைத்துக்கொண்டு போய்க் கல்யாணம் செய்து கொள்வதாகச் சொல்லியிருக்கிறார். மறுபடியும் வருவார்" என்றாள்.
"அப்படியா! மிகவும் சந்தோஷம். உனக்கு ஏற்றபடி ராஜகுமாரனே கிடைத்திருக்கிறான். நீ அவனை மணந்து கொண்டு செளக்கியமாக இரம்மா!" என்று சொல்லும்போதே அவன் கண்களில் ஆனந்த பாஷ்யம் துளிர்த்தது.
பிறகு கனகவல்லிக்கும் "அரசகுமாரனுக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!அவள் கனவு பலித்தது.