தேன் சிட்டு/அமைதியும் இன்பமும்
காலை வேளை. நாட்டுப்புறத்திலே ஒரு பண்ணை. ஆட்டுக்குட்டி ஒன்று தாயிடத்தே பாலருந்திவிட்டுத் துள்ளி விளையாடுகிறது. ஆயிரம் ஆயிரமாகப் பொன் மஞ்சள் நிறம் விரித்துக் குலுங்கும் சாமந்தி மலர் களுக்குத் தோட்டக்காரன் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறான். மேய்வதற்காக மாடுகளைப் புல் வெளிக்கு ஒட்டிச் செல்லும் சிறுவன் ஒருவனுடைய தெம்மாங்குப் பாடல் தொலைவிலே கேட்கிறது.
கழனிகளின் இடையிலே அவையெல்லாம் எனக்கு இன்பந் தந்தன. அமைதியையும் ஓய்வையும் நாடிச் சென்றிருந்த என் உள்ளத்திற்கு அருமருந்தாக அவை வாய்த்தன.
அங்கே பரபரப்பைக் காணோம். காலம்கூட மெதுவாகக் காலெடுத்து வைப்பது போலத் தோன்றியது. பட்டணத்துக்கும் அந்த இடத்துக்கும் எத்தனை வேறுபாடு!
அந்த அமைதியான பண்ணைக் காட்சியைக் காலை இளவெயிலிலே நெடுநேரம் துய்த்துவிட்டு நான் தங்கியிருந்த வீட்டிற்குப் புறப்பட்டேன்.
வீடு அந்தப் பண்ணையிலேயே ஒரு மேட்டுப் பாங்கான பகுதியில் இருக்கிறது. பனையோலை வேய்ந்த சிறிய குச்சுவீடு. மின்சார விளக்கு முதலான நவீன வசதிகளே எதிர்பார்க்காதவர்கள் தங்குவதற்கு நல்ல இடந்தான்.
நான் வீட்டை அடைகின்றபோது அன்றைய அஞ்சலில் வந்த செய்தித்தாள் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தது. பட்டணத்தை மறந்து வந்தாலும் என்னால் இந்தச் செய்தித்தாளை மறக்க முடிவதில்லை. ஒரு நாளைக்காவது அதன் தரிசனம் இல்லாவிட்டால் வாழ்க்கையில் எதையோ இழந்துவிட்டதுபோல ஒரு மயக்கம் தட்டுகிறது. உலகத்திலேயே இல்லையோ என்றுகூட ஐயம் பிறந்துவிடுகிறது.
செய்தித்தாளைத் திறந்தவுடன் எத்தனை அதிர்ச்சிகள்! எத்தனை வகையான உலக விவகாரங்கள்! அரசியல் சூதாட்டம், சூழ்ச்சி, சீர்திருத்தம், சட்டம், அடக்குமுறை, விடுதலை முயற்சி-இவைமட்டும் தானா?-சாவொரு பக்கம், பிறப்பொரு பக்கம், விமான விபத்து, திருமணம், கொலை, களவு, தண்டனை-இவ்வாறு ஆயிரம் வகையான செய்திகள் நம்மைத் தாக்குகின்றன. இந்தத்தாக்குதலில் லாவிட்டால் இன்று நம்மால் நாகரிக மக்களாக வாழ முடியாது. இது ஒருவகையான போதை மருந்தாகிவிட்டது. அதையுண்ட பழக்கத்திற்கு நான் அடிமையாகிவிட்டேன்.
இப்படிக் கூறுவதால் நான் செய்தித்தாளின் பெருமையையும் பயனையும் உணர்ந்துகொள்ள வில்லையென்று யாரும் நினைக்கக்கூடாது. அவற்றை யெல்லாம் நான் நன்கறிவேன். ஆனால் கழனிகளிலே மாசற்ற அமைதியிலும் எளிமையிலும் முழுகிக் களித்துவிட்டு வந்த எனக்கு அந்த நொடியில் செய்தித்தாள் கசந்தது. கழனிக்காட்சி என் உள்ளத்தில் எழுப்பிய அமைதியின் நாதத்திற்கு அது ஒத்திசைக்கவில்லை. ஏதோ முற்றிலும் மாறுபட்ட அபசுரம் பேசியதுபோல் நான் உணர்ந்தேன்.
இப்படி உணர்ந்தாலும் செய்தித்தாளைப் படிக்காமல் இருக்க முடிகிறதா? அதுதானில்லை.
உலகத்திலே அமைதியை நிலைநாட்ட இன்று எத்தனையோ முயற்சிகள் நடந்து வருகின்றன. இனி மேல் போர் வருமானால் உலகம் அழிந்து போகும் என்று பலரும் அறிந்து அதைத் தவிர்க்கப் பாடுபடுகிற செய்தியை நாள் தவறினாலும் செய்தித்தாள் தவறாமல் தாங்கி வருகின்றது. ஒவ்வொரு நாடும் அமைதியை நிலைநாட்ட எடுத்துவரும் முயற்சிகளை நாம் நாளும் படிக்கிறோம். அதே சமயத்தில், இந்த அமைதி முயற்சியைக் குலைப்பதற்குப் பிற நாடுகள் என்னென்ன செய்கின்றன என்று கூறும் குற்றச்சாட்டுக்களையும் படிக்கிறோம். ஒவ்வொரு நாடும் பிற நாட்டை ஐயம், அச்சம் என்ற கண்ணாடிகளின் வழியாகப் பார்க்கிறது.
அதனால்தான் செய்தித்தாளைப் படிக்கிறபோது மானிட சாதியின் எதிர்காலத்தைப்பற்றிக் கவலை ஏற்படுகிறது. ஆனால் சாமந்திப் பூக்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும் தோட்டக்காரனையும் அவனைச் சூழ்ந்துள்ள அமைதியையும் பார்க்கும்பொழுது மனத்திற்கு தைரியம் வருகிறது.
அரசியல்வாதிகளும், அறிஞர்களும் உலகத்திலே யாருக்காக அமைதியை நிலைநாட்ட விரும்புகிறார்கள்? ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அந்தத் தோட்டக் காரனைப் போன்ற உலகமறியாத எளிய மக்களுக்கு அவர்கள் செய்யவேண்டிய கடமை தோன்றுகிறதல் லவா? அவன் அந்தச் சாமந்திப் பூவையே போன்றவன். கபடமில்லாதவன். பூக்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும் தனது வேலையை ஒழுங்காகச் செய்துகொண்டிருந்தால் தானும் தன் மனைவி மக்களும் இன்பமாக வாழ முடியும் என்று எண்ணிக் கொண்டிருப்பவன். உலக அரங்கிலே நடைபெறுகின்ற சூழ்ச்சிகளை அறியாதவன். அவனைப் போலத் தான் வேறு தொழிலாளிகளும் இருக்கிறார்கள்; அவனைப் போலத்தான் பெரும்பகுதியான மக்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய எளிய ஆசைகள் சிதறுண்டு போகாமல் காப்பது சமூகத் தலைவர்களின் கடமையல்லவா?
அந்தத் தோட்டக்காரன் உலகமறியாத எளிய மக்களின் பிரதிநிதி. அதேபோல அவன் வருங்கால மக்களுக்கும் பிரதிநிதி என்று கூறலாம். சிரித்த முகத்தோடு கபடமறியாமல் தோன்றும் குழந்தைகளை அவன் நினைவூட்டுகிறான். அந்தக் குழந்தைகளுக்கு இந்த மாநிலத்தை ஒரு இன்ப வீடாகச் சமைத்துத் தருகின்ற பொறுப்பு இந்தத் தலைமுறையிலுள்ள மக்களுக்கில்லையா? இந்த எண்ணங்களெல்லாம் அன்று செய்தித்தாளைப் பார்க்கின்றபோது என் உள்ளத்திலே மின்ன விட்டன. அதனால் எனக்கு வீட்டிலே அடைபட்டு கிடைக்க பிடிக்கவில்லை. அவசரம் அவசரமாகக் காலை உணவை முடித்துக்கொண்டு மீண்டும் வெளியே சென்றேன்.
சாமந்திச் செடிகளுக்கு இன்னும் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது; ஒரு பாத்திக்கு மடையை மாறித் தண்ணீர் போகுமாறு செய்துவிட்டுத் தோட்டக்காரன் வரப்பிலே அமர்ந்திருந்தான். அவன் மனைவி ஒரு மண்கலயத்திலே பழைய சோறு கொண்டுவந்திருந்தாள். அவள் அதைக் கரைத்துத் தோட்டக்காரன் கைகளிலே ஊற்றினாள். மாங்காய் ஊறுகாயைக் கடித்துக்கொண்டு அவன் மகிழ்ச்சி யோடு சோற்றைக் குடித்துக்கொண்டிருந்தான். ஆட்டுக்குட்டி துள்ளிக் குதிப்பதை நிறுத்திவிட்டு வரப்பிலே வளர்ந்திருந்த அறுகம்புல்லை விளையாட்டாகக் கடித்துக்கொண்டிருந்தது. தண்ணீர் பாய்ந்த பாத்திகளிலுள்ள சாமந்தி மலர்கள் எழிலோடு காட்சியளித்தன.
"தோட்டக்காரா, இன்னும் வேலை முடிய வில்லையா?” என்று நான் அவனை நோக்கி நடந்து கொண்டே கேட்டேன்.
அவன் சோறு குடித்துவிட்டுக் கையலம்பிக் கொண்டிருந்தான்.
"இதற்குள்ளே முடியுங்களா? தண்ணீர் கட்டி முடிய உச்சிப் பொழுதாகும்" என்றான் அவன், "அதற்கப்புறம் வேலை கிடையாதா?”
"அப்புறமும் வேலை இருக்கும்; வேலையில்லாமல் சோறு கிடைக்குமா? மலர்ந்த பூக்களையெல்லாம் பறிக்கவேணும். பட்டணத்துக்குப் பூ வாங்கி அனுப்புகிற வியாபாரிகள் அந்தியிலே வருவார்கள். அவர்கள் வருவதற்கு முன்னலே எல்லாம் சேகரம் செய்தாக வேண்டாமா?"
"இதிலே கிடைக்கிற வருமானம் உனக்குப் போதுமா?"
"இது போதும் சாமி. இந்தப் பூ சுகமா இருந்தால் போதும். அது எனக்கும் என் குடும்பத்துக்கும் சோறு போட்டுவிடும்.”
"அதற்குமேல் உனக்கு ஆசையில்லையா?”
"ஆசைக்கு அளவேது, சாமி? இந்தப் பக்கத்திலே இருக்கிற தோட்டமெல்லாம் எனக்கே இருக்கவேணும்னு ஆசை வரத்தான் செய்யுது. ஆனால் இன்னொருத்தர் வாயிலே மண்ணைப் போட்டுத் தானே அதையெல்லாம் நான் வைத்துக் கொள்ள வேணும்? நான் ஆசைப்பட்டால் இந்த ஊருக்கு நூறு ஏக்கராநிலம் எங்கிருந்தாவது புதுசா வருமா? இருக்கிற நிலந்தானே இருக்கும்? எல்லோரும் அப்படியே ஆசைப்பட்டால் அப்புறம் என்ன நடக்கும் ? ஒருத்தனை ஒருத்தன் கழுத்தைத் திருகவேண்டியது தான். அந்த நினைப்பை விட்டுப்போட்டு இருக்கிற நிலத்துக்கு நல்லா எருப்போட்டுப் பாடுபட்டா இன்னும் நிறையப் பலன் கிடைக்கும்." வேறொருத்தர் பொருளை அபகரிக்க வேண்டியதுமில்லை” அவன் கபடமில்லாமல் வெளிப்படையாகப் பேசினான்.
அவனுடைய கொச்சை மொழிகளிலே ஆழ்ந்த உண்மை பொதிந்து கிடப்பதை நான் உணர்ந்தேன். எனது சிந்தனை எங்கெல்லாமோ பறந்தது. உலகத்திலே அமைதியைக் காண்பதற்கு, இந்தத் தோட்டகாரனுடைய வாழ்க்கைத் தத்துவம் நல்ல வழி காண்பிக்கும் என்று எனக்குத் தோன்றியது. "தானும் வாழவேணும், மற்றவர்களும் தன்னைப் போலவே நலமாக வாழவேணும்” என்று ஒவ்வொருவரும் நினைத்தால் எல்லோரும் வாழ்வார்கள்; உலகம் இன்ப வீடாகும்.
இவ்வாறு எண்ணிக்கொண்டு நான் மெளனமாக நிற்பதைக் கண்டு தோட்டக்காரன் சாமந்திகளுக்குத் தண்ணீர் பாய்ச்சச் சென்றுவிட்டான். ஆட்டுக்குட்டி மட்டும் அருகிலே நின்று என்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது.