உள்ளடக்கத்துக்குச் செல்

தேன் சிட்டு/குறிக்கோள்

விக்கிமூலம் இலிருந்து

குறிக்கோள்

திருமூலர் கதை உங்களுக்குத் தெரியுமா? அவருடைய இயற் பெயர் திருமூலரல்ல; சுந்தரநாதர் என்பதுதான் அவருடைய பெயர். அவர் மூலனாக மாறிய கதை மிகுந்த சுவையுடையது.

சுந்தரநாதர் வடகயிலையிலிருந்து புறப்பட்டு, சிவத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருவாவடு துறைக்கு வந்தாராம். பின்பு அங்கிருந்து பொதிய மலையை நோக்கிப் புறப்பட்டுக் காவிரிக்கரையை அடைந்தார். அங்கே ஓரிடத்தில் மூலன் என்ற இடையன் தன் காலம் முடிவுறவே இறந்து கிடந்தான். அவன் அன்புடன் மேய்த்த மாடுகள் அவ்னைச் சுற்றிலும் நின்று கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டிருந்தன. இந்தக் காட்சியைக் கண்ட சுந்தர நாதரின் உள்ளம் உருகிற்று. அந்த மாடுகளின் துயரைப் போக்கவேண்டும் என்ற ஆவல் அவருள்ளத்தில் பொங்கிற்று. தவ வலிமையால் அவர் தமது உயிர் மூலனுடைய உடலில் புகுமாறு செய்தார். மூலன் துயில் நீங்கி எழுவதுபோல எழவே மாடுகள் எல்லாம் பெருமகிழ்ச்சி எய்தின. சுந்தரநாதர் பிறகு அந்த உடம்பிலேயே இருக்க வேண்டியதாயிற்று. அவ்வாறு உயிர் பெற்ற மூலனே திருமூலராகப் போற்றப்படுகிறான்.

இது உண்மையாக நடந்திருக்குமா என்று ஆராய்ச்சி செய்ய விரும்புகிறவர்கள் செய்து கொள்ளட்டும். எனக்கு அதில் அக்கறையில்லை. இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

திருமூலருடைய கருணை உள்ளம் என்னைப் பெரிதும் கவர்கிறது. மாடுகளின் துன்பத்தைக் காணச் சகியாமல் அவர் அத்துன்பத்தைப் போக்க முன்வந்திருக்கிறார். அதற்காக எத்துணைப் பெரிய தியாகத்தையும் செய்ய அவர் பின்வாங்கவில்லை.

அன்பு என்பது எல்லாவிதமான வரம்புகளையும் உதறித் தள்ளிவிட்டு மேலெழுகின்றபோது சத்திய வடிவனை இறைவனே அடைகின்றது என்று கபீர் தாசர் பாடுகிறார், 'அன்பே சிவம்' என்று திருமூலர் அருளியிருக்கிறார். அன்பையும் இறைவனையும் அவர் ஒன்றாகவே காண்கிறார்.

""அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்"

என்று அவர் அன்பின் பெருமையைப் பாடியிருக்கிறார்.

நமது நாட்டுப் பெரியோர்கள் மற்றொரு பெரிய உண்மையை வெளியிட்டிருக்கிறார்கள். எல்லா உயிர் களிலும் இறைவன் உறைகின்றான் என்பது அந்த உண்மை. இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்று விரிவுபடுத்தியும் இதைக் கூறலாம்.

என்னுடைய உள்ளத்தை இறைவன் கோயிலாகக் கொண்டிருக்கிறான். ஆனால் நான்தான் அதை உணர்ந்து கொள்ளவில்லை. அதற்கு வேண்டிய பக்குவத்தை நான் அடையவில்லை. என்னுள்ளே இறைவன் வீற்றிருப்பதுபோலவே அவன் எல்லா உயிர்களிலும், எல்லாப் பொருள்களிலும், எங்கும் இருக்கிறான்.

ஆகவே அவனுக்குச் செய்கின்ற தலைசிறந்த பூசை அவனுடைய வடிவங்களாக விளங்கும் உயிர் களிடத்தும், மற்றப் பொருள்களிடத்தும் அன்பு கொள்ளுவதேயாகும். 'ஆருயிர்க்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்' என்று இராமலிங்க வள்ளலார் பாடியதும், மண்ணாங்கட்டி ஒன்றின் வடிவம் குலைந்தபோது அவர் அதற்காக வருந்தியதும் இந்த உண்மையை உணர்ந்துதான்.

எல்லா உயிர்களிலும், எங்கும் இறைவன் இருக்கிறான் என்பதை மெய்ப்பிக்க முடியுமா என்று சிலர் கேட்கலாம். என்னால் முடியாது; நிச்சயமாக முடியாது. ஆனால் என்னால் சாதிக்க முடியாதன வெல்லாம் பொய்யென்று போய்விடா.

எனக்கு இதை மெய்ப்பிக்க வேண்டும் என்ற கவலையும் இல்லை. விவேகாநந்தரைப்போல ஒருவர் உண்மையை அறிந்து கொள்ள வேண்டுமென்ற மெய்யான ஆவலால் உந்தப்பட்டு இந்தக் கேள்வியைக் கேட்டால் இராமகிருஷ்ண பரமஹம்சரைப் போன்ற தகுதி வாய்ந்த ஒருவர் இதற்குத் தெளிவான பதிலைக் கொடுக்க அங்கே இருப்பார். அதில் எனக்கு ஐயம் இல்லை. சான்றோர்கள் கூறியுள்ள உறுதி மொழி எனக்குப் போதும்.

'பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி' என்ற வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு. 'ஒசை ஒலியெலாம் ஆனாய் நீயே' என்று பாடியவருடைய உள்ளத் தூய்மையிலே எனக்கு அளவில்லாத நம்பிக் கையுண்டு. இவ்வாறு பல சான்றோர்களின் மெய் யுரைகளை நான் என் நம்பிக்கைக்கு ஆதாரமாகக் காண்பித்துக் கொண்டே போகலாம். ஆனால் அது தேவையில்லை. நான் பாரதியாரோடு சேர்ந்து,

"காக்கை குருவியெங்கள் ஜாதி-நீள்
 கடலும் மலேயும் எங்கள் கூட்டம்
 நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
 நோக்க நோக்கக் களியாட்டம்”

என்று ஜயபேரிகை கொட்டி முழக்க ஆசைப்படு கிறேன்.

கடவுள் நம்பிக்கை கொள்ளச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு நான் இதை எழுதவில்லை, "உலகமே ஒரு குடும்பம்; அதில் பிரிவினைகள் செய்வது தவறு; எல்லோருக்கும் அன்பு செய்வதே நமது கடமை” என்ற கொள்கைகளை வற்புறுத்தவே தத்துவ அடிப்படையிலே எனக்கு வலிமை தரும் உண்மைகளை எடுத்துக் கூறினேன். எனக்குச் சமய நூல்களிலே பரிச்சயம் அதிகமில்லை. இருப்பினும் எனக்குத் தெரிந்த அளவிலே இந்து சமய மட்டுமல்லாமல் எல்லாச் சமயங்களும் அன்பு செய்வதைத் தலைசிறந்த வாழக்கை நெறியாகக் கூறுகின்றன என்று நான் தயக்கமின்றிக் கூறமுடியும்.

விஞ்ஞான அறிவு இன்று வளர்ந்திருக்கும் அள வையும், அதன் காரணமாக அழிவுப் படைகள் உரு வாக்கப்பட்டிருக்கும் நிலையையும் எண்ணிப் பார்த்து மானிட சாதியின் நலத்தை நாடுவோர். இந்தத் தத்துவக் கருத்தை எம்முறையிலேனும் எங்கும் பரப்ப வேண்டுவ்து மிக முக்கியம்.

வீரர்கள் போர்க்களத்திலே காட்டிய அசகாய சூரத்தனத்தையும், துணிவையும், அவர்கள் பெற்ற பெரு வெற்றிகளையும் பற்றிப் புகழ்ந்து பேசுவது இனிமேல் உகந்ததல்ல; சிறந்த பண்பாடுமல்ல. எந்த நாட்டு மக்களும் அந்நாட்டு வீரர்களைப் பற்றித் தனிப்பெருமை கொள்ள வேண்டியதில்லை. வீரம் என்பது அவர்களுக்கு மட்டும் வாய்த்த பண்பல்ல. நடுநிலைமையோடு அமைதியாக ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொரு நாட்டிலும் சிறந்த வீரர்கள் இருந்திருக் கிறார்கள் என்பது தெரிய வரும். உயிருக்கு அஞ்சாது போரிலே சிறப்பெய்தியவர்கள் எங்கும் உண்டு. அப்படிச் சிறப்பெய்த வேண்டும் என்பதே ஒரு வெறியாக மாறியதும் உண்டு. மக்கள் அத்தகைய வீரத்தைப் பாராட்டிப் பெருமைப்படுத்தியதே அதற்கு முக்கிய தூண்டுகோலாகவும் இருந்துள்ளது. அவர்களுடைய வீரத்தையே பெரிதாக இளைஞர்களின் முன்னே நிறுத்திக் காட்டினர். அந்த வீரம் அவர்களிடத்தேயும் மிகுந்து காணப்படல் வேண்டும் என்கிற குறிப்பும் அடிப்படையாக நின்றிருந்தது. நாடு என்ற எல்லைக்குள்ளே நின்று அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே மிகுந்திருந்த காலத்தில் இது ஒரு வேளை தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம். இன்று அந்த எல்லையிலே நின்று மார்தட்டுவது காலத்திற்கேற்றதல்லாத பழங்கொள்கை யாக மாற வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. பிறருடைய நலத்திற்காக எவ்விதமான துன்பத்தையும் பொருட்படுத்தாமல் துணிந்து சேவை செய்தவர்கள், தம்மையே தியாகஞ் செய்தவர்கள், உயர்ந்த உண்மைகளை எடுத்துக் கூறியவர்கள் ஆகியோர் காட்டிய வீரத்திற்கு இணையானது வேறொன்றுமில்லை என்பதை இன்று நாம் சிறப்பாக எடுத்துக்காட்ட வேண்டும். 'உயிரைக் கொல்வது யாருக்கும் சாத்தியமாகும்; ஆனால் ஒர் உயிரைச் செழிக்கச் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதைச் செய்பவனே உயர்ந்தவன்’ என்ற புத்தர் அருள்வாக்கு மேலோங்கி முழங்க வேண்டும். போர் முரசைக் கொட்டி மக்களின் விலங்குனர்ச்சியை எழுப்புவது இன்றும் எளிதாகவே உள்ளது. அன்புணர்ச்சியை எழுப்புவது அவ்வளவு எளிதாக இன்று தோன்றவில்லை. ஆனால் அதைச் செய்வதுதான் சிறப்பு: அன்புணர்ச்சி மேலோங்கி நின்ற காலத்தில் மக்கள் எவ்வளவு உயர்ந்த தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும். அந்த மென்மை உணர்ச்சியே நிலைத்து நின்று ஆட்சி புரியச் செய்வது தான் இன்று நாம் செய்யவேண்டிய புனிதமான சேவையாகும்.

அதற்கு நான் மேலே காட்டியதுபோல நமது சமயமும் தத்துவமும் வலிமை தருகின்றன.

அந்த வலிமையிலிருந்தே, 'தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு சிந்தையிற் போற்றிடுவாய்' என்று பாடக்கூடிய துணிவு பிறக்கின்றது.

மெய்யுணர்வானது எவ்வாறு ஒருவனுக்குப் பிறக்க வேண்டும் என்பதை விளக்குவதற்கு இராம கிருஷ்ண பரமஹம்சர் ஒர் அழகான கதை சொல்லியிருக்கிறார்.

ஒரு கிராமத்திற்குப் பக்கத்திலே ஓர் ஆச்ரமம் இருந்தது. அதில் தங்கியிருந்த சாதுக்களில் ஒருவர் சாலை வழியாக எங்கோ போய்க்கொண்டிருந்த போது ஒரு ஜமீன்தார் ஏழை ஒருவனைச் சாட்டையால் அடிப்பதைக் கண்ணுற்றார். அவரால் அதைச் சகிக்க முடியவில்லை. 'அடிக்க வேண்டாம்' என்று பரிவோடு ஜமீன்தாரைக் கேட்டுக்கொண்டார். ஜமீன்தாருக்கு முன்னிலும் அதிகமான கோபம் அந்த சாதுவின் மேல் பொங்கி எழுந்தது. அந்த ஏழையை விட்டுவிட்டுச் சாதுவின் மேல் பாய்ந்தார். சாட்டையால் அவரை அடித்து நொறுக்கினார். சாது மூர்ச்சையுற்றுப் பிணம் போலத் தரையிலே விழுந்தார்.

மூச்சின்றிப் பேச்சின்றிக் கிடந்த சாதுவை யாரோ கண்டு, அவர் நிலைமைபற்றி ஆச்ரமத்திலுள்ள மற்ற சாதுக்களுக்கு எடுத்துக் கூறினார்கள். அவர்கள் ஒடோடியும் வந்து மூர்ச்சையுற்ற சாதுவைத் தூக்கிக்கொண்டு ஆச்ரமத்திற்குத் திரும்பினார்கள்.

ஆச்ரமத்திலே ஒரிடத்திலே அவரைப் படுக்க வைத்தார்கள். அப்பொழுதும் அவருக்கு உணர்வு வரவில்லை. அதனால் கவலையடைந்த சாதுக்கள் பல வகையான சிகிச்சைகள் செய்யத் தொடங்கினார்கள்.

ஒருவர் அந்த சாதுவின் தலையைத் தம் மடியின் மேல் வைத்துக்கொண்டு மெதுவாக வாயில் கொஞ்சம் பாலை ஊற்றினார். மெதுவாக சாது கண்


களைத் திறந்து பார்த்தார். எல்லோருக்கும் கவலை நீங்கிற்று. இருந்தாலும் அவருக்கு நினைவு முற்றிலும் வந்துவிட்டதா என்பதில் ஐயமிருந்தது.

பாலை வாயிலே ஊற்றியவர், "என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா? நான் யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்” என்று மெதுவாகக் கேட்டார்.

தன்னுணர்வு பெற்ற சாதுவிடமிருந்து அதற்கு அற்புதமான பதில் ஒன்று கிடைத்தது. "உங்களை எனக்கு நன்றாகத் தெரிகிறது. எந்தக் கை என்னை முன்பு அடித்ததோ அதே கை எனக்கு இப்பொழுது பால் வார்க்கிறது. யார் என்னை அடித்தாரோ அவரே எனக்கு இப்பொழுது பால் கொடுக்கிறார்" என்று அந்த சாது கூறினாராம். தம்மை அடித்து மூர்ச்சையடையச் செய்தவருக்கும், பிறகு மூர்ச்சை தெளியும்படி அன்போடு உதவி செய்தவருக்கும் உள்ள வேறுபாட்டை மறந்து அவ்விருவரிடத்திலும் விளங்குகின்ற இறைவனுடைய உணர்விலேயே நின்றார் அவர்.

திருமூலர் கதையைப் போலவே இந்தக் கதையும் என் உள்ளத்தைக் கவர்ந்திருக்கிறது: அந்த சாதுவின் மனப்பக்குவம் நமது குறிக்கோளாக நிலைத்து நிற்க வேண்டும். அதுவே இன்பத்திற்கு வழி; அதுவே மானிட சாதியை ஓங்கச் செய்யும் மந்திரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தேன்_சிட்டு/குறிக்கோள்&oldid=1395352" இலிருந்து மீள்விக்கப்பட்டது