தேன் சிட்டு/முருங்கைமர வேதாளம்

விக்கிமூலம் இலிருந்து


முருங்கைமர வேதாளம்


விக்கிரமாதித்தன் கதை என்று கேள்வி பட்டிருக்கிறீர்களா? அதை முப்பத்திரண்டு பதுமை: கதை என்றும் சொல்லுவார்கள். விக்கிரமாதித்தன் வீற்றிருந்த உயர்ந்த அரியணையின் படிகளிலே முப்பத்திரண்டு அழகான கன்னிப் பதுமைகள்: இருந்தனவாம். பிற்காலத்திலே போஜன் என்னும் பேரரசனுக்கு இந்த அரியணை ஒரு கம்புக் கொல்லையிலிருந்து கிடைத்ததாம். அவ்ன் பெரிதும் மகிழ்ச்சியடைந்து. அதைத் தனது அரியணையாகக் கொள்ளக் கருதினான். தனது கொலுமண்டபத்திலே அதை அமைத்து மங்களமான ஒரு நல்வேளையிலே அதில் அமர நினைத்து முதற்படியில் காலெடுத்து வைத்த போது அந்த முப்பத்திரண்டு பதுமைகளும் கலீரென்று நகைத்தனவாம். போஜன் திடுக்கிட்டு நின்று அந்தப் பதுமைகளைப் பார்த்து அவைகளின் சிரிப்புக்குக் காரணமென்னவென்று கேட்டான். அப்பொழுது ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு பதுமையாக விக்கிரமாதித்தனுடைய உயர்ந்த பண்புகளையும் அறிவு நுட்பத்தையும் எடுத்துக் கூறிற்றும்.

பதுமைகள் கூறிய கதைகளிலே விக்கிரமாதித்த னுடைய அறிவு நுட்பத்தைச் சோதித்த வேதாளம் ஒன்று கேட்ட சிக்கலான கேள்விகளும் அவற்றிற்கு விக்கிரமாதித்தன் அளித்த விடைகளும் அடங்கி யிருக்கின்றன. ஒரு முனிவருடைய வேண்டுகோளின் படி விக்கிரமாதித்தன் முருங்கை மரமொன்றில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த அந்த வேதாளத்தைக் கட்டித் தூக்கிக்கொண்டு வருவானாம். வேதாளம் ஒரு சிக்கலான புதிர்க்கதையொன்றைச் சொல்லி அதை விடுவிக்கும்படி அவனிடம் கேட்குமாம். அவன் தகுந்த விடை கூறுவதைக் கேட்டுக் கொண்டே அந்த வேதாளம் எப்படியோ தந்திரமாகக் கட்டவிழ்த்துக்கொண்டு ஒடிப் போய் முன்னிருந்தவாறே முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளுமாம். இந்தக் கதையிலிருந்துதான், "பழையபடி வேதாளம் முருக்கமர மேறிக் கொண்டது” என்ற வாக்கியம் தோன்றியிருக்கிறது. பொதுவாக அனைவருக்கும் ஒவ்வாத ஏதாவதொரு எண்ணத்தையோ செயலையோ மறுபடியும் மறு படியும் விடாது கடைப்பிடிக்கிறவனைப் பார்த்து அப்படிச் சொல்வதுண்டு.

விக்கிரமாதித்தன் பிடித்துவர முயன்ற வேதா ளத்தைப் போல எத்தனையோ வேதாளங்கள் இன்றும் இருக்கின்றன. மனிதன் அவற்றைக் கட்டிப் பிடித்து அடக்க எவ்வளவு முயன்றாலும், கொஞ்சம் ஏமாந்தால் அவை தப்பித்துக்கொண்டு போய் விடும்; பழையபடி முருக்க மரம் ஏறிக்கொள்ளும்.

இந்த வேதாளங்கள் வேறெங்குமில்லை. மனித னுடைய உள்ளத்துக்குள்ளேயே இருக்கின்றன. மனிதன் தன்னுடைய நல்லுணர்வினாலே அவற்றைக் கட்டிப்பிடித்து அடக்கி ஆள முயல்கிறான்; ஆனால் அவனுடைய பிடி பல சமயங்களில் தளர்ந்து போகிறது; அந்தச் சமயம் பார்த்து வேதாளங்கள் யதேச்சையடைத்து மனிதனுடைய தலைமேலேறிக்கொண்டு கூத்தாடத் தொடங்கிவிடுகின்றன.

தன்னலம் என்கிற வேதாளந்தான் இந்தக் கூட்டத்திற்கே தலைமை வகிப்பது. அதனுடைய ஆதிக்கத்திலே மனிதன் படுகின்ற தொல்லைகள் கொஞ்சமல்ல. மனிதனுடைய தொல்லைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் அதனுடைய வேலை தான் என்றுகூடச் சொல்லலாம். அந்த தன்னல வேதாளத்திற்குப் பக்கபலமாக இருப்பவைகள் போர், பகைமை, வெறுப்பு, பொறாமை முதலிய வேதாளங்கள். இவற்றைத் தன்னலத்தின் குழந்தைகள் என்றே சொல்லவேண்டும். மனிதன் இவைகளுக்கு இடங்கொடுப்பதாலேயே உலகத்தில் துன்பம் இன்னும் நிலவிக் கொண்டிருக்கிறது.

உலகத்திலே பல பெரிய மகான்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்கள் மனித சாதியின் நன்மைக்காகப் பல அரிய உபதேசங்களை அருளியிருக்கிறார்கள் . அன்பு, சத்தியம், அஹிம்சை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழ்வோமானால் உலகத்தில் துன்பமே இராது. உலகம் கந்தர்வ லோகம் போல இன்ப நாடாகிவிடும் என்று அவர்கள் நமக்கு நன்கு எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். புத்தர், இயேசு கிறிஸ்து, காந்தியடிகள், அப்பர் சுவாமிகள், இராம கிருஷ்ண பரமஹம்சர், இராமலிங்க சுவாமிகள் முதலியோர், "ஆருயிர்களுக்கெல்லாம் அன்பு செயல் வேண்டும், அன்பு செயல் வேண்டும்” என்று வற்புறுத்தி முழங்கியிருக்கிறார்கள். "அன்பே இறை வனின் வடிவம்; அன்பின் மூலமாகவே இறைவனை எளிதில் அடையலாம்" என்று நாயன்மார்களும், ஆழ்வார்களும் போதித்திருக்கிறார்கள். 'அன்பே சிவம்' என்றார் திருமூலர். அன்பின் வழியது உயிர் நிலை என்றார் திருவள்ளுவர். அன்பு, வாய்மை, கொல்லாமை ஆகியவற்றோடு அருளுடைமை இன்ன செய்யாமை என்பவற்றின் பெருமையையும் திருவள்ளுவர் மிக அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார். இவற்றைப் பற்றிய ஐந்து அதிகாரங்களே உலகத்தின் பொது மறையாகத் திகழ்வதற்குப் போதுமானவை. உலகத்தை இன்ப வீடாக்குவதற்கு வள்ளுவம் இவற்றின் மூலம் தெளிவாக வழி வகுத்துள்ளது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உள்ளப் பான்மையோடு வாழ்ந்தால் கவலையற்ற வாழ்வு கிடைக்கும் என்று சங்க காலத்துக் கவிஞர் குறிப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது மனிதனுடைய உள்ளம் உயர்வடைகிறது. தன்னலம் முதலான வேதாளங்களைக் கட்டிப்பிடித்து அடக்கியொடுக்க வேண்டுமென்ற உணர்வு பிறக்கின்றது. போர் வேண்டாம், அனைவரும் உடன்பிறந்தார் போல வாழலாம் என்ற ஆர்வம் உண்டாகிறது. ஆனால் மனிதன் எப்பொழுதுமே எச்சரிக்கையாக இருப்பதில்லை. தனது பிடியைத் தளர்த்திவிடுகிறான். அவனுடைய அறிவு கொஞ்சம் உறங்கி விடுகிறது. வேதாளங்கள் பழையபடி முருக்க மரத்தின்மேல் ஏறிக்கொள்ளுகின்றன. சாதி, சமயம், நாடு, நிறம் என்றெல்லா, எத்தனை எத்தனையோ குறுகிய வரம்பிட்டு மானிட சாதி சிதறுண்டு தன்னல ஆதிக்கத்தால் மயங்கி விடுகின்றது. அம்மயக்கத்தின் விளைவாகப் போல் தாண்டவமாடுகின்றது; துன்பம் தலை விரித்தாடு கின்றது. மனிதன் விலங்காகிவிடுகிறான். அவனுடைய அன்பு, இரக்கம், அருள் போன்ற மென்மை உணர்ச்சிகள் மறைந்து விலங்கு உணர்ச்சிகள் மேலோங்கிவிடுகின்றன. அவன் கீழ்த் தர விலங்கி லிருந்து பரிணாமக்கிரமத்திலே தோன்றியவன் என்பதற்கு அத்தாட்சியாக அவனுக்கு உருவம் வேறு பட்டிருந்தாலும், இன்னும் விலங்குக் குணங்கள் இருக்கின்றன என்று காண்பிப்பதுபோல அந்த உணர்ச்சிகள் ஆதிக்கம் பெற்று அவனை விலங்காக்கிப் பேயாட்டம் ஆடுகின்றன.

உலகமே நடுங்கும்படியாக ஒரு பெரும்போர் 1914-ஆம் ஆண்டில் தொடங்கியது. அதனால் உண்டான துன்பங்களைக் கண்டபோது, 'இனிப் போரே வேண்டாம்; போர் ஒழிக’ என்று மனிதன் முழங்கிகினான். ஆனால் அந்த நல்லெண்ணம் நெடுநாள் நீடித்திருக்கவில்லை. மனிதன் அதனை மறந்துவிட்டான். மறுபடியும் ஒரு பெரும்போர் முன்னதைவிடக் கொடுமை நிறைந்ததாகத் தோன்றி உலகத்தை ஆட்டியது. அழிவுப் படைகள் பயங்கரமாகப் பெருகின. உலகத்தையே அழிக்கக்கூடிய வல்லமையோடு அனுப்படையும் ஹைடிரஜன் படையும் தோன்றிவிட்டன. இனிமேல் போர் வந்தால் உலகமே அழிந்து போகும். மனித வருக்கமே வேரற்றுப் போகும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது.

இந்த நிலையிலும் மனிதன் விழித்துக் கொள்ளாவிட்டால் அவனுக்கு உய்வில்லை. மனிதன் தனது அறிவின் திறத்தைப் பற்றிப் பெருமைப்படு கிறான்; அவன் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டு கருவங் கொள்ளுகிறான். ஆனால் உன்மையான முன்னேற்றம் மனிதனுடைய விலங்குணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இருக்கின்றது. விலங்குணர்ச்சிகளைத் தேவ உணர்ச்சிகளாக மாற்றவேண்டும். அன்பு, அருள் ஆகிய மென்மையுணர்ச்சிகள் ஆட்சி புரியவேண்டும். அதுவே நிலையான இன்பத்திற்கு வழி கோலும் முன்னேற்றம்.

அனுப் படையின் வலிமையைப் பெருக்கிக் கொண்டே போனால் மனித சாதிக்கு முடிவு ஏற்பட்டு விடும் என்று சிறந்த சிந்தனையாளர் பலர் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். அதை நினைத்தாவது மனிதன் விழிப்படைய வேண்டும்; தன்னலம் முதலிய வேதாளங்களைக் கட்டிப்பிடித்து அடக்கி ஆள வேண்டும். விக்கிரமாதித்தனைப் போல அந்த முயற்சியிலே விடாப்பிடியாக நிற்க வேண்டும். விக்கிரமாதித்தன் தனது திறமையாலும் முயற்சியாலும் விக்கிரம சகாப்தம் என்ற ஒரு புதிய சகாப்தத்தையே உண்டு பண்ணக்கூடிய தகுதி பெற்றான். நாமும் நமது உயர்ந்த உணர்ச்சிகளை மேலோங்கி நிற்கச் செய்யும் முயற்சியில் வெற்றி. பெற்றால் இன்ப வாழ்க்கையாகிய புதிய சகாப்தத்தை உலகம் முழுவதிலும் தோற்றுவிக்க முடியும்.