தேவகியின் கணவன்
தேவகியின் கணவன்
1
[தொகு]தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் ஆண்டுதோறும் சுதேசிப் பொருட்காட்சி நடத்துகிறவர்களை வாழ்த்துகிறேன். அந்தப் பொருட்காட்சி காரணமாக என் வாழ்க்கையில் வெகு காலமாய் மர்மமாக இருந்து வந்த ஒரு விஷயம் துலங்கியது. என் மனதில் சுமந்திருந்த ஒரு பெரிய பாரம் நீங்கியது. அடிக்கடி என்னைச் சிந்தனையில் ஆழ்த்தி என் நிம்மதியைக் குலைத்து வந்த ஒரு சந்தேகம் நிவர்த்தியாகி என்னுடைய உள்ளத்தில் அமைதி ஏற்பட்டது.
இந்த வருஷத்துச் (1950 பெப்ருவரி, மார்ச் மாதங்களில் எழுதப்பட்டது) சுதேசிப் பொருட்காட்சிக்கு நான் போகவில்லை. சென்ற வருஷத்தைக் காட்டிலும் இந்த வருஷம் எவ்வளவோ சிறப்பான ஏற்பாடுகள் செய்திருப்பதாக எல்லாரும் சொன்னார்கள். ஆனாலும் நான் போகவில்லை. போகலாமா, வேண்டாமா என்று யோசனை செய்து, வேண்டாம் என்று முடிவு கட்டினேன். போயிருந்தால், அங்கே நான் தேவகியைச் சந்தித்த இடத்துக்கு என் கால்கள் என்னை இழுத்துக் கொண்டு போயிருக்கும். பழைய ஞாபகங்களில் மூழ்கிப் போயிருப்பேன். எல்லாரும் பார்க்கும் காட்சிகளில் என் மனம் சென்றிராது. ஆடல் பாடல்களிலோ நாடகம் நடனங்களிலோ நான் எவ்விதம் கருத்தைச் செலுத்த முடியும்? சித்திரக் காட்சிக்குள் சென்றால், தேவகியின் சித்திரம்தான் என் மனக் கண்முன்னால் தோன்றும். மின்சார சக்தியின் அற்புதங்களைக் காட்டும் இடத்துக்குள் சென்றால், அங்கே திடீரென்று தேவகியை நான் பார்த்த உடனே என் உடம்பில் பாய்ந்து குலுக்கிப் போட்ட மின்சார சக்தியைத் தான் நினைத்துக் கொள்வேன்.
ஒரு வருஷமா? இரண்டு வருஷமா? இருபத்தைந்து வருஷத்துக்குப் பிறகு அவளை நான் பார்த்தேன். கன்னிப் பெண்ணாகத் துள்ளித் திரிந்து கொண்டிருந்தவளை மூன்று குழந்தைகளின் தாயாராகப் பார்த்தேன். ஆயினும், பார்த்த தட்சணமே அடையாளம் தெரிந்து போய்விட்டது. கொஞ்ச நஞ்சம் சந்தேகம் இருந்தாலும், செக்கச் சிவந்த அவள் கன்னத்தில், காதின் ஓரத்தில் இருந்த அழகிய மச்சம் அந்தச் சந்தேகத்தைப் போக்கி விட்டது.
தேவகியும் என்னை அடையாளம் தெரிந்து கொண்டு விட்டாள் என்பது அவள் என்னைப் பார்த்துப் பிரமித்து நின்றதிலிருந்து தெரிந்தது. அவள் கையைப் பிடித்துக் கொண்டு வந்த குழந்தை அவளைப் பிடித்து இழுத்ததைக் கூடக் கவனியாமலே நின்றாள்.
என் மனக் கொந்தளிப்பை ஒருவாறு சமாளித்துக் கொண்டு, "ஹெட்மாஸ்டர் பெண் தேவகிதானே?" என்று நாத்தழுதழுக்கக் கேட்டேன்.
"ஆமாம்; நீங்கள் கிட்டாதானே?" என்றாள் தேவகி.
"ஓகோ! இன்னும் என்னை ஞாபகம் வைத்திருக்கிறாயே?" என்றேன்.
"எப்படி மறக்க முடியும்?... என்றைக்காவது ஒரு நாள் உங்களைச் சந்திப்போம் என்கிற நம்பிக்கை என் மனதில் இருந்தது. அந்த நம்பிக்கை இப்போது நிறைவேறிவிட்டது!" என்று தேவகி கனிவுடன் கூறினாள்.
"அப்படியா? என்னைச் சந்திக்கும் விருப்பம் கூட உனக்கு இருந்ததா? அது என்னுடைய பாக்கியந்தான்!... இந்தச் சென்னைப் பட்டணத்தில் தான் நீ இருக்கிறாயா? ஜாகை எங்கே?... உன்னுடைய கணவர்... இந்தக் குழந்தைகளின் தகப்பனார்... அவர் இங்கே வரவில்லையா?" என்று தயங்கித் தயங்கிக் கேட்டேன்.
"வீட்டுக்கு வாருங்கள்! எல்லாக் கதையும் சாவகாசமாகச் சொல்கிறேன்!" என்று தேவகி கூறிய வார்த்தைகளிலேயே கண்ணீர் கலந்திருந்ததாகத் தோன்றியது.
அவளுடைய வீட்டு விலாசத்தைத் தெரிந்து கொண்டேன். பிறகு பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றேன்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டுக்கு வரும்படி தேவகி சொல்லியிருந்தாள். அது வரையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகச் சென்று கொண்டிருந்தது.
அந்த நீண்ட யுகங்களை யெல்லாம் பழைய சம்பவங்களை ஒவ்வொன்றாக நினைவுப்படுத்திக் கொண்டு கழித்தேன்.
2
[தொகு]ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கு முன்னால் நடந்த சம்பவம். ஆனாலும் நேற்று நடந்ததுபோல் என் ஞாபகத்தில் இருக்கிறது. ஹைஸ்கூலில் ஆறாவது பாரம் படித்துக் கொண்டிருந்தேன். என் தகப்பனாரின் மரணம் காரணமாக நடுவில் மூன்று வருஷம் என் படிப்புத் தடைப்பட்டிருந்தது. ஆகையால் என் வகுப்பில் வாசித்த மற்றப் பிள்ளைகளைக் காட்டிலும் எனக்கு வயது அதிகம். பதினேழு முடிந்து பதினெட்டாவது பிறந்திருந்தது. ஆனால் பள்ளிக்கூடம் போகாத மூன்று வருஷமும் நான் சும்மா இருந்து விடவில்லை. நன்றாகப் படித்திருந்தேன். ஆகையால் இப்போது வகுப்பில் கெட்டிக்காரப் பையன் என்று பெயர் வாங்கியிருந்தேன். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் எல்லாரும் என்பேரில் பிரியமாயிருப்பார்கள். அந்த வருஷத்தில் புதிதாக வந்திருந்த ஹெட்மாஸ்டர் பத்மநாப ஐயங்காரும் என்னிடம் மிக்க அபிமானமாயிருந்தார். அவரைக் காட்டிலும் அவர் மனையாளுக்கு என்னிடம் பிரியம் அதிகம். அந்தத் தம்பதிகள் எங்கள் ஊருக்கு வந்த புதிதில் நான் அவர்களுக்கு மிக்க ஒத்தாசையாயிருந்தேன். புதுக் குடித்தனம் போடுவதற்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தேன். இதிலிருந்து அந்த மாமிக்கு என்னை ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. தினசரி காலையில் பலகாரம் காப்பி எனக்கு ஹெட்மாஸ்டரின் வீட்டிலேதான். ஒரு நாளைக்கு நான் அவர்கள் வீட்டுக்குப் போகாவிட்டால், "கிட்டா! நேற்றைக்கு எங்கே காணோம்? இந்த மாதிரி நீ 'ஆப்ஸெண்ட்' போட்டால், ஹெட்மாஸ்டரிடம் சொல்லிப் பரீட்சையில் 'ஸைபர்' போட்டுவிடச் சொல்வேன்!" என்று மாமி சண்டை பிடிப்பாள். இப்படிச் சிலகாலம் ஹெட்மாஸ்டர் வீட்டுக்கு நான் செல்லப் பிள்ளையாயிருந்தேன். அவர்கள் வந்த புதிதில் அவர்களுடைய வீட்டில் அந்தத் தம்பதிகளைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.
பிறகு ஒரு நாள் ரங்கநாயகி அம்மாள் திடீரென்று ஒரு செய்தி சொன்னாள். அவர்களுடைய குமாரி தேவகி அடுத்த வாரம் சென்னைப் பட்டணத்திலிருந்து வரப்போவதாகச் சொன்னாள். அதுவரையில் அவர்களுக்கு ஒரு புதல்வி உண்டு என்னும் விஷயமே தெரியாமலிருந்தது. எனவே, அந்தச் செய்தியைக் கேட்டவுடன் எனக்கு வியப்பாயிருந்தது. வியப்பு மட்டுமில்லை; காரணம் சொல்ல முடியாத ஒரு பரபரப்பு உண்டாயிற்று. வரப்போகிற தேவகியைப் பற்றி எல்லா விவரங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றிற்று. மாமியிடம் சாதுர்யமாகப் பல கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டேன். தேவகிக்கு வயது பதினைந்து; நாலாவது பாரம் பாஸ் செய்திருந்தாள். அவளை எங்கள் ஊருக்கு அழைத்துக் கொண்டு வர முதலில் பத்மநாப ஐயங்கார் இஷ்டப்படவில்லை. எங்கள் ஊர் பட்டணத்திலும் சேர்ந்ததில்லை; பட்டிக் காட்டிலும் சேர்ந்ததில்லை. இரண்டும் கெட்ட ஊர். பெண்களுக்குத் தனியாக ஹைஸ்கூல் கிடையாது. ஆண் பிள்ளைகள் ஹைஸ்கூல் மட்டுந்தானிருந்தது. ஆகையினாலே தேவகியின் படிப்பைக் கெடுக்க வேண்டாம் என்று பட்டணத்தில் பாட்டி வீட்டிலேயே அவளை விட்டு விட்டு வந்தார்கள். ஆனால் அதிக காலம் செல்லப் பெண்ணைப் பிரிந்திருப்பதற்குத் தாயார் தகப்பனார் இரண்டு பேராலும் முடியவில்லை. ஆகையால் சில நாளைக்கெல்லாம் அவளை அழைத்துக் கொண்டு வரத் தீர்மானித்தார்கள். அழைத்துக் கொண்டு வந்து புருஷப் பிள்ளைகளின் ஹைஸ்கூலிலேயே சேர்த்துவிடவும் முடிவு செய்தார்கள். ரங்கநாயகி அம்மாள் இதற்கு ஆட்சேபணைகள் பல சொல்லாமலில்லை. ஆனால் பத்மநாப ஐயங்கார், "நானே ஹெட்மாஸ்டராயிருக்கும் போது என்ன கவலை? என்னை மீறி என்ன நடந்துவிடும்? கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோய் விடுமா? யாராவது ஏதாவது உளறிக் கொண்டு போகட்டும். இந்தக் காலத்தில் வைதிக குடும்பத்துப் பெண்கள் சாதி விட்டுச் சாதி கல்யாணம் செய்து கொள்கிறார்கள். கப்பலேறிச் சீமைக்குப் போகிறார்கள். வக்கீல் பரீட்சை பாஸ் செய்துவிட்டு நாலு கைச் சட்டை போட்டுக் கொண்டு கோர்ட்டில் வந்து பேசுகிறார்கள். அவர்களையெல்லாம் யார் தள்ளிவைத்து விட்டார்கள்? என் பெண் என் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பதற்கு என்ன வந்துவிட்டது?" என்று அடித்துப் பேசினார்.
அதன் பேரில் ரங்கநாயகி அம்மாளும் சம்மதித்தாள். எங்கள் ஹெட்மாஸ்டரின் மனைவி கொஞ்சம் உலகப் போக்கை அறிந்த பெண்மணி. தன் புதல்வி ஆறாவது பாரம் வரையிலாவது படித்தால்தான் நல்ல இடத்தில் கலியாணம் ஆகும் என்ற எண்ணம் அந்த அம்மாளின் மனதில் இருந்தது.
"நீயே சொல்லு, கிட்டா! இவருக்கோ மாதம் சம்பளம் நூற்றைம்பது ரூபாய். காப்பிச் செலவுக்கே ஐம்பது ரூபாய் ஆகிவிடுகிறது. இந்த இலட்சணத்தில் பணங் காசு எப்படிச் சேரும்? பத்தாயிரம், இருபதினாயிரம் என்று வரதட்சணை கொடுத்துக் கலியாணம் பண்ணிக் கொடுக்க நமக்கு யோக்யதை உண்டா? குழந்தைக்குக் கொஞ்சம் படிப்பாவது இருந்தால் தானே, சுமாராக நல்ல இடமாகப் பார்த்துக் கலியாணம் செய்து கொடுக்கலாம்?" என்று ரங்கநாயகி அம்மாள் என்னிடம் சொன்னதற்கு நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. அந்த விஷயமாக என் மனதில் அச்சமயம் அபிப்பிராயம் ஒன்றும் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால் மாமிக்கு யாரிடமாவது தன் மனதிலிருந்ததைச் சொல்லித் தீர்க்க வேண்டியதாயிருந்தது. ஆகையால் என்னைப் பிடித்துக் கொண்டாள்.
"என்னடா, கிட்டா! ஒன்றும் பதில் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டிருக்கிறாயே? உன் அபிப்பிராயம் என்ன? தேவகியின் படிப்பை நிறுத்த எனக்கும் இஷ்டமில்லைதான். ஆனால் இந்த ஊர் கொஞ்சம் பட்டிக்காடாயிருக்கிறதே என்று பார்க்கிறேன். புருஷப் பிள்ளைகள் படிக்கும் வகுப்பிலேயே தேவகியையும் உட்கார்ந்து படிக்கச் சொன்னால், இந்த ஊர்க்காரர்கள் ஏதாவது வம்பு வளர்க்க மாட்டார்களா?" என்று ரங்கநாயகி அம்மாள் மறுபடியும் வற்புறுத்திக் கேட்டாள்.
"நீங்கள் எதற்காகக் கவலைப்படுகிறீர்கள், மாமி! ஹெட்மாஸ்டருக்குத் தெரியாத விஷயமா? அவர் செய்யும் ஏற்பாடு சரியாகத்தான் இருக்கும்" என்று நான் சொல்லி வைத்தேன்.
"என்னதான் அவர் எல்லாம் தெரிந்தவராயிருந்தாலும், இந்த விஷயம் நன்றாய் யோசித்துச் செய்ய வேண்டிய காரியம் அல்லவா? எந்தப் பக்கம் பார்த்தாலும் தர்ம சங்கடமாயிருக்கிறது. எனக்கும் சரி, அவருக்கும் சரி, குழந்தையை விட்டு விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. தூங்குவதற்குக் கண்ணை மூடினால் தேவகிதான் கனவிலே வந்து நிற்கிறாள். எங்கள் விஷயந்தான் இப்படி என்றால், குழந்தையும் 'நான் வந்து விடுகிறேன்' என்று கடிதத்துக்கு மேல் கடிதமாக எழுதுகிறாள். 'பெண் கல்வி' 'பெண் கல்வி' என்று வாய் கொண்ட மட்டும் எல்லாரும் கூச்சல் போடுகிறார்களே? இந்த ஊரில் பெண்களுக்கு என்று ஒரு ஹைஸ்கூல் இல்லை, பாரேன்!" என்றால் மாமி.
"இந்த ஊரில் பெண்களுக்கு ஹைஸ்கூல் வைத்தால் என்ன பிரயோஜனம், மாமி? பெஞ்சுகளும் நாற்காலிகளுந்தான் படிக்க வேண்டும். இந்த ஊர்ப் பெண்கள் யாரும் நாலாவது வகுப்புக்கு மேல் தாண்டிவருவதேயில்லை!" என்றேன் நான்.
3
[தொகு]ஹெட்மாஸ்டரும் நானும் தேவகியை அழைத்துக்கொண்டு வருவதற்காக ரயில்வே நிலையத்துக்குப் போயிருந்தோம். தெரிந்த மனிதர்களுடன் தேவகியைக் கூட்டி, ரயிலேற்றி அனுப்புவதாகச் சென்னையிலிருந்து கடிதம் வந்திருந்தது. ரயில் எப்போது வரப் போகிறது என்று எனக்கு ஒரே ஆவலாயிருந்தது. கடைசியாக, ரயில் வந்தது. நாங்கள் நின்ற இடத்துக்கு எதிரிலேயே தேவகி இருந்த வண்டியும் நின்றது. ரயிலுக்கு வெளியே முகத்தை நீட்டி ஹெட்மாஸ்டரைப் பார்த்துக் கையை ஆட்டிய பெண்ணைப் பார்த்ததும் அவள் தான் தேவகி என்று எனக்குத் தெரிந்துவிட்டது. கோண வகிடும் சுருட்டை மயிரும் குறுகுறுவென்ற முகமும் கறுப்பான புருவமும் கண்ணிமையுமாகத் தோன்றிய தேவகியின் முகத்தை ரயில் சட்டங்களுக்கு நடுவில் அன்றைக்கு எப்படிப் பார்த்தேனோ, அப்படியே இன்றைக்கும் ஞாபகத்துக்கு வருகிறது. "அப்பா! வந்துவிட்டேன்!" என்று சொன்ன அவளுடைய குரலைக் கேட்டதும் என் நெஞ்சு மேலெழுந்து தொண்டையை அடைத்தது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. ரயிலிலிருந்து தேவகி கீழே இறங்கியதும் எனக்கு என்ன தோன்றிற்று தெரியுமா?
"மாமி சுத்தப் பைத்தியம்! இப்படி ரம்பை, மேனகையெல்லாம் தோற்றுப் போகும்படி அழகு படைத்த பெண்ணுக்குக் கலியாணம் ஆவதைப் பற்றியா கவலைப்படுவது? இவளுக்குப் படிப்பு இருந்தால் தான் கலியாணம் ஆகுமா? பத்தாயிரம் இருபதினாயிரம் வரதட்சணை இந்தப் பெண்ணுக்கா கொடுக்க வேண்டும்? பைத்தியக்காரத்தனந்தான்! இவளைக் கலியாணம் செய்து கொள்ளுகிறவன் அல்லவா இவளைப் பெற்றவர்களுக்குப் பத்தாயிரம், இருபதினாயிரம் பணம் கொடுக்க வேண்டும்? அப்படிக் கொடுத்தாலும் அது இவளுக்கு ஈடாகுமா?" என்று இப்படியெல்லாம் என் மனம் நினைத்தது.
ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளியேறியபோது தேவகியின் பெட்டியை நான் தூக்கிக் கொண்டு போனேன். அப்படி அவளுடைய பெட்டியைத் தூக்கியது எனக்குப் பெருமையாயிருந்தது. ஜட்கா வண்டியில் முதலில் தேவகியை ஏறச் சொல்லிவிட்டு ஹெட்மாஸ்டர் ஏறிக் கொண்டார். பிறகு என்னையும் ஏறிக்கொள்ளச் சொன்னார். நான் தயக்கத்துடன் ஏறி உட்கார்ந்தேன். வண்டி நகரத் தொடங்கியதும் தேவகி, "இவர் யார் அப்பா?" என்றாள். அதுவரையில் யாருமே என்னைப் பற்றி அவ்விதம் மரியாதையாகப் பேசியதில்லை. எங்கள் ஊரில் சிறு பெண்கள்கூடப் புருஷப் பிள்ளைகளை 'அவன்' 'இவன்' என்றுதான் சொல்வார்கள். தேவகி எனக்கு மரியாதை கொடுத்துப் பேசியது எனக்கு அளவில்லாத பெருமையையும் மகிழ்ச்சியையும் அளித்தது. பட்டணத்தில் வளர்ந்த பெண்களின் நாகரிகம் எப்படியும் உயர்வுதான் என்று எண்ணிக் கொண்டேன்.
எப்போதும் சளசளவென்று பேசும் பழக்கம் உடைய எனக்கு அன்றைக்கு, அந்த ஜட்கா வண்டியில் போகும்போது, எதனாலோ பேசவே தோன்றவில்லை. தகப்பனாரும் மகளும் பேசுவதைக் கேட்டுக் கொண்டு மௌனமாயிருந்தேன். நடுவில் ஒரு தடவை தேவகி "இவருக்கு ரொம்ப சங்கோசம் போலிருக்கிறது. பேசாமல் வருகிறாரே?" என்றாள். "அதெல்லாம் ஒன்றுமில்லை; அப்பாவும் பெண்ணும் பேசும்போது நடுவில் குறிக்கிட வேண்டாம் என்று இருக்கிறான். உன் அம்மாவுக்கு இவன் செல்லப் பிள்ளை. எதற்கெடுத்தாலும் 'கிச்சாமியை அனுப்புங்கள்!' என்பாள். இவனால் எனக்கு வீட்டு விஷயமான கவலையே இல்லாமலிருக்கிறது!" என்றார் ஹெட்மாஸ்டர். அவரிடம் அப்போது எனக்கு எல்லை கடந்த நன்றி உணர்ச்சி உண்டாயிற்று.
ஹெட்மாஸ்டர் குடியிருந்த வீட்டின் வாசலில் சில மந்தாரை, பவளமல்லி முதலிய புஷ்பச் செடிகளுக்கு மத்தியில் ஒரு பழைய காலத்துச் சாதி முல்லைக் கொடியும் வளர்ந்து படர்ந்து பூத்துக் கொட்டியிருந்தது. ஒடிந்து விழுந்து விடுவாளோ என்று தோன்றும்படி ஒல்லியான தேகத்துடன் தேவகி அந்த வீட்டுக்குள் புகுந்தபோது, பெண்களைப் 'பூங்கொடி' என்று சொல்வதின் பொருத்தம் எனக்கு விளங்கிற்று. இன்றைக்குக் கூட நான் தேவகியைப் பற்றி நினைத்தால், அந்த சாதி முல்லைக்கொடியும் அதில் பூத்திருந்த மலர்களின் மணமும் சேர்ந்து எனக்கு ஞாபகம் வருகின்றன.
4
[தொகு]தேவகி எங்கள் ஊருக்கு வந்து சில நாள் வரையில் என் வாழ்க்கையே குதூகல மயமாயிருந்தது. வழக்கம் போலவே ஹெட்மாஸ்டர் வீட்டுக்கு அடிக்கடி போய் வந்தேன். அம்மாவுக்கு உதவி செய்தது போலவே மகளுக்கும் உதவி புரிந்து வந்தேன். சில சமயம் கணக்கு முதலிய பாடங்களில் தேவகி சந்தேகம் கேட்டால் சொல்லிக் கொடுப்பேன். தேவகிக்கும் என்னை ரொம்பப் பிடித்து விட்டதாகத் தோன்றியது. அம்மாவைப் போலவே பெண்ணும் ஒரு நாள் நான் அவர்கள் வீட்டுக்குப் போகாவிட்டால், "எங்கே நேற்றுக் காணோம்?" என்று கேட்கத் தொடங்கினாள். அவர்களுக்குள் ஒரு வித்தியாசம் என்னவென்றால், தாயார் என்னிடம் பிள்ளை முறை பாராட்டி என்னை ஏக வசனத்தில் அழைப்பாள். புதல்வி மரியாதையாக 'வாங்கள்' 'போங்கள்' என்று கூறுவாள்.
இவ்விதம் சிலகாலம் நான் ஆனந்த மயமான வானுலகத்தில் சஞ்சரித்து வாழ்ந்து வந்தேன். திடீரென்று அந்த வானில் கருமேகம் ஒன்று தோன்றியது. முதலில் சிறியதாகத் தோன்றியது வர வரப் பெரிதாகிப் படர்ந்தது. இடியும் மின்னலும் புயலும் மழையும் தொடர்ந்து வந்தன.
தேவகி எங்கள் பள்ளிக்கூடத்தில் ஐந்தாவது பாரத்திலே சேர்ந்தாள். வகுப்பில் எல்லாப் பிள்ளைகளும் பெஞ்சிகளில் உட்கார்ந்திருப்பார்கள். தேவகிக்கு மட்டும் சற்றுத் தள்ளி ஒரு தனி நாற்காலி போடப்பட்டிருக்கும். அதில் அவள் உட்கார்ந்து கொள்வாள். இதைக் குறித்துச் சில மாணாக்கர்கள் ஒரு விதமாகப் பேசுவதுண்டு என்று எனக்குத் தெரிய வந்தது. பராபரியாகக் கேள்விப்பட்டேனேயன்றி, என் காதில் அத்தகைய பேச்சு எதுவும் விழாமல் கொஞ்ச நாள் வரையில் இருந்தது. ஆகையால், மனதிற்குள் ஆத்திரப்பட்டேனே தவிர அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல முடியவில்லை. கடைசியாக, ஒரு நாள் என் காதுபடக் கேட்டு விட்டேன். ஆறாவது பாரத்தில் இரண்டு வருஷம் தேறாமல், மூன்றாவது வருஷம் படித்த ஒரு பையன் இருந்தான். அவன் பெயர் வைத்தியநாதன். பணக்கார வீட்டுப் பிள்ளை. அகம்பாவம் பிடித்தவன். வம்புப் பேச்சுப் பேசும் வழக்கம் ரொம்ப உண்டு. ஆசிரியர்களைப் பற்றிக்கூடச் சில சமயம் கன்னாபின்னா என்று மரியாதைக் குறைவாகப் பேசுவான். அவனோடு நான் சகவாசமே வைத்துக் கொள்வதில்லை.
ஒருநாள் நான் ஹெட்மாஸ்டர் வீட்டுக்குப் போய்விட்டு ஹாஸ்டலுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது வைத்தியநாதனும் இன்னொரு பையனும் சாலை ஓரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைச் சுட்டிக் காட்டி வைத்தியநாதன் ஏதோ சொன்னான். இன்னொரு பையன் 'ஓஹோ!' என்று சிரித்தான். அதைக்கூட நான் பொருட்படுத்தவில்லை. நான் பாட்டுக்குச் சாலையின் இன்னொரு ஓரமாகப் போனேன். ஆனால் வைத்தியநாதனுக்கு அன்றைக்கு ஏதோ பிசாசு பிடித்திருந்தது. ஆகையால் என் காதில் விழும்படி அவன் ஹெட்மாஸ்டர் பெண் தேவகியைப் பற்றிப் பேசினான். என்னையும் அவளையும் சேர்த்தே பேசினான், என்ன பேசினான் என்று இங்கே எழுதி என் பேனாவையும் காகிதத்தையும் கறைப்படுத்த நான் விரும்பவில்லை.
அதைக் கேட்டேனோ இல்லையோ, எனக்கு ஆவேசம் வந்துவிட்டது. அவ்வளவு தைரியமும் தேகபலமும் எனக்கு எப்படி அச்சமயம் வந்தன என்பதை நினைத்தால் இப்போது கூட வியப்பாயிருக்கிறது. ஒரே பாய்ச்சலில் அவனருகில் சென்று அவன் கன்னத்தில் பளீர் என்று ஒரு அறை விட்டேன். வைத்தி நல்ல தடியன்; 'புட்பால்' நன்றாக ஆடுவான். காற்பந்து ஆடி ஆடிக் காலில் அவனுக்கு வைரம் பாய்ந்திருந்தது. என்னை ஒரு உதைவிட்டான். என் முழங்காலில் பட்டுப் பிராணனே போய்விட்டது. ஆயினும் நான் பணிந்து விடவில்லை. இரண்டு பேரும் சிறிது நேரம் துவந்த யுத்தம் செய்தோம். வீதியில் விழுந்து புரண்டோ ம். வைத்தி என் கழுத்தைப் பிடித்து நெருக்க ஆரம்பித்தான். எனக்கு மூச்சுத் திணற ஆரம்பித்துவிட்டது. நல்ல வேளையாக அந்தச் சமயத்தில் எங்கள் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் வந்தார். ஹெட்மாஸ்டரைக் காட்டிலும் அவர் பிள்ளைகளின் கட்டுப்பாட்டை நிலை நிறுத்துவதில் கண்டிப்பானவர். அவர் எங்கள் அருகில் வந்து அதட்டியதும் இருவரும் சண்டையை நிறுத்தினோம். இருவரையும் அவர் கடுமையாகத் திட்டிவிட்டுப் பள்ளிக்கூடம் வந்ததும் தண்டிக்கப் போவதாகச் சொன்னார். வைத்தி உடனே "என் பேரில் தப்பில்லை, ஸார்! நான் பாட்டுக்குச் சுந்தரத்துடன் பேசிக் கொண்டிருந்தபோது இவன் தான் வலுச்சண்டைக்கு இழுத்தான். திடுதிடுவென்று வந்து கன்னத்தில் பளீர் என்று அறைந்தான். சுந்தரத்தை வேணுமானால் கேட்டுப் பாருங்கள்!" என்றான். "சுந்தரத்தைக் கேட்பதென்ன? இவனையே கேட்கிறேன். வைத்தி சொல்வது உண்மையா?" என்று என்னைப் பார்த்து ஆசிரியர் அதட்டிக் கேட்டார். நான் பதில் சொல்லாமல் திகைத்து நின்றேன். வைத்தி கூறியது என்னவோ உண்மைதான். முதலில் வைத்தியின் கன்னத்தில் அறைந்தவன் நான் தான். ஆனால் எதற்காக? அந்தக் காரணத்தை வெளியிட்டுச் சொல்ல எனக்கு இஷ்டமில்லை. அதைச் சொல்வதைக் காட்டிலும் ஆசிரியரின் தண்டனையைப் பெறுவதற்கும் மற்றவர்களிடம் அவமானப் படுவதற்கும் தாயாராயிருந்தேன். தேவகியையும் என்னையும் சேர்த்து வைத்தி பேசிய ஆபாச வார்த்தைகளை எப்படி நான் திருப்பிச் சொல்வேன்? சொன்னால் அந்தப் பேச்சு ஊரெல்லாம் ஒரு நிமிஷத்தில் பரவி விடுமே? அதைவிட என் நாவைத் துண்டித்து விடுவதே மேல் என்று நினைத்தேன்.
உதவித் தலைமை ஆசிரியர் ஜகதீசய்யர் ஹெட்மாஸ்டரிடம் எங்கள் தெருச் சண்டையைப் பற்றிச் சொல்லிவிட்டார். ஹெட்மாஸ்டர் என்னை அழைத்து விசாரித்தார். வைத்தியுடன் வலுச் சண்டைக்குப் போனதற்குக் காரணம் கேட்டார். நான் சொல்ல மறுத்தேன். வேறு யாரிடம் சொன்னாலும் அவரிடம் சொல்லக் கூடாதல்லவா? கடைசியில் "இந்தத் தடவை மன்னித்துவிட்டேன். இனிமேல் இப்படியெல்லாம் செய்யாதே!" என்று எச்சரித்தார். அத்துடன் அச்சம்பவம் முடிந்துவிட்டதாகத் தோன்றியது.
ஆனால் ஹெட்மாஸ்டர் என்னை நடத்திய முறையில் சீக்கிரத்திலேயே வித்தியாசத்தைக் கண்டு கொண்டேன். பழைய அபிமானமும் நம்பிக்கையும் என்னிடம் இல்லையென்றே தோன்றியது. அவர்களுடைய வீட்டுக்கு நான் வருவதைக் கூட அவ்வளவாக அவர் விரும்பவில்லையென்று காணப்பட்டது. அதைக் காட்டிலும் முக்கியமாக, நானும் தேவகியும் பேசுவதைப் பார்த்தால் ஹெட்மாஸ்டரின் முகம் சுருங்கிற்று. "தேவகி! என்ன வீண் பேச்சு? போய்ப் பாடத்தைப் படி!" என்பார். இதுமட்டுமல்லாமல் என்னிடம் அவர் தனிமையில் பேச நேரும்போது "கிருஷ்ணசாமி! தேவகிக்கு ஒரு நல்ல வரன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் வாழ்க்கையில் ரொம்பவும் வறுமையால் கஷ்டப்பட்டவன். தேவகியையாவது நல்ல பணக்காரப் பிள்ளைக்குப் பார்த்துக் கொடுத்து விட விரும்புகிறேன். பணக்காரப் பிள்ளையாயிருந்தால் மட்டும் போதாது; குறைந்தது பி.ஏ. படித்தவனாயிருக்க வேண்டும். பெருமாளுடைய சித்தம் எப்படியிருக்கிறதோ? உனக்கு யாராவது நல்ல வரன் தெரிந்திருந்தால் சொல்லு!" என்று கூறுவார்.
இந்த வார்த்தை என் நெஞ்சை வாள் கொண்டு அறுப்பது போலிருக்கும். எனக்கு நானே புத்தி சொல்லிக் கொண்டு ஆறுதல் அடையப் பார்ப்பேன். "தேவகிக்கு எப்படியும் ஒரு நாள் கலியாணம் நடக்க வேண்டியதுதானே? ஆஸ்திபாஸ்தி ஒன்றுமேயில்லாத நாம் அதைப்பற்றி யோசித்து என்ன பயன்? நமக்குப் படிப்பும் கொஞ்சம். பி.ஏ. வகுப்பை எட்டிப் பார்க்கவும் முடியாது. வயதுப் பொருத்தம் கூட இல்லை. பின்னே, எதற்காகக் கவலைப்பட வேண்டும்? ஹெட்மாஸ்டர் சொல்வது நியாயந்தானே?" என்று பலவிதமாக எண்ணி யோசித்து முடிவு செய்வேன். ஆனாலும் தேவகிக்குக் கலியாணம் நடக்கப் போகிறது என்ற எண்ணம் என் மனதில் ஏதோ ஒரு வேதனையைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
"வைத்திக்கும் எனக்கும் சண்டை எழுந்த காரணத்தைப் பற்றி ஹெட்மாஸ்டருக்குத் தெரிந்திருக்குமோ, ஒரு வேளை சுந்தரம் சொல்லியிருப்பானோ?" என்று எண்ணி எண்ணி என் உள்ளம் தத்தளித்தது. அல்லது வைத்தியே ஒருவேளை ஏதாவது உளறியிருக்கலாம்; குற்றத்தை என்பேரில் சுமத்தியிருக்கலாம். ஆனாலும் அதைப்பற்றி யாரிடமும் பேசவோ, கேட்கவோ முடியவில்லை. சண்டைக்குப் பிறகு வைத்தியும் நானும் பேசுவதேயில்லை. என்னைப் பற்றி அவன் நான் இல்லாத சமயங்களில் ஏதேதோ கோள் சொல்லி அவதூறு பேசி வருகிறான் என்று தெரிந்திருந்தது. ஆயினும் பழைய அநுபவம் காரணமாக அதைப்பற்றிக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்துவிட்டேன். இரண்டாவது தடவை அவனோடு சண்டை போட எனக்கு இஷ்டமில்லை.
இப்படியாகக் காலம் போய்க் கொண்டிருந்தது. என் வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த புத்துணர்ச்சியும் ஆனந்தமும் மறைந்துவிட்டன. கவலையும் சந்தேகமும் மனதை அரித்துக் கொண்டிருந்தன. இவ்வளவுக்கு மிடையில் தேவகி எப்போதும்போல் என்னிடம் பிரியம் காட்டி வந்தது ஒன்றுதான் ஒருவாறு திருப்தி அளித்து வந்தது. "ஏன் இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வருவதில்லை?" என்று தேவகி என்னைப் பார்க்கும் போதெல்லாம் கேட்கத் தவறுவதில்லை. ஆனால் அவளுடைய தகப்பனார் நான் வருவதை விரும்பவில்லையென்று அவளிடம் நான் எப்படிச் சொல்வேன்? சொன்னால்தான் அதில் பயன் என்ன?
5
[தொகு]ஒரு நாள் ரங்கநாயகி அம்மாள் என்னைக் கூப்பிட்டு அனுப்பி, "கிட்டா! கோவிலுக்குப் போய் பெருமாளையும் தாயாரையும் சேவித்து விட்டு வரவேணும். நீ என் கூட வருகிறாயா?" என்று கேட்டாள். மாமியின் அன்புக்கு மாறு சொல்ல முடியாமல் சம்மதித்தேன். மாமியுடன் நான் கோவிலுக்குப் போவதை யாராவது பையன்கள் பார்த்தால், "கிச்சாமி மறுபடியும் ஹெட்மாஸ்டர் வீட்டு மாமியைக் காக்காய் பிடிக்கிறான்!" என்று சொல்லிப் பரிகசிப்பார்கள் என்பது தெரிந்துதானிருந்தது. அதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. தைரியமாகப் பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு மாமியைத் தொடர்ந்து போனேன். வழியில் மாமி அநுதாபம் நிறைந்த குரலில், "கிட்டா! என்னிடம் நீ நிஜத்தைச் சொல்லிவிடு. இவருக்கு - தேவகியின் அப்பாவுக்கு - உன் பேரில் என்ன கோபம்? நீ என்ன அப்படிப்பட்ட குற்றத்தைச் செய்து விட்டாய்? எதுவாயிருந்தாலும் என்னிடம் சொல்லி விடு! நான் அவரிடம் பேசிச் சரிப்படுத்துகிறேன்!" என்றாள். மாமியின் அன்பு என்னை உருக்குவிட்டது. அழமாட்டாக் குறையாக நான் உண்மையைச் சொல்லிவிட்டேன். உண்மை என்றால், வைத்திய நாதன் உளறியதை அப்படியே சொல்லிவிடவில்லை. ஒரு மாதிரி அவனுடைய வம்புப் பேச்சைப் பற்றிக் குறிப்பாகச் சொல்லி, அதனால் நேர்ந்த சண்டையைப் பற்றியும் சொன்னேன்.
இதைக் கேட்ட மாமி, "அழகாயிருக்கிறது! இதற்குத்தானா உன் பேரில் எரிந்து விழுகிறார்? ஊரிலே நாலு காலாடிகள் ஏதாவது பேசிக் கொண்டுதானிருப்பார்கள். இப்படி நடக்கலாம் என்று நான் எதிர்பார்த்ததுதானே? 'இந்தப் பட்டிக்காட்டு ஊரில் புருஷப் பிள்ளைகளின் பள்ளிக் கூடத்தில் தேவகியைச் சேர்க்கலாமா?' என்று அப்போதே நான் சொன்னேன். அதைக் கேட்காமல் சேர்த்து விட்டார். இப்போது உன் பேரில் கோபித்துக் கொண்டு என்ன பயன்? ஹெட்மாஸ்டர் என்னமோ ரொம்ப நல்லவர் தான். ஆனால் கேட்பார் பேச்சைக் கேட்கும் சுபாவம் கொஞ்சம் உண்டு. அந்த உதவித் தலைமை வாத்தியார் ஜகதீசய்யர் ஏதோ இல்லாததும் பொல்லாததும் சொல்லி வத்தி வைத்திருக்கிறார். நீ, பாவம், என் வயிற்றில் பிறந்த பிள்ளை மாதிரி எவ்வளவோ விசுவாசமாயிருந்தாய். தேவகிக்கு உடன் பிறந்த தம்பி, தமையன் ஒருவரும் இல்லையே என்ற குறை எனக்கு உண்டு. அந்தக் குறை தீரும்படி நீ அவளுடைய கூடப் பிறந்த தமையன் மாதிரி பிரியமாக இருந்தாய். பாவம்! ஊரில் உள்ளவர்கள் சேர்ந்து உன்னை ஆகவொட்டாமல் அடித்துவிட்டார்கள். ஆனால் நீ கொஞ்சங்கூடக் கவலைப்படாதே! நான் இவரிடம் சொல்லிச் சரிப்படுத்தி விடுகிறேன். பெருமாள் சந்நிதியிலும் தாயார் சந்நிதியிலும் நான் இன்றைக்கு உனக்காகவே வேண்டிக் கொள்ளப் போகிறேன்!" என்றாள். இந்த அன்பான வார்த்தைகளினால் என் மனம் மேலும் உருகிவிட்டது. பெருமாளையும் தாயாரையும் சேவிக்கும்போது அன்றைக்கு நானும் அவ்விதமே வேண்டிக் கொண்டேன். "ஹெட்மாஸ்டருக்கு என் பேரில் இருந்த அன்பும் மதிப்பும் முன் போலவே ஏற்படவேண்டும்" என்று பிரார்த்தித்தேன்.
என்னுடைய பிரார்த்தனையும் மாமியின் பிரார்த்தனையும் வீண் போகவில்லை. சில நாளைக்கெல்லாம் ஹெட்மாஸ்டர் பழையபடி என்மேல் பிரியமாயிருக்கத் தொடங்கினார். இது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி தந்தது. ஆயினும் நான் ஊருக்குப் பயந்து, அதாவது மற்றப் பையன்களின் வம்புப் பேச்சுக்குப் பயந்து, கொஞ்சம் ஜாக்கிரதையாகவே நடந்து கொண்டேன். முன்போல் தினசரி இரண்டு வேளையும் ஹெட்மாஸ்டர் வீட்டுக்குப் போவதில்லை. அடியோடு போகாமல் இருப்பதுமில்லை. வாரத்துக்கு இரண்டு மூன்று தடவை போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வருவேன். தேவகியாவது மாமியாவது கேட்டால், "இந்த வருஷம் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்குப் போகவேண்டும் அல்லவா? பாடங்கள் கஷ்டமாயிருக்கின்றன. சிரத்தையாகப் படிக்க வேண்டியிருக்கிறது. படித்து நல்ல மார்க் வாங்கிப் பாஸ் செய்தால் தானே பள்ளிக்கூடத்துக்குக் 'கிதாப்' உண்டாகும்? ஹெட்மாஸ்டருக்கும் நல்ல பெயர் ஏற்படும்?" என்று பதில் சொல்வேன். ஆனால் ஹெட்மாஸ்டரிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் என் மனதில் ஏற்பட்டிருந்த அபிமானம் மட்டும் எள்ளளவும் குறையவில்லை.
இப்படிச் சில மாதங்கள் சென்றன. அரை வருஷப் பரீட்சை முடிந்து கிறிஸ்துமஸ் விடுமுறையும் கழிந்தது. தை மாதம் பிறந்தது. 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று ஒரு பழமொழி உண்டு அல்லவா? எனக்கும் ஒரு வழிபிறந்தது. அதாவது ஹெட்மாஸ்டர் வீட்டில் முன்போல் நெருக்கமான பழக்கம் ஏற்படுவதற்கு ஒரு வழி பிறந்தது. அது, தேவகிக்குக் கலியாணம் நிச்சயமான செய்திதான்!
கிறிஸ்மஸ் விடுமுறைக்காக நான் கிராமத்துக்குப் போய்விட்டுத் திரும்பியதும் இந்தச் செய்தியை அறிந்தேன். ஹெட்மாஸ்டரும் அவர் மனையாளும் எனக்கு ஆள்மேல் ஆள் விட்டார்கள். நானும் அவசரமாய் அவர்கள் வீட்டுக்குப் போனேன். "தேவகிக்குக் கலியாணம் நிச்சயமாகியிருக்கிறது" என்கிற செய்தியைக் குதூகலத்துடன் சொன்னார்கள். வரனும் ரொம்ப நல்ல வரன் என்று தெரிந்தது. எங்கள் ஹெட்மாஸ்டர் மிக நல்ல மனிதர்; அவருடைய மனையாளோ மகா உத்தமி. அப்படிப்பட்ட தம்பதிகளுடைய ஆசை நிறைவேறாமற் போகுமா? "உங்களுடைய குணத்துக்குத்தான் இவ்வளவு நல்ல வரன் கிடைத்தது" என்று சொன்னேன். பையன் ஒரு தாசில்தாருடைய மகன். பி.ஏ. படித்துக் கொண்டிருந்தான். வரதட்சணை கூட அதிகம் கேட்கவில்லையாம். பெண்ணின் அழகையும் சமர்த்தையும் பார்த்து அதிக நிபந்தனை ஒன்றும் போடாமல் கலியாணத்துக்கு ஒப்புக் கொண்டு விட்டார்களாம்.
முன்னேயெல்லாம் 'தேவகிக்குக் கலியாணம்' என்ற பேச்சு எனக்குக் கிலேசத்தை அளித்தது என்று சொன்னேன் அல்லவா! இப்போது கலியாணம் நிச்சயமாகி விட்டது என்று தெரிந்ததும் எனக்கு எந்தவிதமான கிலேசமும் ஏற்படவில்லை. என் தலையிலே இருந்த சுமையும் இருதயத்தை அமுக்கிய பாரமும் இறங்கிவிட்டது போன்ற உணர்ச்சி உண்டாகிக் குதூகலம் ஏற்பட்டது. தேவகியின் சமர்த்துக்கும் அழகுக்கும் இவ்வளவு நல்ல வரனுக்குக் கலியாணம் ஆகவேண்டியது நியாயந்தான். பத்மநாப ஐயங்கார்-ரங்கநாயகி அம்மாளின் உத்தம குணத்துக்கு, அவர்களுக்கு இப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைக்க வேண்டியதும் நியாயந்தான். எல்லாம் கடவுளுடைய கருணை. பெருமாளையும் தாயாரையும் ரங்கநாயகி அம்மாள் சேவித்ததின் பலன் கைமேல் கிடைத்துவிட்டது. எனக்கும் ஒரு பெரிய பொறுப்புத் தீர்ந்தது. ஹெட்மாஸ்டரிடம் நான் கொண்டிருந்த பக்திக்கு எவ்விதமான களங்கமும் சொல்வதற்கு இனிமேல் யாரும் துணியமாட்டார்கள் அல்லவா?
இத்தகைய எண்ணங்களினால் நான் அளவிலாத உற்சாகமடைந்து கலியாண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டேன். முன்போல் பெரும்பாலும் ஹெட்மாஸ்டர் வீட்டிலேயே காலங்கழிக்கத் தொடங்கினேன். பந்தலை அப்படிப் போட வேண்டும், மேளத்துக்கு இன்னாரைச் சொல்ல வேண்டும், சமையலுக்கு இன்னாரை ஏற்பாடு செய்ய வேண்டும், இன்னின்ன சாமான்களை இன்னின்ன இடத்தில் வாங்கிச் சேகரம் செய்ய வேண்டும், கலியாணக் கடுதாசி இப்படி அச்சடிக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் இடைவிடாமல் மாமியுடன் விவாதித்து வந்தேன். கலியாண ஏற்பாடுகள் சம்பந்தமாக என்னால் இயன்ற ஒத்தாசைகளையும் மாமிக்குச் செய்து வந்தேன்.
ஆனால் இந்தக் கலியாண ஏற்பாடுகளிலும் பேச்சு வார்த்தைகளிலும் கொஞ்சங்கூட உற்சாகங்காட்டாமலிருந்தாள் தேவகி. "எனக்குக் கலியாணத்துக்கு இப்போது என்ன அவசரம்? அம்மாவும், அப்பாவும் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்! கொஞ்சங்கூட எனக்குப் பிடிக்கவில்லை!" என்று தேவகி அடிக்கடி சொன்னாள். சாதாரணமாகக் கன்னிப் பெண்கள் எல்லாருமே கலியாணப் பேச்சு வந்தால் இப்படிப் பிடிக்காதது போலக் காட்டிக் கொள்வதுண்டு. தேவகியும் அவ்விதந்தான் வெளிக்குச் சொல்லுகிறாள் என்று முதலில் நினைத்தேன். அவள் அப்படிப் பேசும்போதெல்லாம் பரிகசித்துச் சிரித்தேன். போகப் போக, தேவகி உண்மையாகவே கலியாணத்தை ஆட்சேபிக்கிறாளோ என்ற சந்தேகம் உதித்தது. அப்போது அவளிடம் எதிர்க்கட்சி பேசிப் புத்திமதியும் சொன்னேன். "உன் தாயார் தகப்பனாருக்கு நீ ஒரே பெண். உனக்குக் காலா காலத்தில் கலியாணம் பண்ணிப் பார்க்க வேண்டும் என்று அவர்களுக்கு ஆசையாயிராதா? அதை நீ ஆட்சேபித்து என்ன லாபம்? இந்த மாதிரி வரன் தான் சுலபத்தில் கிடைக்குமா? பையன் பி.ஏ. படிக்கிறானாம்!..." என்று வரனைப் பற்றி வர்ணிக்கத் தொடங்கினேன். அதற்குத் தேவகி, "பி.ஏ. என்றால் அவ்வளவு அதிசயமா? எத்தனையோ ஆயிரம் பேர்கள் பி.ஏ. படிக்கிறார்கள். கலியாணம் செய்து கொள்ள எனக்கு இஷ்டம் இருக்க வேண்டாமா? இந்தக் காலத்தில் 'பெண்கள் விடுதலை' என்றும், அதுவென்றும், இதுவென்றும் பேசுகிறார்களே? நான் 'கலியாணம் வேண்டாம்' என்று சொல்லும்போது என்னை நிர்ப்பந்தப் படுத்துவது என்ன நியாயம்? எல்லாம் தெரிந்த எங்கள் அப்பாவே இப்படிச் செய்கிறதுதான் எனக்கு அர்த்தமாகவில்லை! நீங்களாவது என் அப்பா - அம்மாவிடம் கொஞ்சம் எனக்காகப் பேசுவீர்கள் என்று நினைத்தேன். நீங்களும் அவர்களுடைய கட்சி பேசுவது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது!" என்றாள். இதைக் கேட்டதும் எனக்கு உண்மையாகவே கொஞ்சம் தயக்கம் உண்டாகிவிட்டது. ஒரு வேளை தேவகிக்கு இஷ்டமில்லாத பையனுக்கு அவளைப் பலவந்தமாகக் கலியாணம் செய்து கொடுத்துவிடப் பிரயத்தனம் செய்கிறார்களோ என்ற கவலை ஏற்பட்டது.
"ஆமாம், தேவகி! அந்தப் பையனை உனக்கு உண்மையாகவே பிடிக்கவில்லையா, என்ன? அப்படியானால்..." என்பதற்குள், தேவகி, "அப்படியானாலுமில்லை, இப்படியானாலுமில்லை. அந்தப் பையனை எனக்குப் பிடிக்கிறதா, இல்லையா என்ற கேள்வி எங்கே வந்தது? சாப்பாடே இல்லையென்று சொல்லும்போது 'இலை பொத்தல்' என்று புகார் சொன்ன கதையாக அல்லவா இருக்கிறது? எனக்குக் கலியாணம் பண்ணிக் கொள்ளவே இஷ்டமில்லை. பி.ஏ., எல்.டி., பாஸ் செய்துவிட்டு 'டீச்சர்' உத்தியோகத்துக்குப் போய்ச் சுதந்திரமாய் வாழவேண்டும் என்று எனக்கு விருப்பமாயிருக்கிறது. மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்று என்னைக் கேட்டால் என்ன பிரயோஜனம்? என்னைப் பார்க்க வந்த பையனை நான் முகம் எடுத்துப் பார்க்கவேயில்லை. பின்னே, எப்படிப் பதில் சொல்ல முடியும்?" என்றாள். இதிலிருந்து தேவகியின் ஆட்சேபமெல்லாம் வெளிப்படைக்குத்தான் என்று நான் தீர்மானித்துக் கொண்டேன். பிறகு "இந்த மாதிரியெல்லாம் அசந்தர்ப்பமாய்ப் பேசாதே! கலியாணம் பண்ணிக் கொள்ளாமல் 'நன்னரி'யில் சேர்ந்து விடுவதெல்லாம் ஐரோப்பியர்களுக்குச் சரி; ஹிந்துக்களாகிய நமக்குச் சரிப்படுமா? அந்தமாதிரி எண்ணத்தை அடியோடு மறந்துவிடு! அப்பா அம்மா சொல்கிறபடி கேளு!" என்று அழுத்தமாய்ப் புத்திமதி சொல்லத் தொடங்கினேன். "இப்போது இப்படித்தான் 'கலியாணம் வேண்டாம்' என்று சொல்லிக் கொண்டிருப்பாய். நாளைக்குக் கலியாணம் ஆகிவிட்டால் என்னையெல்லாம் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டாய். 'கிட்டா' என்று ஒருவன் இருக்கிறான் என்பதையே மறந்துபோய் விடுவாய்!" என்று சில சமயம் பரிகாசமும் செய்தேன்.
இந்தமாதிரி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஹெட்மாஸ்டரோ அல்லது மாமியோ வந்துவிட்டால், உடனே தேவகி பேச்சை நிறுத்திவிட்டு யோசனையில் ஆழ்ந்து விடுவாள். அவள் அப்படி என்ன யோசனை செய்தாள் என்பது அவளுக்கும் அவளது அந்தராத்மாவுக்குந்தான் தெரியும். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அந்த பரந்தாமனுக்கும் ஒரு வேளை தெரிந்திருக்கலாம்.
6
[தொகு]கலியாணத் தேதி குறிப்பிட்டாகிவிட்டது. பந்தக்கால் முகூர்த்தம் நடந்து, கலியாணக் கடுதாசி அச்சிடவும் கொடுத்தாகிவிட்டது. கலியாணத்துக்கு வேண்டிய சாமான்களில் பாதிக்குமேல் சேகரம் செய்தாகி விட்டது. மணப் பெண்ணுக்கு நிச்சயதார்த்தப் புடவையும் மாப்பிள்ளைக்கு முகூர்த்த வேஷ்டியும் கூட வாங்கியாகிவிட்டது. இவ்வளவு ஏற்பாடுகளும் ஆன பிறகு, திடீரென்று 'ஹெட்மாஸ்டர் பெண்ணின் கலியாணம் நின்று போய் விட்டது' என்ற வதந்தி ஊரில் பரவியது.
என் தாயாரைப் பார்ப்பதற்காக இரண்டு நாள் நான் கிராமத்துக்குப் போயிருந்து திரும்பி வந்தேன். திரும்பி வந்தவுடனே அந்தச் செய்தி காதில் விழுந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. உண்மையை அறிந்து கொள்வதற்காக அவசர அவசரமாக ஹெட்மாஸ்டர் வீட்டுக்குப் போனேன். வீட்டு வாசலில் கலியாணத்துக்காகப் போட்டிருந்த பந்தலை ஆட்கள் அப்போதுதான் பிரித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் காட்சி என் மனதில் சொல்ல முடியாத வேதனையை உண்டு பண்ணியது. வீட்டுக்குள்ளே போனேன். ஹெட்மாஸ்டராவது, அவர் மனைவியாவது அங்கே காணப்படவில்லை. தேவகி மட்டும் கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருந்தாள். சந்திரபிம்பம் போன்ற அவளுடைய முகம் வாடி வதங்கியிருந்தது. அவளுடைய தலை மயிர் அவிழ்ந்து தொங்கியது. கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியதின் அடையாளங்கள் காணப்பட்டன.
"தேவகி! இது என்ன? பந்தலை ஏன் பிரிக்கிறார்கள்? நான் கேள்விப்பட்டது உண்மையா?" என்றேன்.
"ஆமாம், கிட்டா! உண்மைதான். கலியாணம் நின்று போய்விட்டது. நான் 'வேண்டாம் வேண்டாம்' என்று அடித்துக் கொண்டேனே, அதை இவர்கள் கேட்டால்தானே? அப்போது நான் சொன்னதைக் கேட்கவில்லை; இப்போது நன்றாய் அவமானப் பட்டார்கள். இவர்களுக்கு நன்றாய் வேண்டும்! இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்!" என்றாள். தேவகியின் இனிய குரலில் அவ்வளவு குரோதம் எப்படி வந்து புகுந்தது என்று ஆச்சரியப்பட்டேன்.
"என்ன காரணம்? கலியாணம் ஏன் நின்றது?" என்று கேட்டேன்.
"என்ன காரணமோ! என்னைக் கேட்டால், எனக்கு என்ன தெரியும்? அப்பாவும் அம்மாவும் என்னைப் பிடுங்கி எடுப்பது போதாது என்று நீ வேறே கேள்வி கேட்பதற்கு வந்துவிட்டாயா?" என்றாள் தேவகி.
கோபத்திலும் ஆத்திரத்திலும் மரியாதை கூடத் தவறிவிட்டாள்! ஆயினும் அதற்காக அவளைக் குற்றம் சொல்ல என் மனம் இடம் கொடுக்கவில்லை.
இந்தச் சமயத்தில் வீட்டு வாசலில் ஹெட்மாஸ்டரின் குரல் கேட்டது.
"ஏண்டா! இன்னுமா பந்தலைப் பிரித்தாகவில்லை? சீக்கிரம் பிரித்து எறிந்து விட்டுத் தொலையுங்களடா!" என்று பத்மநாப ஐயங்கார் சத்தமிட்டுக் கத்தினார். அது ஹெட்மாஸ்டரின் குரல்தானா? ஆமாம், அவருடைய குரலேதான்! ஹெட்மாஸ்டரின் குரல்தான் அவ்வளவு கர்ணகடூரமாகியிருக்கிறது!
பாவம்! ஹெட்மாஸ்டருக்கு மனதில் எவ்வளவு தாபம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது ஊகிக்கக் கூடியது தானே? அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்றும், என்ன விதமாக ஆறுதல் சொல்லுவது என்றும் யோசித்தேன். யோசித்துக் கொண்டே வீட்டு வாசற்புறம் போக நாலு அடி எடுத்து வைத்தேன். இதற்குள் பத்மநாப ஐயங்கார் உள்ளே வந்து விட்டார். வந்தவர், என்னைப் பார்த்தார். ஐயோ! அந்தப் பார்வை! சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்துத் திரிபுரத்தை எரித்துவிட்டார் என்பதில் எனக்குச் சிறிதும் அதிசயம் கிடையாது! ஆனால் அன்றைக்குத் தேவகியின் தகப்பனார் என்னைப் பார்த்த பார்வை என்னை ஏன் எரிக்கவில்லை என்பதைப் பற்றிய அதிசயந்தான் இன்னமும் எனக்குத் தீரவில்லை.
சற்று நேரம் தீ எழும் கண்களால் என்னைப் பார்த்துக் கொண்டேயிருந்தவர், சட்டென்று நிதானித்துச் சமாளித்துக்கொண்டு, "ஓகோ! நீ வேறு துக்கம் விசாரிக்க வந்து விட்டாயா! சரி! இங்கே வா!' என்று சமிக்ஞையும் காட்டிவிட்டு அவருடைய சொந்த அறைக்குள் நுழைந்தார். உடலெல்லாம் பதற, நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ள நானும் உள்ளே போனேன். இதற்குள் அவர் நிதானித்துக் கொண்டு விட்டதாகத் தோன்றியது. குரலில் அவ்வளவு கடுமையில்லை; சாவதானமாகத்தான் பேசினார். ஆனால் அவர் கூறிய விஷயம் என்னைக் கதி கலங்க அடித்துவிட்டது.
"கிருஷ்ணசாமி! நான் சொல்வதைச் சரியாக வாங்கிக் கொள். பதில் பேசாதே! இனிமேல் நீ இந்த ஊரில், என்னுடைய பள்ளிக்கூடத்தில், படிக்கச் சௌகரியப்படாது. நியாயமாக உன்னை பள்ளிக்கூடத்திலிருந்து 'டிஸ்மிஸ்' செய்யவேண்டும். அதற்கு வேண்டிய முகாந்தரம் இருக்கிறது. ஆனால் நீ தகப்பனில்லாத ஏழைப் பையன். நீ எப்பேர்ப்பட்ட பெரிய தீங்கு செய்திருந்தபோதிலும் உன்னை அடியோடு கெடுத்துவிட எனக்கு விருப்பமில்லை. நாளைக்குப் பள்ளிக்கூடம் வந்தாயானால் உனக்கு 'டிரான்ஸ்பர் சர்டிபிகேட்' கொடுத்து விடுகிறேன். எப்படியும் இந்த வருஷம் போனது போனதுதான். அடுத்த வருஷத்தில் வேறு எந்த ஊர் ஹைஸ்கூலிலாவது சேர்ந்துபடி, இங்கே செய்ததுபோல் அயோக்கியத்தனம் செய்யாமல், யோக்கியமாக நடந்துகொள்! என்னால் உன்னை மன்னிக்க முடியாது. கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள். கடவுளின் கருணை எல்லையற்றது. அவர் ஒரு வேளை உன்னை மன்னித்தாலும் மன்னிக்கக் கூடும்!"
மேற்கூறிய வார்த்தைகளை அப்படியே ஹெட்மாஸ்டர் கூறியதாக நான் உறுதி சொல்ல முடியாது. இம்மாதிரி தோரணையில் பேசினார் என்றுதான் சொல்லலாம். ஏற்கெனவே கலக்க முற்றிருந்த என் மனதில் அவர் கூறிய வார்த்தைகள் அவ்வளவு தெளிவாகப் பதியவில்லை. எல்லாம் ஒரே குழப்பமாயிருந்தது. ஆயினும் விஷயம் என்னவென்பது விளங்கிவிட்டது. நான் ஏதோ மன்னிக்க முடியாத பெரிய குற்றம் செய்து விட்டேன். அதனால் அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தில் இனி நான் படிக்கமுடியாது. அந்த வருஷம் வேறு ஊர்ப் பள்ளிக்கூடத்தில் போய்ச் சேர்ந்து படிக்கவும் முடியாது. ஒரு வருஷம் போனதுதான்!
படிப்பைப்பற்றி அவ்வளவாக நான் கவலைப் படவில்லை; வாழ்நாளில் ஒரு வருஷம் என்ன பிரமாதம்? ஆனால் ஹெட்மாஸ்டர் என் விஷயத்தில் அவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டதுதான் சொல்ல முடியாத துன்பத்தை அளித்தது. அப்படிப்பட்ட தண்டனை பெறுவதற்கு நான் குற்றம் என்ன செய்தேன்? 'குற்றம் என்ன?' 'குற்றம் என்ன?' என்று என் உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவும் துடிதுடித்துக் கேட்டது; ஒவ்வொரு நரம்பும் அலறி அழுது கேட்டது.
தயங்கித் தட்டுத் தடுமாறி என் நாவும், "ஸார்! நான் என்ன குற்றம் செய்தேன்? எதற்காக என்னைப் பள்ளிக்கூடத்திலிருந்து தள்ளுகிறீர்கள்?" என்று கேட்டது.
"அட அயோக்கியா! கேள்வி வேறு கேட்கிறாயா? போ! என் கண் முன் நிற்காமல் போய்த் தொலை! இனி என் முகத்திலேயே விழிக்காதே! இங்கே நின்றாயோ உன்னைக் கொன்று விடுவேன். மேலே ஒரு வார்த்தை பேசினாலும் உன்னை 'டிஸ்மிஸ்' செய்து விடுவேன்! கெட் அவுட்!" என்று ஹெட்மாஸ்டர் கூச்சலிட்டார்.
மேலே நான் அங்கு நின்றால், என்னை அவர் கொல்வது ஒருபுற மிருக்கட்டும்; வரம்பு மீறிய கோபத்தினால் அவருடைய உயிருக்கே ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடும் என்று தோன்றியது. விம்மிக் கொண்டே அந்த வீட்டிலிருந்து வெளியேறினேன். பந்தலில் இருந்த கீத்துகளை யெல்லாம் இதற்குள் பிரித்துக் கீழே போட்டிருந்தார்கள். கம்புகள் மட்டும் நின்றன. போகிற போக்கில் அந்தக் கம்புகளில் ஒன்றைப் பிடுங்கிக் கிழே தடாரென்று போட்டு விட்டுப் போனேன். வீதியில் நடந்தபோது எட்டுத் திசைகளும் சுழன்றன. சூரியன் இருண்டு பட்டப்பகல் நள்ளிரவாயிற்று. வானம் இடிந்து என் தலையில் விழுந்து அமுக்கி மூச்சுவிட முடியாமல் திணறச் செய்தது. இந்த நிலையில் எப்படியோ தட்டுத் தடுமாறித் தள்ளாடி என்னுடைய அறைக்குப் போய்ச் சேர்ந்தேன்.
7
[தொகு]கழுகுக்கு மூக்கில் வேர்க்கும் என்று ஒரு பழமொழி உண்டு. சமீபத்தில் எங்கேயாவது இரை கிடைப்பதாயிருந்தால் கழுகுக்கு மூக்கில் வேர்க்குமாம்! வைத்திக்கும் சுந்தரத்துக்கும் அப்படியே மூக்கில் வேர்க்கும் போலிருக்கிறது. நான் வந்திருப்பதையும் என்னுடைய மனோ நிலையையும் தெரிந்து கொண்டு அவர்கள் என்னுடைய அறைக்கு வந்து சேர்ந்தார்கள். அவ்வளவாக நான் அவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்வதில்லையென்று சொல்லியிருக்கிறேன். ஆயினும் விஷமிகளுக்கு வெட்கம் ஏது? என்னைத் தேடி வந்து சேர்ந்தார்கள்.
எனக்கு ஏற்பட்டிருந்த துக்கத்தையும் அவர்கள் பேரில் வந்த கோபத்தையும் வெகு பிரயாசைப் பட்டு நான் அடக்கிக் கொண்டேன். கொஞ்சம் நான் பொறுமையாயிருந்தால், தேவகியின் கலியாணம் தடைப்பட்ட காரணத்தை அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம் என்று என்னுடைய உள்ளுணர்ச்சி சொல்லிற்று.
"எங்கே அப்பா வந்தீர்கள்? என்ன விசேஷம்!" என்று கேட்டேன்.
"என்ன விசேஷமா? ஊரெல்லாம் ஒரே அமர்க்களமாயிருக்கிறது; 'என்ன விசேஷம் என்று மெள்ளக் கேட்கிறாயே? ஹெட்மாஸ்டர் பெண்ணின் கலியாணம் நின்று போனது உனக்குத் தெரியாதா?" என்றான் வைத்தியநாதன்.
"அது தெரியாமல் இருக்குமா? தெரியும். அதற்காக நாம் என்னத்தைச் செய்வது?" என்றேன் நான்.
"என்னத்தைச் செய்வதாவது? ஏன்? பேஷாகச் செய்யலாம். நம்மில் யாராவது ஒருவர் தேவகியைக் கலியாணம் செய்து கொள்ளலாம். 'போட்ட பந்தலைப் பிரிக்க வேண்டாம்' என்று ஹெட்மாஸ்டரிடம் சொல்லலாம்" என்றான் சுந்தரம்.
"பேஷான யோசனைதான். இதை நீ ஹெட்மாஸ்டரிடம் சொல்லிப் பார்ப்பதுதானே? என்னிடம் சொல்லி என்ன பிரயோஜனம்?" என்றேன்.
"ஹெட்மாஸ்டரிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் நீ தேவதா விஸ்வாசம் வைத்திருந்தாயே என்று உன்னிடம் சொன்னோம். நீ என்னடா என்றால், ஏனோ தானோ என்று பேசுகிறாய். அது போனால் போகட்டும். கலியாணம் ஏன் நின்றது என்பதைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்குமே?" என்றான் வைத்தி.
"எனக்குத் தெரியாது, அப்பா, எனக்கு ஒன்றும் தெரியாது."
"சும்மாச் சொல்கிறாய்! உனக்குத் தெரியாமல் இருக்குமா?"
"சத்தியமாய் எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்திருந்தால், சொல்லுங்கள்! கேட்கிறேன்."
"உனக்கே தெரியாது என்றால், எங்களுக்கு எப்படித் தெரியும்? ஆனால் ஊரில் அதைப் பற்றிப் பலவிதமாய்ப் பேசிக் கொள்கிறார்கள்."
"ஊரில் என்ன பேசிக் கொள்கிறார்கள்?"
"சம்பந்தி வீட்டாருக்கு ஏதோ ஒரு மொட்டைக் கடிதம் இந்த ஊரிலிருந்து போனதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்."
"அப்படி அந்த மொட்டைக் கடிதத்தில் என்ன எழுதியிருந்ததாம். கலியாணம் நின்று போகும்படி?"
"தேவகி வேறொரு பையன் மீது காதல் கொண்டிருப்பதாக அந்தக் கடிதத்தில் எழுதியிருந்ததாம்."
"இது என்ன முட்டாள்தனம்? ஒரு மொட்டைக் கடிதத்தை நம்பியா கலியாணத்தை நிறுத்தி விடுவார்கள்? அந்த சம்பந்திகள் அவ்வளவு முட்டாள்களா?"
"இல்லை, அப்பா! அதில் இன்னொரு சூட்சுமம் இருக்கிறது. அந்த மொட்டைக் கடிதம் கலியாணப் பெண் தேவகி எழுதியது போலவே எழுதியிருந்ததாம். அதில் அந்தப் பெண், தான் காதலிப்பது இன்னார் என்று கூட எழுதியிருந்தாளாம்..."
என் நெஞ்சு இப்போது தடக், தடக் என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. மேலே வைத்தி என்ன சொல்லப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள அவ்வளவு ஆவலாயிருந்தது.
"அப்புறம்?" என்றேன்.
"தேவகி யார் பெயரைக் குறிப்பிட்டிருப்பாள் என்று நீதான் சொல்லேன், பார்க்கலாம்."
"எனக்கு எப்படித் தெரியும்? கடிதத்தை நான் பார்க்கவில்லையே?"
"பார்க்காவிட்டால் என்ன? உனக்குத் தெரியாமலா இருக்கும்?"
"தெரியவே தெரியாது. மொட்டைக் கடிதத்தைப் பற்றிய செய்தியே இப்போது நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்."
"ஆமாம், அப்பா, ஆமாம்! உனக்கு ஒன்றுமே தெரியாது. நீ பால் மணம் மாறாப் பாலகன். நான் கேள்விப்பட்டதைச் சொல்கிறேன். இதற்காக என் பேரில் கோபித்துக் கொள்ளாதே! அந்தக் கடிதத்தில் தேவகி உன்னுடைய பெயரைக் குறிப்பிட்டு உன்னை அவள் காதலிப்பதாக வெட்ட வெளிச்சமாய் எழுதியிருந்தாளாம்!"
"சிவ சிவா! பொய்! சுத்தப் பொய்!" என்றேன் நான். ஆயினும் என் நெஞ்சு ஏன் அப்படி விம்மி மேலெழுந்தது? என் தலைக்குள் ஏன் அவ்வளவு பெரிய அலைகள் குமுறி மோதின?
சுந்தரம் மேலும் கூறினான்:- "இன்னொரு விஷயங்கூட ஊரில் பேசிக் கொள்கிறார்கள், கிட்டா! உனக்குத் தெரிந்திருப்பது நல்லது என்று சொல்கிறேன். உண்மையில் தேவகி அந்தக் கடிதத்தை எழுதவில்லையென்றும், தேவகி எழுதியது போல, அவளுடைய எழுத்தை 'போர்ஜரி' செய்து வேறு யாரோ எழுதிவிட்டார்கள் என்றும் சொல்கிறார்கள்."
"ஐயோ! இது என்ன அநியாயம்? அப்படி யார் செய்திருப்பார்கள்?"
"என்னடா அப்பா, பரமசாதுவைப் போல் பேசுகிறாயே? நீ தான் அந்தப் 'போர்ஜரி'க் கடிதம் எழுதினாய் என்றல்லவா ஊரில் பேச்சாயிருக்கிறது?"
எனக்கு வந்த கோபத்துக்கும் ஆத்திரத்துக்கும் அளவேயில்லை. என் பொறுமை அதன் எல்லைக்கு வந்து விட்டது. கடைசியாக ஒரு பெருமுயற்சி செய்து "வைத்தி! சுந்தரம்! நீங்கள் என்னோடு சண்டை பிடிப்பதற்காக வந்திருக்கிறீர்களா? அப்படியானால் சொல்லிவிடுங்கள். தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவானேன்?" என்று கேட்டேன்.
"சேச்சே! அதெல்லாம் ஒன்றுமில்லை, அப்பா! உன்னோடு சண்டை பிடித்து எங்களுக்கு இப்போது என்ன ஆகவேணும்? இது நல்லவர்களுக்குக் காலம் இல்லை. ஏதோ நீ எங்கள் 'கிளாஸ்-மேட்' ஆயிற்றே, வெளியே பேசிக் கொள்வதை உன் காதிலே போட்டு வைக்கலாம் என்று வந்தால், நீ இப்படிச் 'சண்டைக்கு வந்திருக்கிறீர்களா?' என்று கேட்கிறாய். அழகாய்த்தானிருக்கிறது. நாங்கள் போகிறோம்!" என்று சொல்லிவிட்டு இருவரும் போய்த் தொலைந்தார்கள். அறைக்கு வெளியில் போனதும் அவர்கள் சிரித்துக் கொண்டுபோன சத்தம் என் காதில் விழுந்தது.
8
[தொகு]வைத்தியநாதனும் சுந்தரமும் சேர்ந்து சிரித்த சிரிப்பின் ஒலி என்னை நெருப்பாகத் தகித்தது. அவர்களுடைய சிரிப்பில் இடி விழட்டும் என்று சபித்தேன். என் உள்ளத்தில் அவ்வளவு பேரும் புயலை அவர்கள் உண்டு பண்ணிவிட்டுப் போனார்கள். அவர்கள் கூறியதையெல்லாம் ஒவ்வொன்றாய் எண்ணிப் பார்த்தேன். அவற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கலாம் என்றும் சிந்தித்தேன். மாப்பிள்ளை வீட்டாருக்கு மொட்டைக் கடிதம் போனது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். கலியாணம் தடைப்பட்டதற்கு ஏதேனும் காரணம் இருந்து தீரவேண்டும் அல்லவா?
ஆனால் அந்தக் கடிதம் எழுதியது யாராயிருக்கும்? தேவகியே எழுதினாள் என்பது உண்மையாயிருக்குமா? அதில் என் பெயரைக் குறிப்பிட்டிருந்ததும் நிஜமாயிருக்க முடியுமா? - அதை எண்ணும் போதே எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. ஆனால் கொஞ்சம் நிதானித்து யோசித்து அது உண்மையாயிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். என்னைப் பற்றித் தேவகி அப்படி எழுதியிருக்கும் பட்சத்தில் சற்று முன்னால் என்னை அம்மாதிரி வரவேற்றிருக்க மாட்டாள். அவ்வளவு அலட்சியமாகவும் வெறுப்பாகவும் பேசியிருக்க மாட்டாள். என்னிடம் அவள் காதல் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் உண்மையாயிருக்கும் பட்சத்தில், ஹெட்மாஸ்டர் காலிலே விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்ளலாம். தேவகிக்குத் தகுந்த கணவனாவதற்கு நான் பெரும் பிரயத்தனம் செய்வதாக வாக்குறுதி அளிக்கலாம். அவளை நான் மணந்து கொள்வதற்கு அவர் கூறும் எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் அது உண்மையாயிருக்க முடியாது. தேவகி அத்தகைய கடிதம் எழுதியிருக்க முடியாது. பின், யார் எழுதியிருக்கக்கூடும்? ஏன்? இந்த அயோக்கிய சிகாமணி வைத்தியும் சுந்தரமும் செய்த வேலையாக இருக்கலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்து என்னையும் அவமானப்படுத்தி சந்தி சிரிக்கவைப்பதற்கு அவர்கள் இந்தச் சூழ்ச்சி செய்திருக்கலாம்.
சட்டென்று ஒரு விஷயம் எனக்கு ஞாபகம் வந்தது. தேவகி வியாசங்கள் எழுதிய நோட் புத்தகத்தை ஒரு தடவை நான் என் அறைக்கு எடுத்து வந்திருந்தேன். அவளது வியாசம் ஒன்றைத் திருத்திக் கொடுப்பதற்காகத்தான். அதே சமயத்தில் வைத்தியும் என் அறைக்கு வந்திருந்தான். அந்த நோட் புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ அதைப்பற்றிக் 'கிறுதக்'காகக் கூடக் கேட்டான். அப்புறம் அன்றைக்கு அந்த நோட் புத்தகத்தைக் காணாமல் நான் தேடியதும், அதைப் பற்றிக் கவலைப் பட்டதும், திடீரென்று மறுநாள் அந்த நோட் புத்தகம் என் அறையில் வந்து முளைத்திருந்ததும் ஞாபகத்துக்கு வந்தன. அந்தக் கணத்தில், குற்றவாளி யார் என்பது என் மனத்திற்கு ஐயமற விளங்கிவிட்டது. அந்த அயோக்கியன் வைத்தியினுடைய வேலைதான். இதைப்போய் உடனே ஹெட்மாஸ்டரிடம் சொல்லி என் பேரிலுள்ள சந்தேகத்தையும் தப்பெண்ணத்தையும் போக்கிக் கொள்ளவேண்டும். குற்றவாளி யார் என்பது ருசுவாகிவிட்டால், பிறகு நின்றுபோன கலியாணத்தைத் திரும்பவும் பேசி முடித்து நடத்தி வைப்பது கூடச் சாத்தியமாகலாம் அல்லவா?
இப்படியெல்லாம் ஆகாசக்கோட்டைகளைக் கட்டிக்கொண்டு மறுபடியும் ஹெட்மாஸ்டரின் வீட்டுக்கு விரைந்து சென்றேன். அடடா! அங்கே எனக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது?
நான் எவ்வளவோ அன்பும் மதிப்பும் வைத்து என்னுடைய இருதயத்திலே கோயில் கட்டிப் பூசை செய்து வந்த தெய்வமாகிய தேவகி இப்படி என் பேரில் அபாண்டமான பெரும் பழியைப் போடுவாள் என்று நான் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?
ஆனால் அவள் பேரில் குற்றம் சொல்லுவதிலும் பயனில்லைதான். அவள் என்ன செய்வாள், பாவம்? சந்தர்ப்பங்களின் சேர்க்கை அப்படி அவள் கூட என்பேரில் சந்தேகப்படும்படியாகச் செய்து விட்டது.
நான் ஹெட்மாஸ்டரின் வீட்டுக்குள் புகுந்த போது தேவகி விசித்து அழும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ஹெட்மாஸ்டர் இரையும் சத்தமும் அவருடைய மனைவி தன் பெண்ணுக்குப் பரிந்து ஏதோ சொல்லும் சத்தமும் கூடக் கேட்டது. இந்தச் சமயத்தில் நான் உள்ளே போய் உண்மையை வெளிப்படுத்தித் தேவகியை அவளுடைய தந்தையின் கோபத்திலிருந்து மீட்க வேண்டும் என்ற ஆசையுடன் தடபுடலாகப் பிரவேசம் செய்தேன். ஆசை அதிகமாகிற பொழுது அறிவு மழுங்கிவிடும் என்பது எவ்வளவு உண்மையான வார்த்தை!
நான் உள்ளே சென்றதும் அந்த மூன்று பேரும் பூசை வேளையில் கரடி புகக் கண்டவர்கள் போல் மிரண்டு விழித்து என்னைப் பார்த்தார்கள்.
ஹெட்மாஸ்டர் என்னைப் பார்த்ததும் ஏதோ சொல்ல வாயெடுத்தவர், பேசவே முடியாதவராய், திறந்த வாய் திறந்தபடி நின்றார்.
மாமியோ கண்ணீர் ததும்பிய கண்களோடு என்னைப் பார்த்தாள். 'பாவம்! இந்தச் சமயத்திலா நீ வந்து சேர வேண்டும்?' என்று மாமியின் கண்கள் கருணையோடு கூறின.
தேவகிதான் முதலில் வாயைத் திறந்து பேசினாள், அடடா! எவ்வளவு கர்ண கடூரமான வார்த்தைகள் அவளுடைய வாயிலிருந்து வெளி வந்தன? தேவகியின் குரலைக் குயிலின் குரலோடும் அவளுடைய பேச்சைக் கிளியின் மழலையோடும் ஒப்பிட்டுப் பார்த்து இறுமாந்திருந்த என்னை அவளுடைய கொடுமையான வார்த்தைகள் எப்படிப் புண்படுத்தி வேதனை செய்தன?
"என்னைப் போட்டு ஏன் பிடுங்கி எடுக்கிறீர்கள், அப்பா! உங்கள் அருமைச் சிஷ்யன் கிச்சாமி, இவன் தான் என்னுடைய வியாச நோட் புத்தகத்தை எடுத்துப் போய்ச் சில நாள் வைத்திருந்தான். இந்தத் தடியன் தான் என்னுடைய எழுத்து மாதிரி எழுதி அந்தப் பொய்க் கடிதம் போட்டிருக்கவேண்டும்!" என்றாள் தேவகி.
அவ்வளவுதான்; ஹெட்மாஸ்டர் ரௌத்ராகாரமடைந்து என்னை நோக்கி நடந்து வந்தார். "அடபாவி! சண்டாளா! என்னுடைய குடியைக் கெடுத்துவிட்டு மறுபடியும் என்ன தைரியமாய் இந்த வீட்டுகுள்ளே நுழைகிறாயடா!" என்று அலறிக்கொண்டே என்னருகில் வந்து என் கழுத்தைப் பிடித்து வேகமாக ஒரு தள்ளுத் தள்ளினார்.
தள்ளிய வேகத்தில் எதிரிலேயிருந்த சுவரிலே போய் முட்டிக் கொண்டேன். ஒரு நிமிஷம் என் பொறி கலங்கிற்று.
"ஐயையோ! உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா, என்ன? அந்தப் பிள்ளை பேரில் உங்கள் கோபத்தைக் காட்டுகிறீர்கள்?" என்று மாமி பரிந்து கூறியது கிணற்றுக்குள்ளிருந்து பேசியதுபோல் என் காதில் விழுந்தது. மாமியின் குரல் கேட்டுக் கொண்டிருக்கும் போதே வீட்டை விட்டு வெளியேறினேன். பிறகு அந்த வீட்டுக்குள் நுழையவே இல்லை.
அன்றிரவே அந்த ஊரை விட்டுக் கிளம்பி விட்டேன். பள்ளிக்கூடத்தில் 'டிரான்ஸ்பர் சர்டிபிகேட்' வாங்குவதற்காகக் கூடத் தாமதிக்கவில்லை. மறுபடி ஹெட்மாஸ்டர் முகத்தில் விழிக்கவே நான் விரும்பவில்லை. அன்றிரவு கிளம்பியவன் தான்; பிறகு அந்த ஊரின் எல்லையைக் கூட இன்று வரையில் நான் மிதிக்கவில்லை. அன்றைய நிகழ்ச்சி, - அன்று எனக்கு நேர்ந்த அதிர்ச்சி, - என்னுடைய வாழ்க்கையின் போக்கையே மாற்றி அமைக்க காரணமாயிருந்தது.
கிராமத்துக்குப் போய் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு கல்கத்தாவுக்குப் பிரயாணமானேன். கல்கத்தாவில் என்னுடைய தூரத்து உறவினர் ஒருவர் இருந்தார். பெரிய கம்பெனியில் அவர் மானேஜர் உத்தியோகம் பார்த்தார். அவரை அண்டி முதலில் அவருடைய வீட்டில் சமையல் வேலை செய்தேன். பிறகு அவருடைய கம்பெனியில் குமாஸ்தாவானேன். நாளடைவில் பொறுப்புள்ள பெரிய உத்தியோகங்கள் கிடைத்தன. கடைசியில் சென்னையிலேயே மேற்படி கம்பெனியின் கிளை ஆபீஸுக்கு மானேஜரானேன். பணமும் பல வசதிகளும் என்னைத் தேடிக் கொண்டு வந்தன.
பல வருஷ காலம் மணம் செய்து கொள்ளாமலே இருந்தேன். என் முப்பதாவது வயதில் வாழ்க்கையின் தனிமையைப் பொறுக்க முடியாமல் கலியாணம் செய்து கொண்டேன். என்னுடைய இல்வாழ்க்கையைப் பற்றிக் குறை ஒன்றும் சொல்வதற்கில்லை. நம் நாட்டில் பெரும்பாலோருடைய இல்வாழ்க்கையைப் போல் என் குடும்ப வாழ்க்கையும் லோகாபிராமமாக நடந்து வருகிறது.
எப்போதாவது சில சமயங்களில், ஹெட்மாஸ்டர் பெண் தேவகியைப் பற்றி நான் நினைத்துக் கொள்வதுண்டு. அவளை மணந்திருந்தால் என்னுடைய வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமயமாயிருந்திருக்கும் என்று அசட்டுக் கனவுகள் காண்பதுண்டு. அப்பொழுதெல்லாம், கடைசிச் சந்திப்பில் அவள் என்பேரில் சுமத்திய அநியாயப் பழியை நினைந்து அவள் பேரில் வெறுப்பை வேண்டுமென்று வருவித்துக் கொள்வேன். ஆயினும், அது என்ன அதிசயமோ, தெரியவில்லை! எவ்வளவு முயன்றாலும் தேவகியைப் பற்றி வெறுப்பாக என்னால் நினைக்க முடிவதில்லை. அவள் எங்கே இருக்கிறாளோ, அவளுடைய வாழ்க்கையின் சுக துக்கங்கள் எப்படியோ, - என்று நினைக்கும் போது ஒரு தனிப்பட்ட அநுதாப உணர்ச்சி ஏற்படும். தேவகியைப் பற்றிய சிந்தனையில் நான் ஆழ்ந்திருக்கும்போது யாராவது ஏதாவது கேட்டால் என் காதிலேயே ஏறாது. சுய ஞாபகம் வந்ததும் "என்ன சொன்னீர்கள்? ஏதோ ஞாபகமாய் இருந்துவிட்டேன்!" என்பேன்.
பொருட் காட்சி மைதானத்தில் தேவகியைத் திடீரென்று பார்த்ததிலிருந்து அவள் விஷயமான அநுதாப உணர்ச்சி ஒன்றுக்கு நூறு மடங்காயிற்று. அவளுடைய தோற்றத்தையும் ஆடை ஆபரணங்களையும் பார்த்தால் அவ்வளவு செழிப்பான நிலையில் அவள் இருக்கக்கூடும் என்று தோன்றவில்லை. குழந்தைகளைப் பார்த்தாலும் அப்படியேதானிருந்தது. பாவம்! என்ன கஷ்டப் படுகிறாளோ, என்னமோ? அவளுக்கு நான் ஏதேனும் உதவி செய்வது சாத்தியமானால், அதைக் காட்டிலும் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றுமே இராது.
அது மட்டுமல்ல; தேவகியும் அவளுடைய தந்தையும் என்பேரில் கொண்ட சந்தேகம் ஆதாரமற்றது என்பதை எப்படியேனும் நிரூபிக்க வேண்டும். அப்படி என் பேரில் அவர்கள் அநியாயப் பழி சுமத்தியதற்காக வெட்கப்படும்படியும் செய்ய வேண்டும்! - இந்த ஒரு காரியம் நிறைவேறினால் பிறகு என் வாழ்க்கையில் குறைபடுவதற்கே இடம் ஒன்றுமிராது. அது நிறைவேறுகிற வரையில் என் உள்ளத்தில் குறையும் வேதனையும் இருந்து கொண்டுதானிருக்கும்.
ஹெட்மாஸ்டர் பத்மநாப அய்யங்காரும், அவளுடைய உத்தம பத்தினியான ரங்கநாயகி அம்மாளும் உயிரோடு சௌக்கியமாயிருக்கிறார்களா? அதைக்கூடத் தேவகியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் போய்விட்டேனே? என்றாலும், பாதாகமில்லை; எல்லாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை காலையில் தெரிந்து போகிறது!
9
[தொகு]ஞாயிற்றுக் கிழமை பொழுது விடிந்தது. காலையில் நான் விழித்து எழுந்ததும் என் மனதில் உண்டான முதல் நினைவு, அன்றைக்குத் தேவகியின் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதுதான்.
பொழுது விடிந்தவுடனேயே, காரை எடுத்துக் கொண்டு தேவகியின் வீட்டுக்குப் போக வேண்டும் என்று தோன்றியது. அந்த எண்ணத்தைப் பலவந்தமாகக் கட்டுப்படுத்திக் கொண்டேன். அவ்வளவு சீக்கிரமாகப் போனால், யாராவது சிரிப்பார்கள். மேலும் அப்போது பனிக்காலம். காலை ஏழு மணிவரையில் மூடுபனி கொட்டிக் கொண்டிருந்தது. சில வீடுகளில் அதற்குள் எழுதிருக்கக் கூட மாட்டார்கள். அதிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் நிச்சயமாக நேரங்கழித்தே எழுந்திருப்பார்கள். காலை எட்டு மணி வரையில் பனியின் சிலு சிலுப்பு இருந்தது. பொழுது விடிந்து எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்துக் காப்பி சாப்பிட அவகாசம் கொடுக்க வேண்டுமல்லவா?
கடைசியாக, எட்டரை மணிக்குப் புறப்பட்டேன். தேவகி கொடுத்திருந்த விலாசம் சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு சந்து. அந்தச் சந்தைக் கண்டு பிடித்து, வீட்டு நம்பரையும் கண்டு பிடிப்பதற்குள், மணி ஒன்பது ஆகிவிட்டது. ஆனால் நான் எண்ணியது போல் வீடு அவ்வளவு மோசமாயில்லை. அது ஒரு மச்சு வீடு. கீழ்க் கட்டிலும் மேன் மாடியிலும் பல அறைகள் உள்ள விசாலமான வீடு.
காரைக் கொண்டு போய் நிறுத்தியதும் யாராவது வீட்டுக்குள்ளிருந்து வந்து விசாரிப்பார்கள் என்று நினைத்தேன். யாரும் வெளியே வருகிற வழியாக இல்லை. வீட்டு வாசலில் படிகட்டில் நின்று, "ஸார்! ஸார்!" என்றேன். கீழ்க்கட்டிலிருந்து பதில் ஒன்றும் வரவில்லை. மேலேயிருந்து, ஒரு கடுமையான புருஷக் குரல், "யார் அங்கே?" என்று சத்தமிட்டது. ஒரு விநாடி "இது என்ன வம்பு? ஒரு வேளை விலாசம் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் வேறு யார் வீட்டுக்காவது வந்து விட்டோ மா?" என்று நினைத்தேன்.
வாசற் படிக்கட்டிலிருந்து வீதியில் இறங்கி அண்ணாந்து பார்த்தேன். மேல் மாடி அறையின் ஜன்னல் கதவை யாரோ படீர் என்று சாத்தினார்கள்.
மேல் கட்டில் வேறு யாராவது குடியிருக்கலாம் என்று எண்ணிக் கொண்டு மறுபடியும் வாசற்படி ஏறிக் கதவண்டையில் வந்து "ஸார்! ஸார்!" என்றேன். அதற்கும் பதில் இல்லாமற் போகவே, தைரியத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, கதவை இரண்டு தட்டி "தேவகி! தேவகி!" என்றேன். பிறகு, பாதி சாத்தியிருந்த கதவைத் திறந்தேன்.
உள்ளே முற்றத்தில் கொட்டிக் கொண்டிருந்த தண்ணீர்க் குழாயண்டை ஒரு வேலைக்காரி பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தாள். ஒரு குழந்தை குழாயண்டை நின்று குழாயிலிருந்த தண்ணீரில் கையை வைத்து விசிறி அடித்துக் கொண்டிருந்தது.
அந்தக் குழந்தையைப் பார்த்ததும் என் மனம் நிம்மதியடைந்தது. அந்தக் குழந்தை பொருட் காட்சி மைதானத்தில் தேவகியுடன் நான் பார்த்த குழந்தைதான். ஆகவே, இது தேவகியின் வீடு என்பதில் சந்தேகமில்லை. ஒரு வேளை உள்ளே சமையற்கட்டில் தேவகி இருக்கலாம். குழாயிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டேயிருப்பதால் நான் மெதுவாய்க் கூப்பிட்டது காதில் விழவில்லை போலும்.
என்னுடைய இரண்டு கையையும் பலமாகத் தட்டவே வேலைக்காரி நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். கையை அலம்பிவிட்டு ஏதோ முணுமுணுத்துக் கொண்டே என் அருகில் வந்தாள். "என்னாங்க, சாமி!" என்றாள்.
"தேவகி அம்மாளைப் பார்ப்பதற்காக வந்தேன். அந்த அம்மாளின் வீடு இதுதானே?" என்றேன்.
"அம்மா அடுத்த வீதிக்குப் போயிருக்காங்க. ஒரு சிநேகிதி அம்மாளின் குழந்தைக்கு ஆண்டு நிறைவுக் கலியாணம். அதற்காகப் போயிருக்காங்க!" என்றாள் வேலைக்காரி.
"எப்போது திரும்பி வருவார்கள்?"
"தெரியாதுங்க. அனேகமாக இப்பவே வந்தாலும் வந்துடுவாங்க!"
இதென்ன தொந்தரவு என்று நினைத்துக் கொண்டு, "வீட்டிலே வேறு யாருமில்லையா! அந்த அம்மாளின் புருஷர்?..." என்றேன்.
வேலைக்காரி கொஞ்சம் திகைத்து நின்றுவிட்டு, "அவங்க வெளியூருக்குப் போயிருக்காங்க! இன்னும் திரும்பி வரவில்லைங்க!" என்றாள்.
அவளுடைய திகைப்பின் காரணம் அப்போது எனக்குப் புரியவில்லை. பிற்பாடு தெரிந்தது.
"தேவகி அம்மாளின் தகப்பனார் பத்மநாப ஐயங்கார் இருக்காரா?" என்று கேட்டேன்.
"அவரு இருக்காரு! அதோ அந்தக் காமரா அறையிலே எட்டிப் பாருங்க!" என்று சொல்லிவிட்டு வேலைக்காரி தன்னுடைய வேலையைப் பார்ப்பதற்குப் போய் விட்டாள்.
வேலைக்காரி சுட்டிக் காட்டிய அறையின் கதவு சாத்தியிருந்தது. சற்று நேரம் உட்கார்ந்திருக்கலாம் என்றால் ஒரு பெஞ்சியா, நாற்காலியா ஒன்றும் கிடையாது. மேலும், அந்த வேலைக்காரி காமரா உள்ளுக்குள் எட்டிப் பார்க்கச் சொன்னதின் அர்த்தம் என்ன?
அந்த அறை ஜன்னலின் கீழ்ப்பாதிக் கதவுகள் சாத்தியிருந்தன. அருகில் சென்று மேற்பகுதி வழியாக எட்டிப் பார்த்தேன். உள்ளே நான் பார்த்த காட்சி ஒரு நிமிஷம் என்னைப் பிரமிக்கும்படி செய்து விட்டது.
ஒரு வயதான மனிதர் அந்த அறையின் சுவர் ஓரமாகத் தலைகீழாக நின்று கொண்டிருந்தார். அவருடைய தலையை ஒரு தலையணையில் வைத்துக் கொண்டிருந்தார். கால்களைச் சுவர் மீது சாத்தியிருந்தார். மிகவும் சங்கடப்பட்டுக் கொண்டு நின்றார் என்பது தெளிவாயிருந்தது. ஆனால் அவருடைய முகம் எனக்குத் தெரியவில்லை. எனினும் அவர் ஹெட்மாஸ்டர் பத்மநாப ஐயங்காராக இருக்கலாம் என்று தோன்றியது. முகத்தைப் பார்த்தால் நிச்சயமாய்ச் சொல்லி விடலாம்.
ஆயினும் தலைகீழாக நின்று கொண்டிருக்கிறவரிடம் எப்படிப் பேசுவது? ஜன்னல் ஓரமாகவே நின்று காத்துக் கொண்டிருந்தேன்.
ஒரு நிமிஷத்துக்கெல்லாம் அந்த மனிதரின் கால்கள் கீழே வந்தன. அவர் எழுந்து நின்றார். அறைக்குள் மங்கலான வெளிச்சமே யிருந்த போதிலும் அவர் பத்மநாப ஐயங்கார் தான் என்பது தெரிந்துவிட்டது.
இதுதான் சமயம் என்று "ஸார்! ஸார்!" என்றேன்.
ஐயங்கார் என் பக்கம் சட்டென்று திரும்பிப் பார்த்துக் கடுகடுப்பான முகத்துடன் "யார் அது, சுத்த நியூஸென்ஸ்! இந்த வீட்டில் ஒரு நிமிஷமாவது 'பிரைவஸி' என்பதே கிடையாது!" என்றார்.
"மன்னிக்கவேண்டும் ஸார்! நான் தான் உங்கள் பழைய மாணாக்கன் கிச்சாமி! என்னை ஞாபகம் இல்லையா?" என்றேன்.
உடனே ஹெட்மாஸ்டரின் முகம் மலர்ந்தது. "அடே டேடேடே! நம்ம தண்டாங்கோரை கிச்சாமியா? வா! வா! தேவகி கூடச் சொன்னாள், நீ வருவாய் என்று. நான் தான் மறந்துவிட்டேன். வா! உள்ளே வா!" என்று சொல்லிக் கொண்டே வந்து அறையின் கதவைத் திறந்தார். உள்ளே போனதும் தானும் உட்கார்ந்து என்னையும் ஒரு நாற்காலியில் உட்காரச் சொன்னார்.
மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு என்னை நன்றாய் உற்றுப் பார்த்து விட்டு, "ஆமாம், நீ கிச்சாமிதான்! ஆனால் எப்படி மாறிப் போயிருக்கிறாய்? ஷர்ட்டு, கோட்டு, கையிலே ரிஸ்ட்வாச்சு, பையிலே பார்க்கர் பேனா எல்லாம் பிரமாதமாயிருக்கிறதே; வாசலில் நிற்கிற கார் கூட உன்னுடையது தானாக்கும்! ஜோரான ஸ்டூடி பேக்கர் கார் அல்லவா? தேவகி சொன்னது சரிதான். நல்ல பணம் சம்பாதிச்சுட்டே போலிருக்கிறது. எல்லாம் பெருமாளுடைய அருள். ரொம்ப சந்தோஷம். ஆனாலும் எப்படி மாறிப் போயிருக்கிறாய்? என்னுடைய 'ஸ்டூடண்ட்' கிச்சாமி நீதான் என்று நம்புவதே கஷ்டமாய்த் தானிருக்கிறது. இப்போது எங்கே இருக்கே? என்ன செய்யறே? எல்லாம் சவிஸ்தாரமாய்ச் சொல்லு பார்க்கலாம்?" என்றார்.
"பிஸினஸ் செய்து கொண்டிருக்கிறேன், ஸார்! ஏதோ உங்கள் ஆசீர்வாதத்தினாலே இது வரை எல்லாம் சௌக்கியமாகவே இருந்து வருகிறது. தியாகராஜ நகரிலே வசித்து வருகிறேன். தாங்கள் இங்கே வந்து ரொம்ப வருஷம் ஆகிவிட்டதோ?"
"ஏன்? ரிடையர் ஆனதிலிருந்து இங்கேதான் இருந்து வருகிறேன். வேறு எங்கே போகிறது? இது என் பிதிரார்ஜித வீடு."
"அப்படியா? ரொம்ப சந்தோஷம்! உங்களை நான் பார்த்துக் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருஷம் இருக்குமே? ஆனால் உங்களுடைய தோற்றத்தில் மட்டும் மாறுதலே இல்லை. அன்று மாதிரியே இன்றைக்கும் இருக்கிறீர்கள், ஸார்!"
"நீ சொல்கிறது உண்மை. வயது எனக்கு இப்போது 75 ஆகிறது. ஆனால் நான் இதைச் சொன்னால் ஒருவரும் நம்புவதில்லை. எல்லாரும் அறுபது வயதுதான் மதிப்பிடுகிறார்கள். எதனாலே இப்படி இருக்கேன் தெரியுமா! எல்லாம் யோகாசனத்தின் மகிமைதான். நீ வருகிறபோது கூட ஆஸனந்தான் செய்து கொண்டிருந்தேன். நீ வேணுமானால் பாரு! நான் நூறு வயது இருக்கப் போகிறேன். நான் சுரம் தலைவலி என்று படுத்து இன்றைக்கு வருஷம் பதினைந்து ஆகப்போகிறது."
"எந்த வருஷத்திலே, ஸார், நீங்கள் ரிடையர் ஆனீர்கள்? ரிடையர் ஆனவரையில் தண்டாங்கோரையில் தான் ஹெட்மாஸ்டராயிருந்தீர்களா!"
"ஆமாம், கிட்டா, ஆமாம்! வேறு எங்கே நான் போகிறது? தண்டாங்கோரையிலே அந்த நாட்களை நினைத்தாலே எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது. அதுவும் நீங்கள் எல்லாம் படித்துக் கொண்டிருந்த போது, எப்பேர்ப்பட்ட நல்ல ஸெட்? நீங்கள் எவ்வளவு சிரத்தையாய்ப் படித்தீர்கள்! உபாத்தியாயர்களிடம் எவ்வளவு மரியாதையாயிருந்தீர்கள்! - இந்தக் காலத்துப் பிள்ளைகள் அடியோடு கெட்டுப் போய் விட்டார்கள்! படிக்கிறதில்லை, பரீட்சைப் பேப்பரைத் திருடப்பார்க்கிறது; அப்படித் திருடிப் பரீட்சைப் பேப்பர் முழுதும் தெரிந்திருந்தாலும், பரீட்சையிலே சரியாகப் பதில் எழுதி மார்க் வாங்க முடிகிறதில்லை! இந்தக் காலத்து மாணாக்கர்கள் ரொம்ப ரொம்ப மட்டமானவர்கள். அடாடா! நீங்கள் எல்லாம் படித்தபோது எவ்வளவு நன்றாயிருந்தது? அப்போது வகுப்புகளுக்கு வருவதே ஒரு சந்தோஷம்!"
"எனக்குக் கூட அந்த நாட்களை நினைத்துப் பார்த்தால் எவ்வளவோ சந்தோஷமாயிருக்கிறது, ஸார்! உங்களிடம் படித்த பிறகு வேறு யாரிடமும் படிக்க நான் இஷ்டப்படவில்லை."
"ஆமாம், ஆமாம்! நீ டிரான்ஸ்பர் சர்டிபிகேட் வாங்கிக் கொள்ளக் கூட வரவில்லை பாவம்! உன்னை வீணாக..."
"அதனால் என்ன, ஸார்! ஒன்றும் குறைவில்லை. அப்படியே படிப்பை விட்டு விட்டுப் போய் 'பிஸினஸ்' துறையில் சேர்ந்ததினாலேதான் இன்றைக்கு நான் நன்றாயிருக்கிறேன். என்னுடைய ஆபீஸில் எனக்குக் கீழே முப்பது 'கிராஜுவேட்'டுகள் குமாஸ்தா வேலை பார்க்கிறார்கள், ஸார்!"
"ரொம்ப சந்தோஷம். நான் ஆதியிலிருந்து என் கீழ் படித்த மாணாக்கர்களுக்கெல்லாம் இதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். 'உத்தியோகம் உத்தியோகம் என்று ஆலாய்ப் பறக்காதீர்கள்! ஏதாவது வியாபாரம், கைத்தொழில், பாங்கிங்க், - இப்படிப் பார்த்துப் புகுந்து கொள்ளுங்கள்' என்று படித்துப் படித்துச் சொல்வேன். நீ ஒருவனாவது என்னுடைய வார்த்தையை மதித்து நடந்து இந்த மாதிரி நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறாயே, அதைப் பற்றி எனக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருக்கிறது. ஆனால், பாவம், உன் மாமிதான் கண்ணை மூடி விட்டாள். என்னைப் பரிதவிக்க விட்டுப் போய்விட்டாள். இன்றைய தினம் அவள் உயிரோடிருந்து நீ 'ஜம்' என்று 'ஸ்டூடி பேக்கர்' காரில் வந்து இறங்கியதைப் பார்த்திருந்தால் அப்படியே பூரித்துப் போயிருப்பாள். அவளுக்கு உன் பேரில் அலாதியான பிரியம். எத்தனையோ மாணாக்கர்கள் என்னிடம் படித்திருக்கிறார்கள். அவளிடமும் பக்தியுடன் பழகியிருக்கிறார்கள். ஆனால் உன்னிடம் அவளுக்கு ஏற்பட்ட பாசத்தைப் போல் வேறு யாரிடமும் ஏற்படவில்லை. தண்டாங்கோரையில் புதுக் குடித்தனம் போட்ட போது நீ செய்த உதவிகளைப் பற்றி அவள் சொல்லாத நாள் கிடையாது. என்னிடம் கூட அவளுக்கு ரொம்பக் கோபம். உன் பேரில் நான் அநியாயமாய்ப் பழி போட்டுத் துரத்திவிட்டேன் என்று. ஆனால் அந்த நிலைமையில் நான் என்ன செய்திருக்க முடியும், கிச்சா! நீயே சொல்லு!"
"ஆமாம், ஸார்! நீங்கள் என்ன செய்திருக்க முடியும்?" என்றேன் நான். ரங்கநாயகி அம்மாள் காலமாகி விட்டாள் என்னும் செய்தி என்னைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. மாமி கடைசி வரை என்னை நினைவு வைத்துக் கொண்டிருந்தாள் என்பது என் மனதை உருக்கி விட்டது.
இதே சமயத்தில் வாசலில் கலகலவென்று பேச்சுக் குரல் கேட்டது. அடுத்த நிமிஷம் தேவகி தன்னுடைய மூத்த குழந்தைகள் இருவருடனும் வீட்டுக்குள்ளே வந்தாள்.
என்னைப் பார்த்ததும், "ஓகோ! கிட்டாவா? வாசலில் நிற்கும் மோட்டார் கார் உங்களுடையது தானா? யாருடையதோ என்று பார்த்தேன். நீங்கள் இன்றைக்கு வருகிறதாகச் சொன்னதையே மறந்து போய் விட்டேன். நல்லவேளை! ஆண்டு நிறைவு நடந்த வீட்டில் சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்று வற்புத்தியும் தட்டிக் கழித்து விட்டு வந்தேனே? அதுவே நலதாய்ப் போயிற்று!" என்றாள்.
ஸ்திரீகளின் சபல சித்தத்தைப் பற்றி என்னவென்று சொல்வது? இன்றைக்கு என்னை அவள் தான் வரும்படி சொன்னாள். ஆனால் நானே வருகிறேன் என்று சொன்னதாக இப்போது சொல்கிறாள். அது மட்டுமல்லாமல், என்னை வரச் சொல்லிவிட்டு, அதை அடியோடு மறந்தும் போய் விட்டாள்! நானோ மூன்று நாலு நாளாய்க் கனவிலே கூட அதே நினைவாயிருந்தேன். நன்றாயிருக்கிறதல்லவா, கதை?
10
[தொகு]தேவகி உள்ளே வந்து உட்கார்ந்ததும் ஹெட்மாஸ்டர் "பார்த்தாயா, தேவகி? நம்ம தண்டாங்கோரை கிச்சாமி எப்படி ஜோராய் 'ஸ்டூடி பேக்கர்' கார் வைத்துக் கொண்டு இருக்கிறான், பார்த்தாயா? சற்றே நீ இவனுடன் பேசிக் கொண்டிரு. நான் ஸ்நானம் செய்து விட்டு வந்து விடுகிறேன்" என்று சொல்லிப் போனார்.
தேவகி தன் குழந்தைகளை ஒவ்வொருவராய்க் கூப்பிட்டு, "இதோ உங்கள் சித்தியா வந்திருக்கிறார். நமஸ்காரம் பண்ணு!" என்றாள். (வைஷ்ணவர்கள் சித்தப்பாவைச் 'சித்தியா' என்று சொல்வது வழக்கம்.) "இவர் எங்கள் சித்தியாவா? இத்தனை நாள் எங்களை ஏன் வந்து இவர் பார்க்கவில்லை?" என்றது ஒரு குழந்தை. அதற்கு, "இப்போதுதான் உங்கள் சித்தியாவுக்கு தயவு வந்திருக்கிறது. அதற்கு நான் என்ன செய்கிறது?" என்றாள் தேவகி. இதற்குப் பதில் சொல்லவே எனக்குத் தெரியவில்லை.
குழந்தைகள் நமஸ்காரம் செய்துவிட்டு அவரவர்களும் கையில் ஒரு புஸ்தகத்தை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.
"அந்த நாளில் நீ படிப்பிலே கெட்டிகாரியாக இருந்தது போலவே உன் குழந்தைகளும் இருக்கிறார்கள்" என்றேன் நான்.
"போதும், போதும். நான் படித்த இலட்சணத்தை நீங்கள் தான் மெச்ச வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்கே போகாமல் படிப்பை நிறுத்திவிட்டேன். ஆனால் அது உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் தான் திடீரென்று ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல், சர்டிபிகேட்' கூட வாங்கிக் கொள்ளாமல், மாயமாய்ப் போய் விட்டீர்களே?" என்றாள்.
இவ்வளவு சீக்கிரத்தில் அந்த விஷயத்தைப் பற்றிப் பேச எனக்கு இஷ்டமில்லை. கடைசியில் தேவகியிடம் விடை பெற்றுக்கொண்டு போகும்போது அந்த 'போர்ஜரி' கடிதத்தின் உண்மை வெளியாயிற்றா என்று கேட்க நினைத்தேன். ஆரம்பத்திலிருந்து அதைப் பற்றிக் கேட்டுப் பேச்சை விரஸமாக்குவானேன்?
ஆகையால், பேச்சை வேறு பக்கம் திரும்ப விரும்பி, "தேவகி! உன் தாயார் காலமாகி விட்டாளாமே? இப்போதுதான் ஹெட்மாஸ்டர் சொன்னார்!" என்றேன்.
உடனே தேவகி கடல் மடை திறந்ததுபோல் தன் தாயாரைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். அன்னையின் அருமை பெருமைகளைப் பற்றியும் அற்புத குணங்களைப் பற்றியும் வர்ணித்துக் கொண்டேயிருந்தாள். எனக்கும் மாமியைப் பற்றிக் கேட்கப் பிரியமாயிருந்தது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் இங்கே சொல்லிக் கதையை வளர்த்த நான் விரும்பவில்லை. மேலே விஷயத்துக்குப் போகிறேன்.
திடீரென்று தேவகி, "அம்மாவைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் எனக்கு நேரம் போவதே தெரிவதில்லை. இனிமேல்தான் அடுப்பு மூட்டித் தளிகை செய்தாக வேண்டும். நான் போகட்டுமா? அப்பா சீக்கிரம் வந்து விடுவார்!" என்றாள்.
"எனக்கும் போக வேண்டியதுதான். நேரமாயிற்று. ஆனால் உன் புருஷனைப் பற்றி நீ ஒன்றும் சொல்லவில்லையே, தேவகி! அவரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என்றுதான் நான் முக்கியமாக வந்தேன். அவர் வீட்டில் இப்போது இல்லையா? ஒரு வேளை ஊரிலேயே இல்லையா?" என்று கேட்டேன்.
தேவகி அந்தப் பழைய நாட்களில் சில சமயம் திடீரென்று சிந்தனையில் ஆழ்ந்து பேசாமலிருப்பாள் என்று சொன்னேன் அல்லவா? அந்தமாதிரி இப்போதும் இருந்தாள். திடீரென்று அவளுடைய பிராயத்தில் இருபது வயது குறைந்து பழைய கன்னிப் பெண் தேவகியாக மாறிவிட்டதாகவே தோன்றியது. யோசனையில் ஆழ்ந்திருந்த அந்த நிமிஷத்தில் அவளுடைய முகபாவம் அப்படியிருந்தது.
"தேவகி! இருபத்தைந்து வருஷத்தில் நீ கொஞ்சம் கூட மாறவில்லை" என்று நான் சொன்னதும், அவள் திடுக்கிட்டுப் பகற் கனவிலிருந்து விழித்துக் கொண்டவாளாய், "என்ன கேட்டீர்கள்?" என்றாள்.
"உன்னுடைய புருஷரைப் பற்றித்தான் கேட்டேன்; அவரைப் பார்க்க முடியாதா?" என்றேன்.
தேவகி சிறிது நேரம் உச்சிமோட்டைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "ஆம், அவரைப் பார்க்க முடியாது. அது பெரிய கதை. இப்போதே சொல்ல வேண்டுமா?" என்றாள்.
11
[தொகு]தேவகி தன்னுடைய கணவனைப் பற்றி "இப்போதே சொல்லத்தான் வேண்டுமா?" என்று கேட்டபோது, அவளுடைய குரலில் எல்லையில்லாச் சோகம் தொனித்தது. நான் எதிர்பார்த்தபடியே அவளுடைய இல்லற வாழ்க்கை துர்ப்பாக்கிய வாழ்க்கைதான் போலும்!
என் இருதயம் கனிந்து உருகிற்று. கண்ணில் கண்ணீர் வந்துவிடும் போலிருந்தது. ஒருவாறு சமாளித்துக் கொண்டு, "உனக்கு அது கஷ்டம் தருவதாயிருந்தால், இப்போது சொல்ல வேண்டாம். இன்னொரு சமயம் பார்த்துக் கொள்ளலாம்!" என்றேன்.
"இல்லை, இல்லை! அதை இப்போதே சொல்லி விடுவதுதான் நல்லது. அந்த விஷயம் ஒன்று மனதில் பாரமாய் இருப்பானேன்?" என்று தேவகி சொல்லிவிட்டுத் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை ஒருவாறு கூறினாள். அதன் சுருக்கம் வருமாறு:-
தேவகிக்கு முதலில் நிச்சயிக்கப்பட்ட கலியாணம் நின்று போன மூன்று வருஷத்துக்குப் பிறகு வேறு வரனுக்குக் கலியாணம் ஆயிற்று. கலியாணம் ஆனதும் குடும்பம் சென்னைக்குக் வந்து விட்டது. தேவகியின் கணவன் வைத்தியக் கல்வி படித்துத் தேறி டாக்டர் ஆனான். ஹைதராபாத் சமஸ்தானத்தில் டாக்டர்களுக்கு நல்ல வருமானம் என்று கேள்விப்பட்டு இருவரும் அங்கே போனார்கள். எதிர்பார்த்த படியே அங்கு நல்ல வருமானமும் வந்தது. பல வருஷ காலம் அவர்களுடைய இல்லற வாழ்க்கை சந்தோஷமாக நடந்து வந்தது.
பிறகு, ஹைதராபாத்துக்குச் சனியன் பிடித்தது! ரஸாக்கியர்களின் கொடூர ஆட்சி அந்த நவாப் சமஸ்தானத்தில் ஏற்பட்டது. அத்துடன் கம்யூனிஸ்டுகளின் தொல்லையும் சேர்ந்து கொண்டது. ஹைதராபாத்தில் வசித்த ஜனங்கள் எல்லாரையும் போல் தேவகியும் அவள் குடும்பத்தாரும் எப்போதும் என்ன ஆபத்து நேருமோ என்று கதிகலங்கிக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார்கள்.
ஒருநாள் இரவு பத்து மணிக்கு யாரோ சிலர் அவர்களுடைய வீட்டு வாசலுக்கு வந்து தடதடவென்று கதவை இடித்தார்கள். கதவைத் திறந்ததும் கறுப்பு முகமூடி அணிந்த ஐந்தாறு தடியர்கள் வீட்டுக்குள் புகுந்தார்கள். டாக்டரை அவருடைய மருந்துப் பெட்டியையும், மற்ற அவசியமான கருவிகளையும் எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். 'ஏதோ வைத்தியத்துக்குத் தானே கூப்பிடுகிறார்கள்?' என்று எண்ணி டாக்டர் அவர்களுடன் சென்றார். வாசலில் போலீஸ் வண்டியைப் போன்ற கூண்டு மோட்டார் வண்டி ஒன்று நின்றது. அதில் டாக்டரை ஏற்றி அழைத்துப் போனார்கள். அன்றைக்குப் போனவர் அப்புறம் திரும்பி வரவேயில்லை. எவ்வளவோ பிரயத்தனம் செய்தும் அவர் இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. தேவகி தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து தன் தந்தையின் வீட்டில் தஞ்சம் புகுந்தாள். அது முதல் அப்பாவின் ஆதரவில் இருந்து வருகிறாள். எவ்வளவோ பத்திரிகைகளில் விளம்பரம் செய்து பார்த்தும், ஹைதராபாத் சர்க்காருக்கு மனுப் போட்டுப் பார்த்தும், தேவகியின் கணவனைப் பற்றி நாளது வரையில் தகவல் ஒன்றும் தெரியவில்லை!
இந்தத் துயரமான, பீதிகரமான வரலாற்றைத் தேவகி சொல்லிவிட்டு, கண்களில் துளித்த கண்ணீரைப் புடவைத் தலைப்பினால் துடைத்துக் கொண்டு "நான் வீட்டு வேலையைப் பார்க்கப் போகட்டுமா? இன்னும் சொல்ல வேண்டியது, பேச வேண்டியது எவ்வளவோ இருக்கிறது! இன்னொரு நாள் சொல்கிறேன்" என்றாள்.
அவள் போவதற்காக எழுந்து நின்றதும் எனக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது.
"தேவகி! என்னிடம் நீ கொஞ்சம் கூடச் சங்கோசப் படக்கூடாது. உனக்கு ஏதாவது எப்போதாவது என்னால் ஆகக்கூடிய உதவியிருந்தால் உடனே சொல்ல வேண்டும். அப்படி உனக்கு உதவி செய்யக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தால் அதைப் பெரும் பாக்கியமாகக் கருதுவேன்" என்றேன்.
தேவகி சில கண நேரம் யோசனை செய்துவிட்டு, "ஆமாம்; நானே ஒரு உதவி உங்களைக் கேட்கலாமென்றுதானிருந்தேன். நாளை மாலை இன்னொரு தடவை பொருட்காட்சிக்குப் போகவேண்டும் என்று குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள். பஸ்ஸில் இவர்களை அழைத்துக் கொண்டு போய் வருவது ரொம்பவும் கஷ்டமாயிருக்கிறது. உங்களிடம் தான் பெரிய மோட்டார் வண்டி இருக்கிறதே! நாளை சாயங்காலம் சுமார் நாலு மணிக்கு வந்து எங்களைப் பொருட்காட்சிக்கு அழைத்துப் போக முடியுமா?" என்று கேட்டான்.
"இது என்ன பிரமாதம்? பேஷாக வந்து அழைத்துப் போகிறேன்!" என்று உற்சாகத்துடன் சொன்னேன்.
தேவகி சமையல் உள்ளுக்குச் சென்றதும், நானும் வெளிக் கிளம்பலாம் என்று யத்தனித்தேன். அச்சமயம் ஹெட்மாஸ்டர் ஸ்நான அறையிலிருந்து வந்துவிட்டார். "என்ன, கிருஷ்ணசாமி! புறப்படுகிறாயா?" என்றார்.
"புறப்பட வேண்டியதுதான்; உங்களிடம் விடை பெறுவதற்காகத்தான் காத்திருக்கிறேன்!" என்றேன்.
அவருடைய அறைக்குள் போனதும் "சற்றே உட்காரு, அப்பா, கிருஷ்ணசாமி! அவசரம் ஒன்றும் இல்லையே? கொஞ்சம் கழித்துப் போகலாம் அல்லவா?" என்றார்.
அதன்படியே நான் உட்கார்ந்தேன். ஏனெனில் என்னுடைய சந்தேகத்தை இன்னும் நான் நிவர்த்தி செய்து கொண்டபாடில்லை. தேவகியின் கையெழுத்துப் போல் எழுதியிருந்த அந்த 'போர்ஜரி' கடிதத்தை எழுதியது யார் என்னும் உண்மை அவர்களுக்குப் பிற்பாடு தெரிந்ததா? குற்றவாளி நான் இல்லை என்பதை அவர்கள் அப்புறமாவது தெரிந்து கொண்டார்களா? இதை அறிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆர்வம் அதிகமாயிருந்தது. ஆனால் அந்தப் பேச்சை எடுப்பதற்குச் சங்கோசமாயிருந்தது.
நான் உட்கார்ந்தும் ஹெட்மாஸ்டர் "தேவகி உன்னிடம் என்ன சொன்னாள்? என் பேரில் ஏதாவது புகார் சொன்னாளா? நான் யோகாசனம் செய்வது பற்றிக் குறை சொல்லியிருப்பாளே?" என்று கேட்டார்.
"அதெல்லாம் இல்லை, ஸார்! உங்களைப் பற்றி தேவகி ஏன் புகார் சொல்லப் போகிறாள்? பாவம், அவளுக்கு நேர்ந்த கஷ்டகாலத்தில் நீங்களாவது தஞ்சம் கொடுப்பதற்கு இருந்தீர்களே? தேவகியின் புருஷனுடைய கதியைப் பற்றிக் கேள்விப்பட்டேன். நினைக்க நினைக்க ரொம்ப வருத்தமாயிருக்கிறது!" என்றேன்.
"ஓஹோ! புருஷனைப் பற்றியும் சொல்லி விட்டாளா? என்ன சொன்னாள்?" என்றார் ஹெட்மாஸ்டர்.
"ஹைதராபாத்தில் நடந்ததையெல்லாம் சொன்னாள். ஒரு நாள் இராத்திரி கறுப்பு முகமூடி போட்டுக் கொண்டு ஐந்தாறு பேர் வந்து டாக்டரை அழைத்துக் கொண்டு போனதைப் பற்றிச் சொன்னாள். அப்புறம் அவர் திரும்பியே வரவில்லையாமே?"
"அதை உன்னிடமும் சொல்லி விட்டாளா? கிருஷ்ணசாமி! நான் சொல்கிறேன், கேள்! தேவகி என்னுடைய பெண்தான். இருந்தாலும் அவள் சில சமயம் செய்கிறது எனக்குப் பிடிக்கிறதில்லை. இந்த மாதிரி வருகிறவர் போகிறவர்களிடம் எல்லாம்..." என்று ஹெட்மாஸ்டர் கூறியதும் நான் குறுக்கிட்டேன்.
"என்ன, ஸார், அப்படிச் சொல்கிறீர்கள்? என்னை வருகிறவர், போகிறவர்களோடு சேர்த்து விட்டீர்களே? ஏதோ பழைய விசுவாசத்தை நினைத்து என்னிடம் தன்னுடைய கஷ்டத்தைச் சொல்லலாம் என்று எண்ணித்தான் தேவகி சொன்னாள். அதற்காக நீங்கள் தேவகியைக் கோபித்துக் கொள்ள வேண்டாம்!" என்றேன்.
ஹெட்மாஸ்டர் தம்முடைய பிசகை உணர்ந்தவர் போல், "ஆமாம், கிருஷ்ணசாமி, உன்னிடம் சொன்னால் தவறில்லைதான். ஆனாலும் நாம் தான் கஷ்டப்படுகிறோம் என்றால், நம்மைச் சேர்ந்தவர்களிடமெல்லாம் நம்முடைய கஷ்டங்களைச் சொல்லி அவர்களையும் அநாவசியமாகக் கஷ்டப்படுத்தக் கூடாது அல்லவா?" என்றார்.
"சிநேகிதம் என்பது பின் எதற்காக? நம்முடைய கஷ்டங்களைச் சொல்லிக் கொள்வதற்கும் சமயா சமயங்களில் உதவியாயிருப்பதற்குந்தானே? என்னை வேற்று மனிதனாக நீங்கள் நினைக்கக் கூடாது. அது இருக்கட்டும்... உங்களுக்கு என்ன தோன்றுகிறது? அந்தக் கறுப்பு முகமூடி தரித்தவர்கள் ரஸாக்கியர்களாயிருப்பார்களா? அல்லது கம்யூனிஸ்டுகளாயிருப்பார்களா? ஹைதராபாத்தில் எனக்குத் தெரிந்த வர்த்தர்கள், - செல்வாக்கு உள்ளவர்கள், - சிலர் இருக்கிறார்கள். உங்கள் மாப்பிள்ளையைக் கண்டு பிடிப்பதற்கு நான் ஏதாவது முயற்சி செய்து பார்க்கட்டுமா?" என்று கேட்டேன்.
"பேஷாக முயற்சி செய்து பார்க்கலாம்; ஆனால் பலன் ஒன்றுமிராது!" என்றார் ஹெட்மாஸ்டர்.
அவர் இவ்விதம் கூறிய தொனி என் மன அமைதியைக் கெடுத்தது.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் எல்லாப் பிரயத்தனங்களும் செய்து பார்த்து விட்டீர்களா?" என்று கேட்டேன்.
"நான் ஒரு முயற்சியும் செய்யவில்லை!" என்றார் தேவகியின் தந்தை. பிறகு என் அருகில் வந்து மெல்லிய குரலில், "கிருஷ்ணசாமி! தேவகியின் சுபாவம் இன்னும் உனக்குத் தெரியவில்லையா? பாவம்! உன்னை அவள், ஏமாற்றி விட்டாள். அவள் வார்த்தையை நீ நம்பவே நம்பாதே அவ்வளவும் கட்டுக் கதை. தேவகியின் கணவன் இந்த ஊரிலேதான் இருக்கிறான்!" என்றார்.
இதைக் கேட்டதும், எனக்கு எவ்வளவு திகைப்பு ஏற்பட்டிருக்குமென்பதை வாசகர்களே ஊகித்து அறிந்து கொள்ளலாம்.
"தேவகி அவ்வளவு பொய் புனை சுருட்டுச் சொல்லுவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லைதான். அப்படியானால் உங்கள் மாப்பிள்ளை இந்த ஊரில் தான் இருக்கிறாரா? இந்த ஊரில் என்றால் எங்கே?" என்றேன்.
"பைத்தியம் பிடித்தவர்கள் எங்கே இருப்பார்களோ, அங்கேதான்!"
"என்ன, என்ன?"
"ஆமாம், கிருஷ்ணசாமி! ஒரு நாள் உனக்கு உண்மை தெரியாமலிராது. இந்த அசட்டுப் பெண் அதை மறைத்து வைக்க முயல்வதால் என்ன பயன்? என் மாப்பிள்ளைக்குக் கொஞ்சம் பைத்தியம். கொஞ்சம் என்ன? ஒரே முற்றின பைத்தியம். அதுவும் சில நாளாய்..." என்று நிறுத்தினார்.
அதற்கு மேலே கேட்பதற்கு எனக்கும் விருப்பம் இல்லை. மனம் ஒரேயடியாய்க் குழம்பி விட்டது. தேவகியிடம் முன்னைக் காட்டிலும் அதிக அநுதாபம் ஏற்பட்டது. அவள் என்னிடத்தில் பொய் சொன்னது பற்றி எனக்குக் கொஞ்சமும் கோபமோ மனஸ்தாபமோ ஏற்படவில்லை. தன் புருஷன் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கிறான் என்று எந்த ஸ்திரீதான் தயக்கமின்றிச் சொல்வாள்? புருஷனைப் பற்றிக் கேட்டதும் தேவகியின் முகத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் எனக்கு நினைவு வந்தன. பாவம்! அவளைப் போய்க் கேட்கப் போனேனே? புண்ணிலே குச்சியை எடுத்துக் குத்துவது போல. ஹெட்மாஸ்டர் இவ்விதம் சொன்ன பிறகு, அந்தப் பழைய 'போர்ஜரி' கடிதத்தைப் பற்றிப் பிரஸ்தாபிக்கக் கூட எனக்கு மனம் வரவில்லை. அதற்கு இப்போது என்ன அவசரம்? பிறகு கேட்டுக் கொண்டால் போகிறது.
"சரி, ஸார்! போய்விட்டு நாளை வருகிறேன்! குழந்தைகளைப் பொருட்காட்சிக்கு அழைத்துப் போவதற்காகத் தேவகி நாளை சாயங்காலம் வரச் சொல்லியிருக்கிறாள்" என்று கூறிவிட்டுக் கிளம்பினேன்.
அதே சமயத்தில் அந்த வீட்டின் மேல் மச்சிலிருந்து ஒரு பயங்கரமான சத்தம் கேட்டது. அது என்ன சத்தம் என்று சொல்ல முடியாது. சிம்மத்தின் கர்ஜனை, புலியின் உறுமல், ஓநாயின் ஊளை, - இவற்றையெல்லாம் விட அந்தச் சத்தம் பயங்கரமாயிருந்தது. கதைகளிலே நாம் படித்திருக்கும் ராட்சதர்கள் ஒருவேளை அப்படித்தான் சத்தமிடுவார்கள் போலும்.
என் உடம்பிலும் ஒவ்வொரு ரோமமும் குத்திட்டு நின்றது. என்னுடைய கால்கள் கீழே நிலைத்து நிற்க முடியாமல் நடுநடுங்கின.
"ஸார்! ஸார்! இது என்ன?" என்று கேட்டேன்.
"எது என்ன என்று கேட்கிறாய்? அடுத்த வீட்டில் ஏதோ புருஷன் பெண்டாட்டி சண்டை போலிருக்கிறது! அதைப் பற்றி நமக்கு என்ன?" என்றார் ஹெட்மாஸ்டர்.
அந்த வீட்டிலிருந்து நான் கிளம்பிச் சென்ற போது ரேழி நடையில் வைத்திருந்த சைக்கிளில் கால் தடுக்கிற்று. கட்டை விரலில் காயம் உண்டாயிற்று.
ஆனால் காயம்பட்டது என்பதாக எனக்கு அப்போது தெரியவேயில்லை. வீடு சென்ற பிறகுதான் தெரிந்தது.
வாசலில் நின்ற மோட்டாரில் நான் ஏறி உட்கார்ந்து காரைச் செலுத்திய போது 'ஸ்டியரிங்'கில் வைத்த என் கைகள் நடுங்கின; 'ஆக்ஸிலேட'ரில் வைத்த என் காலும் நடுங்கிற்று.
மோட்டாரை விடுவதற்கு முன்னால் தற்செயலாக அந்த வீட்டின் மேல் மாடிப் பக்கம் பார்த்தேன். திறந்திருந்த ஜன்னல் வழியாக ஒரு பயங்கரமான மனித உருவம் என்னை நோக்கிக் கொண்டிருந்தது. அந்த உருவத்தின் முகத்தில் பைத்தியம் என்று எழுதி ஒட்டியிருந்தது!
12
[தொகு]அன்றைக்கும் மறுநாளும் எனக்கு தேவகியின் நினைவாகவே இருந்தது. ஆனாலும் அவளைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொள்வது என்று தெரியவில்லை. அவளுடைய கணவனைப் பற்றிய உண்மை என்ன? ஹைதராபாத் குழப்பத்தின் போது அவனை ரஜாக்கர்கள் கொண்டு போனார்கள் என்பதும், பிறகு அவன் திரும்பி வரவேயில்லை என்பதும் உண்மையா? அல்லது தேவகியின் தகப்பனார் கூறியபடி அவனுக்குப் பைத்தியம் பிடித்துப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கிறான் என்பது உண்மையா? அல்லது என் கண்ணாலே பார்த்தபடி, அதே வீட்டில் மேல்மாடியில் அந்தப் பைத்தியம் பிடித்த கணவனை அடைத்துப் போட்டிருப்பது உண்மையா?
எல்லாவற்றையும் சேர்த்து யோசித்துப் பார்க்கும்போது கடைசியில் நான் கண்ணால் கண்டதே உண்மையாயிருக்கலாம் என்று தோன்றியது. தேவகியும் அவள் தகப்பனாரும் கூறிய பொய்களுக்குச் சுலபமாகக் காரணம் கண்டு பிடிக்கலாமல்லவா? பாவம்! தேவகிக்குத் தன்னுடைய கணவனைப் பற்றிய உண்மையைச் சொல்வது கஷ்டமாகத்தானேயிருக்கும்? அதிலும் என்னிடம்? அந்த வேலைக்காரி முதலில் பதில் சொல்லத் தயங்கிவிட்டுப் பிறகு எங்கேயோ தேவகியின் கணவன் போயிருப்பதாகவும் திரும்பி வரவில்லையென்றும் சொன்னாள், அல்லவா? புதிய மனிதர்களிடம் அந்த மாதிரி சொல்லும்படியாகத் தேவகி அவளுக்குக் கட்டளையிட்டிருக்க வேண்டும். தேவகியின் தகப்பனாருக்குப் பாவம், அவ்வளவு முழுப் பொய் சொல்ல விருப்பமில்லை. அவர் பாதி உண்மையைச் சொன்னார். தேவகியின் கணவனுக்குப் பைத்தியம் என்று ஒப்புக் கொண்டார். ஆனால் அதே வீட்டு மாடியில் தேவகியின் கணவனை அடைத்து வைத்திருக்கிறது என்று சொல்ல அவருக்கு மனம் வரவில்லை. அதனாலேயே பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருப்பதாகச் சொன்னார்.
இதையெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்த போது ஒரு பக்கத்தில் எனக்கு எவ்வளவோ பரிதாபமாயிருந்தது. தேவகிக்கு இந்தக் கதியா வரவேண்டும்? இப்படிப்பட்ட புருஷனா அவளுக்கு வாய்க்க வேண்டும்? அடடா! ஹெட்மாஸ்டர் எப்படியெல்லாம் சொப்பனம் கண்டு கொண்டிருந்தார்? என்னென்ன ஆகாசக் கோட்டைகளைக் கட்டினார்? கொஞ்சமும் சங்கோசமில்லாமல் என் முகத்துக்கு நேரே தேவகிக்குப் பணக்காரக் கணவனாக வரன் பார்க்கிறேன்; உனக்கு அவளைக் கொடுக்க முடியாது; அந்த எண்ணத்தை விட்டு விடு!" என்று பச்சையாகச் சொன்னாரே? இத்தனைக்கும் நான் அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட அவரிடம் பிரஸ்தாபிக்கவேயில்லையே? யாரோ காலிப்பயல்கள் சொன்னதைக் கேட்டுக் கொண்டும் ஊர் வதந்தியை வைத்துக் கொண்டும் என் பேரில் எரிந்து விழுந்தாரே? என் மீது அபாண்டமான பழியும் சுமத்தினாரே? இப்போது என்ன ஆயிற்று? தேவகிக்கு எப்படிப்பட்ட கணவன் வாய்த்தான்? கடவுளே! என்னைப் பரமயோக்யன் என்று அதுகாறும் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என் மனதின் ஆழத்தில் ஒளிந்திருந்த தீய பிசாசின் வலிமை தெரிந்தது. தேவகி அப்படிப்பட்ட துர்க்கதியை அடைந்திருக்கக் கண்டது வெளிப்படையாக என் மனதில் பரிதாபத்தை உண்டாக்கிய போதிலும் உள்ளுக்குள்ளே ஒருவித திருப்தியையும் உண்டாக்கிற்று. அத்துடன், அத்தகைய பரிதாப கதிக்கு உள்ளான தேவகிக்கு என்னாலான உதவிகளைச் செய்ய வேண்டும் என்னும் ஆர்வமும் முன் வந்து நின்றது.
இந்த எண்ணத்தோடு கூட தேவகியைப் பற்றிய தாழ்வான ஒரு எண்ணமும் என் மனதில் உதிக்கக் கண்டேன். சீச்சீ! பைத்தியக்காரப் புருஷனை மேல் மாடியில் அடைத்துப் போட்டுவிட்டு இவளுக்குப் பொருட்காட்சி வேடிக்கை என்ன வேண்டிக்கிடந்தது? அடுத்த வீதி ஆண்டு நிறைவுக் கல்யாணத்துக்குப் போக எப்படி மனம் வந்தது? எவ்வளவு கடின நெஞ்சு அவளுக்கு? ஒரு தடவை போனது போதாது என்று இன்னொரு நாளும் பொருட் காட்சிக்குப் போக வேண்டுமாமே? அடாடா! ஒரு காலத்தில் நான் இவளை தேவ கன்னிகை என்று நினைத்துப் போற்றினேன் அல்லவா? இவளுடைய பணிவிடைக்காக என் வாணாளையே அர்ப்பணம் செய்யத் தயாராகயிருந்தேன் அல்லவா! சீ!
ஆனால் கொஞ்சம் நிதானித்துப் பார்த்தால், அவள் பேரில் அவ்வளவு நிஷ்டூரம் சொல்வதற்கு இடம் என்ன இருக்கிறது? எப்படியும் மூன்று குழந்தைகளுக்குத் தாயார். அந்தக் குழந்தைகளைச் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டியதுதானே அவசியம? புருஷனுக்கு ஏதோ துர்க்கதி நேர்ந்து விட்டது என்பதற்காகக் குழந்தைகளையும் கஷ்டப்படுத்துவது நியாயமாகுமா? நாலு இடங்களுக்கு அழைத்துக் கொண்டு போய்க் காட்டினால்தானே குழந்தைகள் தந்தையின் நிலையை மறந்து சந்தோஷமாயிருக்க முடியும்?
இப்படி முன்னுக்குப் பின் முரணான எண்ணங்களால் என் உள்ளம் கலங்கிக் கொண்டிருந்தது. என் மனதில் தோன்றிய கேள்விகளுக்கு நானே சமாதானம் கண்டு பிடித்துத் திருப்தியடையப் பார்த்தேன். ஆயினும் பூரண திருப்தி ஏற்படவில்லை.
மறுநாள் திங்கட்கிழமை, நான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனபோது வழியில் பார்க்டவுனில் 'டாக்டர் சுந்தரம் எல்.ஐ.எம்.' என்று போட்டிருந்த போர்டு என் கண்களைக் கவர்ந்தது. ஏற்கெனவேயே சில சமயம் நான் இந்த போர்டைப் பார்த்துவிட்டுக் கட்டிடத்தையும் உற்றுப் பார்த்திருக்கிறேன். சுந்தரம் என்று பெயருள்ள எத்தனையோ ஆயிரம் பேர் நாட்டில் இருக்கிறார்கள். ஆயினும் இந்த 'டாக்டர் சுந்தரம்' போர்டு எனக்குத் தண்டாங்கோரையில் என்னுடன் ஹைஸ்கூலில் படித்த சுந்தரத்தை நினைவூட்டிற்று. அதற்கு ஒரு காரணமும் இல்லாமற் போகவில்லை. இரண்டொரு தடவை அந்த ஆயுர்வேத மருந்துக் கடையில் ஜன்னல் வழியாக ஒரு முகம் தெரியும். அந்த முகம் ஏதோ எப்போதோ எனக்குத் தெரிந்த முகம் போலத் தோன்றும். பல தடவை இதைப் பற்றி யோசித்து, 'ஆமாம்; இவன் அந்தத் தண்டங்கோரை சுந்தரமாயிருக்கக் கூடும்' என்று தீர்மானித்தேன். காரிலே அந்த வழியாகப் போய்க் கொண்டிருக்கையில் ஏற்பட்ட மின்னல் எண்ணங்கள் இவை. மோட்டாரை நிறுத்தி விசாரிப்பதற்கு வேண்டிய அக்கறை அப்போதெல்லாம் எனக்கு ஏற்படவில்லை. எதற்காக விசாரிக்க வேண்டும்? விசாரித்து அந்த சுந்தரமாயிருந்தால் தான் என்ன பயன்? இவனுடைய சிநேகத்தைப் புதுப்பித்துக் கொண்டு இப்போது எனக்கு ஆக வேண்டியது என்ன? ஒன்றுமில்லை!
ஆனால் நான் இந்தத் திங்கட்கிழமையன்று அந்த வழியாகப் போனபோது, காரை நிறுத்தி அவன் தண்டாங்கோரை சுந்தரம்தானா என்று விசாரிப்பதற்குத் தடுக்க முடியாத ஆர்வம் கொண்டேன். காரை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே போனேன். சுந்தரம் மாதிரிதான் இருந்தது. ஆனால், அவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.
அவனிடம், வைத்தியம் பார்த்துக் கொள்ள வந்தவர்கள் யாரும் அப்போது அங்கு இருக்கவில்லை. நான் அவன் மேஜைக்கெதிரே கிடந்த பெஞ்சியில் உட்கார்ந்ததும், "உங்களுக்கு என்ன உடம்பு? எங்கே, கையைக் காட்டுங்கள்!" என்று வைத்திய பரிசீலனை செய்யத் தயாரானான்.
நான் கொஞ்சம் தயங்கினேன்.
"சீக்கிரம் சொல்லுங்கள். எனக்கு இன்றைக்குச் சீக்கிரம் டிஸ்பென்ஸரியைச் சாத்திக் கொண்டு போகவேண்டும்" என்றான்.
"நான் உடம்பு பார்த்துக் கொள்ள வரவில்லை. எனக்கு உடம்பு ஒன்றுமில்லை. வேறொரு விஷயம் விசாரிப்பதற்காக வந்தேன். ஒரு வேளை நீங்கள் என் பழைய சிநேகிதனாயிருக்கலாம் என்று நினைத்தேன். டாக்டர்! நீங்கள் தண்டாங்கோரை ஹைஸ்கூலில் எப்போதாவது படித்ததுண்டா?" என்று கேட்டேன்.
அவன் என்னை அதிசயத்துடன் உற்றுப் பார்த்து, "ஆமாம், படித்திருக்கிறேன். நீங்கள் யார்? ஒரு வேளை... ஒரு வேளை ... அடேடே! நம்ம கிச்சாமி போலிருக்கிறதே!" என்றான் .
"ஆமாம், சுந்தரம்! நான் அந்த கிருஷ்ணசாமி தான்!"
"பலே! பலே! நம்ம 'சோப்பளாங்கி' கிருஷ்ணசாமியா? மன்னித்துக் கொள்! அப்போது, நாம் பள்ளிக்கூடத்தில் படித்தபோது, நீ யாரோடும் சண்டைக்கு வரமாட்டாயல்லவா? யாராவது உன்னோடு சண்டைக்கு வந்தாலும் நீ பின்வாங்கிப் போய்விடுவாயல்லவா? அதனால் உன்னை நாங்கள் 'சோப்பளாங்கி கிச்சாமி' என்று சொல்வோம். உன் காதிலும் விழுந்திருக்கலாம். ஆனால் அதைப் பற்றியெல்லாம் இப்போது என்ன? கார், கீர் வைத்துக் கொண்டு ஜோராய் இருக்கிறாப் போலிருக்கிறதே! என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
நான் நடத்தும் தொழிலைப் பற்றிச் சுந்தரத்திடம் சொன்னேன். அவனும் தன்னைப் பற்றி சுருக்கமாகச் சொன்னான். தண்டாங்கோரையில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த பிறகு இந்த பட்டணத்துக்கு வந்து ஆயுர் வேத கலாசாலையில் சேர்ந்து மூன்று வருஷம் படித்து எல்.ஐ.எம். பட்டம் பெற்று டாக்டர் ஆனானாம். வைத்தியத் தொழிலிலும் மருந்து விற்பனையிலும் மாதம் முந்நூறு, நானூறு ரூபாய் அவனுக்கு இப்போது வருமானம் வருகிறது என்று அறிந்தேன்.
"உங்கள் வீட்டில் யாருக்காவது ஏதாவது வியாதி என்றால், நேராக இங்கே வந்துவிடு. மருந்துகள் எல்லாம் நானே சாஸ்திரீயமாய்ச் செய்கிறேன். டைபாய்டு சுரத்துக்கு ஒரு மருந்து கண்டுபிடித்திருக்கிறேன். இங்கிலீஷ் வைத்தியத்தில் டைபாய்டு சுரத்துக்கு மருந்தே கிடையாது என்று தெரியுமல்லவா! உன் முகம் கூட அவ்வளவு நன்றாயில்லை. ஒரு மாதிரி வெளுத்துப் போயிருக்கிறது. ஆறு மாதம் நீ சியவனப்பிராஸ லேகியம் விடாமல் சாப்பிட்டால் குணம் தெரியும். அப்புறம் அதை விடவே மாட்டாய். இன்னொரு நாளைக்கு வா, மற்ற மருந்துகளைப் பற்றி விவரமாகச் சொல்லுகிறேன். இன்றைக்குக் கொஞ்சம் எனக்கு அவசர வேலையிருக்கிறது. போகட்டுமா?" என்று எழுந்தான்.
"கொஞ்சம் உட்கார், சுந்தரம்! இன்னொரு நாளைக்கு அவசியம் வந்து உன்னிடமுள்ள மருந்துகளிலெல்லாம் ரகத்துக்குக் கொஞ்சமாக வாங்கிப் போகிறேன். ஒரு முக்கியமான விஷயம் உன்னைக் கேட்கலாம் என்று இன்றைக்கு வந்தேன். அதை மட்டும் சொல்லிவிட்டுப் போ! நாம் படித்த போது ஹெட்மாஸ்டர் பத்மநாப ஐயங்கார் என்று இருந்தாரே? அவரைப் பற்றியும் அவர் குமாரி தேவகியைப்பற்றியும் உனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்க வந்தேன். தெரிந்தால் சொல்லு!"
சுந்தரம் என்னை ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்து விட்டு, "அவர்களைப் பற்றி என்ன கேட்கிறாய்? உனக்கு என்ன தெரிய வேண்டும்?" என்றான்.
"அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?"
"இந்த ஊரில்தான் எங்கேயோ இருக்கிறார்கள் என்று கேள்வி. நான் கூட இரண்டொரு தடவை பார்த்திருக்கிறேன். சிந்தாதிரிப் பேட்டையிலோ கோமளீசுவரன் பேட்டையிலோ இருக்கிறார்கள் போலிருக்கிறது. நீ எதற்காகக் கேட்கிறாய்?"
"ஆமாம். அவர்கள் சிந்தாதிரிப் பேட்டையிலே தான் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் வீடு கூட எனக்குத் தெரியும். நேற்று அவர்கள் வீட்டுக்குப் போய் வந்தேன்."
"அப்படியா! ரொம்ப சரி! நீதான் போய் வந்திருக்கிறாயே, என்னை என்ன கேட்கிறாய்?"
"ஒன்றுமில்லை. தேவகியின் புருஷனைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டேன்!"
"தேவகியின் புருஷனைப் பற்றி உனக்கு என்ன இவ்வளவு கவலை?"
"இல்லையப்பா! அவள் புருஷனைப் பற்றிப் பலவிதமாகக் கேள்விப்பட்டேன். ஒருவேளை உண்மை உனக்குத் தெரிந்திருக்கலாமோ என்று எண்ணிக் கேட்டேன். வேறொன்றுமில்லை!"
"பலவிதமாக அப்படி என்ன கேள்விப் பட்டாய்?"
நேற்றுக் காலை தேவகியின் வீட்டில் நடந்ததையெல்லாம் சுந்தரத்திடம் சொன்னேன். தேவகி சொன்னதும், அவள் தகப்பனார் சொன்னதும், நான் பார்த்ததும் ஒன்றுக்கொன்று முரணாயிருந்ததையும் சொன்னேன்.
"அவ்வளவும் பொய்! உன்னை நன்றாய் ஏமாற்றிவிட்டிருக்கிரார்கள்!" என்றான் சுந்தரம்.
"அவ்வளவும் பொய்யா? பின் எதுதான் உண்மை? உனக்குத் தெரியுமா?" என்றேன்.
"அவள் புருஷன் எப்போதோ 'கயா'வாகி விட்டான்! உனக்கு விதவா விவாகம் செய்து கொள்வதில் அபிப்பிராயம் இருந்தால்..."
"சீச்சீ! இது என்ன சுந்தரம்? அபஸ்மாரமாய்ப் பேசுகிறாயே? எனக்குப் பெண்டாட்டி பிள்ளைகுட்டி எல்லாரும் இருக்கிறார்கள்."
"ரொம்ப சரி! அப்படியென்றால் பேச்சை விட்டுவிடு!"
"என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று சொன்னாயே? அது என்ன என்று மட்டும் சொல்லி விடு! பாவம்! அவர்களைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாயிருந்தது!"
"பரிதாபமா? அந்த நீலி நன்றாகத்தான் உன்னை மயக்கி விட்டிருக்கிறாள். என்னைக் கேட்டால் அவள் வசிக்கும் வீட்டுப் பக்கமே போகாதே என்பேன். தேவகியின் கணவனை ரஸாக்கர்கள் கொண்டு போகவும் இல்லை; அவனுக்குப் பைத்தியம் பிடிக்கவும் இல்லை. ஆசாமி தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப் போய்விட்டான்!"
"ஐயோ! எப்போது? எதற்காக?"
"எப்போது என்று எனக்குத் தெரியாது. சில வருஷம் ஆயிற்று என்று கேள்வி. எதற்காகத் தற்கொலை செய்து கொண்டான் என்றா கேட்கிறாய்? எல்லாம் அந்தப் பரதேவதை தேவகியின் தொல்லையைப் பொறுக்க முடியாமல் தான்! கிச்சாமி! நீ கூட அந்த நாளில் தேவகியைக் கலியாணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணம் வைத்திருந்தாயல்லவா?"
"கிடையவே கிடையாது! அந்தப் பொய்க் கதையைக் கட்டி விட்டவர்கள் நீயும் வைத்தியுந்தான்."
"அப்படியே யிருக்கட்டும். நீ தேவகியைக் கலியாணம் செய்து கொள்ளாதது உன் அதிர்ஷ்டந்தான். அதனாலேதான் நீ இன்றைக்குப் பிழைத்திருக்கிறாய். இல்லாவிட்டால் அவள் புருஷம் செய்தது போல் நீயல்லவா தற்கொலை செய்து கொண்டிருப்பாய்! போகட்டும். நான் புறப்படட்டுமா?" என்று கேட்டுக் கொண்டே சுந்தரம் எழுந்து நடந்து ரேழியில் நிறுத்தியிருந்த சைக்கிள் வண்டியைச் சரிபார்க்க ஆரம்பித்தான். நானும் காரில் ஏறிக் கொண்டு புறப்பட்டேன்.
சுந்தரம் கூறியது இன்னும் என் மூளையைக் குழப்பி விட்டது என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா? அவன் சொன்னதே ஒரு வேளை உண்மையாயிருக்குமோ என்றும் சிந்திக்க ஆரம்பித்தேன். எது எப்படியிருந்தாலும் தேவகியிடம் ஒத்துக் கொண்டபடி இன்று சாயங்காலம் அவள் வீட்டுக்குப் போய் அவளையும் குழந்தைகளையும் பொருட்காட்சிக்கு அழைத்துப் போக வேண்டியது. பிறகு எப்படி உசிதமென்று தோன்றுகிறதோ, அப்படி நடந்து கொண்டால் போகிறது.
இவ்விதம் எண்ணமிட்டுக் கொண்டே வீடு சென்றேன். ஆனால் விவரமாகாத ஏதோ ஒரு விஷயம் என் மனதை உறுத்திக் கொண்டிருந்தது. அது என்னவென்று ஆனமட்டும் ஞாபகப்படுத்திக் கொண்டு பார்த்தேன். ஆனாலும் அது ஞாபகத்துக்கு வரவில்லை. 'தொண்டையிலிருக்கிறது வாயில் வரமாட்டேனென்கிறது' என்று சில சமயம் சொல்லுகிறோமல்லவா? அந்த மாதிரி என் உள்ளத்தில் தெளிவில்லாத ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருவது போல் தோன்றி, ஆனால் ஞாபகத்துக்கு வராமல் தொல்லைப்படுத்தியது.
13
[தொகு]அன்று மாலை நான் சிந்தாதிரிப்பேட்டையில் தேவகியின் வீடு சென்ற போது குழந்தைகள் மூன்று பேரும் அழகாக 'டிரஸ்' பண்ணிக் கொண்டு பொருட்காட்சிக்குப் புறப்படச் சித்தமாயிருந்தார்கள். வாசலில் என் மோட்டார் போய் நின்றதும் அவர்கள் "அம்மா! சித்தியா வந்து விட்டார்!" "தாத்தா! கார் வந்து விட்டது!" என்று கோஷமிட்டது என் காதில் விழுந்தது. என்னைப் பார்த்ததும் ஹெட்மாஸ்டர், "வந்து விட்டாயா, கிருஷ்ணசாமி! இவர்களுடைய பேச்சை நான் நம்பவில்லை. நீ வருவாய் என்றே எதிர்பார்க்கவில்லை. வண்டியுடன் வந்தவரையில் விசேஷந்தான்!" என்றார்.
தேவகி சிரித்த முகத்துடன் வந்து என்னை வரவேற்றாள். தேவகியின் இனிமையான தோற்றத்தையும் டாக்டர் சுந்தரம் அவளைப் பற்றிக் கூறியதையும் என் மனதிற்குள் ஒப்பிட்டுப் பார்த்தேன். அவன் கூறியது போல் இவள் பொல்லாத நீலியாக இருக்க முடியுமா, இவளுடைய தொல்லையைப் பொறுக்காமல் இவள் கணவன் தூக்குப் போட்டுக் கொண்டிருக்க முடியுமா என்று வியந்தேன். அவளுடைய கழுத்தின் என் கவனம் சென்றது. இரண்டு மெல்லிய சங்கிலிகள் அவள் கழுத்தை அலங்கரித்தன. ஆனால் அவற்றில் மாங்கலியம் இருக்கிறதா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
தேவகி என்னை வரவேற்ற பின்னர் அவளுடைய தந்தையைப் பார்த்து, "அப்பா! நான் சொன்னேனே, பார்த்தீர்களா? இவர் ஒரு நாளும் வரமாட்டார் என்று நீங்கள் சொன்னீர்களே? யாருடைய வாக்குப் பலித்தது? போகட்டும்; நீங்கள் இன்று நாடகத்துக்கு வரப்போகிறீர்களா, இல்லையா? ஐந்து நிமிஷத்துக்குள் வராவிட்டால் உங்களை விட்டு விட்டு நாங்கள் புறப்பட்டுப் போய் விடுவோம்!" என்றாள்.
"இதோ வந்து விட்டேன், தேவகி! நான் இன்றைக்கு நாடகத்துக்கு வராவிட்டால் அப்புறம் இந்த வீட்டில் இருக்க முடியுமா? எல்லாரும் சேர்ந்து என் பிராணனை வாங்கிவிட மாட்டீர்களா? கொஞ்சம் பொறுங்கள்! இதோ டிரஸ் பண்ணிக் கொண்டு வந்து விடுகிறேன்!" என்று சொல்லிவிட்டுத் தம்முடைய அறைக் கதவைப் படார் என்று சாத்திக் கொண்டார்.
நான் தேவகியைப் பார்த்து "உன்னுடைய அப்பாவுக்கு என் பேரில் உள்ள கோபம் எல்லாம் போய்விட்டதா?" என்று கேட்டேன்.
"என்ன கோபம்?" என்று தேவகி வியப்புடன் கேட்டாள்.
"தண்டாங்கோரை பள்ளிக்கூடத்தில் படித்த போது என் பேரில் அப்பா ஒரு நாள் ரொம்பக் கோபித்துக் கொண்டாரே, ஞாபகம் இல்லையா?"
"அழகாய்த்தானிருக்கிறது. அதையெல்லாம் அப்பா மறந்து போய் எவ்வளவோ நாள் ஆயிற்று. உங்கள் பேரில் அப்பாவுக்கு ரொம்ப அபிமானம். அப்பா அம்மா இரண்டு பேரும் கொஞ்ச நாள் வரையில் உங்களைப் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்கள். அடாடா! நீங்கள் எல்லாரும் அந்த நாளில் உபாத்தியாயர்களிடம் எவ்வளவு பக்தி விசுவாசத்துடன் இருந்தீர்கள்? என்னிடத்திலே கூடத்தான் எவ்வளவு மரியாதையாக இருந்தீர்கள்? இந்தக் காலத்துப் பிள்ளைகளும் இருக்கிறார்களே? கொஞ்சமும் மட்டு மரியாதை இல்லாதவர்கள்! கொஞ்ச நாளைக்கு முன்பு குவீன் மேரிஸ் காலேஜில் நடந்த கார்னிவல் கொண்டாட்டத்தில் ஆண் பிள்ளை மாணாக்கர்கள் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டார்கள் என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களே! இவர்களுந்ந்தான் விழுந்து விழுந்து இங்கிலீஷ் படிக்கிறார்கள்! இங்கிலீஷ் கதைகளில் 'ஷிவல்ரி'யைப் பற்றி எவ்வளவெல்லாம் இருக்கிறது? அதையெல்லாம் இவர்கள் படித்து என்ன பயன்? ஏட்டுச் சுரைக்காய்தான்! நம்முடைய மனுதர்ம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடியாவது இவர்கள் ஸ்திரிகளிடம் பக்தி விசுவாசத்துடன் நடந்து கொள்கிறார்களா? அதுவும் இல்லை. இந்தக் காலத்து மாணாக்கர்களுக்கு இங்கிலீஷ் நாகரிகமும் வரவில்லை; நம்முடைய பழைய தர்மமும் பயன்படவில்லை. இரண்டிலும் உள்ள தீமைகள் மட்டும் இவர்களுக்கு வந்திருக்கின்றன. இதைப் பற்றி அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். தண்டாங்கோரை ஹைஸ்கூலில் நீங்கள் எல்லாரும் அந்த நாளில் என்னிடம் எவ்வளவு மரியாதையாக நடந்து கொண்டீர்கள் என்று அடிக்கடி பாராட்டிப் பேசுவார்!..."
இப்படியாக தேவகி கடல் மடை திறந்தது போல் பிரசங்கம் செய்து கொண்டே போனாள். மூச்சு விடாமல் பேசும் அவளுடைய சுபாவம் இன்னமும் அப்படியேதான் இருந்தது என்று தெரிந்து கொண்டேன். ஆனால் அவள் கூறியதெல்லாம் உண்மையென்று என் மனம் ஒப்பவில்லை. ஏன்? நான் படித்த காலத்திலே கூடப் பெண்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளத் தெரியாத காலிப் பசங்கள் இருக்கத் தான் செய்தார்கள். வைத்தியநாதனும் சுந்தரமும் இருக்கவில்லையா! அதையெல்லாம் மறந்து விட்டு இவள் பிரமாதமாய்ப் பேசிக் கொண்டே போகிறாளே! போனால் போகட்டும்! எனக்கு என்ன வந்தது? அந்தக் கடிதத்தைப் பற்றிய உண்மையை மட்டும் எப்படியாவது தெரிந்து கொள்ள விரும்பினேன். ஆகையால் தேவகியின் பேச்சில் பலவந்தமாகக் குறுக்கிட்டு, "அதெல்லாம் இருக்கட்டும், தேவகி! அந்தக் கடிதத்தைப் பற்றிய உண்மை அப்புறம் தெரிந்ததா?" என்றேன்.
"எந்தக் கடிதம்?" என்று தேவகி தலையைக் கோணலாக வைத்துக் கொண்டு கேட்டாள்.
"எந்தக் கடிதமாவது? உனக்கு நிச்சயம் செய்திருந்த முதல் கலியாணத்தைத் தடைசெய்த கடிதந்தான்!..."
php programmers
"அதுவா?" என்று கேட்டுவிட்டுத் தேவகி கலீரென்று சிரித்தாள். எனக்கோ கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. அந்தக் கடிதத்தினால் நான் அடைந்த துன்பம்தான் எத்தனை? இப்போது நினைத்தாலும் மனம் வெட்கி வேதனை அடைகிறது! ஆனால் இவள் அதைக் குறித்துச் சிரிக்கிறாள்!
சிரிப்பைச் சட்டென்று நடுவில் நிறுத்திவிட்டு, "ஆமாம்; அப்படியானால் அந்தக் கடிதத்தை நீங்கள் எழுதவில்லையா?" என்று கேட்டாள்.
"சத்தியமாய் எழுதவில்லை!" என்று நான் ஆத்திரமாய்க் கூறினேன்.
"அடே அப்பா! அதைப்பற்றி இப்போது என்னத்துக்கு இவ்வளவு ஆத்திரம்? போனது போய்விட்டது. நீங்கள் அதை எழுதவில்லை யென்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு அவ்வளவு தைரியம் இல்லையென்பதும் எனக்குத் தெரியும். ஆகையால் நானே எழுதிவிட்டேன்!" என்று தேவகி ஒரு அணுகுண்டைப் போட்டாள்.
"நீ எழுதினாயா! நீயா எழுதினாய்? அப்படியானால் என் பேரில் பழி சொன்னாயே, ஏன்?" என்று மேலும் ஆத்திரத்துடன் கேட்டேன்.
"அது ஒரு காரியத்துக்காக எழுதினேன். ஒரு காரியம் என்ன? உண்மையைச் சொல்லி விடுகிறேனே! எனக்கு அப்பா நிச்சயம் செய்திருந்த கலியாணம் பிடிக்காததால் எழுதினேன். அப்பா கோபித்துக் கொண்ட போது உங்கள் பேரில் பழியைப் போட்டு வைத்தேன். அந்தச் சமயத்துக்கு அப்படிச் சொல்ல வேண்டியிருந்தது. அப்புறம் அப்பாவின் கோபம் தணிந்த பிறகு உண்மையை ஒப்புக் கொண்டேன். அதற்குள் நீங்கள் போயே போய் விட்டீர்கள். அதற்கு நான் என்ன செய்கிறது!" என்றாள் தேவகி.
என் மனம் அப்போது ஒரு பக்கம் கோபத்தினாலும் ஒரு பக்கம் பச்சாத்தாபத்தினாலும் குழப்பம் அடைந்தது. அந்தக் கலியாணம் பிடிக்கவில்லையென்றால், வேறு யாரிடமாவது இவளுடைய மனம் சென்றிருந்ததா? அது ஒருவேளை நானாகவே இருக்குமா? அவசரப்பட்டு மனம் வெறுத்து ஊரை விட்டுப் போனதினால் என் வாணாளையே பாழாக்கிக் கொண்டேனா?
அப்படி எண்ணியபோது தேவகியை மணம் செய்து கொள்ளாதது என் அதிர்ஷ்டந்தான் என்று டாக்டர் சுந்தரம் கூறியது நினைவு வந்தது. இவள் யாரோ ஒருவனைக் கலியாணம் செய்து கொண்டு தானே இருக்க வேண்டும்? அவன் யார்? அவனுடைய கதி என்ன? டாக்டர் சுந்தரம் சொன்னதுபோல் அவன் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்தானா? அல்லது அந்த வீட்டு மாடி ஜன்னல் வழியாகப் பார்த்த பைத்தியந்தான் இவளுடைய புருஷனா? புருஷனுடைய நிலைமை அப்படியிருக்கும்போது இவள் பொருட்காட்சிக்கு நாடகம் பார்க்கப் புறப்படுகிறாளே? இதை என்னவென்று சொல்வது? இவள்தான் இப்படி என்றால், இவள் தகப்பனாரும் அல்லவா ஒத்துக்கு மத்தளம் போடுகிறார்!
அவளுடைய புருஷனைப் பற்றியும் அந்த வீட்டு மாடிமேல் உள்ள ஆளைப் பற்றியும் தேவகியைக் கேட்பதற்கு மனதைத் திடப்படுத்திக் கொண்டேன். ஆனால் அந்தச் சமயத்தில் ஹெட்மாஸ்டர் கோட்டு, தலைப்பாகை முதலியவை அணிந்து கொண்டு புறப்படத் தயாராக வந்து விட்டார். எனவே ஒன்றும் கேட்க முடியவில்லை.
வாசலில் காரில் ஏறி உட்கார்ந்த பிறகு என் கண்கள் மட்டும் மேலே மச்சு ஜன்னலை உற்று நோக்கின. அங்கே இப்போது அந்தப் பயங்கர முகத்தைக் காணவில்லை.
பாவம்! அந்தப் பைத்தியத்தை உள் அறையில் போட்டுப் பூட்டி விட்டார்களோ, என்னமோ? அல்லது அதனால் தொந்தரவாயிருக்கிறதென்று பைத்திய ஆஸ்பத்திரிக்கு அப்புறம் அனுப்பி விட்டார்களோ, என்னமோ! இருந்தாலும் இந்தத் தேவகியைப் போல் இருதயமற்ற ஸ்திரீயை உலகத்திலேயே காண முடியாது! இவளுடைய வலையில் நான் விழாமல் தப்பியது நான் செய்த புண்ணியந்தான். சீச்சீ! இது என்ன கேவலமான எண்ணம்! துர்ப்பாக்கியசாலியான தேவகியை நாமும் சேர்ந்து நிந்திக்க வேண்டுமா? இவளுக்கு நேர்ந்த கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு வேளை நானே காரணமாயிருந்திருக்கலாம். அப்படி அவசரப்பட்டுக் கொண்டு தண்டாங்கோரையை விட்டு நான் புறப்படாதிருந்தால், இவளுடைய வாழ்க்கையே வேறு விதமாயிருந்திருக்கலாம் என்னுடைய வாழ்க்கையுங் கூடத்தான்!...
இத்தகைய எண்ணங்கள் என் மனத்தை அலைத்துக் கொண்டேயிருக்கையில் பொருட்காட்சியும் வந்துவிட்டது. தேவகி முதலியவர்கள் காரிலிருந்து அவசர அவசரமாக இறங்கினார்கள். நாடகமேடை மைதானத்துக்குப் போவதில் அவர்களுக்கிருந்த பரபரப்பைச் சொல்லி முடியாது.
நான் வண்டியிலிருந்து இறங்காமலிருப்பதைக் கண்ட தேவகி "நாடகம் பார்க்க நீங்கள் வர வில்லையா?" என்று கேட்டாள்.
"நீங்கள் போய் இடம் பிடித்துக் கொண்டு உட்காருங்கள். எனக்குக் கொஞ்சம் காரியம் இருக்கிறது. பார்த்து விட்டுப் பிறகு வந்து விடுகிறேன்!" என்றேன்.
"திரும்பி வீட்டுக்குப் போவதற்கு எங்களைத் திண்டாட விட்டு விடாதீர்கள்!" என்றாள் தேவகி.
"அப்படியெல்லாம் செய்வேனா? கட்டாயம் வந்து உங்களை அழைத்துப் போகிறேன்!" என்றேன்.
"அவசியம் நீங்கள் வந்து நாடகத்தையும் பார்க்க வேண்டும். இன்று நாடகம் ரொம்ப நன்றாயிருக்குமாம்!" என்று சொல்லிக் கொண்டே தேவகி விரைவாக நடந்தாள். அவளைத் தொடர்ந்து மற்றவர்களும் போனார்கள்.
14
[தொகு]எனக்கு நாடகம், ஸினிமா என்றாலே அவ்வளவாகப் பிடிப்பதில்லை. அதிலும் அன்றைக்கு என் மனோ நிலைமை நாடகம் பார்த்து ரஸிப்பதற்கு அனுகூலமாக இல்லை. உண்மையாகவே காரியமும் கொஞ்சம் இருந்தது. அதை முடித்துவிட்டு இரவு ஏழரை மணிக்குத் திரும்பவும் பொருட்காட்சி மைதானத்துக்குப் போனேன். நாடகம் இன்னும் நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்க்க ஏராளமான கூட்டம். அத்தனை ஆயிரம் பேரும் நாடகப் பைத்தியம் பிடித்தவர்கள் என்ற எண்ணமே எனக்கு வியப்பு அளித்தது. அந்தப் பெருங் கூட்டத்தின் ஒரு ஓரத்தில் நின்று நாடக மேடையைக் கவனித்தேன்.
அச்சமயத்தில் நாடக மேடையிலும் ஒரு பைத்தியம் நின்று கொண்டிருந்தது! கோரமான முகத்துடனும் கோரணிகளுடனும் அந்தப் பைத்தியம் ஏதேதோ பயங்கரமாகக் கத்திக் கொண்டிருந்தது. அந்தக் கத்தலின் கோரமானது ஒலிபெருக்கியின் மூலம் வந்தபோது இன்னும் அதிக கோரமாய் ஒலித்தது. முதலில் சற்று நேரம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்புறம் சற்றுப் புரிந்தது. நாடக மேடையில் ஒரு பாழடைந்த வீட்டில் நின்று அந்தப் பைத்தியக்காரன் சத்த மிட்டான். அந்த வீட்டில் ஒரு காலத்தில் வசித்திருந்த அவனுடைய மனைவி மக்களை எண்ணிப் புலம்புவதாகத் தோன்றியது.
தேவகியும் அவள் தகப்பனாரும் குழந்தைகளும் கூட்டத்தில் எங்கே இருக்கிறார்கள் என்று பார்த்தேன். நாடக மேடைக்கு வெகு சமீபத்தில் அவர்கள் காணப்பட்டார்கள். கடவுளே! இவர்களுடைய புத்தியை என்னவென்று சொல்வது? வீட்டிலேயே ஒரு பைத்தியத்தை வைத்துக் கொண்டு இங்கே நாடகத்திலும் பைத்தியத்தைப் பார்க்க இவர்கள் வந்தார்களே? இந்த இலட்சணத்தில் எனக்குக்கூட "ரொம்ப நல்ல நாடகம்; பார்க்கத் தவற வேண்டாம்!" என்று எச்சரித்தார்களே! இவர்களுடைய கல் நெஞ்சையும் ராட்சத குணத்தையும் என்ன வென்று சொல்லுவது?
பிறகு நாடக மேடையில் நடந்த துரிதமான சம்பவங்கள் எனக்கு மேலும் மேலும் வியப்பை அளித்தன.
அந்தப் பைத்தியக்காரன் அந்தப் பாழும் வீட்டின் விட்டத்தில் ஒரு கயிற்றை மாட்டி அதில் தூக்கிட்டுக் கொள்ள முயன்றான். அப்போது விட்டம் திடீரென்று முறிந்து அவன் தலையில் விழுந்தது! அச்சமயம் யாரோ ஒரு ஸ்திரீ தலை தெறிக்க ஓடி வந்து கீழே கிடந்த பைத்தியக்காரனைக் கட்டிக் கொண்டு அழுதாள். இத்துடன் அக் காட்சி முடிவடைந்தது.
அடுத்த காட்சியில் அந்தப் பைத்தியக்காரன் ஒரு ஆஸ்பத்திரிப் படுக்கையில் கிடந்தான். அவனுக்குச் சுயப் பிரக்ஞை வரப் போகிறது என்று டாக்டர் சொன்னார். பிரக்ஞை வந்ததும் அவன் முன்போல் பைத்தியம் போல் கூச்சலிடாமல் சாவதானமாகப் பேசினான். அவன் அருகில் இருந்த ஸ்திரீ "இப்போது ஹைதராபாத்தில் ரஸாக்கியர் ஆட்சி இல்லை. நைஜாம் ராஜ்யம் சுதந்திர இந்தியாவோடு சேர்ந்து விட்டது!" என்று சொன்னாள். உடனே அவன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து உற்சாகமாகப் பேசினான். அவனும் அந்த ஸ்திரீயும் சிறிது நேரம் கொஞ்சிக் குலாவினார்கள்.
பிறகு நாடக மேடையில் இருபது முப்பது பேர் கூட்டமாய் நின்று,
"கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே!"
என்று பாடினார்கள். பிறகு திரை விழுந்தது. நாடகமும் முடிந்தது.
இதெல்லாம் என் மனதில் எவ்வளவு குழப்பத்தை உண்டாக்கியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா? தேவகி முதலியவர்கள் என்னிடம் சொன்னதற்கும் இந்த நாடக நிகழ்ச்சிகளுக்கும் இருந்த பொருத்தம் எப்படி ஏற்பட்டது? தற்செயலாக ஏற்பட்டதா? அல்லது... அல்லது...
யோசிக்க யோசிக்கக் குழப்பம் அதிகமேயாயிற்று. அந்தக் குழப்பத்துக்கிடையே தேவகியும் அவளுடைய குழந்தைகளும் நின்ற இடத்தைக் கண்டு பிடித்து அங்கே போய்ச் சேர்ந்தேன். நாடகம் பிரமாதம் என்பதாகச் சிலாகித்துப் பேசிக் கொண்டே அவர்கள் என்னைப் பின் தொடர்ந்து வந்து காரிலும் ஏறிக் கொண்டார்கள். என்னிடம் அவர்கள் அபிப்பிராயம் கேட்டபோது நானும் "நாடகம் நன்றாயிருந்தது!" என்று சொல்லி வைத்தேன். வீட்டுக்குப் போனதும் எல்லாச் சந்தேகங்களையும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு விடுவது என்று தீர்மானித்தேன்.
ஆனால் வீடுவந்து சேர்ந்து அவர்கள் எல்லாருடனும் நானும் உள்ளே போனதும் ஒன்றுமே கேட்க எனக்கு மனம் வரவில்லை. என்னத்தைக் கேட்பது? எப்படிக் கேட்பது? எது கேட்டாலும் அசட்டுப் பட்டம் எனக்கு வந்து சேரும் என்று தோன்றியது.
ஆகவே விடைபெற்றுக் கொண்டு போக எண்ணி, "நான் போய் வரட்டுமா?" என்றேன்.
"நன்றாயிருக்கிறது. அதற்குள்ளே போகிறதாவது? இவர்களுடைய அப்பா இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார். அவரையும் பார்த்துவிட்டுச் சாப்பிட்டு விட்டுப் போகலாம்!" என்றாள் தேவகி.
"இவர்களுடைய அப்பாவா? அது யார்?" என்று கேட்டேன்.
"இன்னும் உங்களுக்குத் தெரியவில்லையா, என்ன? தெரிந்துகொண்டு விட்டீர்கள் என்றல்லவா இருந்தேன்? இன்று நாடகத்தில் 'ஹீரோ'வாக நடித்தவர்தான்!" என்றாள் தேவகி.
"அப்படியா? முந்தாநாள் நான் கேட்டபோது ஏதோ ஹைதராபாத்தில் நடந்ததாகச் சொன்னாயே?"
"ஆமாம்; அதுவுந்தான் நாடகத்தில் வந்ததே! நான் சொன்னபடியே அவரைக் கறுப்பு முகமூடி அணிந்த ரஸாக்கர்கள் வந்து அழைத்துப் போனார்களே?" என்றாள் தேவகி.
"அப்படியானால் முந்தாநாள் இந்த வீட்டு மச்சுமேல் இருந்தவர்?..."
"அவரேதான்! முந்தாநாள் நீங்கள் வந்திருந்தபோது மச்சுமேல் கடைசி ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. வேஷம் கூடப் போட்டுப் பார்த்துக் கொண்டார்கள். அதனாலேதான் உங்களை இவரால் பார்த்துப் பேச முடியவில்லை. 'யாருக்கும் சொல்லக் கூடாது' என்று கண்டிப்பாக உத்தரவு போட்டிருந்தார்! நான் சொன்னதை யெல்லாம் நீங்கள் நிஜம் என்றே நினைத்துக் கொண்டீர்களா, என்ன?"
எனக்கு அளவில்லாத கோபம் வந்தது. பொய்யும் சொல்லிவிட்டு அதை நம்பியதற்காக என் பேரில் குற்றமும் அல்லவா சொல்கிறாள்? அழகாயிருக்கிறது காரியம்!
இந்தச் சமயத்தில், உள்ளே உடுப்பைக் கழற்றி வைப்பதற்காகப் போயிருந்த ஹெட்மாஸ்டர் வந்தார்.
"அப்பா! இவரிடம் முந்தாநாள் நீங்கள் உண்மையைச் சொல்லவில்லையா?" என்று தேவகி கேட்டாள்.
"சொல்லாமல் என்ன? முக்காலே மூன்று வீசம் உண்மையைத்தான் சொன்னேன். உன் புருஷன் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருப்பதாகச் சொன்னேன். இந்த வீடு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்லையென்று யார் சொல்லுவார்கள்? இல்லாவிட்டால் இப்படிப்பட்ட அழகான நாடகத்தைப் போட உன்னுடைய புருஷனுக்குத் தோன்றியிருக்குமா!" என்றார் பத்மநாப ஐயங்கார்.
அவர் சொன்னபடி இந்த வீடு பைத்தியக்கார ஆஸ்பத்திரியோ, என்னமோ! ஆனால் இங்கு வந்ததின் பலன் என்னை இவர்கள் பைத்தியமாக அடித்து விட்டார்கள் என்பது நிச்சயம்! என்னுடைய இந்த அபிப்பிராயத்தை உறுதிப் படுத்துவதற்கு அப்போது இன்னொரு சம்பவம் நேர்ந்தது. வாசலில் சைக்கிள் மணிச் சத்தம் கேட்டது.
"அப்பா வந்துவிட்டார்!" என்று குழந்தைகள் குதித்தார்கள்.
ஆம்; அடுத்த நிமிஷம் அவர்களுடைய அப்பா வீட்டுக்குள் பிரவேசித்தார். அந்த அப்பா யார் என்று நினைக்கிறீர்கள்? பிரபல ஆயுர்வேத வைத்தியரான டாக்டர் சுந்தரம் எல்.ஐ.எம். அவர்கள்தான்!
அன்று காலையில் டாக்டர் சுந்தரத்தின் மருத்துவ சாலையில் அவனை விட்டுப் பிரிந்த போது ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றும் ஞாபகத்திற்கு வரவில்லையென்று சொன்னேன் அல்லவா? அது என்னவென்று இப்போது பளீர் என்று நினைவு வந்தது. அந்த வீட்டு ரேழியில் முந்தா நாள் என் காலில் தடுக்கிக் காயப்படுத்திய அதே சைக்கிள் தான் டாக்டர் சுந்தரத்தின் மருத்துவ சாலையிலும் இருந்தது. அசோக சக்கரக்கொடி இரண்டிலும் இருந்தது என்பது இப்போது நினைவுக்கு வந்தது.
டாக்டர் சுந்தரம் என்னைப் பார்த்ததும், "ஹலோ! கிருஷ்ணசாமி! இந்த வீட்டுப் பக்கமே வராதே என்று சொன்னேனே, அதை உண்மையாக எடுத்துக் கொண்டு விடுவாயோ என்று பயந்து போனேன். நீ வந்தது பற்றி ரொம்ப சந்தோஷம். நாடகம் எப்படி இருந்தது? உனக்குப் பிடித்திருந்ததா?" என்று கேட்டான்.
நான் பதில் சொல்வதற்குள் குழந்தைகள் "ரொம்ப நன்றாயிருந்தது, அப்பா!" என்று கூச்சலிட்டார்கள்.
தேவகி சுந்தரத்தைப் பார்த்து, "போதும், போதும்! இந்த மாதிரி அசந்தர்ப்ப நாடகத்தை இனிமேல் நீங்கள் போடவே வேண்டாம். எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. நீங்கள் பைத்தியமாக நடித்தபோது உண்மையிலேயே உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று எனக்குப் பயமாய்ப் போய்விட்டது. அப்புறம் யாரோ ஒரு தடியன் புடவையைக் கட்டிக் கொண்டு வந்து உங்களைப் 'பிராண நாதா!' என்று அழைத்தபோது எனக்குச் சகிக்கவேயில்லை. இந்த மாதிரி நாடகம் போடவில்லையென்று யார் அழுதார்கள்?" என்றாள்.
அப்போது சுந்தரம் தேவகியின் தகப்பனாரைப் பார்த்து, "பாருங்கள், மாமா! இந்த அழகான கதையைக் கற்பனை செய்து கொடுத்ததே இவள்! இப்போது என் பேரில் குற்றம் சொல்கிறாள்! இதற்கு நான் என்ன செய்கிறது?" என்றான்.
இந்தச் சமயத்தில் நான், "ஆமாம்; உன் மனைவிக்கு அந்த நாளிலிருந்தே இது வழக்கந்தானே? தான் செய்த காரியத்துக்குப் பழியைப் பிறர் தலையில் போடுவது?" என்றேன்.
சுந்தரம் என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தான். "ஓகோ! அந்த போர்ஜரி கடிதத்தைப் பற்றிச் சொல்கிறாயோ? அது தேவகி மட்டும் செய்ததில்லை; அவளும் நானும் சேர்ந்து யோசனை செய்து பண்ணிய காரியந்தான். அதை இன்னும் நீ மறக்கவில்லையா?" என்றான்.
"விஷயமே எனக்கு இப்போதுதானே தெரிந்தது? இனிமேல் மறந்துவிடவேண்டியதுதான்" என்றேன்.
ஹெட்மாஸ்டர் அப்போது, "சுந்தரம்! நியாயமாக நீயும் தேவகியும் கிருஷ்ணசாமியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும். நீங்கள் என்னை ஏமாற்றியதாவது போகட்டும். தேவகிக்கு இஷ்டமில்லாத இடத்தில் கலியாணம் நிச்சயம் செய்தது என்னுடைய பிசகு. அதனால் நான் அடைந்த தொந்தரவுக்கு உங்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. ஆனால் கிருஷ்ணசாமியின் பேரில் பழியைப் போட்டீர்களே? அது ரொம்ப அநியாயம்! எத்தனை வருஷமாகியும் அது இன்னும் அவன் மனதில் உறுத்திக் கொண்டிருக்கிறது! நீங்கள் அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளாவிட்டால் உங்களுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்!" என்றார்.
"இதெல்லாம் ஒன்றும் வேண்டியதில்லை, ஸார்! யார் யாரை மன்னிக்கிறது?" என்றேன் நான். ஹெட்மாஸ்டரின் வார்த்தைகள் என்னை உருக்கிவிட்டன.
"ஆமாம், அப்பா! அவர் அப்படியெல்லாம் மனதில் ஒன்றை வைத்துக் கொள்கிறவர் அல்ல, அவருடைய நல்ல சுபாவம் அப்போதே நமக்குத் தெரியுமே?" என்றாள் தேவகி.
"மனதில் கோபம் வைத்துக் கொள்கிறவனாயிருந்தால் இன்றைக்கு இந்தச் சந்து வீட்டைத் தேடி வந்திருப்பானா? நான் அவ்வளவு அவனைப் பயமுறுத்தியிருந்துங்கூட!" என்றான் சுந்தரம்.
"சுந்தரம்! மற்ற எதைப்பற்றியும் எனக்குக் கோபம் இல்லை. ஆனால் தேவகியின் தொல்லையைப் பொறுக்காமல் அவளுடைய புருஷன் தூக்குப்போட்டுக் கொண்டான் என்று சொன்னாயே, அதை மட்டும் நான் மறக்க முடியாது!" என்றேன்.
"ஆம், அப்பா, கிருஷ்ணசாமி! உன்னிடம் சொன்னதை நிறைவேற்றலாம் என்றுதான் பார்த்தேன். தூக்குப் போட்டுக்கொள்ள முயன்ற போது விட்டம் முறிந்து என் தலையில் விழுந்தால் அதற்கு நான் என்னத்தைச் செய்கிறது? என் பேரில் வஞ்சனை இல்லை!" என்றான் சுந்தரம்.
"போதும் இந்தப் பேச்சு! முகத்தில் இன்னும் கொஞ்சம் பைத்தியக் களை இருக்கிறது! குழாயடிக்குச் சென்று முகத்தை நன்றாய் சோப்புப் போட்டுத் தேய்த்து அலம்பி விட்டு வாருங்கள்! அதற்குள் நான் இலையைப் போடுகிறேன்" என்றாள் தேவகி.
"இன்றைக்கு இந்த வீட்டில் சாப்பாடுகூட உண்டா? தளிகை யார் செய்தார்கள்!" என்றான் சுந்தரம்.
"நாடகத்திற்குப் புறப்படுவதற்கு முன்பே தளிகை செய்து வைத்து விட்டுத்தான் கிளம்பினேன். புளியோதரை செய்திருக்கிறேன். கிருஷ்ணசாமி! உங்களுக்குக் கூடப் புளியோதரை பிடிக்குமே? அம்மா செய்து போட்டால் ஆசையோடு சாப்பிடுவீர்களே!" என்றாள் தேவகி.
அப்போது தேவகியின் தாயார் ரங்கநாயகி அம்மாளைப்பற்றிய ஞாபகங்கள் என் மனதில் பொங்கி எழுந்தன. அடாடா! எத்தனை அன்பு! எவ்வளவு அபிமானம்! அந்த அம்மாள் கையினால் பாகம் செய்த புளியோதரை, திருக்கண்ணமுது முதலியவைகளை எவ்வளவு ஆசையோடு அந்த நாளில் சாப்பிட்டிருக்கிறேன்!
"எனக்குப் புளியோதரை பிடிக்கும் என்பது வாஸ்தவந்தான். ஆனால் இன்றைக்கு வேண்டாம். வீட்டுக்குப் போகவேண்டும்" என்று சொல்லிக் கொண்டு கிளம்பினேன்.
"அப்படியானால் இன்னொரு நாள் சாப்பிடுவதற்குக் கட்டாயம் வரவேண்டும்" என்றாள் தேவகி.
"ஆம், அப்பா! பழைய சிநேகத்தை மறந்து விடாதே! அடிக்கடி வந்து கொண்டிரு!" என்றான் சுந்தரம்.
அவனுடைய அழைப்பை ஹெட்மாஸ்டரும் ஆமோதித்தார். "கிருஷ்ணசாமி! இன்னொரு நாள் வந்தால் உனக்கு யோகாசனத்தைப் பற்றி எல்லாம் சொல்கிறேன்!" என்றார்.
"அவர் சொல்வது ஒன்றையும் நீ நம்பாதே! யோகாசனத்தின் மகிமையைப் பற்றி அவர் பிரமாதமாகப் பிரசங்கம் செய்வார். அவருடைய அலமாரியில் பார்த்தால் ஐந்தாறு வித லேகியம் வைத்திருப்பார். நீ ஒருநாள் என்னுடைய டிஸ்பென்ஸரிக்கு வா! ஆறு மாதம் சியவனப்பிராஸ லேகியத்தைச் சாப்பிட்டுப் பார்!" என்றான் சுந்தரம்.
"அவர் கிடக்கிறார்! நீங்கள் மருந்துக் கடைக்குப் போக வேண்டாம். இங்கே வாருங்கள்!" என்றாள் தேவகி.
குழந்தைகள், "சித்தியா! நாளைக்கு வந்து எங்களைக் காரில் ஏற்றிக் கொண்டு பீச்சுக்கு அழைத்துப் போங்கள்!" என்றன.
"ஆகட்டும்! இன்னொரு நாள் அவசியம் வருகிறேன்!" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.
காரில் ஏறி உட்கார்ந்ததும், "இந்தச் சிந்தாதிரிப்பேட்டைப் பக்கமே இனிமேல் தலைகாட்டுவதில்லை!" என்று எண்ணிக்கொண்டேன்.
எல்லாருமாகச் சேர்ந்து எனக்கு அசட்டுப் பட்டம் கட்டிப் பைத்தியமாக அடித்து விட்டார்களே?
போனால் போகட்டும்! எப்படியாவது அவர்கள் சௌக்யமாக இருந்தால் சரி. தேவகியும் அவளுடைய கணவனும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அதுதான் வேண்டியது. ஹெட்மாஸ்டரும் உற்சாகமாக இருக்கிறார். வேறு என்ன வேண்டும்?
வெள்ளிய நிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது. பனியினால் உலகமே குளிர்ந்திருந்தது.
பழைய நினைவுகள் குமுறிக் கொண்டு வந்தன. கடைசியாக, இந்தச் சுந்தரமா தேவகியைக் கலியாணம் செய்து கொண்டான்? என்னையும் வைத்தியநாதனையும் அடிக்கடி சண்டை மூட்டி விட்டு இவன் பரம சாதுவைப் போல் நடித்தவன் அல்லவா? அந்த நடிப்புத் திறமைதான் இன்றைக்கு அவனிடம் பிரகாசிக்கிறது! பொல்லாத அமுக்கன்!
ஏதோ போகட்டும்! தேவகி தன் மனதுக்கொத்த புருஷனை மணந்து திருப்தியாக இருக்கிறாள் அல்லவா? அதுதான் வேண்டியது.
அன்று வரை நான் அறியாத மன நிம்மதியை அன்று கண்டேன்.
அந்த நிம்மதியைக் குலைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. ஆகையினாலேயே சிந்தாதிரிப்பேட்டைக்கு அப்புறம் நான் போகவில்லை. இந்த வருஷத்துப் பொருட்காட்சிக்குக் கூடப் போகவில்லை.
தேவகியின் வாழ்க்கை இப்படியே நீடித்துச் சந்தோஷமாயிருக்கும்படி பெருமாள் அருள் புரியட்டும்.
'கல்கி வார இதழ் 12-5-50 - 12-3-50'