தேவிக்குளம் பீர்மேடு/தேவிகுளம்-பீர்மேடு

விக்கிமூலம் இலிருந்து

தேவிகுளம்-பீர்மேடு

ட்டசபையில், தேவிகுளம் - பீர்மேடு பற்றிய விவாதத்தில் எங்கள் பேச்சுக்களையும், வாக்கெடுப்பில் எங்கள் நடுநிலைமை வகிப்பையும், பல கட்சியினரும் பத்திரிகையாளர்களும் அவரவர் கோணத்திலிருந்து காரசாரமாக விமர்சனம் செய்துள்ளனர். எழுதுகோலை நெருப்பிலும் கசப்பிலும் தோய்த்து, கண்டனக்கணைகளை விடுத்துள்ளனர்.

சீரமைப்புக் குழுவின் சிபார்சின்மீது விவாதத்தைத் தொடங்கி வைத்தவன் நான். எனது பேச்சின் இறுதியில் நிதி அமைச்சர் தேவிகுளம் - பீர்மேடு நமக்கு என்கிறீர்களா? அல்லது மலையாளிகளுக்கு என்கிறீர்களா? உங்கள் பேச்சு முன்னே பார்த்தால் ராவுத்தர் குதிரை, பின்னே பார்த்தால் செட்டியார் குதிரை என்பது போலல்லவா இருக்கிறது! ஒன்றும் புரியவில்லையே' என்று விமர்சித்தார். ராஜா சர்.முத்தையா செட்டியார் "ஆம் அல்லது இல்லை என்று இரண்டில் ஒன்று சொல்லுங்கள் என்று என்னை நெருக்கினார். "சட்டசபைக்கு வெளியில் பல காங்கிரஸ் நண்பர்களும் ஏனையோரும் இரண்டில் ஒன்று பதில் சொல்லுங்கள்" என்றே திரும்பத் திரும்ப கேட்டார்கள். வாக்கெடுப்பு நடந்த, தேவிகுளம் - பீர்மேடு திருத்தம் கொண்டுவந்த ஆர்.வி.சுவாமிநாதன் பேசும்போதும், "ஜீவானந்தம் 'வெட்டொன்று துண்டிரண்டு' என்றே பேசும் பழக்கமுடையவர். ஆனால், தேவிகுளம் - பீர்மேட்டைப் பொறுத்தமட்டில் வழவழா கொழகொழா என்று பேசினார் " என்று குற்றம் சாட்டினார்.

எதிர்ப்புக் கணைகள்

நானும் தோழர் ராமமூர்த்தியும் இதுபற்றி இறுத்த பதிலை "விடுதலை" பத்திரிகை "வெண்டைக்காய் பதில் " என்று தலையங்கம் தீட்டிக் கிண்டல் செய்திருக்கிறது. பலகாலும் தமிழ்நாடு கம்யூனிஸ்டுகளுக்காக 'பரிதாபக் கண்ணீர்' வடித்து வந்திருக்கிற ஈ.வெ.ரா.வின் "விடுதலை" அந்தத் தலையங்கத்திலும் தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்டுகளின் "இருதலைக்கொள்ளி எறும்பு நிலைமை"யைக் கண்டு, கசிந்துருகி, ஒரு குடம் பரிதாபக் கண்ணீர் வடித்திருக்கிறது.

தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யின் "செங்கோல் - தமிழன்", காங்கிரஸ், தி.க., தி.மு.க. தலைவர்களை தேவிகுளம்- பீர்மேட்டைப் பொறுத்தவரையில் சந்தர்ப்பக் கூத்தாடிகள் என்று எடுத்துக் காட்டிவிட்டு, நானும் ராமமூர்த்தியும் சட்டசபையில் பேசிய பேச்சு "புரியாத புதிராக" இருக்கிறது என்று கூறி, எல்லைப் பிரச்னையில் எங்களுக்குள்ள"விளங்காமை"யை நையாண்டி பண்ணுகிறார் அவருடைய தம்பிமார்களில் சிலர், எங்களுடைய 'நடுநிலை'மையைக் கண்டு மனம் பொங்கி மதர்ந்து கிளர்ந்து, நிதானம் தாண்டிய 'தமிழரசு'ப் பக்தி ஆவேசத்தோடு, "இனத்துரோகிகள்", "தமிழினத்தை அடகு வைக்கும் அரும்பணியாளர்கள்", "தமிழகத்து மாஸ்கோவாதிகள்", "காங்கிரஸ்காரர்களைவிடப் பிற்போக்காளர்கள் "அண்ணாத்துரைக் கும்பலைவிடக் கீழ்த்தரமானவர்கள்", "மலையாளிகளுக்கே கொடுத்துவிடலாமென்று ஈ.வே.ரா.வின் பாதையில் நடை போடுகிறவர்கள்", "மட்டமான கோழைகள்", "அபிப்பிராயத்தை வெளியிடும் தைரியமற்ற பூனைகள்" என்றெல்லாம் எங்களுக்கு 'சாட்டை' அடி கொடுத்து அர்ச்சித்திருக்கிறார்கள்.

தேவிகுளம் - பீர்மேடு தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளர் ராமய்யா என்பவர், எங்களின் 'நடுநிலைமை வகிப்பு' பிடிக்காமல் வெகுண்டெழுந்து, நான் அவரிடம் 'ரகசியத்தில் கொடுத்த வாக்குறுதி'யை சந்திக்கிழுத்து, கம்யூனிஸ்டுகளின் "துரோகத்திற்கு" "தகுந்த பாடம் கற்றுக்கொடுங்கள்" என்று தாயகத்திலுள்ள தொழிலாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் பத்திரிகைகள் மூலம் அறிக்கை விடுத்திருக்கிறார். தி.மு.க.வின் தினசரியான ‘நம் நாடு'ம், ராமய்யாவின் அறிக்கையை பிடித்துத் தொங்கிக்கொண்டு, 'சந்தடி சாக்கில் கந்தப்பொடி கால் பணம்' என்ற மனப்பான்மையில் 'கம்யூனிஸ்டுகளிழைத்த துரோகம்' என்று முன் பக்கத்தில் கொட்டை எழுத்தில் தலைப்புக் கட்டி பிரசுரித்து எங்களை வாழ்த்தி மகிழ்ச்சி கொண்டாடியிருக்கிறது.

காட்டும் காரணம்

இந்த விஷயத்தில் கோயங்காவின் 'தினமணிக் கதிரும்' எங்களுடைய தமிழ்ப்பற்று வரட்சியை எடுத்துக்காட்டி, வழக்கம்போல் கம்யூனிஸ்ட் சங்கார நடனத்தை நடத்தியிருக்கிறது.

இத்தகைய எதிர்ப்புக்கும் கண்டனங்களுக்கும் காரணம் என்ன தேவிகுளம், பீர்மேடு இரு தாலூகாக்களும் சென்னை ராஜ்யத்தோடு சேர்க்கப்பட வேண்டுமென்ற திருத்தம் சட்டசபையில் ஓட்டுக்கு விடப்பட்டபொழுது, கம்யூனிஸ்டுகள் நீங்கலாக எல்லா தமிழ்நாடு கன்னட அங்கத்தினர்களும் ஆதரித்தார்கள். கம்யூனிஸ்ட் நீங்கலாக எல்லா மலையாள அங்கத்தினர்களும் எதிர்த்தார்கள். கம்யூனிஸ்ட் அங்கத்தினர்கள் மட்டும் நடுநிலைமை வகித்தோம். இதுதான் காரணம்.

எங்கள் நிலை என்ன?

1. எல்லைப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்க, கம்யூனிஸ்ட்டு கட்சியின் திருத்தமாக, ராமமூர்த்தி ஒரு திருத்தம் கொடுத்தார். அதில் இரண்டு அடிப்படை கொள்கைகளைக் குறிப்பிட்டோம். ஒன்று எல்லை வகுப்பதில் கிராமத்தை அடிப்படை உறுப்பாகக் கொள்ள வேண்டும். இரண்டு, கிராமத்தில் பெரும்பான்மை மக்கள் பேசுகிற மொழியையும், அந்தக் கிராமம் எல்லையை ஒட்டி இருக்கிறதா என்பதையும் கவனித்து எந்த ராஜ்ஜியத்தில் சேரவேண்டுமென்று முடிவு செய்யவேண்டும். இந்த இரண்டு கொள்கைகளும் நியாயமானவை என்றும், தாலுகாவை உறுப்பாகக் கொள்வது எல்லைப் பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்க்காது என்றும் 23-11-55 'தினமணி' தலையங்கம்கூட ஒப்புக்கொள்கிறது.

ஆறுகள் விஷயமென்ன?

தேவிகுளம் - பீர்மேட்டைப் பொறுத்தமட்டில் இந்த இரண்டு அடிப்படைகளோடு, மூன்றாவதொரு அடிப்படையையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்கிறோம். அது என்ன? தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்களில் உற்பத்தியாகும் ஆறுகளின் தண்ணீர் கேரளத்தின் நீர்ப்பாசனத்திற்கும் மின்சார உற்பத்திக்கும் நியாயமாக உபயோகப்படுவதற்கும் அந்தப் பிரதேசத்திலிருந்து திரு -கொச்சி அசாங்கத்திற்கு கிடைத்துவரும் வருமானத்தில் நியாயமான பங்கை உபயோகிப்பதற்கும் உரிய ஏற்பாட்டைச் செய்யவேண்டும் என்பதுதான்.

ஏன் இந்த மூன்றாவது அம்சத்தைச் சிறப்பாகக் கூறுகிறோம்? தேவிகுளம் - பீர்மேடு உரிமைபற்றிக் கடுமையான கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டிருக்கின்றன. மலையாள மக்கள், தமிழ் மக்களிடையில் விரோத குரோதங்கள் இது விஷயத்தில் எண்ணெய் வார்த்து கொழுந்துவிட்டெரிய விடப்படுகின்றன.


கேரளத்தில் பீதிப் பிரச்சாரம்

திரு -கொச்சியின் முன்னாள் முதலமைச்சர் சி. கேசவன் பின்வருமாறு கூறுகிறார்: "தேவிகுளம்—பீர்மேடு திருவிதாங்கூரின் ஜீவாதாரமான இரண்டு நதிகளின் பிறப்பிடமாகும். பம்பையாறு திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதன் சர்வே வேலைகள் முடிந்து, எஸ்டிமேட்டுகளும் சமர்ப்பித்தாகிவிட்டன. திரு - கொச்சியின் பல்வேறு முன்னேற்றங்களுக்கும் உபயோகிக்கப்படும், பெரியாறு, பம்பையாறு ஆகிய நதிகளிலுள்ள தண்ணீர் நமக்குக் கிடைக்காமல் போகுமானால், திரு-கொச்சி பாண்டி நாடாகவும், பாண்டி நாடு திரு-கொச்சியாகவும் மாறும் காட்சி வரப்போகிறது. இது மிகவும் பயங்கரமான நிலைமையாக மாறும். கொச்சியிலும் எர்ணாகுளத்திலுமுள்ள சுத்தத் தண்ணீர் இதனால் பாதிக்கப்படும். செவ்வறை வரையிலுள்ள பிரதேசங்களில் விவசாயம் இதனால் பாதிக்கப்படும். வேனிற்கால சுகவாசஸ்தலமான ஆல்வாயிலுள்ள இன்றைய வசதிகள் இனிமேல் கிடைக்காதவாறு மாற்றமடையும். பறவூர் தாலுகா முழுவதும் பாலைவனமாகும். பெரும்பாவூரிலுள்ள 'லிங்ட் இரிகேஷன்' திட்டம் வீணாகிவிடும். பம்பையாறு மத்திய திருவிதாங்கூரின் ஜீவநாடியாகும். குட்டநாட்டின் செழிப்பான விவசாயமும், குட்ட நாட்டிலிருந்து சபரிமலை வரையுள்ள வளமான பூமியும் நசித்துப் பயனற்றதாகிவிடும். அதோடு திருவிதாங்கூரும் நாசமாகும்.

"திரு - கொச்சியை பாதிக்கும் இவ்வளவு பயங்கரமான காரியத்தை செய்ய, காமராஜர் கள்ளப் புள்ளிவிவரங்களின்மூலம் டில்லியை நிர்ப்பந்தித்து ஒரு முடிவு ஏற்படச் செய்வாரானால் அந்த முடிவை எதிர்த்து முறியடிக்க நமது சர்க்காரும், மக்களும் ஒன்று திரண்டு தீவிரமாகப் போராடியாகவேண்டும். மக்களின் நலத்திற்காக ஒரு சர்க்காரால் வேண்டியதைச் செய்யமுடியாவிட்டால் அந்த சர்க்கார் இல்லாதிருப்பதே மேல்.

தேவிகுளம்-பீர்மேடு நம்மைவிட்டுப் பிரிந்துபோவதென்பது மிக மிக பயங்கரமான, நினைக்கக்கூட முடியாத ஒரு மாபெரும் ஆபத்தாகும்" (கேரளா பிரஸ் நிருபரிடம் கூறியது -- "தினமலர்" 16-11-55).

இப்படி பொதுவாக கேரள முழுவதிலும், குறிப்பாக திரு கொச்சி ராஜ்யத்தில் மலையாளி மக்களின் மனம் பயத்தாலும், தமிழ் மக்களின்மீது ஆத்திரத்தாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு கேசவன் அல்ல பல கேசவன்கள் இவ்வாறு பயங்கரப் பிரசாரம் செய்கிறார்கள்.

தமிழகத்திலும் கொதிப்பு

இங்கு தமிழகத்தில் காமராஜரும், கக்கனும், தேவிகுளம்-பிர்மேடு நம்மிடமிருந்தால் அங்குள்ள தண்ணீரையும் இதர வசதிகளையும் நம் இஷ்டம்போல் உபயோகிக்கமுடியும் என்கிறார்கள். நிதி அமைச்சர், பெரியாற்றின் தண்ணீரைத் தமிழ்நாடு உபயோகிக்க விடுவதுதான் தேசீய நலனை அதிகரிக்கச் சரியான வழி என்று வாதம் புரிகிறார். இது மலையாளிகளின் தேசீய உணர்ச்சியைத் தொடுவதற்குப் பதில், சென்னை சர்க்காரின் சதிவேலை என்று கருதும்படி செய்து மலையாளிகளுக்குத் தமிழர்மீதும், தமிழர்களுக்கு மலையாளிகள் மீதும் பகைமையை வளர்க்க உதவுகிறது. இந்த நிலைமைதான் இன்றைய எதார்த்தம்.

"திராவிடத் தந்தை" வெ.ரா.தேவிகுளம் பீர்மேட்டை வியாஜ்யமாகக் கொண்டு, தமிழ் 'திராவிடர்களை', மலையாள 'திராவிடர்களோடு' போராட அழைக்கிறார். மலையாளிகளை தமிழ் நாட்டிலிருந்து விரட்டிவிட்டே மறுவேலை பார்ப்பேன் என்று போர் முழக்கம் செய்கிறார்.

தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. " ரத்தம் சிந்தியும் சித்தூர் தாலூகாவை தமிழகத்தில் இணைப்போம்" என்று கொழிஞ்சாம்பாறை (கொச்சி-சித்தூர் தாலூகா)யில் நடந்த ' இணைப்பு' மகாநாட்டில் பேசி இருக்கிறார்.

போடி இளைஞர்கள் "தேவிகுளம்-பீர்மேட்டை மீட்கப் போராடி ரத்தம் சிந்தத் தயார்" என்று நிதி அமைச்சரிடம் வாக்குறுதி அளித்தனர்.

சுமுக பைசலுக்கு எங்கள் வழியே சரி

இவ்வாறு, தமிழ்மக்கள், மலையாளி மக்களிடையில் விரோத குரோதம் வேகம் பாய்ந்து நிற்கிறது. எனவே இந்தச் சூழ்நிலையில் நாங்கள் சொல்லும் வழிதான் சுமுகமாகப் பிரச்னையைத் தீர்க்கும். தமிழ், மலையாளி மக்களின் நலன்களை பரஸ்பரம் மதிப்பதுமூலம்தான் சுமுகமான சூழ்நிலை ஏற்படும். எல்லைப்பிரச்னையைத் தீர்க்க நாங்கள் காட்டிய ஜனநாயக அடிப்படைகளை இருதிறத்தாரும் ஒப்புக் கொள்வதின் மூலம்தான் பிரச்னை சுமுகமாகப் பைசல் ஆகும்.

ஏற்கனவே, ராஜ்ய அமைப்புப் பிரச்னையிலும், எல்லை வகுப்புப் பிரச்னையிலும், மொழியைப் பிரதானமாகவும் கிராம அடிப்படையைப் பிரதானமாகவும் கொள்ள வேண்டும் என்ற ஜனநாயகக் கொள்கைகளைப் புறக்கணித்து, சுயதேவைப் பூர்த்தி, தாலூகா அடிப்படை ஆகிய கொள்கைகளைக் கடைப்பிடித்து, காங்கிரஸும், ராஜ்யச் சீரமைப்புக் கமிஷனும், இதர கட்சிகளும் பிரசாரம் செய்து மக்களிடையில், ஒரே குழப்பத்தையும் குரோதத்தையும் வளர்த்து விட்டிருக்கின்றன. ஆகவே நாங்கள் சட்டசபையில் கொடுத்த திருத்தம் அங்கீகரிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டது.

மற்றவர்களுக்கு மாறாக நாங்கள் எல்லைப் பிரச்னையில் ஒரு கொள்கையைக் கடைப் பிடிக்கிறோம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது—மற்றவர் ஏற்கட்டும் அல்லது எதிர்த்து நிராகரிக்கட்டும். அது வேறு சங்கதி.

(2) எல்லைகளில் அவசியமான மாறுதல்களோடு, கமிஷன் சிபார்சுப்படி ராஜ்யங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்ற திரு. கருத்திருமன் திருத்தத்தை நாங்கள் ஆதரித்தோம்.

(3) அப்பால் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் எல்லாம் பிரச்சனையைத் தீர்க்காது, சிக்கலை சிடுக்கலாக்கும் திருத்தங்கள், இரு ராஜ்ய மக்களின் நலன்களையும் ஒருசேரப் பாராமல், தங்கள் தங்கள் மாகாணத்திலிருந்து தன்னலத்தோடு கொண்டுவரப்பட்ட திருத்தங்கள். எனவே ஓட்டுக்கு விடுமுன்பே, இந்தத் திருத்தங்கள் எல்லாவற்றின்

மீதும் நடுநிலைமை வகிப்போம் என்று அறிவிப்புச் செய்துவிட்டு, நடுநிலமை வகித்தோம்.

எங்கள் கொள்கையை, பகிரங்கப்படுத்தி யிருக்கிறோம். அதற்காகச் சட்ட சபையில் போராடி யிருக்கிறோம். எங்களுக்கு உடன்பட்டதை ஆதரிக்கிறோம். எங்களுக்கு உடன்பாடில்லாத, தகராறுகளைத் தீர்க்க உதவாத, சுமுகப் பைசலுக்கு விரோதமான எல்லாத் திருத்தங்கள் மீதும், முன் கூட்டியே காரணம் சொல்லி நடுநிலைமை வகித்திருக்கிறோம்,

சமநீதி கிடைக்க

எங்கள் கொள்கையும் கோரிக்கையும் தான் தமிழனுக்கும் மலையாளிக்கும் சமநீதி வழங்கும். ஐக்கிய தமிழகத்தையும் ஐக்கிய கேரளத்தையும், ஒரு அங்குலம் தமிழன் நிலம்கூட மலையாளிக்குப் போகாமலும், ஒரு அங்குலம் மலையாளியின் நிலம் கூடத் தமிழனுக்கு வராமலும், ஜனநாயக ரீதியில் அமைக்கும். தேவிகுளம்-பீர்மேடு தமிழனின் நீதியையும் நியாயத்தையும் கட்டிக் காக்கும். தமிழனையும் மலையாளியையும் அன்று போல் இன்றும் என்றும் சகோதரர்களாக வாழச் செய்யும்.

தமிழர் உரிமையைக் கைவிடவில்லை

ஆகவே நாங்கள் நடுநிலைமை வகித்ததில், ஐக்கிய தமிழகக் கொள்கையை கைவிடவும் இல்லை; தமிழனுக்குரிய நிலம் முழுவதையும் கோரத் தவறவுமில்லை. தேவிகுளம் - பீர்மேட்டுத் தமிழர்களின் நியாயத்திற்கும், உரிமைக்கும் போராடத் தவறி, அவர்களுக்குள் துரோகம் இழைக்கவும் இல்லை என்றே உறுதியாக உணர்கிறேன்.

இனி கம்யூனிஸ்ட் கட்சி சரியான கொள்கையை கடைப்பிடித்ததால், இரண்டு ராஜ்யங்களிலும் ஏற்பட்ட சாதனைகள் எவை என்பதையும், இதர கட்சிகளின் நிலை, அதன் பலன் என்ன என்பதையும் பார்ப்போம்.

மொழிக்கே முதலிடம்

மொழிதான் ராஜ்ய சீரமைப்பில் முதலிடம் பெறவேண்டும் என்று இடை முறியாது நாங்கள் வற்புறுத்தி வந்திருக்கிறோம். சட்டசபை விவாதத்திலும் வற்புறுத்தினோம். சென்னை சட்டசபையிலும் சரி, திரு - கொச்சி சட்டசபையிலும் சரி, இந்தக் கொள்கையை அழுத்தந் திருத்தமாக முன்வைக்க நாங்கள் தவறவில்லை.

தமிழ் மொழி பேசுகிற மக்களை ஆக உயர்ந்த அளவு தமிழ் ராஜ்யத்தில் வாழும்படியாகச் செய்துவிடவேண்டும். அதே பொழுதில் இதர மொழி பேசுகிற மக்கள்-மலையாளிகள், கன்னடியர்கள் தெலுங்கர்கள் ஆகியவர்கள் - தமிழ் ராஜ்யத்தில் வாழுவதை எவ்வளவு குறைந்த அளவாகச் செய்ய முடியுமோ அவ்வளவு குறைந்து அளவாகச் செய்யவேண்டும். அப்பொழுதுதான் மிகப் பெருவாரியான தமிழ் மக்கள்—தமிழ் ராஜ்யத்தின் ஜனநாயக வாழ்வில் பரிபூரணமாகப் பங்கெடுத்துக்கொள்ள முடியும். இதுபோல் கேரளத்திலும், கன்னடத்திலும், ஆந்திரத்திலும், செய்யவேண்டும். இவ்வாறு இந்திய யூனியன் முழுவதிலும் செய்யப்படுகிறபொழுது, இந்திய மக்கள் முழுவதும் ஜனநாயக வாழ்வில் முழுப்பங்கு எடுத்துக் கொள்ள சிறந்த வாய்ப்புக் கிடைக்கும். இந்த வாய்ப்பை ஆக-அதி தமிழனும், மலையாளியும் இதர மக்களும் பெறச் செய்யவே எல்லையை ஜில்லா, தாலுகா, பிர்க்கா அடிப்படையில் வகுக்கக்கூடாதென்றும், கிராம அடிப்படையில் தான் வகுக்கவேண்டும் என்றும் திட்டவட்டமாகச் சொல்லுகிறோம்; சட்டசபைகளிலும் பேசினோம்.

பற்றாக்குறைதான்

மொழிவழி ராஜ்யங்களாக, கிராம அடிப்படையில் எல்லை வகுத்துச் சீரமைத்தால், அப்பொழுதும் கேரளம் ஆகச் சிறிய ராஜ்யமாகத்தான் இருக்கும். மத்தியப் பிரதேசமும் உத்தரப் பிரதேசமும் ஆகப் பெரிய ராஜ்பங்களாகத்தான் இருக்கும். கேரளத்தின் ஜனத் தொகை மிகக் குறைவாகவும் உத்தரப் பிரதேசத்தின் ஜனத் தொகை மிகக் கூடுதலாகவும்தான் இருக்கும். (I) கேரளம் மட்டுமல்ல, தமிழகமும் இதர பல ராஜ்பங்களும் ஒவ்வொரு விதத்தில் சுயதேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத பற்றாக்குறை ராஜ்யங்களாகவே இருக்கும்

ஒவ்வொரு ராஜ்யமும் சுயதேவைப் பூர்த்திசெய்து கொள்வதென்பது சாத்யப்பாடற்ற கொள்கை. நமது ராஜ்யங்கள் தனித்தனி நாடுகள் அல்ல. இந்திய யூனியனில் பிரிக்க முடியாத ஜீவனுள்ள அங்கங்கள். உலகில் மிகப் பெரியதொரு நாடான இந்தியாவே இன்று பிற நாடுகளின் உதவியை எதிர்பார்க்கும் நிலையிலிருக்கிறது. பிரிட்டன்கூட அமெரிக்காவிடம் கையேந்தத்தானே செய்கிறது. முதலாளி உலகில், உலக முழுவதையும் சுரண்டும் அமெரிக்க ஐக்ய நாடு மட்டுமே இன்று பிற நாடுகளுக்கு உதவும் நிலைமையில் இருக்கிறது. சோவியத் யூனியனும் இதர மக்கள் ஜனநாயக நாடுகளும் சுய தேவைப் பூர்த்தி யுடையவைகளாக இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நமது ராஜ்பங்கள் ஒவ்வொன்றும் தன்னிறைவோடு விளங்க வேண்டுமென்று பசல் அலிக் குழு பாதை காட்டினாலும் சரி, மற்றவர்கள் யோசனை கூறினாலும்சரி, அது நடவாத காரியம்.

மத்திய சர்க்கார் உதவி

இந்திய யூனியன் சுயதேவைப் பூர்த்தியோடு விளங்க வேண்டும்; விளங்க முடியும். பின்தங்கிக் கிடக்கிற, பற்றாக் குறையான ராஜ்யங்களுக்கு யூனியன் அரசாங்கம் விசேஷ உதவியளித்து, அவைகளை முன்னேறிய ராஜ்பங்களோடு, வாழ்வில் ஈடுஜோடாக நிற்கும்படி செய்யவேண்டும். இது சாத்தியப்பாடு. இதோடு ராஜ்யங்களிடையிலே சகோதர உணர்ச்சியை வளர்த்து, பரஸ்பர உதவி செய்து முன்னேறும்படி தூண்ட வேண்டும். பஞ்சசீலக் கோட்பாடு நாடுகளுக்கு மட்டுமல்ல, ராஜ்யங்களுக்கும் பொருந்தும்.

மொழிவழியாக ராஜ்யங்கள் பிரிக்கப்பட்டு ஜனநாயக வாழ்வில் முழுப்பங்கு கொள்வதோடு, பொருளாதாரத் தேவைப் பூர்த்திக்கு ராஜ்யங்கள் மத்திய சர்க்காரின் உதவியை நாடவேண்டும். மத்திய சர்க்காரும் தேவையான, நியாயமான உதவி திட்டவட்டமாகக் கிடைக்குமென்ற நம்பிக்கையை ராஜ்யங்களுக்கு உண்டுபண்ண வேண்டும். தேசீய ஒற்றுமையைக் கட்டிக்காக்கவும், யூனியன் ஆட்சி வலுப்படவும், ராஜ்யங்களின் ஜனநாயக வாழ்வு வளர்ச்சியடையவும் இது ஒன்றுதான் வழி. மாறாக, பொருளாதார சுயதேவைப் பூர்த்தியைப் பிரதான நோக்கமாகக்கொண்டே ராஜ்யங்கள் சீரமைக்கப்பட வேண்டும். மொழியைப் பிரதானமாகக் கொண்டல்ல என்ற கொள்கை ஒவ்வொரு ராஜ்யமும் தான் வாழ வித்தெடுக்கும் போக்கையே வளர்க்கும். செல்வாதாரம் பெருகவேண்டுமென்று காரணம் காட்டி, இதர மக்களின் பிரதேசங்களை தன் ராஜ்யத்தில் வைத்துக் கொள்ள நியாயம் பேசி, தகராறுகளைக் கப்பும் கவருமாக வளர்க்கும். இனப்பகை, மொழிப்பகை, ராஜ்யப் பகைகளுக்குத் தூபதீபம் போட்டு, தேசீய ஒற்றுமையை உடைக்கும். எல்லை தாலுக்காக்களை அடிப்படையாகக்கொள்வதும் இதன் நாசகார விளைவாக எல்லை, தகராறுகள் பந்துமித்திர களத்திராதிகளாகப் பல்கிப் பெருகுவதும் தவிர்க்கமுடியாத நிகழ்ச்சிகளாகும்.

சுமுகமான பைசல்

எனது சட்டசபைப் பேச்சில் மேற்கூறிய கருத்துக்களை நன்றக எடுத்துக்காட்டினேன். தார் கமிஷனும், அதைத் தொடர்ந்து ஜே. வீ. பி.க் குழுவும் அவை வரையறுத்த ராஜீய சீரமைப்புக்கான பிரதான கொள்கையும் அதன் அடிப்படையில் பசல் அலிக் குழு காட்டும் சுயதேவைப் பூர்த்திக் கொள்கையும் இன்றைய காங்கிரஸ் தலைமையின் கொள்கையும் மொழியின் முதல்தரப் பங்கை மறுத்து, ராஜ்யச் சீரமைப்பிலும் எல்லை வகுப்பிலும் அனர்த்தத்தை விதைத்து கலவரத்தையும் குழப்பத்தையும், சண்டை சச்சரவுகளையும் வளர்த்து, தேசீய ஒற்றுமைக்குப் பதில் ராஜ்யப் பகைமைகளை அறுவடை செய்யத் தொடங்கியிருக்கின்றன. என்பதை எடுத்துக்காட்டினேன். எல்லைப் பிரச்னை—குறிப்பாக தேவிகுளம்-பீர்மேடு பிரச்னை—தமிழ் மக்களுடையவும் சென்னை ராஜ்யத்தினுடையவும் பிரச்னை மட்டுமல்ல: மலையாள மக்கள், திரு—கொச்சி ராஜ்யம், யூனியன் அரசாங்கத்தினுடைய பிரச்னையும் ஆகும் என்பதை எடுத்துக்காட்டினேன். சிக்கல் நிறைந்த பிரச்னையாக உருவாக்கப்பட்டிருக்கும் தேவிகுளம்—பீர்மேடு பிரச்னைகளுக்குத் தீர்வுகாண இரு ராஜ்ய மக்களும், இரு ராஜ்ய அரசாங்கங்களும், நிதானமாக சகோதர உணர்வுடன் அணுகி, சுமூகமான பைசல் காணவேண்டுமென்று விநயமாக வேண்டிக் கொண்டேன்.

கேரள எம். எல். ஏ.க்கள் கருத்து

கேரளக் கம்யூனிஸ்டுகளின் தலைவர்களில் இருவர்களான கே. பி. கோபாலனும், டி.சி. நாராயண நம்பியாரும் நான் கூறிய அடிப்படைக் கருத்துக்களைத் தழுவியே சட்டசபையில் பேசினார்கள். கோபாலன் பேசுகிறபொழுது தமிழர்களின் ஒரு அங்குல நிலத்தைக் கூட மலையாளிகள் விரும்பவில்லை யென்றும், கிராம அடிப்படைக் கொள்கையை அளவுகோலாகக் கொண்டால், எல்லை வகுப்பதில் மலையாளிக்கும் தமிழனுக்கும் சமநீதி வழங்கமுடியும் என்றும் தெக்கத் தெளிவாகப் பேசினார். நாராயண நம்பியார் பேசுகிற பொழுது தேவிகுளம்-பீர்மேடு உள்ளிட்ட கேரள-தமிழக் எல்லைப் பிரதேசங்களில், கிராம அடிப்படைக் கொள்கையை அங்கீகரித்து, எல்லையை சுமுகமாக வகுக்க முடியுமென்றார். சென்னை ராஜ்யத்திற்கு உரியதற்குமேல் அதிகமாக வரவேண்டும் என்றும் சென்னை ராஜ்யத்திலிருந்து நியாயமாகப் போகவேண்டிய பிரதேசத்தை சென்னை ராஜ்யத்தோடேயே இருக்கவேண்டும் என்றும் கோரிய நிதி அமைச்சரின் கோரிக்கை வாதத்தை, "ஒருவழிப்பாதை" என்று மிக அழகாக எடுத்துக்காட்டினார். "தேவிகுளம் - பீர்மேடு யாருக்கென்று திட்டவட்டமாகக் கூறுங்கள்" என்று இடைமறித்த பொழுது தமிழருக்கென்றும் சொல்லமாட்டேன்; மலையாளிகளுக்கென்றும் சொல்லமாட்டேன். இரு சகோதர மக்களுக்கும் நலன் ஏற்படும் வகையில் சுமுகமாக பைசல்வேண்டும். அவ்வளவுதான் இந்தச் சந்தர்ப்பத்தில் கூறுவேன் என்று உறுதியுடன் கூறினார்.

நீதியைக் காட்டிக் கொடுக்கக் கூடாது

மணலி கந்தசாமி பேசும்போது "தமிழர்களும் மலையாளிகளும் சகோதரர்கள் என்பதை நாங்கள் மறந்ததுமில்லை. மறுக்கவும் முடியாது. மறக்கவும் மாட்டோம். தமிழனுக்கு ஒரு நீதி ; மலையாளிகளுக்கு ஒரு நீதி என்று நாங்கள் பார்க்கமாட்டோம். தமிழனைக் காட்டிக் கொடுக்கக் கூடாதென்றால், நீதியைக் காட்டிக் கொடுக்கக் கூடாதென்று தான் அர்த்தப்படுத்துகிறோம். மக்கள் நீதியைக் காட்டிக் கொடுப்பவர்கள் நாங்களல்ல; அவர்கள் வேறு. இன்று நாங்கள் பேசுவது வழவழாவாக இருக்கிறதென்று சிலர் தங்களை தமிழர்களின் தலைவர்களாகவும் தளபதிகளாகவும் தருக்கிச் செருக்கிக் கருதிக் கொண்டு எங்களை நையாண்டி பண்ணி எக்களிப்படையலாம். இந்த மாதிரி சந்தர்ப்பங்கள் எங்களுக்குப் புதிதல்ல. இரு ராஜ்யங்களிலும் இனப்பகை சூடேறி நிற்கும் இன்று, நிதானத்துடன் இரு திறத்தாரும் சுமுகமான பைசல் காண சகோதர வாஞ்சையுடன் முயல வேண்டுமென்று நாங்கள் எடுக்கும் நிலைதான் சரியான நிலை என்பதை எதிர்காலம் பாராட்டும் என்பதில் எங்களுக்குச் சந்தேகமில்லை" என்று உறுதியாகவும் உருக்கமாகவும் பேசினார். இறுதியாக ராமமூர்த்தி பேசியபோது, சுமுகப் பைசலின் இன்றியமையாமையையும், அதற்குரிய ஜனநாயக வழியையும் விரிவாகவும் விளக்கமாகவும் வலியுறுத்திப் பேசினார்.

எங்கள் சாதனை

ஒற்றுமைக்கான எங்கள் சாதனைகள் என்ன? முதலாவதாக, தொடர்ச்சியைக் கணக்கிலெடுத்து கிராம அடிப்படையில் எல்லை வகுக்க வேண்டுமென்ற கொள்கையை எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த பெரும்பாலான அங்கத்தினர்கள் ஒப்புக்கொள்ளும்படி செய்தோம். ஆனால் அதே பொழுதில், தேவிகுளம், பீர்மேடு, கூடலூர், காசர்கோடு ஆகிய தாலுக்காக்கள் வரும்போது, அவர்கள் மேற்கூறிய கொள்கையைக் காற்றில் ஊதிப் பறத்திவிட்டு பச்சை சந்தர்ப்ப வாதிகளாக நின்றதையும் உலகறியச் செய்தோம். இரண்டாவதாக எல்லைப் பிரச்னைக்கு பைசல் காண்பதில் தமிழ் மக்களும் மலையாளி மக்களும் ஒன்றுபட்டு நிற்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, நாங்கள்—தமிழ், மலையாளி கம்யூனிஸ்டுகள் — சட்ட சபையில் தீர்மானத்தில், திருத்தத்தில், வாக்கெடுப்பில் ஒரே நிலை எடுத்தோம். இந்தப் பெருமை வேறு எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை.

திரு—கொச்சி சட்ட சபையில் மலையாள கம்யூனிஸ்டுகள் தான் அங்கம் வகிக்கிறார்கள். தமிழ் கம்யூனிஸ்டுகள் இல்லை. சென்னையிலும் திரு—கொச்சியிலும், சீரமைப்பு கமிஷன் சிபார்சு பற்றி அடிப்படையான கொள்கையில் கட்சிகளுக்கிடையில் மாறுதல் எதுவும் இல்லை. இங்கும் அங்கும் நிலைமையில் மேல்வாரியான மாறுதல் காணப்படுவது போல், கட்சிகளின் பிரதிபலிப்பிலும் மேல்வாரியான மாறுதல் காணப்படுகிறது.

அங்கும் கம்யூனிஸ்டு அங்கத்தினர்கள் கேரள ராஜ்ய அமைப்பை வரவேற்று, எல்லை வகுப்பில் கிராம அடிப்படைக் கொள்கையை இதர அங்கத்தினர்களும் ஏற்கும்படி செய்யவே போராடி இருக்கிறார்கள்.

இதற்கு இரண்டே உதாரணங்கள் காட்ட விரும்புகிறேன். (1) கமிஷன் சிபார்சுகளின் மீது வாக்கெடுப்பு, (2) எதிர்க்கட்சித் தலைவரும், கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.யுமான டி. வி. தாமஸின் பேச்சு.

வாக்கெடுப்பின்போது திரு—கொச்சி சட்டசபை கம்யூனிஸ்டு அங்கத்தினர்கள் நடந்து கொண்டதை முதலில் கவனியுங்கள். 25—12—55 'தின மலர்' செய்தியைக் கீழே தருகிறேன் எனது சிறு குறிப்போடு.

1. 'தென் திருவிதாங்கூரிலுள்ள நான்கு தாலூகாக்களையும், கமிஷன் சிபார்சுப்படி, உத்தேச கேரள ராஜ்யத்திலிருந்து பிரிவினை செய்யக் கூடாது" என்ற காங்கிரஸ் பி. சோ. ஆதரித்த தீர்மானத்தை எதிர்த்தார்கள். இதில் கே.எஸ். பி., ஆர். எஸ்.பி.யையும் எதிர்க்க வைத்தார்கள். தி.த.நா. காங்கிரஸோடும், சுயேச்சை தமிழ் அங்கத்தினர்களான டி. எஸ். ராமசாமி, சட்டநாதன் ஆகியவர்களோடும் நின்று எதிர்த்தார்கள்.

2. நீலகிரி ஜில்லாவிலுள்ள கூடலூர் கேரள ராஜ்யத்தில் இணைக்கப்பட வேண்டும் என்ற திருத்தத்தை ஆதரித்துள்ளனர். தி.த.நா.காங்கிரஸ் மட்டும் எதிர்த்திருக்கிறது. ஆனால் டி. எஸ். ராமசாமியும் சட்டநாதனும் இந்தத் திருத்தத்தை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

3. "கேரள ராஜ்யம் உருவான பிறகு எல்லை சம்பந்தமான மாற்றங்கள் தேவைப்பட்டால், நடுநிலைமை கொண்ட ஒரு எல்லைக் கமிஷனை நிறுவியோ அல்லது சம்பந்தப்பட்ட ராஜ்யங்கள் நட்புறவோடு பேச்சு வார்த்தை நடத்தியோ தீர்மானித்துக் கொள்ளலாம்" என்று வந்த தீர்மானத்திற்கு சாதகமாக ஓட்டளித்தனர். இதில் இடதுசாரி கட்சிகளோடு தி.த.நா.காங்கிரஸையும் இரண்டு தமிழ் சுயேச்சை அங்கத்தினர்களையும் சாதகமாக ஓட்டளிக்கவைத்தனர். காங்கிரஸும் பி. சோ. கட்சியும் எதிர்த்தன.

4. "பாஷாவாரி நிர்ணயத்தின் மீது கிராமங்களை அடிப்படை உறுப்புகளாகக் கொள்ள வேண்டும். எல்லைக்கோடு தொடர்பான ஒன்றாக இருக்க வேண்டுவதோடு தனியாக உள்ள திட்டுக்களை விட்டு விடவேண்டும். தண்ணீர், இதர வசதிகள் மீது கேரளத்தின் தேவையை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்" என்ற தீர்மானத்தில் சாதகமாக ஓட்டளித்தனர். இடதுசாரிகளும், டி. எஸ். ராமசாமி, சட்டநாதன் ஆகியவர்களும் சாதகமாக ஓட்டளித்தனர். தி. த.நா. காங்கிரஸ் நடுநிலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது. இதிலும் காங்கிரஸ், பி.சோ.வை தனிமைப்படுத்தி எதிர்ப்பைக் குறைத்தனர்.

இந்தச் செய்திக் குறிப்புகளை நிதானமாகச் சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு ஒரு உண்மை நிச்சயமாகப் புலனாகாமல் போகாது. அந்த உண்மை என்ன? திரு—கொச்சி கம்யூனிஸ்டுகள் வெறும் கேரள மாகாணப் பித்தர்கள் அல்ல. அவர்கள் இரு ராஜ்யங்களும் சகோதர ராஜ்யங்களாக வாழவேண்டும். இரு மக்களும் சகோதர மக்களாக வாழவேண்டும். இவ்வாறு வாழ்வதின் மூலம் தேசீய ஒற்றுமை உண்மையில்—உதட்டளவல்ல—வலுப்படவேண்டும் என்று விரும்புகிறவர்கள். ஆகவேதான், கேரளத்தின் தடிப்பேறின மாகாணப் பித்தர்களான காங்கிரஸ்-பி. சோ. கூட்டணியை அம்பலப் படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ராஜ்யச் சீரமைப்புப் பிரச்னையில் அடிப்படையான ஜனநாயகக் கொள்கைகளை, திரு—கொச்சி சூழ்நிலை அனுமதித்த அளவு கடைப்பிடிப்பதில் இதர இடதுசாரிக் கட்சிகளான கே. எஸ். பி., ஆர். எஸ். பி.யை உடனழைத்துச் சென்றிருக்கின்றனர். தி.த.நா.காங்கிரஸோடு சேரவேண்டியதில் சேர்ந்து. எதிர்க்க வேண்டியதில் எதிர்த்திருக்கிறார்கள்—தென் தாலுக்காக்களைப் பொறுத்தமட்டில், தி.த.நா., காங்கிரஸோடு இணைவதிலும், கூடலூரைப் பொறுத்தமட்டில், தி.த.நா.காங்கிரஸின் தமிழ் ராஜ்ய வெறியை அம்பலப்படுத்துவதிலும் திறமையாக நடந்திருக்கிறார்கள். இரண்டு தமிழ் சுயேச்சை அங்கத்தினர்களும் பல தீர்மானங்களிலும் நிதானமாகப் பிரதிபலிக்கப் பெருந்துணை செய்திருக்கிறார்கள். மொழிவாரிப் பிரிவினை, கிராம அடிப்படையில் எல்லைக் கோடு, கேரளத்தின் தண்ணீர் வசதி முதலிய தீர்மானத்தில் தி.த.நா.காங்கிரஸை நடு நிலைமை வகிக்கும்படி செய்ததும், எல்லைக் கமிஷன் அல்லது நட்புறவு கொண்ட பேச்சை கோரும் தீர்மானங்களில் சாதகமாக ஓட்டுப் போடும்படி செய்ததும் ஒற்றுமைத் திசையில் கம்யூனிஸ்டுகளின் குறிப்பிடத் தக்க சாதனைகள்.

மிகமிக நிதானமாக, மொழிவழி ராஜ்யப் பிரச்னைக்கு சுமுகமான, சரியான ஜனநாயகப் பைசல்காண வேண்டும் என்ற அக்கரையோடு நுனித்து ஆய்ந்தறிய விரும்புகிறவர்களுக்குத்தான், கம்யூனிஸ்டுகள் ஜனநாயக திசையில் எடுத்துக்கொள்ளும் சிரமமும், காட்டும் சகிப்புத் தன்மையும் விளங்கும்.

(2) டி. வி.தாமஸ் பேசிய பேச்சு, "தினமலர்" 26-11-55) இதழில் வெளிவந்திருக்கிறது. அதில் கிராம அடிப்படையில் எல்லைக்கோல வேண்டுவதுதான் ஜனநாயக முறை என்பதை வற்புறுத்துகிறார். ஆந்திர ராஜ்யத்திற்கும் சென்னை ராஜ்யத்திற்கும் ஏற்பட்டுள்ள எல்லைத் தகராறைத் தீர்க்க சென்னை ராஜ்யம் குறிப்பிட்டுள்ள நான்கம்சத் திட்டத்தை, திரு-கொச்சி ராஜ்யமும் சென்னை ராஜ்யமும் தங்களுடைய எல்லைத் தகராறைத் தீர்க்க ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏற்றுக்கொண்டு சுமுகமாகத் தீர்க்க முடியும் என்றும் வற்புறுத்தியிருக்கிறார்.

இவைகளையெல்லாம் கணக்கிலெடுத்துப் பார்த்தால், சென்னை கம்யூனிஸ்டுகளும் திரு-கொச்சி கம்யூனிஸ்டுகளும் ராஜ்யச் சீரமைப்புப் பிரச்னையை ஜனநாயக முறையில், தமிழக, கேரள மக்கள் நலனுக்குக் குந்தகம் எந்த வழியிலும் ஏற்படாமலும், தேசீய ஒற்றுமையை வளர்க்கும் விதத்திலும், நடைமுறைக்கு ஒத்த முறையிலும் தீர்க்க போராடி வருகிறோம் என்பது விளங்கும். நாங்கள் சந்தர்ப்பவாதிகள், வழவழாக் கொழ கொழாக்காரர்கள், கட்சி நலனைத் தேச நலனைவிடப் பெரிதுபடுத்துகிறவர்கள், இனத் துரோகிகள் என்று கூறுகிறவர்கள் எவ்வளவு நாற்றம் பிடித்த தடிப்பேறிய சந்தர்ப்பவாதிகள் என்பதை இன்றைய அவர்களது நடைமுறை திட்டவட்டமாக எடுத்துக் காட்டுகின்றது.

தேவிகுளம்—பீர்மேடுப் பிரச்னையில், காங்கிரஸ், தி.த.நா. காங்கிரஸ், தமிழரசுக் கழகம், தி.க., தி.மு.க. முதலிய கட்சிகள், ஸ்தாபனங்களின் நிலைகள் எவை? அவை சுமுகத் தீர்வுக்கு ஏற்றவைதாமா? அல்லது உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிற 'உத்தமத் தலைவர்களின்' அரசியல் சூதாட்டப் பேரார்ப்பாட்டங்களா? இந்தப் பிரச்னையில் மக்களை ஆசைகாட்டி மோசம் போக்குகிறவர்கள் யார்? குழப்படிக்காரர்கள் யார் ? "வெட்டொன்று துண்டிரண்டு" என்ற வாதம் இந்தப் பிரச்னையைப் பொறுத்தமட்டில், அரசியல் நிதானத்திற்கோ, நடைமுறைப் பைசலுக்கோ பொருந்துமா?

காங்கிரஸ்

காங்கிரஸ், எங்களைப்போல், மொழிவழி ராஜ்யக் கொள்கையை ஒப்புக்கொள்ளவில்லை. தார் கமிஷன் ரிப்போர்ட், ஜே.வி.பி.க் குழு ரிப்போர்ட், ஹைதராபாத் காங்கிரஸில் தலைவர்கள் பேச்சு ஆகியவை காங்கிரஸின் மொழிவழி ராஜ்ய எதிர்ப்பை நன்கு புலப்படுத்துகின்றன. காமராசரும் கக்கனாரும்கூட கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரையில், "தேசீய ஒற்றுமை"யை உயர்த்திப் பிடித்து மொழிவழி ராஜ்ய வாதத்தை எதிர்த்து நின்றார்கள் என்பதைத் தமிழ் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

பசல் அலிக் குழுவும், காங்கிரஸ் கொள்கையைப் பின்பற்றித்தான் 'ஒரு மொழி ஒரு ராஜ்யம்' என்ற கொள்கையை நிராகரித்து, பொருளாதார சுயதேவைப் பூர்த்தியை முக்கிய கொள்கையாகக் கொண்டு இந்திய யூனியனை பதினாறு ராஜ்யங்களாகச் சீரமைக்க வேண்டுமென்று காரணம் காட்டிச் சிபார்சு செய்திருக்கிறது.

செல்வாக்கு மிக்க காங்கிரஸ் தலைமை, குறிப்பாக மொழிவழி ராஜ்ய எதிரிகளாயினும், தலைமையில் ஒரு பகுதியும் காங்கிரஸ் அணிகளும் காங்கிரஸ் மக்களும் பொதுவாக மொழிவழி ராஜ்ய வாதிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

இனிக் காங்கிரஸின் நிலையை, தேவிகுளம்-பீர்மேட்டில் வைத்துப் பார்ப்போம். நிதி அமைச்சர் சுப்பிரமணியம், சட்டசபையில் மொழிவாரிப் புள்ளி விவரங்களை சரமாரியாக அள்ளிவீசி, பிரச்னையை அக்குவேறு ஆணிவேறாக அலசிக் காட்டி, தேவிகுளம்-பீர்மேடு தமிழ்ப் பிரதேசம்தான் என்றும், அது சென்னை ராஜ்யத்தோடு சேர்வதுதான் நியாயமென்றும், கேரளத்தோடு அப்பிரதேசம் இணைந்துநிற்கவேண்டுமென்று சீரமைப்புக் கமிஷன் சிபார்சு செய்திருப்பது சிந்திக்கக்கூடாத அநியாயமென்றும் தமிழர் 'நியாயத் தை'ப் பேசினார். அதேபொழுதில், தமிழனும் மலையாளியும் பிறப்பதற்கு முன்னரே, மேற்குத்தொடர்ச்சி மலையில் பிறந்து அரபிக் கடலில் விழுகிற பெரியாற்றின் தண்ணீர் மலையாளியின் ஆதிக்கத்திருப்பதைவிட தமிழன் ஆதிக்கத்தில் இருப்பதுதான் தேசீய நலன் பெருகுவதற்கு வழி என்று வாதாடினார். இந்தத் தண்ணீர் பிரச்னையில், மலையாளிகளின் அவசியத்தையும் புறக்கணிக்கமாட்டோம் என்று ஒரு வார்த்தை போட்டுக்கொண்டார் இந்த வாதம் சரியான வாதம் என்று சுப்ரமணியத்தின் பேச்சு எந்த மலையாளி மகனையாவது அறிவுறுத்துமா? அறிவுறுத்தியிருக்கிறதா? கேரளமும் சென்னை ராஜ்யமும் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னையில், மலையாளியைப்பற்றி தமிழன் கவலைப்படாவிட்டால், பொருட்படுத்தாவிட்டால், பின்னர் தேசீய ஒற்றுமைக்கு உத்தரவாதம் ஏது? இருதிறத்தாரும் கலந்து இந்தச் சிக்கலான பிரச்னையைத் தீர்க்கவேண்டுமென்று பேசாத நிதி அமைச்சரின் பேச்சு எப்படி தேசீய ஒற்றுமைக்கு, ராஜ்யங்களின் பரஸ்பர நட்புக்கு உதவிபுரியும்? குறுகிய ராஜ்ய வெறியோடு, கேரளத்தின் தண்ணீரில் ஒரு பொட்டுக்கூட தமிழனுக்குக் கொடுக்கமாட்டோமென்று ராஜ்யப் பகைமைக்கு உடுக்கடித்து ஆவேசமூட்டும் திரு-கொச்சி முதலமைச்சர் பனம்பள்ளி போன்றோரின் தப்பான ஆறுத்தான போக்கை எவ்வாறு முறியடிக்க முடியும்?

மேலும் சுப்ரமணியம் என்னென்ன பேசினார் தெரியுமா ? தமிழர்களைவிட மலையாளிகளே திட்டவட்டமாகப் பெரும்பான்மையோராக உள்ள நீலகிரி - கூடலூர் தாலூகா சென்னை ராஜ்யத்தோடுதான் இருக்கவேண்டும் என்றார். மலபாருக்குச் சொந்தமான கொல்லங்கோட்டுக் காடும் சென்னை ராஜ்யத்திற்கு வேண்டும் என்று வாதாடினார். இங்கு மொழிவழி நியாயம் பேசவில்லை. "சென்னை ராஜ்யத்திற்கு காட்டுவளம் சுருக்கம். கேரளத்திற்கு காட்டுவளம் அதிகம். எனவே கொல்லங்கோட்டுக் காடு வேண்டும் என்றார். கூடலூரில் நல்ல தேக்கு மரங்களும், நல்ல வேட்டைக்காடும் இருப்பதால், காட்டு வளம் குறைந்த சென்னை ராஜ்யத்திற்கு அது தேவை. எனவே மலையாளிகளுக்கு விடமுடியாதென்றார். நெய்யாற்றின் கரைத் தாலூகாவில் தமிழ்ப் பகுதிகளை கிராம அடிப்படையில் சென்னை ராஜ்யத்திற்குத் தந்துவிடக் கோரிய நிதி அமைச்சர், கூடலூர் தாலூகாவில் மலையாளப் பகுதிகள் கிராம அடிப்படையில் கேரளத்திற்குப் போகட்டும் என்று நியாயம் பேசவில்லை. கூடலூர் தாலூகா சுளையாக சென்னை ராஜ்யத்தோடுதான் இருக்கவேண்டுமென்றும் அங்குள்ள மலையாளிகள் அமைதியாக சென்னை ராஜ்யத்தில் வாழ்வார்களென்றும் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை எங்களால் செய்து கொடுக்க முடியுமென்றும் பிடிவாதமாகப் பேசினார். 'தனக்கொரு நீதி பிறருக்கொரு நீதி' என்ற இதே மனப்பாங்கில்தான் அங்கு பனப்பள்ளியும் "தேவிகுளம் -பீர்மேட்டில் தமிழர்கள் அமைதியாக வாழ்கிறார்கள், வாழ்வார்கள்" என்றும் எனவே தேவிகுளம்-பீர்மேடு கேரளத்திலேயே இருக்கவேண்டுமென்றும் வழக்காடுகிறார். இந்த இரண்டு வக்கீல்-அமைச்சர்களின் மனப்பாங்கு வேறு, கூடலூர், தேவிகுளம்-பீர்மேட்டிலுள்ள மலையாளிகள், தமிழர்களின் மனப்பாங்கு வேறு.

கேரள மக்கள் சுப்ரமணியத்தின் பேச்சையும், தமிழ் மக்கள் பனம்பள்ளியின் பேச்சையும் 'சதிகாரத்தனம்' என்று எண்ணுகிறார்கள். பகைமை அலை மோதி அடிக்கிறது. இவர்களால் பிரச்னை எவ்வாறு பைசலாகும்! தேசீய ஒற்றுமை எவ்வாறு ஏற்பட முடியும்!

சந்தர்ப்பவாதம்

இரண்டு அமைச்சர்களும் காங்கிரஸ்காரர்கள். இரண்டு பேரும் மொழிக்கு முதலிடம் கொடுக்கவில்லை. லாபத்திற்காக மட்டும் மொழிவாரிக் கொள்கையை சந்தர்ப்பவாதமாகப் பேசுகிறார்கள். சுப்ரமணியம் சென்னை ராஜ்யத்தின் சுயதேவைப் பூர்த்தியையும் பனம்பள்ளி கேரள ராஜ்யத்தின் சுயதேவைப் பூர்த்தியையும் பெரு நோக்காகக் கொண்டு, ராஜ்ய-எல்லை அமைப்பில் எதிரும் புதிருமாக நின்று மோதுகிறார்கள். காங்கிரஸ் கொள்கையும் கமிஷன் சிபார்சும் சுய தேவைப் பூர்த்தியைத்தான் அதிகமாக வற்புறுத்துகின்றன. ஆகவே மக்களிடையில் - தமிழ், மலையாள மக்கள் இருவர்களிடையிலும்-குழப்பத்தையும் பகைமையையும் வளர்ப்பது ராஜ்ய சீரமைப்பு பற்றிய காங்கிரஸ் கொள்கைதான். காங்கிரஸ் தலைமை சந்தர்ப்பவாதப் போக்கில் மொழிவழி பேசுவதுதான்.

மொழிவழி பேசி, தேவிகுளம்- பீர்மேடு கோருகிற சுப்ரமணியம், மொழியைமட்டும் தனி அளவுகோலாகக் கொள்ளமுடியாது' என்று அடுத்த மூச்சில் காங்கிரஸ் கொள்கையை நினைவூட்டுகிறார். உடனே "சுயதேவைப் பூர்த்தி என்ற காங்கிரஸ் கொள்கையை உறுதியாகப் பிடித்துக்கொண்டு பனம்பள்ளி "தேவிகுளம்-பீர்மேடு கேரளத்தின் உயிர்நாடி, தேவிகுளம்-பிர்மேடு போனால் கேரளம் போச்சு " என்று அலறுகிறார். பொதுவாகத் தமிழ்மக்களும், குறிப்பாக தேவிகுளம். பீர்மேட்டுத் தமிழ் மக்களும் காங்கிரஸ் கொள்கையின் ஆபத்தையும் அது உருவாக்கியுள்ள சிக்கலின் அபாயத்தையும் நிதானமாக உணர்ந்து பார்க்கவேண்டுமென்று நாங்கள் சொல்கிறோம்.

நீதி கிடைக்குமா?

பண்டித ஜவஹர்லால் நேருவும், கோவிந்த வல்லப பந்தும், தேசீய ஒற்றுமையையும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் மிக முக்யத்வத்தையும் பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டுவந்து, ராஜ்யச் சீரமைப்பு விஷயத்தில், தங்களுடைய முடிவை அமைதியாக ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றும், இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சம் பிரதேசம், இந்த அல்லது அந்த ராஜ்யத்தில் இணைந்துவிட்டாலும், மக்கள் பொறுமையிழந்து கலகம் விளைத்து, இன்றியமையாத தேசீய ஒற்றுமையைக் குலைக்கக்கூடாதென்றும் பெருந்தகைமையோடு புத்திமதி கூறி வேண்டிக்கொள்கிறார்கள். இந்த மேலிடத்துத் தெய்வங்களிடம்தான், நியாயம் கோரி சுப்ரமணியமும் பனம்பள்ளியும் 'கேள்' கட்டுகளுடன் டில்லிக்கு ஓடியிருக்கிறார்கள்.

கொள்கை அடிப்படையில் நியாயப் பிடிப்பு இல்லாததால். தெளிவின்றி குழம்பிய மனத்தராய் மக்கள் என்னவாகுமோ ஏதாகுமோ என்று டில்லியை நோக்கி, நிலைகுத்தியகண்களோடு நிற்கிறார்கள்.

இது நியாயமா?

காஸர்கோடு தாலூகாபற்றி காங்கிரஸ்காரர் எடுத்த நிலை என்ன? காஸர்கோடு தாலூகாவில்—தகராறுக்குரிய பிரதேசத்தில்—மலையாளிகள் 100க்கு 55 பேரும், கன்னடியர்கள் 100க்கு 9 பேரும் வாழ்கிறார்கள். 55 பேருள்ள மலையாளிகளுக்கு கிடைக்கக்கூடாதென்றும் 9 பேருள்ள கன்னடியர்களுக்கே கிடைக்கவேண்டும் என்றும் மொழியல்லாத காரணங்களைப் பேசி சுப்ரமணியம், காசர்கோடு கன்னட ராஜ்யத்தோடு இணையவேண்டுமென்று விவாதித்தார். சட்டசபையில் காங்கிரஸ் தமிழ் எம்.எல்.ஏ.க்கள் மலையாளிகளுக்கு விரோதமாக கன்னடத்தாரோடு இணைந்து வாக்களித்தார்கள். இதற்குக் கைம்மாறாக, தேவிகுளம்-பீர்மேடு விஷயத்தில் கன்னட எம்.எல்.ஏ.க்கள், மலையாளிகளுக்கு விரோதமாக தமிழர்களோடு இணைந்து வாக்களித்தனர்.

பெரியாற்றுத் தண்ணீர் ஆதிக்கம் சென்னைக்கு, கூடலூ தாலூகா முழுவடிவமாக சென்னைக்கு, காசர்கோடு கன்னட ராஜ்யத்திற்கு என்று தமிழ்நாடு காங்கிரஸ்காரர் சட்டசபையில் கடைப்பிடித்த கொள்கை மலையாளிகளிடம் தமிழர்மீது பகைமையை வளர்க்க உதவுமா? அல்லது தேவிகுளம்-பீர்மேடு வாழ் சுமார் இரண்டு லட்சம் தமிழர்களின் உரிமைக் குரலை கேரள மக்கள் பொருட்படுத்த உதவுமா? என்பதை தமிழ்ப் பொதுமக்கள் நன்றாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நாடுகளிடையில் பஞ்சசீலக் கொள்கையைப் பரப்பவேண்டிய காங்கிரஸ்காரர்கள், ராஜ்யங்களிடையில் "தான் வாழ வித்தெடுக்கும் கொள்கை"யைப் பரப்பினால், தேவிகுளம்-பீர் மேடுப் பிரச்னை சுமுகமாகத் தீருமா?

ஆற்றுத் தண்ணீரும் ஆதாயவாதிகளும்

சட்டசபையில் தேவிகுளம் பீர்மேடுபற்றிய திருத்தம் கொண்டு வந்தவர் ஆர்.வி.சுவாமிநாதன். இவர் பேசும்போது, மொழிவழி ராஜ்யக் கோரிக்கை தவறு என்றும் வல்லபாய் படேல் இருந்தால் அனுமதிக்கமாட்டா ரென்றும், பல்மொழி பேசுகிற மக்களை ஒரு ராஜ்யத்தில் கூட்டாக வைத்தால்தான் தேசீய ஒற்றுமை வளர வழியுண்டு என்றும் பேசினார். இத்தகைய ஒருவர் தேவிகுளம் -பீர்மேடு சென்னையுடன் இணைய வேண்டுமென்றால், அது அங்குள்ள தமிழரின் உரிமையைக் காக்க அல்ல; அங்குள்ள தண்ணீர் தங்கு தடையின்றி மதுரை, ராமநாதபுரம் ஜில்லாவுக்கு வேண்டுமென்றுதான் என்பதை யாரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். சட்டசபை காங்கிரஸ் கட்சி கொரடா ராஜாராம் அந்தத் திருத்தத்தின் மீது வாக்கெடுக்கக் கோரினார். அவர் மதுரை ஜில்லா திருமங்கலம்வாசி. தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கக்கன், பெரியாற்றுத் தண்ணீருக்காக, தேவிகுளம் - பீர்மேட்டைக் கோருகிறார். அவர் மதுரை ஜில்லா மேலூர் தாலுக்காவாசி. இவர்களுக்கு, தேவிகுளம்- பீர்மேடு தமிழர் உரிமையைவிட அங்குள்ள தண்ணீர் மதுரை - இராமநாதபுரம் ஜில்லாக்களுக்குக் கிடைக்கப் போராடினார்கள் என்று அந்த ஜில்லாக்களிலுள்ள மக்கள் நம்பும்படி ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும். தேவிகுளம்-பீர்மேடு கிடைக்க இறுதிவரையில் காங்கிரஸ்காரர்கள் போராடப்போவதில்லை. இதை தேவிகுளம்-பீர்மேட்டுப் பிரதிநிதிகளே என்னிடம் நேரில் ஹோட்டல் எவரஸ்டில் வைத்துச் சொன்னார்கள்.

தி. த. நா. காங்கிரஸ்

திரு-கொச்சி தமிழகப் பிரதேசம் முழுவதையும் தாய்த் தமிழகத்தோடு இணைத்துவிடுவது ஒன்றையே தனிப்பெருங் குறிக்கோளாகக் கொண்டு பிறந்ததும் வளர்ந்ததும்தான் தி.த.நா .காங்கிரஸ் என்று அதன் தலைவர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். தி.த.நா.காங்கிரஸ் கொடியின் கீழ், திரு-தமிழகத்திலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் வந்து நின்று, ஐக்கிய தமிழகத்திற்காகத் தொண்டாற்றுவதே முறை என்று கூறி வந்திருக்கிறார்கள். தி.த.நா. காங்கிரசுக்கு வேறு அரசியல் லட்சியம் கிடையாதென்றும் கால அகாலம் பாராமல் அவர்கள் பிரசார முரசடித்திருக்கிறார்கள்.

ஆனால் இவ்வாறு பிரசார பேரி கொட்டியவர்கள், காலமெல்லாம் தேசிய காங்கிரசின் தொங்குசதையாக இருந்துவந்திருக்கிறார்கள். தேசீய காங்கிரசோடு ஊடுவதும் கூடுவதும் தி.த.நா.காங்கிரஸ் தலைமை வழக்கமாகக் கடைபிடித்துவந்துள்ள அரசியல் தந்திரம்.

தாய்த் தமிழகத்தோடு திரு-கொச்சி தமிழகம் மெய்யாகவே இணைய வேண்டுமென்று விரும்புகிற பத்தாயிரக் கணக்கான மக்கள் இந்தத் தலைவர்களை நம்பி பற்பல கஷ்டநஷ்டங்களுக்கும் பரம தியாகங்களுக்கும் ஆளாகி யிருக்கிறார்களென்பதும் உண்மை.

அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின் கரை, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு (கொச்சி) சித்தூர் ஆகிய ஒன்பது தாலுக்காக்களும் தமிழ்த் தாலுக்காக்கள், அவை கள் முழுத் தோசைகளாக தாய்த் தமிழகத்தோடு இணையவேண்டும் என்பது தி.த.நா.காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கை. கமிஷன் சிபார்சு செய்துள்ள ஐந்து தாலுக்காக்கள் நீங்கலாக, மிகத் தகராறுக்குரிய நெய்யாற்றின்கரை, தேவிகுளம், பிர்மேடு, சித்தூர் ஆகிய நான்கு தாலுக்காக்களிலுள்ள தமிழ்ப் பிரதேசங்களை கிராம அடிப்படையில் சென்னையோடு இணைத்தால் போதுமென்றும் மறந்தும் இவர்கள் சொன்னதில்லை.

ஒன்பது தாலூகா வாதிகள்

இத்தகைய பிடிவாதமான ஒன்பது தாலூகா வாதிகளின் இன்றைய நிலை என்ன? லோக் சபையில் தி.த.நா. காங்கிரசின் தலைவரான நேசமணி, மாற்றாரும் மதிகலங்கும்படி, சரித்திரச் சான்றுகளையும் புள்ளி விவரங்களையும் பொழிந்து, தேவிகுளம், பீர்மேட்டுக்காக அபாரமாக வாதாடினார். அவருடைய சகாக்கள் தி.த.நா. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், 'தேவிகுளம்-பீர்மேடுபற்றி மூச்சுவிடக்கூடாதென்பதோடு மட்டுமல்ல. தென் தாலூகாக்களைப் பொறுத்தமட்டில் கமிஷன் சிபார்சை ஒப்புக்கொள்ளமாட்டோம். கேரளத்திலிருந்து பிரியவிடமாட்டோம் என்று பிடிசாதனையாய் நிற்கும், பனம்பள்ளியின், திருகொச்சி காங்கிரஸ் சர்க்காருக்கு சட்டசபையில் முட்டுக் குத்தியாக நின்று இன்றும் ஆதரவளிக்கிறார்கள். திரு-கொச்சி காங்கிரஸ் சட்டசபை கட்சியில் தி. த. நா. கா. எம். எல். ஏ. க்கள் அங்கம் வகித்து காங்கிரஸை ஆதரித்துக்கொண்டே, தேவிகுளம் பீர்மேடு தமிழகத்தோடு இணைய வேண்டுமென்று கோருவது, தேவிகுளம் - பீர்மேடு தமிழர்களுக்கு நீதி கிடைக்க உதவுமா? இதற்கும் மேலாக' இரணியலில் நடந்த தி.த.நா.காங்கிரஸ் கூட்டத்தில் நேசமணி, தேவிகுளம் பீர்மேடு தொழிலாளர் தலைவர் குப்புசாமிக்குப் பதில் கூறுகையில், "தேவிகுளம் பீர்மேடு பற்றி மேலிடம் பாதகமாகத் தீர்ப்புக் கூறுமானால், தி.த.நா.காங்கிரஸ், சர்க்காரையோ காங்கிரஸையோ, காமராஜரையோ எதிர்த்துப் போராடாது" என்ற தமது அந்தரங்கத்தை வெளியிட்டாராம். அதை குப்புசாமியே என்னிடம், ஹோட்டல் எவரெஸ்டில் நேரில் கூறினார்.

தி.த.நா.காங்கிரஸ் தலைமையின் இந்தத் துரோகப் போக்கை தேவிகுளம் - பீர்மேடு த .நா . காங்கிரஸ் செயலாளர் ராமய்யா வெளியில் சொல்லாமல் அடக்கி வைத்துக்கொண்டிருக்கிறார். அதேபொழுதில், சென்னை கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்களின் நடுநிலைமை வகித்த துரோகத்தனத்தையும்' 'ஜீவானந்தம் வாக்குத் தவறியதையும் பத்திரிகைகளுக்கு அறிக்கைவிட்டு, உலகறியச் செய்கிறார் !

ஏன்? அவர் ஒரு தி .த.நா.காங்கிரஸ்காரர். பழியை கம்யூனிஸ்டுகள் தலையில் போட்டு, தமிழர்களுக்காகப் பாடுபட்டுத் தலைமை தாங்குவதான பரம்பரையை அவர் கைவிட முடியுமா?

தமிழரசுக் கழகம்

அண்மையில் தமிழரசுக் கழகத் தலைவர் ம. பொ. சி. "செங்கோலில்" எழுதிய ஒன்றிரண்டு கட்டுரைகளில், ராஜ்ய சீரமைப்பைப் பொருத்தவரை மாற்றுக் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பற்றிய அவருடைய நிர்ணயிப்பைக் கொடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களான காமராஜ், கக்கன், சுப்ரமண்யம், பக்தவத்சலம் ஆகியவர்கள் கூறிய கருத்துக்களை அலசி, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்களென்றும், நேர்மையாகப் போராடவில்லை யென்றும், எடுத்துக்காட்டியிருக்கிறார். அவர்கள் இன்று ராஜ்யச் சீரமைப்புக்கும் எல்லை வகுப்புக்கும் ஆதரவாகக் கூறுவதெல்லாம் தங்கள் தலைமையை—செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாதப் போக்கு என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஈ.வே.ரா. அண்ணாத்துரை ஆகிய தி.க., தி.மு.க. தலைவர்களின் முன் பின் கருத்துக்களை எடுத்துக்காட்டி, அவர்களுடைய முன்னுக்குப்பின் முரண்பட்ட பேச்சுக்களின் சமயோசித வாத பலவீனத்தைப் புட்டுப் புட்டுக் காட்டியிருக்கிறார். என்னுடையவும், ராமமூர்த்தியினுடயவும் சட்டசபைப் பேச்சுக்களை புரியாத புதிர் என்று மதிப்பிட்டிருக்கிறார். தேவிகுளம்—பீர்மேடு பற்றிய எனது முதல் கட்டுரையை "ஜீவானந்தம் மழுப்புகிறார்" என்ற தலைப்பில் கண்டித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி தேச நலனைவிடக் கட்சி நலனையே பெரிதாகக் கருதக்கூடியதென்றும் குற்றஞ் சாட்டியுள்ளார்.

தமிழரசுக் கழகத் தலைவர் மாற்றுக் கட்சிக்காரர்கள் எல்லோருடைய நேர்மையின் மீதும் சகட்டுமேனிக்கு கரும்புள்ளி செம்புள்ளி தீட்டிக் காட்டுகிறார். நல்லது, காட்டட்டும்! தாமும் தமிழரசுக் கழகமும் மட்டுமே, அப்பழுக்கற்ற தமிழ் ராஜ்யவாதிகள் என்று தருக்கிச் செருக்கி, கண்ணாடிக் கூண்டிலிருந்துகொண்டு மற்றவர்மீது கல்லெறியவில்லையென்று துணிச்சல் கொள்கிறார். நல்லது, கொள்ளட்டும்.

வடக்கே சித்தூர் ஜில்லாவில் ம.பொ.சி.யின் தமிழக எல்லை நிர்ணயத்தையும், ஆறு தாலூகாப் போராட்டத்தையும், திருப்பதிப் போராட்டத்தையும் தமிழ்மக்கள் அறிவார்கள். தெற்கேயும் திரு—கொச்சியிலுள்ள ஒன்பது தாலூகாக்களையும் குறிப்பாக தேவிகுளம்—பீர்மேடு தாலூகாக்களையும் 'வெட்டொன்று துண்டிரண்டாக'க் கோரி தமிழரசுக் கழகத் தலைவர் போர்முழக்கம் செய்துவிட்டாரல்லவா? இங்கும் தமிழ்மக்கள் ம.பொ.சி.யின் எல்லை நிர்ணயத்தையும் போராட்டப் போக்கையும் அறியத்தான் போகிறார்கள்! ஐயமில்லை.

தனியே சுமக்க முடியாது!

ம.பொ.சி.யின் கோரிக்கை நியாயமும், வரையறுப்பு வன்மையும், அவருடைய, முடிந்தால் தாலூகா, முடியாவிட்டால் கிராமம் என்ற கொள்கையில் அடங்கியிருக்கிறது என்பதை நுனித்தறிவார் நன்றாக உணரமுடியும்.

"காமராஜரே! தேவிகுளம் பீர்மேடு பகுதியைத் தமிழ்நாட்டுடன் சேர்க்காவிட்டால் ராஜிநாமா செய்வதாக டில்லி சர்க்காரிடம் கூறுங்கள். கிடைக்காவிட்டால் பிறகு பார்த்துக்கொள்ளலாம்" (ம.பொ.சி.யின் மதுரைப் பேச்சு— 22— 11—55 'தினத்தந்தி). இது தமிழரசுக் கழகத் தலைவரின் போராட்டப் பாணி!

ஒன்றுமட்டும் உறுதி. ம.பொ.சி.யின் மேற்கூறிய போக்கு, மொழிவழி ராஜ்ய இயக்கத்தில் 'தமிழ்மக்களின் தன்னேரிலாத் தலைவன் தான்' என்று ஜோடித்துக்காட்டி அவர் திருப்தி உணர்ச்சியடைய உதவலாம். ஆனால், அது தமிழர்களின் ஒன்றுபட்ட, வெற்றிகரமான ராஜ்யச் சீரமைப்பு—ஜனநாயகப் போராட்டத்திற்கு உதவிகரமா யிராது. இந்த முதல் வட்டத்தில், தேவிகுளம்—பீர்மேடுப் போராட்டத்தின் முன்முயற்சியை, ம.பொ.சி. கையிலிருந்து காமராஜர் பிடுங்கிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. போராடும் நிலைமை ஏற்பட்டால், காமராஜருக்கு விரோதமாக தமிழரசுக் கழகத் தலைவராகத் தனித்து நின்று போராடும் பெரும் பாரத்தை—ஆதிசேஷன்போல்—வெற்றிகரமாகச் சுமக்கவும் முடியாது.

மாற்றுக் கட்சிக்காரர்களை மாற்றுக் கட்டையாக இந்த ராஜ்யச் சீரமைப்புப் பிரச்னையிலேயே உறுதியாக நிர்ணயித்துள்ள ம.பொ.சி. தேவிகுளம்—பீர்மேடு பிரச்னையில் எவ்வாறு இறுதிவரைப் போராடுவார் என்பது பொதுவாகத் தமிழர்களுக்கும் குறிப்பாக தேவிகுளம்— பீர்மேடு தமிழர்களுக்கும் போகப் போகத் தெரியும்.

திராவிடக் கழகம்

இதுவரை 'திராவிட நாட்டு'க்காகப் போராடி வந்த ஈ. வெ. ரா. திடீரென தமிழகத்திலிருந்து மலையாளிகளை விரட்டக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார். கருத்துப் பிரசாரத்தில் இஷ்டம்போல் பிரயாணம் செய்யும் 'பெரியார்' அவர். 'பணிக்கர் கேட்ட பொழுது தேவிகுளம்-பீர்மேட்டை கேரளத்திற்குக் கொடுத்தாராம்!' தமிழர்கள் கோபிக்கக் கண்டதும் அந்தத் தாலூகாக்கள் சென்னையோடு இணையவேண்டும் என்கிறார். இத்தகைய, 'க்ஷணச் சித்தம், க்ஷணப் பித்தம் கொண்ட' 'திராவிடத் தந்தை', தேவிகுளம்— பீர்மேடு மீட்சிப் போராட்டத்தில் குதிக்கும்படி, வழக்கம்போல் தமிழ் மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். ம.பொ.சி.யும் 'ஒத்துழைக்கத் தயார்' என்று பதில் கொடுத்தார். அரசாங்கக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம், குட்டிகிருஷ்ண நாயரின் கேள்விக்குப் பதில் சொல்லும்போது, "ஈ.வெ.ரா.வின் பேச்சை நான் வழக்கமாகப் மதிப்பதில்லை' என்றார். இத்தகைய நவக்கிரகத் தலைவர்கள், தேவிகுளம்-பீர்மேடுத் தமிழர்களுக்காக, ஓரணியாகப் போரணி வகுத்து நிற்கிறார்களாம்.

தி. மு. கழகம்

தி.மு.க. பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் அறிக்கையும் சரி, அண்ணாத்துரை பேச்சும் சரி, ஒன்பது தாலூகா வாதமே பேசுகின்றன. "தி.மு. க.—வைப் பொறுத்தவரை, தேவிகுளர், பீர்மேடு, நெய்யாற்றின்கரை, சித்தூர் ஆகிய நான்கு தாலூகாக்கள் தமிழகத்துடன் சேரவேண்டிய விளக்கத்தையும் அதற்குள்ள உரிமையையும் திட்டவட்டமாகத் தெரிவிப்பதையும் அனைவரும் அறிவர். அதுமட்டுமல்ல : தி.மு.க. திராவிடக் கூட்டாட்சியை நிறுவ, எந்த அளவு உறுதிகொண்டிருக்கிறதோ, அதே போன்றே திராவிடத்திலுள்ள எந்த மொழிவழிப் பகுதியினரும் பிறரின் உரிமையைப் பறிக்க செய்யப்படும் அநீதிகளைத் தகர்த்தெறியும் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்" என்று கொச்சி சித்தூர் தமிழக இணைப்பு மகாநாட்டில் தி. மு. க.உதவிப் பொதுச் செயலாளர் பேசி யிருக்கிறார் (தினத் தந்தி 11-11-55). மலையாளப் பிரதேசத்தை மிகுதியாக உடைய சித்தூர், நெய்யாற்றின்கரைத் தாலூகாக்களை ரூபாய்க்கு பதினாறு அணாவாகக் கோருவதும், தேவிகுளம்-பீர்மேடு விஷயத்தில் தி.த.நா. காங்கிரஸ் நினைவூட்டிய அளவு கூட, பள்ளிவாசல், பெருவந்தானம் பகுதிகளை நினைவூட்டாதிருப்பதும், கூடலூர் தாலுக்காவைப் பற்றி 'கப்சிப்' என்றிருப்பதும், தி.மு.க. தமிழ் ராஜ்ய வெறியில் தி.த.நா.காங்கிரஸ், தமிழரசுக் கழகங்களுக்கு ஒரு அடி முன்னால் பாய்வதையே காட்டுகிறது. சொல்லில்தான் சிங்காரமாக, மொழிவழிப் பிரிதலும் இனவ வழிச் சேர்தலும் என்கிறார்கள். கோரிக்கையில் மலையாளிப் பிரதேசமும் தமிழ் ராஜ்யத்திற்கு வேண்டுமென்கிறார்கள். மலையாளி தமிழன் இரண்டு பேருக்கும் 'இன நியாயம்' வழங்கும் நிதானத்தை விட்டு, தமிழ் ராஜ்ய வெறியோடு, "போராட்டம்" என்று முழங்குகிறார்கள். அதோடு மட்டுமல்ல: கம்யூனிஸ்டுகளை 'இனத் துரோகிகளாக்க'த் துடிக்கிறார்கள்.

தி.மு.க. தமிழ்த் திராவிடர்களால், அவர்களுடைய கோரிக்கை நியாயமென்று, அவர்களுடைய இனச் சகோதரர்களான ஒரு மலையாளித் திராவிடனையாவது ஒப்புக் கொள்ளச் செய்ய முடியுமா? தி.மு.க.வின் பார்வையில் 'திராவிட நீதி' என்பது, தமிழனுக்கொரு நீதி, மலையாளிக்கொரு நீதியா? இவர்கள் ஜனநாயக அடிப்படையில், தமிழனும் மலையாளியும் ஒப்புக் கொண்டு சுமுகப் பைசல் காண்பதற்காகக் கோரிக்கை வைக்கிறார்களா? அல்லது தமிழகத்திலுள்ள காங்கிரஸ், தமிழரசுக் கழகம், தி.க. ஆகியவை களை விடத் தாங்கள் தான் தமிழகத்தின் தீவிரத் தலைமை விளம்பரப்படுத்திக் கொள்ள கோரிக்கை வைக்கிறார்களா? போகத் தெரியும். தேவிகுளம்—பீர்மேடு தமிழர்களும் தமிழர்களும் புரிந்து கொள்வார்கள், நிச்சயம்.

நேருவின் 'மண்டலக் கவுன்ஸில்' யோசனை

மொழிவழி ராஜ்ய அமைப்பிலும், கிராம அடிப்படையில் வகுப்பிலும் கம்யூனிஸ்டுகள் போன்று உறுதியாக நில்லாது, தேவிகுளம்-பீர்மேடு வீரர்களாக மாறி, "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ" என்று எங்களை அவதூறு செய்த மாற்றுக் கட்சிக்காரர்களுக்கு மற்றொரு சோதனை வந்திருக்கிறது. யூனியன் அரசாங்க முதலமைச்சர் நேருவின் யோச்சனைகும், தேசீய ஒற்றுமைபைக் காட்டி, சீரமைப்பில் யின் முதலிடத்தை மறைக்கும் சூறாவளிப் பிரசாரத்திற்கும் யார் பதில் கொடுக்கிறார்கள், பார்ப்போம்.