தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்/1. தொந்தியைச் சந்தியுங்கள்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
1. தொந்தியைச் சந்தியுங்கள்

வயிறும் வாழ்வும்

எண்சாண் உடம்பு என்று நமது எழில் நிறைந்த உடம்பினை அளந்து, அழகுறக் கூறிச் சென்ற நமது முன்னோர்கள். அதிலே உள்ள வயிற்றுக்கும் ஒர் வரம்பு கட்டுவதுபோல, ஒரு சாண் வயிறு என்றும் உறுதிப்படுத்திக் காட்டியிருக்கின்றனர்.

ஒரு சாண் வயிறு இல்லாட்டா, இந்த உலகத்தில் ஏது கலாட்டா என்று கேலியாகத் தத்துவம் பேசும் சினிமா பாடல் ஒன்றையும் , நாம் அடிக்கடி கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்.

திரைகடல் ஒடுவதும், தீக்குள் சாடுவதும், திரவியம் தேடுவதும், உறவினில் கூடுவதும் அனைத்தும் இந்த ஒரு சாண் வயிற்றுக்குத்தான் என்றால் அது மிகையல்ல. முற்றிலும் உண்மையே!

முயற்சியுடைய வாழ்க்கைக்கும், முன்னேற்றம் விரும்புகின்ற யாக்கைக்கும், இந்த சாண் வயிற்றின் சாகசம் நிச்சயம் தேவைப்படுகிறது. சாம்ராஜ்ஜியம் எழுந்தது, சரிந்தது, நாகரிகம் பிறந்தது. அழிந்தது, புதிய சகாப்தம் எழுந்ததும், மனிதனை ஆட்டிப் படைத்த இந்த சாண் வயிறுதான் முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

இடும்பை கூர் என் வயிறே, உன்னோடு வாழ்தல் அரிது என்று ஒளவையார் நொந்து நைந்து பாடியதும் இந்த வயிற்றைப் பார்த்துத்தான்.

வயிற்றை வைத்துத்தான் வாழ்வே அமைகிறது என்றால், அதை மறுப்பாரும் உண்டோ!

அதனால் தான் வயிற்றை நடுநாயகமாக உடலில் வைத்திருக்கிறான் இறைவன் என்று கூட நமக்கு நினைக்கத் தோன்றுகிறது.

வயிற்றை வளர்ப்பதிலும் வயிற்றைக் கெடுப்பதிலும், வாய்க்கு முழுப்பங்கு உண்டு. சாண் வயிற்றை சிலேட்டைப் போலத் தட்டையாகக் காட்டுவதிலும், பானையைப் போல பெருக்கிக் காட்டுவதிலும், வாயே பெரிய வேலை செய்து கொண்டு வருகிறது.

யாகாவாராயினும் நாகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு என்று அல்ல, சோகாப்பர் சுகம் இழக்கப்பட்டு என்று தான் பாட வேண்டியிருக்கிறது.

நாவினைக் காக்காவிட்டால் நூலிழை இடுப்பில், ஆலிலை போல விளங்கும் வயிறானது, சாலாகப் பெருத்துவிட, அதனால் சுகம் இழந்து தேம்பி நிற்க வேண்டி வரும் என்ற நிலையே உருவாகிவிடும்.

இந்த நிலை வராமல் எழிலோடு வாழவேண்டும். அதுவே மனித வாழ்க்கையாகும். மணியான வாழ்க்கையும் ஆகும்.

நிமிர்ந்து நில்லுங்கள்:

மனிதனை ஒரு சமூகத்தோடு சேர்ந்து வாழும் மிருகம் என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுவார்கள். ஐந்தறிவுள்ள மிருகங்கள், அதற்கும் குறைந்த அறிவு உள்ள உயிர்கள் இவற்றைவிட, மேலான ஒரு அறிவை, பகுத்தறிவு என்று பெற்றுக்கொண்டு மனிதன் மதிப்போடு வாழ வேண்டும். ஆனால் வாழவில்லை.

சிரிக்கத் தெரிந்தவனாக, சிந்திக்க முடிந்தனவாக, பேசப் புரிந்தவனாக, பேராண்மை மிக்கவனாகவும் மனிதன் இருக்கிறான். அத்துடன் மட்டுமல்ல, அவன் நிமிர்ந்து நிற்கக் கூடிய ஓர் அறிவுள்ள ஆண்மையுள்ள ஜீவன் என்பதையும் அவன் மறந்து போய் வாழ்கிறான்.

நிமிர்ந்து நிற்பதற்கும் வயிற்றுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் இருக்கிறது. நிதானமாகவே நாம் யோசிக்கலாம்.

உடல் முழுவதும் எலும்புகளின் இணைப்பால் உருவாகி, அதன்மேல் சட்டை போன்ற அமைப்புள்ள தசைகள் கூட்டம் அணைத்துக் கொண்டு இருக்க, அதற்கிடையே நரம்புக்கூட்டம் இரத்தக்குழாய்கள் கூட்டம் போன்ற அமைப்புகள் ஏராளம் இருந்து கொண்டு, சீராக சிறப்பாகப் பணியாற்றுகின்றன என்பது நமக்கெல்லாம் நன்கு தெரியும்.

எலும்பும் தசைகளும் சேர்ந்து ஓர் உறுப்பை உடலில் உண்டாக்கியிருப்பது பொதுத் தன்மை என்றால், வயிறு மட்டும் அதற்கு விதிவிலக்காக அமைந்துவிட்டிருக்கிறது. அதுவே வயிற்றின் தனித்தன்மை, மனித வாழ்வின் புனிதத் தன்மை என்றும் நாம் சொல்லலாம்.

வயிறு எங்கே இருக்கிறது? எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது? உங்கள் உடம்பை நீங்கள் ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள்.

மார்பு எலும்புகளுக்கும் விலா எலும்புகளுக்கும் கீழ்ப்பகுதியிலே தொடங்கி, இடுப்பெலும்பிற்கும் மேலான பாகம் வரை பரவியுள்ள வளமான பாகமே வயிற்றுப் பகுதியாகும். இந்த இடைப்பட்ட பகுதிக்கும் பரப்பிற்கும் எந்த விதமான எலும்பின் ஆதாரமோ, ஆதரவோ வயிற்றுக்குக் கிடையாது.

எலும்பின் பாதுகாப்பின்றி, பக்கபலம் எதுவுமின்றி, எவ்வாறு வயிறு விறைப்பாக இருக்கிறது, இயங்குகிறது என்றால், அதுதான் வயிற்றினுடைய அமைப்பின் அற்புதம். அந்த வயிற்றுத் தசைகள் ஒரு குறிப்பிட்ட வலுவான தசைத்திசுக்களால் ஆக்கப்பட்டிருக்கின்றன.

நாம் உண்ணும் உணவை செரிக்கச் செய்கின்ற சீரண உறுப்புக்களின் சீரான இயக்கத்திற்கும், செழிப்பான அமைப்புக்கும் பூரண பாதுகாப்பாகவே இந்த வயிற்றுத் தசைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கோட்டைச் சுவர்கள் போல் பாதுகாப்புக்காக மட்டும் இந்தத்தசைகள் இருக்கவில்லை. சீரண அவயவங்களின் திறமையான பணிகளுக்கும், இந்த வயிற்றுத் தசைகளே வாழ்வளிக்கும் வகையில் வலிமையுடன் விளங்குகின்றன.

கயிற்றுக் கட்டில் ஒன்று இருக்கிறது. அந்தக் கட்டிலில் கயிறு விறைப்பாகவும் இறுக்கமாகவும் இருந்தால்தான் அது கட்டில். இல்லையேல் அது தொட்டில். கட்டிலில் படுத்தால் களிப்பிருக்கும்! குழியாகக் கிடக்கும் கயிற்றுத் தொட்டிலில் விழுந்தால் எப்படி இருக்கும்? உடம்பு வலிக்குமன்றோ?

அதேபோல்தான் இதுவும். வயிற்றுத் தசைகள் வளமாகவும் திறமாகவும் இருந்தால் தான், சீரான அவயவங்கள் அனைத்தும் தங்களுக்குரிய இடங்களில் எப்பொழுதும் இருந்து சுதந்திரமாகவும் இதந்தரும் முறையிலும் பணியாற்ற முடியும்.

வயிற்றுத் தசைகள் வலுவிழந்தால், வயிற்றுத் தசைத்திசுக்கள் செழுமையிழந்தால், கட்டுக்கோப்போடு இருக்குமா, வயிறு விரியத் தொடங்கும். பிறகு சரியத் துவங்கும். ஆகவே, நேராக ஒரு மனிதன் நிமிர்ந்து நிற்க வேண்டுமென்றால் எலும்புக் கூட்டின் அமைப்பு மட்டும் போதாது. வயிற்றுத் தசைகள் வலிவோடும் வளமையோடும் இருக்க வேண்டியது மிக மிக முக்கியம் ஆகும்.


விரிகின்ற வயிறு

அறிவு வளர்கிறது என்றால் ஆனந்தம் அடையலாம். அன்புடன் பாராட்டலாம். ஆனால் வயிறு வளர்கிறது. விரிகிறது என்றால் என்ன ஆகும்? அதற்கு ஆதரவு தர முடியுமா? முடியாது.

வளர்கிறது வயிறென்றால, தளர்கிறது வாழ்வு என்பது தான் பொருள். வாழ்வே தடம் மாறுகிறது என்பதே அதன் அர்த்தம். பிறகெப்படி ஆதரிக்க முடியும்?

தாய் சுமப்பாள் தன் மகவை பத்தே மாதம்

தகப்பனுக்கோ அச்சுமைதான் ஆயுட்காலம்!

என்னும் கவிதை வரிகளைப் படியுங்கள். பருத்திருக்கும் தன் வயிற்றுச் சுமையிலிருந்து பத்தே மாதத்தில் ஒரு பெண் விடுதலை பெற்று விடுகிறாள். அந்தச் சுமை, சுவையான மழலை பேசும் மதலையாகப் பிறக்கிறது. அந்தச் சுவையான சுமை ஆயுள்காலம் முழுதும் தந்தைக்கும் உண்டு என்பதே அதன் பொருள்.

ஆனால், ஆண் பெற்றிருக்கின்ற வயிற்றின் பெருக்கத்தைக் கண்டால், அது பத்துமாத பந்தமா இல்லை, ஆயுள்காலம் முழுதும் சொந்தமா என்ற அளவிலல்லவா தொடர்ந்து கொண்டே போகிறது! வயிறு பெருத்திருக்கும் மனிதர்களைப் பார்த்து நித்திய காப்பிணி என்று நிர்த்தாட்சண்யமாக நினைத்து, மனம் நோகக் கேலி பேசும் மனிதர்களும் உண்டு. தொந்தியின் தோற்றமும் அப்படித்தானே இருக்கிறது.

கர்ப்பமுற்ற பெண்களைப் போல, கனத்துப் பெருத்த வயிறு வந்து விட்ட பிறகு, வளர்ந்துவிட்ட பிறகு, அதனைக் காலமெல்லாம் சுமந்து தொலைக்கவேண்டும். என்பதைத் தவிர, அதனால் எத்தனை அவலங்கள் துயரங்கள் அடைய நேரிடுகின்றன என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். வளரும் வயிறு

வயிற்றின் தசைகள் தளர்ந்து விட்டால், இறுக்கத் தன்மையை இழந்துவிட்டால், சீராக இருக்கின்ற வயிறு சரியத் தொடங்கும். தசைகளின் இறுக்கம் தளரத் தளர, வயிறு முன்புறமாகக் கவிழ்ந்து கொள்ளும். அதனால் வயிறு முன்பக்கமாகவும், பக்கவாட்டிலும் பிதுங்கிக் கொள்ளத் தொடங்கும். இவ்வாறு தொய்ந்தும் துவண்டும், சாய்ந்தும் சரிந்தும் வயிறு கவிழத் தொடங்கியவுடன், மனித உடல் அமைப்பின் தோற்றமும் தோரணையும் மாற்றம் பெறுவதைக் காணச் சகிக்க இயலாமல் அல்லவா போகிறது.

தொந்தியின் தொடக்கம்

தொந்தி வளரத் தொடங்கிவிட்டது நமக்கு எப்படி தெரியும்? ஆரம்ப காலத்தில் நிற்கும் பொழுது, பார்த்தால் புலனாகாது. உட்கார்ந்திருக்கும் பொழுது வயிற்றினைப் பார்க்கையில் அடி வயிறு தளர்ந்து தொங்குவது போல் சின்னஞ்சிறிய மடிப்பு விழுந்து, கைப்பிடிக்குள் அடங்குவது போன்ற தன்மையில் வெளிவந்திருக்கும்.

தொந்திவரத் தொடங்கிவிட்டது என்றால், முதலில் அதைப் பார்க்க மிகவும் பெருமையாக இருக்கும். இளந்தொந்தி என்று பூரிப்புடன் தடவிக் கொடுத்துப் புளகாங்கிதம் அடையத் தூண்டும். பணம் சேர்கிறது என்று நினைத்து, பணக்காரர் என்று பலர் பேசவும், நல்ல வசதியுடன் வாழ்கிறார் என்று மற்றவர் புகழவும் இது பயன்படும் என்பதால் தொடக்கக் காலத்தில் மகிழ்ச்சியுடன் தொந்தி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இன்பம் பெறவும் பயன்படுகிறது.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் தொந்தி நல்லமுறையிலே வளர்ந்து வர வர தடவிக் களித்து சுகம் பெற்ற கதைகள். அதனின்றும் விடுபடத் தொடங்கும். ஆமாம், முன்னேறி வரும் வயிறு மற்றவர்களின் கண்ணேறு பட்டுவிடக் கூடிய நிலையில் அல்லவா காட்சியளிக்கிறது!

பணக்காரருக்குப் பளபளக்கும் காரும், பல வண்ணத் தோற்றம் அளிக்கும் பங்களாவும், படோடோபமான உடைகளும் தான் அறிகுறி என்பதில்லை. பெருத்தத் தொந்தியும் பருத்திருக்கும் உடம்பும் தான் பெருமை என்றவாறு, இன்றைய மக்களைத் தொந்தி தத்தெடுத்துக் கொண்டிருக்கிறது.

பாட்டி வீட்டிலே ஒரு பழம் பானை. அந்தப் பானையின் ஒரு புறம் ஒட்டை இருந்தது. ஒட்டையின் வழியே ஒரு சுண்டெலி புகுந்து, உள்ளே இருந்த நெல்லைத் தின்று, வயிறு பெருத்துப் போகவே, வெளியே வர முடியாமல் திண்டாடியது. பிறகு பாட்டியிடம் பட்ட அடியும் மரணமும் - நமக்கெல்லாம் பால பாடமாகும்.

வயிறு தற்காலிகமாகப் பெருத்துப் போன சுண்டெலிபட்டபாடு நமக்குப் புரிந்திருக்கையில், உடலோடே ஒட்டிக் கொள்வது போல வந்து விட்டத் தொந்தியால், வேண்டாத விருந்தாளி போல் வாசம் செய்யும் தொந்தியால், உடல் எத்தனை எத்தனை இக்கட்டான நிலைக்கு இன்னலுக்கு ஆளாக்கி விடுகிறது என்பதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

ஒரு தொந்தியானது உருவாகி விட்டால், அதுவும் பெரிதாக வளர்ந்து விட்டால், அதன் விரிவானது பார்வைக்குப் பரிதாபம் தான். ஆனால் அதன் பருமனோ மிக மோசம் தான்.

அந்தத் தொந்தியின் எடை மட்டும் 25 பவுண்டுக்கு மேலாக உருவாகிவிடுகிறது.

அதாவது, வேண்டாத சுமையாக வயிற்றுக்கு வந்து, விரும்பாமலே ஒரு 25 பவுண்டு எடையைச் சுமந்து கொண்டு, இறக்கி வைக்க இயலாமல் இருப்பது கொடுமை அல்லவா?

இறக்கி வைப்பது அல்ல! அதை இறக்கித் தொலைப்பதும் நம் கடமை அல்லவா?