உள்ளடக்கத்துக்குச் செல்

தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இளம்பூரணம்

விக்கிமூலம் இலிருந்து

தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்

[தொகு]

இளம்பூரணர் உரை

[தொகு]
பிழையில்லா மெய்ப்பதிப்பு

(வ.உ.சிதம்பரனார் பதிப்பு)

[தொகு]

சிறப்புப் பாயிரம்

[தொகு]
வடவேங்கடந் தென்குமரி ()                                        வட வேங்கடம் தென் குமரி
யாயிடைத் ()                                                                     ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து ()                                             தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்குஞ் சொல்லும் பொருளு நாடிச்                       வழக்கும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு (05)       செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட வெணணிப் ()          முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் ()             புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டிய னவையத் ()                நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து
தறங்கரை நாவி னான்மறை முற்றிய ()                  அறம் கரை நாவின் நால் மறை முற்றிய
வதங்கோட் டாசாற் கரிறபத் தெரிந்து (10)               அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து
மயங்கா மரபி னெழுத்துமுறை காட்டி ()                  மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்குநீர் வரைப்பி னைந்திர நிறைந்த ()                    மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப் ()      தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே. (14)                        பல் புகழ் நிறுத்த படிமையோனே.

இளம்பூரணர் உரை

[தொகு]
எந்நூல் உரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்க என்பது மரபு என்னை?
ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவல் அன்றே
- என்பவாகலின்.
பாயிரம் என்பது புறவுரை. அது நூற்குப் புறவுரையேல் அதுகேட்டு என்னை பயன்எனின், கற்றுவல்ல கணவற்குக் கற்புடையாள் போல இன்றியமையாச் சிறப்பிற்றாயும், திருவமைந்த மாநகரத்திற்கு உருவமைந்த வாயின் மாடம் போல அலங்காரமாதற் சிறப்பிற்றாயும்

வருதலானும், பாயிரம் கேளாதே நூல் கேட்குமேயெனில் குறிச்சி புக்க மான் போல மாணாக்கன் இடர்ப்படுமாகலானும், பாயிரங்கேட்டல் பயனுடைத்தாயிற்று.

அப்பாயிரம் பொதுவும் சிறப்பும் என இருவகைத்து.
எல்லா நூன்முகத்தும் பொதுவாக உரைக்கப்படுதலிற் பொதுவெனப் பட்டது.
ஈவோன் தன்மை முதலிய நூலுட் சொல்லும் பொருளல்லாத புறப்பொருளைக் கூறும் பொதுப்பாயிரம் போலாது, நூலகத்தெல்லாம் பயத்தன் மாத்திரையேயன்றி, அந்நூலிற் சொல்லப்படுகின்ற பொருள் முதலிய உணர்த்தலின், அணியிழை மகளிர்க்கு அவ்வணியிற் சிறந்த ஆடை போல நூற்குச் சிறத்தலாற் சிறப்பெனப்பட்டது.
அவற்றுள் பொது நால்வகைத்து.
ஈவோன் றன்மை யீத லியற்கை
கொள்வோன் றன்மை கோடன் மரபென
ஈரிரண் டென்ப பொதுவின் றொகையே.
-இதனான் அறிக.
ஈவோர் கற்கப்படுவோரும் கற்கப்படாதோரும் என இருவகையர். கற்கப்படுவோர் நான்கு திறத்தான் உவமம் கூறப்படுவர்.
மலைநிலம் பூவே துலாக்கோலென் றின்னர்
உலைவி லுணர்வுடை யார்.
-இதனான் அறிக.
இனிக் கற்கப்படாதோர்க்குக் கூறும் உவமமும் நால்வகைத்து.
கழற்பெய் குடமே மடற்பனை முடத்தெங்கு
குண்டிகைப் பருத்தியோ டிவையென மொழிப.
-இதனான் அறிக.
ஈதலியற்கை:
ஈதலியல்பே யியல்புறக் கிளப்பிற்
பொழிப்பே யகல நுட்ப மெச்சமெனப்
பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன்
புகழ்ந்த மதியிற் பொருந்து மோரையிற்
றெளிந்த வறிவினன் றெய்வம் வாழ்த்திக்
கொள்வோ னுணர்வகை யறிந்தவன் கொள்வரக்
கொடுத்தன் மரபெனக் கூறினர் புலவர்.
-இதனான் அறிக.

கொள்வோர் கற்பிக்கப்படுவோரும் கற்பிக்கப்படாதோரும் என இருவகையர். கற்பிக்கப்படுவோர் அறுவகையர். அவர்தாம்,

தன்மக னாசான் மகனே மன்மகன்
பொருணனி கொடுப்போன் வழிபடு வோனே
யுரைகோ ளாளனோ டிவரென மொழிப.
-இதனான் அறிக.
இவர் தன்மை:
அன்னங் கிளியே நன்னிற நெய்யரி
யானை யானே றென்றிவை போலக்
கூறிக் கொள்பவ குணமாண் டோரே".
-இதனான் அறிக.
இனிக் கற்பிக்கப்படாதார் எண்வகையர்.
மடிமானி பொச்சாப்பன் காமுகன் கள்வன்
அடுநோய்ப் பிணியாள னாறாச் சினத்தன்
தடுமாறு நெஞ்சத் தவனுள்ளிட் டெண்மர்
நெடுநூலைக் கற்கலாகா தார்"
-இதனான் அறிக.
இவர் தன்மை:
குரங்கெறி விளங்கா யெருமை யாடே
தோணி யென்றாங் கிவையென மொழிப"
-இதனான் அறிக.
கோடன் மரபு:
கொள்வோன் முறைமை கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடன் முனியான்
முன்னும் பின்னு மிரவினும் பகலினும்
அகலா னாகி யன்போடு புணர்ந்தாங்
காசற வுணர்ந்தான் வாவென வந்தாங்
கிருவென விருந்தே டவிழென வவிழ்த்துச்
சொல்லெனச் சொல்லிப் போவெனப் போகி
நெஞ்சுகள னாகச் செவிவா யாகக்
கேட்டவை கேட்டவை வல்ல னாகிப்
போற்றிக் கோட லவனது தொழிலே;
எத்திறத் தாசா னுவக்கு மத்திறம்
அறத்திற் றிரியாப் படர்ச்சி வழிபாடே;
செல்வன் றெரிகிற்பான் மெய்ந்நோக்கிக் காண்கிற்பான்
பல்லுரையுங் கேட்பான் மிகப்பெரிதும் காதலான்
தெய்வத்தைப் போல மதிப்பான் றிரிபில்லான்
இவ்வாறு மாண்பு முடையாற் குரைப்பவே
செவ்விதி னூலைத் தெரிந்து;
வழக்கி னிலக்கண மிழுக்கின் றறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசாற் சார்ந்தவை யமைவரக் கேட்டல்
அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்த லென்றிவை
கடனாக் கொளினே மடநனி யிகக்கும்;
அனைய னல்லோன் கொள்குவ னாயின்
வினையி னுழப்போடு பயன்றலைப் படாஅன்.
-இவற்றான் அறிக.
இவ்வாறு கோடன்மரபுடைய மாணாக்கன் நூன்முற்ற அறிந்தானாமாறு:
ஆசா னுரைத்தவை யமைவரக் கொளினுங்
காற்கூ றல்லது பற்றல னாகும்;
அவ்வினை யாளரொடு பயில்வகை யொருகால்
செவ்விதி னுரைப்ப வவ்விரு காலும்
மையறு புலமை மாண்புநனி யுடைத்தே.
-இவற்றான் அறிக.
சிறப்புப் பதினொரு வகைத்து.
ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோ டாயெண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே;
காலங் களனே காரண மென்றிம்
மூவகை யேற்றி மொழிநரு முளரே.
இவற்றான் அறிக.
இனி, அச்சிறப்பிலக்கணம் செப்புமாறு:
பாயிரத் திலக்கணம் பகருங் காலை
நூனுதல் பொருளைத் தன்னகத் தடக்கி
ஆசிரியத் தானும் வெண்பா வானு
மருவிய வகையா னுவறல் வேண்டும்.
-இதனான் அறிக.
நூல் செய்தான் பாயிரம் செய்வானல்லன்,
தோன்றாத் தோற்றித் துறைபல முடிப்பினுந்
தான்றற் புகழ்தல் தகுதி யன்றே
-என்பவாகலின்.
பாயிரம் செய்வார், தன் ஆசிரியனும் தன்னோடு ஒருங்கு கற்ற மாணாக்கனும், தன் மாணாக்கனும் என மூவகையர்.
அவற்றுள் இந்நூற்குப் பாயிரம் செய்தார் தன்னோடு ஒருங்கு கற்ற பனம்பாரனார்.

இதன்பொருள்

[தொகு]
வடவேங்கடம் தென் குமரி= வடக்கின்கண் உளதாகிய வேங்கடமும் தெற்கின்கண் உளதாகிய குமரியுமாகிய;
அ இடை= அவற்றை எல்லையாக உடையநிலத்து வழங்கும்;
தமிழ் கூறும் நல் உலகத்து= தமிழ்மொழியினைக் கூறும் நன்மக்களான் வழங்கும்;
வழக்கும் செய்யுளும் அ இரு முதலின்= வழக்கும் செய்யுளுமாகிய இரு காரணத்தானும்;
எழுத்தும் சொல்லும்= எழுத்திலக்கணத்தையும், சொல்லிலக்கணத்தையும்;
பொருளும் நாடி= பொருள் இலக்கணத்தையும் ஆராய்ந்து;
செந்தமிழ் இயற்கை சிவணிய= (அவ்வாராய்ச்சியிற் குறைபாடு உடையவற்றிற்கு) செந்தமிழினது இயல்பு பொருந்தின;
நிலத்தோடு முந்து நூல் கண்டு= செந்தமிழ் வழக்கோடு முதல் நூல்களிற் சொன்னவற்றினைக் கண்டு;
முறைப்பட எண்ணி= அவ்விலக்கணம் முறைப்பட ஆராய்ந்து;
நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து= மாற்றாரது நிலத்தினைத் தன்கீழ் வாழ்வார்க்குக் கொண்டு கொடுக்கும் :போர்த்திருவினையுடைய பாண்டியன் மாகீர்த்தியது அவைக்கண்ணே;
அறம் கரை நாவில் நால் மறை முற்றிய= (அவ்வவையுள்ளார்க்கு ஏற்பத் தெரிந்தே நின்ற) மெய் சொல்லும் நாவினையுடைய நான்கு :வேதத்தினையும் முற்றவுணர்ந்த;
அதங்கோட்டு ஆசாற்கு= அதங்கோடு என்கின்ற ஊரின் ஆசானுக்கு;
அரில் தபத் தெரிந்து= கடா அறத் தெரிந்து கூறி;
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி= (அவ்வெழுத்தும் சொல்லும் செய்கின்றுழி முன்னை நூல்போல எழுத்திலக்கணம் சொல்லுட் :சென்று) :மயங்காத முறைமையானே, எழுத்திலக்கணத்தினை வேறு தெரிவித்து;
மல்கு நீர் வரைப்பின்= (அவ்வாறு செய்கின்றுழி) மிக்க நீரையுடைய கடலாகிய எல்லையையுடைய உலகின் கண்ணே;
ஐந்திரம் நிறைந்த= இந்திரனாற் செய்யப்பட்ட ஐந்திர வியாகரணத்தினை நிறைய அறிந்த;
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி= பழைய காப்பியக் குடியினுள்ளோன் எனத் தன்பெயரைத் தோற்றுவித்து;
போக்கு அறு பனுவல்= நூற்குச் சொல்லப்பட்ட குற்றங்கள் அற்ற தன் நூலுள்ளே;
புலம் தொகுத்தோன்= அவ்விலக்கணங்களைத் தொகுத்துக் கூறினான், (அவன் யாரெனில்);
பல்புகழ் நிறுத்த படிமையோனே= (தவத்தான் வரும்) பல்புகழ்களை உலகிலே நிறுத்தின தவவொழுக்கத்தினை உடையான்.
"வழக்கும் செய்யுளும் அ இரு முதலின்- எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி- முறைப்பட எண்ணி- பாண்டியன் அவையத்து- அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து- எழுத்திலக்கணத்தைச் சொல்லும் முறைமை- மயங்கா மரபிற்- காட்டி- தொல்காப்பியனெனத் தன்பெயர் தோற்றி- பனுவலுள்- புலந்தொகுத்தோன்- படிமையோன்" - எனக் கூட்டுக.
"வடவேங்கடந் தென்குமரி" யெனவே, எல்லை பெறப்பட்டது.
"வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி"னெனவே, நூல் நுதலியதூஉம் பயனும் பெறப்பட்டன.
"முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணி"யெனவே, வழியும் யாப்பும் காரணமும் பெறப்பட்டன.
"பாண்டியன் அவையத்து" எனவே காலமுங் களனும் பெறப்பட்டன.
"அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து" எனவே, கேட்டோர் பெறப்பட்டது.
"தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி"யெனவே, ஆக்கியோன் பெயரும் நூற்பெயரும் பெறப்பட்டன.
மங்கலத்திசையாகலி்ன், வடக்கு முன் கூறப்பட்டது. கடல் கொள்வதன்முன்பு பிறநாடும் உண்மையின் தெற்கும் எல்லை கூறப்பட்டது. கிழக்கும் மேற்கும் பிற நாடு இன்மையின், கூறப்படாவாயின. பிற இரண்டெல்லை கூறாது இம்மலையும் ஆறு்ம கூறியது, அவை தீர்த்தமாகலானும், கேடிலவாதலானும், எல்லாரானும் அறியப்படுதலானுமென்பது. இவை அகப்பாட்டெல்லை.
ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தென்றது, அவ்வெல்லை தமிழ் கூறும் நல்லாசிரியரது என்றவாறு. நல்லாசிரியர்- அகத்தியனார் முதலாயினோர். உலகமென்பது ஆசிரியரை. அ என்றது ஆகுபெயரான், அவற்றை எல்லையாகவுடைய நிலத்தினை. இடை என்பது ஏழாமுருபு. முறைப்பட எண்ணி யென்றது, முந்து நூல்களில், ஒன்றற்குரிய இலக்கணத்தினை ஒன்றன் இலக்கணத்தோடு ஆராய்ந்தாற் போல ஆராயாது, முறைப்பட ஆராய்ந்து என்றவாறு. மற்று நூல் செய்யும் இலக்கணமெல்லாம் இந்நூலுட்படச் செய்தான் என்பது, இம்முறைப்பட எண்ணி என்பதனாற் கொள்க.

அவையாமாறு:

ஓத்தே சூத்திர மெனவிரு வகைய;
நேரின மணியை நிரல்பட வைத்தாங்
கோரினப் பொருளை யொருவழி வைப்ப
தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர். (செய்யுளியல், 171);
நுட்ப மொட்பந் திட்பஞ் சொல்லிற்
சுருக்கங் கருத்து பகுதியோடு தொகைஇ
வருத்தமில் பொருட்பய னிகழ்ச்சி சூத்திரம்;
பொதுவினுஞ் சிறப்பினும் போற்றுங் காலைப்
பெறுதல் பெற்றவை காத்தல் காப்பொடு
பிறிதுபெற நிகழ்த்த வதன்கருத் தாகும்;
அதுவே,
பிண்டந் தொகைவகை குறியே செய்கை
கொண்டியல் புறனடை யென்றதன் விகற்பமோ
டொன்றிய குறியே யொன்று மென்ப;
ஆற்ற தொழுக்கே தேரைப் பாய்வே
சீய நோக்கே பருந்து வீழ்வென்
றாவகை நான்கே கிடக்கைப் பயனே;
பொழிப்பே யகல நுட்ப மெச்சமெனப்
பழிப்பில் சூத்திரப் பயனான் கென்ப;
பாடங் கண்ணழி வுதாரண மென்றிவை
நாடிற் றிரிபில வாகுதல் பொழிப்பே;
தன்னூன் மருங்கினும் பிறநூன் மருங்கினுந்
துன்னிய கடாவின் புறந்தோன்று விகற்பம்
பன்னிய வகல மென்மனார் புலவர்;
ஏதுவி னாங்கவை துடைத்த னுட்பம்;
துடைத்துக்கொள் பொருளை யெச்ச மென்ப.
இவற்றானும் பிறவற்றானும் அறிக.

இனி, நூல்செய்தற்கு உரியானையும், நூல்செய்யும் ஆற்றலையும் சொல்லுதும்:

அப்புல மரிறப வறிந்து முதனூல்
பக்கம் போற்றும் பயந்தெரிந் துலகத்
திட்பமுடைய தெளிவர வுடையோன்
அப்புலம் படைத்தற் கமையு மென்ப;
சூத்திர முரையென் றாயிரு திறனும்
பாற்படப் போற்றல் படைத்த லென்ப
நூற்பய னுணர்ந்த நுண்ணி யோரே.
-இவற்றான் அறிக.
போக்கு அறுதல்- நூற்குக் கூறுங் குற்றங்களற்று நன்மையுளவாதல். அவை,
ஈரைங் குற்றமு மின்றி நேரிதி
னெண்வகை புணர்ப்பின தென்மனார் புலவர்"
-இதனான் அறிக.
"எழுத்தும் சொல்லும் பொருளும்" என வைத்துப் பின்னும் "மயங்கா மரபினெழுத்துமுறை காட்டி" என்றது, பிறநூல் போலச் சொலலுள் :எழுத்தினை மயக்கிக் கூறாது, வேறு சேரக் கூறினாரென்ற தென்பது.

சிறப்புப் பாயிரம் முற்றிற்று.

[தொகு]
பார்க்க
தொல்காப்பியம்-இளம்பூரணம்
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இளம்பூரணம் சிறப்புப் பாயிரம்
தொல்காப்பியம்-இளம்பூரணர்உரை-எழுத்ததிகார முன்னுரை :[[]]
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்1.நூன்மரபு-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்2.மொழிமரபு-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்3.பிறப்பியல்-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்4.புணரியல்-இளம்பூரணர் உரை