தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு/பேருந்து தொழிலில் கூட்டுறவு!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
4. பேருந்து தொழிலில் கூட்டுறவு!
U.M.S. நிறுவி வெற்றி கண்டார்!

ஒன்னரை இலட்சம் ரூபாயோடு மும்பை நகர் சென்ற துரைசாமி, ஒன்னரை ஆண்டு கழித்து வெறும் கையோடு மீண்டும் கோவை நகரை வந்தடைந்தார். என்ன காரணம் இதற்கு?

விட்டதடி ஆசை!
விளாம்பழம் ஒட்டோடே!

ஏதாவது சொந்தமாக - எந்தத் தொழிலாவது செய்யலாம் என்ற எண்ணத்தோடு துரைசாமி பம்பாய் நகர் சென்றார். எந்தத் தொழிலையும் செய்ய முடியாமல்; எடுத்துக் கொண்டு சென்ற அவரளவிலான பெரும் தொகையைச் செலவு செய்துவிட்டு, 'போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடே' என்ற நிலையில் கோவை திரும்பினார். வந்த மச்சானுக்குப் பூ மணமாவது மிஞ்சியது. பாவம், துரைசாமிக்கு வெறும் கைகள்தான் மிஞ்சின!

எனவே, இனிமேல் எந்த ஒரு சொந்தத் தொழிலையும் செய்யக் கூடாது என்ற எண்ணத்தில், விட்டதடி ஆசை விளாம் பழத்து ஒட்டோடே என்ற அனுபவ மொழிக்கேற்ப நடந்து கொண்டார் துரைசாமி!

‘சட்டி சுட்டதடா கை விட்டதடா’ என்பதற்கு ஏற்றவாறு - ஏதாவது ஒரு வேலைக்குச் செல்ல வேண்டும், வாங்கும் சம்பளத்தோடு நிற்க வேண்டும் என்று எண்ணமிட்டார் அவர்.

கோவை நகரில் அப்போது, சர் இராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஓர் இங்லிஷ்காரர் மோட்டார் வண்டி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். துரைசாமி எத்தகையர் என்பதை அவர் அறிந்தவர். அதனால் அவரிடம் சென்று, தங்களது மோட்டார் நிறுவனத்தில் எனக்கு ஓர் இயந்திரம் சார்பான மெக்கானிக் வேலையைத் தந்து உதவுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டார் துரைசாமி.

ஒரே ஒரு பேருந்து :
வாங்கி ஒட்டினார்:

அவர் மீது இரக்கப்பட்ட ஸ்டேன்ஸ், “முதலில் நீ பஞ்சு வியாபாரத்தை விட்டு விடு. என்னிடத்தில் எந்த வேலையும் உனக்குத் தரக் கூடிய தகுதியில் இல்லை. உன்னுடைய திறமை, முயற்சி, எதையும் மீண்டும் வீணடிக்காதே! உனக்கு நான் கூறும் யோசனையைக் கேள். ஒரு பேருந்து வாங்கி அதை வாடகைக்கு ஒட்டு. அதற்கு எட்டாயிரம் ரூபாய் தேவைப்படும். நான் உனக்கு நான்காயிரம் தருகிறேன். மீதியுள்ள நான்காயிரம் ரூபாயை உனது நண்பர்களிடமோ, வேறு யாரிடமோ பெற்று, பேருந்து ஒன்றை வாங்கி ஓட்டு” என்றார் ஸ்டேன்ஸ்!

ஆங்கிலேயரான ஸ்டேன்ஸ் கூறிய அறிவுரையை துரைசாமி ஏற்றுக் கொண்டு; அவர் அளித்த வாக்குக்கு ஏற்றவாறு நான்காயிரம் ரூபாயைப் பெற்றுக் கொண்டார். நமது நண்பர்கள் சிலரைச் சந்தித்து ரூபாய் நான்காயிரத்தையும் திரட்டினார். பேருந்து ஒன்றை விலைக்கு வாங்கினார்.

சொந்தத் தொழில் :
செய்வோர்க்கு அறிவுரை!

கோவையில் அப்போது புகழ்பெற்று விளங்கியவரும், தேவக் கோட்டை நகரைச் சேர்ந்தவருமான திரு. பி.எஸ்.சோமசுந்தரம் செட்டியார், துரைசாமியை அழைத்து, “தம்பி, எந்தத் தொழிலை நீ செய்தாலும் வரும் வருவாய்ப் பணத்தில் பாதிப் பகுதியை முதலுக்கு என்று எடுத்து வைத்துவிடு, மீதியை அந்த முதலின் பாதுகாப்புக்காகக் கையில் வைத்துக் கொள். அது உனக்கு நல்லது” என்ற அறிவுரையைக் கூறினார். அந்த அறிவுரையைத் துரைசாமியும் பின்பற்றினார்.

துரைசாமி விலைக்கு வாங்கிய அந்தப் பேருந்து, 1920-ஆம் ஆண்டில் பொள்ளாச்சி என்ற நகரிலே இருந்து; தமிழ்த் தெய்வமாக மக்கள் போற்றி வணங்கும் முருகப் பெருமான் தெய்வத் தலமான பழநி நகருக்கு ஓட ஆரம்பித்தது. துரைசாமியே அதற்கு ஒட்டுநராகவும் இருந்தார்.

முதலாளியும் துரைசாமியே, தொழிலாளியும் அவரே என்ற நிலையிலே அந்தப் பேருந்து பணியாற்றியதால், மக்கள் இடையே நாளுக்கு நாள் செல்வாக்குப் பெற்று, வருவாயும் பெருகி, செலவினமும் சுருங்கியதால் துரைசாமியிடம் செல்வம் பெருகியது.

ஒரு முறைக்கு இரு முறை பஞ்சு வியாபாரத்தில் துரைசாமி பெருத்த நட்டமடைந்த சம்பவமே அவருக்குரிய பாடமாகவும், எச்சரிக்கையாகவும் அமைந்ததால், தான் பெற்றக் கடன்களையும் திருப்பிக் கொடுத்தார். செல்வமும் அவரிடம் முன்பு போல குவிந்தது.

அமெரிக்காவில் எப்படி ரூத்தர் ஃபோர்டு, மோட்டார் மன்னன் என்று புகழ் பெற்றாரோ, அதைப் போலவே இந்தியாவிலும் புகழ்பெற்ற ஒரு மோட்டார் மன்னனாகவே துரைசாமி திகழ்ந்து வங்கார்.

பேருந்து துறையில் :
நாயுடு செய்த புரட்சி!

மோட்டார் மன்னராக மட்டுமா விளங்கினார்? பேருந்துகள் பயணம் செய்யும் சாலைகள் விவரங்களையும், அதைப் பற்றிய துணுக்கங்களையும் நன்றாக அவர் அறிந்தார். பேருந்து ஒட்டுநராக இருந்த துரைசாமி, மோட்டார் தொழில் சம்பந்தப்பட்ட பொறியியல் திறமையாளராகவும் விளங்கி வந்தார்.

ஒரே ஒரு பேருந்துக்கு முதலாளியாக இருந்த துரைசாமி நாயுடு, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்களில் எல்லாம் தனது பேருந்துகள் ஓடுமளவுக்கு அதிகப்படியான பேருந்துகளை விலைக்கு வாங்கியும், மோட்டார் தொழிற்சாலையை உருவாக்கி, பேருந்துகளை உற்பத்திச் செய்யுமளவுக்கும் உயர்ந்தார்.

கோவை மாவட்டம் முழுவதுமல்லாமல், நீலகிரி மாவட்டம், மதுரை மாவட்டம், திருவாங்கூர் - கொச்சி - சமஸ்தானங்களின் முக்கிய மாவட்ட நகரங்களையும் இணைக்குமளவுக்கு அவரது பேருந்துகள் ஏராளமாக, அடிக்கடி குறித்த நேரத்தில் ஒடிக் கொண்டே இருப்பதைப் பார்க்கலாம்.

யுனைடெட் மோட்டார் சர்விஸ் என்ற ஒரு நிருவாகம் யு.எம்.எஸ். என்ற பெயரில் கோவை நகரில் உருவானது. அதன் நேரடி நிர்வாகம் துரைசாமி நாயுடு மேற்பார்வையிலே இயங்கியது. இந்த நிருவாகத்தில் மட்டும் இருநூறு பேருந்துகள் இருக்கின்றன.

அந்த இரு நூறு பேருந்துகள், ஏறக்குறைய பல சாலைகளில் 15 ஆயிரம் மைலுக்கு மேல் தினந்தோறும் ஓடிக் கொண்டிருக் கின்றன. அதனால், நாள்தோறும் 10 ஆயிரம் பயணிகள் அந்தப் பேருந்துகளிலே பயணம் செய்து வருகிறார்கள். இவ்வளவு பெரிய மோட்டார் நிருவாகத்தில் எவ்வளவு தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் தெரியுமா? ஏறக்குறைய ஓராயிரத்துக்கு மேற்பட்ட பணியாளர்கள் அந்த நிருவாகத்தில் வேலை செய்கிறார்கள்.

பஞ்சு ஆலையில் எடை நிறுத்தலின் தலைமைத் தொழிலாளியாகவும், உணவு விடுதியில் வேலை கிடைக்குமா என்று வேலை கேட்டு, மாதம் பன்னிரண்டு ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்த ஓர் உணவு விடுதி ஊழியராக இருந்தவரிடமும், ஆயிரத்துக்கும் மேலாகத் தொழிலாளர் ஊழியம் செய்கிறார்கள் என்றால், இது என்ன சாமான்யமான உழைப்பிலே உருவான பலனா? எவ்வளவு உழைப்பை மூலதனமாக்கி இருப்பார் துரைசாமி நாயுடு என்று எண்ணிப் பார்ப்பவர்களுக்குத்தான், அவரது அருமையையும் பெருமையையும் உணர முடியும்!

U.M.S. நிறுவனம் :
உருவானது எப்படி?

ஆயிரம் தொழிலாளிகள் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தை உருவாக்கி விட்டால் மட்டும் போதுமா! அந்த நிருவாக அமைப்பு முழுவதையும் தற்கால வசதிகளோடு உருவாக்கினார்! தற்கால வசதி என்றால், அமெரிக்கத் தொழில் நிறுவனம் ஒன்று தற்கால வசதிக் கேற்றவாறு எப்படிப்பட்ட முறையில் அமைந்திருக்கின்றதோ, அப்படிப்பட்ட முறையிலே அதை அமைத்தார் துரைசாமி நாயுடு.

அந்த மோட்டாா நிருவாகத்தைத் துறை வாரியாக, எவ்வாறெல்லாம் பிரித்துத் தனித் தனியாக இயங்கினால் நிருவாகத்துக்கு வசதியாக இருக்குமோ அதற்கேற்றவாறு பல பிரிவுகளாகப் பிரித்து இயக்கினார் துரைசாமி. இவ்வாறு அவர் இயக்கியதால் தொழிலாளர்களுக்கு வேலை செய்யும் முறை சுலபமாக அமைந்தது எனலாம்.

இதற்கு முன்பு, யு.எம்.எஸ். என்ற யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்று குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? அந்த மோட்டார் நிறுவனம் எவ்வாறு உருவானது என்பதையும் பார்ப்போம்.

கோவையில் நடைபெற்ற மோட்டார் தொழில் முதலாளிகளுக்குள் 1933-ஆம் ஆண்டில் பெரும் போட்டி நிருவாகம் ஏற்பட்டது. பெரிய முதலாளிகளுக்கு இதனால் எந்தவித நட்டமும் உண்டாக வில்லை. ஆனால், ஒன்றிரண்டு பேருந்துகள் வைத்துத் தொழில் நடத்தும் சிறு முதலாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு அவதியடைந்தார்கள். அதனால், அவர்களது மோட்டார் தொழில் பலவீனமாகி நலிந்து கொண்டிருந்தது.

சிறு சிறு பேருந்து முதலாளிகள் நலிவதையும், தொழிலில் நட்டமடைவதையும் கண்ட ஜி.டி.நாயுடு அவர்கள், அந்த சிறு முதலாளிகளின் துயர்களைத் துடைக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்தார். திடீரென, மோட்டார் தொழில் முதலாளிகள் மாநாடு என்ற ஒரு மாநாட்டை நடத்துவதற்கு வேண்டிய வேலைகளைச் செய்து, அந்த முதலாளிகளுக்கு ஓர் அழைப்பை விடுத்து, எல்லாரையும் கலந்து கொள்ளச் செய்தார்.

திரு. ஜி.டி. நாயுடு அவர்களது அழைப்பை ஏற்று எல்லா சிறு சிறு பேருந்து முதலாளிகளும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். அந்த மாநாட்டிற்கு வந்த சிறு முதலாளிகள் நிறுவனங்களை எல்லாம் ஒன்று சேர்த்து, யு.எம்.எஸ். என்ற ஓர் ஐக்கிய மோட்டார் தொழில் நிறுவனத்தை ஜி.டி. நாயுடு உருவாக்கினார்.

அந்த யு.எம்.எஸ். என்ற ஐக்கிய கூட்டுறவு மோட்டார் நிறுவனத்தில்; அந்தந்த சிறுசிறு முதலாளிகளின் முதலீட்டு விகிதப்படி, வரும் தொழில் லாபத்தை அவரவர் விகிதப்படி பிரித்துக் கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி, அதற்கேற்ப அந்த முதலாளிகள் நசிந்து போகாமல்; அவரவர் லாபங்களைப் பணமாகக் கொடுக்கவும் வழி செய்தார்.

மோட்டார் தொழிலில் தேவையற்றப் போட்டி நிகழாமல் தடுத்தார்; அதே நேரத்தில் சிறு முதலாளிகள் அழிந்து போகாதவாறு, தெளிவான முறையில், எல்லா முதலாளிகளுக்கும் மன நிறைவு உண்டாகுமாறு ஒரு கூட்டுறவு மோட்டார் தொழில் அமைப்பை உருவாக்கி, நாட்டுக்கு நல்ல ஒரு வழியைக் கூட்டுறவு முறையில் முதன் முதலாக ஏற்படுத்தி, ஜி.டி. நாயுடு ஒரு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

கூட்டுறவு முறையில் :
மோட்டார் தொழில்!

“யு.எம்.எஸ். போக்குவரத்து நிறுவனம், ஆற்றி வரும் நன்மைகள், வசதிகள் மக்களுக்கு மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. அதற்குக் காரணம், அந்த நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் தலைவர், ஆர்வமிக்க ஓர் அறிஞர் மட்டுமன்று, நிருவாகத் திறமை மிக்கவராகவும் இருக்கின்றார்.

அதன் அடையாளமாக அவர், மக்கள் உட்காருவதற்குரிய இருக்கைகளும் பணியாட்கள் பயணிகளிடம் நடந்து கொள்ளும் அன்பு முறைகளும், தங்குவதற்கான இட ஏற்பாடுகளும், அதற்குரிய சகல வசதிகளும், செய்யப்பட்டிருப்பதை என்போன்றார் நேரில் பார்த்து வியப்படைந்தது தான் என்றால் மிகையாகா” என்று, ‘சாலை - புகை வண்டி போக்குவரத்து’ என்ற நூலில் அதன் ஆசிரியர் திரு. பத்திரி ராவ் பாராட்டியிருப்பதே அதற்குப் போதிய சான்றாகும்.

அந்த வகையில் யு.எம்.எஸ். நிறுவனத்தின் சேவைகளை, சமுதாயப் பொருளாதார நலன்களுக்குப் பயன்தரக் கூடிய முறையில் அவ்வப்போது கண்காணித்துக் குறைகளைப் போக்கி, ஜி.டி. நாயுடு, நிறைவுகளைச் செய்துள்ளார் என்று அந்த ஆசிரியர் மேலும் அதைப் புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.

பேருந்துக்கு வரும் பயணிகளிடமும், அவர்கள் தங்குமிடங்களில் அமர்ந்திருக்கும் போதும், வண்டிகளில் பயணம் செல்கின்ற போதும்; அவர்களிடம் மிகுந்த மரியாதையுடனும், அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று தனது ஊழியர்களுக்கு திரு. நாயுடு கட்டளையிட்டிருப்பது போற்றுதலுக்குரிய நிருவாக முறைகளாக இருந்தன.

அதனால், பயணிகள் நாளுக்கு நாள் யு.எம்.எஸ். நிறுவனத்தின் பேருந்துகளிலே பயணம் செய்வதையே பெரிதும் விரும்பினார்கள் என்பது குறிப்பிடத் தக்க சம்பவமாகும். அப்படி எவராவது பயணிகளிடம் தவறாக நடந்து கொண்டாலும் சரி, பணியாட்கள் அதைப் பொருட்படுத்தாமல் பொறுப்போடும், பணிவோடும் நடந்து கொள்ள வேண்டியது பணியாளர் கடமை என்று சுற்றறிக்கையையும் விடுத்துள்ளார் நாயுடு அவர்கள்.

தமது சுற்றறிக்கையின்படி பணியாட்கள் நடந்து கொள்ளுகின்றனரா என்பதை நாயுடு மேற்பார்வையிடுவார். மாறு வேடங்களில் அவரே அடிக்கடி பேருந்துகளில் செல்வதுடன், எந்த ஒரு பணியாளராவது தனது அறிக்கையை மீறிப் பயணிகளிடம் நடந்து கொள்வதை அவர் நேரிடையாகக் கண்டுவிட்டால், உடனே அந்தப் பணியாளரை வேலையை விட்டு நீக்கிவிடும் அளவுக்கு அவரது கண்காணிப்பு முறை இருந்து வந்தது.

மாறுவேடத்தில் சென்று
ஊழியர்களிடம் சோதனை!

ஒரு முறை திரு.நாயுடு தனக்குத் தெரிந்த ஒருவரை அழைத்து, பேருந்து நடத்துனரைக் கன்னத்தில் அறையுமாறு கூறினார். அந்த ஆளும் நடத்துனரை ஓங்கி ஒர் அறை கொடுத்தார். அந்த நடத்துனர் சண்டையோ சச்சரவோ போடாமல், எந்த விதக் கேள்விகளையும் எழுப்பாமல், பேருந்துப் பயணிகள் எதிரிலேயே தனது நிறுவன விதிகளுக்கு ஏற்றவாறு மிகப் பணிவாக நடந்து கொண்டதை மாறு வேடத்தில் இருந்த ஜி.டி.நாயுடு பார்த்தார்.

இந்தக் காட்சியைக் கண்ட நாயுடு மறுநாள் அவரை அழைத்துப் பாராட்டி, ஊதிய உயர்வையும் வழங்கினார். இந்தச் செய்தி மற்ற நிறுவனர்களிடமும் பரவியது. அதைக் கண்ட ஊழியர்கள்: நிறுவன சுற்றறிக்கையை மிகுந்த பணிவுடனும், பய பக்தியுடனும் பின்பற்றலானார்கள். அந்த நிறுவனப் பணியாளர்களது ஒழுங்கு முறைகளால் U.M.S. நிறுவனம் மக்களிடம் மேலும் மரியாதையும், மதிப்பும் பெற்று வளர்ந்து முன்னேறியது.

இவ்வாறு ஜி.டி. நாயுடு நடந்து கொண்டதுமட்டுமல்லாமல், திறமையான பணியாளர்களை அழைத்து நேரிடையாகப் பாராட்டுவதுடன், நிறுவன சட்ட திட்டங்களை அவர்கள் பின்பற்றிப் போற்றும் மன உணர்வை மதித்து, அவர்கள் குறைகளைப் போக்கியதோடு, மன நிறைவோடு பணியாற்றவும் வழி வகைகளைச் செய்து ஊக்கப்படுத்தினார்.

ஒரு வாலிபன் திரு. ஜி.டி.நாயுடுவை நேராகச் சந்தித்து, மிகுந்த பணிவுடன், 'ஐயா, எனக்கு வேலை இல்லை; ஏதாவது ஒரு வேலை கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அப்போது நாயுடுவுக்கு வந்த யோசனை என்ன தெரியுமா?

சிற்றுண்டி விடுதியில் ஒரு முறை நாயுடு சென்று ஏதாவது வேலை கொடுங்கள் என்று கேட்டதும், அதற்கு அந்த முதலாளி மாதம் பன்னிரண்டு ரூபாய் சம்பளம் கொடுத்த சம்பவமும், அதைப் பெற்றுக் கொண்டு அந்த விடுதியிலேயே இரவும் - பகலுமாக தங்கியிருந்த தனது பழைய நிலையும் அவருக்குத் தோன்றியது. அந்தக் காட்சியை அவர் நினைத்துப் பார்த்தார்.

உடனே அந்த வாலிபனை, உனக்கு என்ன வேலை தெரியும் தம்பி’ என்று கேட்க, அதற்கு அவன், “தாங்கள் சொல்லும் எந்த வேலையையும் செய்யத் தயார் ஐயா” என்று மறுமொழி கூற, அவன் நிலையைக் கண்ட நாயுடு, ஒரு வேலையைக் கொடுத்தார். என்ன வேலை அது என்று கேட்கிறீர்களா?

இரக்கத்தோடு உதவும் :
மனமுள்ளவர்!

தினந்தோறும் அந்த வாலிபன் காலை ஏழு மணிக்கு பணிக்கு வரவேண்டும். ஏதாவது ஒரு பேருந்தில் ஏறிக் கொள்ள வேண்டும். அவன் நினைக்கும் தூரம்வரை பேருந்தில் செல்ல வேண்டும்.

எதிரே வரும் அதே நிறுவனத்தின் வேறொரு பேருந்தில் அவன் ஏற வேண்டும். எந்த திசையில் அது போகின்றதோ அந்தத் திசையில் பயணம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவன் இரவு ஏழு மணி வரை ஒவ்வொரு பேருந்துவாக ஏறிஏறி இறங்கிச் சென்றபின்பு, மீண்டும் அன்று இரவே அவன் எட்டு மணிக்கு திரு. நாயுடுவைச் சந்தித்து அன்று அவன் சென்ற பேருந்துகள் ஊர் பெயர்களைக் கூற வேண்டும். இதுதான் திரு.நாயுடு அவனுக்குக் கொடுத்த வேலை. எப்படி வேலை? இதனால் என்ன நன்மை நிறுவனத்துக்கு?

அந்த வாலிபனுக்கு இலவசப் பயணச் சீட்டு வழங்கப் பட்டது. அதைப் பெற்றுக் கொண்ட அந்த வாலிபன் தினந்தோறும் பேருந்துகளில் பயணம் செய்து கொண்டே இருப்பான். ஆனால், அவன் யாருடனும் பேச மாட்டான். இது நாயுடு உத்தரவு. இரவு ஏழு மணி வரை பயணம் செய்துவிட்டு, அன்று இரவு எட்டு மணிக்கு திரு.நாயுடுவை அலுவலகத்தில் சந்திப்பான்.

பத்தே பத்து நிமிடங்கள்தான் அவனை நாயுடு தனது அறையில் உட்கார வைப்பார். பிறகு வீட்டிற்கு அனுப்பி விடுவார். அந்த பத்து நிமிடத்தில் கூட பேசமாட்டார். இவ்வாறு அவன் முப்பது நாட்கள் எல்லாப் பேருந்துகளிலும் சென்றபடியே இருந்தான்.

வருமானம் பெருக :
இது ஒரு புரட்சி வழி!

இதனால் என்ன நன்மை நிறுவனத்துக்கு? என்றால், யு.எம்.எஸ். பேருந்துகளின் வசூல் தினந்தோறும் அதிகமாகிக் கொண்டே சென்றது. அதாவது, 15 சத விகிதம் வழக்க வசூலுக்கு மாறாக உயர்ந்து கொண்டே சென்றது. என்ன காரணம் அந்த வசூலுக்கு?

பேருந்துகள் நடத்துனரும், ஒட்டுநரும் அந்த வாலிபனைப் பேருந்து சோதனையாளன் என்று எண்ணிக் கொண்டார்கள். பய பக்தியுடன், மரியாதையுடன், அன்புடன் பயணிகளிடம் தொழிலாளர்கள் நடந்து கொண்டு, வசூல் பொறுப்பிலேயே கண்ணும் - கருத்துமாக அவரவர் தொழிலையே தொழிலாளர்கள் செய்து வந்தார்கள். அந்த வாலிபனுடைய வேலையால் யு.எம்.எஸ். நிறுவனத்தில் தூய்மை உருவானது. இந்த வாலிபனுக்கு நாயுடு அவர்கள் வேலை வழங்கித் தனது நிறுவனத்தைச் சோதனை செய்து கொண்டு வெற்றியும் பெற்றார்.

ஹென்றி ஃபோர்டும் :
ஜி.டி. நாயுடுவும்!

அமெரிக்க மோட்டார் தொழில் வித்தகரான ஹென்றி ஃபோர்டு, அவரிடம் பணியாற்றிய தொழிலாளர்களை நிறுவனத்தில் எவ்வாறு புரிந்து வைத்திருந்தாரோ, அதுபோலவே நாயுடு அவர்களும் தனது யு.எம்.எஸ். மோட்டார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவு ஊழியர்களையும் நன்றாகப் புரிந்து கொண்டு, அவர்களது திறமைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொண்டார். இதற்கு ஓர் எடுத்துக் காட்டு இது.

யு.எம்.எஸ். நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் 64 பேர்கள் விடுமுறை எடுத்திருந்தார்கள். எவரும் வேலைக்கு வரவில்லை. அந்தப் பட்டியலை நாயுடு அவர்கள் பார்த்ததில், 43 தொழிலாளர்கள் எந்த விதக் காரணமும் கூறாமல், நிறுவன அதிகாரிகளுக்கும் தெரிவிக்காமல் விடுமுறை எடுத்துக் கொண்டார்கள் என்பதை அவர் அறிந்தார்.

அந்தப் பட்டியலில், 223 தொழிலாளர்கள் பணிபுரிவதற்கு வரவேண்டிய குறிப்பிட்ட நேரம் கழித்துத் தாமதமாக வேலைக்கு வந்ததையும் உணர்ந்தார்.

திரு. நாயுடு அவர்கள்; செய்யும் தொழிலே தெய்வம் என்று நம்பும் கருத்துடையவர். ஒழுங்கீனங்கள் வேலையில் நுழைவதை அவர் அறவே வெறுப்பவர். அதுமட்டுமன்று - காலம் பொன்னானது; கடமை உயிர் போன்றது என்ற எண்ணம் கொண்டவர். தாமதமாக வருபவர்களைத் திருத்த வழி என்ன என்று சிந்தித்தார் அவர்.

அந்தத் தொழில் நிறுவனத்தில், பணியாற்றிடும் ஒவ்வொரு பிரிவு ஊழியர்களின் வருகைப் பட்டியலைத் தினந்தோறும் தனது மேசைக்கு அனுப்புமாறு திரு. நாயுடு கட்டளையிட்டார். அது முதல் பணியாளர்கள் ஒழுங்காக, தவறாமல், குறித்த நேரத்தில் பணி மனைக்கு வரலானார்கள்.

தவறாக நடப்பவர்கள் பெயரைக் குறித்து அந்தப் பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பித் தண்டனையும் தரச் செய்தார் நாயுடு. இதனால், தொழிலில் ஒழுங்கீனம் ஒழிந்தது. பணியாளர்களும் பணி முக்கியத்துவத்தை உணர்ந்து நடந்தார்கள்.

இதுபோன்ற கட்டளையைப் பிறப்பித்த திரு. நாயுடு அவர்கள், ஆறு மாதம் கழித்து, மீண்டும் தொழிலாளர்கள் வருகைப் பட்டியலை வர வழைத்துப் பார்த்தார். அன்று, பன்னிரண்டே பேர்கள் தான் விடுமுறை எடுத்திருந்தார்கள். காரணம், கூறாமல் நின்றிருந்தவர்கள் ஆறே ஆறு பேர்கள்தான். குறித்த நேரம் தவறித் தாமதமாக வந்த பணியாளர்கள் இரண்டே பேர்கள்தான்.

உடல் நலமற்றோர்
பணி செய்தால் அபராதம்!

இதற்கடுத்தபடி, நாயுடு அவர்கள் மீண்டும் ஆறு மாதம் கழித்து தொழிலாளர் வருகையைக் கணக்கெடுத்துப் பார்த்தார். அன்று விடுமுறை எடுத்தவர்கள் இரண்டு பேர்கள், காரணம் கூறாமல் நின்றவர் ஒரே ஒரு தொழிலாளிதான் தாமதமாகப் பணிக்கு வந்தவர்கள் யாரும் இல்லை. இந்தச் சீர்திருத்தத்திற்குப் பிறகு நாயுடு அவர்கள் புது உத்தரவு ஒன்றைப் புகுத்தினார் என்ன அது?

உடல் நலம் இல்லாதவர்கள் யாராகிலும் தொழிலுக்கு வந்து பணியாற்றினால், அவர்களுக்கு தலா பத்து ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பதே அந்த புது உத்தரவாகும்.

இந்த உத்தரவால் நாயுடு அவர்களின் தொழிலாளர் அபிமானம் எவ்வளவு போற்றத் தக்கதாக இருந்தது பார்த்தீர்களா? இந்தப் புது கட்டளையைக் கண்ட எல்லாத் தொழிலாளர்களும் தங்களது முதலாளியைத் தெய்வமாக மதித்து வந்தார்கள்.

வேலை நிறுத்தமே
இல்லாத நிறுவனம்!

தொழிலாளர்கள் மீது திரு. நாயுடுவுக்கு இருந்த மதிப்பும் - மரியாதையும் ஒரு புறமிருக்க, அதே நேரத்தில் பணியாளர்களிடம் குறை கண்டால் - கண்டிப்பும், நிறை கண்டால் - பாராட்டும் வழங்கி வந்ததையும் அந்தத் தொழிலாளர்கள் மறக்கவில்லை.

இத்தகைய உத்தரவுகளால்தான் அவருடைய யு.எம்.எஸ். நிறுவனம் திறமையாகவும், சிறப்பாகவும், பார்ப்பவர்களுக்கு வியப்பாகவும் விளங்கி வந்தது எனலாம். எந்த நேரத்திலும் அந்த நிறுவனத்தில் வேலை நிறுத்தம் என்பதே நடந்ததில்லை.

யு.எம்.எஸ். நிறுவனத்தில் ஏறக்குறைய ஓர் இலட்சம் கோப்பு கள் இருந்தன. ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு பணிக்கும் ஃபைல்களைப் போட்டு அதைக் கவனமாகக் கண்காணிக்கும் கடமையை அலுவலக அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்திருந்தார் ஜி.டி. நாயுடு.

அவ்வாறு, ஏறக் குறைய ஓர் லட்சம் கோப்புகளை யு.எம்.எஸ். நிருவாகம் கவனித்துக் கொண்டு கடமையாற்றியது. திடீரென இந்தக் கோப்புகள் மீது கவனம் வந்தது திரு. நாயுடுவுக்கு.

ஓர் இரவு நாயுடு அவர்கள், தனது நிறுவனச் செயலர்கள் எவ்வாறு கோப்புக்களை வைத்திருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க யாருக்கும் தெரியாமல் ஒவ்வொரு செயலாளர் மேசைகளையும் கவனித்துக் கொண்டே வந்தார்.

கோப்புகளை எப்படி
நிருவாகம் செய்வது?

ஒரு மேசையில் கோப்புகள் கிழிந்த நிலையில் தரையிலே கிடந்ததைக் கண்டார் திரு. நாயுடு. வேறொரு மேசையில் கோப்புகள் அலங்கோலமாகச் சிதறிக் கிடந்தன. இன்னொரு மேசையில் பிரித்துப் பார்த்தக் கோப்பை அப்படியே விட்டுவிட்டுச் சென்றக் காட்சியைக் கண்டார்.

ஜி.டி. நாயுடு அவர்கள், அந்தந்தக் கோப்புக்களை அடுக்கி அந்தந்த மேசைகள் மேலே வைத்தார். அலங்கோலமாக இருந்தவை களைச் சரி செய்து வைத்தார். பிரிந்துக் கிடந்தவைகளை மூடி அதே மேசையிலேயே வைத்துவிட்டார். குப்பை போலக் குவிந்துக் கிடந்த கோப்புக்களை ஒவ்வொன்றாக அடுக்கி, அதை ஒரு கயிற்றால் கட்டி அதே மேசை மேலேயே வைத்தார்.

ஒரு துண்டுச் சீட்டை எடுத்து, “அவரவர் மேசைகளைச் சம்பந்தப்பட்டவர்கள், சுத்தமாகவும் - ஒழுங்காகவும் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? அல்லது. உங்களுடைய முதலாளியைத் தினந்தோறும் இரவில் வந்து அடுக்கி, கட்டி வைக்கச் சொல்கிறீர்களா?” என்று அந்தச் சீட்டில் எழுதி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார் திரு. நாயுடு.

மறுநாள் அந்தந்த மேசை அலுவலர்கள் பணிக்கு வந்து அந்தத் துண்டுச் சீட்டைப் பார்த்து அதிர்ச்சி பெற்றார்கள். தவறுதல்களுக்கு மனம் வருந்தி, அன்று முதல் அவரவர் மேசைகளில் கோப்புக்களை ஒழுங்காக வரிசையாக அடுக்கி, மேசைகளைச் சுத்தமாகவும் வைத்துக் கொண்டார்கள்.

இவ்வாறெலாம், ஜி.டி. நாயுடு தனது நிருவாகத்தைத் திருத்திக் கொண்டு வந்ததால்தான், உலகத்திலேயே இவரைப்போல நிருவாகத் திறமையாளர் எவருமில்லை என்று பலர் பேசும் மதிப்பும் - மரியாதையும் அவருக்கு உருவானது.

கோவை நகர் சென்றதும், கோபால் பாக் என்ற அவரது தந்தை பெயரால் உள்ள அலுவலகத்துக்குள் நுழைந்தால், அங்கே விசாரணை அறை உள்ளது. அந்த அறைக்குள்ளே ஒரு பெண் வழி காட்டி, வருவோர் போவோரை மரியாதையுடன் எழுந்து வரவேற்கும் காட்சியைக் காண முடிகின்றது.

கோபால் பாக் ஒரு விளக்கம்!

அந்தப் பெண், நாம் வந்த காரணத்தை அறிகிறார். அதன் விவரத்தை ஜி.டி. நாயுடு அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலம் அறிவிக்கிறார். அதற்குப் பிறகு நம்மை உள்ளே அழைத்துப் போகிறார்.

வந்தவர்கள் எதிரிலேயே நாயுடு அவர்கள் தனது தொழிலாளர்களது பல செயல்களுக்கான வழிவகைகளை விளக்கிக் கூறுகிறார். இந்த காட்சிகள் தினந்தோறும் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒரு மணி வரை நடந்து கொண்டே இருக்கும். சில நாட்களில் திரு. நாயுடு காலை ஆறு மணிக்கே கூட தனது அறைக்கு வந்து உட்கார்ந்து விடுவாராம்.

ஜி.டி. நாயுடு அவர்களது வீட்டுக்கும், அலுவலக அறைக்கும், தொழிற் சாலைகளுக்கும், மின்சார நிறுவனத்திற்கும், அவரது ஒவ்வொரு செயலாளர்களது அறைகளுக்கும், விசாரணை அறைக்கும், வேறு சில முக்கியமான இடங்களுக்கும் தொலைபேசி இணைப்புகள் இருக்கின்றன.

எனவே, திரு. நாயுடு அமர்ந்துள்ள இடத்தில் இருந்தபடியே மற்ற எல்லாத் துறை நிர்வாகிகளிடமும் தொடர்பு கொண்டு, நடக்க வேண்டிய நடந்த பணிகளை நடத்துமாறு கட்டளையிடுவார். நடக்க வேண்டிய வேலைகளையும் தெரிந்து கொள்வார். அதற்கான வழி முறைகளையும் கூறுவார்.

பேருந்துகள் அலுவலகத்துக்கும், அங்கு தங்கியுள்ள பயணிகள் அறைக்கும் தொலைபேசி மூலம் தெரிந்து கொள்ள வேண்டியதையும், செய்ய வேண்டியச் செயல்களையும் கூறிக்கொண்டே இருப்பார்.

தொலை பேசிகளுக்கு ஒய்வே இருக்காது. இவ்வாறு திரு. நாயுடு காலத்தை வீணாக்காமல், பொன் போல போற்றும் பண்பாளர் ஆவார். அந்த வசதிகளை எல்லாத் துறை அறைகளுக்கும் செய்து கொடுத்துள்ளார் என்பதே அவரது நிர்வாகத்தைப் போற்றுபவர் களும், பாராட்டுபவர்களும் கூறுவார்கள்.

திரு. நாயுடு நிர்வாகம் பற்றி எவராவது குறை கூறினால், உடனே அதைத் திருத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பார். மறு நிமிடம் அக்குறைகள் எல்லாம் நிறைவு பெறும். அவ்வளவு வேகமாக ஆங்காங்கே செயல்கள் நடந்துக் கொண்டே இருப்பதைக் காணலாம்.

ஓர் இரவு கோப்புகள் வைக்கப்பட்டிருந்த அறைகளுக்கும், மேசைகளுக்கும் சென்று சீர்திருத்தம் செய்தார் என்று கூறினோம் அல்லவா? அந்தக் கோப்புகள் நிருவாகத்தைக் கேட்டால் மெய் சிலிர்த்துப் போவீர்கள். இதோ அந்த கோப்புகளது நிருவாக முறைகள்:

ஃபைல்கள்
அதிசயங்கள்!

ஏறக் குறைய ஓர் இலட்சம் கோப்புகள் திரு. நாயுடு பார்வைக்கு அவ்வப்போது வந்து வந்து போகும். அப்படிப்பட்டக் கோப்புகளின் பெயர்களில் சில இவை :

“நட்பு, காவல்துறை; திறமைகளுக்குப் பாராட்டு, மரியாதை வழங்கும் வழி முறைகள், யார் யார் முகஸ்துதியாளர்கள், உண்மைகள் எவையெவை? எருமைகளை எவ்வாறு திருத்துவது? How to set the Buffaloes in line, ஒருவரை எப்படி வேலை வாங்குவது? How to extract work from one, என்னுடைய தவறுகள், My Blunders, எனது முகமதுபின் துக்ளக், My Mohammed Bin Tughlak போன்ற பல சுயவிமரிசினக் கோப்புகளும் உள்ளன. இதில் எனது முகமதுபின் துக்ளக் கோப்பில், ஏராளமான கடிதங்களும், எழுத்துச் சான்றுகளும், உண்மைகளும் உள்ளதை நாம் உணரலாம்.

பண்பெனபடுவது
பாடறிந்து ஒழுகலல்லவா?

திரு. ஜி.டி. நாயுடு, இவ்வாறெலாம் சிந்தித்துச் சிந்தித்து, செயலாற்றி, தனது தவறுகளையும் உணர்ந்து, மீண்டும் அவை நிகழாதவாறு தன்னையே தான் உணர்ந்து, தொழிலாளர் நலம் பேணி, அவர்களிடம் குறை கண்டபோது அன்பாகத் திருத்தி, நிறை உணர்ந்தபோது பண்போடு பாராட்டி, பரிசளித்து, கட்டுப்பாட்டோடு கடமையாற்றும் கண்ணியத்தைக் கற்பித்து, பயணிகள் குறைகளை நீக்கி, எல்லாவித வசதிகளையும் அவர்களுக்குச் செய்து கொடுத்து, பணத்திற்கே மரியாதை தராமல், பண்பாடுகளுக்கே மரியாதை கொடுத்து, எந்த விதமான துன்பங்களுக்கும் - இடையூறுகளுக்கும் கலங்காமல், துணிவே துணையென நம்பி, எல்லாவற்றுக்கும் மேலாக, முயற்சியே உயர்ச்சி தரும் என்ற நெறிக்குப் பணிந்து நடந்து கொண்ட நல்லவராகவும், வல்லவராகவும் விளங்கும் சுபாவம் உடையவராக திரு. நாயுடு திகழ்ந்து வந்ததால்தான். தோன்றிய அவரது எல்லாத் தொழிற் துறைகளிலும் செல்வாக்கும், சொல் வாக்கும், புகழும் பெற முடிந்தது என்பது, நம்மில் அனைவருக்கும் இருக்க வேண்டிய பண்பாடுகளாகும். பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல் அல்லவா?

இந்த அருமையான திறமைகளை அவர் பெற்றிருந்ததால் தான், ஜி.டி. நாயுடு என்று உலகத்தவர்களால் அழைக்கப்படும் அவர் செயற்கரிய செயல் வீரராக விளங்கினார்.