தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு/உலகம் சுற்றிய விஞ்ஞானி ஜிடி நாயுடு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
5. உலகம் சுற்றிய விஞ்ஞானி
ஜி.டி. நாயுடு!

கோயம்புத்தூர் நகரை இன்றும் நாம் இங்கிலாந்து நாட்டின் இலங்காஷையர் என்றே அழைக்கின்றோம். இங்கிலாந்தில் உள்ள இலங்காஷையர் நகர், தொழிற்சாலைகள் அதிகமாக இயங்கும் ஒரு தொழில் நகரம்.

அதற்கேற்ப அங்கே பஞ்சு நூற்பு ஆலைகள், பருத்தி வியாபாரம், துணி உற்பத்தி ஆலைகள் மற்றும் இந்தத் தொழிலுக்கு ஏற்ற, சம்பந்தப்பட்ட தொழிற்கூடங்கள் அதிகமாக இயங்கி வருகின்றன.

கோவை - தமிழ் நாட்டின் :
இலங்காஷையர் நகரம்!

கோவை மாவட்டத்தில் அன்றும் சரி - இன்றும் சரி, எண்ணற்ற வகையான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பஞ்சு ஆலைகள், நூற்பு ஆலைகள், துணி நெய்யும் ஆலைகள், மோட்டார் உற்பத்தித் தொழிற் சாலைகள் மற்றும் தற்கால இயந்திரங்களுக்கு ஏற்ற தொழிற் கூடங்கள் ஏராளமாக இயங்குகின்றன.

அதனால், அந்த நகருக்குத் தமிழ்நாட்டின் லங்காஷையர் என்ற பெயர் வெள்ளையர்கள் ஆட்சியிலேயே ஏற்பட்டிருந்தது. அதனால், கோவை மாவட்டமும், கோயம்புத்தூர் நகரமும் பெரிய வணிக நிறுவனங்கள் நிறைந்த மாவட்டமாக, நகரமாக வளர்ச்சி பெற்றன.

இந்தத் தொழில் நகரத்தில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிக் காலத்தில். கோவை ஜி.டி. நாயுடு அவர்களால் உருவாக்கப்பட்ட யு.எம்.எஸ். என்ற மோட்டார் சர்வீஸ் நிறுவனம், ஏறக்குறைய இருநூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளின் வருவாயில் கோவை மக்கள் இடையேயும்; கேரள மக்கள் எல்லையோர நகரங்கள் இடையிலும்; பெயரோடும், புகழோடும் ஆல்போல் தழைத்து, விழுதுகள் விட்ட செல்வ பலத்தோடும் வளர்ந்து இருந்தது.

மோட்டார் மன்னன் ருத்தர் ஃபோர்டால், மோட்டார் தொழில் கண்டுபிடிப்புகளாலும் - வளர்ச்சிகளாலும் எப்படி அமெரிக்கா உலகப் புகழ் பெற்று விளங்கியதோ, அதே போல தொழிலியலில் விஞ்ஞானியாக வளர்ச்சிப் பெற்ற ஜி.டி. நாயடு அவர்களாலும், அவரைத் தலைவராகப் பெற்றிட்ட யு.எம்.எஸ். மோட்டார் நிறுவனத்தாலும் - கோயம்புத்தூர் நகரமும், அந்த மாவட்டமும் பெயரும் புகழும் பெற்று விளங்கியது என்றால் - மிகையாகா.

கோவை மக்கள் இடையே யு.எம்.எஸ் நிறுவனம் செல்வாக்குப் பெற்றதற்கு அடிப்படைக் காரணம், ஜி.டி. நாயுடுவின் இடைவிடா உழைப்பும், முயற்சியும்தான் என்று கோவை நகர் வரலாறு கூறுகின்றது.

ஜெர்மன் தம்பதியர்க்கு
நாயுடு உதவிகள்

கோவை நகரில் யு.எம்.எஸ். நிறுவனம் புகழ் பெற்று விளங்கிய நேரத்தில், 1929-ஆம் ஆண்டு வாக்கில், ஜெர்மனி நாட்டிலே இருந்து Kuhns என்ற ஒரு வியாபாரி தனது மனைவியுடன் கோவை நகர் வந்திருந்தார்.

இந்த செர்மானிய வணிகரும், அவரது வாழ்க்கைத் துணை நலமும் இந்தியாவிற்கு வந்து, இந்திய நகர்களை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு, தங்களது இரப்பர் பொருட்களுக்கு இந்தியாவில் வாணிக செல்வாக்கு உண்டாகுமா என்பதையும் கவனித்து கொண்டே வந்தார்கள். அவ்வாறு அவர்கள் வரும்போதுதான், கோவை மாநகருக்கும் வந்தார்கள்.

குன்ஸ் செர்மனி நாட்டிலுள்ள புகழ்பெற்ற ஹனோவர் என்ற நகரிலே, ஒரு பெரிய இரப்பர் சம்பந்தப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் வியாபாரி ஆவார்.

கோயம்புத்துர் நகருக்கு அவர் வந்தபோது, அவரது துணைவியாருக்குத் திடீரென் உடல் நலம் குறைவுண்டானது. கடும் காய்ச்சல் நோய் கண்டது. அதனால் அவர்கள் பெரிதும் கவலையுற்றார்கள்!

அந்தத் தம்பதியர் தங்கியிருந்த இடம் போதுமான வசதிகள் அற்றதாக இருந்ததால், வேறு எங்கே தங்கினால் நோயாளிக்குரிய சகல வசதிகளும் இருக்கும் என்று எண்ணிய குன்ஸ், கோவை நகரின் முக்கியஸ்தர்களை விசாரித்தார். அவர்களில் சிலர் யு.எம்.எஸ். நிறுவனத்தின் தங்கும் அறைக்குப் போய் தங்குமாறு கூறினார்கள். அதற்கான பேருந்தையும் - வழியையும் காட்டினார்கள்.

அதற்கேற்ப, காய்ச்சல் கண்ட மனைவியுடன், குன்ஸ் U.M.S. Waiting Room-ல் வந்து தங்கியிருந்தார், இந்தத் தகவலை அறிந்த ஜி.டி. நாயுடு, அவர்களுக்குரிய வசதிகள் என்னென்னவோ அனைத்தையும் செய்து கொடுக்கத் தனது தங்கும் அறை பணியாளர்களை அழைத்து - அவர்கள் தேவையை உடனிருந்து நிறைவேற்றித் தருமாறு கட்டளையிட்டார்.

குன்ஸ் துணைவியார் காய்ச்சலில் அவதிப்படும் கஷ்டத்தைக் கண்ட ஜி.டி. நாயுடு, அந்த நோய்க்குரிய மருந்தையும் கொடுத்தார். சில மணி நேரங்களில் அக் கடும் காய்ச்சல் நோயும் குணமானது. அதனால், குன்ஸ் தம்பதியினர் சொல்லொணா மகிழ்ச்சி அடைந்தார்கள்.

நோய் சுகமாகி விட்டதைக் கண்ட செர்மன் தம்பதியர் இருவரும், ஜி.டி. நாயுடு அவர்களைச் சந்தித்து, தங்களது நன்றியைக் கூறி, செர்மன் போகப் புறப்பட்டு விட்டதாகவும், தாங்கள் அவசியம் செர்மன் நாட்டுக்கு வரவேண்டும் என்றும், எங்கள் வீட்டுக்கும் தவறாமல் வருகை தரவேண்டு மென்றும்; நன்றிப் பெருக்கோடு வணங்கிக் கேட்டுக் கொண்டார்கள். விடை பெற்றுக் கொண்டு, செர்மனியிலுள்ள ஹனோவர் நகர் சென்று ஆண்டுதோறும் அவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருந்தார்கள்.

ஜி.டி. நாயுடு :
ஐரோப்பா பயணம்!

குன்ஸ் தம்பதியர் அனுப்பும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை ஆண்டுதோறும் பெற்று வந்த ஜி.டி. நாயுடு அவர்கள், 1932-ஆம் ஆண்டின்போது செர்மனியின் கோடை காலத்தில் ஐரோப்பிய நாடுகளைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்.

கோயம்புத்துர் நகரிலிருந்து ஜி.டி. நாயுடு இலங்கைக்கு விமானம் மூலமாகச் சென்றார். பிறகு கொழும்பு என்ற துறைமுக நகரிலே இருந்து, கடற் பயணமாக ஜார்ஜஸ் பிலிப்பார் என்ற அழகுமிக்க நகரத்துக்கு பிரெஞ்சுக் கப்பலில் புறப்பட்டார் - அவருடன் நண்பர்கள் இருவரும் பயணம் சென்றார்கள்.

கப்பல் நான்கு நாட்களாகக் கடலில் சென்றது. ஐந்தாம் நாள் கடல் நடுவே அக் கப்பல் சென்று கொண்டிருக்கும்போதே எதிர்பாராமல் தீப்பிடித்துக் கொண்டு எரிய ஆரம்பித்தது.

கப்பலைக் காப்பாற்ற வேண்டுமானால் தீயை அனைத்தாக வேண்டும். அல்லது கப்பலையாவது காக்க வேண்டும். இரண்டுமே முடியாததால், பயணிகள் அனைவரும் உயிர் காக்கும் படகுகள் மூலமாகத் தப்பினார்கள். இவ்வாறு உயிர் பிழைத்துக் கொண்டவர்களுள் ஜி.டி. நாயுடுவின் நண்பர்கள் இருவரும் இருந்தார்கள்.

இந்த இரு நண்பர்களையும் காணவில்லை என்று ஜி.டி. நாயுடு கப்பல் தளங்களை எல்லாம் தேடிப் பார்த்தார். இதற்குமேல் அவர்களைத் தேடுவதிலேயே கவனம் செலுத்தினால், தான் உயிர் தப்ப முடியாது எனக் கருதிய நாயுடு அவர்கள், வேறோர் படகு மூலமாகத் தப்பிப் போனார்.

அந்த நேரத்தில், ஒருவர் உயிரை மற்றவர் காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகள் யாவும் நாயுடு உள்ளத்திற்குள் ஒரு வியப்பை விளைவித்தது. அக் காட்சியை அவர் தனது நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் :

"அந்த அபாயமான நேரத்தில் நான் கண்ட காட்சிகளும், அனுபவித்த மெய் சிலிர்ப்புகளும் ஏராளம் ஏராளம்:

உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்கள் இடையே, அந்த ஆபத்தான நேரத்திலும் உடன் பிறப்புகளைப் போல சதை யாடியாடி உயிர் தப்பிக்கத் தக்கச் செயல்களைச் செய்வதிலே அக்கறை உணர்ச்சிகளோடு போராடினார்கள்.

அடிமை புத்தி அப்போது எழவில்லை; சுதந்திர தேசிய விடுதலை உணர்ச்சிதான் எழுந்தது. மனிதனை மனிதன் வெறுக்கும் சாதிச் சழக்குகள் அப்போது தலைகாட்ட வில்லை.

ஒருவரை ஒருவர் காப்பாற்றும் மனித நேய அபிமானத்தைத் தான் நான் அவர்களிடம் கண்டேன்” என்று தனது நண்பர் ஒருவருக்கு வரைந்த கடிதத்தில் நாயுடு அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

உயிர் காக்கும் படகுகள் மூலமாக உயிர் பிழைத்தவர்கள் அனைவரையும், இரசியக் கப்பல் மீட்டு, டிஜிபவ்ட்டி என்ற ஓரிடத்தில் இறக்கி விட்டது. ஜி.டி.நாயுடு அந்த இடத்திலே இருந்து தனது உலகச் சுற்றுப் பயணத்தை துவக்க ஆரம்பித்தார்.

செர்மனியில் நாயுடு :
குன்கை சந்தித்தார்!

திரு. ஜி.டி. நாயுடு மார்சேல்ஸ் என்ற நகருக்கு முதலில் வருகை தந்தார். அதற்குப் பிறகு ஹானோவர் என்ற நகருக்குச் சென்ற நாயுடு அவர்கள், தனது நண்பர் குன்சைச் சந்தித்தார். அந்தத் தம்பதியர்கள் விருந்தினராக சில நாட்கள் அங்கே அவர் தங்கினார்.

குன்ஸ் தம்பதியர்கள் நாயுடு அவர்களைக் கண்டதும்; அவரை எப்படியாவது சில மாதங்கள் ஹனோவர் நகரிலே தங்க வைத்து, அங்கே உள்ள விஞ்ஞான வித்தகங்களுக்கு அழைத்துச் சென்று காட்டிட முயன்றார்கள். அதற்காகவே குன்சும் அங்கே சில நாட்கள் தங்கியதற்குக் காரணமும் ஆகும்.

செர்மனியில் புகழ்பெற்றக் கொலோன், பான் போன்ற சில முக்கியமான நகரங்களுக்குச் சென்று நகரத்தைச் சுற்றிப் பார்த்ததோடு இராமல், அந்த நகரங்களிலே இருந்த விஞ்ஞானக் கலைக் கூடங்களையும் நாயுடு கண்டார். அவற்றின் விவரங்களை அங்கே ஆய்வு செய்துக் கொண்டிருந்த அறிவியல் நிபுணர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

ஹெயில்ப்ரோன் என்ற ஒரு நகரத்திற்குச் சென்ற ஜி.டி. நாயுடு அவர்கள். தான் புதிதாகக் கண்டுபிடித்து வைத்திருந்த ரேசண்ட் பிளேடைப் Rasant Blade, பரிசோதித்து, தனது கண்டுபிடிப்பு முறை சரியா என்று தெரிந்து கொண்டார் அவர்.

அதற்குப் பிறகு, செர்மன் நாட்டிலுள்ள பல முக்கியமான தொழில் நகரங்களுக்கும், அலுவலகங்களுக்கும் ஜி.டி. நாயுடு சென்று தனது மன எழுச்சிக்கான விஞ்ஞான விளக்கங்களைத் தெளிவுப் படுத்திக் கொண்டார்.

செர்மன் நாட்டின் தொழில் நகரங்களும், அறிவியல் ஆய்வுக் கூடங்களும் ஜி.டி. நாயுடு உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தன.

சுருக்கமாகக் கூறுவதானால் ஜி.டி. நாயுடு கண்டுபிடித்த பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம், ஆர்வத்தையும் சோதனை உணர்ச்சிகளையும் ஊட்டிய நாடு செர்மன்தான் என்றால் மிகையன்று!

செர்மன் நாட்டின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, ஹனோவர் நகர் வந்து குன்ஸ் தம்பதியர்களிடம் விடை பெற்றுக் கொண்ட திரு. ஜி.டி. நாயுடு, பின்னர், பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று, அந்தந்த நாடுகளில் உள்ள புகழ் பெற்ற தொழில் நகரங்களையும், அறிவியல் சோதனைக் கூடங்களின் நிறுவனங்களையும், விஞ்ஞான வித்தகர்கள் பணியாற்றிடும் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கும் சென்றார்! அங்கே நடைபெறும் புதுமைகள் என்னென்ன என்பதையும், அதன் விவரங்களையும் கேட்டுப் புரிந்து கொண்டார் திரு. நாயுடு.

யார் யார், எங்கெங்கே பொறியியல் நிபுணர்களாக, வணிக வேந்தர்களாக, தொழில்நுட்ப மேதைகளாக உள்ளனரோ அவர்கள் பட்டியல்களை ஜி.டி. நாயுடு தயாரித்தார்.

அவர்களது வீடு தேடிச் சென்றும், கண்டும், அறிவியல் நுட்பங்களிலே தெளிவு பெற்றார். தனக்குரிய சில கண்டுபிடிப்பு களின் வழிகளைக் கேட்டு, அதற்கான ஆதாரங்களையும், மூலப் பொருட்கள் தயாராகும் தொழிலகங்களையும் அவர் அறிந்தார்.

சென்ற நாடெலாம் :
பத்திரிக்கைகள் பேட்டி!

ஒவ்வொரு நாட்டையும், அதன் புகழ் மிக்க தொழில் நகரங்களையும் பார்வையிட்ட பின்னர், அந்த நகரங்களிலே உள்ள பத்திரிக்கை நிருபர்களையும் அழைத்துப் பேட்டி அளித்து இந்தியாவின் பெருமைகளையும், தமிழ்நாட்டின் சிறப்புக்களையும், தனது சுற்றுப் பயணத்தில் கண்டறிந்த வாணிக, விஞ்ஞான விவரங்களையும் விளக்கினார்.

இவ்வாறு திரு. நாயுடு ஒவ்வொரு புகழ்வாய்ந்த நகரங்களிலே நிருபர்களுக்கு அளிக்கும் பேட்டியால், மேல் நாட்டினர்க்கு நமது நாட்டின்மீது நல்லெண்ணம் ஏற்படவும், நம் நாட்டினர், மேல் நாட்டில் அவ்வப்போது கண்டுபிடிக்கும் புதுமை விஞ்ஞான அற்புதக் கருவிகளது விவரங்களை விளங்கிக் கொள்ளவும்; வழி அமைத்துக் கொடுப்பதைப் போன்ற ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் திறன் பெற்றதாக அமைந்தது எனலாம்.

திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் இங்லீஷ் மொழியைப் பள்ளிகளில், கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் முறையாகப் படித்தறியாதவர். ஏன், அவற்றின் படிக்கட்டுகளைக் கூட ஏறி இறங்கி அறியாதவர் அல்லரா?

உலக நாடுகளைச் :
சுற்றி வந்தார்!
.

ஆனால், இங்லிஷ் மொழியிலே போதிய புலமை பெறாதவராக இருந்தாலும், மற்றவர்களிடம் பேசுவதற்கும், பேசுபவர்களது கருத்தைப் புரிந்துக் கொள்வதற்கும் உரிய பயிற்சிகளைத் தனிப்பட்ட முயற்சிகளால் பெற்றிருந்தவர் ஆவார்.

எனவே, அவருடைய மேல் நாட்டுச் சுற்றுப் பயணங்களால், அவருக்கும், அந்தந்த நாட்டவர்க்கும் இடையே மொழிச் சிக்கல் ஏற்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்க மொழி அனுபவமாகும்.

செர்மன், இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா போன்ற நாடுகளை வலம் வந்து, ஆங்காங்குள்ள சமூக, பொருளாதார, வணிக, அறிவியல், தொழிலியல் நகரங்களையும், அங்கே உள்ள தொழிலியல், அறிவியல் வளர்ச்சிகளையும் அறிந்துணர்ந்த திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் - கீழ் நாட்டு வணிக நாடாக விளங்கிக் கொண்டிருந்த ஜப்பான் நாட்டுக்கும் சென்றார்.

சப்பான் நாட்டின் பல்வேறு தொழில் வளர்ச்சி நிறுவனங்களுக்குள் சென்று நாயுடு அவர்கள் பார்வையிட்டார்! அதனதன் தொழில் துணுக்க விவரங்களை, ஐயங்களை விவரமாகக் கேட்டறிந்து தெளிவடைந்தார் - அவர்.

அறிவுடையார்:
சப்பானியர்!

சப்பான்காரனுக்கு ஒரு கிலோ இரும்பு கிடைத்தால்போதும். அதை அந்த நாட்டார் உருக்கி, காய்ச்சி, அடித்து, ஒடித்து மக்களுக்குப் பயன்படும் அறிவியல் புதுமைகளை உடையக் கருவிகளைக் கண்டுபிடித்து, அதை உலகச் சந்தையில் விற்பனை செய்யும் அறிவுடையார் ஆவர்!

நமது நாட்டில்தான் இன்றும்கூட, அமாவாசை நாள் வந்ததும், கடைகள், தொழிற்கூடங்களில் பூசனிக் காய்க்கு மஞ்சள் பூசி, குங்குமமிட்டு, பூசணியைத் துளைத்து உள்ளே குங்குமத்தைக் கொட்டி, அதை ரத்தக் குழம்பாக்கி, காசுகளைப் பூசணித் துளைக்குள் போட்டுத் துருத்தி, கற்பூரம் கொளுத்தி, தொழிற் கூடங்களை மூன்று முறைகள் சுற்றிச் சுற்றி, போதாக் குறைக்கு தொழிலாளிகளையும் - முதலாளிகளையும் வரிசையாக நிறுத்தி, அவர்களையும் சுற்றி நடு வீதியிலே கொண்டு போய் போட்டு உடைத்து தெருவை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றானே, இவன் எப்படி தேறுவான்? முன்னேறுவான்? சப்பான்காரனைப் போல உலக வல்லரசு நாடுகளிடம் போட்டிப் போடும் பொருளாதார, அறிவியல், தொழிலியற் துறைகளில் எப்படிக் கடைத் தேறுவான்? எண்ணிப் பாருங்கள்!

சப்பான் நாட்டின் தொழில் முன்னேற்ற வளர்ச்சிகளை நன்கு உணர்ந்த திரு. நாயுடு அவர்கள், பிறகு மஞ்சூரியா நாட்டுக்கும் சென்றார். அந்தந்த நாடுகளில் நடக்கும் மோட்டார் தொழிலின் புதுமைகளை, முன்னேற்றங்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு. அவற்றை எல்லாம் தனது மோட்டார் தொழில் வளர்ச்சிக்குரிய சிந்தனைப் பலமாக்கிக் கொண்டார் திரு. நாயுடு அவர்கள்.

தமிழ்நாடு திரும்பியவர் :
வளர்ச்சிக்கு வழிகாட்டினார்!

1932-ஆம் ஆண்டு ஜி.டி. நாயுடு அவர்கள், தனது முதல் உலகச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டவர். 1933-ஆம் ஆண்டில் தமிழ் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.

அவர் சென்று வந்த நாடுகளின் தொழில் முன்னேற்ற வளர்ச்சிகளை, யு.எம்.எஸ். மோட்டார் கூட்டுறவிலுள்ள சிறுசிறு முதலாளிகளுக்கும், தனக்குக் கீழே பணியாற்றிடும் யு.எம்.எஸ். தொழிலாளர்களுக்கும் விவரமாக எடுத்து விளக்கி, நமது நாடும் தொழிற்துறையில் முன்னேற வேண்டும் என்பதை விவரித்தார்!

உலக நாடுகளில் தொழிற் துறை முன்னேறிட அங்கங்கே அடிப்படைக் காரணங்களாக இருப்பவர்கள் தொழிலாளர்களும், அவர்களது முழு உழைப்புகளும்தான் என்பதை விளக்கி, தமிழகத் தொழிலாளர்களும் அந்தச் சிறப்பைப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் செய்த ஜி.டி. நாயுடு அவர்கள், எக்ஸ்டர் (Exeter) என்ற நகரத்திலே இருந்து இலண்டனுக்குத் திரும்புவதற்கு முன்பே, அவர் ஒரு குறிப்பிட்ட புகை வண்டி இரயிலுக்கு ஒரு பயணச் சீட்டுப் பெற்று, அதை 'ரிசர்வ்' செய்து வைத்திருந்தார்.

அந்த இரயில் வண்டி ஒடிக் கொண்டிருந்தபோது, இடையில் ஒரு பெரிய விபத்துக்கு உள்ளானது. அதனால், உயிரிழந்தோர் அதிகம் பேர்கள் ஆவர். படுகாயமடைந்தவர்களும் பற்பலர்.

அந்த இரயில் வண்டி விபத்துக்குள்ளானதைப் பத்திரிக்கையில் படித்த ஜி.டி. நாயுடு அவர்களின் நண்பர்கள், விபத்து நடந்த குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்தோடினார்கள் - தேடினார்கள் நாயுடு அவர்களை காணவில்லை.

நடந்த இரயில் விபத்தில் திரு. நாயுடு சிக்கி, உயிரிழந்து, உடல் சிதைந்து விட்டார் என்று எண்ணிய அந்த நண்பர்கள் வருத்தத்தோடு இலண்டன் நகர் திரும்பி விட்டார்கள்.

இரயில் விபத்தில்
உயிர் தப்பினார்

திரும்பி வந்த தனது நண்பர்களை திரு. நாயுடு வாயிற்படியிலே நின்று வரவேற்றதைக் கண்ட அவர்கள் பிரமித்து விட்டார்கள். எப்படித் தப்பித்து வந்தீர்கள் என்று நண்பர்கள் கேட்டபோது, "நான் இரயில் புறப்பட ஒரு மணி நேரம் இருக்கும் போது, முன்னதாகவே இரயில் நிலையத்திற்குள் வந்து விட்டேன்.

அப்போது வேறொரு இரயில் இலண்டன் மாநகருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. அதில் ஏறிவிட்டேன். எனக்குக் காலம்தான் முக்கியமே தவிர, வண்டியின் வசதிகள் அல்ல. காலம்தான் என்னைக் காப்பாற்றி விட்டது என்று அவர்களிடம் திரு. நாயுடு அமைதியோடு பதில் கூறினாராம். நண்பர்கள் நாயுடுவைக் கட்டித் தழுவி மகிழ்ந்தார்கள்.

உலகத்தை முதல் முறையாகச் சுற்றிவிட்டு வந்த பெருமகன் நாயுடுவை; தமிழ்நாட்டில் திரளான நண்பர்கள், திரண்டு வந்து வரவேற்றார்கள். இவ்வாறு திரு. நாயுடு அயல் நாடுகளைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்த சுற்றுப் பயணம் அவருக்கு வெற்றியாக இருந்தது.

உலக நாடுகளில் திரு. நாயுடு செய்த சொற்பொழிவுகளை தமிழ் நாட்டுப் பத்திரிக்கைகள் வெளியிட்டு அவருடைய தொழில் நுட்ப உணர்வுகளைப் பாராட்டி எழுதின.

பத்திரிக்கை நிருபர்கள் அவரிடம் பேட்டி கண்டு, அவரது மேல் நாட்டுச் செய்திகளை வெளியிட்டார்கள். தமிழ்நாடு முழுவதுமாகத் திரு. ஜி.டி. நாயுடு அவர்களின் புகழ் மேலும் பரவியது.