தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு/ரேசண்ட் பிளேடு கண்டுபிடித்தார்

விக்கிமூலம் இலிருந்து
7. ரேசண்ட் பிளோடை கண்டுபிடித்தார்
அமெரிக்க -பிரிட்டன் வணிகப் போட்டி!

வேதியல் விஞ்ஞானி, உயிரியல் விஞ்ஞானி, பொறியியல் விஞ்ஞானி, இறையியல் விஞ்ஞானி, வாழ்வியல் விஞ்ஞானி மொழியியல் விஞ்ஞானி, அகிம்சையியல் விஞ்ஞானி, அரசியல் விஞ்ஞானி, தத்துவவியல் விஞ்ஞானி, அனுவியல் விஞ்ஞானி, பொருளில் விஞ்ஞானி, பேர்க்கலை விஞ்ஞானி, கொடையியல் விஞ்ஞானிகள் போன்ற பலர் உலகத்தில் தோன்றி, மனித குலத்துக்குரிய மகத்தான புரட்சிகளை, ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறு காலங்களில் அந்தந்த நாட்டில் அறிவுப் புரட்சிகளைச் செய்திருக்கிறார்கள்! உலக வரலாறு புரிந்தவர்கள் இந்த உண்மைகளை உணர்வார்கள்.

விந்தைகள் செய்த
விஞ்ஞானிகள் பலர்!

இத்தகைய விஞ்ஞானத் துறைகளில் குறிப்பிடத் தக்க வித்தகர்கள் : ஜெகதீச சந்திரபோஸ், சர்.சி.வி. இராமன், பா.வே.யாளிக்க நாயகர், வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகள், திருவள்ளுருவர் பெருமான், தொல்காப்பியர், காந்தியடிகள், ஆப்ரகாம் லிங்கன், சாக்ரடீஸ், ஐன்ஸ்டின், மேடம் கியூரி, காரல்மார்க்ஸ், சாக்கியன், மாவீரன் நெப்போலியன், பாரி வள்ளல், டாஸ்கர சேதுபதி போன்ற மேலும் பலரை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

ஆனால், தொழிலியல் துறையில் ரூத்தர் ஃபோர்டு, டாடா போன்றவர்கள் தோன்றி வெற்றி பெற்றிருந்தாலும், தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு தொழிலியல் விஞ்ஞானியாகத் தோன்றி உலக அளவில் புரட்சி செய்த ஒருவர் உண்டென்றால், அவர் அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு ஒருவர்தான் என்றால் - இது இன வெறியால் கூறப்பட்டதன்று!

கோவை மாவட்டத்தில், உள்ள ஒரு குக்கிராமமான கலங்கல் என்ற ஒரு சிற்றுாரில், வேளாண் குலத்தில் பிறந்து, கற்கை நன்றே கற்கை நன்றே - பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற கருத்துக்கு முரணாக ஆசிரியரிடம் நடந்து, குறும்புத் தனமே பிறவிக் குணம் என்ற குறும்புத்தனத்தில் தத்தளித்து, ஏதோ முயற்சியால் தமிழ், ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்துகொண்ட ஒரு சாதாரண மனிதரான ஜி.டி.நாயுடு என்பவர், அனைத்து நாடுகளும் போற்றிப் புகழத் தக்க ஓர் அதிசயமான ரேசண்ட் என்ற ஷேவிங் பிளேடைக் கண்டுபிடித்திருக்கிறார் என்றால் - என்ன பொருள் அதற்கு? அறிவுப் புரட்சியால் விளைந்த ஒரு தொழிலியல் விஞ்ஞானப் புரட்சி அல்லவா இது?

ஒரு பிளேடால் 200 முறை
முக சவரம் செய்யும் விந்தை!

இன்றைக்கு நாம் கடைகளில் சென்று ஒரு ரூபாய் கொடுத்து ஒரு பிளேடை வாங்குகிறோம். அந்த பிளேடால் இரண்டு ஷேவ் கூட செய்ய முடியாமல் கூர்மை மங்கி விடுவதைத் தினமும் காண்கிறோமா - இல்லையா? சிந்தித்துப் பாருங்கள்.

ஓரிரு வாரம்தான் அந்த பிளேடு முக மழித்தலுக்குப் பயன்படுவதைப் பார்க்கின்றோம். அந்த பிளேடுகள் எல்லாமே ஏறக் குறைய மேனாட்டார் மூளையின் கண்டுபிடிப்பு ஆகும்.

ஆனால், ஒரு தமிழன், தமிழ் நாட்டைச் சேர்ந்த மனிதன் கண்டுபிடித்துள்ள ஒரு பிளேடு; 200 - முறைகளுக்கு மேலே முக மழித்தல் பணியைச் செய்கிறது என்றால், இது என்ன சாதாரணமான அறிவியல் கண்டுப்பிடிப்பா? சிந்திக்க வேண்டும் நாம்.

ஒரு பிளேடு 200 முறைகள் முக சவரம் செய்வதோடு மட்டுமா பயன்படுகிறது? இரண்டு ஆண்டுகள் வரை அந்த பிளேடு கூர்மை மங்காமல், மழுங்காமல், மறையாமல் நிலைத்து நிற்கும் திறமும் தரமும் உள்ளதாக இருந்தது.

இதுவரை உலக அரங்கில் விற்பனைக்கு வந்த மிக உயர்ரக பிளேடுகளை விட, திரு. ஜி.டி. நாயுடு கண்டுபிடித்த பிளேடுதான் உலகிலேயே மிகவும் இலேசானது. அதாவது, ஓர் அங்குலத்தில் ஒன்றின் கீழ் இருநூறு பாகம் குறுக்கு அளவு உடையதாகும்.

அந்த பிளேடைக் கையிலெடுத்து, அதன் இரு முனைகளையும் வளைத்து இரு ஓரங்களில் கொண்டு வந்து பார்த்தாலும் அந்த பிளேடு ஒடியாது.

ஷேவிங் ஸ்டிக்கிலே இணைத்து ஷேவிங் செய்யப்படும் பிளேடு அன்று அது. மின்சாரத்தின் மூலம் பயன்படுத்தக் கூடிய பிளேடு ஆகும்!

இந்த பிளேடு ஏதோ குண்டுச் சட்டியிலே குதிரை ஓட்டு வானைப் போல என்பார்களே, அதுபோல உள்ளூர் மக்களால் மட்டுமே போற்றப்பட்டது அன்று.

உலகின் பல பகுதிகளில் நடைபெற்ற பொருட்காட்சிகளில் எல்லாம் வைக்கப்பட்டும், பயன்படுத்தப்பட்டும், முதல் பரிசும் பெற்ற பிளேடு திரு. ஜி.டி. நாயுடு அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட முக சவர பிளேடு!

பிளேடு உருவான
கதை இது!

இந்த பிளேடைக் கண்டுபிடிக்கும் அவசியம் அவருக்கு ஏன் வந்தது? அதன் விவரம் இதோ:

முதல் முறையாக, 1932-ஆம் ஆண்டின்போது ஜி.டி. நாயுடு உலகச் சுற்றுப் பயணம் செய்த நேரத்தில், முக சவரம் செய்துக் கொள்ள இலண்டன் நகரிலுள்ள ஒரு முடிவெட்டும் கடைக்குச் சென்று ஷேவிங் செய்து கொண்டார். முகம் மழித்த பின்பு எவ்வளவு கூலி என்று திரு. நாயுடு கடைக்காரனைக் கேட்டபோது, அவன் ஒரு ஷில்லிங் என்றான். அதன் மதிப்பு நமது நாட்டு நாணயத்திற்கு 75 புதுக் காசுக்குச் சமம். முக சவரத்துக்கு இது அதிகப்படியான கூலி தான் என்பதை உணர்ந்த திரு. நாயுடு, கடைக்காரருக்கு காசைக் கொடுத்து விட்டு வெளிவந்த அன்றே - ஒரு முடிவான எண்ணத்துக்கு வந்தார்.

இனிமேல் முக சவரம் செய்ய கடைக்குப் போகக் கூடாது. ஒன்று முகத்தை நாமே மழித்துக் கொள்ள வேண்டும். இல்லை யானால் தாடியை வளர்த்துக் கொள்ள வேண்டும் - என்பதுதான் அந்த முடிவு.

தாடி வளர்த்துக் கொண்டால், அது நமது தொழிலுக்கு ஒத்து வராது என்றுணர்ந்த திரு. நாயுடு அவர்கள், தாமே ஷேவிங் செய்து கொள்வதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார். அதன் விளைவு என்ன ஆயிற்று?

திரு. நாயுடுவின் அழகான சிவந்த முகத்தில் பிளேடுகளால் பல வடுக்கள், காயங்கள், ரத்தக் கசிவுகள் ஏற்பட்டு அதை முகத்தின் அழகைக் குன்றச் செய்துவிட்டன. காரணம் என்ன தெரியுமா இந்த நிலைக்கு?

முக சவரம் செய்திட நாயுடு பயன்படுத்திய பிளேடுகள் எல்லாமே - போதிய அளவுக்குக் கூர்மை இல்லை. அதனால்தான் முகத்தில் ரத்தக் காயங்களும், வடுக்களும் ஏற்பட்டுவிட்டன என்பதை உணர்ந்த திரு. நாயுடு; புதிய பிளேடு கண்டுபிடித்தால் என்ன என்று எண்ணி, அதற்கான செயலில் ஈடுபட்டார். தோல்வியே ஏற்பட்டது அவரது முயற்சிக்கு!

இலண்டன் நகரை விட்டு, நாயுடு செர்மன் நாட்டிலுள்ள பெர்லின் நகருக்குச் சென்று முக சவரம் செய்து கொள்ள அங்குள்ள ஒரு கடைக்காரனை எவ்வளவு பணம் என்று நாயுடு அவர்கள் கேட்டார். அவன் செர்மன் நாணய மதிப்பில் ஒரு மார்க்கு என்றான்.

ஒரு மார்க்கு கூலி அதிகமானது என்று எண்ணிய ஜி.டி.நாயுடு, கடையை விட்டு வெளியேறி, செர்மன் பிளேடுகளிலே சிலவற்றை வாங்கிப் பார்த்து, அவற்றில் மக்களால் மதிக்கப்படும் பிளேடு எதுவோ, அதனால் அவர் சவரம் செய்து பார்த்தார்.

பழையபடி அவர் முகம் ரத்தக் காயங்களாயின; அதனால் வடுக்களும் உண்டாயின. இவற்றை மீண்டும் முகத்தில் கண்ட நாயுடு அவர்கள், மறுபடியும் புதிய பிளேடு கண்டுபிடிக்கும் முயற்சியிலே ஈடுபட்டார் அவர்.

அதற்கான விஞ்ஞானச் சோதனைகளை நாயுடு அவர்கள், பெர்லின் சோதனைச் சாலைகளிலே சென்று ஆராய்ச்சி நடத்தினார்.

ஹெயில் பிரான் என்ற ஒரு நகரம், ரசாயனப் பொருட்களுக்குப் புகழ்பெற்ற இடமாகும். அங்கே "கோபர் - ஆப் டெல்டாஸ்" என்ற பெயருடைய ஒரு விஞ்ஞானியின் சோதனைச் சாலை இருந்தது.

அந்தத் தொழிற் சாலையின் நிருவாகிகளை நாயுடு அணுகி, 'நான் ஒரு விஞ்ஞான சோதனை நடத்த விரும்புகிறேன். எனக்கு ஒரு சிறு இடம் ஒதுக்கித் தரமுடியுமா என்று கேட்டார்.

அதற்கு அந்த நிருவாகம் அவருடைய முயற்சியை ஏற்றுத் தனி இடம் ஒன்றை உருவாக்கி, அந்த அறையில் விஞ்ஞான சோதனைக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தது.

தனது பிளேடு கண்டுபிடிப்பின் முதல் முயற்சியை, அந்த கோயர் - ஆஸ்பெல்டரிஸ் தொழிற் கூடத்திலே தான் ஜி.டி. நாயுடு துவக்கினார்.

சோதனை மேல் சோதனைகளை நடத்திக் கொண்டே இருந்தார். இரவும் - பகலும் அதே சோதனையிலேயே தொடர்ந்து ஈடுபட்டார். சில நாட்கள் இவ்வாறு அவர் இடைவிடாமல் செய்த சோதனைகளால் வெற்றியைப் பெற்றார்.

முயற்சி அவருக்கு மெய்வருந்தப் புகழ்க் கூலியைக் கொடுத்தது. உயர்ந்த ரகமான, தரமான ஒரு பிளேடைக் கண்டுபிடித்து, அதற்கு "ரேசண்ட் பிளேடு" என்று பெயரிட்டார்.

விஞ்ஞான அறிவு பெற்ற பல வித்தகர்கள் நடமாடும் தொழிற்சாலை அது என்பதால், அங்கே தினந்தோறும் வந்து போகும் அறிவியல் ஆய்வாளர்கள், ஜி.டி. நாயுடுவின் ரேசண்ட் பிளேடு கண்டுபிடிப்பை வெகுவாகப் பாராட்டினார்கள்.

பிளேடின் பெயரையும், பிளேடையும் ஜெர்மன் நாட்டிலேயே பதிவு செய்து கொள்ளுமாறு, பாராட்டிய பண்பாளர்கள் திரு. நாயுடு அவர்களிடம் வற்புறுத்திக் கூறினார்கள்.

அவர்கள் எண்ணம் சரியானதுதான் என்று நம்பிய ஜி.டி. நாயுடு அவர்கள், 600 மார்க்குகள் கட்டணம் கட்டித் தனது பிளேடை ஜெர்மன் நாட்டிலே பதிவு செய்தார்.

ரேசண்ட் பிளேடு மின்சார சக்தியால் இயங்கக் கூடியது. பிளேடுக்குரிய மோட்டாரை செர்மன் நாட்டிலும், கைப்பிடியை சுவிட்சர்லாந்து நாட்டிலும் திரு. நாயுடு தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்க சம்பவமாகும்.

பிளேடு தயாரிப்பதற்குரிய உயர்ந்த ரக இரும்பை நார்வே நாட்டிலே இருந்து அவர் பெற்றார். பத்தாயிரம் பிளேடுகளை முதன் முதலாக உற்பத்தி செய்தார். அவற்றை உலகம் எங்குமுள்ள தனது நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் சிலவற்றை அனுப்பி வைத்தார். நன்றாக அந்தப் பிளேடுகளை விளம்பரம் செய்யுமாறு நாயுடு அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

இரண்டாம் முறை நாயுடு உலகச் சுற்றுப் பயணம் செய்த போது தான் கண்டுபிடித்த பிளேடுகளை விளம்பரம் செய்திட, உலகப் புகழ் பெற்ற 'டைம்ஸ்' என்ற பத்திரிக்கை அலுவலகத்துக்குள் சென்றார்.

இலண்டன் நகரிலுள்ள அந்தப் பத்திரிக்கையில் வரி விளம்பரம் தொடர்ந்து ஒரு மாதத்துக்குச் செய்திட ஆயிரம் பவுன்கள் ஆகும் என்று அந்தப் பத்திரிக்கை நிர்வாகிகள் கூறினார்கள். அதைக் கேட்டதும் அவர் விளம்பரம் தேவையில்லை என்று திரும்பி வந்துவிட்டார்.

இலண்டன் நகரில் உள்ள கடைக்காரர்களை நாயுடு அணுகி, தனது பிளேடுகளை அவரவர் கடைகளின் காட்சி அறைகளில் மக்களின் பார்வைக்கு வைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு அவர்கள் மறுத்துவிட்டார்கள்.

பிறகு, சில்லறைக் கடைக்காரர்களைப் பார்த்து, பிளேடு ஒன்றை 15 ஷில்லிங்குக்குத் தருவதாகவும், அவற்றை விற்றுக் கொடுக்கும்படியும் கேட்டார்; ஒரு சிலர் நாயுடு கூறியதைக் கேட்டுக் கொண்டு அவ்விதமே செய்தார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு, சிறு கடைக்காரர்கள் கடைகளில் பிளேடுகள் - நன்றாக, பரபரப்பாக விற்பனையானதால், நாயுடு பிளேடுகளுக்கு அங்கே நல்ல மரியாதை உண்டானது. இலண்டன் சிறு கடைகளில் நாயுடு அவர்களின் ரேசண்ட் பிளேடுகளுக்கு நல்ல விற்பனைகள் பெருகி, பிளேடுகளுக்கு கிராக்கி உருவானதால், பிளேடு ஒன்றுக்கு 10 ஷில்லிங் விலையை ஏற்றினார். ஒரு பிளேடு 25 வில்லிங் விலைக்கு அவை விற்கப்பட்டன. இரண்டே மாதத்தில் இலண்டனில் மட்டும் 7500 பிளேடுகள் போட்டிப் போட்டு விற்பனையாயின.

அதே ரேசண்ட் பிளேடுகள் இந்தியா விற்பனைக்கும் வந்தன. ஒரு பிளேடு விலை 9 ரூபாய்க்கு விற்றது. இவ்வாறு நாயுடு பிளேடுகள் இலண்டன் கடைகளிலே போட்டிப் போட்டு விற்பனையானதால், ஏற்கனவே விற்றுக் கொண்டிருந்த பழைய நிறுவனங்களது பிளேடுகளுக்கு எல்லாம் செல்வாக்குக் குறைந்துவிட்டது. இதனால் வியாபாரிகளுக்கு இடையே பொறாமை ஏற்பட்டது, அவர்கள் நாயுடு பிளேடுகளின் விற்பனையைக் கண்டு அஞ்சினார்கள்.

எப்படியாவது நாயுடு பிளேடுகளின் விற்பனைச் செல்வாக்கைக் குறைக்க வியாபாரிகள் நினைத்தார்கள், முடியவில்லை. நாளுக்கு நாள் ரேசண்ட் பிளேடுகளின் விற்பனையே பெருகின.

எனவே, பழைய நிறுவனக்காரர்கள் - தங்களது பிளேடுகளின் விற்பனையைப் பெருக்கவும், இழந்த விற்பனைச் செல்வாக்கை மீண்டும் மக்களிடம் நிலை நாட்டிடவும், நாயுடு பிளேடுகள் விற்பனையைத் தகர்க்கவும் திட்டமிட்டார்கள்.

போலி பிளேடுகள்
போட்டிக்கு வந்தன!

இலண்டன் நகரத்திலே உள்ள ஒரு பெரிய இங்லிஷ்காரர் நிறுவனம், 'டெலி ரேசர் - Tele razor' என்ற பெயரில் ஒரு புதிய பிளேடைத் தயாரித்துக் கடை வீதிகளுக்கு அனுப்பி விற்கச் செய்தார்கள்.

பிளேடு ஒன்றின் விலை 15 ஷில்லிங்குக்கு விற்றிட அந்தப் புதிய நிறுவனம் ஏற்பாடு செய்தும்கூட, நாயுடு அவர்களின் பிளேடுகள் விற்பனைச் செல்வாக்கை அது உடைத்தெறிய முடியாமல் தோற்றுவிட்டது. இதிலும் நாயுடுவே இலண்டன் வியாபாரிகளைத் தோற்கடித்து விட்டார். விலையைக் குறைத்து விற்றிட்ட புதிய நிறுவனமும் நாளடைவில் மூடப்பட்டு விட்டது.

இலண்டனில் தனது பிளேடுகளுக்கு நல்ல விற்பனைக் கிராக்கியை உருவாக்கிய ஜி.டி. நாயுடு அமெரிக்கா சென்றார்.

அமெரிக்காவிலும் நாயுடு
பிளேடு பரபரப்பு விற்பனை!

நாயுடு அவர்கள், அமெரிக்கா போவதற்கு முன்பாகவே, அவரது பிளேடுகள் அமெரிக்கர்களிடம் நல்ல செல்வாக்கோடு விற்பனையாகிக் கொண்டிருந்ததால், அமெரிக்கா சென்ற நாயுடுவை அங்கிருந்த பெரிய நிறுவனங்கள் சில அவரைப் பாராட்டிப் பெருமைப்படுத்தின.

அமெரிக்க வணிகர்கள் ஜி.டி. நாயுடுவின் விஞ்ஞான விந்தையைப் பாராட்டியதோடு நில்லாமல், உலகம் புகழும் ரேசண்ட் பிளேடு விற்பனை உரிமையைத் தங்களுக்கு வழங்க வேண்டு மென்று கேட்டார்கள்.

அமெரிக்க வியாபார நிறுவனங்கள் எப்படியாவது ரேசண்ட் பிளேடு விற்பனை உரிமையைப் பெற்றுவிடுவது என்று, ஒன்றுக் கொன்று போட்டியிட்டு நாயுடுவை அணுகின.

ரேசண்ட் பிளேடு
உரிமைப் போட்டி!

அந்த நிறுவனங்களில் பெரிய நிறுவனம் ஒன்று விக்டர் என்ற அமெரிக்க வியாபார நிறுவனம். அதன் முதலாளியான விக்டர் என்பவர், ஜி.டி. நாயுடு தனது நிறுவனத்தில் பணி செய்ய விருப்பப்பட்டால், அவருக்கு மாதம் 3000 டாலர், அதாவது இந்திய நாணய மதிப்பின்படி 15,000 ரூபாய் மாதச் சம்பளம் தருகிறேன்; வேலைக்கும் வைத்துக் கொள்கிறேன் என்ற வாக்குறுதியை வழங்கி, பணியில் சேருமாறு நாயுடுவைப் பார்த்துக் கேட்டார். அதை திரு. ஜி.டி. நாயுடு மறுத்து விட்டார்.

தமிழ் நாட்டில் யு.எம்.எஸ். என்ற மோட்டார் கூட்டுறவு நிறுவனத்தை உருவாக்கி, 200 பேருந்துகளுக்கு மேல் நடத்துபவர் ஜி.டி. நாயுடு. ஆயிரக் கணக்கானத் தொழிலாளர்கள் அவரது அதிகாரத்தில் பணி புரிகிறார்கள்.

உடல் நலமற்ற ஒரு தொழிலாளி பணிக்கு வந்து வேலை செய்தால், ஒரு நாளைக்கு அவனுக்குப் பத்து ரூபாய் அபராதம் என்று கட்டளையிட்டு, தொழிலாளர் நலம் பேணி வரும் ஓர் அதிசய முதலாளியான ஜி.டி.நாயுடுவை, அமெரிக்க முதலாளியான விக்டர் என்பவர் பணியில் சேர ஆசை காட்டினால் சேருவாரா ஜி.டி. நாயுடு?

அதனால், அந்த அமெரிக்க முதலாளியின் அன்பான வாக்குறுதி அழைப்பை ஏற்க நாயுடு மறுத்து விட்டார். இதைக் கண்ட அமெரிக்க வணிக அதிபர் விக்டர் அதிர்ச்சி அடைந்தார்.

பிளேடு உரிமை பெற
ரு. 15 லட்சம் பெற மறுப்பு!

இதற்கடுத்து, மற்றொரு அமெரிக்க முதலாளி ஜி.டி.நாயுடு விடம் பேசும்போது, ரேசண்ட் பிளேடு உரிமையைத் தனது நிறுவனத்துக்கு உரிமையாக்கினால், "மூன்று லட்சம் டாலர் அதாவது, 15 இலட்சம் ரூபாயை விலையாகக் கொடுக்கத் தயார்" என்று கேட்டுக் கொண்டார். அதையும் திரு. ஜி.டி. நாயுடு ஏற்க மறுத்து விட்டார்.

வேறொரு அமெரிக்க முதலாளி, ஜி.டி. நாயுடுவிடம் உரையாடியபோது, "எனது சொந்த ஊரான சிகாகோ என்ற நகரத்தில், உமது ரேசண்ட் பிளேடு தொழிற்சாலையை உருவாக்குகிறேன். அங்கே ரேசண்ட் பிளேடுகளைத் தயாரிப்போம். விற்பனையில் கிடைக்கும் மொத்த லாபத் தொகையில் பாதி அளவை, அதாவது 50 சதவிகிதத்தை உமக்குப் பணமாகக் கொடுக்கின்றேன்" என்று தெரிவித்தார். அதையும் ஜி.டி. நாயுடு அவர்கள் சிரித்துக் கொண்டே மறுத்து விட்டார்.

இவ்வாறு அமெரிக்க முதலாளிகள் ஒவ்வொருவராகப் போட்டிப் போட்டுக் கொண்டு வலைவீசி, ஆசை காட்டி, ஜி.டி. நாயுடுவை பணிய வைக்க முயன்றார்கள். பிளேடின் உரிமையை விலைக்கு வாங்கப் போட்டிப் போட்டார்கள் என்றால், அந்த பிளேடின் தரம், திறம், செல்வாக்கு, மதிப்பு, மரியாதை எப்படிப் பட்டதாக இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் இப்போதும் எண்ணிப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோமில்லையா?

இவ்வளவு பெரிய பொருட் குவியலை; அந்த ரேசண்ட் பிளேடு அமெரிக்காவில் ஜி.டி.நாயுடுவின் காலடியில் குவித்த போதும்கூட, அவற்றை எல்லாம் திரு. நாயுடு துச்சமெனத் துக்கி எறிந்தார் என்றால்; அவருடைய மன வளம் எப்படிப்பட்ட செம்மாப்புடையதாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

திரு. ஜி.டி.நாயுடு ஏன் அவற்றை எல்லாம் தூக்கி ஏறிந்தார் தெரியுமா? இங்கேதான் அவருடைய நாட்டுப் பற்றை, தேசப் பக்தியை நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஏன் தெரியுமா?

தனது விஞ்ஞான வருமானம்
பாரத பூமிக்கே பயன்பட ஆசை!

இந்தியன் ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்ட தங்க நிகர் விஞ்ஞானப் புதுமையை, தமிழன் ஒருவனால் உருவாக்கப்பட்ட அறிவியல் புதையலை, வேறொரு நாட்டார் அனுபவிப்பதா?

அந்த விஞ்ஞான வித்தகம் தமிழ் மண்ணிலேயே தயாராக வேண்டும்; உற்பத்தி செய்யப்பட்ட அந்த ரேசண்ட் பிளேடுகள் தமிழ் மண்ணிலே இருந்து, பாரதப் பூமியிலே இருந்து ஏற்றுமதியாகி உலகெங்கும் கொடி கட்டிப் பறந்து, அதன் பெருமை, செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, புகழ் அனைத்தும் இந்திய மண்ணுக்கே வந்தடைய வேண்டும் என்ற தேச பக்தி உணர்வால்; அமெரிக்கர்களது பணக் குவியல் பேராசையைத் துக்கி எறிந்தார் நாயுடு அவர்கள்.

அதுமட்டுமல்ல காரணம், மற்றுமொரு காரணமும் அவருடைய உள்ளத்தில் ஆல்போல் தழைத்து அருகு போல வேரூன்றி இருந்தது. என்ன அது? இந்தியன் ஒருவனால், தமிழன் ஒருவனால் கண்டுபிடிக்கப் பட்ட அந்த ரேசண்ட் பிளேடு உற்பத்தி வாணிகத்தில் கிடைக்கும் லாபத் தொகை எல்லாம். இந்திய மண்ணுக்கே, தமிழ் பூமிக்கே பயன்பட்டாக வேண்டும் என்பதே அவரது தணியாத ஆசையாக நெஞ்சிலே படர்ந்திருந்தது.

அந்த தணியாத வேட்கையை நிறைவேற்றிட ஜி.டி. நாயுடு அவர்கள் பலமுறைகளில், பல வழிகளில் முயன்று பார்க்க, இரவும் - பகலும் முயற்சி செய்து வந்தார்.

நாயுடு ‘ரேசண்ட்’ பிளேடு
இந்தியாவில் தோன்றாதது ஏன்?

ஜி.டி. நாயுடுவின் இந்த நினைத்தற்கு அரிய நிகழ்ச்சிக்கு, அப்போது சென்னை மாநில ஆட்சியின் செயலாளர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்த எம்.ஏ.சீனிவாசன், எஸ்.வி.இராமமூர்த்தி என்பவர்கள் - அதற்கான பணிகளில் உதவி செய்திட முன் வந்தார்கள்.

ஆனால், தில்லியிலே உள்ள அரசு அவர்களுக்கு உதவிட முன்வராமல் இருந்துவிட்டது ஒரு காரணம். என்றாலும், நார்வே நாட்டில் கிடைத்திட்ட உயர் ரகம் இரும்பு இந்தியாவில் கிடைக்காததும் - மறு காரணமாக அமைந்தது.

அதனால், இன்று வரை ரேசண்ட் பிளேடு தயாரிப்பகம் இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் அமைக்கப்படாமலே போய் விட்டது. இனியாவது ரேசண்ட் பிளேடு தொழிற்சாலை தோன்றுமா இந்திய மண்ணில்?