உள்ளடக்கத்துக்குச் செல்

நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/17. ஜி.டி.நாயுடுவைச் சந்தித்தேன்

விக்கிமூலம் இலிருந்து

17. ஜி.டி.நாயுடுவைச் சந்தித்தேன்

“வாழ்க்கையிலே எத்தனையோ மேடு பள்ளங்களிலே ஏறி இறங்கியவன் நான். பெரியார் போட்ட பூட்டு என்னை என்ன செய்யும்? அதையும் எப்படியோ சமாளிச்சேன். அடுத்தாப்போலக் குமாரபாளையத்திலே எங்க நாடகம் நடந்துக்கிட்டிருந்தது. கூட்டமாவது கூட்டம், சொல்ல முடியாத கூட்டம். ஒரு நாளைப்போலக் கொட்டகை நிரம்பி வழிஞ்சிக் கிட்டிருந்தது...”

“புதிய நாடகமா?”

“இல்லே, பழைய நாடகம்தான்; அதே ‘இழந்த காதல்’ தான். ஆனா ஒண்ணு.”

“என்ன ?”

“நான் பேசற நாடக வசனங்கள் அப்பப்போ மாறிக்கிட்டிருக்கும். அந்த வசனங்களிலே அப்டுடேட் அரசியல் விமரிசனங்கள் இருக்கும். ‘கரண்ட் பாலிடிக்'ஸை வைச்சிக்கிட்டு என் கருத்துக்களை நான் துணிஞ்சிச் சொல்வேன்...”

“அந்தக் காலத்து ஜனங்களுக்கு அது ரொம்பப் பிடித்திருந்தது போல் இருக்கிறது...”

“அந்தக் காலத்து ஜனங்களுக்கு மட்டும் இல்லே, எந்தக் காலத்து ஜனங்களுக்கும் அது பிடிக்கும். ‘கலை கலைக்காகவே'ன்னு சில பேர் கரடி விடுவானுங்க. அதை நீங்க நம்பாதீங்க. அப்படியிருந்தா அது எப்பொவோ செத்துப் போயிருக்கும். கலை வாழ்க்கைக்காகத்தான்; வாழ்க்கையும் கலையும் சேரும் போதுதான் அதுக்கு உயிரே வருது... என் வெற்றிக்கு அதுவே காரணம்.”

“சரி, அப்புறம் ?”

“ஒரு நாள் எக்கச்சக்கமான கூட்டம். திரை மறைவிலே நான் மேக்அப் போட்டுக்கிட்டிருந்தேன். தியேட்டர் மானேஜர் இரைக்க இரைக்க ஓடி வந்து, ‘பெரியார் வந்திருக்கார், அண்ணாதுரை வந்திருக்கார், சம்பத் வந்திருக்கார்’னு மூச்சு விடாம சொல்லிக்கிட்டே போனார். ‘எதுக்கு ?ன்னு கேட்டேன்; ‘உங்க நாடகத்தைப் பார்க்கணுமாம்'னார். ‘பார்க்கட்டுமேன்னேன்,'ஒரு சீட்கூடக் காலியில்லையே, எப்படி அவர்களை உட்கார வைக்கிறது ?ன்னார். அவர்களுக்கு இஷ்டமிருந்தா தரையிலே உட்கார்ந்து பார்க்கட்டும்; இல்லேன்னா போகட்டும்'னேன். மானேஜர் என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார்; ‘ரொம்பப் பெரியவங்க அவங்க'ன்னார்; இருக்கலாம்; என்னைவிடப் பெரியவங்களா வேறே யாரையும் நான் நெனைச்சுக் கூடப் பார்க்கிறதில்லையே!ன்னேன். அதுக்கு மேலே அவர் அங்கே நிற்கல்லே; போயிட்டார்.”

“பாவம், அவருக்கு ஒரே ஏமாற்றமா யிருந்திருக்கும்...”

“அதுக்காக நானும் கவலைப்படல்லே, வந்தவங்களும் கவலைப்பட்டதாத் தெரியல்லே, அவர் சொன்ன மூணு பேரும் நிலைமையைப் புரிஞ்சிக்கிட்டுத் தரை டிக்கெட்டிலேயே உட்கார்ந்து கடைசி வரை என் நாடகத்தைப் பார்த்தாங்க. அதோடே நிக்கல்லே, என் அழைப்பை எதிர்பாராமலே இண்டர்வ'லிலே மேடைக்கு வந்து என்னையும் என் நாடகத்தையும் பாராட்டிப் பேசினாங்க. நான் நினைக்கிறேன், ஒரு கட்சியை வளர்க்கணும்னா அதுக்குக் கலைஞர்களுடைய ஒத்துழைப்பும் தேவைங்கிற விஷயமே அன்னிக்குத்தான் அண்ணாதுரை மனசிலே உதயமாகியிருக்கும்னு. அது மட்டும் இல்லே, ‘தி.க.மாநாடு நூறு நடத்தறதும் சரி, எம்.ஆர்.ராதா நாடகம் ஒண்ணு நடத்தறதும் சரி'ன்னு அவர் சொன்னதுகூட அன்னிக்குத்தான். அதுக்கு மேலேதான் அவரே நாடகம் எழுதவும், நடிக்கவும், இன்னும் சிலரை அந்த வழியிலே திருப்பி விடவும் அவர் வேலை சேஞ்சாரு. அதாலேதான் சந்தர்ப்பம் வாய்க்கும்போது பெரியாரையே எதிர்த்து நின்று வெற்றி பெறவும் அவராலே முடிஞ்சது; மற்றவங்களாலே முடியலையே? அவரை எதிர்த்தவங்க அத்தனை பேரும் இருந்த இடமே தெரியாம இல்லே போயிட்டாங்க!”

“யார் போனாலும் வந்தாலும் பெரியார் இன்னும் நிற்கிற இடத்திலேயேதானே நின்று கொண்டிருக்கிறார்!”

“அது தெரிந்துதான் அண்ணாதுரை அவரை விட்டுப் பிரிஞ்சித் தனிக் கட்சி ஆரம்பிச்சப்போகூடத் தலைவர் பதவியை அவருக்கே விட்டு வைச்சிருந்தார்...”

“இப்போது அதுகூட.”

“சரியான ஆளைத் தேடித்தான் போயிருக்குது. அந்த விஷயத்திலே பெரியாருக்குக்கூட சந்தோஷமாயிருக்கும்னு தான் நான் நெனைக்கிறேன்...”

“அதிருக்கட்டும், குமாரபாளையத்திலிருந்து, நீங்கள் எங்கே போனீர்கள் ?”

“கோயமுத்துருக்கு... அங்கிருந்த பஸ் ஸ்டாப்புக்கிட்டே கருப்பண்ணப் பிள்ளைன்னு ஒருத்தர் ஒரு தியேட்டர் நடத்திக்கிட்டு இருந்தார். அந்தத் தியேட்டர் இருந்த இடம் ஜி.டி.நாயுடுவின் இடம்னு சொன்னாங்க... அப்போ எனக்கு ஒரு எண்ணம் வந்தது... ‘மொதல் தடவையா இங்கே ஜி.டி.நாயுடுவின் தலைமையிலே நாடகத்தை ஆரம்பிச்சி வைச்சா என்ன ?ன்னு நெனைச்சேன்...நெனைச்சதோடு நிக்கல்லே, அவர் வீட்டுக்குப் போய் அவரை அழைக்கவும் அழைச்சேன்...'நாயுடு எதிலும் கொஞ்சம் கண்டிப்பான பேர்வழி’ ன்னு எனக்கு முன்னமேயே தெரியும்...இருந்தாலும் நாடகத்துக்குத் தலைமை தாங்க அவர் ஒப்புக்கு வார்னே நான் நெனைச்சேன்...நெனைச்சபடி நட்க்கல்லே; ‘நாடகத்துக்காவது, நான் தலைமைதாங்க வருவதாவது ? போய்யா, போ,’ ன்னு சொல்லி அவர் என்னை விரட்டி விட்டார்.... இப்படியும் ஒரு பெரிய மனுஷனா ?ன்னு நெணைச்சிக்கிட்டே நான் வெளியே வந்தேன்.....நான் வந்த டாக்சி அந்த இடத்தை விட்டுச் சீக்கிரம் கிளம்பாம கொஞ்சம் ‘ட்ரபிள்’ கொடுத்தது; டிரைவர் இறங்கி அதை ‘ரிப்பேர்’ பார்த்துக்கிட்டிருந்தார். அப்போ எங்களுக்கு எதிர்த்தாப் போல ஒரு பெரிய கார் வந்து நின்றது; அதிலிருந்து ஏழெட்டுப் பேர் இறங்கி என்னைப் பார்த்துக்கிட்டே நாயுடு வீட்டுக்குள்ளே போனாங்க... போனவங்க சும்மா இல்லாம, “ராதா எங்கே வந்துட்டுப் போறார், இங்கேயா வந்துட்டுப் போறார்?'ன்னு கேட்டாங்க, “ஆமாம், இங்கே தான் வந்துட்டுப் போறான்; அவன் நாடகத்துக்கு நான் தலைமை ‘தாங்கணுமாம். முடியாது, போன்னு சொல்லி அனுப்பிட்டேன்’னு அவர் அலட்சியமாய்ச் சொன்னார். ‘ஐயையோ, அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதே! அவர் நாடகத்தை நீங்க அவசியம் பார்க்கனுமே!ன்னு அவங்க சொன்னாங்க...அதுக்குள்ளே டாக்சி சரியாகிவிட்டது; நான் அந்த இடத்தை விட்டுப் போயிட்டேன். அதுக்கு மேலே அவங்க என்ன பேசினாங்களோ, என்ன முடிவுக்கு வந்தாங்களோ, அது எனக்குத் தெரியாது....”

“அன்றைக்குச் சாயந்திரம் நாயுடு தாமாகவே நாடகத்துக்கு வந்துவிட்டாரா?”

“ஆமாம்; வந்தவர் தனியாகவும் வரல்லே, நாலைஞ்சு பேரோட சேர்ந்து வந்துட்டார்.அப்படித்தான் வந்தாரே, கொஞ்சம் முந்தியாவது வந்தாரா? அதுவும் இல்லே, ஹவுஸ் புல் ஆணப்புறம் வந்தார். நான் என்ன செய்வேன்? வந்து சொன்னவங்கக்கிட்டே, மியூஸிக் பார்ட்டி உட்கார்ற இடத்திலே நாலைஞ்சு நாற்காவியை ‘அட்ஜஸ்ட்’ பண்ணிப் போட்டு ‘உட்கார வையுங்க'ன்னேன்...அப்படியே போட்டாங்க, அவங்களும் அங்கே உட்கார்ந்து கடைசி வரையிலே இருந்து நாடகத்தைப் பார்த்தாங்க.எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம், ‘நாயுடு எப்பவும் எந்த இடத்திலும் எதையும் இத்தனை மணி நேரம் சேர்ந்தாப்போல உட்கார்ந்து பார்க்க மாட்டாரே. அப்படிப்பட்டவர் இந்த நாடகத்தை மட்டும் எப்படி இவ்வளவு நேரம் உட்கார்ந்து பார்த்தார்!’னு அங்கங்கே கூடி நின்னு பேசிக்கினாங்க...”

“ஏன் பேச மாட்டார்கள்? மனிதரிலும் மனிதர் ‘அதிசய மனிதர்’ என்று பெயர் எடுத்தவராயிற்றே அவர்!”

“அந்த அதிசய மனிதர் என் நாடகத்தை முழுக்க முழுக்க உட்கார்ந்து பார்த்தப்புறம் என்ன நெனைச்சாரோ என்னவோ, ஒரு நாள் என்னைத் தன் வீட்டுக்கு கூப்பிட்டனுப்பினார்; போனேன். தான் நடத்தும் தொழிற்பள்ளி மாணவர்களுக்காக நான் ஒரு நாடகம் நடத்தித் தரணும்னார்; அதற்கென்ன, நடத்தினால் போச்சு'ன்னேன். அந்த நாடகம் அவருடைய தொழிற்பள்ளி அரங்கில், சர்.சி.வி.ராமன் தலைமையிலே நடந்தது. ‘மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதாது; இந்த மாதிரி நாடகங்களும் தேவை’ ன்னார் ராமன்; நாயுடுவோ, ‘நாட்டின் நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டும் இந்த நாடகக் கலைஞருக்கு, காலத்தின் நிலையை உள்ளது உள்ளளபடிக் காட்டும் கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசாக அளிக்கிறேன்’னு சொல்லி, ரூபாய் இரண்டாயிரத்தோடு ‘காஸ்ட்லி வாட்ச் ஒன்றையும் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்...மாணவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி, ஆளுக்கொரு ஆட்டோ கிராப் நோட்டை நீட்டி என்னைத் திக்குமுக்காட வைச்சுட்டாங்க.. அத்தனையிலும் கை வலிக்கக் கையெழுத்தைப் போட்டுக் கொடுத்துவிட்டு, ஒரு வழியா வெளியே வந்தேன்..அதற்குப் பின் ஜி.டி.நாயுடு அவர்கள் எனக்கும் என் தொழிலுக்கும் செய்த உதவிகள், நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல...உண்மையிலேயே ரொம்ப ரொம்ப அருமையான காலம் அது...அப்படி ஒரு காலம் மீண்டும் வருமான்னு இப்போ நான் நெனைச்சிப் பார்க்கிறேன்...எங்கே வருது, பெருமூச்சுத்தான் வருது!"