நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/24. திருவாரூர் சிங்கராயர்

விக்கிமூலம் இலிருந்து

24. திருவாரூர் சிங்கராயர்

“காந்தியார் அகிம்சாவாதியாயிருந்தாலும் அப்போதிருந்த காங்கிரஸ் தொண்டர்களிலே பலர் அகிம்சாவாதிகளாயில்லே. திராவிடர் கழக மாநாடு எங்கே நடந்தாலும் அந்த மாநாட்டுப் பந்தல்களைக் கொளுத்தறதிலே அவங்க முன்னணியிலே நின்னாங்க, கறுஞ் சட்டைக்காரனைப் பிடிச்சி அடிக்கிற ஆத்திரத்திலே தங்களை மறந்து கறுப்பு அங்கி போட்ட வக்கீலையும் பிடிச்சி அடிச்சிட்டு, “ஐ ஆம் வெரி சாரின்னாங்க. என் நாடகம் எங்கே நடந்தாலும் அதை நடக்கவிடாம தடுக்கிறதுக்காகத் தங்கள் செல்வாக்கை எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்தித் தடை உத்தரவு வாங்கினாங்க. இந்த மாதிரி எதிர்ப்புக்களைக் கண்டு அஞ்சிப் பின் வாங்கியவர்களும் அந்த நாள் திராவிடர் கழகத்திலே உண்டு; அஞ்சாம எதிர்த்து நின்று நினைச்சதை நினைச்சபடி செஞ்சி முடிச்சவங்களும் உண்டு. அவர்களிலே சிலர் இன்னிக்கு என்னை மறந்தாலும் என்னாலே அவர்களை மறக்க முடியல்லே...”

“சொல்லுங்கள்; நீங்கள் சொன்ன பிறகாவது உங்களுடைய நினைவு அவர்களுக்கு வராதா ?”

‘எதுக்கு வரணும்? நீங்க நினைக்கிற நோக்கத்திலே அதை நான் இப்போ உங்ககிட்டே சொல்ல வரல்லே, ஏன்னா, என்னிக்குமே இன்னொருத்தன் கால்லே நிற்கணும்னு நான் நினைச்சதே கிடையாது; இன்னிக்கும் அப்படி நினைக்க மாட்டேன்..." “அதுதான் உங்களைத் தெரிந்த எல்லாருக்கும் தெரியுமே!”

“வரலாறுன்னு வரப்போ அதையெல்லாம் சொல்றது என் கடமைன்னு நினைக்கிறேன்; அவ்வளவுதான். விழுப்புரத்திலே ஒரு கண்காட்சி; அதிலே என் நாடகம். வழக்கம்போலக் காங்கிரஸ்காரர்களின் ‘திருவிளையாடல்’ ஆரம்பமாச்சி. அப்போ அதை எதிர்த்து வெற்றி கண்டவர் இப்போ கூட்டுறவு வங்கித் தலைவர்களிலே ஒருவராயிருக்கும் சண்முகம். அடுத்தாப்போல திருவண்ணாமலையிலே ஒரு மாநாடு; அந்த மாநாட்டிலேயும் என் நாடகம் இருந்தது. வழக்கம் போல காங்கிரஸ் தொண்டருங்க அங்கேயும் தங்கள் கைவரிசையைக் காட்டினாங்க. அன்னிக்கு அங்கே அவர்களை எதிர்த்து நின்று வெற்றிக் கொடி நாட்டியவர் இன்னிக்கு உணவு அமைச்சராயிருக்கும் ப.உ.சண்முகம். இவர்களை மிஞ்கம் வகையில் ஒரு சமயம் மதுரையில் நடந்த கலகத்தை அடக்கி ஒடுக்கி வெற்றி வாகை சூடியவர்கள் இப்போ அங்கே மேயராயிருக்கும் முத்துவும், அவர் நண்பர் ஹீராலாலும் ஆவார்கள். மதுரை மாநாட்டிலே நாடகம் நடத்த நான் வந்திருந்தபோதுதான் அறிஞர் அண்ணாதுரை யாரோ ஒரு பையனை அழைச்சிக்கிட்டு என்கிட்டே வந்து ‘இவன் எங்கள் ஊர்ப் பையன்; சத்தியமூர்த்தின்னு பேரு, நடிக்க வேணும்னு ஆசைப்படறான். உங்க கம்பெனியிலே இவனைச் சேர்த்துக்க முடியுமா ?”ன்னார். ‘விட்டு விட்டுப் போங்க'ன்னேன். அவர் செஞ்ச முதல் சிபாரிசு இது. அடுத்த சிபாரிசு அவர்கிட்டேயிருந்து வரல்லே, திருவாரூர் சிங்கராயர்கிட்டேயிருந்து வந்தது....”

“அது என்ன சிபாரிசு ?”

“அந்த நாள் கழகத் துண்களில் ஒருவராயிருந்த அவர் இந்த நாள் முதலமைச்சராயிருக்கும் டாக்டர் கருணாநிதியை என்கிட்டே அழைச்சிக்கிட்டு வந்து, ‘தம்பி கருணாநிதி ஒரு நாடகம் தீட்டனும், அதிலே நீங்க நடிக்கனும்கிறது என் ஆசை. என்ன சொல்றீங்க?'ன்னார். ‘அதுக்கென்ன, அப்ப்டியே செய்வோம்'னேன். அப்போ தீட்டியதுதான் தூக்கு மேடை...”

“தஞ்சாவூர் மிராசுதாரர்களில் சிலரை ஞாபகப் படுத்துவதுபோல் இருக்குமே, அந்த நாடகமா?”

“ஆமாமாம், அதுவேதான்!”

“சரி, அப்புறம்...?”

“அப்போ நான் தஞ்சாவூர் கொடி மரத்து மூலையிலிருந்த கிருஷ்ணப் பிள்ளை தியேட்டரிலே நாடகம் நடத்திக்கிட்டிருந்தேன். எதிர்த்தாப்போல டவுன் ஹால்: அதிலே அறிஞர் அண்ணா தீட்டிய ‘வேலைக்காரி’ நாடகத்தை நண்பர் கே.ஆர்.ராமசாமி நடத்திக்கிட்டிருந்தார். அதுக்காக அவர் செஞ்ச விளம்பரங்களிலெல்லாம், ‘அறிஞர் அண்ணா தீட்டிய வேலைக்காரி'ன்னு போட்டுக்கிட்டிருந்தார். ‘அறிஞர் பட்டம் பொதுவானது தானே ?’ ன்னு நானும் ‘தயாராகிறது, அறிஞர் கருணாநிதி தீட்டிய தூக்கு மேடை'ன்னு நோட்டீசு போட்டுக் கொடுத்தேன். கருணாநிதிக்கு இது பிடிக்கல்லே ‘எனக்கு வேண்டாம் அறிஞர் பட்டம், தயவு செய்து எடுத்து விடுங்கள்’னு என்னைக் கேட்டுக்கிட்டார். அந்த விஷயத்திலும் தான் அண்ணாவுக்குத் தம்பியாகவே இருக்கணும்னு அவர் நினைக்கிறதை நாம் ஏன் தடுக்கணும்'னு, நானும் அந்த அறிஞர் பட்டத்தை எடுத்துட்டேன்...”

“அண்ணா அறிஞ'ராயிருக்கட்டும், நாம் கலைஞ’ ராகவே இருந்து விடலாம் என்று அவர் நினைத்தாரோ என்னவோ ?”

“அப்போ ‘கலைஞர்’னு போட்டுக்கலாம்னு அவருக்கும் தோணல்லே, எனக்கும் தோணல்லே. அதாலே மு.கருணாநிதி தீட்டிய தூக்குமேடை'ன்னே விளம்பரம் சேஞ்சோம். காரிலே மைக் வைச்சிச் செய்யற விளம்பரம் அப்போத்தான் வந்திருந்தது. அதுக்கு என்கிட்டே அப்போ கார் இல்லை; சிங்கராயர் தன்கிட்டே இருந்த காரைக் கொடுத்து உதவினார். அதிலே மைக் வைச்சித் தஞ்சாவூர் பூராவும் ‘தூக்கு மேடை’ நாடகத்துக்கு விளம்பரம் செய்ய வைச்சேன். முதல் நாள் நாடக வசூலைக் கருணாநிதிக்குக் கொடுத்துடறதா முடிவு செஞ்சிருந்தோம். அதைப் பெரியார் தலைமையிலே நாடகத்தை நடத்திக் கொடுத்தா நல்லாயிருக்கும்னு எனக்குத் தோணுச்சி. அப்போ பெரியார் இப்போ இறந்து போனாரே திருச்சி வேதாசலம், அவர் வீட்டிலே தங்கியிருந்தார்...”

“யார் வக்கீல் வேதாசலம்தானே ?”

“அவரேதான். அந்த நாளிலே பெரியார் திருச்சிக்கு வந்தா அவர் வீட்டிலேதான் தங்குவார். அங்கே போய்ப் பெரியாரைப் பார்த்து, அவர் கிட்டே விஷயத்தைச் சொல்லி, அவருக்குச் செளகரியமான ஒரு தேதியைக் கேட்டுக்கிட்டு வரச் சொல்லி சிங்கராயரை அனுப்பினேன். அவர் போய்ச் சொன்னதற்கு, கண்டவனுக்கெல்லாம் நிதி கொடுக்கிறதாவது, அந்த நாடகத்துக்கு நான் தலைமை தாங்கறதாவது? போய்யா, போ ன்னு பெரியார் அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார். விஷயம் என்னன்னா, கருணாநிதியை அப்போ பெரியாருக்குக் கொஞ்சம் பிடிக்காது. காரணம் வேறே ஒண்ணுமில்லே, எல்லாப் பெரிய மனிதர்களுக்கும் ஏதாவது ஒண்ணிலே ‘வீக்னஸ்’ இருக்குமே, அந்த வீக்னஸ் அவருக்கும் இருந்ததுதான் காரணம். மேடைப் பேச்சிலே சில சமயம் எல்லாரையும் மிஞ்சிப் பேசி, அப்போதே பொது மக்களிடம் ‘அப்ளாஸ்’ வாங்கிவிடும் சாமர்த்தியம் கருணாநிதிக்கு உண்டு. அது அவருக்குப் பிடிக்காது. இருந்தாலும் அதுக்காக அந்தச் சமயம் அவரை விட்டுவிடக் கூடாதுன்னு நானே திருச்சிக்குப் போனேன். போனதும் நூறு ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அதற்குப் பின் விஷயத்தைச் சொல்லித் தேதியைக் கேட்டேன். சக்ஸஸ் உடனே தேதி கிடைத்துவிட்டது. அவர் குறிப்பிட்ட தேதியில், அவருடைய தலைமையில் ‘துக்கு மேடை’ நாடகம் நடந்தது. வெற்றி எனக்கு மட்டுமா ? இல்லே, கருணாநிதிக்கும்தான்!"