நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/29. அண்ணாவின் ஆசை
29. அண்ணாவின் ஆசை
“சிவாஜிகணேசனும் நானும் சேர்ந்து நடிச்ச ‘பாகப்பிரிவினை’ படம் வந்தது. அதை மெஜஸ்டிக் ஸ்டுடியோவிலே போட்டு அண்ணாவுக்குக் காட்டினாங்க...”
“எந்த மெஜஸ்டிக் ஸ்டூடியோ, இப்போதுள்ள சாரதா ஸ்டூடியோதானே ?”
“ஆமாம். அந்தப் படத்தைப் பார்த்த அண்ணா, ‘எம்.ஜி.ராமச்சந்திரனோடு நீங்க இப்படிச் சேர்ந்து நடிக்கணுங்கிறது என் ஆசை'ன்னார். அதுக்கென்ன, நடிச்சாப் போச்சு'ன்னு நான் தேவரைப் பார்த்தேன்...”
ஏன், அவரால்தான் உங்கள் இருவரையும் சேர்த்து வைத்துப் படம் எடுக்க முடியும் என்றா ?”
“இல்லே, அண்ணாவின் ஆசையை அவரால்தான் சீக்கிரமா நிறைவேற்றி வைக்க முடியுங்கிறது என் எண்ணம்.”
“தேவர் என்ன சொன்னார் ?”
“அவர் கொஞ்சம் தயக்கத்தோடு ‘எம்.ஜி.ஆர். தகராறு செய்வாருன்னு சொல்றாங்களே ?'ன்னார். அப்போ எனக்கு அது சரியாப் படல்லே. ஏன்னா, எம்.ஜி.ராமச்சந்திரன் இப்போ கட்சி, கிட்சின்னு சொல்லிக்கிட்டிருந்தாலும் ஒரு காலத்திலே கட்சின்னாலே வெறுத்துக்கிட்டிருந்தவர். ஒரு சமயம் ஒரு மாநாட்டு நாடகத்திலே சிவாஜி வேஷம் போடப் பெரியார் அவரைக் கூப்பிட்டப்போ, ‘கலைஞனுக்குக் கட்சி வேணாங்கிறது என் கருத்து. அதாலே கட்சி நாடகத்திலே நான் நடிக்க மாட்டேன்’னு சொல்லிவிட்டவர். அதுக்கு மேலேதான் சம்பத் அந்த வேஷத்தைப் போட்டார். அவருக்குப் பிறகு நம்ம கணேசன் அந்த வேஷத்தைப் போட்டு, ‘சிவாஜி கணேசன்'னே பெரியார்கிட்டே பேர் வாங்கிவிட்டார். ராமச்சந்திரனுக்கு அப்போ இருந்த லட்சியமெல்லாம் உடம்பைக் கட்டுக் குலையாம வைச்சிக்கனுங்கிறதுதான். அதுக்காகச் சில விஷயங்களிலே அவர் கொஞ்சம் ரிசர்வ்டாயிருப்பார். யார் குடிச்சாலும் அவர் குடிக்கமாட்டார். இப்போ அவரும் குடிக்கிறார்னு சில பேர் என்கிட்டே வந்து சொல்றாங்க, அதை நான் நம்பல்லே. அப்படிப்பட்டவன் தேவர் சொன்னதை நம்புவேனா? என்னைப் போட்டுக் ‘கொங்கு நாட்டுத் தங்கம்’ எடுக்கிறதுக்கு முந்திகூட நீங்க அப்படித்தான் நினைச்சீங்க'ன்னேன்.”
“என்ன நினைத்தார், உங்களையும் தொல்லை கொடுப்பவர் என்றா ?”
“ஆமாம்; இத்தனைக்கும் கோயம்புத்தூர் சென்ட்ரல் ஸ்டூடியோவிலே தேவர் பால் வித்துக்கிட்டிருந்த காலத்திலிருந்து அவரை எனக்குத் தெரியும். நல்ல மனுஷர்; தெய்வ பக்தி உள்ளவர். அறிவு சம்பந்தமாப் பேசறதை விட ஆத்திகம் சம்பந்தமா பேசறதுதான் அவருக்குப் பிடிக்கும். நான் பெரியார் பக்கம் இருக்கிறவன் இல்லையா ? அதாலே ஆரம்பத்தில் என்னைக் கண்டு கொஞ்சம் மிரண்டார். என்னைப் போட்டுக் ‘கொங்கு நாட்டுத் தங்கம்’ எடுத்தப்புறம் நான் வம்புக்காரன் இல்லேங்கிறது அவருக்குப் புரிஞ்சிப் போச்சு. அதுக்கப்புறம் அவர் என்னை வைச்சிப் பல படங்கள் எடுத்தார். எடுக்கிற படத்துக்குப் பேசிய தொகையை முதலிலேயே கொடுத்துடற புரொட்யூலர் அவர் ஒருத்தர்தான். ஆனா, ‘முப்பது நாளிலே ஒரு படத்தை எடுத்து முடிக்கிறதுக்கு அவர்தான் வழிகாட்டி'ன்னு சொல்றதை மட்டும் என்னாலே ஒப்புக்க முடியறதில்லே.”
“ஏன் ?”
“அவருக்கு முந்தியே சிலர் அப்படி எடுத்து முடித்தது எனக்குத் தெரியும். அவர்களிலே ஒருத்தர் சி.வி.ராமன்..." “சர்.சி.வி.ராமனா ?”
“இல்லே. அந்த ராமன் வேறே, இந்த ராமன் வேறே. இவர். இங்கே ‘நாராயணன் கம்பெனி'ன்னு ஒரு சினிமாக் கம்பெனி இருந்ததே, அந்தக் கம்பெனி முதலாளியின் அண்ணன். இவர் முதல்லே படம் எடுக்க மாட்டார். நாலு போட்டோதான் எடுப்பார். ஒரு ஹீரோ போட்டோ, ஒரு ஹீரோயின் போட்டோ, ஹீரோவும் ஹீரோயினும் கட்டிப் பிடிச்சிக்கிட்டு நிற்கிறாப் போல ஒரு போட்டோ; ஹீரோவை வில்லன் கத்தியாலே குத்தப் போறாப்போல ஒரு போட்டோ; இப்படி நாலு போட்டோக்களை எடுத்துக்கிட்டுச் செட்டிநாட்டுப் பக்கம் போவார். அங்கே யாராவது ஒரு செட்டியாரைப் பிடிச்சி, அவர்கிட்டே அந்தப் போட்டோக்களைக் காட்டியே இருபதாயிரம், முப்பதாயிரம் வட்டிக்குக் கடன் வாங்கிக்கிட்டு வந்துடுவார். அந்தப் பணத்தை வைச்சி முப்பது நாள் என்ன, இருபது நாளிலேயே படத்தை எடுத்து முடிச்சிடுவார். இவர் ‘சோகா மேளர்'ன்னு ஒரு படம் எடுத்துக்கிட்டிருந்தப்போ, நான் வேறே வேலையா சென்ட்ரல் ஸ்டுடியோவுக்குப் போயிருந்தேன். ‘என் படத்திலே நீயும் ஒரு வேஷம் போடேண்டா'ன்னார்: ‘என்ன வேஷம் ?’னு கேட்டேன். ‘பறையன் வேஷம்'னார். ‘சரி, போட்றேன்'னு போட்டேன். அந்தப் படத்திலே கொத்தமங்கலம் சுப்பு தம்பி கொளத்து மணி வேதியரா நடிச்சதா ஞாபகம். அவர் ஒரு காட்சியிலே, போடா, பறப்பயலே!'ன்னு என் கன்னத்திலே அறைஞ்சார். எனக்குக் கோபம் வந்துடிச்சி; ‘போடா, பாப்பாரப் பயலே!'ன்னு பதிலுக்குத் திருப்பி அறைஞ்சுட்டேன். அறைஞ்சப்புறம்தான் ஆத்திரத்திலே அவசரப்பட்டு இப்படிச் செஞ்சுட்டோமேன்னு காமிரா பக்கம் திரும்பி, ‘கட்’,கட்'ன்னு நானே டைரக்டருக்குப் பதிலா கட்’ சொன்னேன். ‘கட்டும் வேணாம், வெட்டும் வேணாம்; அப்படியே இருக்கட்டும். அதுதான் நேச்சுரலாயிருக்கும்’னு சொல்லிவிட்டார் ராமன். படம் முடிஞ்சி, நடிச்சதுக்காக ஏதாவது பணம் கொடுப்பார்னு போனப்போ, அவர் சாப்பிட்டியா?'ன்னார். ‘சாப்பிட்டேன்'னேன். ‘நல்லா சாப்பிடு; வேளா வேளைக்குக் காலந்தவறாம ஒழுங்கா சாப்பிடு. அதுதான் உடம்புக்கு நல்லது'ன்னு சாப்பாட்டைப் பற்றியே பேசிக்கிட்டிருந்தார். ‘பணம்?'னேன். ‘நீ கூடவா என்னைப் பணம் கேட்கிறது ? நான் பி.ஏ.வரையிலே படிச்சிட்டு வேறே வழியில்லாம இந்தத் தொழிலுக்கு வந்து, மாசத்துக்கு ஆயிரம் ரெண்டாயிரம் கிடைச்சாக்கூடப் போதும்னு இருபது நாளைக்கு ஒரு படத்தை எடுத்துச் சுருட்டிக்கிட்டிருக்கேன். உனக்கென்னடா, நீதான் டிராமாவிலேயே போடு, போடுன்னு போட்டுக்கிட்டிருக்கியே? போடா, போய் நல்லா சாப்பிடு; அதுதான் உடம்புக்கு நல்லது'ன்னார். அதுக்கு மேலே என்னத்தைச் சொல்றது? சிரிச்சிக்கிட்டே வந்துட்டேன். அது ஒரு காலம்.”
“தேவருக்கும் அந்த ராமனைத் தெரியுமா?”
“தெரியும்னுதான் நினைக்கிறேன்.”
“சரி. அப்புறம்?”
“எம்.ஜி.ஆரைப் பற்றி நான் சொன்னதோடு என் மேக்கப் மேன் கஜபதியை வேறே அனுப்பி அப்பப்போ தேவர்கிட்டே சொல்லச் சொன்னேன். அதுக்கு மேலே ‘தகராறு பண்ணா கான்சல் பண்ணிடுவேன்'கிற நிபந்தனையோடு அவர் ராமச்சந்திரனையும் என்னையும் சேர்த்துப் போட்டுப் படம் எடுக்க ஆரம்பிச்சார்.”
“அவர் எதிர்ப்பார்த்தபடி தகராறு ஏதாவது.”
“ஒண்ணும் இல்லே, தகராறு வந்ததெல்லாம் தாயைக் காத்த தனயன்கிற படத்தாலேதான்.”
“அதாலே என்ன தகராறு ?”
“அந்தப் படத்திலே எம்.ஜி.ஆரோடு நானும் என் மகன் வாகவும் சேர்ந்து நடிச்சோம். படம் வெளியே வந்தது. அதிலே எம்.ஜி.ஆர். சரோஜா தேவி, அசோகன் எல்லாரும் இருந்தும், விமர்சனம் எழுதறப்போ சில பேப்பர்காருங்க, ‘இந்தப் படத்திலே தகப்பனும் மகனும்தான் நிற்கிறாங்க, மற்றவங்க நிற்கலே'ன்னு எழுதினாங்க. இதைப் பார்த்தப்போ, வட நாட்டிலே ஒரு நடிகர் பரம்பரையை உருவாக்கிய பெருமை பிருதிவிராஜூக்கும் அவர் மகன் ராஜ்கபூருக்கும் இருக்கிறாப்போல, தென்னாட்டிலே அப்படி ஒரு பரம்பரையை உருவாக்கிய பெருமை எனக்கும், என் மகனுக்கும் இருக்குன்னு நினைச்சி நான் சந்தோஷப்பட்டேன். அடுத்த படத்திலேயே அந்த சந்தோஷத்துக்கு ஆபத்து வந்துடிச்சி.”
“அது என்ன ஆபத்து ?”
“அடுத்த படத்திலே ராமச்சந்திரனோடு நடிக்க எனக்கு சான்ஸ் கொடுத்தவங்க, என் மகனுக்குக் கொடுக்கல்லே. அப்பத்தான் இதுக்கு யாரோ காரணமாயிருக்கணும்கிற ஒரு எண்ணம் என் மனசிலே எழுந்தது. அந்த எண்ணம் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் நான் மட்டும் எம்.ஜி.ஆரோடு தொடர்ந்து நடிச்சிக்கிட்டு வந்தேன். அந்தச் சமயத்திலே ராமச்சந்திரனாலே பாதிக்கப்பட்ட சில நடிகர்களும் நடிகைகளும் என்கிட்டே வந்து, ‘அவர் எங்க பொழைப்பை அப்படிக் கெடுத்துட்டார். அவர் செய்யற’ ‘தான தரும சாகசத்தாலே இதெல்லாம் வெளியே தெரியமாட் டேங்குதுன்னு புகார் சொல்ல ஆர்ம்பிச்சாங்க.”
“அவரால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களிடம் வந்து புகார் சொல்வானேன் ?”
“யாரையும் எதுக்கும் தட்டிக் கேட்கிற தைரியம் எனக்குத்தான் இருக்குன்னு அவங்க நம்பியதுதான் அதுக்குக் காரணம்.”
“பிற்கு ?”
“இதையெல்லாம் கேட்கக் கேட்க, ‘அப்படியும் இருக்குமா ?ங்கிற ஒரு கேள்விக் குறி வேறே என் மனசிலே எழுந்து, நாளுக்கு நாள் அது பெரிசா வளர்ந்துக்கிட்டே வந்தது. அதுக்குமேலேதான் எதையும் பொருட்படுத்தாம, ‘தானுண்டு, தனக்குக் கிடைக்கிற எச்சிலை உண்டுன்னு நாய் வாழலாம், மனுஷன் வாழலாமா ? தானும் வாழ்ந்து, மற்றவங்களையும் வாழ வைக்கிறவன் இல்லே மனுஷன்னு நான் யோசிக்க ஆரம்பிச்சேன்.” தன்