உள்ளடக்கத்துக்குச் செல்

நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/7. நாடக மேடையில் ஜேம்ஸ்பாண்ட்

விக்கிமூலம் இலிருந்து


7. நாடக மேடையில் ஜேம்ஸ்பாண்ட்

ப்போ யாரோ ஜேம்ஸ்பாண்டுன்னு சொல்லிக்கிறாங்க, நான் அந்த நாள் நாடக மேடையிலேயே ஜேம்ஸ்பாண்டா நடிச்சிருக்கேன்...”

“அப்போதே அமெரிக்க நடிகன் சீன்கானரி நடித்த ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வருமா ? அவனை உங்களுக்குத் தெரியுமா ?”

“தெரியாது; அவன் நடிச்ச படங்களையும் நான் பார்த்தது கிடையாது. ஒரு நடிகனைப் பார்த்து இன்னொரு நடிகன் அப்படியே நடிச்சிட்டா அவனுக்கு நடிகன்னா பேரு ? ‘பிளாட்டிங் பேப்பர்’னு பேரு!”

“கலையை வளர்க்க அதுவும் ஒரு வழி என்றல்லவா சொல்கிறார்கள் ?”

“அது வழியில்லே, தற்கொலை ...எனக்குத் தெரிஞ்ச வரையிலே அந்த நாளிலே டக்ளஸ் பேர் பாங்ஸ்னு ஒரு நடிகன் இருந்தான். அவன் நடிச்ச ஊமைப் படம் இங்கே அப்பப்போ வந்துகிட்டிருக்கும்; அதை விட்டா எங்க நாடகம். இந்த ரெண்டைத் தவிர அந்தக் காலத்து ஜனங்களுக்கு வேறே பொழுது போக்கு கிடையாது.”

“பரதம், சங்கீதம்...”

“பரதம் பரதம்னு சொல்லிக் கிட்டு அப்போ ‘தா, தை'ன்னு குதிச்சிக்கிட்டிருந்தவங்களே வேறே. அவங்களும் அவங்க - கலையும் அப்போ கடவுளுக்கு அர்ப்பணமாயிக்கிட்டிருக்கிறதா சொல்லுவாங்க. உண்மையிலே யாருக்கு அர்ப்பணமாயிக் கிட்டிருந்ததோ, அது எனக்குத் தெரியாது. இப்பத்தானே அதுக்கு ஒரு மரியாதையும், அதை ஆடறவங்களுக்கு ஒரு கவுரவமும் ஏற்பட்டிருக்கு ?”

“சங்கீதம் ?”

“அதுக்கு ஏது அப்போ தனி மவுசு ? நாடகத்தோடு சேர்ந்தாத்தான் மவுசு. ஒருவேளை பொம்மனாட்டி தனியா பாடியிருந்தா அந்த மவுசு அதுக்கு அப்பவே ஏற்பட்டிருக்குமோ, என்னவோ ? அதுக்கு அந்த நாளிலே யாரும் துணியலே. ஆம்பளை தனியாப் பாடினா யார் கேட்கிறது? அவன் பாட்டை அவனேதான் கேட்டுக்கணும். இந்தக் கஷ்டத்துக்காகத்தான் அந்தக் காலத்துப் பெரிய மனுஷர்களான எப்.ஜி.நடேசய்யர், டாக்டர் ரங்காச்சாரி யெல்லாம்கூட எங்க நாடகத்தைப் பார்க்க அடிக்கடி வருவாங்க..”

“டாக்டர் ரங்காச்சாரியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ?”

“நல்லாப் பார்த்திருக்கேன். இப்போ இருக்காப்போல கண்ணுக்கு ஒரு டாக்டர், காதுக்கு ஒரு டாக்டர், பல்லுக்கு ஒரு டாக்டர்னு அப்போ ஏது? எல்லாத்துக்கும் ஒரே டாக்டர்தான். அவர்தான் ரங்காச்சாரி. அவர்கிட்டே எப்பவும் ரெண்டு கார் இருக்கும். ஒண்ணு ரோல்ஸ்ராய்ஸ், இன்னொண்ணு போர்டு. பணக்காரங்க வீட்டுக்கு ரோல்ஸ்ராய்ஸிலே போவார்; ஏழையின் வீட்டுக்கு போர்டிலே போவார். எங்கே போனாலும் பெட்ரோல் செலவுக்காவது அவருக்கு ஒரு ரூபா விஸிடிங் பீஸா கொடுத்துடனும். கொடுக்கலேன்னா இன்னொரு தடவை கூப்பிட்டா வரமாட்டார்...”

‘எப்படி வரமுடியும்? பெட்ரோலை யாரும் தருமத்துக்குப் போடமாட்டாங்களே!" "நாடகம் பார்க்க வரப்போல்லாம் அவர் எங்களைப் பார்க்கத் தவற மாட்டார். மேடைக்கு வந்து, ‘கண்ணைக் காட்டும்பார். ‘நாக்கை நீட்டு'ம்பார்; வெளிக்குப் போறியா ?ம்பார், ‘இல்லே'ன்னா ‘கீரை சாப்பிடும்பார்.”

“எல்லாம் சரி, அவர் மட்டும் காப்பி சாப்பிட்டுக் கொண்டு நோயாளிகளைக் காப்பி சாப்பிட வேண்டாமென்று சொல்லும் வழக்கம் அவரிடமும் உண்டா ?”

“அதுதான் கிடையாது; சாதாரண ஜனங்களைப் போல அவரும் ‘பழையது’ சாப்பிடுவார்.”

“அது என்ன பழையது ?”

“பொழுது விடிஞ்சதும் டிப்ன், காப்பியெல்லாம் அப்போ ஏது ? அநேகமா எல்லாருடைய வீட்டிலும் ராத்திரி மிச்சமான சோத்திலே தண்ணியைக் கொட்டி வைச்சிருப்பாங்க. காலையிலே அந்தச் சோத்திலே உப்பைப் போட்டு ஊறுகாயைத் தொட்டுக்கிட்டுச் சாப்பிடுவாங்க. அதுதான் பழையது. ஆனா இந்தப் பழையதுக்கும் டாக்டர் ரங்காச்சாரி சாப்பிட்ட பழையதுக்கும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு.”

“அது என்ன வித்தியாசம்?”

“ராத்திரி வடிச்ச சோத்திலே தண்ணியைக் கொட்றதுக்குப் பதிலா அவர் பாலைக் காய்ச்சிக் கொட்டி, அந்தப் பால்லே ஒரு துளி தயிரைப் புரை குத்தி வைச்சிடுவாார். பொழுது விடிஞ்சதும் பார்த்தா அந்தச் சோத்தோடு தயிரும் தோய்ஞ்சிருக்கும். அதுதான் டாக்டர் ரங்காச்சாரி சாப்பிட்டுக்கிட்டிருந்த பழையது. அந்தப் பழையதைத்தான் நானும் அன்னியிலேருந்து இன்னியவரையிலே சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். அது மட்டுமில்லே, முதல் நாள் ராத்திரியே தண்ணியைக் காய்ச்சி ஆற வைச்சி, மறு நாள் பொழுது விடிஞ்சதும் அவர் குளிப்பார். அதே மாதிரி நானும் குளிச்சிக்கிட்டிருக்கேன்..." "பலன் ஏதாவது... ?”

“என்னாலே டாக்டர்களுக்கு ஒரு பைசாக்கூட வருமானம் கிடையாது; அது போதாதா ?”

“அப்படியானால் டாக்டர்களிடையேயும் இப்போது ‘வேலையில்லாத் திண்டாட்டம் பரவியிருப்பதற்கு நீங்களும் ஒரு காரணம் என்று சொல்லுங்கள்’

“திண்டாட்டம் வேலை தெரிஞ்சவனுக்கு எப்பவும் எதிலும் இருக்காது; தெரியாதவனுக்குத்தான் இருக்கும்’

“அதுவும் ஒரு விதத்தில் சரிதான்; அப்புறம்?”

“தமிழ் நாடக மேடையிலே ஸ்டண்டுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கும் சமூக நாடகம் அப்பத்தான் தலைகாட்ட ஆரம்பிச்சிருந்தது. அதுக்குக் காரணமாயிருந்து, முதல்லே கதை எழுதிக் கொடுத்தவர் டி.கே.பாவலர்...”

“எந்த டி.கே.பாவலர்?”

“மதுரை யுனிவர்ஸிடி வைஸ்சான்ஸ்லராயிருந்தாரே டி.பி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அவர் தம்பி. அவர் எழுதிய ‘பதி பக்தி’ நாடகத்திலே எனக்கு சி.ஐ.டி. வேஷம். அந்த வேஷத்துக்காக டக்ளஸ் பேர்பேங்ஸ் டிரஸ் மாதிரி டிரஸ் தைச்சி எனக்கு மாட்டிவிடுவாங்க. அதுவே எனக்கு என்னவோ போல இருக்கும். நம்ம ஊர் சி.ஐ.டி. மாதிரி டிரஸ் தைச்சிப்போட்டுக்கிட்டா என்ன ?ன்னு நினைப்பேன். இருந்தாலும், சமயத்துக்குத் தகுந்தாப் போல வேஷம் போடறவன்தானே சி.ஐ.டி.. ?ன்னு என்னை நானே சமாதானம் சேஞ்சிக்கிட்டு மோட்டார் சைக்கிள்லே ஏறி உட்கார்ந்து, ‘டபடபா'ன்னு ‘ஆடியன்ஸ்’ மேலே, பாயறாப்போல மேடைக்கு வந்து, ‘டக்'குன்னு திரும்பி நிற்பேன். அவ்வளவுதான்; ‘ஆடிட்டோரியம் பூராவும் ஒரே ‘கிளாப்'ஸாயிருக்கும்...”

“அப்போதும் உங்களுக்குச் சம்பளம் சாப்பாடு போட்டு மாதம் ஐந்து ரூபாய்தானா?" "இல்லே, இருப்பத்தைஞ்சி’

“ஒரு நாளைக்கு என்ன வசூலாகும் ?”

“ஆயிரம் ரூபாய்க்குக் குறையாது.”

“கிடைக்கிற காசையெல்லாம் சுருட்டி நல்ல வாடகை வரக் கூடிய வீடுகளாக் கட்டிப் போட்டுவிட்டு, கம்பெனி நஷ்டத்தில் நடக்கிறது, நான் போய்விட்டால் நாடக உலகமே அஸ்தமித்துவிடுமே என்று என் கையிலே இல்லாத காசைப் போட்டுக் கம்பெனியை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று உங்கள் அய்யர் சக நடிகர்களை ஏய்ப்பதற்காக முதலைக் கண்ணீர் விடுவதில்லையா ?”

“அவர் அந்த நாள் மனுஷர் நடிப்பை நாடக மேடையோடு வைச்சிக்கிறது. அவர் வழக்கம்.”

“பிழைக்கத் தெரியாதவராயிருந்திருப்பார் போலிருக்கிறது.”

“பிழைக்கத் தெரியாதவர் மட்டுமில்லே, வாழத் தெரியாதவரும் கூட.”

“அந்த விஷயத்தில் அவர் எப்படியோ, இங்குள்ள நடிகர்களின் சிலர் என்.எஸ். கிருஷ்ணன், எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோரின் அவல மரணத்துக்குப் பிறகு தங்கள் ஏழேழு தலைமுறைகளுக்கும் சேர்த்து வாழக் கற்றுக் கொண்டு விட்டார்கள்!”

“அத்த விஷயத்திலே பாகவதரையும் என்.எஸ்.கே. யையும் கொடுத்த சீதக்காதிங்க’ ன்னு சொல்லனும் அதுக்காகவே இப்போ இருக்கிறவங்க அவங்களுக்கு நன்றி செலுத்தனும் எங்கே செலுத்தநாங்க?”

“வாழுங் கலைஞர்களைக் கவனிப்பதுபோல் வாழ்ந்து மறைந்த கலைஞர்களையும் முதல்வர் கருணாநிதியே கவனிப்பார். அதை விடுங்கள்!...'பதி பக்தி’ நாடகத்தில் உங்களுடைய ஸ்டண்ட் வேலைகளுக்கு ஈடு கொடுத்து நடித்த வில்லன் நடிகர் யார் ?”

“அவர்தான் நடிப்புக்கே முதலில் இலக்கணம் வகுத்துக் கொடுத்த நடிப்புலக மேதை எம்.எஸ்.முத்துகிருஷ்ணன் அவர்கள். ‘பராசக்தி'யில் நடிக்கும் போது சிவாஜி கணேசனுக்குக் கூட நடிக்கச் சொல்லிக் கொடுத்தவர் அவர்தான்.”

“அவருடைய பெயர் வெளியே தெரியவே யில்லையே!”

“எங்கே தெரிய விடறாங்க ? தெரியவிட்டா நம்ம பேரு மறைஞ்சிடுமோன்னு பயப்படறாங்க. உண்மையான கலைஞர்களுக்குத் தேவையில்லாத பயம் இது!”

“அவர்கள் தெரிய விடாவிட்டால் அவரே தெரிய வைத்துக் கொண்டு விடவேண்டியதுதானே ?

“அது நிறை குடம், தளும்பாது...

“அப்படியானால் இதுவும் ‘பிழைக்கத் தெரியாத கேஸ்’ தான் என்று சொல்லுங்கள்!”

“அப்படியும் வைச்சிக்கலாம்.”

“சரி அப்புறம் ?”

“தமாஷா வரி வந்தது...’

“அதுக்கு முன்னே தமாஷா வரி இல்லையா ?”

“இல்லே, நாங்க மதுரையிலே ‘பதி பக்தி’ நாடகம் நடத்திக்கிட்ருந்தப்போதான் தமாஷா வரி வந்தது. அப்போதெல்லாம் டாக்ஸ் கலெக்ட் பண்றவங்களுக்கு நாற்பது ரூபாதான் சம்பளம். அந்த நாற்பது ரூபா சம்பளக்காரன் வந்து நம்மைக் கணக்கு கேட்கிறதாவது, நாம் அவனுக்குப் பதில் சொல்றதாவதுன்னு அய்யர் கம்பெனியையே கலைச்சிட்டார்!”

“சரியான சுயமரியாதைக்காரராயிருந்திருப்பார் போலிருக்கிறது!" 'நான் சந்தித்த முதல் சுய மரியாதைக்காரரே அவர்தான்’

‘அப்புறம் ?’

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சவுக்கடி சாத்தப்பிள்ளை கிட்டே சொல்லி உனக்கு நான் லைலென்ஸ் வாங்கித் தரேன், நீ என்கிட்டே டிரைவராயிருன்னார் அய்யர்...”

“அதுவரையிலே நீங்கள் லைலென்ஸ் வாங்கவே யில்லையா ?”

“ஊஹாம்.’

“ஓசிப்பாஸ் தயவிலே லைலென்ஸ் இல்லாமலே காரை ஓட்டிக் கொண்டிருந்தீர்களாக்கும்...சரி, பிறகு ?”

“என் நோக்கம் அய்யருக்கு டிரைவராயிருக்கிறது மட்டும் இல்லையே, நடிகனாகவும் இருக்க வேண்டுமே! அதாலே ‘நான் ஊருக்குப் போயிட்டு வந்துடறேன்"னு சொல்லிவிட்டு மெட்ராசுக்கு விட்டேன் சவாரி!"