நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்/அருங்குணங்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

9. அருங்குணங்கள்

இனி இவரது அருங்குணங்கள் சிலவற்றை ஆராய்வோம்.

ஏழைகள் மீது கருணை

எம்பெருமானார் அவர்கள் கருணையுள்ளம் படைத்தவர்கள். அதிலும் அவர்கள் ஏழைகளிடத்தில் காட்டும் கருணை அளவு கடந்ததாகும். அதற்கு எடுத்துக்காட்டு ஒன்று கூறுகிறேன்.

நாயகம் அவர்கள் தமக்கென்று இரண்டு ஆடைகளையும், இரண்டு தாழம்பாய்களையும் வைத்துக் கொண்டு மற்றவற்றையெல்லாம் இல்லாத மக்களுக்கு வழங்கினார்கள் என்று தான் நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இத்தாலி தேசத்துப் பேராசிரியர் ஒருவர், அதில் ஒரு நயத்தைப் புகுத்தி எழுதியிருக்கிறார். அது, தமக்கென்று இரண்டு தாழம்பாய், இரண்டு ஆடைகளை வைத்துக் கொண்டு, மற்ற எல்லாவற்றையும் இல்லாத மக்களுக்கு வழங்கிப் பெற்றுக் கொண்ட மக்களின் முகம் மகிழ்ச்சி அடைவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார் என்பதே. இது நம் உள்ளத்தைத் தொடவில்லையா? பெற்றுக் கொண்டவர்களுடைய முகம் மகிழ்ச்சி அடைவதைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதைப் படிக்கும் போதே, நமக்கு வியப்பையையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே அளிக்கிறது. இது எவ்வளவு பெரிய கருணை என எண்ணிப் பார்க்க வேண்டும்.

பெண்ணுக்குப் பெருமை

ஒரு சமயம் நாயகம் அவர்களை அவரது தாயார் பார்க்க வந்தார்கள். அதுவும் பெற்ற தாயல்ல; செவிலித்தாய்; வளர்த்த தாய். உடனே தம் மேலாடையை எடுத்து விரித்து அதில் உட்கார வைத்துப் பேசி அனுப்பி வைத்தார்கள். பெண்ணுக்கு அவர்கள் தந்த பெருமைக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

எளிமை

நாயகம் அவர்களைப் பல அறிஞர்கள் சூழ்ந்து கொண்டு, 'நீங்கள் தேவனா?' எனக் கேட்டார்கள். 'இல்லை’ என்றார்கள். 'தேவகுமாரனா?' எனக் கேட்டார்கள். 'இல்லை நான் உங்களைப் போன்று ஒரு மனிதன்' என்றார்கள். இது அவர்களிடம் காணப்பெற்ற எளிமைக்கு ஒரு சான்று தங்களையே கடவுள் என்று சொல்லிக் கொண்டு வாழ்ந்தவர்களையெல்லாம் நாம் பாத்திருக்கிறோம். தங்களைக் கடவுளுடைய குமாரன் என்று சொல்லிக் கொண்டவர்களுடைய வரலாறு நமக்குத் தெரியும். கடவுளுடைய அவதார புருஷர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் பலர். நாயகம் அவர்களிடத்தில் இந்தச் சொல், அவர்கள் வாயிலிருந்து வந்ததே இல்லை. இத்தகைய பெருந்தன்மையை மற்றவர்களிடத்தில் காண முடியுமா? எண்ணிப் பாருங்கள்.

ஜீவகாருண்யம்

ஜீவகாருண்யத்தில் நாயகம் அவர்களுக்கு அதிகப் பற்றுண்டு. பல பேர் நினைக்கிறார்கள். இஸ்லாமியர் எல்லாம் இரக்கமில்லாது, உயிர்களைக் கொல்லுகின்றவர்கள் என்றும், அவ்வாறு அவர்களுக்கு நாயகம் போதித்திருக்கிறார்கள் என்றும். இது தவறு. அவர்களுடைய சீடர்களிலே ஒருவர் "நேற்றுப் பத்துப் பேருக்கு விருந்து பண்ணினேன்" என்றார். நாயகம் அவர்கள் "என்ன செய்தாய்?" என்றார். "10 குருவிகளைச் சமைத்தேன்" என்றார். "அடப் பாவமே! ஒரு கோழியைச் சமைத்திருக்கலாமே!” என்றார். 10 உயிர்கள் கொல்லப்படுகிறதை விட ஒர் உயிர் கொல்லப்படுவது இரக்கம், அவர்களுடைய கருணை. மற்றொரு நாள், வேறொருவர் வந்து "ஐந்து ஆடுகளை அறுத்து 200 பேருக்கு விருந்தளித்தேன்" என்றார். "அடப் பாவமே! ஒரு மாட்டை அறுத்திருக்கலாமே!" என்றார். எவ்வளவு ஜீவகாருண்யம் பாருங்கள்! உண்ணுவதற்கு வேறெதுவும் விளையாத அப்பாலைவனங்களில் பல உயிர்களைக் கொன்று உண்பதை விட, 'ஓர் உயிரைக் கொன்றிருக்கலாமே' என இரக்கங்காட்டி இருக்கிறார்.

சகிப்புத் தன்மை

அவர்களுடைய சகிப்புத் தன்மைக்கு ஒரே ஒரு சான்று. நாள்தோறும் அவர்கள் பள்ளிவாசலுக்குப் போவார்கள். அவர்கள் மீது வெறுப்புக் கொண்ட ஒருவன், குப்பை கூளங்களை எடுத்து வைத்துக் கொண்டு மாடி மீதிருந்து நாயகம் அவர்கள் தலை மேலே கொட்டுவான். ஒரு நாளாகிலும் நின்று, அது யார் என்று அவர்கள் கேட்டதில்லை. சத்தம் போட்டதில்லை. வெறுத்ததில்லை. பல நாள் அது நடை பெற்று வந்தது. அவர்கள் சகிப்புத் தன்மையோடு அதைத் துடைத்துக் கொண்டு பள்ளிவாசலுக்குப் போய் ஒதுச் செய்து தொழுது வருவார்கள். போகும் போது கொட்டாவிட்டால், வரும் போது கொட்டுவான் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் அதற்கும் தயாராக வருவார்கள். ஒரு நாள் பள்ளிவாசலுக்குப் போகும் போதும் குப்பை விழவில்லை. தொழுது திரும்பி வரும் போதும் விழவில்லை. அவர்கள் கால் எட்டிப் போகவில்லை. நடை வரவில்லை. நின்று விட்டார்கள். அந்த வீட்டைத் திரும்பிப் பார்த்தார்கள். ஆனால் ஒருவன் எதிர்த்த வீட்டிலிருந்து சொன்னான். "நீங்கள் செல்லுங்கள், ஹஜ்ரத். அவன் விளையாட்டுக்காரப் பையன். அவன் ஏதோ தெரியாமல் செய்து விட்டான்" என்று. அதற்கு நாயகம் அவர்கள், "நாள்தோறும் நான் வரும் போதெல்லாம் இது நடக்குமே? இன்றைக்கு ஏன் நடக்கவில்லை? என்று தெரிந்து கொண்டு போகலாமென்றுதான் கேட்டேன்" என்றார்கள். "இல்லை ஹஜ்ரத்! அவன் பெரிய சுரத்தினாலே அவதிப்படுகிறான். எழுந்திருக்க முடியாது" என்றான். இதைக் கேட்ட நாயகம் அவர்கள் மனங்கலங்கி அவ்வீட்டின் கதவைத் தட்டி, கோஷா எச்சரிக்கை செய்து, உள்ளே நுழைந்தார்கள். அவன் படுக்கையிற் படுத்துக் கொண்டு அலறிக் கொண்டிருந்தான். என்ன நடந்தது? என்ன நடக்கும்? நம் அறிவுக்கு எட்டாதது அங்கு நடந்தது. உடனே சென்று அவனைத் தூக்கி மடிமேல் வைத்துக் கொண்டு, ஆண்டவனிடத்தில் துவா கேட்க ஆரம்பித்தார்கள். "ஓ ஆண்டவனே! நாள் தோறும் நான் வருகின்ற வழி மேல் விழி வைத்துக் காத்திருந்த என்னுடைய அரிய நண்பனுக்கா இந்த நோய்?" என்று துவாக் கேட்க ஆரம்பித்தார்கள். துவாக் கேட்கப் பட்டது. நோய் நீங்கியது அவன் ஒரு நல்ல சீடனானான்.

கிறித்தவர்களுக்குத் தொழ இடம்

ஒரு சமயம் கிறித்துவப் பாதிரியார் நாயகம் அவர்களைப் பார்க்க வந்தார். நாயகம் அவர்கள் அப்போது ஒரு பள்ளிவாசலில் இருந்தார்கள். பேச்சு வெகு நேரம் நடந்தது. பாதிரியாருக்கு ஜபம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதால், தாம் வேறிடத்திற்குச் சென்று ஜபம் செய்து விட்டு, மீண்டும் வருவதாக நாயகம் அவர்களிடம் கூறினார்கள். நாயகம் அவர்கள் மிக அமைதியாக "இந்த வெய்யிலில் வெளியிற் போய் வர வேண்டாமே! உங்கள் ஜபத்தை இங்கேயே செய்யலாமே" என்று, பள்ளிவாசலின் ஒரு மூலையைக் காட்டினார்கள். பாதிரியார் அங்கு ஜபம் செய்துகொண்டிருந்தார். இந்நிகழ்ச்சி நாயகம் அவர்களோடு இருந்த சிலருக்கு மனப் புழுக்கத்தையும் வெறுப்பையும் உண்டாக்கியது. அவர்கள் நாயகம் அவர்களிடம் வந்து, "பள்ளிவாசலின் தூய்மை கெட்டு விட்டதே" என வருந்திக் கூறினார்கள். நாயகம் அவர்கள், "இரண்டு ஆண்டவன் இல்லை. பாதிரியார் வணங்கும் ஆண்டவனும், நாம் வணங்கும் ஆண்டவனும் ஒருவனே" எனக் கூறி அவர்களை அமைதிப்படுத்தினார்கள். இது, 'எல்லாச் சமயத்தினரும் வணங்குகின்ற கடவுள் ஒருவனே' என எண்ணும் நாயகம் அவர்களின் பரந்து விரிந்த உள்ளத்தை நமக்குப் படம் பிடித்துக் காட்டுவதாகும்.

வணிகம்

நாயகம் அவர்கள் முதல் நாற்பதாண்டுக் காலத்தில், ஒட்டக வணிகம் செய்தார்கள். அப்போது அவர்களிடம் 40 ஒட்டகங்கள் இருந்தன. வெளியூரிலிருந்து ஒட்டகம் வாங்க வந்த ஒருவர், நாயகம் அவர்களிடம் 40 ஒட்டகங்களுக்கும் சேர்த்து விலை கூறும்படி கேட்டார். முதலில் ஒட்டகங்களனைத்தையும் போய்ப் பார்த்து வரும்படி நாயகம் அவர்கள் கூறினார்கள். வியாபாரி போய்ப் பார்த்து வந்து, மறுபடியும் 'எல்லா ஒட்டகங்களுக்கும் சேர்த்து விலை என்ன?' என்று கேட்டார். அதற்கு நாயகம் அவர்கள் சிரித்துக் கொண்டே. "அதில் ஒரு ஒட்டகம் நொண்டி, ஒரு கால் தரையில் ஊன்றாது. மூன்று கால்களாலே தத்தி தத்தி நடக்கும். அதைப் பார்த்திரா?" என்று கேட்டார்கள். இந்தக் காலத்து வியாபாரிகளிடம் நாம் இந்த நேர்மையையும், நாணயத்தையும் காண முடியுமா? இதைக் கேட்ட வியாபாரி அஞ்சி நடுநடுங்கிப் போனார். அவரது நேர்மைக்கு வணக்கம் செலுத்தி, "அந்த நொண்டி ஒட்டகமும் மற்ற 39 ஒட்டகங்களுடன் சேர்ந்து இருக்கட்டுமே” என்று கேட்டு, வாங்கிப் போனார். எப்படி, நாயகம் அவர்களின் வணிகம்!

பெருங்தன்மை

நாட்டையும், மக்களையும், புனித இடங்களையும் காப்பாற்ற நாயகம் அவர்கள் தம்மைச் சார்ந்தவர்களோடு சேர்ந்து கொண்டு, வாளேந்திப் பகைவர்களோடு போர் புரியும் நிலைமை பல தடவை நேர்ந்தது. ஒரு சமயம், போர்க் களத்தில் நாயகம் அவர்களின் சிறிய தந்தையார் வாளேந்திய கையுடன் மடிந்து கிடந்தார். அதைக் கண்ட ஹிந்தா என்று பெயர் கொண்ட பகைவர் கூட்டத்தில் உள்ள பெண்ணொருத்தி, அவரது குடலை அறுத்தெடுத்து வாயில் வைத்துக் கடித்து 'ராட்சசி' போன்று வெறியாட்டம் ஆடினாள். நாயகம் அவர்களைச் சேர்ந்தோர் அவளைச் சிறைப்படுத்தி வைத்திருந்தனர். இறுதியில் போர் முடிந்து, நாயகம் அவர்கள் வெற்றி விழாக் கொண்டாடிய பொழுது சிறைக் கைதிகளை விடுதலை செய்தனர். இச் செய்தியைச் சிறைக் கைதிகள் அனைவரும் கேட்டு, மகிழ்ந்து வெளியில் ஓடினர். 'ஹிந்தா' என்ற அந்தப் பெண் மட்டும் தனக்கு விடுதலை கிடைக்காது என்று நம்பி. அங்கேயே இருந்தாள். சிறைக் காவலாளிகள் அவளுக்கும் விடுதலை கிடைத்திருப்பதாகச் சொல்லி வெளியே போக வற்புறுத்திய பொழுது, 'எனக்கும் விடுதலையா! எனக்கும் விடுதலையா!' என அவள் மனம் உருகி, உருகி அழுது, அழுது அரற்றிய சொற்கள் நம் உள்ளத்தை எல்லாம் உருக்குகின்றன. என்னே நாயகம் அவர்களின் பெருந்தன்மை!