உள்ளடக்கத்துக்குச் செல்

நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்/சிக்கனம்

விக்கிமூலம் இலிருந்து

11. சிக்கனம்

கருமித்தனம் அல்ல

ஒரு சமயம் நாயகம் அவர்களிடம் ஒரு பெரியவர் வந்து, 'தங்கள் ஊரில் பள்ளிவாசல் இல்லை. அதைக் கட்டியாக வேண்டும். அதற்குப் பணம் தேவை, என்ன செய்யலாம்?' என்றார்கள். அதற்கு நாயகம் அவர்கள், பக்கத்து ஊரிலுள்ள ஒரு செல்வனின் பெயரைச் சொல்லி, "அவரிடம் சென்று கேளுங்கள். கொடுப்பார்" என்றார்கள். பெரியவர் உடனே அவ்வூருக்குச் சென்று அப்பணக்காரரைப் பார்க்கப் போனார். அப்பொழுது பணக்காரர் தம் வேலையாளைத் தூணிற் கட்டி வைத்துத் தம் கையை மடக்கி, அவன் முகத்தில் குத்திக் கொண்டிருந்தார். பெரியவர் பக்கத்திலுள்ளவர்களிடம் 'ஏன் இப்படி, அவனைக் குத்துகிறார்' என்று கேட்டார். 'செல்வர் வேலையாளைப் பருப்பு வாங்கி வரச் சொன்னார். பத்துப் பருப்புச் சிந்திப் போயிற்று, அதற்காக அவனைப் பத்துக் குத்துக் குத்திக் கொண்டிருக்கிறார்' என்றார்கள். அதைக் கேட்டதும், பெரியவர் பயந்து ஓட்டம் பிடித்து நாயகம் அவர்களிடம் திரும்பி வந்து விட்டார். நாயகம் அவர்கள், 'செல்வர் என்ன கொடுத்தார்?' என்றார்கள். அவர் வேலையாளுக்குக் கொடுத்த குத்துகளையே கூறினார். [சிரிப்பு]. நாயகம் அவர்கள் "மறுபடியும் நீர் அவரிடம் சென்று கேளும்" என்று கட்டளை இட்டார். மறுபடியும் பெரியவர் அச்செல்வரிடஞ் சென்றார். அப்பொழுது, அச்செல்வர் தம் மற்றொரு வேலையாளை மரத்தில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்துக் கொண்டிருந்தார். பெரியவர், அங்கிருந்தவர்களிடம் 'ஏன் இப்படி அடிக்கிறார்?' என்று கேட்டார். "இந்த வேலையாள் எண்ணெய் வாங்கி வரும் போது, பத்துச் சொட்டு எண்ணெய் சிந்திப் போயிற்று. அதற்காகச் சவுக்கால் பத்தடிகள் அடிக்கிறார்" என்று சொன்னார்கள். பெரியவர் மிகவும் பயந்து நடுநடுங்கி, இக்கருமியிடம் பணம் கேட்பதை விடப் பள்ளிவாசல் கட்டுவதையே நிறுத்தி விடலாமென்று எண்ணி, நாயகம் அவர்களிடம் ஓடி வந்து விட்டார். [சிரிப்பு]. நாயகம் அவர்கள் 'செல்வர் என்ன கொடுத்தார்?' எனக்கேட்டார்கள், அவர் சவுக்கடி கொடுத்த செய்தியைக் கூறி, 'அவரிடம் பணம் கேட்க என் மனம் துணியவில்லை' என்று கூறினார். 'போய்க் கேளு'மென மறுபடியும் உத்தரவு வந்தது. பெரியவர் மறுபடியும் செல்வரிடம் சென்றார். நல்ல வேளையாக எதுவும் அங்கு அப்பொழுது நடைபெறவில்லை. பெரியவர் துணிந்து செல்வரிடஞ் சென்று தனது நோக்கத்தைத் தெரிவித்தார். செல்வர், "எவ்வளவு ரூபாயில் பள்ளிவாசல் கட்டப் போகிறீர்கள்" என்று கேட்டார். அதற்குப் பெரியவர், "அதைக் கட்டி முடிப்பதற்குப் பத்தாயிரம் ரூபாய் ஆகும். நீங்கள் ஐயாயிரம் கொடுத்தால், வேறு பலரிடம் ஐயாயிரம் வாங்கி, விரைவில் கட்டி முடிக்க உதவியாக இருக்கும்” என்று கேட்டுக் கொண்டார். அதற்குச் செல்வர், "இவ்வளவு காலம் உங்கள் ஊரில், பள்ளிவாசல் இல்லாமல் இருந்ததே தவறு. இன்னும் பலரிடஞ் சென்று காலந் தாழ்ந்த வேண்டாம். நானே பத்தாயிரமும் தருகிறேன். இதற்கு உதவாமல், பணம் என்னிடம் எதற்காக இருக்கிறது?" என்று கூறி, அள்ளிக் கொடுத்தனுப்பினார். பெரியவருக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது. மனக்குழப்பத்தோடு, நாயகம் அவர்களிடம் வந்து, "பத்துப் பருப்புச் சிந்தியதற்காகவும், பத்துச் சொட்டு எண்ணெய் சிதறியதற்காகவும் தன் வேலைக்காரர்களைச் சவுக்கடியால் அடித்துத் துன்புறுத்தும் இவன், பள்ளிவாசல் கட்ட ஐயாயிரங் கேட்ட பொழுது, பத்தாயிரங் கொடுத்தானே இதற்கு என்ன காரணம்?" என வினவினார். அதற்கு நாயகம் அவர்கள், "கருமித் தனம் வேறு; சிக்கனம் வேறு. அவன் கருமியல்ல; சிக்கனத்தைக் கையாள்பவன். அவன் அப்படியெல்லாம் பொருள்களைப் பாழாக்காமல் சேர்த்து வைத்திருந்ததனால்தான், அப்பணம் பள்ளிவாசல் கட்டப் பயன்படுகிறது" எனக் கூறினார். நாயகம் அவர்களுடைய இந்த வாக்கு நமக்குக் கருமித் தனத்திற்கும், சிக்கனத்திற்கும் உள்ள இடைவெளியை நன்கு காட்டுகிறது.

காய்கறியிலும்

நாயகம் அவர்களுடைய சிக்கனக் கொள்கை ஏழைக் குடிசைகளில் மட்டும் அல்லாமல், ஆட்சித் தலைவர்களின் அரண்மனைகளிலும் கையாளப்பட்டு வந்தது. ஒரு கலிபா, தம் உணவிற்காகக் காய்கறிக்கு மட்டும் நாள் தோறும் நான்கணா மதிப்புள்ள நாணயத்தைத் தம் மனைவியிடம் கொடுத்து விடும்படி கட்டளையிட்டிருந்தார். நெடுநாள் இம்முறை கையாளப்பட்டு வந்தது. ஒரு நாள் உணவருந்தும் பொழுது, அதிகமான காய்கறிகள் பரிமாறப்பட்டிருந்தன. கலிபா ஆச்சரியப்பட்டு, "இவையனைத்தையும் நான்கணாலில் வாங்கியிருக்க முடியாதே! இது எப்படிக் கிடைத்தது?" என மனைவியிடம் கேட்டார். அதற்கு அவள், "நாள் தோறும் கொடுக்கப்படும் நான்கணாவில், காலணா வீதம் எடுத்துச் சேமித்து வைத்திருந்தேன். அது, திருநாளும் பெருநாளுமான இன்று, அதிகக் காய்கறி வாங்கிச் சமைக்க உதவியது" என்றாள். உடனே என்ன நடந்திருக்கும்? என்ன நடந்தது? நம் மூளைகளுக்கு எட்டாத ஒன்று நடந்தது. அது என்ன தெரியுமா? அடுத்த நாள் காலை அமைச்சரைக் கூப்பிட்டு, "என் இல்லத்திற்குக் காய்கறி வாங்க நாலணாத் தேவையென நினைத்தது தவறு. இப்போது மூன்றே முக்காலணாவே போதும் எனத் தெரிகிறது. ஆகவே, நாளையிலிருந்து மூன்றே முக்காலணா மட்டும் கொடு" என்பதுதான். [சிரிப்பு]

வெளிப் பயணத்திலும்

பெரும் போர் ஒன்று நடந்து வெற்றி பெற்ற சமயம். வெற்றி பெற்ற நாட்டின் 2ம் கலிபா தோல்வியடைந்த பாலஸ்தீன் நாட்டின் பொக்கிஷத்தின் சாவியைப் பெறப் புறப்பட்டான். பல படை வீரர்களும், அதிகாரிகளும் உடன் வரப் புறப்பட்டனர். மன்னன் அவர்களைத் தடுத்து நிறுத்தி விட்டு, ஒரு ஒட்டகத்தில் தான் ஏறிக் கொண்டு, மற்றொரு ஒட்டகத்தில், தனக்கும் ஒட்டகக்காரர்களுக்கும் வேண்டிய ஆடைகளையும், உணவையும், தண்ணீரையும் ஏற்றும்படி கட்டளையிட்டான். புறப்படும்போது, அதையும் தடுத்துவிட்டு, ஒரு ஒட்டகத்தில் மட்டும் உணவும் நீரும் ஏற்றிக் கொண்டு ஒட்டகக்காரனோடு புறப்பட்டு விட்டான். சிறிது தூரம் சென்றதும், அந்த ஒட்டகம் இருவரையும் சுமந்து, இருவரது சுமையையும் சுமந்து செல்வதை மன்னன் கண்டு மனம் வருந்தி, ஒட்டகத்தின் சுமையைக் குறைக்க எண்ணினான். இறுதியாக அவன் திட்டம் கையாளப்பட்டது. அது, ஒருவர் ஒட்டகத்தின் மேல் இருப்பது, மற்றவர் ஒட்டகத்தைப் பிடித்துக் கொண்டு நடத்திச் செல்வது. ஒரு மைல் தூரம் சென்ற பிறகு, இருவரும் தங்கள் வேலையை மாற்றிக் கொள்வது என்பது. பல மைல்கள் தூரம் நடந்து சென்று, இறுதியாக, அந்த நாட்டிற்குள் நுழையும் போது, ஒட்டகக்காரன் ஒட்டகத்தின் மேல் இருக்க, மன்னன் தன் கையால் ஒட்டகத்தைப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். பொக்கிஷத்தின் சாவியைக் கொடுக்க அங்கு திரண்டிருந்த ஊர் மக்கள், ஒட்டகத்தின் மேலிருந்தவரையும், ஒட்டகத்தைப் பிடித்து வந்தவரையும் மாறி மாறி உற்றுப் பார்த்து, "எந்த மன்னன், ஒட்டகக்காரனை ஒட்டகத்தின் மேல் வைத்துத் தான் ஒட்டகத்தைப் பிடித்துக் கொண்டு நடந்து, இந்த ஊருக்குள் நுழைகிறானோ, அந்த மன்னனிடம் இந்தச் சாவியைச் சேர்ப்பியுங்கள் என்று எங்களுக்குக் கட்டளை பிறந்திருக்கிறது" என்று கூறி, வியப்போடும் மகிழ்வோடும் ஒட்டகத்தைப் பிடித்து நடந்து வந்த மன்னனிடம் பாலஸ்தீன் நாட்டு மக்கள் சாவியைச் சேர்ப்பித்தார்கள். எப்படி? நாயகம் அவர்களின் சிக்கனக் கொள்கை, அரண்மனைகளிலும் மன்னர்களிடத்தும் பரவியிருந்தது என்பது!