நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்/பாவமன்னிப்பு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

13. பாவமன்னிப்பு

பாவமன்னிப்பு ஒன்று. பாவங்கள் மன்னிக்கப்படுமா என்பது ஒரு கேள்வி. எல்லாச் சமயத்தினரும் சடங்குகளை வைத்துக்கொண்டுள்ளார்கள். சில பாவங்களுக்கு மெழுகுவர்த்தி வைத்தால் போய் விடும். ஐயருக்குத் தட்சணை கொடுத்தால் போய்விடும். குளத்தில் முழுகினால் போய் விடும். அதுவும் 12 வருடங்களுக்கு ஒருமுறை, குளத்தில் மூழ்கினால் போய் விடும் என்று பல சமயத்தவர்கள் கூறுகிறார்கள். ஒருவன் 12 அணா செலவிட்டு ஒரு ஊருக்குப் போய், ஒரு குளத்தில் ழுழுகி விட்டு வந்தால் 12 வருடங்கள் செய்த பாவங்கள் போய் விடுமாறிருந்தால், அடுத்துப் பாவம் செய்ய அவன் பயப்படுவானா? எவ்வளவு பாவம் செய்தாலும் 12 அணா பணச் செலவில் போய் விடுமானால், குளித்து விட்டு மறுபடியும் புதுக் கணக்குப் போட்டுக் கொள்வான். அடுத்த 12 வருடங்களுக்கு அப்புறமும் 12 அணா செலவு செய்து விடுவான். [சிரிப்பு.]

நாயகம் அவர்களிடத்தில் போய், "மனிதன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுமா?" என்று கேட்டார்கள். "முடியாது" என்றார்கள். "அப்படியானால் பாவமன்னிப்பே இல்லையா?" என்றார்கள். "ஒன்று உண்டு. செய்த பாவத்தை எண்ணி எண்ணி இறைவனிடம் முறையிட்டு, அழுதால் அது மன்னிக்கப்படலாம்", என்றார்கள். "தட்சணை வை, குத்து விளக்குக் கொடு, சில பொருள்களைத் தா, பணத்தைக் கொடு, சடங்குகள் செய், மந்திரஞ் சொல்" என்று கூறாமல், "அழு! அழுதால் மன்னிக்கப்படும்" என்று கூறியது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பாருங்கள்! எவ்வளவு பாவம் மன்னிக்கப்படும் என்று கேட்டதற்கு, நாயகம் அவர்கள், “நீ எவ்வளவு கண்ணீர் விடுகிறாயோ, அவ்வளவுதான் மன்னிக்கப்படும்; அதுவும் பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தாலன்றி, ஆண்டவனும் மன்னிக்க மாட்டான்' என்றார்கள். ஒருவன் தவறு செய்து விட்டு, தான் செய்தது தவறு என்று வருந்திக் கண்ணீர் விடுவானானால், அவன் திரும்பவும் பாவச் செயல்களைச் செய்வானா? என்று எண்ணிப் பாருங்கள். இதையே சொன்னார் மணிவாசகரும், "அழுதால் உன்னைப் பெறலாமே" என்று. ஆக அறிந்தோ, அறியாமலோ பாவஞ் செய்தவர்கள் வருந்தி அழ வேண்டும் என்பது நாயகம் அவர்களுடைய கருத்து. இதைப் பகுத்தறிவாளர்களும் வரவேற்கிறார்கள்.

ஒட்டகப் புத்தி

மேலே கண்ட பாவ மன்னிப்பைச் சொன்னவர்கள் ஒட்டகப் புத்தி உள்ளவனை மட்டும் இறைவன் மன்னிக்க மாட்டான் என்று கூறினார்கள். திருப்பித் திருப்பிக் குர் ஆனை மொழி பெயர்ப்பிலே படித்தேன். ஒட்டகப் புத்தி என்றால் என்ன என்று விளங்கவில்லை. கொஞ்சம் தெரிந்தவர்களை எல்லாம் போய் ஒட்டகப் புத்தி என்றால் என்ன? என்று கேட்டேன். தெரியவில்லை. இதற்காக நான் டில்லிக்குப் போனேன். ஒட்டகம் வளர்க்கிற இடங்களுக்கெல்லாம் போனேன். போய்ப் பார்த்த பிறகுதான் குரானுக்குப் பொருள் அங்கே விளங்கிற்று. இந்த டில்லி முழுவதும் கருவேலங் காட்டில் இருக்கிறது. அதிலும் இப்புதிய டில்லி கருவேலங்காட்டிலேயே அமைந்திருக்கிறது. நந்தவனங்களை வைத்து அருமையாகப் பாதுகாக்கிறார்கள். அதற்குள்ளும் கருவேலஞ் செடி முளைத்துவிடுகிறது. அதைத் திராவகம் வைத்துச் சுட்டு அழிக்கிறார்கள். அப்படியும் அது முளைத்துக் கொண்டே இருக்கிறது. இந்த ஒட்டகம், நல்ல புல், உயர்ந்த கீரை முதலியவற்றை விரும்பித் தின்னாமல், இந்தக் கருவேலஞ் செடியையே விரும்பித் தின்கிறது. நாக்கைச் சுழற்றிச் சுழற்றித் தின்னும். அவ்வளவு ஆசை அதற்கு, அது தின்னும் போது முள் எல்லாம் குத்தும். நாக்கிலிருந்து இரத்தம் வெளி வரும். அதையும் சேர்த்துச் சுழற்றிச் சுழற்றிச் சாப்பிடும். கருவேலஞ் செடியை முன்னே அது தின்னும்போது, முள் குத்தும் என்பது தெரியாது. அது குத்தி, இரத்தம் வந்த பிறகேனும் 'தூ' என்று துப்ப வேண்டாமா? இதுதான் ஒட்டகப் புத்தி என்பது. தவறு செய்கிறது எளிது. அறியாமல் செய்து விடக் கூடும். ஆனால் செய்த தவறைத் தவறு என்று உணர்ந்த பிறகு, வருந்தி அழுது ஆண்டவனிடத்தில் மன்னிப்புக் கேட்ட பிறகு, மீண்டும் அத்தவறைச் செய்வது நல்லதல்ல. அது ஒட்டகத்தின் புத்தி. அப் புத்தி உள்ளவனை ஆண்டவன் மன்னிக்க மாட்டான் என்பது நாயகம் அவர்களின் வாக்கு.