நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/ஆத்திரம் தணிந்தது
பெருமானார் இருக்கும் இடத்தை நோக்கி உமர் உருவிய வாளுடன் புறப்பட்டுச் சென்றார்.
வழியில் அவருடைய நண்பர் ஒருவர்,"இவ்வளவு வேகமாக எங்கே போகிறீர்?” என்று கேட்டார்.
நடந்தவற்றையும், தாம் எடுத்துக் கொண்ட உறுதி மொழியையும் விவரமாகக் கூறினார் உமர்.
“இஸ்லாத்தை அழித்து, அதைப் பிரச்சாரம் செய்பவரைக் கொலை செய்ய புறப்பட்டு விட்டீரே! உம்முடைய சகோதரியும், மைத்துனரும் முஸ்லிமாக இருக்கிறார்களே! அது உமக்குத் தெரியாதா? முதலில் அவர்களைத் திருத்தும். நியாய உணர்வும், வெட்கமும் உம்மிடமும் இருக்குமானால், முதலில் உம்முடைய வீட்டைச் சீர் படுத்தும்” என்றார் நண்பர்.
அதைக் கேட்ட உமருக்குக் கோபக் கனல் கொழுந்து விட்டது!
உடனே, அவர் தம்முடைய சகோதரி வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினார்.
அப்பொழுது அவர் சகோதரியும், மைத்துனரும் திருக்குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தனர்.
அந்த ஒலியானது உமரின் காதில் விழுந்தது.
திருக்குர்ஆன் எழுதப்பட்ட சில தாள்களை மறைத்து வைத்து விட்டுக் கதவைத் திறந்தார்.
உமர் உள்ளே நுழைந்ததும்,"இங்கே நான் கேட்ட சப்தம் என்ன?” என்று கேட்டார்.
“ஒன்றும் இல்லையே!” என்றார் சகோதரி.
“நான்தான் என் காதாரக் கேட்டேனே; நீங்கள் இருவரும் நம்முடைய புராதன மதத்தை புறக்கணித்து விட்டீர்கள்” என்று கூறிக் கொண்டே, மைத்துனரை நையப் புடைக்கத் தொடங்கினார் உமர். தம் கணவரைக் காப்பாற்ற முற்பட்ட சகோதரியை உமர் அடித்ததில், அவருக்கு இரத்தக் காயம் உண்டாயிற்று.
அந்த நிலையில், தம் சகோதரரைப் பார்த்து,"நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். இஸ்லாம் எங்கள் மனத்தை விட்டு ஒருபோதும் அகலாது” என்று துணிவோடு கூறினார் சகோதரி.
சகோதரியின் இரத்தக் காயத்தையும், மன உறுதியையும் கண்ட உமர் உள்ளம் நெகிழலானார்.
அவர்களை அன்புடன் நோக்கி,"நீங்கள் ஓதிக் கொண்டிருந்ததை எனக்குக் காட்டுங்கள்” என்று கேட்டார் உமர். அங்க சுத்தி செய்து கொண்டு வந்த ஹலரத் உமரிடம் திருக்குர்ஆன் எழுதப்பட்ட சில தாள்களைக் கொண்டு வந்து, அச்சத்துடன் வைத்தார் சகோதரி.
அவற்றை ஓதி உணர்ந்ததும் உமர் உள்ளம் நெகிழ்ந்து, பரவசம் ஆனார்.