நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/உண்மையும் நாணயமும் உள்ளவர்
பெருமானார் அவர்களின் மருமகன் அபுல் ஆஸ் அப்பொழுதும் முஸ்லிமாகாமல் இருந்தார்.
பத்ருப் போரின் போது சிறைப்படுத்தப்பட்ட குறைஷிகளில் அபுல் ஆஸூம் ஒருவர். அவருடைய மனைவியும் பெருமானார் அவர்களின் மகளுமான ஸைனபை மதீனாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அபுல் ஆஸ் விடுதலை செய்யப்பட்டார்.
அகழ்ச் சண்டை நடைபெற்ற சிறிது காலத்துக்குப் பின்னர், அபுல் ஆஸ் வியாபாரத்துக்காக ஷாம் தேசத்துக்குச் சென்று, அங்கிருந்து அதிகமான பொருள்களுடன் திரும்பி வந்தார்.
அப்பொழுது முஸ்லிம்களில் சிலர், அபுல் ஆஸ் மற்றும் அவரைச் சேர்ந்தவர்களையும் சூழ்ந்து, சரக்குகளைக் கைப்பற்றி, தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர். அபுல் ஆஸ், பெருமானார் அவர்களிடம் வந்து, குறைஷிகள் நம்பிக்கையாகத் தம்மிடம் விற்பனைக்காகக் கொடுத்திருப்பதாகவும், அவற்றைத் திரும்பத் தம்மிடம் தர வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.
உடனே பெருமானார் அவர்கள், சரக்குகளை அவரிடம் திருப்பிக் கொடுத்து விடுமாறு கட்டளையிட்டார்கள். அவ்வாறே, அவை யாவும் அவரிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டன.
பெருமானார் அவர்களின் கருணை, அபுல் ஆஸின் உள்ளத்தை மிகவும் நெகிழச் செய்துவிட்டது.
அபுல் ஆஸ் மக்காவுக்குச் சென்று சரக்குகளை எல்லாம் உரியவர்களிடம் சேர்ப்பித்தார். பின்னர், “குறைஷிகளே! உங்களுடைய சரக்குகள் ஏதாவது திருப்பித் தரப்படாமல் என்னிடம் உள்ளனவா?” என்று கேட்டார்.
“சரக்குகள் எதுவும் பாக்கி இல்லை; நீர் உண்மையானவர்; நேர்மை மிக்கவர் என்பதை அறிகிறோம். ஆண்டவன் உமக்குத் தகுந்த பரிசு வழங்குவான்" என்று அவர்கள் மகிழ்வோடு சொன்னார்கள்.
“நான் முன்னரே இஸ்லாத்தைத் தழுவியிருப்பேன். ஆனால், உங்களுடைய சரக்குகளை அபகரிப்பதற்காகவே நான் அவ்வாறு செய்தேன் என நீங்கள் சந்தேகப்படுவீர்கள். ஆதலால், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; நபி அவர்கள் ஆண்டவனுடைய தூதர் என நான் உறுதி கூறுகிறேன்” என்று சொல்லி இஸ்லாத்தைத் தழுவினார் அபுல் ஆஸ்.