நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கடுமையான போர்
பத்ருப் போரில் மாண்டவர்களுக்குப் பழி வாங்க வேண்டும் என்பதாகக் குறைஷிப் பெண்கள் பாடல்கள் பாடிக் கொண்டும், முரசு ஒலித்துக் கொண்டும் யுத்த களத்தில் இறங்கினார்கள்.
****
அபூ ஆமீர் என்பவர் மதீனாவாசி; மக்களின் மதிப்பைப் பெற்றவர். பெருமானார் அவர்கள் மதீனாவுக்கு வந்ததும், அவர் மதீனாவை விட்டு மக்காவுக்குப் போய் வசிக்கலானார். அவர் இப்பொழுது இருநூறு குறைஷி வீரர்களுடன் போர்க் களத்தில் முன்னே வந்தார்.
தாம் முன்னேறி வந்தால் மக்கள், பெருமானார் அவர்களைக் கை விட்டு, தம்முடன் சேர்ந்து கொள்வார்கள் என்ற சபலம் அவருக்கு இருந்தது. அந்த நோக்கத்தோடு அன்ஸாரி முஸ்லிம்களைப் பார்த்து, “நீங்கள் என்னை அறிவீர்களா? நான்தான் அபூ ஆமீர்!” என்று கூறினார்.
அன்ஸாரிகள், “ஆம், துரோகியே! உம்மை நாங்கள் நன்றாக அறிவோம். உம்முடைய விருப்பம் நிறைவேறாமல் இருக்கட்டும்!” என்று பதிலடி கொடுத்தார்கள்.
****
குறைஷிகளின் கொடியைப் பிடித்துக் கொண்டிருந்த தல்ஹா என்பவர் அணியை விட்டு வெளியேறி, முஸ்லிம்களைப் பார்த்து, “இறந்த உங்கள் வீரர்கள் சுவர்க்கத்திலும், எங்கள் வீரர்கள் நரகத்திலும் இருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் பொய்யர்களே. உண்மையில் இக்கூற்றை உங்களில் நம்புபவர் யாரேனும் இருந்தாலும் வாருங்கள் என்னோடு போருக்கு!” என்று சவால் விட்டார்.
அடுத்த கணம் ஹலரத் அலீ அவர்கள், “நான் அவ்வாறு செய்வேன்!” என்று கூறி, உடனே வாளால் வீசினார்கள். தல்ஹா மாண்டு வீழ்ந்தார். அதன்பின், அவருடைய மகன் உதுமான் அக்கொடியைப் பிடித்துக் கொண்டிருந்தார். அவரை ஹம்ஸா அவர்கள் வாளால் வீசியதும், அவரும் அங்கேயே வீழ்ந்தார். குறைஷிகளுக்குக் கோபம் மிகுதியாகி, அனைவரும் ஒன்று சேர்ந்து களத்தில் இறங்கினார்கள்.
***
அரபு நாட்டில், அபூ துஜானா வீரத்தில் பேர் பெற்றவர். சண்டையின் தொடக்கத்தில் பெருமானார் அவர்கள், தங்கள் திருக்கரத்தில் வாளை எடுத்து, “இதன் கடமையைச் சரி வர நிறைவேற்றுபவர்கள் யார்?” என்று கேட்டார்கள்.
அதற்குப் பலர் கைகளை உயர்த்தினர். எனினும், அபூ துஜானாவுக்கே அந்தப் பெருமை கிடைத்தது.
பெருமானார் அவர்களின் சிறப்பு மிக்க வாள் தமக்குக் கிடைத்த பெருமையால் பெருமிதங் கொண்டு, தலையில் சிவப்புத் தலைப்பாகையை அணிந்து, உடலை அப்படியும் இப்படியும் வளைத்து வெளியேறினார்.
அவரைப்பார்த்து பெருமானார் அவர்கள், “இவ்விதமான நடை ஆண்டவனுக்குப் பிரியமானது அல்ல; ஆனால், இந்த நேரத்தில் இது ஆண்டவனுக்குப் பிரியமானது தான்!” என்று கூறினார்கள்.
***
ஹலரத் ஹம்ஸா, அலீ, அபூதுஜானா ஆகிய மூவரும் குறைஷிகளின் படையினுள் பாய்ந்து, அணி அணியாகக் காலி செய்து கொண்டே போனார்கள்,
அபூ துஜானா பகைவர்களின் படைகளை வெட்டி வீழ்த்தி, முன்னேறிக் கொண்டிருந்தார்.
இஸ்லாத்தின் கொடிய விரோதியான, ஹிந்தா (அபூ ஸூப்யானின் மனைவி) அபூ துஜானாவின் முன் எதிர்ப்பட்டார். அவரைக் கொல்வதற்கு வாளை உயர்த்தினார். ஆனால், திடீரென்று. பெருமானார் அவர்களின் வாளின் பெருமையை ஒரு பெண்ணிடம் காட்டுவதா என்ற எண்ணம் தோன்றி, உயர்த்திய வாளைத் தாழ்த்தி விட்டார். ஹம்ஸா அவர்கள் இரு கைகளிலும் வாளேந்தி, அணி அணியாக வெட்டிச் சாய்த்துக் கொண்டே சென்றார்கள். அப்போது குறைஷிகளின் அடிமை வஹ்ஷி என்னும் அபிசீனிய தேசத்தவர், அவர்கள் மீது கண் வைத்துக் கொண்டிருந்தார். ஹம்ஸாவை வெட்டி வீழ்த்தி விட்டால், அவருக்கு விடுதலை அளிப்பதாக, அவருடைய எஜமானர் வாக்களித்திருந்தார்.
ஹல்ரத் ஹம்ஸா நெருங்கி வரும்போது, அவர்கள் மீது சிறிய ஈட்டி ஒன்றை வீசினார் வஹ்ஷி; அதன் தாக்குதலால் ஹம்ஸா (ரலி) அவர்கள் கால்கள் தடுமாறி விழுந்து, உயிர் நீத்தார்கள்.
கொடி பிடித்துக் கொண்டிருந்த குறைஷிகளில் பலர் கொல்லப்பட்டனர். ஆனாலும், ஒருவர் பின் ஒருவராகத் தங்கள் கொடி கீழே விழாமல் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அலீ அவர்கள், அபூதுஜானா ஆகிய இருவரின் இடை விடாத தாக்குதலினால் குறைஷிகளின் பல அணிகள் அழிந்து போயின. குறைஷிப் படையினரின் ஊக்கம் குன்றியது; அவர்கள் தலைவர்களுடைய மனமும் தளர்ந்து விட்டது. பாடல்கள் இசைத்து உற்சாகமூட்டிக் கொண்டிருந்த மாதர்கள் நம்பிக்கை இழந்து பின்னடைந்தார்கள்.
எதிரிகள் பின் வாங்குவதை அறிந்ததும் அவர்களுடைய பொருள்களைக் கைப்பற்றுவதற்காக, முஸ்லிம் படை தங்கள் இடத்தை விட்டு முன்னேறிச் சென்றது. அதைப் பார்த்து, கணவாய்ப் பாதையைப் பாதுகாவல் செய்து கொண்டிருந்த அம்பு எய்வோரும், தங்கள் இடத்தை விட்டுப் பெயர்ந்து, செல்லத் தொடங்கினார்கள். அவர்களின் தலைவர் அப்துல்லாஹ்-இப்னு-ஜூபைர்,[1] பெருமானார் அவர்களுடைய கட்டளைப்படி, அவர்களை எவ்வளவோ தடுத்தார்; ஆனால் அவர்களோ நிற்கவில்லை. அதனால் கணவாய்ப் பாதையானது பாதுகாப்பற்றதாயிற்று. அதைக் குறைஷிகளின் படைத் தலைவர் காலித் கண்டு, குன்றின் பின்புறமாக வந்து தாக்கினார். அந்தப் பாதையில் அப்துல்லாஹ் இப்னு ஸுபைரும், அவருடன் சிலரும் சேர்ந்து தடுத்தும் பயன்படவில்லை. அவர்கள் அனைவரும் வெட்டுப்பட்டனர். அதனால் கணவாய்ப்பாதை தடுப்பார் இல்லாமல் வழி திறக்கப் பட்டிருந்தது.
காலித் அவ்வழியாக, குதிரை வீரர்களுடன் வந்து, முஸ்லிம் படையைப் பின்புறமாய் நின்று தாக்கினார்.
குறைஷிகளின் பொருள்களைக் கொள்ளையிட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் படைகள் பின்புறம் திரும்பிப் பார்த்தபோது, குறைஷிகளின் குதிரைப் படை வாளேந்தி, முஸ்லிம் படையைத் தாக்கிக் கொண்டிருந்தது.
பின்வாங்கிச் சென்று கொண்டிருந்த குறைஷிகளின் படையோ, காலித் தாக்குவதைக் காணவும் திரும்பி முன்புறம் தாக்கின.
இருபுறமும் தாக்குதல் நிகழவே, திடீரென உண்டான குழப்பத்தினால், இரண்டு படைகளும் தங்களைச் சேர்ந்தோர், அயலார் என்ற வேறுபாடு இல்லாமல் தாக்கிக் கொண்டனர்.
- ↑ ஹலரத் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் அல்ல இங்கு குறிப்பிடப்படுபவர்கள். அஸ்மா நாச்சியாருக்கும், ஹலரத் ஸுபைருக்கும் மகனாராகிய அப்துல்லாஹ் இப்னு ஸூபைருக்கு, உஹதுப் போரின்போது மூன்று வயதுதான். மேலே சொல்லப்பட்டுள்ள இப்னு ஜுபைர் பனூ தஃலபா கோத்திரத்தைச் சார்ந்தவர்கள்; இப்போரில் ஷஹீதானார்கள்.