நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/தோல்வியும் தண்டனையும்
அகழ்ச் சண்டை முடிவானதும், படைகள் ஆயுதங்களைக் கீழே வைக்காமல் பனூ குறைலா கூட்டத்தார் வசிக்கும் இடத்துக்குச் செல்லுமாறு, பெருமானார் அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அவர்கள் சமாதானத்துக்கு வருவதாயிருந்தால், போதிய காரணத்தைக் கொண்டு அவர்களுடன் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் அங்கு சென்றார்கள்.
ஆனால், யூதர்கள் சண்டை செய்வது என்றே தீர்மானித்து விட்டனர்.
அலி அவர்கள் முஸ்லிம் படைகளுக்கு முன், யூதர்களின் கோட்டைக்கு அருகில் சென்ற போது, பெருமானார் அவர்களை யூதர்கள் பகிரங்கமாக நிந்தனை செய்தார்கள்.
அவர்களுடைய கோட்டைகள் முற்றுகை இடப்பட்டன.
ஒரு மாதம் வரை முற்றுகை நீடித்தது.
இறுதியில், யூதர்கள் பணிந்து, ஸஅத் இப்னு முஆத் ஏற்படுத்தும் நிபந்தனைகளை ஏற்பதாக ஒப்புக் கொண்டனர்.
குறைலா கூட்டத்தாருக்கும் ஸஅத் குடும்பத்துக்கும் வெகு காலமாக நட்பு இருந்து வந்தது. அதைக் கருதி, தங்களுக்குச் சாதகம் செய்வார் என்ற எண்ணத்தில், அவர்கள் ஏற்படுத்தும் நிபந்தனையை ஒப்புக் கொள்வதற்கு முன் வந்தனர்.
மிகவும் நெருக்கடியான சந்தர்ப்பத்தில், யூதர்கள் துரோகம் செய்தது ஸஅத் அவர்களுக்கு அளவற்ற வருத்தத்தை அளித்தது.
ஸஅத் அவர்கள் யூதர்களுடைய வேதக் கட்டளை அனுசரித்துத் தீர்ப்பளித்தார்கள். பெருமானார் அவர்களும் அதற்குச் சம்மதித்தார்கள்.
- ஸஅத் வழங்கிய தீர்ப்பு:
- 1. சண்டை செய்வதற்குச் சக்தியுள்ள ஆண்களுக்கு மரண தண்டனை
- 2. பெண்கள், பிள்ளைகளுக்குச் சிறை தண்டனை
- 3. பொருள்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
பெருமானார் அவர்களின் தீர்ப்பின்படி நடப்பதற்கு யூதர்கள் சம்மதித்திருந்தால், முன்னர் பனூ நலீர் கூட்டத்தாருக்குச் செய்த தீர்மானப்படியே செய்திருப்பார்கள்.
(யூதர்களுடைய வேதமான தெளராத்தில், பகைவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளதோ அவ்வாறே ஸஅத் தீர்மானித்தார்).
யூதர்களில் நானூறு பேர்கள் கொல்லப்பட்டனர். கோட்டை மதில் மீது இருந்து ஒரு பெரிய கல்லை, ஒரு முஸ்லிம் மீது போட்டுக் கொன்றதற்காக ஒரு பெண்ணும் கொல்லப்பட்டாள்.
அடுத்து, கொல்லப்பட்டவர்களில் பனூ நலீர் கூட்டத்தின் தலைவர் ஹுயய் இப்னு அக்தப் ஒருவர். முஸ்லிம்களுடன் ஏற்பட்டிருந்த உடன்படிக்கைக்கு மாறாக, நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அவர்களைக் கை விட்டு அவர்களுக்கு விரோதமாகச் சண்டை செய்யுமாறு பனூ குறைலா கூட்டத்தாரைத் தூண்டியவர் அவரே. அதைத் தவிர அவருடைய கூட்டத்தாருடன் மதீனாவை விட்டு வெளியேறி, கைபருக்குப் போகும்போது, பெருமானார் அவர்களுக்கு விரோதமாக ஒருவருக்கும் உதவி புரிவதில்லை என்பதாக ஆண்டவன் சாட்சியாகக் குறிப்பிட்டு உடன்படிக்கை செய்திருந்தார்.
(உடன்படிக்கையின் படி அவர் நடந்து கொள்ளவில்லை என்பதை முன் நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டும்).
அவரைக் கொல்வதற்காகக் கொண்டு வந்து நிறுத்திய போது தம் குற்றத்தை உணர்ந்து, பெருமானார் அவர்களிடம், “ஆண்டவன் பேரில் சத்தியமாகச் சொல்லுகிறேன். உங்களுடன் ஏன் விரோதம் செய்து கொண்டேன் என்பதைப் பற்றி எனக்கு வருத்தம் இல்லை. ஆனால், ஆண்டவனை விட்டு எவன் விலகுகிறானோ, அவனை ஆண்டவனும் கை விடுகிறான் என்ற உண்மையை இப்பொழுது அறிந்து கொண்டேன்” என்றார்.
ஃஃஃ
ஹிஜ்ரீ ஐந்தாவது, ஆறாவது வருட மத்தியில், சில சிறிய சண்டைகள் நிகழ்ந்தன.
முன்னர், முஸ்லிம்களில் பத்துப் பேரை வஞ்சித்துக் கூட்டிக் கொண்டு போய் ரஜீஅ என்னும் இடத்தில் அவர்களைக் கொலை செய்த கூட்டத்தாரைத் தண்டிப்பதற்காகப் பெருமானார் அவர்கள் தோழர்களுடன் அங்கே சென்றார்கள்.
அவர்கள் வருவதை அறிந்த அக்கூட்டத்தார் அருகில் இருந்த மலையில் போய் ஒளிந்து கொண்டார்கள்.
முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் பெருமானார் அவர்கள் தங்கியிருந்து, அவர்களுக்காக ஆண்டவனிடம் வேண்டுதல் செய்து விட்டுத் திரும்பி விட்டார்கள்.