நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பிறந்த மண்ணைக் காண ஆவல்
யூதர்கள், முனாபிக்குகள், குறைஷிகள் மற்றும் அரேபியாவிலுள்ள கூட்டத்தார் அனைவருமே இஸ்லாத்தை ஒடுக்குவதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்த சூழ்ச்சிகள், சண்டைகள் எதுவுமே பலிக்கவில்லை. ஆனால் மாறாக, அதன் பலம் அதிகரித்து, வளர்ச்சி அடைந்தது.
குறைஷிகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, முஸ்லிம்கள் மக்காவுக்குப் போக இயலாமல் இருந்தது.
புனித யாத்திரையாக மக்காவுக்கு வருபவர்களைத் தடுப்பதற்குக் குறைஷிகளுக்கு அதிகாரம் இல்லை. எனினும், முஸ்லிம்கள் மக்காவுக்கு வர விடாமல் குறைஷிகள் தடுத்து வந்தனர்.
யாத்திரைக் காலம் அண்மையில் இருந்ததாலும், பகைவர்கள் மதீனாவைத் தாக்கக் கூடும் என்ற அச்சம் இல்லாதிருந்ததாலும் புனிதப் பயணத்துக்காகப் பெருமானார் அவர்கள் மக்காவுக்கு புறப்பட எண்ணினார்கள்.
முஹாஜிர்களுக்கும் தங்கள் பிறப்பிடமான மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்து, ஆறாண்டுகள் ஆகி விட்டமையால், மக்காவைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியாயிற்று. மேலும், அவர்களில் பலருடைய மனைவி, மக்கள் மக்காவிலேயே இருந்தனர். அவர்களைக் காண வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது.
மக்காவில் இருந்த போது, அளவற்ற துன்பங்களுக்கு ஆளான பிலால் அவர்கள், மக்காவின் நினைவு எழுந்த போது கண்கலங்கி, “அந்தோ! நான் மக்காவில் ஓர் இரவாயினும் தங்கி மகிழும் நாள் எப்போது வருமோ? அங்கே உள்ள நறுமணப் பொருட்கள் எனக்குக் கிட்டுமோ? ஊற்றுகளில் இறங்கி மகிழவும், பேரீச்ச மரங்களைக் காணும் வாய்ப்பும் எப்போது வருமோ?” என்னும் கருத்துள்ள அரபிக் கவிதையைப் பாடிக் கொண்டிருப்பார்.
இப்ராஹீம் நபி அவர்கள் புனர் நிர்மாணமாகத் திகழும் கஃபாவை யாத்திரைக் காலத்தில் அரேபியர்கள் அனைவரும் வந்து தரிசிப்பார்கள்.
குறிப்பிட்ட அந்த நான்கு மாதங்களில் சண்டைச் சச்சரவுகளை விடுவித்துச் சகோதரரைப் போலக் கூடுவார்கள்.
பெருமானார் அவர்களும் மக்காவுக்குள் யாத்திரை சென்று, கஃபாவைச் சுற்று வந்து கொண்டிருப்பதாகக் கனவு கண்டார்கள். அவ்வாறே மக்காவுக்குப் புறப்படத் தீர்மானித்தார்கள்.