நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/மக்காவுக்குச் செல்லுதல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

196. மக்காவுக்குச் செல்லுதல்

இஸ்லாம் அரேபியா முழுவதும் பரவியதைக் கண்டதும், பெருமானார் அவர்கள், தாங்கள் இவ்வுலகில் தோன்றிய இலட்சியமானது நிறைவேறி விட்டதாகக் கருதினார்கள்.

ஓயாமல் சண்டை சச்சரவு கொலை இவற்றையே தொழிலாகக் கொண்டிருந்தவர்களின் இதயங்களை அன்பு, சகோதரத்துவம், நீதி என்னும் மேலான - கனிவான - கயிற்றால் பெருமானார் அவர்கள் பிணைத்துக் கட்டினார்கள். மனித உள்ளத்திற்கு அருவருப்பை உண்டாக்கக் கூடிய கொடுஞ் செயல்களில் உழன்று கொண்டிருந்த மக்களுடைய இதயங்களிலிருந்து பெருமானார் அவர்கள் அன்பும் கருணையும் ததும்பி வழியுமாறு செய்தார்கள்.

ஆண்டவனுடைய சட்டத்துக்கும், மனிதனுடைய சட்டத்துக்கும் அடங்காமல் நீதி என்பது மருந்துக்குக் கூட இல்லாமல் இருந்த வெம்பாலைப் பெருவெளியாம் அந்நாடு, பெருமானார் அவர்களின் பிறப்பின் சிறப்பால் பக்தியும், கருணையும் நிறைந்த மலர் வனமாக மாறியது.

முன்னர், எத்தனையோ நபிமார்கள் தோன்றியிருந்தார்கள். ஆனால், அவர்கள் ஆயுள் காலத்திலேயே, அவர்கள் பிரச்சாரம் செய்த மார்க்கம் பரவாமல் போய்விட்டது.

பெருமானார் அவர்கள் இருபத்து மூன்று வருடங்களாகப் போதித்து வந்த போதனைகளையும், உண்மை மொழிகளையும் மக்கள் தங்கள் உள்ளத்தில் நன்கு பதிய வைத்துக் கொண்டார்கள்.

பெருமானார் அவர்கள், மக்காவுக்குக் கடைசியாக யாத்திரை போய் வர வேண்டும் என்று விரும்பினார்கள்.

ஹிஜ்ரீ பத்தாவது வருடம் துல்கஃதா மாதத்தில், பெருமானார் அவர்கள் மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்குப் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அரேபியா தேசத்தின் பல பாகங்களிலிருந்தும், மக்கள் பெருமானாருடன் ஹஜ்ஜுக்காகச் சென்றார்கள். பெருமானார் அவர்களுடன், பிராட்டியார்களும் சென்றார்கள்.

மதீனாவிலிருந்து பெருமானார் அவர்கள் புறப்பட்டுப் பல இடங்களிலும் தங்கி ஒன்பதாவது நாளில் மக்கா போய்ச் சேர்ந்தார்கள்.

பெருமானார் அவர்களின் வருகையை அறிந்த அனைவரும் ஒரு சேர வந்து வரவேற்று உபசரித்தார்கள்.

ஆங்காங்கே மக்கள் திரண்டிருந்தனர். அவர்களின் மத்தியில் பெருமானார் அவர்கள், பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள்.