உள்ளடக்கத்துக்குச் செல்

நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/மன்னரின் மட்டற்ற மகிழ்ச்சி

விக்கிமூலம் இலிருந்து

135. மன்னரின் மட்டற்ற மகிழ்ச்சி

“நபி என்று தம்மைக் கூறிக் கொள்பவரின் வரலாற்றை, அபூ ஸூப்யானிடம் நான் விசாரிக்கப் போகிறேன். என் கேள்விகளுக்கு அவர் ஏதாவது பொய் சொன்னால், உடனே அதை என்னிடம் தெரிவிக்க வேண்டும்” என்று ரோமாபுரி அரசர், சபையில் அறிவித்தார்.

பெருமானார் அவர்களிடம் கடுமையான பகைமை கொண்டு, அவர்களைக் கேவலப்படுத்துவதிலேயே கருத்தாக இருந்தவர் அபூ ஸூப்யான். ஆயினும், அரசரின் கேள்விகளுக்குப் பெருமானார் அவர்களைப் பற்றிய உண்மைகளைக் கூறியது, பெருமானார் அவர்களுடைய பெருமையை மேலும் உயர்த்தியது. உண்மைக்கு அழிவில்லை; உண்மை எப்பொழுதும் வெற்றி பெறும் என்பதை அரசர் உள்பட அனைவரும் உணர்ந்தனர்.

அரசர் கேட்ட கேள்விகளுக்கு அபூ ஸூப்யான் பதில் அளித்தார்.

அவற்றைச் சீர் தூக்கிப் பார்த்த அரசர், அபூ ஸூப்யானிடமே அதைத் தெளிவுபடுத்துகிறார்.

“நபியின் குடும்பக் கெளரவத்தைப் பற்றி உம்மிடம் கேட்டேன்.

அரபு நாட்டில் மிகவும் கெளரவமும் பெருமையும் மிக்க குடும்பத்தில் அவர் தோன்றியதாகக் கூறினீர்.

தீர்க்கதரிசிகள் எல்லோருமே மேன்மையான குடும்பத்திலேயே தோன்றியுள்ளனர்.

முன்னர், அந்தக் குடும்பத்தில் ஒருவரும் தம்மை நபி என்று கூறிக் கொள்ளவில்லை என்பதை நீரே ஒப்புக் கொள்கிறீர்.

அவ்வாறு, யாரேனும் கூறியிருந்தால், அதைப் பின்பற்றியே இவரும் கூறி இருப்பார் என்று நினைக்கலாம்.

அவருடைய குடும்பத்தில் ஒருவரும் அதற்கு முன் அரசராக இருந்ததில்லை என்று சொல்லுகின்றீர். அவ்வாறு யாராவது இருந்திருந்தால், இழந்த அரசைப் பெறுவதற்காகவே, இவரும் தம்மை நபி என்று கூறிக் கொள்கிறார் என்று சொல்லலாம்.

அவர் ஒரு போதும் பொய் சொன்னதில்லை என்று நீரே கூறுகின்றீர்.

ஆண்டவனுடைய அடியார்களிடம் எவர் ஒரு போதும் பொய் சொல்லி இருக்க மாட்டோரோ, அத்தகையவர் ஆண்டவனைப் பற்றிய விஷயத்தில் எவ்வாறு கட்டுப்பாடான பொய் சொல்லுவார்?

ஏழைகளே முதலில் அவரைப் பின்பற்றியதாகச் சொல்கிறீர்.

தீர்க்கதரிசிகளை முதன் முதலில் ஒப்புக் கொள்பவர்கள் ஏழைகளே!

அவருடைய மதத்தைத் தழுவியவர்கள் எவரும் பின்னர், வெறுப்படைந்து அதை விட்டு அகன்றதில்லை என்று கூறுகின்றீர்.

விசுவாசத்தின் உண்மை நிலை அதுவே. எப்பொழுது விசுவாசம் உள்ளத்தில் குடி கொண்டு விட்டதோ, பிறகு அது ஒரு போதும் நீங்குவதில்லை.

அவரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதாகக் கூறுகின்றீர்.

உண்மையான மதமானது நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டுதான் இருக்கும்.

போர்களில், சில வேளைகளில் அவருக்கும், சில வேளைகளில் உம்முடைய கூட்டத்தினருக்கும் வெற்றி கிட்டியிருப்பதாகக் கூறுகிறீர்.

விரோதிகளுக்கு மத்தியில் தீர்க்கதரிசிகள் இவ்வாறே சோதிக்கப்படுகின்றனர். ஆனால் இறுதியில் தீர்க்கதரிசிகளுக்கே வெற்றி கிட்டும். அவர் ஒருபோதும் வாக்கு மாறியதில்லை என்று சொல்லுகின்றீர்.

தீர்க்கதரிசிகள் ஒரு போதும் வாக்கு மாறி நடந்து கொண்டதில்லை".

பின்னர் அபூ ஸுப்யானிடம், “அவர் போதிக்கும் கொள்கைகள் எவை?" என்று கேட்டார் அரசர்.

“அவர் ஆண்டவனை வணங்கும் படியும், அந்த ஆண்டவனுக்கு வேறு யாரையும் இணையாக வைக்காமல் இருக்குமாறும், நோன்பைக் கடைப் பிடிக்குமாறும், உறவினர்களை அன்பாக நடத்துமாறும் போதிக்கின்றார்” என்று கூறினார்.

“நீர் இதுவரை கூறியவை உண்மையாக இருக்குமானால், அவர்கள் நபி என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. அவர்களுடன் நான் இருந்திருப்பின், அவர்களுடைய பாதங்களைக் கழுவியிருப்பேன். இன்னொரு கருத்தையும் இப்பொழுதே கூறிவிடுகிறேன். இன்று நான் ஆட்சி செலுத்தும் இந்த நாடும் ஒரு காலத்தில் அவர்கள் வசமாகும்” என்று அரசர் கூறி முடித்தார்.

பெருமானார் அவர்களிடம் பகைமை கொண்டிருந்தாலும், அரசரிடம் உண்மையை ஒளிவு மறைவின்றி அபூ ஸுப்யான் கூறியது வியப்புக்குரியது.

பெருமானார் அவர்களின் கடிதம் அரசவையில் படிக்கப்பட்டதும், சபையில் சிறிது பரபரப்பு உண்டாயிற்று.

அரசரை இஸ்லாத்தைத் தழுவுமாறும், அவ்வாறு செய்தால் நலமாக இருப்பீர்கள் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் பின்னர், அபூ ஸூப்யான் முதலானோரை சபையை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது.

வெளியேறிய அபூ ஸூப்யான் தம்முடைய கூட்டத்தாரிடத்தில், “ரோமாபுரி அரசரும் மதிக்கும்படியான கெளரவத்தை முஹம்மது பெற்றிருக்கிறாரே” என்று சொல்லி, அங்கலாய்த்துக் கொண்டார்.