நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/யூதர்கள் தாக்க வருதல்
யூதர்களின் தலைவர்கள் மதீனாவைத் தாக்குவதற்காக, கத்பான் கோத்திரத்தினரையும் தங்களுடன் சேர்த்துக் கொண்டார்கள்.
தாக்குதலுக்கு ஆரம்பம், அல்கபா என்னும் மேய்ச்சல் நிலத்தில் பெருமானார் அவர்களின் பால் கறக்கும் ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருந்தன. சிலர் அங்கே போய் இருபது ஒட்டகங்களைக் கைப்பற்றி, மேய்த்துக் கொண்டிருந்த பனூ கிபாரீ கோத்திரத்தைச் சேர்ந்தவரைக் கொன்று விட்டதோடு, அவருடைய மனைவியையும் சிறைப்படுத்தி விட்டனர்.
முஸ்லிம்களில் அம்பு எய்துவதில் திறமைசாலியான ஸலமா இப்னு அமறுக்குச் செய்தி தெரிந்தது. உடனே அவர் கத்பான் கூட்டத்தாரைப் பின்தொடர்ந்து சென்றார். அவர்களோ அருகில் இருந்த குகையில் போய் ஒளிந்து கொண்டார்கள். ஸலமா குகையின் அருகில் சென்று அவர்களின் மீது அம்புகளை விடுத்தார். கூட்டத்தினர் ஒட்டகங்களை விட்டு ஓடி விட்டார்கள்.
உடனே ஸலமா பெருமானார் அவர்களிடம் வந்து விவரத்தைக் கூறி, தம்மோடு நூறு பேர்களை அனுப்புவதாயிருந்தால், அவர்கள் அனைவரையும் சிறைப்படுத்திக் கொண்டு வருவதாகக் கூறினார்.
பெருமானார் அவர்கள், “பகைவர்கள் உம்மிடம் அகப்படுவார்களானால், நீர் இரக்கத்துடன் நடந்து கொள்ளும்” என்று உத்தரவிட்டார்கள்.
இந்த நிகழ்ச்சி நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, கைபர்ச் சண்டை தொடங்கியது.
யூதர்களும், கத்பான் கூட்டத்தாரும் மதீனாவைத் தாக்கத் தயாராகி விட்டார்கள் என்ற உறுதியான செய்தி பெருமானார் அவர்களுக்குக் கிடைத்தது.
அதற்கு அறிகுறியாக, கத்பான் கூட்டத்தார் ஒட்டகங்களைக் கொள்ளை அடித்தார்கள். அவர்களை முறியடிப்பதற்காகப் பெருமானார் அவர்கள் கைபரைத் தாக்க எண்ணம் கொண்டார்கள்.
கைபர்ச் சண்டையானது, அதற்கு முன் நிகழ்ந்த இதர சண்டைகளினின்றும் மாறுபட்டதாகும்.
கைபர் மீது படையெடுக்கப் பெருமானார் அவர்கள் எண்ணிய போது, “ஆண்டவனுக்காகச் சண்டை செய்ய விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே நம்முடன் சேர்ந்து வாருங்கள்” என பகிரங்கமாக உத்தர விட்டார்கள்.