நமச்சிவாயப் புலவர் இயற்றிய தனிப்பாடல்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
நமச்சிவாயப் புலவர் இயற்றிய தனிப்பாடல்கள்

பாடல்கள் 24 தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 114 முதல் 117

பாடல்களுக்குக் குறிப்புரை – செங்கைப் பொதுவன்

1, 2[தொகு]

விருத்தம்

அவிசெட்டி வாங்கு சுரர்க்கிறை நிகராய் வளமருவும் அமரரென்றே
தவிசெட்டி மரம்போல வளர்ந்து இருப்போர் தமைப் பாடோந் தனிநற்கீரன்
கவிசெட்டி திருவடியைப் புகழ் வணிகன் இசையுடன் நற்கவினார் தஞ்சைச்
செவிசெட்டி பாலடைந் தானமது குறை விட்டோடுஞ் சேற்கண் மானே. (1)
பாங்குயர் பளிங்கு மேடை கொல்லுலையா மாருதம் துருத்தியா நீடும்
பகர்நிலாக் கற்றை பதடியா மூடும் படரிருட் குழாங்குடை கரியா
ஓங்கிய செக்கர் உள்ளிடும் கனலா வுயர்பெரும் பனிகொடும் வகையா
உருவிலி யென்னும் கொல்லனென் பொன்னை உருக்குமாறு என்கொலோ உரையாய்
தூங்கிய விழியும் தாம்புடைக் கயிறும் தூம்புறு காம்பியற் குழலும்
துவருடைத் துகிலும் கருவடைக் கழியுந்தொறு வியருறி படுகுடமும்
தாங்கிய கையும் மெய்யுமாய் நின்று தண்ணளி பெய்யு மாமுகிலே
தாண்டவராயா பாண்டவர் தூதா தாழ்வில்சீர் கோவலாதிபனே. (2)

3,4[தொகு]

மெய்யாரப் புலிகாணப் பொதுவில் ஆட்டை
மிகவெடுத்தீர் உமையாளுக்கு ஒருபங்கு ஈந்தீர்
பையாரப் பணம் எடுத்தீர் ஐயாநீர் தாம்
பாரறியச் சக்கரத்தை மாலுக்கு ஈந்தீர்
செய்யாரத் தடம்புடை சூழ்கருவை வாழுந்
திருக்காள வீச்சுரரே தேவரீர் தாங்
கையார மழுவெடுத்துக் காட்டினாலும்
களவும்மைக் கொண்டே நான் காண்பிப்பேனே.(3)
மான்பிடித்தீர் முயன் மிதித்தீர் எவருங்காண
மன்றுதனில் ஆடெடுத்தீர் மகத்து வந்த
ஊன்பெருத்த யானையைக் கொன்றுரித்தீர் இப்பால்
உரப்பான தலைக் கறிக்கும் உவந்தீரையா
மீன்பொதிந்த விழி மடவாட்கொரு பங்கீந்தீர்
மேலான வேடன் எச்சின் மிகவே கொண்டீர்
கான்பொதிந்த காளத்தி நாதா வும்மைக்
கழுக்கள் வந்து சுற்றுவதுங் காணத்தானே. (4)

5,6[தொகு]

பருப்பதங்கள் ஒவ்வொரு தூண்பாவுக் கல்வளையாத பாரமேரு
சுரிப்படங்காப் போதிகைநீ செய்த பணிவிடையை என்ன சொல்வேனையா
தருப்பொலியுங் கரதலமுத் திருளப்பா சாமீநின்றாய் பாலுன்னைக்
கருப்பனிமுன் திருப்பணிக்கென் றுருப்பணினான் மருப்பொலியுங் கமலத்தோனே. (5)
சேதுபதி காத்தமுத்து ராமலிங்க துரைராச சிங்கமந்திரி
மாதுபதி முத்திருளப்பன் கொடியவரி வேங்கை வளராதிக்கம்
கோதுறு பாமரக்காடு கருணீகர் மும்மதக் கோல்யானை மற்றோர்
மோதுபெரும் புலிக்காடு கல்விமான்களும் திரிந்தால் மோசந்தானே. (6)

7,8[தொகு]

கட்டளைக் கலித்துறை

ஞாலத்தவரும் புகழ் குடந்தாபுரி நாதன் எங்கோன்
காலப்புயல் வண்ணன் கண்மலர் சாத்தக் கருத்தில் உன்னி
சீலத்தவனம் மடியான் என்றியார்க்குந் தெரியவிட்ட
சூலக்குறி யல்லவோ நாமம் யாதெனச் சொல்லுவதே. (7)
வியந்த நிசாசரனாம் என்று சந்தரனும் வெஞ்சனிக்குப்
பயந்தவனாம் என்று பானுவும் வந்து பணியச் செம்பொன்
நயந்தரு செல்வக் கழுகாசலமது நண்பு வைத்துச்
செயந்தந்த தான் மதியாதவர் என்னத் திரிந்தனரே. (8)

9,10[தொகு]

பொருகோட்டு வாரிநிலத்திற் குணங்கெட்ட பூரியரைத்
தருகோட்டுக் கொம்பென்று உரைத்தென் பயன்வருந் தண்டமிழீர்
வருகோட்டுத் திங்கண் முடிக்கூத்தர் தில்லை வனத்தில் வளர்
ஒருகோட்டுக் கற்பகம் எல்லாம் தரும் தன்னை யுற்றவர்க்கே.(9)

வெறி விலக்கல்

வண்டுறை சோலைமலைப் பரிகாரி வந்தால் இவளுக்
கண்டுபடாத இக்காமச் சுரம் விடும் ஆதலினால்
பண்டு பழகினர் போலிந்த வேளையில் பாயசத்தைக்
கொண்டு வந்தீர் இதிற்றோடம் பிறந்திடும் கோதையரே. (10)

11,12[தொகு]

படைத்தாம வேற்கண்ணி கண்ணீர்ப் பரவாகப் பரவை பொங்கி
உடைத்தால் அடைத்தற்கு உபாயம் உண்டோ நறையூற் றிதழித்
தொடைத்தார் மௌலியில் சும்மாடு கட்டிச் சுமந்துசுமந்
தடைத்தால் அடைபடச் சொக்கேயிது வையை யாறல்லவே. (11)
ஏழேழு சங்கத்துடன் இருந்தான் என்று இயம்புகின்றீர்
பாழேழ் மையுற்றிடும் மானிடரே சொக்கர் பண்பறியீர்
ஆழேழ் உலகத்துக் கப்பால் இருந்த அடிகள் உம்பர்
வாழேழ் உலகத்துக் கப்பால் இருந்த மணிமுடியே. (12

13,14[தொகு]

காவொன்றுங் கைத்தலத் தண்ணல் செல்லூரன் கனிந்து நம்மை
வாவென்று அழைத்திட்ட மோதிரமே வண்மையான தமிழ்ப்
பாவொன்றும் சற்றும் அறியாத புல்லர்தம் பக்கலிற் போய்த்
தாவென்று கையெடுத்து ஏற்காமல் இட்டதடை யிதுவே. (13)
தடக்கும் பகிம்புரிக் கொம்பாசலப் பெருந்தந்தி பட
நடக்குந் துரங்கதுரை சீதக்காதி நன்னாட்டி னல
வடக்குங்குமக் கொங்கை மின்னே யவன் தெரு வாயிலிலே
கிடக்குங் கவியும் பரராச ரத்ந கிரீடமுமே. (14)

15,16[தொகு]

பூமாதிருந் தென்ன புவிமாதிருந் தென்ன பூதலத்தில்
நாமாதிருந் தென்ன நாமிருந் தென்ன நன்னாவலர்க்குக்
கோமான் அழகர்மால் சீதக்காதி கொடை மிகுந்த
சீமான் இறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே. (15)
மாகத்தத்தும் புகழான் பகைவேந்தர் மகுடம் பொடி
ஆகத்தத்தும் பரியான் சீதக்காதி யணிமலரின்
ஏகத்தத்தும்பி யிசைபாடு மார்பனிலென் மகட்கோர்
மோகத்தத்து உண்டென்று சொன்னாரிலை முன் மொழிந்தவரே. (16)

17,18[தொகு]

மைப்போதகமும் வளநாடும் செந்தமிழ் வாணர்க்கருள்
கைப்போதக மனையான் சீதக்காதியைக் காத்திருந்த
அப்போது அறிந்திலம் இப்பாழ் பணத்தின் அருமை யெல்லாம்
இப்போது அறிந்தனம் ஈயாதலோபர் இடத்தில் சென்றே. (17)
கிட்டாது பெண்குடி மார்க்கம் கணவன் கிழவனல்ல
பட்டாணிச் சேவகன் அல்லும் பகலும் அப்பாற் பிசக
ஒட்டான் பொய்யல்ல மலைமேல் இருக்கும் உமக்கும் இவள்
எட்டாத கொம்பில் கனிகாண் பரங்குன்று இருப்பவனே. (18)

19,20[தொகு]

மஞ்சுமஞ்சுங் கைப்பர ராஜசேகர மன்னன் வெற்பில்
பஞ்சுமஞ்சும் பதப்பாவை நல்லீர் படைவேள் பகழி
அஞ்சுமஞ்சுங் கயலஞ்சு மஞ்சுங் கடலஞ்சு மஞ்சும்
நஞ்சுமஞ்சும் வெற்றி வேலோ உனது நயனங்களே. (19)

வெண்பா

பாரார் சொல்லாரார் பறவைக் குலங் கடம்மிற்
சீராரும் கிள்ளை முதல் செப்பலால்-ஓரா
இரம்பை யானந்த ரங்கனின் பரங்க னன்பன்
பிரம்பை யானந்த ரங்கன்பேர். (20)

21,22[தொகு]

பங்கயமும் ஏரிகளும் பாவையர் கையும் மணியும்
தங்களைச் சூழுந் தணிகையே- திங்கணுதற்
செந்தில் அகத்தாள் புனிதன் செலவன் கடற்கரைசேர்
செந்தில் அகத்தாள் புனிதன் சேர்பு. (21)
சொல்வாரார் வள்ளியுடன் தோய்ந்தருண் முத்தையனுக்கு
வல்வாரார் மானேயென் மையறனை- வில்வாய்ந்த
தெள்ளிருக்கும் வேளூர் சிறுகாலுண் பானுமிசை
புள்ளிருக்கம் வேளூர் புகுந்து. (22)

23,24[தொகு]

கோலெடுத்துக் கோத்துரத்துங் கோப்பாண்டி மன்னன்வடி
வேலெடுத்துக் கோத்துரத்தில் விட்டிலனே- சால்படுத்த
பூபாலன் ஆனாலும் போமோ புராதனத்திற்
கோபாலன் ஆன குணம். (23)

கட்டளைக் கலிப்பா

விதுவை யம்பதி யோசையைப் பேரிகவிகை யெனும் மதன்வில்லில் வண்டேற்றினான்
மதுவை யம்பதி வேகமோடெய்து குவலயமீது வைக்கவென் னுள்ளநோ
குதுவையம் பதினாலும் புகழ்பெறும் குமுணன் கன்னன் கொடைகளை மாற்றிய
புதுவை யம்பதி வேங்கட ராயன்பாற் புகலிவ் வேளையில் என்றன் கைப்பூவையே. (24)