உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை

விக்கிமூலம் இலிருந்து
0. கடவுள் வாழ்த்து
பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்


மாநிலஞ் சேவடி யாகத், தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக,
விசும்புமெய் யாகத் திசைகை யாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற வெல்லாம் பயின்று,அகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப-
தீதற விளங்கிய திகிரி யோனே.


1. சிறுமை செய்யார்
பாடியவர்: கபிலர்
திணை: குறிஞ்சி
துறை: பிரிவு உணர்த்திய தோழிக்கு தலைவி சொல்லியது


நின்ற சொல்லர்; நீடுதோ றினியர்;
என்றும் என்றோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்தா தூதி, மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை;
நீரின் றமையா உலகம் போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி,
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை யுறுபவோ செய்பறி யலரே!


2. இடியினும் கொடியதாகும்?
பாடியவர்: பெரும்பதுமனார்
திணை: பாலை
துறை: உடன்போகா நின்றாரை இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது


அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து,
ஓலிவல் ஈந்தின் உலவை யங்காட்டு,
ஆறுசெல் மாக்கள் சென்னி எறிந்த
செம்மறுத் தலைய, நெய்த்தோர் வாய,
வல்லியப் பெருந்தலைக் குறுளை, மாலை,
மானோக்கு இண்டிவர் ஈங்கைய, சுரனே;
வையெயிற்று ஐயள் மடந்தை முன்னுற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,
காலொடு பட்ட மாரி
மால்வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே!


3. சுடரொடு படர் பொழுது!
பாடியவர்: இளங்கீரனார்
திணை: பாலை
துறை: முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன், பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.


ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினைப்
பொரியரை வேம்பின் புள்ளிநீழல்
கட்டளை அன்ன இட்டரங்கு இழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்
வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர்ச்
சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை
உள்ளினேன் அல்லெனோ, யானே - உள்ளிய
வினைமுடித் தன்ன இனியோள்
மனைமாண் சுடரொடு படர்பொழுது எனவே?


4. கொண்டு செல்வாரோ
பாடியவர்: அம்மூவனார்
திணை: நெய்தல்
துறை: தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது.


கானலஞ் சிறுகுடிக் கடல்மேம் பரதவன்
நீனிறப் புன்னைக் கொழுநிழல லசைஇத்
தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி
அந்தண் அரில்வலை உணக்குந் துறைவனொடு
அலரே, அன்னை யறியின் இவணுறை வாழ்க்கை
அரிய வாகும் நமக்கெனக் கூறிற்
கொண்டுஞ் செல்வர்கொல் தோழி உமணர்
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிக்
கணநிரை கிளர்க்கும் நெடுநெறிச் சகடம்
மணல்மடுத் துரறும் ஓசை கழனிக்
கருங்கால் வெண்குருகு வெரூஉம்
இருங்கழிச் சேர்ப்பிற்றம் உறைவின் ஊர்க்கே.


5. பிரிதல் அரிதே
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்
திணை: குறிஞ்சி
துறை: தலைவனின் செலவுக்குறிப்பறிந்து, வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.


நீலம்நீர் ஆரக் குன்றம் குழைப்ப
அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர்கால் யாப்பக்
குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர்
நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்பப்
பெரும்பெயல் பொழிந்த தொழில எழிலி
தெற்கேர்பு இரங்கும் அற்சிரக் காலையும்
அரிதே, காதலர்ப் பிரிதல் - இன்றுசெல்
இளையர்த் தரூஉம் வாடையொடு
மயங்கிதழ் மழைக்கண் பயந்த தூதே.


6. 'இவர் யார்?' என்னாள்
பாடியவர்: பரணர்
திணை: குறிஞ்சி
துறை: இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாகிய தலைவன், தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.


நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்
நார்உரித் தன்ன மதனில் மாமைக்
குவளை யன்ன ஏந்தெழில் மழைக்கண்
திதலை அல்குற் பெருந்தோள் குறுமகட்கு
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே!
'இவர்யார்?' என்குவன் அல்லள்; முனாஅது
அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
எறிமட மாற்கு வல்சி ஆகும்
வல்வில் ஓரி கானம் நாறி
இரும்பல் ஒலிவரும் கூந்தல்
பெரும்பே துறுவள்யாம் வந்தனம் எனவே!


7. நின்னை வரைவர் வருந்தாதே !
பாடியவர்: நல்வெள்ளியார்
திணை: பாலை
துறை: இது பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.


சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்கப்
பெருவரை அடுக்கத் தருவி யார்ப்பக்
கல்லலைத் திழிதருங் கடுவரற் கான்யாற்றுக்
கழைமாய் நீத்தங்க காடலை யார்ப்பக்
தழங்குகுர லேறொடு முழங்கி வானம்
இன்னே பெய்ய மின்னுமால் தோழி
வெண்ணெ லருந்திய வரி நுதல் யானை
தண்ணறுஞ் சிலம்பில் துஞ்சுஞ்
சிறியிலைச் சந்தின வாடுபெருங் காட்டே.


8. யார் புதல்வியோ? இவள் தந்தை வாழ்க.
பாடியவர்: (பெயர் தெரியவில்லை)
திணை: குறிஞ்சி
துறை: இஃது இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடுங்கண்ட தலைமகன் சொல்லியது .


அல்குபடர் உழந்த அரிமதர் மழைக்கண்
பல்பூம் பகைத்தழை நுடங்கும் அல்குல்
திருமணி புரையு மேனி மடவோள்
யார்மகள்கொல் இவள் தந்தை வாழியர்
துயரம் உறீஇயினள் எம்மே அகல்வயல்
அரிவனர் அரிந்துந் தருவனர்ப் பெற்றுந்
தண்சேறு தாஅய் மதனுடை நோன் தாள்
கண்போல் நெய்தல் போர்விற் பூக்குந்
திண்தேர்ப் பொறையன் தொண்டி
தன்திறம் பெறுக இவள் ஈன்ற தாயே.


9. புன்னகையால் வழிவரல் வருத்தம் போக்கியவளே!.
பாடியவர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ
திணை: பாலை
துறை: இஃது உடன் போகா நின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது.


அழிவில முயலு மார்வ மாக்கள்
வழிபடு தெய்வங் கண் கண்டாஅங்
கலமரல் வருத்தந் தீர யாழநின்
நலமென் பணைத்தோள் எய்தினம் ஆகலின்
பொரிப்பூம் புன்கி னெழற்தகை ஒண்முறி
சுணங்கணி வனமுலை அணங்குகொளத் திமிரி
நிழல்காண் தோறும் நெடிய வைகி
மணல்காண் தோறும் வண்டல் தைஇ
வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே!
மாநனை கொழுதி மகிழ்குயி லாலும்
நறுந்தண் பொழில கானம்
குறும்ப லூர! யாஞ் செல்லும் ஆறே.


.

10. கைவிடாதே கொள் !.
பாடியவர்: (பெயர் தெரியவில்லை)
திணை: பாலை
துறை: இஃது உடன்போக்குந் தோழி கையடுத்தது.


அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனி மணியின் தாழ்ந்த
நல்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்த லோம்புமதி பூக்கே ழூர!
இன்கடுங் கள்ளி னிழையணி நெடுந்தேர்க்
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
வெண்கோட் டியானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல்வாய்த் தன்னநின்
பிழையா நன்மொழி தேறிய இவட்கே.


11. புலவியை நெஞ்சத்து ஒழிப்பாயாக !
பாடியவர்: உலோச்சனார்
திணை: நெய்தல்
துறை: இது காப்பு மிகுதிக்கண் இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்கு தலைமகன்

சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

பெய்யாது வைகிய கோதை போல
மெய்சா யினையவர் செய்குறி பிழைப்ப
உள்ளி நொதும லேர்பு உரை தெள்ளிதின்
வாரா ரென்னும் புலவி யுட்கொளல்
ஒழிக மாளநின் நெஞ்சத் தானே
புணரி பொருத பூமண லடைகரை
யாழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பாய்ந் தூர
நிலவுவிரிந் தன்றாற் கானலானே.


12. தோழியர் நோவர் !
பாடியவர்: கயமனார்
திணை: பாலை
துறை: இது தோழி உடன்போக்கு அஞ்சுவித்து.


விளம்பழங் கமழுங் கமஞ்சூற் குழிசிப்
பாசந் தின்ற தேய்கான் மத்தம்
நெய்தெரி யியக்கம் வெளில்முதன் முழங்கும்
வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கா
லரியமை சிலம்பு கழீஇப் பன்மாண்
வரிபுனை பந்தொடு வைஇய செல்வோள்
இவை காண்தோறு நோவர் மாதோ
அளியரோ வளியரென் னாயத் தோரென
நும்மொடு வரவுதா னயரவுந்
தன்வரைத் தன்றியுங் கலுழ்ந்தன கண்ணே.


"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை&oldid=1629306" இலிருந்து மீள்விக்கப்பட்டது