உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/நற்றிணை தெளிவுரை

விக்கிமூலம் இலிருந்து

நற்றிணை தெளிவுரை

ழகார் செழுந்தமிழின் அளப்பரிய செவ்வியை அறிந்து களிப்படைவதற்கு விரும்பினோமாயின், அவ்விருப்பம் நிறைவேறுவதற்கு—மெய்யாகவே நிறைவேறுவதற்கு—உறுதுணையாவன சங்கச் செழுந்தமிழ் நூற்களே எனலாம். அவை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் நின்று நிலைத்து என்றும் புத்திளமைப் பொலிவோடு கற்றாரைக் கவரும் வனப்பின, சிறப்பின, வளம் மலிந்தன! அவற்றினை ஓரளவுக்கேனும் தமிழறிந்தார் யாவரும் கற்றறிந்து, தமிழின்பமும் தமிழறிவும் பெற்றுத், தமிழ்ப் பெருமையையும் தமிழர்களின் சீர்மையையும் போற்றுவதற்கு முந்துமாறு, தமிழுணர்வும் தமிழ்வீறும் பெறச் செய்யவேண்டும் என்று விரும்பினேன். அவ்விருப்பத்தின் விளைவாக மலர்ந்துள்ள தமிழ்மண மலர்களுள் ஒன்றுதான் இந்நற்றிணைத் தெளிவுரைப் பதிப்பும் ஆகும்.

நற்றிணையின் 1—200 செய்யுட்கள் கொண்ட என் தெளிவுரைப் பதிப்பு 1967 இலேயே வெளிவந்திருந்தும், அதனைத் தொடர்ந்து வெளிவரவேண்டிய இந்தத் தொகுதியானது இப்போதுதான் வெளிவருகின்றது. இடையில், நற்றிணையின் 1—200 செய்யுட்கள் கொண்ட முதற்பகுதியானது இரண்டாம் பதிப்பாகவும் வந்து, இப்போது மூன்றாம் பதிப்பையும் எதிர் நோக்கியபடி உள்ளது. இந்தத் தொகுதி வெளிவரக் காலங் கடந்தமைக்கு என்னுடைய ஏலாமையே காரணம் என்று கூறித், தமிழ் அன்பர்கள் என்னைப் பொறுத்து உதவுவார்கள் என்ற நம்பிக்கையுடன், அவர்களை அன்போடு வேண்டுகின்றேன்.

இது தெளிவுரைப் பதிப்பு என்றாலும், இலக்கியத்தை நுட்பமாகப் பயில விரும்பும் மாணவ அன்பர்களுக்கும் உதவியாகத் தெளிவுரையோடு மற்றும் பல தேவையான குறிப்புக்களையும் தருவதற்கு எண்ணினேன். அதன் விளைவு, நூலின் அளவு விரிவடைந்துபோய், விலையையும் அதற்கேற்ப அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ் நலம் கருதும் அன்பர்கள் இதனைப் பெரிதும் பாராட்டாமல் தமிழின் சீரினை ஒலிக்கும் திறத்தையே உவப்புடன் போற்றி இன்புறுவார்கள், வரவேற்பார்கள் என்று நம்புகின்றேன். பாடியோர் பாடப்பெற்றோர்—பற்றிய குறிப்புக்களையும், விடுபட்ட 234ஆம் பாடலையும் பின்னிணைப்புக்களாகச் சேர்த்துள்ளேன்.

எட்டுத் தொகை நூல்களைப் பற்றி வரிசைப்படுத்திக் காட்டும் பழம் பாடல் ஒன்று.


நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு டரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியே அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.

என்று நூற்களை எடுத்துக் காட்டும்போது, இந்நற்றிணை நூற்பெயரையே முதலாவதாகக் கொண்டு, இதன் சிறப்பைப் போற்றுகின்றது. 'திணை'—என்றால் ஒழுக்கம் என்று பொருள்; 'நல் திணை' என்றும் 'நல்லொழுக்கம்' என்று ஆகும். ஆகவே, தொகை நூல்களை—அமைத்த காலத்தில், திணையொழுக்கங்களில் நல்ல மரபும் பண்பும் அமைந்த செய்யுட்களைத் தேர்ந்து இந் நற்றிணைத் தொகுதியாக்கினர் என்று கருதலாம். இந்தக் கருத்துக்கு அரண் செய்வனவாகவே இந்நூற் செய்யுட்கள் செறிவோடு அமைந்து, சிறந்த உயிரோவியக் காட்சிகளை நம் உள்ளத்தில் உருவாக்கும் செவ்விபெற்றுத் திகழ்கின்றன.

நற்றிணை நானூறு என்று அழைக்கப்பெறும் இத்தொகுப்பினை அமைப்பதற்கான ஊக்கமும் ஆக்கமும் தந்து உதவிய சிறப்பினன், பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்னும் பாண்டியப் பேரரசன் ஆவான்.

தொகுப்பித்தான் பெயரை அறிய முடிகிறது; ஆனால் தொகுத்த தமிழ்ச் சான்றோர் பெயர் யாதென எந்தக் குறிப்பும் நமக்குக் கிடைக்கவில்லை. கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அறிகின்றோம். தொல்காப்பிய உரையாசிரியர்களாகிய சான்றோர்கள் இந்நூற் செய்யுட்களைத் தங்களுடைய பேருரைகளிடையே பலவிடங்களில் எடுத்துக் காட்டியுள்ளார்கள். அவைபற்றிய குறிப்புக்களையும் இந்நூற் பதிப்பில் தந்துள்ளேன். அன்பர்கள் அவ்வுரைகளிடையே எவ்வாறு பொன்னிடை இழைத்த மணியென இந்நற்றிணைச் செய்யுட்கள் ஒளிசெய்கின்றன என்று கண்டறிந்தும் இன்புறல் வேண்டும்.

இந்நற்றிணையின் நயத்தை நாடறியவும் நாமறியவும் உதவியாக, ஏற்ற நல்லுரையினைத் தம்முடைய பரந்து செறிந்த தமிழறிவுச் சால்பால் வகுத்து உதவிய சிறப்பினர், பின்னத்தூர் திரு. நாராயணசாமி அய்யர் அவர்களாவார். அவர்களின் ஈடிணையற்ற வள்ளன்மையை உளங்கொண்டு போற்றி, அவர்களின் நினைவுக்கு அஞ்சலி செலுத்தி, இத்தெளிவுரையினைப் படைத்து வணங்குகின்றேன். அவர்களின் புகழ் என்றும் நின்று நிலவும் ஏற்றமிகு தமிழ்ப்பெரும் புகழாகும்!

திருமிகு அய்யரவர்கள் தஞ்சைப் பகுதியின் பின்னத்தூரிலே தோன்றியவர்கள். தமிழும் வடமொழியும் கற்றுத் துறைபோகிய சான்றோர். திருமறைக் காட்டிலிருந்த பொன்னம்பலம் பிள்ளை அவர்களின் நன்மாணவராகித் தம்முடைய புலமைக்கு மேலும் ஒளியேற்றிக் கொண்டவர். அய்யர் அவர்கள் 1914ஆம் ஆண்டில் அமரரானபோதும், தமிழ் மாணவர் நெஞ்சங்களில் என்றும் நின்று நிலவுகின்ற சாவா நிலையினைப் பெற்றிருப்பவரே ஆவர்.

அய்யர் அவர்களின் தொண்டின் பெரும் பயனாற் கிடைத்த நற்றிணை நயத்தை நாட்டினர் அறிந்து பயன்பெற்று வந்த போது, சித்தாந்த கலாநிதியும் தமிழ்ப்பெருங் கடலுமான ஔவை திரு. சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள், பலகாலம் நுணுக்கமாக ஆராய்ந்தும், பல செய்திகளையும் முயன்று முயன்று சேகரித்தும், பேருரைப் பதிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள். ஔவையவர்களின் பதிப்பு, ஆழ்ந்தகன்ற பெரும்புலமையின் செறிவாகும்.

அடுத்து, சைவசித்தா மகா சமாசத்தாரின் சங்க இலக்கியத் தொகுதிகள் (இப்போது பாரிநிலைய வெளியீடு) வெளிவந்து தமிழ்வளம் பெருக்கின.

சங்க இலக்கியங்களின் மூல பாடங்களைச் செவ்வையாக வெளியிட்டுத் தமிழ்நலம் பேணிய மர்ரே கம்பெனியாரின் நற்றிணைப் பதிப்பும் பின்னர் வெளிவந்தது.

இச்சான்றோர்களின் தமிழ்ப்பணியால் தமிழ் அறிந்தாரெல்லாம் நற்றிணை பற்றிப் பேசவும், ஆராயவும், கற்றறிந்து களிக்கவும், பேச்சிலும் எழுத்திலும் எடுத்துக்காட்டி விருந்தளிக்கவும், நற்றிணையும் எங்கணும் மணம் பரப்பலாயிற்று.

இந்நிலையிலே, பலதிறத்துத் தமிழன்பர்களும், நற்றிணைச் செய்யுட்களின் செறிவைக் கற்றறிந்து, தமிழேற்றத்தையும் தமிழ் மரபுகளையும், தமிழ்ப் பேச்சின் தகுதிசான்ற திறத்தையும் உணர்ந்து போற்றுவதற்குத் துணையாக அமையவேண்டும் என்னும் ஆர்வத்தால் இத்தெளிவுரையையும் அமைத்துள்ளேன். தமிழன்பர்கள் குறைமறந்து குணம் கொண்டு போற்றுவார்கள் என்று நம்புகின்றேன்.

தமிழிலக்கியப் பெரும்பணியில் தணியாத ஆர்வத்தோடு பணியாற்றுவதிலேயே மனங்கொண்டு, புகழோடு திகழும் பாரி நிலையத்தின் உரிமையாளர் திரு. செல்லப்பனார் அவர்கள் இதனைத் தம் பாரிநிலைய வெளியீடாக உவந்தேற்று அச்சிட்டு வழங்குகின்றார்கள். அவர்கட்கு என்றும் நன்றியுடையேன்.

தாள் விலையின் ஏற்றமும், மற்றும் பதிப்புச் செலவுகளின் ஏற்றமும், இந்நூலின் விலையை எங்கள் கருத்தையும் கடந்து கூடுதலாக்க வேண்டிய நெருக்கடியை விளைத்துவிட்டன. தமிழ் அன்பர்கள், அதனைப் பாராட்டாது விருப்போடு வாங்கிக் கற்று, மென்மேலும் தமிழ்ப்பணியில் ஈடுபட்டு வருவதற்கான ஊக்கமும் ஒத்துழைப்பும் எனக்குத் தருவார்கள் என்று நம்புகின்றேன்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழார்வம்!
புலியூர்க் கேசிகன்

ஈடில்லா நற்றிணை!

வையத்தில் முதன்முதலாய் அறிவைப் பெற்றோர்
      வழிமுறைகள் வாழ்வியற்கே வகுத்துக் கண்டோர்
தெய்வத்தின் அருள்போற்றித் தமிழை வாழ்த்தித்
      தீதகற்றி நலன்கொழிக்கச் சிறந்தே வாழ்ந்தோர்
வையத்தின் வாழ்வுநெறி இவைதாம் என்ன
      வருமினமும் காணுதற்கே வடித்து வைத்தோர்
வையத்தின் முதன்மக்கள் தமிழ மக்கள்
      வழிப்பிறந்தோம் நாம்அவரை வணங்கு வோமே! 1

முகிழ்த்ததமிழ் அவரறிவின் ஊற்றே யாகும்.
      மூதறிஞர் புலவர்பலர் பாணர் வள்ளல்
செழித்ததுவும் அவர்வாழ்வின் சிறப்பா லாகும்
      செழுந்தமிழின் செய்யுள்வளம் பொருளின் சீர்த்தி
முகிழ்த்ததுவும் அவர்முனைந்து மொழியைப் போற்றி
      முனைப்போடு உயிரென்னக் கொண்ட தாலாம்
செழித்ததமிழ் செம்மொழியாய் உயர்ந்தே நாளும்
      சிறந்ததவர் தமிழ்ப்பற்றின் சிந்தை யாலாம்! 2

சூழ்ந்தநிலத் தன்மையினால் உள்ளத் துள்ளே
      சுடரிட்டே உணர்வுகளும் தோன்றும் என்றார்
வாழ்ந்திருந்த மக்களது வாழ்வை ஆய்ந்து
      வகைப்படுத்திக் குறிஞ்சியொடு முல்லை பாலை
சூழ்ந்தகடல் நெய்தல்வயல் மருதம் என்றார்
      தொடர்போடு வாழ்வதுவும் அமையும் என்றார்
ஆழ்ந்தறிந்து அவற்றில்வரும் ஒழுக்கம் மக்கள்
      அறிவினிலும் வாழ்வினிலும் அரும்பும் என்றார்! 3

வேறு

உணர்வுகள் உள்ளம் தன்னில்
      ஊற்றெடுத் தெழுந்து பாயக்
கனவுகள் எழுந்து மோதிக்
      கலக்கிட நெஞ்சம் தன்னை
நனவிலும் உறக்கம் கெட்டே
      நடுங்கிடும் இராக்கா லத்தும்
அனமெனும் குமரி காதல்
      அரும்பிட மயக்கங் கொள்வாள்! 4

கண்டதும் ஊழ்தான் கூட்டக்
      கரைந்திட்ட நெஞ்சம் தன்னில்
பெண்டினைக் குடிதான் வைத்துப்
      பிறவெலாம் நினையா தெய்த்து
மண்டிடும் காதல் நோயால்
      மயங்கியே மறந்தே என்றும்
வண்டென வீழ்ந்தே கன்னி
      வலையினில் துடிப்பான் காளை! 5

தினந்தினம் இவர்தான் கொள்ளும்
      சிந்தனை பேச்சின் போக்கும்
மனந்தனில் வாங்கிச் சான்றோர்
      மாத்தமிழ்த் தேனைக் கூட்டி
இனந்தரும் இயற்கைத் தூண்டல்
      இவையென வகுத்துக் காட்ட
மனந்தனிற் கருணை கொண்டார்
      மலர்ந்தன அகநூல் எல்லாம்! 6

வேறு

வகுத்தபல வாழ்க்கையதன் பகுதி எல்லாம்
      வண்தமிழின் ஓவியமாய் இனிமை துள்ளத்
தொகுத்துபல இலக்கியமாய்த் தொன்மைக் காலத்
      தொல்தமிழர் வாழ்வியலாய் வழங்கும் என்றே
தொகுத்தவற்றை முறைப்படுத்தித் தொகையும் காட்டித்
      தொல்லோர்கள் அகநூல்கள் என்றே பண்டு
பகுத்தவற்றுள் நல்லனவாம் ஒழுக்கம் காட்டும்
      பாவளத்தில் நற்றிணைக்கோர் ஈடே இல்லை 7

நற்றிணையின் நயமெல்லாம் நாளும் ஆய்ந்தே
      நல்லவுரை வகுத்திட்டார் நலங்கள் காட்டிக்
கற்றறிந்த புலமையுடன் தமிழின் ஆர்வம்
      கனிந்தவுளப் பின்னத்தூர்ப் புலவர் செம்மல்
நற்றிறத்து நாராயண சாமி அய்யர்
      நவின்றவுரைத் துணையின்றேல் நமக்கே நல்ல
நற்றிணையின் செழுமையொடு தமிழின் சீர்த்தி
      நலம்நுகர மார்க்கமில்லை உண்மை தானே! 8

அவர்பின்னர் ஔவையெனும் ஆழ்ந்த ஞான
      அறவோரும் பேருரையால் அழகு செய்தார்
இவர்செய்த உரைநலத்தால் இன்பம் கண்டார்
      இயற்றமிழில் வல்லவர்கள்; எவரும் கற்றே
நலம்காணத் தெளிவுரையிஃ தமைத்தேன்; நல்ல
      நற்றமிழப் பாரியவர் பதிப்பிக் கின்றார்;
வளம்நிறைக தமிழுலகம் தமிழ்ப்பற் றோங்கி
      வான்முட்டத் தமிழ்முழக்கம் எழுக யாண்டும்! 9

புலியூர்க் கேசிகன்
7 - 9 - 1980