உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/207

விக்கிமூலம் இலிருந்து

207. பெருமீன் நினைத்த சிறாஅர்!

பாடியவர் : ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்.
திணை: நெய்தல்.
துறை : நொதுமலர் வந்துழித் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.

[(து – வி.) தலைவியின் களவு உறவை அறிந்தனள் தோழி. அவள், தலைவியை மணம்பேசி நொதுமலர் வந்தபோது அதிர்ச்சி அடைகின்றாள். தலைவியின் உறவைப் பற்றிய உண்மையைத் தன் தாயாகிய செவிலியிடம் உரைக்கின்றாள். இவ்வாறு அமைந்தது இச்செய்யுள். செவிலி நற்றாய்க்கும், நற்றாய் தந்தைக்கும் உரைக்கத், தலைவியின் காதலனையே அவளுக்கு மணமுடிக்க அவர்கள் இசைவார்கள் என்பது இதன் பயனாகும்.]


கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
கொழுமீன் கொள்பவர் பாக்கம் கல்லென
நெடுந்தேர் பண்ணி வரல்ஆ னாதே;
குன்றத் தன்ன குவவுமணல் நீந்தி 5
வந்தனர் பெயர்வர்கொல் தாமே? அல்கல்,
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇக்
கோட்சுறா எறிந்தெனக் கீட்படச் சுருங்கிய
முடிமுதிர் வலைகைக் கொண்டு பெருங்கடல்
தலைகெழு பெருமீன் முன்னிய 10
கொலைவெஞ் சிறாஅர் பாற்பட் டனளே!

தெளிவுரை : கண்டல்களை வேலியாகக் கொண்டதும், உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தோட்டக் கால்களிலேயுள்ள, நீர்முள்ளிச் செடிகளாலே வேயப்பெற்ற குறுகிய இறைப்பையுடைய குடிசைகளிலே வாழ்பவர் பரதவர்கள். கொழுமையான மீன்களை வேட்டையாடிக் கொள்பவரான அவர்களது பாக்கம் ஆரவாரிக்கும்படியாக, நெடிய தேரானது, செல்லுதற்கு ஏற்றவாறு பண்ணப்பட்டு வருதலிலே என்றும் தவிர்வதில்லை. குன்றைப் போலக் குவிந்து கிடக்கின்ற மணல் மேடுகளைக் கடந்து வருகின்ற அவர்தான், இனி வறிதே தான் மீள்வாரோ? அங்ஙனம் நேர்வதாயின்—

இளையரும் முதியருமாகத் தத்தம் கிளையோடு கூடியிருந்து, கொலைவல்ல சுறாமீன் தாக்கியதனாலே கிழிதற்பட்டுச் சுருங்கிப்போன, முடிகள் மிகுதியாயுள்ள வலையினைச் செப்பஞ் செய்வர். அதனைத் தம்பாற் கொண்டு, பெரிதான கடலிடத்தே பொருந்தியுள்ள பெரிய மீன்களைக் கொள்ளக் கருதியவராக, கொல்லுந் தொழிலிலே விருப்பமுடைய சிறுவர்கள் செல்வார்கள். நம் தலைவியும் அச்சிறுவர்களாலே கொள்ளப்பட்டவள் ஆவாள்.

சொற்பொருள் : கண்டல் – ஒருவகை நீர்த்தாவரம்; முள் உள்ளது; வெண்பூக்கள் பூப்பது. முண்டகம் – நீர் முள்ளி. குவவு மணல் – குவிந்த மணல். அல்கல் – இரவுப் போதில். சிறாஅர், இளையர், முதியர் என மூவகைப் பருவமும் குறிக்கப்பட்டமை காண்க. கீட்படக் – கிழிதற்பட்டதனாலே. முடிமுதிர்வலை—முடிகள் மிகுந்தவலை. முன்னிய – கருதிச் சென்ற.

விளக்கம் : 'பாக்கம் கல்லென வரல் ஆனாது' என்றது, அவள் காதலனும் வரைவொடு வருவான் என்றதாம், 'நெடுந்தேர் பண்ணி' என்றது, அவன் நொதுமலர் குறிக்கும் இளைஞனிலும் தகுதியான் மிக்கவன் என்றற்கும், அவனும் தலைவிபாற் பெருங்காதலினன் என்றற்கும் ஆம். 'வந்தனர் பெயர்வர் கொல்' என்றது, அவன் தலைவியோடன்றி மீளான் என்றதாம். 'கொலைவெஞ் சிறாஅர் கோட்பட்டனள்' என்றது, தலைவி தானும் வேற்று வரைவுக்குத்தமர் இசையின், கடலில் வீழ்ந்து உயிர் துறந்து, சிறுவரால் கொள்ளப்படுபவள் ஆவாள் என்பதாம்.

உள்ளுறை பொருள் : கீட்படச் சுருங்கிய முடிமுதிர் வலையைக் கைக்கொண்டு, கொலைவெஞ் சிறாஅர் பெருங்கடலிடத்துப் பெருமீனைக் கருதிச் சென்றாற்போல, நொதுமலரும் தம்மாற் பெறவியலாத தலைவியின் வரைவை விரும்பித்தம் அறியாமையாலே வந்தனர் என்பதாம்.

மேற்கோள் : 'இது நொதுமலர் வரைவு மலிந்தமை தோழி சிறைப்புறமாகக் கூறியது' என்று கூறி, இச்செய்யுளை 'நாற்றமும் தோற்றமும்' (தொல்.பொருள். 144) என்னும் நூற்பா உரையிடத்தே, 'பிறன் வரைவாயினும்' என்பதற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர்.

இவ்வாறு துறையமைதி கொண்டால், நொதுமலர் வரைவுமலிந்தமை போலப் படைத்து மொழிவாளாய்த் தலைவிக்குக் கூறுவாள் போலச், செவ்விநோக்கி ஒருசார் ஒதுங்கி நிற்கும் தலைவனும் கேட்டு உணரும் பொருட்டுத்தோழி கூறியதாகக் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/207&oldid=1698367" இலிருந்து மீள்விக்கப்பட்டது