நற்றிணை-2/212
212. வந்தனர் வாழி தோழி!
- பாடியவர் : குடவாயிற் கீரத்தனார்.
- திணை : பாலை.
- துறை : பொருள் முடித்துத் தலைமகனோடு வந்த வாயில்கள்வாய் வரவுகேட்ட தோழி, தலைமகட்குச் சொல்லியது.
[(து-வி.) பொருள் முடித்த தலைவன், தான் மீண்டுவருகின்றதான செய்தியைத் தலைவிக்கு முன்னதாகத் தெரிவிப்பதற்காகத், தன் ஏவலருட் சிலரை அவள்பால் அனுப்புகின்றான். அவர்கள் செய்தி சொல்லக் கேட்ட தோழியானவள், தலைவியிடஞ் சென்று, அவளை வாழ்த்துவது போன்று அமைந்த செய்யுள் இது.]
பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ
நெடுங்காற் கணந்துளம் புலம்புகொள் தெள்விளி
சுரஞ்செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் அத்தத் தாங்கண்
கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர்
5
நெடும்பெருங் குன்றம் நீந்தி, நம்வயின்
வந்தனர்; வாழி தோழி! கையதை
செம்பொன் கழல்தொடி நோக்கி, மாமகன்
கவவுக்கொள் இன்குரல் கேட்டொறும்
அவவுக்கொள் மனத்தேம் ஆகிய எமக்கே!
10
தெளிவுரை : தோழீ! நீதான், இனிமேலும் நெடுங்காலம் இனிதாக வாழ்வாயாக! பறவைகளைப் பற்றக் கருதிய வேட்டுவன், பார்வைப்புள்ளை வைத்து அமைத்த வலையைக் கண்டதும், நெடிய கால்களையுடைய கணந்துள் பறவையானது அச்சங் கொள்ளும். தான், தன் துணையை அழைத்துப் புலம்புதலையும் செய்யும்! அதன் தெளிவான விளிக்குரலானது, சுரத்தின் வழியாகச் செல்கின்றவரான கூத்தாடுவோர், தம் நடை வருத்தம் தோன்றாமற்படிக்கு விரைவாக இசைக்கின்ற யாழின் இசையோடும் மாறு கொண்டதாய் இருக்கும். அத்தகைய காட்டு நெறியின் அவ்விடத்தே, கடுங்குரற் பம்பையினைக் கொண்டாராகவும், சினங்கொண்ட நாயுடன் கூடியவராகவும் வடுகர் வருவர். அத்தகையதான, நெடிதும் பெரிதுமான குன்றத்தையும் கடந்து, நம் தலைவரும், நம் ஊருக்கு மிக அணித்தாகவே வந்து கொண்டிருக்கின்றனர். நம் கையிடத்தே விளங்கும் செம்பொன்னாற் செய்யப் பெற்ற தொடியானது கழன்று சோர்தலைப் பார்த்தவனாக, நம் சிறந்த மகன் வந்து, நம்மை அழுதபடியே அணைத்துக் கொண்டோனாய், அதுதான் கழல்வது ஏனோ அன்னாய்?' என வினவுகின்ற அந்த இனிய அழுகையினது மழலைக்குரலைக் கேட்கும்போதெல்லாம், நம் தலைவனிடத்தே மேலும் விருப்பங் கொண்டேமாய்த் தளர்கின்ற மனத்தை உடையேமாகிய நம்மிடத்திற்கே, அவரும் விரைவில் வந்து சேர்வர். அதனால், துயரற்றனையாய், இனிதே இன்பத்து ஆழ்ந்தனையாய், நெடிது மகிழ்வாயாக என்பது கருத்து.
சொற்பொருள் : பார்வை என்பது கைப்புள். இதனைக் கொண்டு பிறபுட்களை வரச்செய்து, வலைக்குள் அவை வந்து அகப்பட்டுக் கொள்ள, அவற்றை எளிதாகப் பிடிப்பது வேட்டையாடுவோர் கொள்ளும் மரபு ஆகும். படுவலை–அகப்படுத்தும் வலை. வெரீஇ–அச்சங்கொண்டு. தெள்விளி–தெளிந்த கூப்பீட்டுக் குரல். கோடியர்–கோடு–ஊதுகொம்பு; ஊது கொம்பினை உடையவரான கூத்தர்; நரம்பு–நரம்புகளையுடைய யாழைக் குறிப்பது; சினையாகு பெயர். அத்தம்–காட்டு வழி. பம்பை–ஒருவகைத் தோல் வாத்தியம்; தென்பாண்டி நாட்டிலே இந்நாளிலும் வழக்கத்தில் இதே பெயரோடு இருந்து வருகின்றது. கதம்–சினம். வடுகர்–வடுகுமொழி பேசுவோர்; தமிழகத்தின் வடபுறவெல்லைப் பகுதியில் வாழ்ந்தோர். நீந்தி–கடந்து; முயற்சியோடே கடப்பது பற்றி நீந்தி என்றனர். கழல் தொடி–கழலும் தொடி; தொடி செறிப்புத் தளர்ந்து கழலுதல் பிரிவுத் துயரத்தின் உடல்நலிவினால். கவவு–உடலோடு ஒன்ற அணைத்துக் கொள்ளுதல். அவவு–அவா; ஆசை.
விளக்கம் : பிரிவுத் துயரின் மிகுதியாலே மெய் இளைத்ததனைக் குறிக்கக் ‘கழல் தொடி' என்றாள்; அதனை நோக்கிய புதல்வன் வருந்தித்தாயை அணைத்து அழுகின்றனன். 'தன் சோர்வைக் கண்டு வருந்தும் இச்சிறு புதல்வனின் உள்ளந்தானும் தலைவனுக்கு இல்லையே' என நினைக்கத் தலைவியின் துயரம் மிகுதியாவதுடன், தலைவனை அணைத்து மகிழத் துடிக்கும் ஆசையும் பெருகுவதாயிற்று என்க. தனித்திருக்கும் கணந்துள் பறவையானது, வேட்டுவனின் படுவலைக்கு அஞ்சி வெருவுவதுபோன்று, தலைவியும் அத்தத்து வருவோனாகிய தலைவனின் பயணத்தில் ஆபத்து நிகழுமோ எனக்கவலையுற்றுப் புலம்புவாள் என்பதாம். அதன் தெள்விளியோடு கோடியரின் யாழொலியும் சேர்ந்து இசைத்தல், அவரும் தம் வழிநடை வருத்தம் தீர, இசையிலே மனஞ்செலுத்தி மகிழ்ந்தார் போலத், தலைவியும் தலைவனுடன் இன்புற்று இனிது மகிழ்பவளாவாள் என்பதாம். 'வடுகர்' அந்நாளில் ஆறலைப்போராய் இருந்தனர் போலும். அதுபற்றியே அவராலும் துயரம் ஏதும் கொள்ளாதே இனிது வழிகடந்து சென்று என்றனர்.
கணந்துள்–நீர்ப் பறவை இனத்துள் ஒன்று. 'எந்நில. மருங்கிற் பூவும் புள்ளும்' (தொல். பொருள் 19) என்னும் விதிக்கு இணங்கப் பாலைக்கண் நெய்தற் கருப்பொருளாகிய கணந்துள் பயின்று வந்ததும் காண்க.
இறைச்சி : கணந்துட் பறவையது புலம்புங் குரலோசையானது, வழிநடை வருத்தந்தீரக் கோடியர் மீட்டும் யாழிசையிற் கலந்து விடுவதுபோலத் தலைவியின் புலம்பல் எல்லாம், தலைவன் அளிக்கும் இன்பத்திலே இணைந்து தலைவியை மகிழ்விக்கும் என்பதாம். மெய்ப்பாடு தோழியின் உள்ளத்தே தோன்றிய உவகை.
பயன் : தலைவிக்கும் அவளுக்கும் உண்டாகும் மகிழ்ச்சி.