உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/214

விக்கிமூலம் இலிருந்து

214. அவரும் கேளாரோ தோழி!

பாடியவர்: கருவூர்க் கோசனார்;
திணை: பாலை.
துறை: உலகியலாற் பிரிவு உணர்த்தப்பட்ட தலைவன் குறித்த பருவங் கண்டு, தலைமகள் சொல்லியது.

[(து. வி.) உலகியல் வாழ்விற்கான பொருளைத் தேடி வருவதன் பொருட்டாகப் பிரிந்த தலைமகன், பிரியுங் காலத்தே மீண்டும் வருவதாகச் சொல்லிச் சென்ற பருவத்தினது வரவைக் கண்டாள் தலைவி. அவள் மனவேதனையை. உணர்த்துவது போல அமைந்தது இச்செய்யுள்.]

‘இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இன்ம்’ என,
வினைவயிற் பிரிந்த வேறுபடு கொள்கை
‘அரும்பவிழ் அலரிச் சுரும்புண் பல்போது
அணிய வருதும்நின் மணியிருங் கதுப்பு’ என, 5
எஞ்சா வஞ்சினம் நெஞ்சுணக் கூறி,
மைசூழ் வெற்பின் மலைபல இறந்து,
செய்பொருட்கு அகன்ற செயிர்தீர் காதலர்
கேளார் கொல்லோ தோழி! தோள
இலங்குவளை நெகிழ்த்த கலங்களும் எள்ளி 10
நகுவது போல மின்னி
ஆர்ப்பது போலுமிக் கார்ப்பெய்ல் குரலே!

தெளிவுரை: “தோழீ! இம்மையிலே சிறந்ததாகிய புகழும், இல்லறம் ஆற்றலாகிய இன்பவாழ்வும், மறுமைக்கு இன்பந் தருதலாகிய கொடையும் என்னும் மூன்றும், ஒருவனுக்கு இன்றியமையாதனவாகும். செயல் அற்றவராகச் சோம்பி இருந்தோர்க்கு இம்மூன்று பயன்களும் அரிதாகக் கூட வந்தடைவதில்லை” எனத் தலைவனும் கருதினார். அதனாலே, வினை செய்தலின் பாற் பிரிந்த வேறுபட்ட கோட்பாட்டினரும் ஆயினார். அப்படிப் பிரியுங் காலத்திலே, “நின்னது நீலமணியைப் போன்றதான கரிய கூந்தலிலே, கார் காலத்தே அரும்பு விரிகின்ற, சுரும்புகள் தேன் உண்ணா நிற்கும் பல வகையான மலர்களையும் அணிந்து இன்புறும் பொருட்டாக யானும் வருவேன்” என்று, குறையற்ற வஞ்சினத்தினை என் நெஞ்சமும் ஏற்றுக்கொள்ளுமாறு கூறினார். கார்மேகங்கள் திரண்டு மொய்த்திருக்கின்ற வெற்புக்களைக் கொண்ட மலைகள் பலவற்றையும் கடந்து, பொருளைச் செய்து கொணர்வதற்கும் சென்றனர். அவர்தாம், தாம் சென்றிருக்கின்ற தேயத்திடத்தும், "என் தோள்களிலே விளங்கிய தோள்வளைகள் நெகிழும்படியாகச் செய்ததனாலே ஆகிய பிரிவுக்கலக்கமாகிய துன்பத்தை நோக்கி, எள்ளி நகையாடுவதுபோல மின்னலிட்டு ஆரவாரித்தபடி தோன்றியுள்ள இக்கார்ப் பெயலின் இடிக்குரலைத் தாமும் கேட்டிருக்க மாட்டாரோ?"

சொற்பொருள் : இசை–புகழ். இன்பம்–தலைவியோடு கூடிவாழ்ந்து பெறுதலாகிய இன்பம். ஈதல்–வறுமையாளராய் வந்து இரந்தவர்க்கு வழங்கி மகிழ்தலாகிய இன்பமும், அந்தச் செயலாலே விளைகின்றதாகிய மறுமை இன்பமும். அலரி–விரிந்த பூ. மணி நீலமணி. கதுப்பு–கூந்தல். வஞ்சினம்–சபதம். செயிர்–குற்றம். கலக்குஅஞர்–கலக்கந்தருவதான பிரிவுத் துயரம். கார்ப்பெயல்–கார் காலத்துப் பெயலாகிய பெருமழை.

விளக்கம் : பல் தெரியக் காட்டி நகுதலின்போது உண்டாகும் ஆரவாரத்திற்கு இடிக்குரலையும், பல்லொளிக்கு மின்னலையும் நயமாக உவமித்தனர். 'கேளார் கொல்லோ!' என்றது, கேட்டனராயின், சொற்பிழையாராகிய அவர் தாம் இதற்குள் மீண்டும் வந்திருப்பாரே எனக் கருதும் ஆற்றாமை மிகுதியாற் கூறியதாகும். தேயந்தோறும் பருவங்களும் வேறுபடுதலினாலே, அவர் சென்றுள்ள நாட்டிடத்தே இக்கார்ப்பருவமானது இன்னும் தோன்றிற்றில்லை போலும் என்று மனந்தேறுவதற்கு முயன்றதாம். வஞ்சினம் பொய்த்தார் என்று அவருக்குத் தெய்வக்கேடு சூழாமை கருதுவாள், தன் அருளுடைமையாலே இவ்வாறு கூறுகின்றனள் என்க. இதுபற்றியே 'செயிர்தீர் காதலர். என அவர் வஞ்சினம் பொய்த்தல் இலர் என்று கூறினளாம். நெஞ்சு உணக் கூறுதலாவது, நெஞ்சமும் ஏற்றுத் தெளிவு கொள்ளுமாறு உறுதிச் சொற்களால் தெளிவு கூறுதல். தெய்வம் அஞ்சல், அழுகையாகிய மெய்ப்பாடுகளும், அயாவுயிர்த்தல் பயனும் இதற்குக் கொள்ளப் படும்.

இசையும் இன்பமும் ஈதலும் என்னும் மூவகை அறங்களும் இதன்கண் கூறப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/214&oldid=1698374" இலிருந்து மீள்விக்கப்பட்டது